Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 246  (Read 2103 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 246
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
பெண்ணே
நீயும் பெண்ணா...
பெண் குலத்திற்கே
பெருமை சேர்த்தவளே...
தமிழச்சியே!
தமிழ் நாட்டிற்கு
புகழ் மாலை
சூட்டியவளே...

பல்வேறு போர்
திறமைகளைக் கொண்ட
திறமைசாலியானவளே...
விசுவாசம் நிறைந்தவளே...
ஞானம்,
பண்பு,
துணிச்சல்,
யாரும் அசைக்க முடியாத
வீரம் கொண்ட
வீராங்கனையே...

கர்ஜிக்கும்  சிங்கத்திற்கு
ஒப்பானவளே...
சிறு வயதிலே
தாயை இழந்தவளே...
பெயரை
இழந்து கிடந்த
சிவகங்கை தேசத்திற்காக
திறப்பிலே நின்றவளே...

பதினெட்டு வயதிலே
ஆயுதம் ஏந்தினவளே...
தாய் நாட்டை
அந்நியரிடமிருந்து மீட்கப்
படைத்தளவியாக...
வீர மங்கை வேலுநாட்சியாரிடம்
சேர்ந்தவளே...
தான் பிறந்த மண்ணுக்காகவும்,
தன்னுயிராய்  மத்திக்கும்
வேலுநாட்சியாருக்காகவும்,
வெள்ளையனை எதிர்த்தவளே...
போர்க்களத்தில் போராடியவளே...

தன் தலைவிக்கு
வெற்றியை அள்ளித்தர
மரணத்தையும் ருசித்தவளாக...
ரத்த சாட்சியாய்
மாறினவளே...
ஆங்கிலேயர்
ஆயுதக்கிடங்கின் மீது
குதித்து...
உடல் முழுவதுமாக வெந்து
உருவம் தெரியாமல்
போனவளே...

தியாகம் செய்து...
தியாகி என்ற
பட்டத்தை சுமந்து...
ஆங்கிலேயர்களை
திணறடித்த வீரமகளே...
முதல் தற்கொலை போராளியானவளே
என்று பெயர் சூட்டப்பட்ட குயலியே...

உன்னுடைய உயிர் தியாகம்...
தமிழ் நாட்டிற்கு
ஓர் ஆழ்ந்த சோகம்...
தேசத்துரோகிகளாய்...
தேசத்தை குறி வைத்து
தாக்கும் மத்தியில்...
தமிழரின் வீரத்தை
உலகிற்கு பறைசாட்டிய
குயலியைப் போல்...

உருவாக்குங்கள்
இன்னொரு குயலியை
தற்கொலை போராளியாக
இல்லாமல்...
வெற்றி கோடி பிடித்து
வீர நடைப் போட்டு
சாதனைப் படைக்கும்
தமிழச்சியாக...

J❤️S❤️B
« Last Edit: October 12, 2020, 10:02:07 PM by JsB »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
இந்த காலத்தில்
சிங்கப்பெண்ணே என்று
வெறும் பாடல்களை மட்டுமே கேட்டு
பூரிப்படைகிறோம்,
ஆனால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை
எதிர்த்த உண்மையான சிங்கப்பெண்
வீரமங்கை வேலூநாச்சியாரின்
ஒற்றர்
உலகின் முதல் தற்கொலைப் போராளி
குயிலி!!
ஆணாதிக்கத்தின் கீழும்
அடிமைத்தனத்தின் கீழும்
வாழ்ந்து வந்த பல பெண்களிடையே
வரலாற்றில் பெயர் பதித்த
போராளிப் பெண் இவள்.

வருடா வருடம் சுதந்திர தினத்திற்கு
கொடியேற்றலும் மிட்டாய் பகிர்தலுமாய்
கடக்கும் தினங்களில்
ஒரு சிலர் தியாகிகளின் பெயரே
நினைவு கூறப்பட்டும் மதிக்கப்பட்டும்
வருகிறது.
தெரிந்துகொள்ள முடியாமல்
மறைக்கப்பட்டும்,  மறக்கடிக்கப்பட்டும்
இருக்கும் போராளிகள்
எத்தனை எத்தனை பேரோ?

அப்படி மறைக்கப்பட்ட மற்றுமொரு
திறமிகு பெண் போராளி தான்
இந்த குயிலி!
பெண் என்றாலே மென்மையானவள்,
அமைதியானவள்,
ஆண்களுக்கு அடங்கி நடப்பவள்,
என்ற வரையறைகளுக்குள் நின்று விடாமல்,
ஆங்கிலேயரை எதிர்த்து போராடி
நின்ற
தீர மங்கையிவள்!

ஒவ்வொரு முறையும் நாச்சியாரை
கொல்ல முயன்ற
ஆங்கிலேயர்களிடமிருந்து
காப்பாற்றிய துணச்சல் மிகுந்த
சாகசக்காரி இவள்!
நாச்சியாரின் உயிருக்கு உயிராகவும்
அவளுக்கு பக்கபலமாகவும்
அன்று குயிலி இருந்திருக்காவிட்டால்,
சிவகங்கையை வெள்ளையனிடம் இருந்து மீட்ட
வேலு நாச்சியார் நமக்கின்று கிடைத்திருக்க மாட்டார்!

உடல் முழுதும் எண்ணயை பூசி
தன்னைத்தானே   தீ மூட்டிக்கொண்டு
வெற்றிவேல் வீரவேல் என முழங்கியபடி
ஆங்கிலேயனின் ஆயுதக் கிடங்கில்
எகிறி குதித்து
அவனின் ஆயுதக் கிடங்கை
துவம்சமாக்கிய
உலகின் முதல் தற்கொலைப் போராளி இவள்!!

இன்று யார் நினைவில் இவள் இருப்பாள்?
அஞ்சாத பெண் சிங்கம்
வீர வேலு நாச்சியாரையே மறந்த உலகம் இது!
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த
இந்த மறத் தமிழ்ச்சிகளைப் பற்றி
அடுத்த தலைமுறையினருக்கு
நினைவுப்படுத்த வேண்டிய
கட்டாயம் நமக்கிருக்கிறது!

சமுதாயத்தின் ஏச்சுப் பேச்சுகளிடையே
பெண் பிள்ளைகளைப் பாடுபட்டு வளர்த்து,
கயவர்களுக்கு
காவு கொடுக்கும் இந்த காலத்தில்
இந்த வீரப் பெண்மணிகளின்
கதையையே துணிவாக ஊட்டுவோம்!
கலையும், கல்வியும் மட்டும் கண்ணென கொள்ளாமல்,
ஒவ்வொரு பெண்ணுமே தன்னை
வதைக்கும்
அநீதியை எதிர்க்கும் நாளில்,
அவளும் மற்றுமொரு குயிலி தான்!
« Last Edit: October 14, 2020, 01:04:21 PM by Ninja »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பெண்ணே யார் நீ.... கண்களில் கோபக்கனல் வீச...
கால்களில் உரமேறி... கைகளில் வேல்கம்பு ஏந்தி
வெறிகொண்டு யாரை பார்க்கிறாய்...  அநியாய சூட்சியில்
உன் அன்னையை சிக்க வைத்த கயவர்களையா?

உன் தாய்க்கு வரும் ஆபத்தை... அது அவளை
தீண்டுமுன்னே அதை வேரறுக்கும் காளியடி நீ...   
ஆசானே ஆனாலும் அந்நியனுக்கு கைகூலியானதால்
அவர் சிரம் கொய்த ஆக்ரோஷ ருத்திரா நீயடி ..

தந்திரத்தை வில்லாக்கி.. அதில் வேகமெனும் நான்னேற்றி... 
விவேகத்தை அம்புகளாக்கி... உன் வீரத்தின் விசையால்
மின்னலென வஞ்சகர் ஆயுதபாசறை அழித்தவள் நீயடி..
ராஜ விசுவாச உடையாளையும் மிஞ்சியவள் நீயடி..
 
அன்னையே!!! 
உன் கதை கேட்டு கேட்டே வளர்ந்தவள் நானடி..
உன் பேச்சால் பகைவர்களையும் திணறடித்தாய்...
உன் மொழியால் வல்லவர்களையும் வசமாக்கினாய்..
நாம் பேசும் மொழி கூட நம்மை காக்கும்
ஆயுதமென உணர்த்தியவள்  நீயடி..

துப்பாக்கியை தன் உலக்கையடியால் அதிர செய்த
தென்னக வீர மங்கை ராணி சென்னம்மாவும்
கொடியவர்களை வீரத்தால் மிரட்டிய மணிகர்ணிகாவும்
தாயே!  உன் மறுவுருவென என் கண்முன்னே தோன்றுதடி.. 

பகைவரின் பலம் கண்டு, அவரின் பலகீனமும் அறிந்து
அன்னாரை வெற்றிகொள்ளும் வியூகம் தீட்டி 
ஆண்டுகள் 8 ஆனாலும் வஞ்சகர்களை வீழ்த்திய
அன்னையே! உன் விவேகத்தில் நானும் வீழ்ந்தேனடி...

அன்று தாயிடம் கதை கேட்டு வீரனான சிவாஜி போல
தாயே! இன்றோ உன் சரித்திரம் கேட்டறிந்தோர் 
கேள்வி குறியாக வளைந்த தன் வாழ்வை 
ஆச்சரிய குறியாக நிமிர செய்த மகளிர் பலருண்டு 
 
நானும் என் வாழ்வின் கடின தருணங்களில் 
விழிவழியே வழிந்தோடும் நீரினை நிறுத்தி
தோல்களில் வழிந்தோடும் வியர்வை துளிகளாக உருமாற்றி
உன் காலடியில் சமமர்ப்பிப்பேன் என் மானசீக தாயே...



Offline thamilan

பெண்மையே உனக்கு நான்
தலைவணங்குகிறேன்
இறைவன் படைப்பில் நீ ஒரு அதிசயம்
மென்மையும் வன்மையும் ஒன்றானவள்
தென்றலும் புயலும் ஒன்றரக்கலந்தவள்
அன்பும் ஆளுமையும் உரித்தானவள்

பெண்மைக்கென்று சரித்திரத்தில்
தனி இடம் உண்டு
தன் கணவனுக்காக
ஒரு மாநகரத்தையே  எரித்தாள்
கண்ணகி 
வெள்ளையனை எதிர்த்து வாளெடுத்தாள்
வேலுநாச்சியார்
பகைவரை அழித்திட
மனித வெடிகுண்டாக மாறினாள்
குயிலி
ஈழத்தமிழர் மானத்தை காக்க
தன்னுயிர் நீத்த வீரமங்கைகளும்
ஈழத்தில் உண்டு
முறம் கொண்டு
புலியை விரட்டிய வீர மங்கையும்
புராணத்தில் உண்டு

வீரம் கல்வி செல்வம்
இவைகளுக்கெல்லாம் அதிபதியே பெண்கள் தானே
கல்விக்கு சரஸ்வதி தேவி
செல்வத்துக்கு லட்சுமி தேவி
வீரத்துக்கு பார்வதி தேவி

பெண்மை மென்மையானது தான்
தேவைப்படின் அது வன்மையாகவும் மாறும்
பெண்மை தென்றல் போன்றது தான்
அது புயலாகவும் மாறும்
பெண்மையை போற்றுவோம்
பெண்குலத்தை பாதுகாப்போம்

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


மங்கையராய் பிறந்திட மாதவம் புரிந்திட்டோம்!
மங்காத புகழுக்கே மண்ணில் பிறந்திட்டோம் !
சங்கத்தில் புலியாய் சீறிய  அவளின்  புகழும்
தங்கும் வீரம் விளைந்த மண்ணிலே !

நெஞ்சிலே பொங்கி  எழுந்த கனலிலே
பஞ்சென்ன பற்றி எரிந்தனர் எதிரிகளே !
துஞ்சிடும் குழவியையும் தன் தோலில்கட்டி
மிஞ்சிய தியாகம் செய்தனள் லட்சுமிபாய் ராணியுமே!
 
மடல் கொண்ட பெண்ணினமாய் தோன்றினாலும் 
கடல்அன்ன  சேனையால் தடுமாறும் மருதுவுக்காக
உடல் முழுதும் நெய்யில் குளித்தபடி தீ உரசி
சுடர் தந்த ஒளியாய் தன்னை  பலியிட்டாள் குயிலி !

கண் இமை போன்ற கற்பை காக்க பாரத
மண்ணின் பெருமை சேர்க்க எதிரிக்கு
உண்மை வீரத்தோடு  கூட்டு தீக்குளித்து
பெண்ணினத்தின்  மானம் காத்தாள் சித்தூர் ராணி பத்மினி  !

தடம் மாறிய கோவலனை தாங்கி பிடித்து
இடம் மாறி போனால் வளமாய் வாழலாம் என்று
மடமங்கை மதுரை ஏகி சிலம்பினால் கணவனை   
கடமை தவறிய அரச மண்ணையே எரித்தனள் கண்ணகி!

பார் போற்றும் பாரத பெண்கள்! வீர
போர் புரிந்து வெற்றி   கொண்ட மற பெண்கள் !
ஊர் போற்ற வாழவும் தெரியும் ! கனல் வீசி
ஓர் ஊரை ஊழிக்காற்றாய்   எரிக்கவும்  தெரியும் !

பெண்மை என்றும் எங்கும் எப்போதும் வெல்லும் ! வெல்க !

« Last Edit: October 13, 2020, 07:35:01 PM by AgNi »

Offline MoGiNi

அஞ்சனம் பூசும்
அணங்கிவள்
அழகில்
அகல் விளக்கொளி
அலைந்தாடும்...

மஞ்சனம் தூங்கும் 
இவள்
இடை கொண்ட அளவில்
இவள்
மாதனம் தாங்க
ஏங்கும்

குழல் என்று
நீவின்
இவள் கூந்தல்
கொள்ளும் நறுமணம்
உனையீர்க்கும்

குந்தவையோ
குலம் காக்க
வந்தனையோ எனில்
அனல் மின்னும்
கண் வழியில்
வேல் கம்பெறியும்
ராணி மங்கம்மாவோ ..

காற்றிடையே
அசையும்
உன் குழல் இடுக்கில்
மாண்டு விட துடிக்கும்
மன்னவர் பலர்  உண்டு
எனினும்
மாதவி உன் பலத்தில்
மாண்டு விட துடித்தவர்தான்   
கோடியுண்டு...

வாள் விசையும்
விழி விசையும்
வானவில்லை கிழித்து நிற்க
காலனவன்
உன்னை கண்டு
கடுகளவு தயங்கி நிற்பான்  ..

நீ
போர்   முனையில்
புறப்படட புறா அல்ல
வாள் நுனியில்
வந்துதித்த
வல்லூறு அன்றோ ...

கால் நுனியில்
கயவர்தம்
கல் உயிர்கள் மடிந்துருக
வான் அளவி
வளர்ந்து கிடக்கும்
உன் புகழ் ..

சீழ் படிந்த இதயமதை
சீராக்க முடியவில்லை
வாள் பிடித்த உன் கரத்தில்
வந்து உயிர் போக்கி விடு ..

கானகத்தில் ஓர்
கடுகளவு தண்ணியென
உன்மேல் 
காதல் வயப்பட்டு
கொடும் களத்தில்
புலம்புகிறேன்

வேல் தன்னை
வீசி விடு
உன் விசனத்தில்
வீணாக போய்விடு முன்

உன்மத்தம் கொண்ட என்னை
உன் சொந்தம் ஆக்கிவிடு
உன் விழி முனையில்
வீழ்ந்து முடிக்கிறேன்
என் வித்தார கண்ணகியே ...

Offline SweeTie

வீறு கொண்ட வேங்கை  மகள் 
சீறுகின்ற    நாகம்  அவள் 
பார்புகளும்   ஈடற்ற   மகள்   
இணையில்லா   வீர   தமிழச்சி 
ராணி   வேலுநாச்சியார்

 வெள்ளையனே   வெளியேறு என
வீரவேல்   கொண்டு விரட்டியே அடித்து   
வெற்றியும் கொண்ட  தாயே
ஜாதி மத பேதமின்றி  அகிலத்தை அணைத்து
ஜோதி மயமானவளும் நீயே 
 
கொண்டவன்   மாண்டதும் 
கால்  சிலன்பினை  ஏந்தியே   
கொற்றவை நடுங்கவைத்தாள்
பத்தினி  தெய்வமகள்  கண்ணகி 
பார் புகழும்  வித்தகி 

ஈழத்து  போரிலே  உருவான
தற்கொலை படைகளுக்கு 
முன்னோடி தந்த குயிலி   
உயிர்  தமிழுக்கு  உடல்  ஈழ  மண்ணுக்கு
 அர்ப்பணம்  செய்தீரே   வீர மங்கையரே 
சமர்ப்பணம் உங்களுக்கு !!

காலத்தால்  அழியாத  நாயகிகள் 
நம் தமிழ்  வீர தமிழச்சிகள்
இன்று காலமே அழிக்கும்  நிலை வந்ததோ
வீரமே  அழிந்து போனதேன்  என
கண்ணீர் விடுகிறது   பெண்ணினம் 

சாதலே   வரினும் அஞ்சோம்  என
சாகசம்  புரியவேண்டும்   பெண்கள்
வீர  மங்கைகள் கண்டு  கயவர்கள் அஞ்சவேண்டும்
பேதைகள்  இவர்கள் இல்லை என்று  அகிலம் 
அச்சம்  கொள்ள   வேண்டும்

விடியலை  வேண்டும்  பெண்ணினம் நாங்கள்.
   .. 

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
மனக்கிடங்கில்
உழலும்
மானுடத்தின்
பிறவி ஊழ்
மாதாய்
பிறந்த இவள்
மாதலையிலேறிற்றோ...

கெண்டைகால்தனில்
கிண்கிணியாய்
கலகலக்கும்
தண்டைகளின்
கலகலப்பில்
கலைந்திடாத
அவள் யாகம்...

வேலோடு
விழிரெண்டில்
வீசிநிற்கும்
நெடுங் கோபம்
யார் தீண்டின்
அமைதி பெறும்...

பாசறையின்
பறைகளெல்லாம்
பாவைதன்னை
படித்திருக்கும்..
மாவத்தோளென
அவை
மார்தட்டி
களமதிரும்...

இவள்
காத்திருப்பு
காலனுக்கோவன்றி
கயவர்தம்மார்களுக்கோ..

வெஞ்சினமும்
விஞ்சிடாத
பொன்வதனமதில்
கொஞ்சம்
பெண்மையும் கலந்திட்ட
பேரொளியே..
என்  தாய் பெற்ற
தாய் நீயே...

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
போர்க்களத்திலே
எதிரிகள் சூழ்ந்திருக்க
நெஞ்சிலே வீரம் கொண்டு
கையில் வாளும், வில்லும் அம்பும் ,
ஈட்டியும் ஏந்தி
பகைவர்களின் தலைகளை
பகடைகளாய் வீழ்த்தி
நிமிர்ந்து நின்ற
என் குல பெண்கள்

சினமுற்றாள் 
விரட்டினாள்
புலியை கூட
முறத்தால்
என் வீர தமிழ்பெண்
அன்று

இன்று
கையில் வாளும் இல்லை
ஈட்டியும் இல்லை
எதிரிகள் மட்டும்
கண்முன்னே
பற்பல
முகங்களில்
உன்னை சூழ்ந்து
நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்

கள்ளிப்பால் முதல்
கணினி வரை
உன்னை வீழ்த்த
திட்டங்கள் தான்
எத்தனை எத்தனை ..

சிலருக்கு
வாழ்க்கையில்
போராட்டம்
உனக்கோ
வாழ்க்கையே
போராட்டமாய்

பாரத மாதா
பூமி தாய்
தமிழ் தாய்
காவேரி,கங்கை என
பெண்ணை போற்றி வணங்கி
புத்தகத்தில் புதைத்துவிட்டோம் 

நீதி தேவதையின்
கண்ணை கட்டிவிட்டோம்
கயவர்கள் தப்பித்து
எழுத கூட கூசும்
ஈன செயலை செய்தவனுக்கு
தையல் இயந்திரம் வாங்கவா?

பெண்ணே
நிமிர்ந்து நின்று
எதிரிகளை வீழ்த்த
சினம் கொண்டு
எழுந்து வா

பெண்ணே
உனக்காய்
ஒரு விதி செய்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "