FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 04, 2019, 11:38:46 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: Forum on May 04, 2019, 11:38:46 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 217
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team  சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/217.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: JeGaTisH on May 05, 2019, 02:08:05 AM
கன்று குட்டி கூட சொல்லும்
தன்னை கருவறையில்
சுமந்தவள் அம்மா என்று !

பத்து மாதங்கள் தன்னை வருத்தி
என்னை இந்த உலகுக்கு
கொண்டு வந்த அன்னையே !

இனியும் பிறப்பாரோ
உன்னை போல ஒருவர்
உனக்கு நிகர் யாருமில்லை
இந்த அண்டத்திலே !

என்னை விட உனக்கு யார் பெரிது
தாய்யென கொண்டேனே
தைரியமான பெண்ணை!
இரவில் கூட நடப்பேன்
உன் விறல் பிடித்து
பயம் கூட அஞ்சுடுமோ
அருகில் நீ  இருக்கையிலே !
 
கடைசிவரை என்னை
காத்திடும் காவல் தெய்வமே !
உன்னை மரண படுக்கையிலும்
மறக்காது என் மனது .


அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: thamilan on May 05, 2019, 06:56:28 AM
மகனே
தாய்மை எனக்கு தந்தவன் நீயே
மலடி என்ற பழிச்சொல்லியில் இருந்து
என்னை காப்பாற்றியவன் நீயே

என் உதிரம் நீ
என் உருவம் நீ
என் உணர்வுகளும் நீ
பத்துமாதம் என் வயிற்றில் இருந்தாய்
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அனுபவம்
நீ என்னை உதைக்கும் போதெல்லாம்
வலிக்கவில்லை எனக்கு
உன்பிஞ்சிக்கால்கள் வலித்திடுமோ
என்றுதானடா நான் பயந்தேன்

விடியல் ஒளியில் தொலைந்த
நிலவைப்  போலே
உன் செல்லப்பார்வையில்
தொலைந்தேன்  நானடா
இருவரி கவிதைகள்
உன் இதழ்களின் முத்தம்
அமிர்தமே அதற்கு ஈடாகுமா

முதல் நாள் உன் அழுகுரல் கேட்டு
ஆனந்தக்கண்ணீர் வடித்தேனடா
இப்போதெல்லாம் உன் அழுகுரல் கேட்டால்
துயரக்கண்ணீர் வழிகிறதடா
பெண்ணாக பிறந்ததை வரமாக நினைத்தேனடா
உன்னால் நான் தாயான போது

தெரிந்த பாஷைகளே புரிவதில்லை சிலநேரம்
தெரியாத உன் பாஷை மட்டும்
புரிந்தது எனக்கு
நீ அம்மா என்றென்னை  கூப்பிடும்போதெல்லாம்
என்நெஞ்சில் பால் சுரக்கும்
மகனே என்றுன்னைக்  கூப்பிடும்போதெல்லாம்
என்நெஞ்சினில் தேன் சுரக்கும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: இளஞ்செழியன் on May 05, 2019, 07:44:04 PM
பொடுபோக்காய் நேசித்தாலும்
யார்மீதான கோபங்களுக்காகவோ வேண்டி பொரிந்து விழுந்தாலும்
எதிர்பார்ப்புக்களை
உதாசீனம் செய்தாலும்

இடைவிடாது குறைகள் சொன்னாலும் ஒன்றும் தெரியாது உங்களுக்கென்று
மட்டம் தட்டினாலும்
செய்தவைகள் குறித்து குறைக்கூறினாலும்

நம் வெற்றிகளின்போது முன்னிற்க முயலாமல் பெருமிதம் கொண்டும்
நம் இழப்புகளின் போது
நமக்காக தவித்தழுதும்
இல்லாமைகளில் நமக்காய்
ஆதரவுக்கரம் நீட்டியும்
தர்க்கம் பேசி நமக்கான அன்பில்
குறைகள் செய்யாமலும்
மாற்றங்கள் ஏதும் முயலாமலே
நமக்காகவே அன்பு செய்யும்
தேவதை அம்மா...

அன்பென்பது கொடுத்து எடுத்தலாம்.. அம்மாவின் அன்பென்பது எடுத்தல்
மட்டுமே ஆன அமுதசுரபி.

தாயின் காலடியில் சொர்க்கம்
ஆம் சொர்க்கத்தின் மீதிருந்தே நேசம்செய்பவர்கள் அம்மாக்கள்..

தாய் எனும் பெயரினை என் வாழ்வில் உவமையாக மட்டுமே உணர முடிந்திருக்கிறது இதுவரை...

இந்த இடத்தில் நமக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ..!!
இது போன்ற நேரத்தில் நமக்கு சாதகமாக வாழ்ந்திருப்பார்களோ..!! என்று...

நேரில் நானிதுவரை உணர்ந்ததும் இல்லை, இறைவன் அவருக்கோர் உறவுப்பலனை உணர்ந்திடும் வரத்தை அளித்திடவும் இல்லை...

இறக்கும் தருவாயிலும் எனக்கும், அன்னைக்கும் இடையிலும் எத்தனையோ இடைவெளிகள்...

ஏனோ, அந்த இடைவெளியை நிரப்ப என்னாலும் முடியவில்லை, அவரும் அதற்கு முயற்சிக்கவில்லை போலும்...

இதுவரை நிலாச்சோறு அறிந்திடாமலே, அன்னை மடி உறக்கம் பெற்றிடாமலே,
உச்சி முகர்ந்திடும் அவள் மூச்சுக்காற்று மணம் முகர்ந்திடாமலே...

தவறு திருத்தித் தண்டிக்கையில் தப்பிச் செல்லக் குறும்பு செய்யாமலே,
ஆறுதல் இன்றி அலைக்கழிக்கையில் தலைத்தழுவும் கரம் பற்றிடாமலே...

துயிலுறக்கும் அவர்க்குரல் தாலாட்டோசைக் கேட்டிடாமலே,
எனக்காய் அவர் சிந்திடும் ஒரு துளி கண்ணீரைத் கூட சேமித்திராமலே...

கல் நெஞ்சக்காரனாய், கலங்காமலிருந்துக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறேன்...

பெருங்கூட்டமே என் துணையாய் நட்பு, உறவு என்று பல்வேறு அங்கங்களாய் இருக்கின்றனர்.

எனினும், தாய்ப் பாசம் என்பதனைத் துளியளவும் அறியாத நிலையிலும்,

இச்சுவைக்குக் காரணம் என் தாயின் கைப்பக்குவம் என்று நண்பனொருவன் உணவைக் காட்டிக் கூறுகையிலும்,

எம்மகன் இவனென்று ஏதேனும் ஓர் தாய் குறிப்பிட்டு காட்டுகையிலும் தான், ஏனோ என் கண்களில் வெள்ளப்பெருக்கு..!!

என்னையறியாது சிலதுளிக் கண்ணீரைச் சிந்தித் தரை நனைப்பதில், அன்னையவள் நினைவலைகளுக்கு அத்தனை ஆனந்தம் போலும்...

#இருந்திருக்கலாம்_அம்மா_என்னுடனே.!!😔
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: MysteRy on May 05, 2019, 09:47:37 PM
அம்மா என்றால் அன்பு
அன்பென்றால் என்னவென்று
உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன் அம்மா
நீ அன்பானவள் அரவணைப்பானவள்
என் சக்தியும் நீயே 
எனது ஆசானும் நீயே
என் நண்பியும் நீயே

தன் சிறகுக்குள் தன் குஞ்சுகளை
பொத்திவளர்க்கும் கோழிகள் போலே
உன் கைகளுக்குள் என்னை பொத்தி வளர்ந்தவள் நீ


எனக்கு  ஒரு அடையாளம் தந்தவள் நீ
எனது கவலைகளை உன் புன்சிரிப்பால்
மறக்கடிப்பவள் நீ
வாழ்வில் அதிகம் நான் தொலைத்தது
அம்மா உன்னைத்தான்
அந்த கடவுளிடம் கேட்டுப்பார்
அவர் சொல்லுவார் எனது அன்பின் ஆழத்தை

அம்மா
நீ இல்லாமல் வாழ்க்கையை தொலைத்தவள் நான்
படகோட்டி இல்லா படகு நான்
நூலறுந்த பட்டம் நான்
வழி தெரியாத பயணி நான்

அம்மா
உன்னை நினைக்காத நாளில்லை
உன்னை நினைத்து அழாமல் நானில்லை
நீ மறுபடியும் வருவாய் என
எனது மனம் சொல்கிறது
என் மகளாக சரி வா அம்மா

ஏன் என்னை விட்டு பிரிந்தாய்
ஏன் என்னை விட்டு போனாய்
ஏன் சொர்கமே நீதானே அம்மா
என் சின்ன இதயத்தை உடைத்துவிட்டு
நீ ஏன் சொர்கத்தை தேடித் போனாய் அம்மா
 
உன் ஸ்பரிசத்தை தொலைத்தாலும்
உன் முகத்தை பார்க்காமல் போனாலும்
என் மனம் என்றும் உன்னை காதலிக்கும் அம்மா
உன்னை அதிகம் நேசிக்கிறேன் அம்மா    :'( :'(
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: சாக்ரடீஸ் on May 10, 2019, 09:01:17 PM
அம்மா
என்னை மடிதாங்கிய முதல் காதல் தோழி
புரியாத என் மழலை மொழியில்
மதிமயங்கி ரசித்த ரசிகை
தட்டி தடுமாறி நடக்கும் என்னை
ஒரு ஒலிம்பிக் வீரனாய் மகிழ்ந்த அன்பு உள்ளம்
நான் ஓடி விளையாடும் போது
என்னுடன் ஓடி வருவதில் அவளும் ஒரு குழந்தை

முதல் நாள் பள்ளிக்கு செல்கையில்
போருக்கு செல்லும் ராணுவ வீரனாய்
எண்ணி கொண்டு கர்வம் கொள்வாள்
தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களை கண்டு
பூரித்து போகும் பாசக்காரி

உன்னை எவ்வளவு நோகடித்தலும் பூமியாய் மாறும்
உன் தாய்மை சொற்களில் சொல்லமுடியாத புகழ்
எத்தனை மொழி தோன்றினாலும்
உன் பேரன்பை பற்றி எழுத மொழிகள்
வார்த்தைகள் இல்லாமல் தடுமாறும்

பிரசவம் நிச்சயமாக
மரணத்தின் ஒத்திகை
சதை கிழிந்து குழந்தை வெளியில் வரும் போது
அவள் அனுபவிக்கும் வேதனை
கிறுக்கல்களில் கூட சொல்ல முடியாது

கோவில்களில் வெறும் சிலையாய் இருக்கும் கல்லை
தெய்வமாய் நினைப்பதை விட
நம் கண் முன்னே இருக்கும் அம்மாவை
மதித்தலே போதும் நூறு கோயிலுக்கு சமம்

அம்மா என்றுமே ஒரு அதிசயம் தான்
நான் நேசிக்கும் என் அம்மாவுக்கும்
உலகில் வாழும் எல்லாம் அம்மாக்களுக்கும்
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: Guest 2k on May 10, 2019, 09:26:54 PM

சிறகுகளற்ற தேவதை

கருவறைக்குள் வேர்விட்ட சிறுவிதையென
நான் இருப்பின்
இவ்விதைக்கு உயிர் கொடுத்த
உதிரம் உனதல்லவா
முதல் ஜனனம் நான் எடுக்க
மறு ஜனனம் நீ எடுக்க
புது அரும்பென எனை பூக்க வைத்து
புன்னகைக்கிறாய்
காலகாலமாய் தொடர்ந்து வரும்
இத்தொப்புள்கொடி உறவின்
ஆதித்தாய் யாரனெ யோசிக்கும்
தருணம்
பெருவனமான இவ்வுலகில்
ஒவ்வொரு பெண்ணுமே
ஆதித்தாயின் சாயலை கொண்டிருக்கின்றனர்


புழுவினை ஒத்த என் நெளிவையும் ரசித்தவள் நீ
தத்தி நடந்திடும் கால்களின் சலங்கை ஒலியினை
உன் சிரிப்புடன் சிறிது ஒப்பிட்டுக்கொள்கிறேன்
எப்பொழுது அது போல சிரிப்பதை நீ நிறுத்தினாய்?
நான் உன் தோளிற்கு வளர்ந்த தினத்திலா?


உன்னிலிருந்து உதிர்ந்த
என்னில்
உன்னை நீ காண்பது ஆச்சரியமேதுமில்லை
ஆசைக்கென
உன் புடவையை ஒரு முறை
சுற்றிக்கொண்டு
உன் முன் நின்றபொழுதில்
உன் கண்ணில் தெரிந்த
பெருமிதமும் பெருங்கலக்கமும்
நான் அறிவேன்
அன்று
ஒரு சில வினாடிகள்
உன் புடவையால்
வளர்ந்துவிட்ட என்னை
திருஷ்டி முறித்து
நெற்றியில் முத்தித்தபொழுது
உன் கன்னங்களில் உருண்டோடிய
கண்ணீர்
என்னில் உன்னை கண்டதாலா?


கண்டிப்பில் கலந்திருக்கும்
அன்பு அறிந்தே
இருவரும் முகம் திருப்பிக் கொண்ட
நாட்கள் தான் எத்தனை?
நீ பேசவென்று நானும்
நான் பேசவென்றும் நீயும்
காத்திருந்து
'வந்து சாப்பிடு' எனும் ஒற்றை வார்த்தையில் தான் ஓராயிரம் வாஞ்சை இருக்கும்
தோற்றது நானா இல்லை நீ என்றொரு
நியதி இங்கில்லை
உன்னிடம் நானும் என்னிடம் நீயும்
தோற்று
அன்பிலானதொரு அத்தியாயத்தை
எழுதி செல்கின்றோம்


உன் தோளிற்கு வளர்ந்து நின்றதொரு நாளில்
நத்தை கூடென உனை நீ சுருக்கிக்கொண்டாய்
இடையிற் கீழிருங்கும் உன் கூந்தல்
ஏனோதானோவென
ஒரு கொண்டையாக முடிந்துகொள்ளப்பட்டது
வண்ண வண்ண பொட்டுகளின் குப்பிகளை உன் அறையில்
அதன் பின் நான் கண்டதில்லை
உனக்கு விருப்பமான
உன்
அடர் நிற புடவைகளை
பெட்டிகளின் பூஞ்சை வாசனைகளிடையே உறங்குகின்றன
தத்தி நடந்தபொழுது எனை தங்கமே
என அள்ளிக் கொண்ட
உன் தங்க வளைகள் எந்த பெட்டகத்தில்
ஓசையின்றி அடங்கி கிடக்கின்றது?
தோளிற்கு வளர்ந்து பெண்
என்று
உரைக்கும் உன் நத்தை கூடுகளை
நான் உடைத்தெறிய வேண்டும்
உன் வண்ண சாந்து குப்பிகளும்,
கைவளைகளும்,
அடர் நிற உடைகளையும்
உனக்கே உரியதென திருப்பித்தரும்
நாள் இனி வாய்க்குமா?


அவ்வாவின் வீட்டில்
ஒரு பௌர்ணமி இரவில்
கதையளந்திருக்கையில்
சொற்கணைகளால் பலர் உன்னை வாட்டும் நாட்களில்
மௌனமே பதிலென
தலையணை நனைக்கும்
உன் கண்ணீர் கதைகளை
மட்டுமே அறிந்திருந்த எனக்கு
நீ பேச்சுபோட்டியில் சிறந்தவள்
என்றறிந்தபொழுது
பிரவாக ஊற்றாய் பெருகியோடிய
உன் வார்த்தைகள்
இப்பொழுது நிராதரவாய்
என்ன செய்து கொண்டிருக்கும்
என ஆச்சரியம் கொள்கிறேன்


பின் பெட்டிகளின் அடியே
புதைந்து கிடக்கும்
உன் சான்றிதழ்களின் வழி
ஒரு நிமிடம்
உன் கண்களில் ஒளிர்ந்த ஒளியை
பார்த்து குறுகி போகிறேன்
எத்தனை முறையோ மீதம் வைக்காமல்
காலி செய்திருக்கும்
நாவற்பழங்கள்
உனக்கு விருப்பமானவை
என்றறியும் கணம்
'அதெல்லாம் அப்போ'
என குறுஞ் சிரிப்புடன் சாதாரணமாய்
நீ கடந்து செல்கிறாய்
மீதமிருக்கும் வெற்று பாத்திரம்
பெரும் பாரமென கனக்கிறது


எதையெல்லாம் விடுத்து
எதையெல்லாம் துறந்து
எதையெல்லாம் மறந்து
நீ தாயென்றொரு
அரியாசனத்தில் வீற்றிருக்கிறாய்,
அது அரியாசனம் என்றொரு
உண்மை அறியாமலே.
நாளை நான் ஏறப்போகும்
அந்த அரியாசனம்
வெறும் ஞானம் தரும் போதி மரம்
என உரைத்து
உச்சி முகற்கிறாய்
கருவறை வாசனையின் நினைவுகளோடு
உன் மடியில் மீண்டும் சுருண்டு கொள்கிறேன்
தலைகோதும் விரல்கள்
காதுகளில் மென்மையாக
கூறிச் செல்கிறது
நீ ஒரு சிறகுகளற்ற தேவதையென
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: JasHaa on May 12, 2019, 03:05:14 PM
மகளே  !
ஈரைன்ந்து திங்கள் சுமக்கவில்லையடி 
கருவறையிலும் தாங்கவில்லையடி
ரத்தத்தை அமிழ்தக  புகட்டவில்லையடி 
இருந்தும்  பிள்ளையாய் மடிசுமந்தேனடி

போற்றுவோர் போற்றட்டும்  பெண்ணே 
தூற்றுவோர்  தூற்றட்டும்  கண்ணே
மகளே  !
என்  வாழ்வின் வரமாய்  வந்தவளே !
வசந்தங்களை பூத்திட  செய்தவளே !
உறவுகளுக்கு ஏதடி  வரையறை 
வரம்புகள் மீறாத  வரையறை  நாமடி 
உன்னை  ஸ்பரிசித்த நொடியினில்
உயிர்த்தெழுந்தேனே 

வாழ்வின்  எல்லையை தொட்டுவிட 
துணிந்த  நான் 
கலங்கரைவிளக்கமாய் நீ !
தொடுவானமாய் என் காலங்கள்
நிகழ்காலமாய் நீ !

கரம்பற்றி  கொண்டேன்  உன்னை
எனை  மீட்டு வந்த  தாரகை  நீ
தாய்யை மடிதாங்கிய  தரங்கிணி  நீ
ரணங்களை  ரசிக்க கற்றுத்தந்த  ரட்சணி  நீ

 பெண்ணுக்குள்  இருப்பது  தாய்மை 
தாயை தாங்கும் மாதவம்  அவளது  வரம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: RishiKa on May 18, 2019, 12:43:23 AM

அம்மா அவள் ஒரு அற்புதம் !
கண்கள் பார்த்த முதல் ஓவியம் நீ !
கைகள் வருடிய முதல் காவியம் நீ !
உதடுகள் உச்சரித்த முதல் வார்த்தை நீ !

உள்ளம் உணர்ந்த முதல் பாசம் !
உலகே அறியும் தாயின் நேசம் !
அன்னையே ஒரு கருணைக்கடல் !
அவள் இல்லையேல் எது இவ்வுடல் !

அருகில் இருக்கும் வரை ..
அருமை தெறியாத புதையல் !
ஆலம் விழுதாய் ஆயிரம் உறவுகள் !
ஆனாலும் ஆணிவேர் நீயே அம்மா !

 பூலோகமெங்கும் கடவுளை தேடாதீர்கள் !
தன் பிரதிநிதியாய் தாயை அனுப்பிவிட்டு ..
 ஓயிவெடுத்து கொண்டிக்கிறான் இறைவன் !
உறங்கட்டும் விட்டுவிடுங்கள் அவனை !

அடிவயிற்றில் அறை தந்து ...
அவதரிக்க அவகாசமும் அன்பும் தந்து ...
ஊனும் உயிரும் சுவாசமும் தந்து ...
அவனியில் அம்மா என்றழைக்க ..
அருள் தந்தவலை வணங்குவோம்  வாருங்கள் !


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 217
Post by: Poocha on May 18, 2019, 02:39:52 PM
கருவறை எனும் இருளிலிருந்து
கல்லறை எனும் இருளுக்கு
இடைப்பட்ட வாழ்க்கைக்கு
என்னை அழைத்து வந்தவள்
"அம்மா "

பசி என்று உணர்ந்து கேட்கும்முன்
ரத்தத்தை பாலாக்கி
ஊட்டியவள்
"அம்மா"

பிறந்த தினம் முதல்
நான் நிம்மதியாக உறங்க
தன் தின தூக்கத்தை
தொலைத்தவள்
"அம்மா "

பெண்
என்றால்
உன் நினைவுக்கு
முதலில் வருவது
அவள் என்றால்
வளர்ப்பில் பெருமை
கொள்வாள்
"அம்மா "