Author Topic: "ராதா, ராதா மட்டும்'  (Read 2926 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
"ராதா, ராதா மட்டும்'
« on: March 14, 2012, 03:39:16 PM »
"ராதா, ராதா மட்டும்' என்ற பெயரில், மலையாள இலக்கிய உலகில் பிரபலமான ஒரு கதையை என்னுடைய நண்பரும் பிரசித்தி பெற்ற எழுத்தாளருமான எம். முகுந்தன் எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாமல் இல்லை. அதே பெயரில் இந்தக் கதையை நான் எழுதுவதன் மூலம், பெயரில் என்ன இருக்கிறது என்று நான் கூற முயற்சிக்கிறேன் என்றோ, அதை நியாயப்படுத்த முயல்கிறேன் என்றோ யாரும் நினைத்துவிடக் கூடாது. அது என் நோக்கமும் அல்ல. காரணம்- பெயரில் நிச்சயம் முக்கியத்துவம் இருக்கிறது என்று முழுமையாக நம்பக்கூடிய மனிதன் நான்.

ஆர்தர் சி. க்ளார்க் எழுதிய "கடவுளுக்கு நூறு கோடி பெயர்கள்' என்ற அருமையான கதையை நீங்கள் படித்திருக்கிறீர் களா? தெய்வத்தின் நூறு கோடி பெயர்களை உச்சரித்தால் பிறப்பின் நோக்கம் பூரணமாகும் என்று கூறியிருப்பதையொட்டி, இமயமலையில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் ஒரு பெரிய இயந்திரம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இயந்திரம்  பெயர்களை உச்சரிக்கும் சடங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சடங்கைப் பார்க்கப் போன விஞ்ஞானிகள், இயந்திரம் தெய்வத்தின் கடைசி பெயரைச் சொல்வதற்கு முன்பே திரும்ப வேண்டிய நிலை. தூரத்தில்- இரவு நேரத்தில் மலையில் இறங்கிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் காதில் இயந்திரத்தின் தெய்வப் பெயர்கள் உச்சரிக்கும் குரல் நன்றாகவே காதில் விழுகிறது. கடவுளின் கடைசிப் பெயரை இயந்திரம் உச்சரிக்கிறபோது, என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் தங்களின் பயணத்தை அவர்கள் ஒரு நிமிடம் நிறுத்திக்கொண்டு மலைச்சரிவில் நின்றவாறு தங்களைச் சுற்றிலும் பார்த்தார்கள். அவர்கள் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார்கள். மேலே- வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக அணைந்தன. உலகம் அழியப் போகிறது!

தெய்வம், அதே நேரத்தில் பெயரே இல்லாததுதானே!

அதுதான் தெய்வத்தின் சக்தி. காரணம்- எல்லாப் பெயர்களுக்கும் சொந்தக்காரன் கடவுள்தான். பழைய ஏற்பாட்டில் கடவுள் முழங்குகிற சத்தம் என்னுடைய ஆரம்ப நாட்களிலிருந்து

என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடவுளின் பெயரை நீ தேவையில்லாமல் உச்சரிக்கக்கூடாது! வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது. உன்னிடம் இருக்கும் அறிவெல்லாம் வெறும் பெயர்களைப் பற்றிய அறிவுதான். நான்கு வேதங்களும், இலக்கணமும், வைதீகச் சடங்குகளும்- எல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமே. பெயர்களை நன்றாகத் தெரிந்துகொண்டு உச்சரிப்பது! எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக இருந்த ஆத்மா, சுற்றிலும் பார்த்துக்கொண்டு தன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்காமல் தனக்குத்தானே பெயரிட்டுக் கொண்டு முதல் வார்த்தையை உச்சரிக்கிறது. "இதுதான் நான்!'

அதற்குப் பிறகுதான் ஆத்மா தனிமையை அனுபவித்ததும், பயத்தில் மூழ்கியதும். பயம் கடந்துபோன பிறகுகூட, நிறைவின்மை ஆத்மாவைப் பின்தொடர்கிறது. அதன் விளைவு- ஆத்மா தானே இரண்டாகப் பிரிவதும், பெண் படைக்கப் படுவதோடு, அவளைப் பின்தொடரவும் செய்கிறது.

முகுந்தனின் ஒரு கதாபாத்திரத்தை இதற்கு முன்பு நானும் கொஞ்சம் எடுத்துக் கையாண்டிருக்கிறேன். கவுளி அல்லது பல்லி என்றழைக்கப்படும் அற்புத சக்தி கொண்ட பிராணி எங்களின் ஒவ்வொரு கதைகளிலும் விதியின் கருவியாகத் தோன்றியிருக்கிறது. முகுந்தனின் பல்லி ஒரு மின்னலைப்போலத் தோன்றி விதியை நடைமுறைப்படுத்தி கதையை முடிக்கிறபோது, என் கதைகளில் பல்லிகள் கதாநாயகனை நீண்டகாலம் கவுளி சாஸ்திரத்தின் வலையில் சிக்க வைத்து, கதையை நீண்டுகொண்டு போகச் செய்கிறேன்.

விதிக்குத்தான் இப்படி எத்தனை எத்தனை ஆயுதங்கள்! எத்தனையோ வழிமுறைகள்! அவற்றை விவரித்துச் சொல்வதென் றால் எத்தனையோ வாழ்நாட்கள் வேண்டும்! உண்மையாகச் சொல்லப்போனால் வெறுமொரு கதையால் விதியைப் பற்றிய அறிவு, பிறப்பு- இறப்பு பற்றிய சரியான முடிச்சு, காலத்தின் ரகசியம்- இவற்றைப் பற்றிய தூரத்துப் பார்வையையோ அல்லது இவற்றின் பாதிப்பையோ தெளிவாக விளக்கிக் கூற முடியுமா?

கலையின் வரையறைகள் எழுத்தாளனின் மனதை மிகவும் தளர்ச்சியடையச் செய்கின்றன. சாதாரண தன் அனுபவங்களைக் கூட வார்த்தைகளைக் கொண்டு, முழுமையாக, உண்மை கொஞ்சம்கூடப் பிசகாமல் தன்னால் விவரித்துச் சொல்ல முடியும் என்று ஒரு எழுத்தாளன் தைரியமாகக் கூற முடியுமா?

அனுபவத்தின் உருவங்களுக்கும் மனதின் பதிவிற்கும் கலையின் கண்ணாடிக்கும் இடையே நடக்கும் கண்ணால் பார்க்க முடியாத இரசாயனச் செயல்கள் எவ்வளவோ! அவற்றின்மேல் எழுத்தாளனின்  நேர்மை ஒரு நூல் பாலத்தின்மேல் நிற்பதுபோல் நிற்கிறது. அவனிடமிருந்து புறப்பட்டு வரும் ஏகாந்தமான வார்த்தைகளை மறுகரையில் கொண்டு போய் சேர்க்கும் கரங்களின் கைகாட்டலுக்குச் சொந்தக்காரன் யார்?

என்னுடைய இந்தக் கதையில் வருகிற இளைஞனை, விதி ஒரு ஞாபக சக்திக் குறைவை வைத்து அவனைப் பந்தாடுகிறது. ராதா என்ற இளம் பெண்ணை நாம் பார்ப்பதே இல்லை. சொல்லப் போனால் ஒரே ஒரு நிமிடம் வருவாள். "ராதா, ராதா மட்டும்' என்று கடைசியில் அந்த இளைஞன் முணுமுணுக்கிறான். விதி- மறதி என்ற மூடு படலத்தை அந்த நகரத்தின் மாலை நேரத்தில் உயர்த்திக்காட்டி மறைகிறபோது, அந்த இளைஞன்- ஏன் அதற்குப் பிறகும்கூட... தனக்குண்டான இந்த வினோதமான

அனுபவத்தைப் பல நேரங்களில் ராதாவைப் பற்றிய ஒரு புதிய கற்பனையை, ஆசையை மனதில் உண்டாக்கிக்கொண்டு நினைத் துப் பார்ப்பான். ஒன்றோ இரண்டோ நண்பர்களிடம் அந்த சம்பவத்தைப் பற்றி மதுவின் பிடியில் இருக்கிறபோது அவன் சொல்லவும் செய்வான். அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சி அவனைப் பொறுத்தவரை- நினைவில் பதிந்திருக்கும் ஒன்று- அவ்வளவுதான். ஆனால், எழுத்தாளனின் பார்வையோ சிந்தனையோ அவனின் எதிர்காலத்தை நோக்கிப் பாய்வதில்லை. நிலம் பார்த்திருக்கும் அவன் கண்கள் தேடுவது விதியின் கால் சுவடுகளைத்தான். வேட்டைக்கு இறங்கும் விதிக்குப் பின்னால், இரத்தத்திற்காக அலையும் ஒரு நரியைப்போல அவன் ஒளிந்திருக்கிறான். காரணம்- விதியின் ஆட்சிதான் கதையின் பலமே.

இந்த நிமிடத்தில் ஒரு ஆள்மாறாட்டம் நடத்த என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும். கதை கூறுபவனுக்கும், கதையை நடத்திக்கொண்டு பேகிறவனுக்குமிடையே உள்ள இடைவெளியை அழித்து, என்னுடைய கதாநாயகனாக நானே தோன்றுகிறேன். இல்லாவிட்டால், நான் என்ற பெயரில் என் கதாநாயகன் நுழைகிறான். இதுதான் நான்! இது பெயர்களை அடுக்கிக் காட்டும் ஒரு செப்படி வித்தை அல்ல. கதாநாயகனின் அல்லது எனது தப்பித்தலும் இல்லை. இதுதான் நான்! இனி தனிமையும், பயமும், நிறைவின்மையும், ஆத்மாவின் பிளவும், காமமும் என்னைச் சேர்ந்தது.

நேரற்ற பாதையிலிருந்து என்னை

நேரான பாதைக்கும்

இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கும்

மரணத்தில் இருந்து வாழ்வுக்கும்-

என் காதலியின் அணைப்பில் இருந்து எழுந்து நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருந்தேன்.

கட்டிலில்  கண்களை மூடிப் படுத்திருந்த லீலா மூச்சுவிடும் ஓசை என் காதில் தெளிவாகக் கேட்டது. லீலா உறங்கவில்லை. என்னைப்போல அவளும் சூனியமாகிப்போன வெறுமை மனதுடன் வேறு ஏதோ உள் உலக வாசல் கதவு வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வெளியே நகரத்தின் சுறுசுறுப்பான சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் எழுப்பும் சப்தம் காதைத் துளைத்துக் கொண்டிருந்தது. தூரத்தில் இருந்த மர உச்சிகளில் காற்று பட்டு சுகமாகப் பயணம் செய்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு மறைவிடத்திலிருந்து புறப் பட்டு வருவதைப்போல மேகங்கள் ஆகாயத்தில் படுவேகமாக சஞ்சரித்துக் கொண்டிருந்தன. திடீரென்று காற்று கீழே இறங்கி வந்தது. என்னைச் சுற்றிலும் இருந்த ஜன்னல்கள் "படபட'வென்று அடித்தன. ஒன்றிரண்டு ஆலம்பழங்கள் மரத்திலிருந்து கீழே ஜன்னல் படியில் விழுந்து சிதறின. அடைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி வாசலுக்குப் பின்னால் பத்திரமாக இருந்துகொண்டு நான் மரக்கிளைகள் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அப்போது கீழே இருந்தவாறு யாரோ என்னைப் பார்ப்பதுபோல் எனக்குத் தோன்றியது. காற்றில் பறக்கிற முடியுடனும் ஆடையுடனும் தன் தந்தையின் கைகளைப் பிடித்தவாறு ஆலம் பழங்களைத் தாண்டி போய்க் கொண்டிருந்த ஒரு சிறுமி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அவளின் அகலமான இரண்டு கண்கள் கண்ணாடிக்குப் பின்னால் நின்றிருக்கும் என்னுடைய முகத்தில் எதையோ தேடின.

நான் அதிர்ந்து போய் அடுத்த நிமிடம் என் முகத்தைப் பின்னோக்கி இழுத்தேன். ஜன்னலை விட்டு நான் பின்னால் நகர்ந்தேன். ஒரு நிமிடம் கழித்து நான் மீண்டும் எட்டிப் பார்த்த போது, ஆலம்பழம் பொறுக்கிக்கொண்டும் காற்றை கையை வீசிப் பிடித்தவாறும், அந்தச் சிறுமி நடந்து போய்க் கொண்டி ருந்தாள். நான் ஏற்கெனவே நின்ற இடத்தைவிட்டு பின்னால் நகர்ந்து நின்றதற்காக உண்மையிலேயே வெட்கப் பட்டேன். என்ன காரணத்திற்காக நான் அப்படி நகர்ந்து நின்றேன்? எனக் குப் பின்னால் மூச்சுவிட்டவாறு படுத்துக் கிடந்த பெண்ணுடன் நான் கொண்டிருக்கும் சம்பந்தமா? நான் பின்னால் திரும்பி லீலாவைப் பார்த்தேன். படுத்துக்கிடந்த அவளின் தோற்றம் என் மனதில் மீண்டும் உஷ்ணத்தைக் கிளப்பி ஆசையை உண்டாக்கியது.

அன்புக்காகவும், காம நிறைவேற்றலுக்காகவும் எந்நேரமும் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு அலைபாயும் இளைஞனிடம் குடிகொண்டிருக்கும் ஆவேசத்துடன்தான் நான் லீலாவைக் காதலித்தேன். அவளுடன் நான் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் புதிய ஆசைகளை நோக்கியும், விதவிதமான கனவுகளை நோக்கியும் தள்ளப்பட்டேன். அதிகமான நாட்கள் நான் லீலாவை தூரத்தில் இருந்து பார்க்கும் மனிதனாக மட்டும் இருந்தேன். பிறகு... கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் படுக்கையறைக்குள் நான் நுழைய ஆரம்பித்தேன். நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக வேறு வேறு மாதிரி மனதில் சிந்தித்து, கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு பிசாசைப் போல, லீலாவின் அறையில் இருந்த நாற்காலிகளில் மாறி மாறி உட்கார்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் நான் நெளிந்தேன். அவள் பாட்டு பாடுவாள். மகிழ்ச்சியான செய்திகளைக் கூறுவாள். சந்தோஷத்துடன் பல விஷயங்களையும் பேசுவாள். தேநீர் தயாரித்துத் தருவாள். குளியலறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றி என்னுடன் நடக்க வருவாள். ஆடைகளை மாற்றுவதற்காக லீலா குளியலறைக்குள் போயிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் ஆசைகள் நிரம்பிய உடல் பஞ்சு போன்று காற்றில் பறந்துவிடக் கூடாதே என்று மிகவும் சிரமப்பட்டு அதை நான்அடக்கி வைப்பேன்.

இதெல்லாம் அவளுக்குத் தெரியுமா? நான் ஒரு முறை கூட அவளிடம் இதுபற்றிக் கேட்டதில்லை. அவளின் மனதும், அதிலிருக்கும் ரகசியங்களும் எனக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்று நான் நினைத்தேன். அதனால் லீலா ஒருநாள் முதல் முறையாக என் கைப்பிடியில் சிக்கிக்கொண்டிருந்த நிமிடத்தில்கூட நான் அவளின் இதயத்தைத் திறந்து பார்க்க பிரியப்படவில்லை. அவளின் உடலும் என் உடலும் ஒன்று சேர்ந்து உண்டான அந்த உறவுக்கு உடல்களுக்கென்றே இருக்கிற மணமும், சூடும், வியர்வையும், அசைவும், அசைவின்மையும் ஒத்தாசையாய் இருந்தன என்று முழுமையாக நான் நம்பினேன்.

லீலா அமைதியாக அப்படிப் படுத்துக் கிடந்தது என் மனதில் இனம்புரியாத ஒரு உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது. ஒருமுறை இதே மாதிரி காட்சியைக் கனவு கண்டு, தன்னந் தனியனாக, ஈக்கள் மொய்க்கிற தேன்கூட்டைப்போல, ஒருவித குழப்பத்துடன் எத்தனை நாட்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் உட்கார்ந்திருக்கிறேன்! அதை இப்போது நான் நினைத்துப் பார்த்தேன். கடைசியில் ஒருநாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, நான் அவளின் அறையை விட்டு இன்னொரு முறை ஆசைகளை அடக்கிக்கொண்டு, தைரியத்தை இழந்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகத்தைப்போல எழுந்து வெளியே வந்தேன். லீலா அறையில் இருந்த விளக்கை அணைத்தாள். என்னிடம் ஏதோ கேள்வி கேட்டு, அதற்கு என்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்து வாசல் கதவைப் பூட்டாமல், கதவுக்குப் பக்கத்தில் இப்போது புதிதாக வந்து சேர்ந்த புதிய இருட்டில் ஒரு ஆவியைப்போல் அவள் நின்றிருந்தாள். பாதி அடைக்கப்பட்டிருக்கும் கதவுக்கு முன்னால் இதற்கு முன்பு எனக்கு அறிமுகமே ஆகியிராத ஒரு பெண்ணைப் பார்த்ததும், என்னிடம் இருந்த பயமெல்லாம் திடீரென்று வேறு எங்கோ போய் ஒளிந்துகொண்டது. கண்ணாடி ஜன்னல் வழியாக மெதுவாக நீங்கிக் கொண்டிருக்கும் மேகங்களினூடே நான் கண்ட மாலை நேரம் என் மனதில் ஒருவகை புத்துணர்ச்சியை உண்டாக்கியது. இருளில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நான் ஒரு சினேகிதியைப்போல அவள் தோள்மேல் கை போட்டு அறைக்குள் இருளான பகுதியை நோக்கி அழைத்தவாறு, வாசல் கதவை அடைத்தேன்.

நான் யாருக்கு முத்தம் தருகிறேன்? எனக்கே சரியாகத் தெரியவில்லை. என் கையில் தற்போது இருக்கும் பெண் யார்? இந்த அற்புதம் நிரம்பிய இருட்டு என்னவெல்லாம் மந்திர வித்தைகளைச் செய்துகொண்டிருக்கிறது! எதுவுமே தெரியாமல் என் உடலைப் பற்றிய அறிவை மட்டும் மனதில் கொண்டு லீலாவின் கூந்தலையும், கழுத்தையும், காதுகளையும், கண்களை யும். மூக்கையும், உதடுகளையும், உணர்வுகளையும், சுவையையும், வாசனையையும் மனதிற்குள் நினைத்தவாறு ஒரு தியானத்தில் இருப்பதைப்போல நான் அறைக்குள் நின்றிருந்தேன். இருள் எங்களை ஒரு ஆடை என போர்த்தியது. அப்போது என் கன்னத் தின் அருகில், ஒரு பெண்ணின் உதடுகள் என்னிடம் ஒரு மெல்லிய குரலில் கேட்டது: ""நாம அறைக்கு வெளியே போகிறவரை நீ ஏன் காத்திருந்தே?'' நான் உண்மையிலேயே அவளைப் பார்த்து, "இவ்வளவு காலம் எதுக்காகக் காத்திருந்தேன்னு நீ கேட்டிருக்கணும்' என்ற கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், கேட்கவில்லை. நான் சொன்னேன்: ""வாசலில் நின்றிருந்த உன்னை மூடிய இருள்தான் எனக்கு அதற்கான தைரியத்தைத் தந்தது. வெளியே காவல் காத்து நின்னுக்கிட்டு இருந்த மாலை நேரமும் உள்ளே நீ உண்டாக்கிய இருட்டும் சேர்ந்து எனக்கு பாதுகாப்பும் தைரியமும் கொடுத்தன. இனி நான் உன்னை வெளிச்சத்துல பாக்குறேன்.'' நான் விளக்கு வெளிச்சத்தில் லீலாவைப் பார்த்தேன். என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நான் பார்த்தேன்.

எனக்குப் பின்னால் லீலா உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் மூச்சு நன்றாக என் காதில் கேட்டது. அவளின் உடலை வருட வேண்டும் என்ற என் ஆசையை நானே தடுத்து நிறுத்திக் கொண்டேன். கனவுகளால் செய்யப்பட்ட மென்மையான உலகத்தை என்னுடைய கைகள் கலைத்து விடக்கூடாதே என்று நான் எண்ணியதே அதற்குக் காரணம். ஜன்னலுக்கு வெளியே காற்று அடங்கி விட்டிருந்தது. ஆலம் பழங்களை உதிர்த்த மேகங்கள் காற்றோடு சேர்ந்து வேறு ஏதோ திசையை நோக்கிப் போய்விட்டிருந்தன. அவை போன திசையில் தூரத்தில் தெரிந்த மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பார்த்தேன்- அதே பாதையில் ஆலம்பழங்களின், காற்றின் சினேகிதியான அந்தச் சிறுமி தன் தந்தையின் கையைப் பிடித்தவாறு திரும்பி வந்து கொண்டிருக்கிறாள். நான் ஜன்னலைத் திறந்தேன். எனக்கு நேராக உயர்ந்து வரப்போகிற அவளின் பார்வைக்காக நான் தலையை நீட்டிக்கொண்டு நின்றிருந்தேன்.

அவள் என்னை ஜன்னலுக்குக் கீழே கொண்டு போனாள். நான் புன்சிரிப்பு தவழ, அவளின் உயரப்போகிற கண்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், அவள் உயரத்தில் தெரிந்த ஜன்னல்களை எப்போதோ மறந்து போயிருந்தாள்.

அவள் மேலே தலையைத் தூக்கிப் பார்க்கவே இல்லை. ஆனால், தான் நடந்துபோகும் கால் சுவடுகளை அவள் எண்ணினாள்: ""ஒண்ணு... ரெண்டு... மூணு.'' அவள் தரையைப் பார்த்தவாறு எண்ணினாள். ஒவ்வொரு முறை எண்ணுகிறபோதும், நிலத்தை பலமாக அவள் மிதித்தாள். "பாப்பா... என்னைப் பாரு' மனதிற்குள் அந்தச் சிறுமியிடம் நான் கூறினேன்: "எனக்கு இப்போ எந்த பயமும் கிடையாது. நான் இங்கேதான் நின்னுக்கிட்டு இருக்கேன். உன்னோட பேரு என்ன? நீ உன் தலையைத் தூக்கி ஜன்னல் வழியா என்னை ஒரு முறை பார்க்கக் கூடாதா? இதோ- நான் நின்றிருக்கிறேன்.' நான் அவளை அழைப்பதை அவள் அறியவில்லை. "ஒண்ணு... ரெண்டு... மூணு...' என்று எண்ணியவாறு அவள் அந்த இடத்தைவிட்டு அகன்று போனாள்.

என் பார்வையை விட்டு அவள் முழுமையாக மறைந்துபோன பிறகும், அவளின் கால்சுவடுகள் எண்ணிக்கை இரவை முத்தமிடப்போகும் மாலை நேரத்தின் நிழல்களினூடே காலத்தைப் பற்றிய கணக்கைப்போல உயர்ந்து தெரிந்தது.

நான் உறங்கிக் கொண்டிருந்த லீலாவை பட்டாம்பூச்சிகளும் மேகங்களும் வரையப்பட்ட போர்வையால் மூடினேன். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுதினேன்: "நன்றாகத் தூங்கு. நான் இப்போது செல்கிறேன். நாளை?' எழுதிய தாளை மேஜைமேல் வைத்துவிட்டு தானே அடைத்துக் கொள்கிற கதவை லேசான சத்தம் கேட்கும் வண்ணம் மூடிவிட்டு, படிகளின் வழியாக நான் தெருவுக்கு வந்தேன்.

ஒரு நாளின் முடிவில் இருக்கிற நான் என் கதாநாயகனை விட்டு இப்போது பிரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இமயமலையின் கடவுளின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்த பெரிய இயந்திரத்தை விட்டு இரவு நேரத்தில் பிரிய நேர்ந்த விஞ்ஞானிகளைப்போல, நானும் பிரிகிறேன். இனியும் பெயர்கள் உச்சரிக்கப்பட வேண்டி இருக்கிறது. என் கதாநாயகனின் விதிக்குப் பின்னால் நான் ரத்தத்தை முகர்ந்து பார்த்தவாறு போக வேண்டியதும் இருக்கிறது.

நேரற்ற பாதையிலிருந்து  என்னை
நேரான பாதைக்கும்-
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கும்
மரணத்தில் இருந்து வாழ்வுக்கும்-

லீலாவின் அறையைவிட்டு வெளியே வந்த கருணன் தன் மனதில் எழுந்த சில எண்ணங்களுடன் போராடியவாறு நடந்து கொண்டிருந்தான். அவனின் முதல் குறி மதுவை அருந்துவதில் இருந்தது. லீலாவின் உடலுக்கு அடுத்தபடியாக அவன் மனதில் ஆசையாக அணைகட்டி வைத்திருந்தது மதுதான். அவன் மது

அருந்திவிட்டு லீலாவைத் தேடிப் போனது ஒரே ஒரு முறைதான். அவள் அவன் தன்னைத் தொடுவதைத் தடுக்கவில்லை என்றா லும், என்னவோ மனதிற்குள் எண்ணமிட்டவாறு அவள் சொன்னாள்: ""நீ இப்போ வேற யார் மாதிரியோ இருக்கே!''

அவ்வளவுதான்- கருணன் அதிர்ச்சியடைந்தது போல் தன் முகத்தை அவளிடமிருந்து நீக்கி அவள் முகத்தையே வெறித்துப் பார்த்தான். அவள் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அந்தத் தீவிர சிந்தனையைப் பார்த்து அவன் நடுங்கிப் போனான். "இதுதான் நான். வேற யாருமில்ல...' அவனுக்கு உரத்த குரலில் சொல்ல வேண்டும்போல இருந்தது. "என்னோட பழைய நண்பன் மது. நான் பெண்களோட உடம்பைப் பற்றிய கற்பனைகளோட,

அவங்களோட உடல் மினுமினுப்பையும், மறைஞ்சிருக்கிற கவர்ச்சிகளையும் பற்றிய கனவுகளோட சஞ்சாரம் பண்ணிக்கிட்டு இருந்த காலத்துல, எனக்கு துணையா இருந்தது மதுதான். என்னோட தனிமையைப் போக்க கிடைச்ச நல்ல நண்பன் மது மது அருந்தக் கூடிய பாரில் தனிமையாக அமர்ந்திருந்த கருணன், முதன்முறையாக மதுவுடன் நட்பு கொள்ள ஆரம்பித்தான். மதுவிற்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பும், நெருங்கிய உறவும் அவனுக்கு காமத்தால் கிடைக்கும் திருப்தியைவிட  அதிகமான துணையையும் நிழலையும் தந்தன. மது அவனை ஒருபோதும் பயமுறுத்தியதில்லை. அவன்மேல் சட்டங்களோ, நிபந்தனைகளோ போட்டதில்லை. பாரின் மங்கலான வெளிச்சத்தில் ஒரு பழைய நாற்காலியைப் போட்டு கம்பீரமாக மதுக் குப்பியின் சொந்தக்காரனும், உலகத்தை  வெறுக்கக் கூடியவனும், வளர்ச்சி பெற்றவனுமான கருணன் தலையை உயர்த்தியவாறு அமர்ந்திருப்பான்... அவன் தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்து காதலித்த அழகிகளின் நினைவுகளில் இருந்து காப்பாற்றி, மது தன்னுடைய எதிர்ப்பு இல்லாத போக்கில் அவனைக் கொண்டு போகும். அவனின் எண்ணிக்கையில் அடங்காத காமச் செயல்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவனை அது அமைதிப்படுத்தும்.

அவன் எப்போதும் போகும் மதுக்கடை இன்று அடைக்கப் பட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் கடைக்கு முன்னால் நின்றிருந்தான் கருணன். அவன் மனம் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. லீலாவின் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றவாறு உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடத்திலும், இந்த ரகசிய சிந்தனை அவன் மனதிற்குப் பின்னால் ஓடிக் கொண்டுதான் இருந்தது. லீலாவுடன் தான் கொண்டிருக்கும் உறவால் தனக்குக் கிடைத்த ஆத்ம திருப்தியை சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் புதிய காம விஷயத்தை அவன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான். கருணனுக்கு இதைத் தவிர வேறு வழியே தோன்றவில்லை. காரணம்- லீலாவின் தோழியான ராதாமீதும் அவன் காதல் கொண்டிருந்தான். இரண்டு தோழிகளையும் ஒரே நேரத்தில் காதலித்தான்- ஒருத்தியைப் பற்றி இன்னொருத்திக்குத் தெரியாமலே. தான் உண்டாக்கியிருக்கும் இந்தக் காதல் உறவை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. இந்த உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை அவன் மவுனமாக ஏற்று மனதில் இருத்திக் கொண் டான். கருணன், சொல்லப்போனால்- உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களையும் காதலிக்கிறான். இந்த தாகத்தை அவனால் அடக்கவோ, தூக்கி எறியவோ முடியவில்லை என்பதுதான் உண்மை. அவனின் பகல்களிலும் இரவுகளிலும் கனவுகளிலும் ஆட்சி செய்து எதற்குமே அடங்காமல் இருந்த காம வேட்கை, பெண்களின் உடலைப் பற்றிய சதா நினைப்பு, அவனை ஒரு பூதத்தைப்போல விடாமல் பின்தொடர்ந்தது. இப்போது கருணன் படுவேகமாக ராதா இருக்கக்கூடிய இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஒரு இரவில் லீலாவின் அறையை விட்டுக் கிளம்பிய ராதாவுக்கு கருணன்தான் துணையாகப் போனான். வீட்டுப் படியில் கால் வைக்கிறபோது, கருணனின் ஆசைகளுக்கு நீரூற்றுவது மாதிரி, அவள் அவனை அறைக்குள் வரும்படி

அழைத்தாள். திருவிழாக்கோலம் பூண்டு கொண்டாடிக் கொண்டிருந்த மனதுடன், உலர்ந்துபோன உதடுகளுடன், அவன் ராதாவின் அறைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்தான். இதோ, அவன் இப்போது இன்னொரு பெண்ணின் படுக்கையறையில்!

அவன் சங்கிலி போட்டுக் கட்டப்பட்ட மிருகத்தைப்போல் ஒரு இடத்தில் அமர்ந்தவாறு நகத்தைக் கடித்தான். தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த ராதாவின் ஒவ்வொரு அசைவையும் கண்களைக் குறுக்கிக் கொண்டு ஒருவித ஆர்வத்துடன் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். டாய்லெட்டில் இருந்தவாறு அவள் உண்டாக் கிய சத்தங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கதவைத் தாண்டி அவன் காதுகளில் பெரிதாக வந்து மோதின. டாய்லெட்டுக்குள் தானும் நுழைந்தால் என்ன என்று தோன்றிய மன ஆசையை மிகவும் கட்டுப்படுத்தி அவன் அடக்கிக்கொண்டான். ராதாவுடன் கொஞ்சமும் காரணமே இல்லாமல் குரலை உயர்த்தியவாறு அவன் என்னவோ பேசினான். தான் வீட்டுக்குள் நுழைந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது என்ற உணர்வு மனதில் தோன்றிய வுடன், ராதாவின் முகத்தில் கேள்விக் குறியாக ஓடிக்கொண்டி ருந்த பல பார்வைகளையும் பார்த்த அவன், அவளிடம் விடைபெற்றுக் கொண்டு இரண்டு மூன்று படிகளை ஒரே தாவாகத் தாவி வீட்டுக்கு வெளியே வந்து, அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்வையையும் முக பாவத்தையும் மனதிற்குள் மீண்டும் பலமுறை வலம் வரச் செய்து, தன்னுடைய செயலின் வெற்றி தோல்வியைக் கணக்குப் போட்டு, தன்னுடைய கோழைத்தனத்தின்மேல் கோபம் கொண்டு, எழுந்து வெறுப்பில் இருட்டையும் காற்றையும் மழைத் துளிகளை விழச் செய்யத் தொடங்கியிருந்த ஆகாயத்தையும் சபித்தவாறு அவன் நடந்து சென்றான்.

கருணனுக்கு ராதாவின் வீட்டைப் பற்றி அந்த அளவுக்குத் தான் ஞாபகத்தில் இருந்தது. இப்போது ஆகாயத்தில் திரண்டிருந்த மேகங்களில் இருந்து மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. கருணனுக்கு என்ன காரணத்தாலோ வெறுப்பு தட்டியது. முன்பு பலமுறை தான் அனுபவித்திருக்கும் நிராசை யான சம்பவங்களை நினைத்துப் பார்த்து, கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வந்த இந்த மழையை ஒரு கெட்ட சகுனமென பார்த்தான் அவன். என்ன நடக்கிறது? அவன் கவலையில் மூழ்கினான். ஒருவேளை ராதா வீட்டில் இல்லாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் தன்னை அவள் உள்ளே அனுமதிக்காமல் வெளியே துரத்திவிடலாம். இல்லாவிட்டால் தன்னைப் பற்றி லீலாவிடம் புகார் பண்ணலாம். அதுவும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு படுக்கையறையில் மாறி மாறி நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு மூச்சுவிடாமல் பல மணி நேரங்கள் எதையாவது பேசிக்கொண்டு வெறுமனே திரும்பிவர வேண்டும். ராதாவின் உடலுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்கள் கருணனின் மனதில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஆவலைத் தீ மூட்டி எரிய விட்டு, அவன் நடையை வேகப்படுத்தச் செய்தன. அவன் மனதில் லீலாவைப் பற்றிய நினைவு ஒன்றிரண்டு முறை தலையை நீட்டியபோது, அதைக் கண்டும் காணாதது மாதிரி அவன் நடித்தான். "யாருக்குத் தெரியும்?' அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: "மழையே எனக்கு ஒரு சாதகமான விஷயமாக இருக்கலாம். வெளியே பெய்த மழையோட சத்தம் லீலாவைப் புதிய ஆசைகளால் நிரப்பலியா? அதே மாதிரி இந்த மழை இன்னைக்கு எனக்கொரு வரப்பிரசாதமா இருக்கட்டும்...'

இப்படிப் பல விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு கருணன் ராதாவின் வீட்டைத் தேடி நடந்து கொண்டே இருந் தான். வீட்டின் முகவரி தனக்குத் தெரியாது என்றாலும், வீடு இருக்கும் இடம் தனக்கு நன்றாகத் தெரியுமே என்ற எண்ணத்து டன் அவன் நடந்தான். வீட்டுக்கு முன்னால் ஒரு பாலா மரம் இருந்தது. கீழே ஒரு மோட்டார் சைக்கிள், கார் ரிப்பேர் பார்க்கும் கடை. மாடியில் இருந்த அவுட் ஹவுஸ்தான் ராதாவின் வீடு. அதன் ஜன்னல்களில் சிவப்பு நிறத்தில் திரைச்சீலையைப் பார்த்தது கருணனின் ஞாபகத்தில் இருந்தது. அந்த வீட்டின் பிரதான வாசலில் இரண்டு பெரிய நாய்கள் இருந்ததையும் அவன் நினைத்துப் பார்த்தான். அந்த நாய்கள் ராட்சசத்தனமாக அன்று நின்றிருந்தன. வெறும் தோற்றம்தான். ஆனால் ரொம்ப ரொம்ப சாது.

அவன் அவற்றைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருக்க, அவை அவனுக்குப் பக்கத்தில் போய் நின்று விசிறிகளைப் போன்ற வால்களை ஆட்டி கொட்டாவி விட்டவாறு அவனின் கைகளை நக்க ஆரம்பித்தன. இதை நினைத்துப் பார்த்த கருணன் "ஹா... ஹா... ஹா...' என்ற வாய்விட்டுச் சிரித்தான். இப்போது கருணன் ஏ-ப்ளாக்கிலிருந்து பி-ப்ளாக்கிற்கும் அங்கேயிருந்து டி-ப்ளாக்கிற்கும்  அங்கேயிருந்து ஒரு சுற்று சுற்றி சி-ப்ளாக்கிற் கும், பிறகு வழி தவறி எஃப்-ப்ளாக்கிற்கும் என்று போய்க் கொண்டிருந்தான். ஆங்காங்கே மனிதர்கள் உலாத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களிடம் விசாரிக்கலாம் என்றால், வீட்டின் முகவரி தெரியவில்லை. அந்த முட்டாள் நாய்களைத் தவிர அவனைப் பொறுத்தவரை அந்த வீட்டைப் பற்றிய எந்த அடையாளமும் அவனிடம் இல்லை. பாலா மரங்கள் என்று பார்த்தால் ஏகப்பட்ட பாலா மரங்களை அவன் கடந்து வந்துவிட்டான். எத்தனையோ சிவப்பு திரைச் சீலைகளை யும் பார்த்தாகிவிட்டது. தான் இப்போது தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு கருணனுக்கு ஏறக் குறைய உண்டாகிவிட்டது. அவன் கால்கள் வலிக்க ஆரம்பித்தன. தேடி வந்த காரியம் நடக்காமல் போனதில் அவன் மனதில் நிராசை தோன்றியது. அந்த நிராசை அவனை மேலும் தளர்வடையச் செய்தது. விதி தனக்கு எதிராக நின்று கொண்டிருக்கிறதோ என்று அவன் நினைக்க ஆரம்பித்தான்.

அப்படியென்றால், தன்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துவிட்டதும் அதே விதிதானே என்றும் அவன் நினைக்காமல் இல்லை. சிறிது நேரம் வெறுமனே எதுவும் செய்யாமல் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. அதே நேரத்தில் இருட்டில் மறைந்திருந்த எத்தனையோ ஜன்னல்களில் ஏதோ ஒரு ஜன்னலுக்குப் பின்னால் தான் காதலிக்கிற அந்தப் பெண் மறைந்திருக்கிறாள் என்பதையும், அவள் இதே இடத்தில் உயிர்ப்புடன் இருக்க, அவளைப் பார்க்க முடியாத நிலையில் தான் இருக்கும் அவல நிலையையும் நினைத்துப் பார்த்தபோது, அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. வீடுகளின் சுவர்களை இடித்து தரைமட்டமாக்கி, ராதாவை ஒரு ராட்சசனைப் போலத் தூக்கிக்கொண்டு வந்தால் என்ன என்று நினைத்தான் அவன். முதலில் லேசாகத் தூறிய மழை இப்போது நின்றுவிட்டிருந்தது. அவன் மீண்டும் விளக்குக் கம்பங்களுக்குக் கீழே அடைக்கப்பட்டிருக்கும் வெளிவாசல்களையே உற்று உற்றுப் பார்த்தான். அங்கிருந்த மரங்களை எல்லாம் இருட்டில் பாலா மரங்கள் எனத் தவறாக எண்ணினான். ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையின் வண்ணம் இருட்டில் வேறு நிறமாக அவன் கண்களுக்குத் தெரிய, மிகவும் கவலையில் ஆழ்ந்து போன கருணன் தான் நினைத்துவந்த காரியம் நடக்காமல் போய்விடுமோ என்ற நிராசையுடன் தன் தேடலைத் தொடர்ந்தான்.

திடீரென்று தனக்குப் பின்னால் நிலவு உதித்ததாக உணர்ந்தான் கருணன். அவன் ஆச்சரியத்துடன் திரும்பி நின்று, இளம் வெயிலைப் போல ஒரு மங்கலான வெளிச்சத்தைப் பரப்பியவாறு உதித்துக்கொண்டிருந்த சந்திரனையே பார்த்தான். அவனையும் மீறி அவன் கண்கள் ஒரு நிமிடம் ஒரு பக்கம் பார்த்தன. அதோ! தனக்கு மிகவும் அருகில் பாதையின் வலது பாகத்தில் ஒரு பாலா மரம்! அதோ ஒரு கேட்! அதோ கேட்டின் இடைவெளியில் மூக்கை வெளியே நீட்டியவாறு இருக்கும் இரண்டு நாய்கள்! அதோ சிவப்பு வண்ண திரைச்சீலை தொங்கிக்கொண்டிருக்கும் ஜன்னல்! அதில் நிறைய வெளிச்சம்! "ஹா... ஹா... ஹா...' கருணன் மனம் விட்டு உரத்த குரலில் சிரித்தான். கேட்டை நோக்கி அவன் அடுத்த நிமிடம் வேகமாக நடந்து சென்றான். நாய்களுக்குப் பின்னால் வீட்டுச் சொந்தக்காரி ஒரு சிறு குழந்தையின் கையைப் பிடித்தவாறு நின்றிருந்தாள்.

அவர்களின் முகங்கள் பாலா மரத்தின் நிழலில் மறைந்து போய்விட்டிருந்தன. கேட்டைப் பிடித்தவாறு நின்றிருந்த கருணன் வீட்டுச் சொந்தக்காரியிடம் கேட்டான்: "இங்கேதானே...' இல்லாத ஒரு படியின்மேல் இருட்டில் தாவி இறங்கும் ஒருவனைப் போல் கருணன் சம்பந்தமே இல்லாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு சூனியத்தை நோக்கி விழுந்து கொண்டிருந்தான். கருணனின் நாக்கு, ஞாபகத்தில் வராத ஒரு பெயருக்காக அலைந்து கொண்டிருந்தது. அவன் வீட்டுச் சொந்தக்காரியை ஒரு ஊமை யைப்போல் பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் மனம் பாதாளக் கரண்டியைப்போல பெயர்களின் ஒரு மாயச் சூழலுக்குள் நுழைந்து தேடிக் கொண்டிருந்தது. "அவளோட பேரு என்ன? லீலாவோட தோழி. நான் தேடி வந்த பொண்ணு. அவ பேரு... நாக்கு நுனியில் இருக்கு! வரமாட்டேங்குதே!' கருணனுக்கு தலையைச் சுற்றுவதுபோல இருந்தது. அவன் நடக்க முடியாமல் தடுமாறும் கால்களுடன் பெயர்களின் ஒரு நீண்ட பட்டியலோடு ஓடிக்கொண்டிருந்தான்: "நிர்மலா, கார்த்திகா, லலிதா, உமா, மாதுரி, மீனாட்சி, கல்யாணி, கார்த்தியாயனி, ஹேமா, ரஜினி, காஞ்சனா, ராஜி, விஜயா, பார்வதி, வாசந்தி, தேவி, ரத்னா, சரோஜினி, உஷா, சந்தியா'- குளிர்ச்சியான இரண்டு மூக்குகள் கேட்டில் இறுகப்பற்றியிருந்த அவனின் கைவிரல்களைப் பாசத்துடன் தொட்டுப்பார்த்தன. ஒரு சிவப்பு வண்ண திரைச் சீலை அவன் கண்களுக்கு முன்னால் காற்றில் உயர்ந்தது. கருணனுக்கு உரத்த குரலில் சத்தமிட வேண்டும்போல இருந்தது. "நான் இங்கேதான் இருக்கேன்!' தான் மறந்துவிட்ட பெயரைக் கொண்ட ஒரு பெண் அந்தத் திரைச்சீலைக்குப் பின்னால் இருக்கிறாள் என்பதை எண்ணிப் பார்த்தபோது, கருணனிடம் இருந்த தைரியம் முழுவதும் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சாபத்திற்கு இரையாகிவிட்ட ஒரு மனிதனைப்போல அவன் வீட்டுச் சொந்தக்காரியையே பார்த்தவாறு நின்றிருந்தான். வீட்டுச் சொந்தக்காரி அவன் தான் கேட்ட கேள்வியை முழுமையாகக் கேட்கட்டும் என்ற எதிர்பார்ப்புடன் - பொறுமையுடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள். சாதுக்களான இரண்டு பெரிய நாய்களும் கருணன் உடலை நக்குவதற்காக கேட்டுக்கு உள்ளே இருந்தவாறு பரபரத்தன. அவற்றின் தடிமனான கால்கள் இருட்டில் நிலத்தில் தொட்டு தாளம் அடித்துக்கொண்டிருந்தன. ""என்ன வேணும்?'' வீட்டுச் சொந்தக்காரி கேட்டாள். பாலா மரத்தின் கிளைகள் காற்றில் ஆடின. தெரு விளக்கொளியில் ஆலம் பழங்கள் விழுந்து கிடக்கும் அந்தப் பாதையில் இருந்தவாறு அவனைப் பார்த்து பயமுறுத்திய அந்த இரண்டு பெரிய கண்கள் இப்போது மீண்டும் அவனைப் பார்த்தன. கருணனுக்கு வாய்விட்டு அழவேண்டும்போலவும், எல்லாரும் கேட்கும் வண்ணம் சிரிக்க வேண்டும்போலவும், அந்த இடத்தைவிட்டு ஓடிப்போக வேண்டும்போலவும் இருந்தது. "இதோ நான் தேடி வந்த அடையாளம்! நான் வர்றதை அவள் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டு இருக்கா. ஆனா, நேரமாயிடுச்சு... நேரமாயிடுச்சு....' கருணன் தனக்குள் முணுமுணுத்தான். பிறகு அவளின் கண்களின் பார்வையில் இருந்து விலகி இருக்க நினைத்த அவன் இருட்டுக்குள் தன்னை மறைத்துக்கொண்டான். சுருதி இறங்கிப்போன பரிதாபமான குரலில் அவன் வீட்டுச் சொந்தக்காரியைப் பார்த்துச் சொன்னான்: ""இல்ல... நான் வீடு மாறி வந்துட்டேன்...'' கருணன் பாலா மரங்களின் நிழலில் மற்றொரு நிழலாக நீங்கிப் போனான். அவன் தலைக்குமேலே காற்று பாலா மரங்களின் இலைகளுடன் மோதி போராட்டமே நடத்திக் கொண்டிருந்தது. அவனைச் சுற்றிலும் தெருவிளக்கின் பிரகாசமும் நிலவும் சேர்ந்து நிழல்களை இரண்டு மடங்கு பெரிதாக்கி எல்லா இடங்களிலும் பரப்பிவிட்டிருந்தன. சிவப்பு வண்ண திரைச் சீலை திடீரென்று ஒரு பக்கம் விலக, ராதாவின் முகம் ஜன்னல் வழியே தெரிந்தது. ""பாலா...'' - அவள் குழந்தையை அழைத்தாள்: ""இங்கே வா... நான் உனக்கொரு மிட்டாய் தர்றேன்.'' கருணன் பாலா மரத்தின் நிழலில் இருந்தவாறு, பரிதாபமான தோற்றத்துடன் "டக்டக்'கென்று பதை பதைத்துக் கொண்டிருக் கும் இதயத்துடன் தன்னால் பெயர் சொல்ல முடியாமல் போன அந்த இளம் பெண்ணின் தூரத்தில் தெரியும் முகத்தைப் பார்த்தவாறு ஒளிந்து நின்றிருந்தான். பாலா என்ற குழந்தை அவுட்ஹவுஸுக்கு நேராக கால் சுவடை எண்ணியவாறு ஓடிக்கொண்டிருந்தது: "ஒண்ணு... ரெண்டு... மூணு...' அந்தக் குழந்தைக்குப் பின்னால் அந்த நாய்களும் கருணனுக்காக தாங்கள் இதுவரை காத்திருந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து- அந்த இரண்டு நாய்களும் அரக்கர்களைப் போன்ற தோற்றத்துடன் நிலவொளியில் ஓடி மறைந்தன.

எனக்கொரு நம்பிக்கையுண்டு. எந்த விஷயத்தையும் முழுமையாக விவரிக்க முடிந்தால், அதன் உண்மைத் தன்மைக்கு நம்மால் பூரணமாகப் போய்ச்சேர முடியும். இமயமலையில் தெய்வத்தின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்த இயந்திரம் செய்தது- தெய்வத்தை முழுமையாக விவரிக்க முயற்சி செய்ததே தவிர வேறொன்றுமில்லை. தெய்வத்தை முழுமையாக விவரித்துக் கூற முடிந்துவிட்டால், பிறகு பிரபஞ்சத்திற்கு என்ன வேலை இருக்கிறது? அது அணைகிறது. காரணம்- தெய்வத்தைப் பற்றிய விவரிப்பு விரிந்து நமக்குத் தெரிவது- காலம். காலத்தின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மால் ஒரு எறும்பையோ ஒரு யானையையோ ஒரு மேகத்தையோ ஒரு சிறு முடியையோ முழுமையாக விவரிக்க முடியாது. முழுமையாக விவரங்கள் தெய்வத்திடம் மட்டுமே முடியும். காரணம்- முழுமையாக விவரிக்க தெய்வத்தால் மட்டுமே இருக்கிறது.

அதனால்தான் அவனால் பெயர் வைக்க முடிகிறது. படைக்கப்பட்டுவிட்டால் மட்டும் போதுமா? பெயர்தான் படைப்பிற்கு அர்த்தமே தருகிறது. எழுத்தாளனின் விதி இதோடு சண்டை போடுகிறது. பிரபஞ்சத்தின் சிக்காத பெயர்களுக்குப் பின்னால் எழுத்தாளன் ஓடிக்கொண்டிருக்கிறான்.

எண்ணெய் தேய்க்கப்பட்ட மினுமினுப்பான தூணில், எண்ணெய் தேய்த்த உடலுடன் பிடித்து ஏற முயற்சிப்பவனைப் போல்தான் இந்த எழுத்தாளன். வழுக்கி விழும்போது, சில நேரங்களில் கையில் கிடைப்பது ஒரு பொய்யான பெயராக இருக்கும். சில நேரங்களில் பெயரில்லாதவனின் கரங்களின் அரவணைப்பு அவனுக்குக் கிடைக்கும்பட்சம், ஒரு உண்மைப் பெயரும் அவனுக்கு நிச்சயம் கிடைக்கும்.

லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து.