Author Topic: ~ இட்லி, தோசைக்கான மாவு செய்முறை ~  (Read 83 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218359
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இட்லி, தோசைக்கான மாவு செய்முறை



வட இந்தியாவில் சப்பாத்தி போன்று, தென் இந்தியாவில் பிரதான உணவு இட்லி, தோசை. பெரும்பான்மையான வீடுகளில் காலை அல்லது இரவுநேர டிபனுக்கு இட்லி / தோசை பொதுவான மெனு அயிட்டமாக இருக்கும். ரோட்டோர கடைகள் முதல் பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை எல்லா இடங்களிலும் விதவிதமான இட்லிகளும், தோசைகளும் கண்டிப்பாக இடம்பெறும். என் அம்மா பிறந்தஊர் மதுரைக்கு பக்கத்தில் உள்ள சின்ன டவுன். அங்கு நெசவுதான் பிரதான தொழில். இப்ப மாதிரி முன்னெல்லாம் விசைத்தறி கூட கிடையாது. கைத்தறிதான். காலையில 6, 7 மணிக்கு தறில இறங்குனா நைட் 8 மணி வரைகூட நெய்வாங்க.
நிறைய வீடுகளில் பெரிய வசதிகளும் ஒன்றும் இருக்காது. கார்த்திகை, கடைசி வெள்ளிதான் அவங்களுக்கு நம்ம கொண்டாடுற பொங்கல்,தீபாவளி பண்டிகை மாதிரி. அன்னைக்குதான் இட்லி,தோசையெல்லாம் வீட்ல செய்வாங்க. நாளைக்கு கார்திகைனா இன்னைக்கே இட்லிக்கு எல்லாம் ஊறப்போட்டு அரைச்சு ரெடி பண்ணிருவாங்க. கார்திகை அன்னைக்கு தறி வேலை எதுவும் பண்ணமாட்டாங்க. இட்லி/தோசை சுட்டு சாப்பிடுவாங்க. சாயங்காலம் கோயில்களுக்கு போயிட்டு வருவாங்க. நிறைய பேர் இப்ப எங்க ஊர்ல மாவு அரைத்துக் கொடுப்பதையே தொழிலாகவும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதனால இப்ப சாதாரண பெட்டிக்கடைகளில் கூட இட்லி,தோசை சுடுவதற்கு தயாரான மாவு பாக்கெட்டுகளில் எளிதில் கிடைத்துவிடுகிறது. வாங்கி அப்படியே இட்லியோ,தோசையோ ஊத்திக்கிட வேண்டியதுதான்.
20- வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டிலும் கிரைண்டர் எதுவும் கிடையாது. அம்மா உரலில் இட்லி/தோசைக்கு மாவு அரைச்சதெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இப்பெல்லாம் எவ்வளவு வசதிகள். கிரைண்டர்களில் எத்தனையோ நவீன ரகங்கள் வந்துவிட்டது. இட்லி/தோசைக்கான மாவு தயாரிப்பதும் மிகவும் எளிதாகிவிட்டது. அம்மா எனக்கு எப்பவும் சொல்வாங்க. மாவு அரைக்க 1:4 இதை ஞாபகம் வச்சுக்கிட்டால் போதும்னு. அந்த கணக்குப்படி எதுல நம்ம அளந்து போடுறமோ அதுக்கு 1 பங்கு உளுந்துக்கு, 4 பங்கு அரிசி. நான் இந்த முறையில்தான் இன்றும் மாவு அரைத்து வருகிறேன். இட்லி, தோசை இரண்டிற்கும் சரியாக வரும்படி லேசான தரதரப்பான மாவாக அரைத்து வைத்துக்கொள்வேன்.இட்லி நல்லா மெதுவாக பஞ்சுபோல் வருகிறது. அதேபோல் தோசைக்கு ஊற்றும்போது, தோசையும் நல்லா முறுகலாக பேப்பர் ரோஸ்ட் மாதிரி வருகிறது. இட்லி, தோசைக்கான மாவு அரைக்க..


தேவையான பொருட்கள்:

தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப்
இட்லி அரிசி – 4 கப்
உப்பு – 3 டீ ஸ்பூன்
வெந்தயம் – ½ டீ ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

மாவு அரைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் ஊற வைக்கவும். உளுந்தையும், அரிசியையும் நன்கு அலசி களைந்து வைத்துக்கொள்ளவும். முதலில் உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்ந்துவிட்டால் உளுந்து சரியாக அரைபடாது. அதே சமயத்தில் தண்ணீர் ரொம்ப குறைவாக இருந்தாலும் அரைப்பதற்கு கடினமாக இருக்கும். எனவே இதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பக்கத்தில் வைத்துக்கொண்டு சிறு சிறு இடைவெளிவிட்டு 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு தண்ணீரை அரைக்கும் மாவில் சேர்த்துக் கொண்டே வரவும். மாவு வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வான மாவாக இருக்கும்படி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். உளுந்து முழுவதும் அரைபட்டு லேசான தரதரப்புடன் இருக்கும் நிலையில் இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து அரிசியையும் இதேபோல் அரைத்துக்கொள்ளவும் . அரிசிமாவையும், உளுந்துமாவையும் ஒன்றாக உப்பு போட்டு கலக்கிவைக்கவும். இதை அப்படியே 8 – 10 மணி நேரம் அறைவெப்பநிலையில் (Room temperature) வைத்திருக்கவும். மாவு புளிக்க ஆரம்பித்து ஆங்காங்கே காற்றுக்குமிழிகள் தோன்றி இருக்கும். இப்போது மாவு பயன்படுத்த தயாராகிவிட்டது.இதை மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்கிவிட்டு பிரிட்ஜில் வைத்திருந்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாவில் நம் விருப்பத்திற்கு ஏற்ப இட்லி, தோசை,மசால் தோசை, ஊத்தாப்பம், பனியாரம் என வித விதமாக தயாரித்துக் கொள்ளலாம்.
அரிசி மாவு அரைக்கும்போது ½ டீ ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் சேர்த்தும் அரைத்துக்கொள்ளலாம். இட்லி, தோசை சாப்ட்டாக வருவதோடு நல்ல வாசனையாகவும் இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
மாவு புளித்துவர ஆகும் நேரம் அவரவர் வாழும் இடத்தின் வெப்பநிலை, மற்றும் வீட்டினுள் இருக்கும் அறை வெப்பநிலையைப் பொருத்தது.
குளிர்காலத்தில் மாவு விரைவில் புளித்துவர மைக்ரோவேவில் குறைவான வெப்பநிலை செட்டிங்கில் வைத்து 2 நிமிடங்கள் சூடாக்கி கலக்கி வைக்கவும். இது மாவு புளிப்பதற்கு உதவி செய்யும்.
மாவு அரைக்க தோல் நீக்கிய முழு உளுந்தை பயன்படுத்த மிருதுவான இட்லிகள் கிடைக்கும். முழுஉளுந்து கிடைக்காத நிலையில் உடைத்த உளுந்தை(split urad dal)பயன்படுத்தி செய்யலாம்