Author Topic: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~  (Read 85771 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
'சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!

'இமாலய சாதனை' என்ற சொற்றொடரை கேள்பிப்பட்டிருப்பீர்கள். இமயத்தைத் தொடுவதற்கு நிகரான ஒரு சாதனை என்பதுதான் அதன் பொருள். இந்த சொற்றொடர் 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. ஏனெனில் அந்த ஆண்டில்தான் உலகிலேயே ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்தான் மனிதன். தனிமனித முயற்சிகளிலேயே ஆக சிரமமானது இமயத்தைத் தொடுவதுதான் என்பது 1953-ஆம் ஆண்டுக்கு முன்னும் உண்மையாக இருந்தது. இப்போதும் உண்மையாக இருக்கிறது. அந்த சிகரத்தை முதன் முதலாக தொட்டு மனுகுல முயற்சிகளின் எல்லைகளை அகலப்படுத்திய அந்த அபூர்வ மனிதன் எட்மண்ட் ஹில்லரி. அப்படிப்பட்ட அதிசய மனிதனுக்கு வானம் வசப்பட்ட கதையைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் நாள் உலகத்தின் கண்கள் லண்டன் பக்கம் திரும்பியிருந்தன. ஏனெனில் அன்றைய தினம்தான் இரண்டாம் எலிசபெத்தை இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டும் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. அரசியார் முடிசூடிக்கொள்வதற்கு முன்பாக அவருக்கு ஓர் அவசரக் கடிதம் வந்தது. அதில் அடங்கியிருந்த செய்தி அந்த விழாவிற்கு இன்னும் பெருமை சேர்த்தது. இங்கிலாந்தின் ராணியாக தாம் முடிசூடிக்கொள்ளவிருக்கும் இந்த தருணத்தில் மலைகளின் முடிசூடா ராணியான எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு விட்டான் என்ற செய்தியைத்தான் அந்தக் கடிதம் தாங்கி வந்திருந்தது. அந்த சாதனையை செய்தது பிரிட்டிஷ் காமன்வெல்த் உறுப்பு நாட்டை சேர்ந்த ஒருவர் என்பதுதான் பெருமைக்குக் காரணம்.



1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் நாள் எவரெஸ்ட் உச்சியைத் தொட்டனர் நியூசிலாந்து நாட்டவரான எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்ப்பா இனத்தவரான டென்சிங் நோர்கேயும் (Tenzing Norgay). அந்த செய்தியே புதிய அரசிக்கு ஏற்ற பரிசாக அமைந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் பிறந்தார் எட்மண்ட் ஹில்லரி. அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது. ஹில்லரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி Mount Ruapehu என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹில்லரிக்கு ஆர்வம் பிறந்தது. இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் Mount Cook என்ற பன்னிரெண்டாயிரம் அடி மலையில் ஏறினார்.

இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து ஆகாயப்படையில் சேர்ந்த அவர் வார இறுதியில் அருகிலிருந்த Mount egment என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது. 1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது.



அந்தக் குழுவில் இடம் பெற்ற மற்றவர்கள் வெவ்வேறு நிலைகளில் தங்கள் முயற்சியை கைவிட்டனர். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்ற அந்த நிலையில்கூட எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்ப்பா இனத்தவரான டென்சிங் நோர்கேயும் தன்னம்பிக்கை தளராமல் ஏறினர். மே 29-ஆம் நாள் காலை சுமார் 11:30 மணிக்கு அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தனர். அந்தக்கணம் மனுகுல முயற்சி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது. இமயத்தின் உச்சியைத் தொட்ட அவர்களுக்கு கிடைத்த பரிசு இதுவரை எவரும் எட்டாத உயரத்திலிருந்து அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உலகின் இயற்கையின் அழகை ரசிக்கும் வாய்ப்பு.

எவரெஸ்ட் உச்சத்தைத் தொட்டபோது என்ன நினைத்தீர்கள் என்று பின்னர் அவரை கேட்டபோது எத்தனையோ பேர் சாதிக்க துடித்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததை நினைத்து பிரமிப்பு ஏற்பட்டதாக சொன்னார். அந்த மிகப் பெரிய சாதனைக்காக தாம் முடிசூடிக்கொண்ட பிறகு எட்மண்ட் ஹில்லரிக்கு 'சர்' பட்டம் வழங்கி கெளரவித்தார் எலிசபெத் ராணி. இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட சிரமங்களிலும், பொருளியல் தட்டுப்பாடுகளிலும் உழன்று கொண்டிருந்த இங்கிலாந்து தேசம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவாலும், எட்மண்ட் ஹில்லரியின் இமாலய சாதனையாலும் புத்துணர்ச்சி பெற்றது என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். எத்தனையோ மலையேற்ற வீரர்களை அதற்கு முன் காவு கொண்டிருந்தும் கம்பீரமான எவரெஸ்ட் மலையால் ஹில்லரியின் தன்னம்பிக்கையை அசைக்க முடியவில்லை.



தன் உயிருக்கு பயந்து எட்மண்ட் அந்த முயற்சியை கைவிட்டிருந்தால் மலையை மனிதன் வென்றிருக்க முடியாது. இமயத்தின் உச்சியை தொடுவதெல்லாம் ஒன்றுக்கும் பயன் தராத செயல் என்று எண்ணுவோரும் இருக்கின்றனர். அதைத் தொட்டதால் என்ன கிடைத்து விட்டது என்று அவர்கள் நினைக்கக் கூடும். உண்மைதான் இமயத்தை தொட்டு விட்டதால் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது என்றோ அல்லது நமது பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் ஒரு தனிமனிதனின் முயற்சி எத்தனைப் பேருக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த தன்னம்பிக்கை எத்தனை பேரை அவரவர் துறையில் சாதனை படைக்கத் தூண்டியிருக்கும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் எட்மண்ட் ஹில்லரி நிகழ்த்தியிருக்கும் சாதனையின் உண்மையான ஆழம் புரியும்.

நாம் அனைவரும் இமயத்தைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தேர்ந்தெடுத்திருக்கும் துறையின் உச்சம்தான் நமக்கு இமயம். அந்த உச்சத்தை நோக்கி நாம் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் பயணித்தால் போதும் எட்மண்ட் ஹில்லரியைப்போல் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழியியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

மொழி என்பது மனிதனுக்கு மனிதன் தொடர்புகொள்வதற்காக உருவான ஒன்று. சைகை செய்தும், படங்களை வரைந்தும் எண்ணங்களை வெளிப்படுத்திய ஆதிகால மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஒலியைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஒலியிலிருந்து பிறந்தன பல மொழிகள். மொழிகள் பல்கி பெருகியதால் அனைவரும் புரிந்துகொள்வதற்கும், தடையின்றி வர்த்தகம் செய்வதற்கும் ஒரு நடுநிலையான மொழி தேவைப்பட்டது. அந்தத் தேவையை ஆங்கிலம் நிறைவு செய்தது. அது அனைத்துலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொழியை வெறும் தொடர்புக்காக மட்டும் பெரும்பாலோர் பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் மொழியின் மீது அதிக பற்றுக் கொண்டு அதனை வழிப்படும் அளவுக்கு செல்கின்றனர். அப்படி வழிபடுவோரும், மொழிச் சேவை செய்வோரும் பொதுவாக தங்களின் தாய்மொழிக்கே அந்த மரியாதையை வழங்குவர். வெகுசிலரே தங்கள் தாய்மொழி அல்லாத வேறு ஒரு மொழிக்காக சேவை செய்யவும், அதன் மேன்மைக்காக பாடுபடவும் முனைவர். அப்படிப்பட்ட மூன்று அறிஞர்களை தமிழ் மொழி வரலாறு பெருமையுடன் சுமந்து நிற்கிறது.



தமிழைத் தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும் சமயப் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து பின்னர் தமிழின் மீது காதல் கொண்டு அயராமல் மொழித் தொண்டு செய்த அந்த மூவர் வீரமாமுனிவர், ஜி.யு. போப், ராபர்ட் கால்டுவெல். தேம்பாவணி என்ற காப்பியத்தை தமிழுக்குத் தந்ததோடு தமிழ் 'அகராதியின் தந்தை' என்று போற்றப்படுபவர் இத்தாலியில் பிறந்து தமிழகத்தில் தமிழ்ச் சேவை ஆற்றிய வீரமாமுனிவர். உலகப் பொதுமறையான திருக்குறளையும், நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்ததோடு, தன்னுடைய கல்லறையில் தாம் ஒரு 'தமிழ் மாணவன்' என்று குறிக்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்த தமிழறிஞர் ஜி.யு. போப். திராவிடம் எனும் சொல்லை உருவாக்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை திராவிட மொழிகள் என்று கூறி அவற்றுக்கும் சமஸ்கிருதம் உட்பட்ட ஆரிய மொழிகளுக்கும் தொடர்பு கிடையாது என்பதை ஆதாரங்களோடு நிரூபித்தவர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல்.   

ஐரோப்பாவில் பிறந்தும், தமிழராக வாழ்ந்து மறைந்த அந்த அறிஞரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 1814-ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார் ராபர்ட் கால்டுவெல். தன் கல்வி முழுமையையும் அவர் ஸ்காட்லாந்தில் மேற்கொண்டார். கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக் கழகத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது மொழியியல் ஆராய்ச்சியில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு காரணம் அங்கு கிரேக்க மொழியைக் கற்றுத்தந்த ஒரு பேராசிரியர். வேறு பல மொழிகளோடு ஒப்பிட்டு கிரேக்க மொழியின் சிறப்பையும், மேன்மையையும் அவர் விரிவுரைகளில் தெளிவாக விளக்கி கூறுவார். மொழிகளுக்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அழகுபட எடுத்துக்கூறிய அந்த விரிவுரைகள் கால்டுவெல்லை வெகுவாக கவர்ந்தன. பிற்காலத்தில் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தையும், முனைப்பையும் அவருக்குள் ஏற்படுத்தின. 

பல்கலைக் கழகத்தில் சிறப்பு தேர்ச்சிப் பெற்று வெளியான கால்டுவெல்லுக்கு சமயப் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. 1838-ஆம் ஆண்டு தமது 24-ஆவது வயதில் சமயப் பணி புரிவதற்காக தமிழ்நாட்டிற்கு பயணமானார். தமிழகத்தின் தலைநகரமான சென்னை வந்து சேர்ந்தார். அடுத்த 53 ஆண்டுகள் சமயப் பணிகளுக்கு மேலாக தமிழ்ப் பணி ஆற்றப்போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்காது. அவரது தமிழ்ப் பணி பற்றி தெரிந்து கொள்ளும் முன் இன்னொரு முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி அன்னை மேரி என்ற கப்பலில் பயணமானார் கால்டுவெல். நடுக்கடலில் திடீரென்று கடும் சுழல்காற்று வீசியது அதில் அலைமோதத் தொடங்கிய அந்த கப்பலின் மீது புயலில் சிக்கித் தவித்த இன்னொரு பிரெஞ்சு கப்பல் மோதவே கால்டுவெல் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் ஆறு பேரைத் தவிர மற்றவர் கடலில் மூழ்கி மாண்டனர். 

தெய்வாதீனமாக உயிர் தப்பிய அறுவரில் ஒருவர்தான் கால்டுவெல். தமிழ்மொழி செய்த தவப் பயனால்தான் அவர் உயிர் தப்பினார் என்று பல தமிழறிஞர்கள் பின்னாளில் கூறினார்கள். சமயப்பணிக்காக வந்திருந்ததால் மக்களோடு நெருங்கிப் பழகுவதற்காக தமிழ் மொழியைக் கற்க விரும்பினார் கால்டுவெல். மூன்றே ஆண்டுகளில் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டதோடு வடமொழியையும் கற்று இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றார். அதன்பின்னர் சமயப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டதிலுள்ள இடையன்குடி எனும் சிற்றூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது எந்தவித வசதியும் இல்லாமல் ஒரு சிற்றூராக காட்சியளித்தது இடையன்குடி. அந்த ஊரை வசதிகள் நிறைந்த நல்ல ஊராக மாற்றும் பணி முக்கியம் என்று முடிவெடுத்த கால்டுவெல் அரும்பாடுபட்டு அந்த ஊரை சீர்திருத்தினார். அதோடு அங்கு ஒரு கோவிலையும் எழுப்பினார் அந்தக் கோவில் அவர் நினைவாக இன்றும் இடையன்குடியில் செயல்பட்டு வருகிறது.



தன்னை அன்போடு ஏற்றுக்கொண்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த மாவட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்தறிந்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகங்களாக விளங்கிய கொற்கை, காயல் ஆகியவைகளைப் பற்றிய தகவல்கள் கால்டுவெல்லை கவர்ந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்கை திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தொலைவில் ஒரு சிற்றூராக இருந்தது. அங்கு சென்று நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சிகள் செய்து பழைய கொற்கைத் துறை தரைமட்டத்திற்கு எட்டு அடிக்குக் கீழே இருந்தது என்றும், அப்போது அதனருகே கடல் இருந்ததென்றும் கண்டறிந்தார். தாமிரபரணி ஆற்று நீரில் கலந்து வந்த மண்ணும், மணலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்து கடலை ஐந்து மைல் தொலைவிற்கு அனுப்பி விட்டது என்று உணர்ந்தார்.

காவிரிப் பூம்பட்டிணத் துறைமுக வழியாக தமிழ்நாட்டின் அரிசி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது வரலாறும் கூறும் உண்மை. நமது அரிசியை கிரேக்க மொழியில் 'அருசா' என்று அழைக்கிறார் என்றும், அந்தச் சொல்லே மருவி ஆங்கிலத்தில் 'Rice' என்றானது என்றும் கால்டுவெல் ஆராய்ந்து சொன்னார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மயிலிறகு தோகை என்று அழைக்கப்பட்டது, ஹிப்ரு மொழியில் கிறிஸ்துவ வேத நூலாகிய பைபிளில் மயிலிறகு துகி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 'தோகை' என்ற சொல்லிலிருந்து மருவியதுதான் 'துகி' என்ற அந்தச் சொல் என்று அவர் விளக்கினார். இவ்வாறு பற்பல ஆராய்ச்சிகள் செய்து பல வரலாற்று உண்மைகளை முதன்முதலாக கண்டு சொன்னார் கால்டுவெல். 

தென்னிந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துலு ஆகிய ஐந்து மொழிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும், அவற்றுள் ஆகப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆதாரங்களுடன் விளக்கி அவற்றை 'திராவிட மொழிகள்' என்றழைத்தார் கால்டுவெல். கால்டுவெல் தமிழையும், டாக்டர். குந்தார்கர் என்பவர் மலையாளத்தையும், டாக்டர். கிட்டெல் என்பவர் கன்னடத்தையும், அறிஞர் பிரெவ்ன் என்பவர் தெலுங்கையும் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து 'A comparative grammar of the dravidian languages' அதாவது 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதினார் கால்டுவெல். அந்த நூல்தான் ஆரிய மொழியின் இலக்கணம் வேறு திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதை ஆதாரங்களுடன் உலகுக்கு உணர்த்தியது.



தமிழர்கள்கூட செய்யாத அந்த அறிய பணியை மேலை நாட்டவரான கால்டுவெல் செய்ததை தமிழ் வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். சுருக்கமாக சொன்னால் திராவிட மொழிகளுக்கு புத்துயிர் அளித்தவர் கால்டுவெல். இன்று தென்னிந்திய பல்கலைக் கழகங்களில் திராவிட மொழிகள் பற்றிய துறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் கால்டுவெல்தான். தமிழ்நாட்டில் அவர் வசித்த 53 ஆண்டுகளில் அவர் மூன்றே மூன்று முறைதான் தாம் பிறந்த ஊருக்கு ஓய்வெடுக்க சென்றார். அந்தளவுக்கு அவர் தமிழ்நாட்டையும் தமிழையும் நேசித்தார். ஒரு மேலை நாட்டவரால் மேன்மை அடைந்தது தமிழ் மொழி என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்து காட்டிய கால்டுவெல் கொடைக்கானல் மலையில் இருந்தபோது 1891-ஆம் ஆண்டு தனது 77-ஆவது அகவையில் காலமானார். அவர் சுவாசித்த தமிழும். நேசித்த இடையன்குடியும் இன்றுவரை அவரை மறக்கவில்லை. அவரது நல்லுடல் இடையன்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் கட்டியிருந்த கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

தமிழுக்கு அணி சேர்த்தவர்கள் பட்டியலில் 'கால்டுவெல்' என்ற மாமனிதருக்கு நிச்சயம் ஒரு முக்கியமான இடம் உண்டு. அவரைப் போன்றவர்கள் போட்ட விதைதான் விருட்சமாக வளர்ந்து தமிழ் மொழிக்கு 'செம்மொழி' தகுதியை பெற்றுத் தந்திருக்கிறது. அவருக்கு சமயப் பணி என்ற வானம் வசப்பட்டதை விட தமிழ்மொழி என்ற வானம் நன்றாகவே வசப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் அவரது தாய்மொழிகூட இல்லை. அவரது வாழ்க்கை நமக்கு கூறும் உண்மை எளிமையான ஒன்றுதான். நாம் செய்யும் எந்த காரியத்திலும் அவரைப் போன்று முழுமனத்தோடும், ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் ஈடுபட்டால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அந்த உண்மை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜான் எஃப் கென்னடி - வரலாற்று நாயகர்!

1962-ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்தப் பலப்பரீட்சையாக உருவெடுத்திருந்தது 'கியூபா' நிலவரம். கியூபாவில் இரகசியமாக அணு ஆயுதங்களை நிலை நாட்டி அமெரிக்கா மீது அதனை பயன்படுத்த எத்தனித்திருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா ஆகாய உளவுப்படை அதனை அறிந்ததும் கியூபாவை சுற்றி கடற்படை முற்றுகையை மேற்கொண்டது. எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் தன் ஆயுதங்களை அகற்றி கியூபாவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டது சோவியத் யூனியன். அமெரிக்காவும் தனது முற்றுகையை அகற்ற போர் மேகம் தனிந்து உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஒரு துளி இரத்தம்கூட சிந்தமால் ஒரு மாபெரும் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் தனி ஒரு மனிதனின் தைரியமும், தொலைநோக்கும், உன்னதமான தலமையத்துவப் பண்பும்தான். அவர்தான் அமெரிக்க வரலாற்றிலேயே ஆக இளைய வயதில் அதிபர் ஆனவரும், ஆக இளைய வயதில் மரணத்தைத் தழுவியவருமான ஜான் எஃப். கென்னடி (John F Kennedy).



அமெரிக்காவின் 35-ஆவது அதிபராக பணியாற்றிய அவரை சுருக்கமாக 'JFK' என்று அழைக்கிறது வரலாறு. ஜான் ஃபிட்ஸ் ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy) 1917-ஆம் ஆண்டு மே 29-ஆம் நாள் பாஸ்டன் நகரின் புரூக்லின் (Brookline) என்ற பகுதியில் பிறந்தார். ஒன்பது பிள்ளைகளில் இரண்டாமவர். அவருடைய தாத்தா பத்தொண்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உருளைக் கிழங்கு பஞ்சத்தை விட்டு அயர்லாந்திருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். தந்தை ஜோசப் கென்னடி ஒரு தொழிலதிபர். ஜான் எஃப் கென்னடியின் பிள்ளைப்பருவம் மகிழ்ச்சியானதாக அமைந்தது. 1940-ஆம் ஆண்டு ஹார்வர்ட் (Harvard College) பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற கென்னடி அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். 1943-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கென்னடியின் பொருப்பிலிருந்த கடற்படைப் படகை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது. அவர் கடுமையாக காயமடைந்தாலும் ஆபத்தான கடற்பகுதியில் நீந்தி துணிகரமான முறையில் செயல்பட்டு தனக்கு கீழ் இருந்த வீரர்களைக் காப்பாற்றினார்.

காயமடைந்த வீரர் ஒருவரை அவர் சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். அந்த துணிகர செயலுக்காக அவருக்கு 'Purple Heart' என்ற போர் வீரப்பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்து வந்ததும் அரசியலில் ஈடுபட்டார் கென்னடி. அமெரிக்க மக்களவையில் டெமேக்ராட்டிக் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1953-ஆம் ஆண்டு Jacqueline Kennedy என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் கென்னடி. நீண்ட நாட்கள் குணமடைந்து வந்த போது அவர் 'Profiles in Courage' என்ற நூலை எழுதினார். அந்த நூலுக்காக அவருக்கு 1957-ஆம் ஆண்டுக்கான 'Pulitzer Prize' வழங்கப்பட்டது.



1960-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் 'Republican' பிரிவு வேட்பாளரான ரிச்சர்ட் நிக்ஸனை (Richard Nixon) குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அமெரிக்காவின் 35-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கென்னடி. அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்க அதிபரும் அவர்தான் அப்போது அவருக்கு வயது 43. அதிபரான பிறகு அவர் ஆற்றிய முதல் உரையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 1961-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள் அவர் கூறிய வரிகள்தான் இன்றளவும் நாட்டுப்பற்றுக்கு உதாரணமாக கூறப்படுகிறது."நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கினார் ஜான் எஃப் கென்னடி.

அதிபரான பிறகு அவர் மேற்கொண்ட பொருளியல் நடவடிக்கைகளால் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆக அதிகமான பொருளியல் வளப்பத்தை அமெரிக்க சந்தித்தது. ஏழ்மையைப் போக்க அவர் அதிரடி நடிவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது. கென்னடி அதிக அக்கறைக் காட்டிய இன்னொரு துறை அனைவருக்கும் குறிப்பாக கருப்பினத்தவருக்கு சம உரிமை வழங்கும் சட்டதிட்டங்கள். அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்தான் 'கியூபா' பிரச்சினை தலையெடுத்தது. அதனை லாவகமாக கையாண்டு போரை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் சோவியத் யூனியனுடான உறவு மேம்படவும் வழிவகுத்தார் கென்னடி. மிக முக்கியமாக அவரது தலமையின் கீழ் 1963-ஆம் ஆண்டு இரு நாடுகளும், பிரிட்டனும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.



நாட்டுக்காக நல்ல காரியங்களில் கவனம் செலுத்திய அவருக்கு எதிரான சில  தீய சக்திகள் உருவெடுத்தன. கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு எதிராக இருந்த அவரை கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று கூறும் முழுப்பக்க விளம்பரம் ஒன்று 'Texas' நியூஸ் பத்திரிகையில் வெளியானது 1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள். அதைப் பார்த்து சிரித்த கென்னடி தன் மனைவியைப் பார்த்து நம் நாட்டில் முட்டாள்கள் இல்லாமல் இல்லை என்று தலையாட்டிக் கொண்டே கூறினாராம். அதே தினம் அவர் Texas-க்கு விமான மூலம் சென்றார். அறியாமை என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேச இருந்தார். அந்த இடத்தை நோக்கி ஒரு திறந்தவெளி வாகனத்தில் தன் மனைவியுடன் அவர் பவனி வந்தார். மக்கள் சாலையோரம் நின்று ஆராவாரத்துடன் அவரை வரவேற்றனர். சற்றும் எதிர்பாராத அந்த நேரத்தில் திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குண்டுகள் அதிபரின் உடலை துளைத்தன. அந்தக்கணமே மனைவியின் மடியில் தலை சாய்ந்து உயிர் நீத்தார் ஜான் எஃப் கென்னடி.

அன்று காலை யாரை முட்டாள்கள் என்று அதிபர் வருணித்தாரோ அவர்களில் ஒருவன்தான் அதிபரை சுட்டுக் கொன்றவன். ஒரு மாபெரும் தலைவனை இழந்து அமெரிக்க தேசம் அழுதது போரை வென்றதற்காக அல்ல போரை தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர் கென்னடி. அவர் அதிபர் பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள். அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் அமெரிக்கர்களுக்கு சுய கெளரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத் தந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நாற்பத்தி ஆறுதான். ஒரு தவனைகூட முழுமையாக அதிபராக இல்லாமல் போனது அவருக்கு அல்ல அமெரிக்காவுக்குதான் பேரிழப்பு. அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக கென்னடி தீட்டியிருந்த உயரிய திட்டங்களை அவருக்குப் பின் அதிபரான லிண்டன் ஜான்சன் நிறைவேற்றினார்.



அமெரிக்கா அதிபர்கள் வரலாற்றில் பலர் முத்திரை பதித்திருந்தாலும் ஒரு சிலரைத்தான் அமெரிக்கர்கள் இன்றும் அன்போடு நினைவு கூறுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஜான் எஃப் கென்னடி. ஆக இளைய வயதிலும் அமெரிக்காவின் மற்றும் உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தொலைநோக்கு, தெளிந்த சிந்தனை, காரியத் துணிவு, மனசாட்சியைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாத தைரியம், உலக அமைதியே நிரந்தரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவைதான். அந்தப் பண்புகளில் சிலவற்றை நாம் பின்பற்றினால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிக்மண்ட் ஃப்ராய்ட் (உளவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

ஆரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை உறவினர்களாக கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும், ஏன் சாத்தானின் படைப்புகளாககூட பார்த்தனர், நடத்தினர். ஆனால் மனநோயும் உடல்நோயைப் போன்றதுதான் அது சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றுதான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருவர் துணிந்து கூறினார். மேலும் நாம் காணும் கனவுகளின் பொருள் பற்றியும் பல ஆய்வுகளை செய்து அதுவரை கூறப்படாதவற்றை தைரியமாக கூறி உலகின் புருவங்களை உயர்த்தினார். அவர்தான் 'psycho analysis' என்ற உளபகுப்பாய்வு முறையை உருவாக்கித் தந்த உலகம் போற்றும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

1856-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் ஆஸ்திரியாவின் Pribor நகரில் பிறந்தார் ஃப்ராய்ட். அவரது தந்தை ஜேக்கப் ஃப்ராய்ட் கம்பளி வியாபாரம் செய்து வந்தார். அவருடைய இரண்டாம் மனைவி Amalie-வின் முதல் குழந்தையாக பிறந்தவர்தான் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Schlomo Freud). ஆரம்பம் முதலே ஃப்ராய்ட் அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்ததால் பெற்றோர் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கினர். அவர் அமைதியாக படிக்க அவருக்கென்று தனி அறையை ஒதுக்கி கொடுத்தனர். ஃப்ராய்ட் கேட்டதெல்லாம் அவருக்கு கிடைத்தது. தொழிற்புரட்சி காரணமாக தந்தையின் சிறு துணி ஆலையால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. எனவே ஃப்ராய்ட் நான்கு வயதாக இருந்தபோது வியன்னாவுக்கு (Vienna) பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். அங்கும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார் தந்தை. அவர்கள் யூதர்களாக இருந்ததாலும், யூதர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செய்ததாலும் மற்ற ஆஸ்திரியர்களின் வெளிப்படையான வெறுப்புக்கு ஆளாகினர். அதனாலேயே தான் ஒரு மிகச்சிறந்த அறிஞனாக வரவேண்டும் என்ற வைராக்கியம் ஃப்ராய்டின் மனத்தில் வேர் விடத் தொடங்கியது.



ஃப்ராய்ட் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பல துறைகளை அலசி விட்டு இறுதியில் மருத்துவத்தை தேர்ந்தெடுத்து 1881-ஆம் ஆண்டு அதில் பட்டம் பெற்றார். அவர் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தது நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, இயற்கையின் சில புரியாத புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகதான். நரம்பியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் சொந்தமாக மருந்தகத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்திலிருந்தே அவருடைய சிகிச்சை முறைக்கும், கருத்துகளுக்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஃப்ராய்ட் வகுத்துக்கூறிய புதிய எண்ணங்களை எள்ளி நகையாடியது வியன்னா மருத்துவ கழகம். ஃப்ராய்ட் பயன்படுத்திய மனோ வசிய சிகிச்சை முறையை கடுமையாக எதிர்த்த அவருடைய முன்னால் பேராசிரியர் ஃப்ராய்டை தன் 'Cerebral Anatomy Institute' என்ற மூளைக்கூறு கழகத்திலிருந்து தடை செய்தார் அதனால் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஃப்ராய்டுக்கு. ஆனால் மனம் தளராமல் தன் சொந்த மருத்துவத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 

நரம்பியல் சம்பந்தபட்ட நோய்களுக்கும், மன நோய்க்கும் வித்தியாசமான அனுகுமுறையைப் பயன்படுத்தி சிகிச்சைகளைத் தொடர்ந்தார். மனநோய் என்பது மூளையை பாதிக்கக்கூடிய நோய் எனவே நோயாளியின் மனோபாவங்களையும் வரலாற்றையும் கேட்டறிந்து அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ள குறைகளை அறிந்து களைய வேண்டும். அவ்வாறு செய்யாதவரையில் எந்த மருந்தாலும் மனநோயை குணப்படுத்த முடியாது என்று முதன் முதலில் கண்டு சொன்னவர் ஃப்ராய்ட்தான். அவ்வாறு அவர் வகுத்துத் தந்த சிகிச்சை முறைதான் 'psycho analysis' என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் அவரது சிகிச்சை முறைகளை ஒதுக்கினாலும் நோயாளிகளுடையே அவர் பிரபலம் அடையத் தொடங்கினார். வெகு விரைவில் பல மனநோயாளிகள் அவரிடம் கொண்டு வரப்பட்டனர். அந்த நோயாளிகளுக்கு அதுவரை வழங்கப்படாத சிகிச்சை முறைகளை அவர் கையாண்ட போது ஏற்பட்ட அனுபவங்களும், அவர் செய்த பரிசோதனைகளும்தான் புகழ்பெற்ற கோட்பாடுகளை வகுக்க அவருக்குத் துணை புரிந்தன.



பத்து வருட பரிசோதனைகளுக்குப் பிறகு ஹிஸ்டீரியா (Hysteria) எனப்படும் இசிவு நோய் பற்றிய தனது முதலாவது நூலை வெளியிட்டார். மருத்துவ உளவியலில் அது ஒரு மைல்கல்லாக அமைந்தது. தனது ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர் மனித மனத்தின் தன்மை பற்றி நிறைய சிந்தித்தார் அப்போதுதான் கனவுகளின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது கனவுகளுக்கும், ஆழ்மனத்திற்கும், நரம்பியல் நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பிய ஃப்ராய்ட் தான் தினசரி கண்ட கனவுகளை எழுதி வைத்து அவற்றை ஆராயத் தொடங்கினார். 1900-ஆம் ஆண்டில்  'The Interpretation of Dreams' என்ற கனவுகளின் விளக்கம் பற்றிய நூலை வெளியிட்டார். அந்த நூலில் அவர் ஆழ்மன செயற்பாடுகள் எப்படி கனவுகளின் உள்ளடக்கத்தைப் பாதிக்கின்றன என்று விளக்கியிருந்தார். அதோடு வாய் தவறி வார்த்தைகளைச் சொல்வது, பெயர்களை மறந்துபோவது, தானே விபத்துக்குள்ளாவது போன்றவற்றுக்கும் ஆழ்மனத்திற்கும் தொடர்பு உண்டு என்று அவர் விளக்கினார். அவரது கருத்துகளும், நூலும் அவருக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

மனநோய் அல்லது நரம்பு கோளாறுகளை உருவாக்குவதில் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலுணர்ச்சி பெரும்பங்காற்றுகிறது எனும் கொள்கையை வலியுறுத்தினார் ஃப்ராய்ட். பாலுணர்ச்சியும், சிற்றின்ப வேட்கையும் பதின்ம பருவத்தில் அல்ல குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே தோன்றி விடுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் இன்னும் விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவருக்கு உளவியல் உலகில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மேலும் Super ego, Ego, Id ஆகிய மூன்று ஆதிக்கங்கள் மனத்தை இயக்குகின்றன என்றும், அவற்றை மூளையின் மூன்று பிரிவுகளாக கொள்ளலாம் என்றும் ஃப்ராய்ட் கூறினார். வாழ்க்கையில் நடக்கும் கொடூரமான நிகழ்ச்சிகள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவை Id-இல் பதிவாகின்றன.  Super ego, Ego ஆகியவற்றின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் சராசரியாக வாழ்கிறான். Id-இன் ஆதிக்கம் மேலோங்கும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தன்னையறியாமல் தாக்கத் தொடங்கி விடுகிறான். அதனால் நோயாளியின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு Id-இல் பதிந்த கொடூர நிகழ்ச்சிகளை தத்துவ முறையில் அழித்து விட்டால் மனநோயை குணப்படுத்தி விடமுடியும் என்பதுதான் ஃப்ராய்டின் தத்துவம்.



பின்னாளில் ஃப்ராய்டுக்கு தாடை எலும்பில் புற்றுநோய் ஏற்பட்டு முப்பது அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த நோய் தந்த வேதனைகளுக்கிடையிலும் அவர் கடுமையாக உழைத்தார். அந்தக்கால கட்டத்தில் ஹிட்லரின் நாசிப் படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தன. அப்போது 82 வயதை எட்டியிருந்த நிலையிலும் ஃப்ராய்ட் ஒரு யூதராக இருந்ததால் நாட்டை விட்டு வெளியேறிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து தன் மனைவி, மகளுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 15 மாதங்களுக்கு பிறகு 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் தமது 83-ஆவது அகவையில் அவர் காலமானார்.

மனம் என்பது புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில் அந்த புரியாத மனக் கதவினை திறந்ததால்தான் 'உளவியலின் தந்தை' என்று போற்றப்படுகிறார் ஃப்ராய்ட். வரலாற்றில் பல முன்னோடிகளைப் போலவே அவரையும், அவரது கண்டுபிடிப்புகளையும் உலகம் உதாசீணப்படுத்ததான் செய்தது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் 'உளவியல்' என்ற வானத்தை வசப்படுத்த ஃப்ராய்டுக்கு உதவியிருக்கின்றன. அதே தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த நமக்கும் துணை புரியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்!

மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்.



1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் இங்கிலாந்தின் பெர்க்லி (Berkeley) என்ற நகரில் பிறந்தார் எட்வர்ட் ஜென்னர். அப்போது தொழிற்புரட்சி ஏற்படாத காலம். பசுமை மாறாத வயல்களையும், பண்ணைகளையும் அந்த பிஞ்சு வயதிலேயே காதலிக்கத் தொடங்கினார் ஜென்னர். இயற்கையை அதிகம் நேசித்த அவர் நோய்களை இயற்கையின் எதிரியாகப் பார்த்தார். எனவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் பிஞ்சு வயதிலேயே அவர் மனதில் வளரத் தொடங்கியது. வயல்வெளிகளில் சுற்றும்போது பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்தே அது எந்த பறவை என்பதையும், வயல் ஓரங்களில் இருந்த அத்தனை செடிகளின் பெயர்களையும் சொல்லும் திறமை அவரிடம் இருந்தது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் அவரது சிறந்த பண்புதான் பின்னாளில் 'Vaccination' எனப்படும் அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது.

பனிரெண்டு வயதானபோது அவர் டாக்டர். டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கையை உற்றுக் கவனித்தார்.  'cowpox' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க cowpox நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ள ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா? என்று ஆராயத்தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார்.

1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். Gloucestershire என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை அவர் தேடிய விடையை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்த்தால்தானே உலகம் நம்பும் அதற்கும் தயாரானார் 1796-ஆம் ஆண்டு. அந்த ஆண்டு மே 14-ஆம் நாள் ஜேம்ஸ் பிப்ஸ் (James Phipps) என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர்.  Sarah Nelmes என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த cowpox கொப்புளத்திலிருந்த எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு  cowpox நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.



சில வாரங்கள் கழித்து Smallpox கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் எண்ணித் துணிந்ததால் சற்றும் மனம் தளராமல் அந்த வரலாற்று சிறப்புமிக்க தடுப்பூசியை குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.



மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.

எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்ஸிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன். அதனை அறிந்த ஜென்னர் பிரான்ஸில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது. அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார். முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம்.



Catherine Kingscote என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். 1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார்.

மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு. தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு, சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு, உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு. இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்!

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.



மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.



1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி.

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.



தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.



வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரவீந்தரநாத் தாகூர் - வரலாற்று நாயகர்!

வணக்கம் நண்பர்களே,
நமது இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி நோபல் பரிசை வென்றவரும், உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞர், சிந்தனையாளருமான இரவீந்தரநாத் தாகூரின் 150-ஆவது பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்...!

உலகத்தரம் வாய்ந்த அமர இலக்கியங்களை ஒவ்வொரு மொழியும் பல்வேறு காலகட்டங்களில் தந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியங்களை உலகம் முழுவதும் படித்து ரசிக்க வேண்டுமென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவற்றை அந்தந்த மொழி பேசுபவர்களே ரசிக்க முடியும். தாய் மொழியில் எழுதப்படும் ஓர் இலக்கியம் ஆங்கிலத்திற்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழி பெயர்க்கப்படும்போது அதன் இயற்கை சுவையும், வீரியமும் குறைந்து விடும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். அப்படிப்பட்ட நிலையிலும் ஆங்கில உலகத்தை கவரும் ஓர் வேற்று மொழி படைப்புதான் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசுக்குத் தகுதி பெறுகிறது. இந்திய இலக்கியத்தை பொறுத்தமட்டில் இதுவரை ஒரே ஒரு இலக்கியத்திற்குதான் அந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. வங்காள மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்ட அந்த படைப்பு கீதாஞ்சலி. அதனைத் தந்து இந்திய இலக்கிய உலகிற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த உன்னத கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம்.

1861-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார் தாகூர். குடும்பத்தில் பதினான்காவது பிள்ளை அவர். பெற்றோர் வசதி மிக்கவர் என்பதால் அனைவரும் செல்வ செழிப்பில் வளர்ந்தனர். இளம் பருவத்திலிருந்தே இலக்கியம், இசை, சமயம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார் தாகூர். வேதங்களையும் உபநிடதங்களையும் ஆர்வத்துடன் கற்றார். மொழியாற்றல் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. எனவே பனிரெண்டாவது வயதிலேயே கவிதைகள் புனையத் தொடங்கினார். தாகூரின் குடும்பம் வெளியிட்டு வந்த பாரதி என்ற பத்திரிகையில் அவரது ஆரம்பகால படைப்புகள் இடம்பெற்றன. கவிதைகள் எழுதிய அதே நேரத்தில் வங்காள நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடு கலந்து இசைத்தொகுப்பாகவும் வெளியிட்டார். பிற்காலத்தில் அது 'இரவீந்தர சங்கீதம்' என்று அழைக்கப்பட்டது.



தாகூர் முறையாக பள்ளி செல்லவில்லை அதற்கு காரணம் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளிலும், சட்ட திட்டங்களிலும் அவருக்கு உடன்பாடு கிடையாது என்பதுதான். கல்வியாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, இசையாக இருந்தாலும் சரி எதிலுமே சுதந்திரத்தை விரும்பியவர் அவர். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகியவற்றில் வல்லவராக இருந்தார். தனிமையையும் கவிதையையும் விரும்பிப் போற்றிய தாகூர் தனது மிகச்சிறந்த படைப்புகளை தனிமையின் இனிமையில்தான் எழுதினார். அவரது இலக்கிய பணி சுமார் அறுபது ஆண்டுகள் நீடித்தது. அந்தக்கால கட்டத்தில் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருபத்தைந்து நாடகங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்தார்.

இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல் ஆகியவைப் பற்றி விழிப்புணர்வூட்டும் பல கட்டுரைகளையும் அவர் எழுதினார். இவையெல்லாம் தவிர்த்து அவருக்கு ஓவியம் வரையவும் நேரம் இருந்தது. சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூட பாடதிட்டங்களையும், ஆசிரியர் கற்பிக்கும் முறைகளையும் விரும்பாத தாகூர் அந்தக்கால குருகுல முறைப்படி ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி அதில் நன்முறையில் கல்வி கற்பிக்க விரும்பினார். அதன் பயனாக அவர் 1901-ஆம் ஆண்டு தோற்றுவித்த ஒரு கலைக்கழகந்தான் சாந்தி நிகேதன். தன் செல்வத்தையும், எழுத்து மூலம் தான் ஈட்டிய பொருளையும் அந்தக் கல்வி நிலையத்திற்காக செலவிட்டார். அந்த கல்விக்கழகத்தில் மொழிகளும், கலைகளும் இயற்கைச் சூழலில் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கேயே தங்கி கற்பித்தனர், கற்றனர்.



இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் சாந்தி நிகேதனில் கல்வி கற்றனர். அன்னல் காந்தியடிகள் அந்தக் கல்வி நிலையத்திற்கு வருகை புரிந்தார். ஜவஹர்லால் நேரு அந்தக் கல்வி நிலையத்தின் மீது அதிக அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அந்த நிலையத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடதக்கது. சாந்தி நிகேதன் கலைக்கழகம் சிறிது சிறிதாக வளர்ச்சிப் பெற்று பின்னர் 'விஷ்வ பாரதி' பல்கலைக்கழகம் என்றானது. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அந்த பல்கலைக்கழத்தில் கல்வி பயில வருகின்றனர்.

இரவீந்தரநாத் தாகூருக்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தது 103 கவிதைகளின் தொகுப்பாய் அவர் படைத்த அமர காவியமான கீதாஞ்சலிதான். அந்தக் கவிதைகள் உயரிய தத்துவங்களையும், ஆன்மீக சிந்தனைகளையும் அடிப்படையாக் கொண்டவை. முதலில் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதியதுடன் பின்னர் தாமே அவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் தாகூர். 1912-ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலியை உலகம் ஆங்கிலத்தில் படித்து வியந்தது. அதற்கு அடுத்த ஆண்டே 1913-ல் அந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசை வழங்கி மகிழ்ந்தது நோபல் குழு. நோபல் பரிசுத் தொகை தாகூருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனைக் கொண்டு சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தின் செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது மேல்நாட்டு உலகம் தன் படைப்பைப் பாராட்டிய பிறகுதான் சொந்த நாட்டு மக்களின் பாராட்டும், கவனமும் தன் நூலுக்கு கிடைத்தது என்பது குறித்து வருந்தினார்.

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் போட்டு வைத்தார். துரதிஷ்டவசமாக அந்த வங்கி நொடித்துப் போனது. தாகூரின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1915-ஆம் ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆனால் 1919-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த விருதை திருப்பி அனுப்பி விட்டார் தாகூர். உலகம் போற்றும் அன்னல் காந்தியடிகளை 'மகாத்மா' என்று முதலில் அழைத்துப் போற்றியவர் தாகூர்தான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.



ஒருநாட்டின் மிக முக்கியமான பாடலான தேசிய கீதத்தை எழுதும் கெளரவம் மிகச்சிறந்த கவிஞர்களுக்குதான் வழங்கப்படும். அந்த கெளரவத்தைப் பெற்ற இரவீந்தரநாத் தாகூர் எழுதித் தந்த இந்திய தேசிய கீதம்தான் 'ஜன கண மண' இந்தியாவிற்கு மட்டுமல்ல வங்காள தேசத்திற்கும் அவர்தான் தேசிய கீதத்தை எழுதித் தந்தார். உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய தனிப் பெருமை இரவீந்தரநாத் தாகூருக்கு மட்டுமே உண்டு. இந்திய இலக்கிய உலகிற்கு அனைத்துலக பெருமையை பெற்றுத் தந்த இரவீந்தரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் தனது 80-ஆவது அகவையில் காலமானார்.

தாகூர் நோபல் பரிசை பெற்று கிட்டதட்ட 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. வேறு ஒரு இந்திய இலக்கியத்தால் இன்னும் அந்த உச்சத்தை எட்ட முடியவில்லை. அதுவே இரவீந்தரநாத் தாகூரின் பெருமைக்கு அளவுகோல். முறையாக கல்வி பயிலாமலும்கூட தாகூரால் நோபல் பரிசை வெல்ல முடிந்ததென்றால் நம்மால் சாதிக்க முடியாதது எது? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஓர் இலக்கை வகுத்துக் கொண்டு தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் உரமாக விதைத்து தைரியமாக முன்னேறினால் தாகூருக்கு வசப்பட்டதுபோல் நிச்சயம் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூலதனத்தின் பிறந்த நாள் (கார்ல் மார்க்ஸ்) - வரலாற்று நாயகர்!

"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருகப் பெருக தொழிலாளிகள் நசுக்கப் படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என்ற உண்மையை இந்த உலகிற்கு எடுத்துக் கூறிய ஒரு மாமனிதனின் பிறந்த நாளான இன்று (05/05/2011) ஒரு சிறு முயற்சியாக அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!

"உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள் ஒன்று திரண்டு போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்".

இதுதான் பொதுவுடமைக் கொள்கை. இந்த சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 'ஜெர்மானிய தாடிக்காரன்' என்று அறிஞர்களால் மரியாதையுடனும், நேசத்துடனும் அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் ஜெர்மனியின் புருசியா என்ற பகுதியில் உள்ள ட்ரையர் எனும் நகரில் பிறந்தார் Karl Heinrich Marx. அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். குடும்பம் வறுமையில் வாடினாலும், மார்க்ஸை சட்டம் படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் வறுமையைப் போக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார். மார்க்ஸின் பெற்றோர் சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், மார்க்ஸுக்கு இனம், மதம் ஆகியவற்றில் பற்று இல்லை.



மதத்தலைவர்களின் போக்கினை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது என்று நம்பினார். இளம் வயதிலேயே அவரது சிந்தனைகள் புரட்சிகரமாக இருந்தன. தன் தந்தையின் எண்ணப்படியே தனது பதினேழாவது வயதில் பான் (University of Bonn) பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்தார் மார்க்ஸ். ஆனால் வரலாற்றிலும், தத்துவத்திலும் அவரது கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் மனதில் பொதுவுடமைத் தத்துவம் வேர் விடத்தொடங்கியது. தனது பொதுவுடமைக் கருத்துகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் பரப்பினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரை கண்டித்தும் அவர் தொடர்ந்ததால் வேறு வழியின்றி அவரை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியது.

சட்டத் துறையை ஏற்கனவே விரும்பாத மார்க்ஸ் பின்னர் பெர்லின் ( University of Berlin) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் பயின்றார். 1841-ஆம் ஆண்டில் மார்க்ஸுக்கு தத்துவத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. அதன் பிறகு அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. பல்கலைக்கழக நாட்களில் ஜென்னி என்ற பெண்ணை விரும்பினார் மார்க்ஸ். செல்வந்தர் வீட்டுப் பெண்ணான ஜென்னியும் அவரை விரும்பினார். ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த பொருளாதார வேற்றுமைகளை காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜென்னியின் தந்தை. காதலின் பலம் அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது. காதலுக்காக செல்வ சுகத்தை தூக்கி எறிந்த ஜென்னி கடைசிவரை கார்ல் மார்க்ஸுக்கு ஆனிவேராக இருந்தார்.



முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக பொறுப்பேற்றார் மார்க்ஸ். ஆனால் அவரது புரட்சிகரமான எழுத்துக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனவே பாரிஸுக்கு சென்றார் அங்கு அரசியல் கட்டுரைகளை பல பத்திரிகைகளில் எழுதினார் அவை ரஷ்ய அரசாங்கத்தை தாக்குவதாக இருந்ததால் ரஷ்யா கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரை நாடு கடத்தியது பாரிஸ். இந்த சமயத்தில் மார்க்ஸுக்கு Friedrich Engels என்பவரின் நட்பு கிடைத்தது. ஒரு முதலாளியின் மகனாக இருந்தும், தொழிலாளர்கள் நலனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஏங்கல்ஸ். எனவே இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தொழிலாளர் நலனை மேம்படுத்த மார்க்ஸும், ஏங்கல்ஸும் திட்டம் தீட்டினர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை எப்படி போராடி பெறுவது என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுவுடமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர். அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறை புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ். 1847-ஆம் ஆண்டு லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto) என்ற கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தி 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Workers of All Land Unite) என்ற முழக்கத்தை மார்க்ஸும், ஏங்கல்ஸும் முன்வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849-ஆம் ஆண்டு ஏங்கல்ஸின் உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தமராக குடியேறினார்.



பெரும்பாலான நேரங்களை அவர் பிரிட்டிஸ் அரும்பொருளகத்தில் நூல்களை படிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் அதிகம் சிந்தித்து எழுதிய அவரது முதல் நூல் கேப்பிடல் (Das Capital) அதாவது மூலதனம்.

"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருக பெருக தொழிலாளிகள் நசுக்கப்படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்".



இதுதான் மூலதனம் என்ற அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து. இன்று உலகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் இருப்பதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ்தான். மார்க்ஸின் பொதுவுடமை கருத்துகள் உலகம் முழுவதும் பரவி வலுப்பெறத் தொடங்கின. மார்க்ஸ் முன்னுரைத்தது போலவே புரட்சிகள் வெடிக்கத் தொடங்கின. 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடந்து லெனின் தலமையில் பொதுவுடமை ஆட்சி (கம்யூனிஸ்ட் ஆட்சி) மலர்ந்தது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ச்செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லாவியா, கிழக்க்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பீரியா, சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.

உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது. பணக்கார குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி, தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார் இவ்வாறு...

"எங்கள் குட்டி தேவதை பிரெஞ்சஸ்கா மார்புச் சளியால் மூன்று நாட்கள் மூச்சு திணறி இறந்தாள். எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவள் பிறந்தபோது தொட்டில் வாங்ககூட எங்களிடம் காசு இல்லை, இறந்தபோது சவப்பெட்டி வாங்ககூட காசு இல்லை".

மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு மருந்து வாங்ககூட முடியாமல் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று கனவு கண்ட மார்க்ஸ். ஜென்னியையும் மரணம் கொண்டு போக நிலைகுலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தனது 64-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மார்க்ஸின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பேசிய, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மார்ச் 14-ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப் பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது சாய்வு நாற்காலியில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டதைக் கண்டோம்." என்றார்.



பாட்டாளிகளை அவர் அன்புடன் 'காம்ரேட்ஸ்' அதாவது 'தோழர்களே' என்றுதான் அழைத்தார். இன்றும்கூட தொழிற்சங்கங்களில் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவுடமைக் கொள்கையில் அடிப்படையில் எந்த பிரச்சினையும் கிடையாது. கம்யூனிசத்தின் இன்றைய அழிவிற்கு அது நடைமுறைப் படுத்தப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்கள் அல்ல. அந்த நோக்கங்கள் உயரியவை. மார்க்ஸ் நினைத்தது போலவே அது செயல்படுத்தப் பட்டிருந்தால் அதைவிட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் 'சமதர்மகொள்கை' என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்...துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

"உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!
நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை-
அடிமைத்தனத்தை தவிர! ஆனால்
வெல்வதற்கு  இந்த உலகமே இருக்கிறது!"

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!"
-கார்ல் மார்க்ஸ்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புரட்சி நாயகன் லெனின் - வரலாற்று நாயகர்!

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா.
"இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல் வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு, விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".

என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான்.



1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River) நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவனாக இருந்தான்.

மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.



விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.

அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. 



ஷா மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது.

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள்.



இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.

நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.



கம்யூனிசம் கொள்கைகளின் நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!

என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வில்லியம் ஷேக்ஸ்பியர் - வரலாற்று நாயகர்!

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23.

1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (Stratford-upon-Avon) என்ற சிற்றூரில் பிறந்தார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் பிறந்தது ஏழ்மையில்தான். எட்டுப் பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் சேக்ஸ்பியர் கையுறை தைத்து விற்கும் வியாபாரி. தொழில் அவ்வுளவு இலாபகரமாக இல்லை என்பதால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அதன் பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதினெட்டு வயதான போது தன்னை விட எட்டு வயது மூத்தவரான ஆன் ஹதாவேயை (Anne Hathaway) என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.



23 வயதான போது அவர் பிழைப்புத் தேடி லண்டன் வந்து சேர்ந்தார் அந்த ஆண்டு 1587. அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்றை பார்ப்போம்...அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது லண்டன். சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்து சீமான்களும், செல்வந்தர்களும் குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடக கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல் காக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைகளை காவல் காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது அந்த நாடக கொட்டகையின் உரிமையாளருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான். 

ஷேக்ஸ்பியருக்கு ஞாபகத்திறன் அதிகம். குதிரைகளை காவல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்று தனக்குள் நினைத்துக்கொள்வார். இது சினிமாக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வரவில்லை என்பது தெரிந்து பதறிப் போனார் நிர்வாகி.நிலமையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் தாம் நடிப்பதாகக் கூறினார். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். அப்போது வேறு வழி தெரியாததால் நிர்வாகியும் சம்மதிக்க ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகமும் தொடங்கியது.



தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார் சேக்ஸ்பியர். சில முக்கிய காட்சிகளில் அவர் சொந்தமாகவும் வசனம் பேசினார். அந்த வரவேற்பைப் பார்த்து மகிழ்ந்துபோன நிர்வாகி தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது. அண்மையில் ஏற்பட்ட சார்ஸ் நோய் எப்படி சில நகரங்களை முடக்கியதோ அதேபோல் பிளேக் நோயால் முடங்கிப் போனது லண்டன் மாநகரம். அதனால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடக கொட்டகைகளும் மூடிக்கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது.

லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புதுவகை கவிதைகளையும் அவர் புனைந்தார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் என்று சொல்வதை விட இயற்றினார் என்று சொல்ல வேண்டும். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம்.

A Midsummer Night's Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கியம் 'Romeo and Juliet' என்பதை எந்த மொழி அறிஞராலும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும்போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் மறக்க முடியாது.



இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமரகவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலக பல்கலைக்கழகங்கள் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன. 

ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாக முடிக்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக்கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும் காரணம் அல்ல தன்னம்பிக்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை முதலீடு செய்வோம். திறமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம். நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
'லியொனார்டோ டாவின்சி' - வரலாற்று நாயகர்!

1911-ஆம் ஆண்டு பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசிக்கிறீர்களா? அந்த ஓவியத்தின் பெயரை சொன்னாலே உங்கள் உதடுகள் புன்னகை பூக்கும். சில காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த 'மகா ஓவியம்' இப்போது மீண்டும் அதே லூவர் அரும்பொருளகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பது வேறு விசயம்.   


மாபெரும் ஓவியர், தேர்ந்த சிற்பி, சிறந்த கவிஞர், இசை விற்பன்னர், தத்துவ மேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுனர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, நீர்ப்பாசன நிபுனர், இராணுவ ஆலோசகர் என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பிரகாசித்த ஒருவரை எப்படி அறிமுகபடுத்துவது? என்ன சொல்லி கெளரவப்படுத்துவது? அந்தக் கலைஞன் தீட்டிய அந்த அதிசய ஓவியம் மோனலிசா, அந்த தெய்வீக புன்னகையை தன் தூரிகையால் வடித்துத் தந்த மாபெரும் கலைஞன் லியொனார்டோ டாவின்சி. 

           

இத்தாலியின் ப்ளோரன்ஸ் (Republic of Florence) நகருக்கு அருகே இருக்கும் வின்சி (Vinci) என்ற கிராமத்தில் 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார் லியொனார்டோ டாவின்சி. அவரது பிறப்பில் கொஞ்சம் களங்கம் வழக்கறிஞரான தந்தைக்கும், விவசாயக் கூலி வேலை பார்த்த தாய்க்கும் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர்தான் டாவின்சி. அவர் பிறந்ததும் தாயார் வேறு ஒருவரை மணந்து கொண்டு சென்று விட தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் அவர் வளர்ந்தார். சிறு வயதிலேயே வரைவதிலும், மாதிரி வடிவங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார் டாவின்சி. அவருக்கு இடது கைப்பழக்கம் இருந்தாலும் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஓவியம் வரையக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் தன் விளக்கக் குறிப்புகளையும், கடிதங்களையும் இடமிருந்து வலமாக எழுதியவர். எனவே அவற்றை படிக்க வேண்டுமென்றால் கண்ணாடி முன் அதை வைத்து கண்ணாடியில் தெரியும் பிரதி பிம்பத்தைப் பார்த்து படிக்க வேண்டும்.   

சிறு வயதானபோது சந்தைக்கு சென்று விற்பனைக்காக கூண்டில் அடைக்கப்பட்ட அழகிய பறவைகளை வாங்கி அவற்றை சுதந்திரமாக பறக்க விட்டு அதன் அழகை ரசிப்பாராம். அந்தக் காட்சியை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு ஓவியமாக வரைவார். அந்தளவுக்கு அவருக்கு ஞாபக சக்தி இருந்தது. குதிரைகள் என்றால் டாவின்சிக்கு அலாதி பிரியம். உடல் வலிமையுடன் திகழ்ந்த அவர் குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்கூடிய வலிமையும் பெற்றிருந்தார். இயற்கையை அதிகம் நேசித்த டாவின்சிதான் ஓவியங்களில் இயற்கையை பிரதிபலித்த முதல் ஓவியர் என்கிறது வரலாறு. தன் ஓவியங்களில் எந்த கட்டுப்பாட்டையும், விதிமுறைகளையும் அவர் பின்பற்றியதில்லை. ஓவியங்களில் ஒளியையும், அதன் நிழலையும் தத்ரூபமாக வரைந்து காட்டிய முதல் ஓவியர் டாவின்சிதான். அதோடு அவர் நின்று விடவில்லை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தனியாத தாகம் அவரிடம் இருந்தது.

ஒளியையும், நிழலையும் வரைந்த அவர் அவற்றுக்கு பின் உள்ள இயற்கை நியதிகளை அறிந்து கொள்வதற்காக ஒளியின் தன்மைப் பற்றியும், கண்களின் அமைப்புப் பற்றியும் கற்றறிந்தார். அவர் எழுதி வைத்த குறிப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் பலவற்றை சந்திக்க நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்காது. அந்தக் குறிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை புறக்கணிக்கப்பட்டன. அவருடைய குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோது உலகம் வியப்பில் ஆழ்ந்தது ஏன் தெரியுமா? விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே வான் குடையைப் பற்றி சிந்தித்து துல்லியமாக வரைந்து வைத்திருக்கிறார் டாவின்சி. கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலையில் அலாரம் பற்றி சிந்தித்திருக்கிறார். 



எந்த அறிவியல் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்துக்கும், உண்மை நிலைக்கும் வேறுபாட்டை கான்பது அரிது. ஒளி அலைகளைப் பற்றி அவர் செய்த ஆய்வுதான் பிற்காலத்தில் புகைப்பட கருவிக்கு அடிப்படையாக அமைந்தது. மனிதர்களை ஓவியமாக வரைந்த போது மனிதனின் உடற்கூறியலை ஆராய்ச்சி செய்தார். செடிகளையும், மரங்களையும் வரைந்தபோது தாவரவியலை ஆராய்ந்தார். அந்தக் காலகட்டத்திலேயே விமானத்தின் மாதிரியை வடிவமைத்தார். நீராவி பற்றியும், பீரங்கிகள் பற்றியும், கப்பல் வடிவமைப்பு பற்றியும் சிந்தித்து வரைந்தார்.

பல நூற்றாண்டுகள் கழித்து உருவானவற்றையும், அந்த ஓவியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது விஞ்ஞானிகள் மலைத்தனர். ஏனெனில் எதிர்காலத்தை தத்ரூபமாக சித்தரிந்திருந்தார் டாவின்சி. இவ்வுளவு சிறப்புகள் இருந்தும் டாவின்சியின் பெயரை நமக்கு நினைவு படுத்துவது ’மோனலிசா’ என்ற அந்த மந்திரப் புன்னகை ஓவியம்தான். 1503-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு அந்த அதீத ஓவியத்தை வரைந்து முடித்தார் டாவின்சி. ஓவியத்தின் அழகை கண்டு தன்னைத்தானே நம்ப முடியாமல் அவர் வியந்து போனார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. ஒரு புகைப்படத்தில்கூட அவ்வுளவு தத்ரூபமாக ஒரு புன்னகையைப் பதிவு செய்ய முடியுமா? என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். அந்தப் படம் வைக்கப்பட்டிருந்த வெற்று இடத்தை பார்க்கத்தான் லூவர் அரும்பொருளகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 



500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஓவியத்தின் வசீகரம் குன்றவில்லை. டாவின்சிக்கு பெருமை சேர்த்த மற்றொரு ஓவியம் 'The Last Supper' எனப்படும் இயேசுவின் கடைசி விருந்து. 'Renaissance' எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் லியொனார்டோ டாவின்சியைப் போல் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள் வேறு யாரும் கிடையாது. அந்த மகா கலைஞனின் புகழ் இத்தாலிக்கும் அப்பால் பரவியது. 1516-ஆம் ஆண்டில் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் தம் நாட்டில் வந்து வசிக்குமாறு அழைப்பு விடுக்கவே பிரான்ஸ் சென்றார் டாவின்சி. அவருக்காகவே வழங்கப்பட்ட ஒரு மாளிகையில் வசித்து வந்தார். 1519-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமது 67-ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.



பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்கியதால் தசாவதாரம் கண்ட டாவின்சி என்று அவரை என்று வருணிக்கிறது ஒரு குறிப்பு. கடந்த 500 ஆண்டுகளில் அவரைப் போன்ற ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறது வரலாறு. இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் அவரைப் போன்ற ஒருவரை நாம் சந்திக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் பத்து வேண்டாம் ஒரு துறையிலாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்த டாவின்சியின் வாழ்க்கை உதவும். அவரைப் போல பல துறைகளிலும் ஒரே நேரத்தில் நாம் பெயர் போட வேண்டியதில்லை. நமக்கு பிடித்த ஒரு துறையில் நமது முழு பலத்துடனும், விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்தால் நம் வாழ்க்கையும் அந்த மோனலிசாவின் புன்னகையைப் போல் இனியதாக அமையும். அந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜோசப் லிஸ்டர் (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை) - வரலாற்று நாயகர்!

'மரண பயம்' என்பது, ஒன்று சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளுக்கு ஏற்படும் அல்லது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். ஆனால் சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கூட மரண பயம் ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போதெல்லாம் 'உறுப்பு மாற்று' அறுவை சிகிச்சைகளைகூட சர்வ சாதரணமாக செய்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் சாதரண அறுவை சிகிச்சை தேவைப் பட்டவர்கள்கூட உயில் எழுதி வைத்து விட்டுதான் சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு இறந்து விடுவோம் என்ற 'மரண பயம்' அனைவரையும் வதைத்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவரில் 50 விழுக்காட்டினர் ஒருசில நாட்களில் இறந்து விடுவது சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. அவர்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளில் 'செப்ட்டிக் பாய்சனிங்' என்ற விஷம் ஏற்பட்டு அது உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்தது என்பது இப்போது நமக்கு தெரியும் உண்மை. ஆனால் அப்போது அதனை அறிந்துகொள்ளாத மருத்துவ உலகம் என்ன செய்வதென்று அறியாது திகைத்தது. பல மருத்துவர்கள் வேறு வழியில்லை என்று சொல்லி சிகிச்சைகளை தொடர்ந்தனர். ஆனால் ஒரு மருத்துவர் மட்டும் அந்த மரணங்களை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்று விரும்பினார். தடுக்க முடியும் என்று நம்பினார். அந்த தனி ஒரு மனிதனின் வைராக்கியமும், விடாமுயற்சியும், மனித உயிர்களை காப்பதுதான் மருத்துவர்களின் கடமை என்ற திடமான நம்பிக்கையும் தான் அவருக்கு 'நவீன அறுவை சிகிச்சையின் தந்தை' என்ற பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜோசப் லிஸ்டர்.



இங்கிலாந்தின் எசக்ஸ் (Essex) மாநிலத்தில் அப்டான் (Upton) எனும் நகரில் 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார் ஜோசப் லிஸ்டர். சிறு வயதிலிருந்தே பிறரின் வேதனைகளைக் கண்டு இரங்கும் குணம் அவருக்கு இருந்தது. நோயினால் அவதியுறுவோரின் வேதனைகளை கேட்டும், சில சமயங்களில் நேரடியாக பார்த்தும் தான் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக வர வேண்டும் என்ற எண்ணத்தை சிறு வயதிலிருந்தே அவர் வளர்த்துக்கொண்டார். அதுவும் சாதாரண மருத்துவராக இல்லாமல் உயிருக்கு உத்தரவாதம் தரும் மருத்துவராக வர வேண்டும் என்று கனவு கண்டார். பல வரலாற்று நாயகர்களைப் போலவே இவரது கனவையும் நனவாக்கிக் காட்டியது வரலாறு.

மருத்துவ படிப்பை முடித்ததும் தான் விரும்பிய அறுவை சிகிச்சைத் துறையிலேயே சிறப்புத் தேர்ச்சி பெற்றார் லிஸ்டர். அப்போது புகழ் பெற்றிருந்த ஜேம்ஸ் சிமி (James Syme) என்ற அறுவை சிகிச்சை நிபுனரிடம் உதவியாளராக சேர்ந்தார். பிந்நாளில் அவரது மகள் ஏக்னஸையே திருமணம் செய்து கொண்டார். மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அவரது போராட்டத்தில் மிகப்பெரிய பலமாக இருந்தவர் அவரது மனைவி ஏக்னஸ். 30 வயதானபோது கிளாஸ்கோ மருத்துவமணையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக அவருக்குப் பணி கிடைத்தது. அறுவை சிகிச்சை நோயாளிகளின் மரண விகிதத்தை எப்படி குறைப்பது என்பதே அவருடைய அன்றாட சிந்தனையாக இருந்தது. தான் அறுவை சிகிச்சை செய்த ஒரு நோயாளி இறந்து போனால் அது தன்னுடைய தோல்வி என்று கருதினார்.



1865-ஆம் ஆண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் லூயி பாஸ்டரின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு லிஸ்டருக்கு கிடைத்தது. பொருட்களை புளிக்கச் செய்யும் உயிருள்ள கிருமிகள் காற்றில் இருக்கின்றன என்றும், அந்தக் கிருமிகளால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்றும் பாஸ்டர் கூறியிருந்தார். அப்படியென்றால் பொருட்களை அழுகச் செய்யும் கிருமிகளை அழிப்பதற்கான விஷ முறிவு மருந்தை அதாவது ஆண்டி-செப்ட்டிக் (Antiseptic) மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று உணர்ந்தார் லிஸ்டர். அப்போதிலிருந்து விஷ முறிவு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கடுமையாக் ஈடுபட்டார். அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும் கார்பானிக் அமிலம் கலந்த கிரியோஸோட் (creosote) என்ற ஒரு திரவத்தை வாங்கினார். அந்த திரவத்தை ஒரு நோயாளி மீது பயன்படுத்திப் பார்த்தார். அந்த நோயாளி இறந்து போகவே மனமுடைந்து போனார் லிஸ்டர்.



ஆனால் அவரது மனைவி ஏக்னஸ் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஊக்கமூட்டினார். தோல்வியடைந்த ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் அதே மருந்தை பயன்படுத்திப் பார்க்க விரும்பினார். கால் எலும்பு முறிந்த ஒரு பதினொரு வயது பையன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். கணவனை இழந்த தன் தாய்க்கும், மற்ற தனது சகோதரர்களுக்கும் நாந்தான் சோறு போட வேண்டும் என்பதால் தன்னை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு லிஸ்டரிடம் முறையிட்டான் அந்தப் பையன். கார்பாலிக் அமிலத்தில் நனைத்த துணியைக் கொண்டு காயத்தில் கட்டுப்போட்டார் லிஸ்டர். நான்காவது நாள் கட்டைப் பிரித்துப் பார்த்தபோது அவர் வியந்து போனார். காயம் சீழ்பிடிக்க வில்லை மாறாக குணமடையத் தொடங்கியிருந்தது. மகிழ்ந்து போனார் லிஸ்டர்.

ரணங்கள் அழுகி விஷமடைவதை தடுக்க முடியும் என்று அவர் நிருபித்துக் காட்டியதை ஏனோ மருத்துவ உலகம் அப்போது ஆர்வமின்றி வரவேற்றது. ஆனால் பாராட்டையெல்லாம் எதிர்பார்க்காத அவர் நோயாளிகளின் உயிரைக் காக்க தன் ஆராய்ச்சிகளையும், மருத்துவமணையில் மாற்றங்களையும் தொடர்ந்தார். அறுவை சிகிச்சை அறையிலும், வார்டிலும் கார்பானிக் அமிலத்தைப் பயன்படுத்திக் காற்றை தூய்மைப்படுத்தினர். மருத்துவ கருவிகள் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவமணையில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த வார்டில் மரண விகிதம் குறையத் தொடங்கியது. அப்போதுகூட மருத்துவ உலகம் அவரை பாராட்டாமல் கேலி செய்தது. ஆனால் அவரால் உயிர் பிழைத்தவர்கள் அவரை தெய்வமாக போற்றினர்.



சில ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் (King's College London) பேராசிரியராக சேர்ந்தார் லிஸ்டர். அங்கும் மாணவர்கள் அவரை கேலி செய்தனர். அவரை பார்க்கும் போதெல்லாம் கிருமி வருகிறது என்று நகைத்தனர். மருத்துவ சஞ்சிகைகள் சிலர் அவரை 'பொய்யர்' என்றனர். ஆனால் சாதனையாளர்கள் மனம் தளர்ந்ததாக வரலாறு இல்லையே. 1877-ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய அப்போதைய புகழ்பெற்ற மருத்துவர் ஜான் ஹண்டர் (John Hunter) மறுத்து விட்டார். லிஸ்டரின் மருத்துவ முறைகளை கேலி செய்தவர்களில் அவரும் ஒருவர். அவர் செய்ய மறுத்த அறுவை சிகிச்சையை தான் செய்வதாக கூறி வெற்றிகரமாக அதனை செய்தும் காட்டினார் லிஸ்டர். அதிலிருந்து மனம் மாறினார் ஜான் ஹண்டர். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த இரு மருத்துவர்களும் இணைந்து பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அவரது சிகிச்சை முறையை உலகம் ஏற்றுக்கொண்ட பிறகு முப்பது ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார் லிஸ்டர். மருத்துவ உலகிலயே அவருக்குதான் 'ஆர்டர் ஆஃப் த மெரிட்' (Order of Merit) என்ற பட்டம் முதன் முதலாக வழங்கப்பட்டது. உலக நோயாளிகளுக்கு மரண பயத்தைப் போக்கிய ஜோசப் லிஸ்டர் 1912-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள் தனது 84- ஆவது வயதில் காலமானார். மிகுந்த மதப்பற்று கொண்டிருந்த லிஸ்டருக்கு சமூக வெற்றியோ பணம் சம்பாதிப்பதோ ஒரு பொருட்டாக இல்லை. மனுகுலம் மேன்மை பெற வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.



அடுத்த முறை உங்களில் யாராவது அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் ஜோசப் லிஸ்டருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள். மருத்துவ உலகில் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தில் ஜோசப் லிஸ்டர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு அளவிட முடியாதது. அப்படிப்பட்ட மருத்துவ முறையை கண்டுபிடித்த போதும் அவருக்கு ஏற்பட்ட கேலி கிண்டல்கள், அவமானங்களை தாண்டியும், நமது உயிருக்கு உத்தரவாதம் தர அவருக்கு உதவிய பண்புகள்....உயரிய சிந்தனை, தோல்விகளை கண்டு துவளாத மனோதிடம், தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைய விடாமுயற்சியுடன் இறுதிவரை போராடும் தைரியம். ஜோசப் லிஸ்டரைப் போல் நாம் வகுத்துக்கொண்ட இலக்கில் எத்தனை தடைகள் வந்தாலும் இறுதிவரை விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாற்று நாயகர்!

1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி பாதியாக குறைந்திருந்தது. பண்ணைகளும், வியாபாரங்களும் நொடித்துப் போயிருந்தன. மில்லியன் கணக்காணோர் வறுமைகோட்டைத் தாண்டி பசிகொடுமைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டு மில்லியன் பேர் தங்க வீடின்றி தெருக்களில் அலைந்தனர். வங்கி முறை கிட்டதட்ட செயலிழந்து போனது. நாட்டின் எதிர்காலத்திற்கு அஞ்சி பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை மீட்டுக்கொள்ள வங்கிகளுக்குப் படையெடுத்தனர். களேபரத்துக்கு அஞ்சி அமெரிக்காவின் அப்போதைய 48 மாநிலங்களில் 38 மாநிலங்கள் தங்கள் வங்கிகளை மூட உத்தரவிட்டன.

அதே தினம் வாஷிங்டெனில் அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பிறகு தங்களுடைய புதிய அதிபர் என்ன சொல்லப் போகிறார் என்று அந்த தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. நம்பிக்கையிழந்திருந்த தேசத்தை நோக்கி அவர் கூறிய வார்த்தைகள்..... "The only thing we have to fear is fear itself" 'அச்சம் என்ற உணர்வுக்குதான் நாம் அச்சப்பட வேண்டும்' என்ற மந்திர வார்த்தைகளை கூறி அடுத்த ஆறே ஆண்டுகளில் அமெரிக்காவை வழக்கு நிலைக்குக் கொண்டு வந்த அந்த மாபெரும் வரலாற்று நாயகரின் பெயர் பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt). அமெரிக்கா வரலாற்றிலேயே ஆகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிபரானவர் அவர். தனது 51-ஆவது வயதில் கிட்டதட்ட ஐந்து மில்லியன் வாக்குப் பெரும்பான்மையில் அமெரிக்காவின் 32-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூஸ்வெல்ட்க்கு வானம் வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.



1882-ஆம் ஆண்டு சனவரி 30-ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க் எனும் இடத்தில் பிறந்தார் ரூஸ்வெல்ட் அவரது பெற்றோர் செல்வந்தர்களாக இருந்தனர். அதனால் அமெரிக்காவின் மிகச்சிறந்த பள்ளிகளில் ஒன்றான க்ராட்டன் (Groton School) பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். பின்னர் ஹார்வர்ட் (Harvard College) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொலம்பியா சட்டப் பள்ளியில் சட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 1907-ஆம் ஆண்டு 25 வயதானபோது அவர் நியூயார்க்கில் வழக்கறிஞராக பணியாற்றத்தொடங்கினார் அதுவரை அவருக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டதில்லை. 1905-ஆம் ஆண்டு தன் உறவுக்கார பெண்ணான Eleanor-ஐ மணந்துகொண்டு ஆறு பிள்ளைகளுக்கு தந்தையானார். 1910-ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தின் டெமோக்ராடிக் (Democratic) கட்சி சார்பில் செனட் சபைக்கு போட்டியிடுமாறு அழைக்கப்பட்டார் ரூல்வெல்ட். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1912-ஆம் ஆண்டு வுட்ரோ வில்சன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை ஆதரித்த ரூஸ்வெல்ட் அரசியலில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். வில்சன் அரசாங்கத்தில் கடற்படையில் உதவி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் கடற்படையை நவீனமயமாக்கினார் ரூஸ்வெல்ட். ஆண்டுதோறும் பல கடற்படை வீரர்கள் கடலில் மூழ்கி மாண்டதை உணர்ந்த அவர் கடற்படையில் சேர விரும்புவோருக்கு நீச்சலை கட்டாயமாக்கினார். 1917-ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் அமெரிக்கா நுழைந்தபோது அதன் கடற்படை மிகச்சிறந்த நிலையில் இருந்ததற்கு ரூஸ்வெல்ட்டே காரணம். அதுவரை ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கையில் எல்லாமே சுமூகமாக நடைபெற்று வந்தது. ஆனால் 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டது.



தன் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் 'கேம்பபெல்லோ' (Campobello Island) என்ற தீவில் விடுமுறைக்கு சென்றிருந்தார் ரூஸ்வெல்ட். அங்கே கடும் குளிராக இருந்த ஃபண்டி கடற்கரையில் நீந்திவிட்டு வந்தவரை 'ஃபோலியோ மைலிட்டிஸ்' எனப்படும் ஒருவகையான முடக்குவாதம் தாக்கியது. ஒரு மாத காலம் வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்ட அவருக்கு இடுப்புக்குக் கீழ் உடல் செயலிழந்தது. அப்போது அவருக்கு வயது முப்பத்தொன்பதுதான். உடலில் பாதி செயலிழந்து போனாலும் அதனை ஒரு தோல்வியாக எண்ணவில்லை ரூஸ்வெல்ட். மனைவி Eleanor-ன் துணையுடன் போராடத் துணிந்தார். ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த Warm Springs என்ற இடத்திலிருந்த சூடான நீருற்று வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு குணமளிப்பதாக ஒரு நண்பர் கூறவே அங்கு சென்றார் ரூஸ்வெல்ட். அந்த நீருற்றில் நீந்திய பிறகு கால்களில் வலிமை ஏற்படுவதாக உணர்ந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தன் கால்களின் செயல்பாட்டைத் திரும்பப் பெற தொடங்கினார். ஏழே ஆண்டுகளில் அவர் திரும்பவும் வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கினார். அவரால் சொந்தமாக கார் ஓட்டவும் முடிந்தது. இரும்பு போன்ற அவரது மனவலிமைதான் அத்தனையையும் சாத்தியமாக்கியது. 1928 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் நியூயார்க்கின் ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார் ரூஸ்வெல்ட். அவரது திறமையை உணர்ந்த டெமோக்ராட்டிக் (Democratic) கட்சி 1932-ஆம் ஆண்டு தங்களின் அதிபரின் வேட்பாளாராக அவரை முன்மொழிந்தது. அந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில்தான் ஐந்து மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 32-ஆவது அதிபரானார் ரூஸ்வெல்ட். 1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி பதவியேற்ற போதுதான் அவர் "The only thing we have to fear is fear itself" என்று கூறி அமெரிக்கர்களுக்கு தைரியமூட்டினார்.



பதவியேற்றதும் உடனடியாக செயலிலும் இறங்கினார். வங்கி பிரச்சினையைத் தீர்க்கவும், மக்களின் பதற்றத்தை தனிக்கவும் மார்ச் 6-ஆம் தேதியை வங்கி விடுமுறை (Bank Holiday) என்று அறிவித்தார். பதவியில் இருந்த முதல் நூறு நாட்களிலேயே வங்கி சீர்திருத்தங்களை அறிவித்து பொதுமக்களிடையே வங்கிகளின் மீது நம்பிக்கையை விதைத்தார். சாலைகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற பல அரசாங்க பொதுப் பணிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். பொதுப்பணி நிர்வாகம் தேசிய மீட்பு நிர்வாகம் என பல அரசாங்க பணிக் குழுக்களை உருவாக்கி அமெரிக்க பொருளியலை முன் எப்போதும் இல்லாத உந்து சக்தியுடன் முன்னோக்கிச் செலுத்தினார். அவரது மிகச்சிறந்த சில பண்புகளை அந்தக்கால கட்டத்தில் உலகம் பார்த்து வியந்தது.

எந்த திட்டத்தை செயல்படுத்திய போதும் தவறுகள் செய்துவிடுவோமோ என்று அவர் அஞ்சியதே கிடையாது. அப்படியே தவறுகள் நிகழ்ந்த போதும் தனது முடிவுகளை உடனடியாக மாற்றிக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. அவரது கம்பீரமான ஆட்சியால் 1936-ஆம் ஆண்டு மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இரண்டாவது தவனைக்கு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும், 1944-ஆம் ஆண்டு நான்காவது முறையாகவும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரூஸ்வெல்ட். அமெரிக்க அதிபர் வரலாற்றில் இரண்டு தவனைக்கு மேல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். கிட்டதட்ட பதின்மூன்று ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்து அந்த தேசத்தை வழி நடத்திய ரூஸ்வெல்ட் 1945-ஆம் ஆண்டு ஏப்ரம் 12-ஆம் நாள் தனது 63-ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.



அமெரிக்கா இதுவரை சந்தித்திருக்கும் அதிபர்களில் மூவர் தலைசிறந்தவர்கள் என்று கூறுகின்றனர் வரலாற்று நிபுனர்கள். அந்த மூவர் ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டென், ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்ட். மிகச்சிறந்த ஒரு தலைவனுக்காக ஒரு தேசம் ஏங்கிய அந்த இருட்டு நிமிடங்களில் அஞ்சாமல் தலைமைப் பொறுப்பை ஏற்று அந்த தேசத்திற்கு சுய மரியாதையையும், வளப்பத்தையும் ஏற்படுத்தித் தந்த அதிபர் என்று ரூஸ்வெல்ட்டை உலக வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை அவருக்கு தந்து கெளரவித்துள்ளது டைம் சஞ்சிகை.

முடக்குவாதம் வந்தபோது முடங்கி போயிருக்க வேண்டிய ஒருவர் உலகின் ஆகப்பெரிய வல்லரசு நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் அதனை கம்பீரமாக வழிநடத்தியதால் வரலாற்றில் இடம்பிடித்தார். ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான். தடைகளை கண்டு தயங்காதோருக்கும், முடக்கு பிணிகளுக்கு முடங்காதோருக்கும், அச்சங்களை துச்சமாக எண்ணித் துணிவோருக்கும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு முன்னோக்கி செல்வோருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் அந்த உண்மை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.



ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி 'முதல் பேரரசர்' என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.

அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.



இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.

வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao  மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.



சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.



பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நமக்கும் எந்த அதிசய வானமும் வசப்படும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மையாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மைக்கலாஞ்சலோ - வரலாற்று நாயகர்!

இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரை நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற கலைஞனாக வருணிக்கிறது வரலாறு. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதைக்கலை ஆகிய நான்கு துறைகளுக்கு அவர் புத்துயிர் ஊட்டியதால்தான் அந்த வர்ணனை. அவர் வேறு யாருமல்ல  'Renaissance' எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்
காலத்தில் ஓவியத்திற்கும், சிற்பத்திற்கும் உண்மையான மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த மாபெரும் கலைஞன் மைக்கலாஞ்சலோ.



மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி 1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியின் Caprese என்ற நகரில் பிறந்தார். அவர் பிறந்த சமயம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. மைக்கலாஞ்சலோ சிறு வயதாக இருந்தபோது ஒரு கல்வெட்டியின் வீட்டில் அவரது கண்கானிப்பில் விடப்பட்டார். அப்போதிருந்தே உளியையும், சுத்தியலையும் கையாளத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. சிறுவயதிலிருந்தே அவருக்கு ஓவியத்தின் மீது அலாதி பிரியம் இருந்தது. தந்தையும், மாமன்களும் அவரது கவனத்தை திசை திருப்ப முயன்று தோற்றுப் போயினர்.

ஓவியக்கலையைக் கற்றுகொள்ள அவர் அப்போது புகழ்பெற்றிருந்த 'Domenico Ghirlandaio' என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். மைக்கலாஞ்சலோவின் திறமையைப் பார்த்து அந்த ஆசிரியரே பொறாமைப்பட்டதாக ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது. மீன் சந்தைக்கு அடிக்கடி சென்று மீன்களின் கண்கள், செவுல்கள் ஆகியவற்றை கூர்ந்து கவனித்து பின்னர் அவற்றை தத்ரூபமாக வரைவாராம் மைக்கலாஞ்சலோ. பின்னர் 'Lorenzo de' Medici' என்பவரிடம் சிற்பக்கலையை கற்றுக்கொள்ள விரும்பினார் மைக்கலாஞ்சலோ.

ஒருமுறை பளிங்கு கல்லில் ஒரு முதியவர் சிரிப்பதைப்போன்ற சிற்பத்தை வடித்து அதற்கு மெருகேற்றிக்கொண்டிருந்தார் மைக்கலாஞ்சலோ. அதனைப் பார்த்த லொரான்ஸோ கிண்டலாக முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கின்றனவே என்று கேட்க சற்றும் தயங்காமல் உளியையும், சுத்தியலையும் எடுத்து மேல் வரிசையில் இருந்த பல்லை ஒருசில நிமிடங்களில் உடைத்தெடுத்தாராம். அந்த லாவகத்தைக் கண்டு அதிசயித்துப்போன லொரான்ஸோ மைக்கலாஞ்சலோவின் தந்தையின் அனுமதி பெற்று அவரை தன் சொந்த வீட்டிலேயே வைத்துக்கொண்டார். 1492-ஆம் ஆண்டு லொரான்ஸோ இறக்கும் வரை அவர்கூடவே இருந்து தனது சிற்பக்கலையை வளர்த்துக்கொண்டார் மைக்கலாஞ்சலோ.

Lorenzo di Pierfrancesco de' Medici என்ற அழகிய பெண்ணை காதலிக்கத் தொடங்கியபோதுதான் அவருக்குள் இருந்த கவிதை ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவர் பல கவிதைகளை இயற்றினார். 1495-ஆம் ஆண்டில் அவர் 'Sleeping Cupid' என்ற உறங்கும் காமதேவன் சிலையை செதுக்கினார். நான்கு ஆண்டுகள் கழித்து அவர் உருவாக்கிய 'Pieta' சிற்பம் இன்றும் 'Vatican' தேவாலாயத்தை அலங்கரிக்கின்றன. மைக்கலாஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்த்த சிற்பம் டேவிட் சிலை. ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லிருந்து அவர் வார்த்தெடுத்த அற்புத சிற்பம்தான் அந்த டேவிட் சிலை. அந்த சிலையை உருவாக்க அவருக்கு பதினெட்டு மாதங்கள் தேவைப்பட்டன.



1508-ஆம் ஆண்டு அவரது புகழை உலகமெங்கும் பரவச் செய்யப்போகும் ஓர் அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட கட்டளை என்று சொல்லலாம். சிஸ்டீன் தேவாலயம் (Sistine) கட்டப்படத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அப்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜூலியஸ் அந்த தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் பைபிள் காட்சிகளை ஓவியங்களாக தீட்டித்தருமாறு மைக்கலாஞ்சலோவைப் பணித்தார். தான் ஓவியன் அல்ல வெறும் சி்ற்பிதான் என்று மைக்கலாஞ்சலோ எவ்வுளவோ எடுத்துக்கூறியும் போப் நிர்ப்பந்தித்ததால் மிகுந்த தயக்கத்தோடுதான் அவர் அந்த பணியை தொடங்கியதாக வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

ஓவியங்கள் வரைய வேண்டிய பரப்பளவு சுமார் பத்தாயிரம் சதுர அடி. ஐந்து உதைவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பணியைத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. ஆனால் அவரது முன்கோபத்தை தாளாத உதவியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விலக தனி மனிதனாக தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. தாமஸ் ஆல்வா எடிசன் அப்போது இல்லை என்பதால் மின் விளக்குகளும் கிடையாது. வெறும் மெழுகுவர்த்தியின் ஒளியில் உணவு, உறக்கம் மறந்து தனது அதீத ஓவியங்களை தேவாலயத்தின் மிக உயரமான உட்கூரைகளில் தீட்டினார் மைக்கலாஞ்சலோ. பல ஓவியங்களை அவர் படுத்துக்கொண்டே தீட்டியதால் தூரிகையிலிருந்து சிதறிய வண்ணங்கள் அவரது கண்களை பதம் பார்த்தன.



ஓவியங்கள் தீட்டும்போது இதுபோன்ற சில இடையூறுகள் ஏற்பட்டாலும் எந்த சிரமமும் பார்க்காமல் இரவு பகலாக உழைத்து நான்கு ஆண்டுகளில் தனது ஓவிய உற்சவத்தை நிறைவு செய்தார் மைக்கலாஞ்சலோ. இன்று தங்களை சிறந்த ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் எவரும் முதலில் தரிசிக்க வேண்டிய காட்சிக்கூடமாக திகழ்கிறது சிஸ்டீன் தேவாலாயம். மைக்கலாஞ்சலோ வரைந்த 'ஆதாமின் பிறப்பு' என்ற ஓவியம் உலக ஓவியர்கள் இன்றும் பார்த்தும் வியக்கும் ஓர் அற்புத காவியம். இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின் விரலைத் தீண்ட ஆதாம் உயிர் பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தில் ஆதாமுக்கே அடையாளம் தந்திருக்கிறார் மைக்கலாஞ்சலோ.

அதேபோன்ற சுமார் 340 ஓவியங்களை சிஸ்டீன் (Sistine) தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் வடித்து தனது தூரிகையால் ஒரு ஓவிய ராஜாங்கத்தையே நடத்தி முடித்தார் மைக்கலாஞ்சலோ. அவருக்கு 60 வயதானபோது மைக்கலாஞ்சலோவை வத்திகனின் அரசவை கட்டடக்கலை நிபுனராகவும், சிற்பியாகவும் ஓவியராகவும் நியமித்தார் மூன்றாம் போப். அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட மைக்கலாஞ்சலோவின் தூரிகை அடுத்த ஏழு ஆண்டுகளில் தீட்டிக்கொடுத்த ஓர் அற்புத ஓவியம்தான் The Last Judgment. அவருடைய நெருங்கிய நண்பரான Ascanio Condivi மைக்கலாஞ்சலோவை வருணிக்கும்போது இவ்வாறு சொல்கிறார்.

“மைக்கலாஞ்சலோ ஒரு ஓவியத்திலோ அல்லது சிற்பம் செதுக்குவதிலோ ஈடுபட்டால் அவரது கவனத்தை எந்த சக்தியாலும் திசை திருப்ப முடியாது. உணவுகூட அவருக்கு இரண்டாம்பட்சம்தான். பலமுறை உடைகளையும், காலணிகளையும் கழற்றாமலேயே உறங்குவார் வேலை செய்வார். அதனால் சில சமயங்களில் அவர் காலுறையை கழற்றும்போது அவரது தோலும் உரிந்து வரும். தான் செய்யும் வேலையின் மீது அவருக்கு அவ்வுளவு ஈடுபாடு இருந்தது”

திருமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரை தனியாகவே வாழ்ந்த மைக்கலாஞ்சலோவைப் பார்த்து அவரது நண்பர் ஒருமுறை உங்கள் பெயர் சொல்ல உங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்று கவலையோடு கேட்டார். அதற்கு மைக்கலாஞ்சலோ என்ன சொன்னார் தெரியுமா?

"ஓவியமும் சிற்பமும்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி, என்னுடைய படைப்புகள்தான் நான் இந்த உலகிற்கு விட்டு செல்லும் எனது குழந்தைகள் அவற்றுக்கு அவ்வுளவாக மதிப்பு இருக்காது என்றாலும் அவற்றில் நான் என்றென்றும் வாழ்வேன்"



மதிப்பு இருக்காது என்று அவர் விட்டுச்சென்ற படைப்புகள் இன்று விலைமதிக்க முடியாதவை. மைக்கலாஞ்சலோவை போன்றவர்களை சந்திக்கும்போதுதான் வரலாறு நெஞ்சு உயர்த்திக்கொள்ள முடிகிறது. அந்த மாபெரும் கலைஞன் 1564-ஆம் ஆண்டு தனது 89-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டபோது இனி இப்படி ஒரு கலைஞனை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று எண்ணி அந்த வரலாறும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும். அவ்வுளவு திறமைகளையும் வைத்துக்கொண்டு சோம்பித் திரிந்திருந்தால் மைக்கலாஞ்சலோ மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்திருப்பார்.

அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் மிக எளிதான ஒன்றுதான். அவருக்கு வானம் வசப்பட்டதற்கான முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்த பணியில் காட்டிய ஈடுபாடு, விடாமுயற்சி, பயபக்தியுடன் கூடிய கடின உழைப்பும்தான். மைக்கலாஞ்சலோவைப்போல் நாம் ஊண் உறக்கம் மறந்து காரியங்களில் ஈடுபடத் தேவையில்லை. நாம் செய்யும் எந்த ஒரு வேலையிலும் நூறு சதவீத ஈடுபாடும், விடாமுயற்சியுன் கூடிய கடின உழைப்பும் இருந்தால் போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.