Author Topic: உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்  (Read 2390 times)

Offline Anu


அம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்படித் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.

சத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)

சத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.

சத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.

கையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். "குழந்தாய் உன் பெயர் என்ன? உன் தந்தை யார்? உன் பூர்வீகம் என்ன?"

இந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.

"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது"

மற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. "இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்"

சத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

இப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?