FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 07, 2012, 04:22:23 PM

Title: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:22:23 PM
மதுரைக் கண்ணங் கூத்தனார்
இயற்றிய

கார் நாற்பது



1 பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.2



(ப-ரை) பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார்போல் மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் - இந்திரவில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் விழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவேம் என்று சொல்லிப் போன தலைவர், வானம் - மேகமானது, கரு இருந்து கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ? (வருவார்) என்றவாறு.

பொருகடல் : வினைத்தொகை, புனைதார் என்க. திரு. - அழகு, விரும்பப்படுந்தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு; ‘திருவிற் கோலி' என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு : ‘விலங்ககன்ற வியன்மார்ப' என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது நீலநிறமுடைய வானின்கண் பன்னிறமுடையத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிறமலர்த் தாரினைப் போலும் என்க. தாழ : நிகழ்காலவினையெச்சம். வருதும் : தனித் தன்மைப் பன்மை வருவர் என்பது குறிப்பாற் போந்தது.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:23:29 PM
2 கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.



(ப-ரை) கொடுங்குழாய் - வளைந்த குழையையுடையாய், கடுங்கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு - நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியையுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து அவரது தூதாய் அறிவித்து, மின்னும் - மின்னாநின்றது, எ-று.

கடுங்கதிர் : அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்துவதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப்படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் : ஆகுபெயர் முதலடியிற் பொருள்முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங்குழை காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:26:29 PM
பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது
ஆற்றாமை தோன்ற உரைத்தது


3.வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து.



(ப-ரை) வரிநிறப் பாதிரி வாட -வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளி போழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப் பட்டு, அயிர்மணல் - இளமணலையுடைய, தண் புறவின் -குளிர்ந்த காட்டிண்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடி வானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தனித்திருக்கும் ஒருத்திமாட்டு (அவளை வருத்துவான்வேண்டி), இழிய - மழைபெய்ய எழும் - எழா நின்றது, எ-று.

பாதிரி : ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமை யோர்க, ‘புன்காற் பாதிரி வரிநிறத்திரள்வீ' என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல் ; ‘வளியிடை', ‘போழப்படா அமுயக்கு' என முப்பாலினும் இப்பொருட்டாயது இது. அயிர்மணல் - இளமணல், ஆவது நுண்மணல். ஆலி - நீர் திரண்ட கட்டி, உழிய எனப் பாடங்கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் எனமுடிக்க. நேற்றுமுதல் தனிமையால் வருந்துவாள் எனினும் அமையும் பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினைமுடிவு செய்க.
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:27:55 PM
தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது

4 ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்1 பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.
 


(ப-ரை) ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர்போல மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின்பெற - அழகுபெற, பூத்தன- மலர்ந்தன ; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப் பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப் பருவமானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும், எ-று.

மகளிரின் என்பதில் இன் உவமவுருபு. மஞ்ஞை கார்காலத்திற் களிப்புமிக்கு ஆடுதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் : உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று ; காடுமுதலும் கடுக்கை சினையுமாகலின், வாடும் : காரண காரியப்பொருட்டு.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:30:00 PM
5 இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு.



(ப-ரை) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவை போல - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பரக்குந் தகைமையை உடையவாயின ; (ஆதலால்), இகழுநர் சொல் அஞ்சி இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி ; சென்றார் - பொருள் தேடச்சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை மெய்யாம். எ-று.

தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ்செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல்லஞ்சி' எனப்பட்டது. வடிவானும் தொழிலானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் தறியவை என்றமையால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழவடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியையேற்றது. கோபம் - கார்கலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர்
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:30:54 PM
6 தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்1
சென்றாரை நீடன்மி னென்று.



(ப-ரை) வடு இடை - மாவடுவின் நடுவே. போழ்ந்து - பிளந்தாற்போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களை யுடையாய் கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை - நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடி இட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து வருந்தல் - வருந்தாதே எ.று.

ஆற்றா : எதிர்மறை வினையெச்சமுற்று தொடியிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்' என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்து நின்றது. உவமஉருபு தொக்கத்து. நெடுவிடை - மருவின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின்.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:31:31 PM
7 நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சப் பிலாத புகழ் வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை



(ப-ரை) தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினையுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந்தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச்சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித்தீயைப்போல, எச்சாரும் - எம் மருங்கும், மின்னும் - மின்னாநிற்கும், மழை வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று.

அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை, ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்.... தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங்காதலர்' என்னும் பாலைக்கலியானு மறிக. தற்செய்வான் சென்றார் : பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்' என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் பொச்சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. ‘பொச்சாப் பார்க்கில்லை புகழ்மை' என்பது திருவள்ளுவப் பயன் வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்குப் ஞாபகமாகவும் உள்ளது.

 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:32:14 PM
8 மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்த போற் காயாவும்
நுண்ணரும் பூழ்த்த புறவு.



(ப-ரை) பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப் பெற்ற, புறவு காடுகள், கூறும் - சொல்லாநிற்கும், எ-று.

பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனுமுந் துறத்த, நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப'என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயாமலர் அஞ்சனத் தோய்ந்தாற்போலும் என்பதனை ‘செறியிலைக் காயா அஞ்சன மலர' என்னும் முல்லைப்பாட்டானும் அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறா மலர்' என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க.

 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:32:51 PM
9 கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து. 



(ப-ரை) கண்மலர் போல் பூத்தன - கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளை - கருவிளம் பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகையுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன்கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் கூறா நிற்கும், எ-று.

கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண்போலும் என்பதனைக் கண்ணெனக் ‘கருவிளை மலர' என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூ செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப்பூந் தோன்றி' என்பது பெருங்குறிஞ்சி. ‘தோடார் தோன்றி குருதி பூப்ப' என்றார் பிறரும் உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல்கூறும் என முடிக்க.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 04:33:26 PM
10 வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி தளிர்ப்ப வரும்.
 


(ப-ரை) என் தோழி என் தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறுபாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினையுடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது, எ-று.

வய - வலி; ‘வயவலி யாகும்' என்பது தொல்காப்பியம். ஆன் என்னும்பெயர் எருமைக்குரித்தாதலும், ஒருத்தல் என்னும் பெயர் அதன்
ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்' என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனச்சம் முன்னைய விரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:20:33 PM
11 புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு.



(ப-ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய், கூந்தலையுடையாய், அணர்த்துஎழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர்கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூக்கொத்துக்களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமையின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டு வர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் கூறாநிற்கின்றன, எ-று.

தருபாக்கு : வினையெச்சம் வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:21:34 PM
12 மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்1
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.
 


(ப-ரை) மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண்கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினையுடையாய், நெய் அணி குஞ்சரம்போல எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் ஏரும் - வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது -
மீளவருதல் உண்மை, எ-று.

சாயல் - மென்மை : உரிச்சொல். ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்சியவர் எனக்குறிப்பு வினைப் பெயராக்கலும் ஒன்று. பொய் உள்ளீ டில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது' என்றார் . ஆம் : அசை. இருமை - கருமை பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு' என்பது முல்லைப்பாட்டு.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:22:11 PM
13 ஏந்தெழி லல்குலா யேமார்ந்த1 காதலர்
கூந்தல் வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி
ஒளிறுபு மின்னு மழை.



(ப-ரை) எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகுபோல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை முகில், வேந்தர் களிறு ஏறி - அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளினைப்போல, கண் வௌவி - கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு , மின்னும் - மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ-று.

ஏம் - ஏமம் : கடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்' என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப்படும் மழையின் மின்னுக்கு வாள் உவம மாதலை, ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித் தெறிவாளி னழிப்பன விளங்கு மின்னுடைக் கருவியை யாகி நாளுங் ‘கொன்னே செய்தியோ அரவம் - மழையே' என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வௌவல் - கண் வழுக்குறச் செய்தல். ஒளிறுபு; செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:22:52 PM
14 செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.
 


(ப-ரை) வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளையுடையாய்! முல்லை - முல்லைக்கொடிகள், இலக்கு - விளங்குகின்ற, எயிறு ஈன மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும் - மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற - பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ-று.

வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம் தெளிந்தாம் : உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெயிறீன' என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்' என்பதானும் அறிக.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:23:30 PM
15 திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது.



(ப-ரை) திருந்திழாய் - திருந்திய அணிகளையுடையாய், குருந்தின் - குருந்த மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங்கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறைவிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட வண்டுகள்பாட, இரு தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் -நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ-று.

திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயர் விளியேற்றுத் திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற் பெயர் உறையும் கடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பனகாண்' என்பது மணிமேகலை.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:24:19 PM
16 சுருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கண் கொள.



(ப-ரை) பெருந்தோள் - பெரிய தோளினையுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற - செயலாற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலி வானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் - முழங்காநிற்கும், எ-று.

கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார்காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிற வேற்றுமை. பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும் மெலிவின் பால' என்பது திவாகரம். பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:24:54 PM
17 அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறொடு பௌவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்.



(ப-ரை) பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக் குரல் ஏறொடு பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்பு சவட்டி பாம்புகளை வருத்தி, அறைக்கல் பாறைகற்களையுடைய, இதுவரை மேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து, இருள் கூர்ந்தன்று - இருளைமிக்கது; (ஆதலால்) நுதல் - உனது நெற்றி, பிறைத் தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ-று.

இறுவரை - பக்கமலை. சவட்டி - வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்' எனப் பதிற்றுப்பத்திலும் இச் சொல் இப் பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது. பௌவம் : ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று : கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினைமுற்று. இருள் கூர்ந்தன்று : ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:25:35 PM
18 கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு.


(ப-ரை) கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் காட்டைக் கடந்து சென்ற தலைவர் : வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்தபொழுதே, வானம் - மேகங்கள், நல்இசை - மிக்க ஒலியையுடைய, ஏறோடு - உருமேற்றுடனே, நடுநிற்ப - நடுவு நின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற - (முன்பு) பொலிவிழந்த, காடு - காடுகள், செல்வர் மனம்போல் பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழசைத் தந்தன எ-று.

நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினை முடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும்
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:27:31 PM
வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது ( 18,19 )


19 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.



(ப-ரை) நாஞ்சில் வலவன் - கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை பூங்கொம்பினையும், செங்கால் - செவ்விய தாளினையுமுடைய, மரா அம் - வெண்கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன் கையாள் - முன்னங்கையை யுடையாளின், தோள் - தோள்கள், துணையாவேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று.

நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிறமுடைய னென்பதனையும், கலப்பைப்படையால் வெற்றியுடையனென் பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்' என்னும் புறப்பாட்டானுமறிக. மராஅம் - வெண்கடம்பு; ‘செங்கான் மராஅத்த வாலிணர்' என்னும் திருமுருகாற்றுப் படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன் போலிணர்சேர்ந்த மராஅமும்' எனப் பாலைக் கலியிலும் வெண்டம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய' (ஐங்குறுநூறு) என்புழிக் காண்க. நெடு விடைக்கு முன்புரைத்தாங்குரைத்துக் கொள்க.

 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:28:28 PM
20 வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை.



(ப-ரை) வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன, ஆறும் - வழிகளும், பதம்இனிய ஆயின - செவ்வி யினியவாயின, மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியையுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு உருமேற்றுடனே, செருமன்னர் சேனைபோல் - போர்புரியும் வேந்தரின் சேனைபோல, செல்லும் - செல்லா நிற்கும்; (ஆதலால் நாம் செல்லக்கடவேம்) எ-று.

இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருளதேனும், உருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்' என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி' என்னும் திணை மொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும், முழங்கலும், அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று.

 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:29:36 PM
21 பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து.



(ப-ரை) பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சிமைப் பட்ட, புனை திண் தேர் அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையுமுடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு - கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வா நிற்கும் எ-று.

சின்மொழி - மெல்லிய மொழியுமாம். ‘முள்ளெயிறொக்க வடிவுபட்டு' என்று பொருளுரைத்து, ‘நின்றது' என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப' என்பது வினையெச்சம்.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:30:24 PM
   
22 இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு.



(ப-ரை) இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து - தலையாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினை யுண்ட, கலிமாவும் மனஞ்செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டுதலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இளநலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவாயுடையாரது, ஆக்கம்போல் செல்வம்போல், பூத்தன - பொலிவுற்றன. (எ-று).

இளையர் - சேவகர் ; ஏவலாளர், ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரைகாரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய : செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த
உரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம்.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:31:15 PM
தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது

23 கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை.



(ப-ரை) ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும். கண்திரள் முத்தம் கடுப்ப - இடந்திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும் ஆலி - ஆலங்கட்டிகளும் , புரள - புரளும்வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழைபொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது;(ஆதலால்), ஊடுநிலை பிணங்குந்தன்மை, எவன் கொல் - எற்றுக்கு, எ-று.

கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி அகத்திலும். பிறாண்டுங் ‘கண்டிரண் முத்தம்' என வருதலுங் காண்க. கொல் , ஓ : அசைநிலை தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு.

 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:34:10 PM
வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

 
24 எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
1மெல்லவுந் தோன்றும் 2பெயல்.



(ப-ரை) கல் ஓங்கு கானம் - மலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின் மதம் நாறாநிற்கும் ; கார் வானம் - கரிய வானத்தின்கண். பெயல் - மழை. மெல்லவும் தோன்றும் - மென்மையாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங்கூந்தல் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு, எ-று.

கிடப்ப : வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத்தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார்காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க.

 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 06:35:26 PM
பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது


25 கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு.



(ப-ரை) ஈர்ந்தண் புறவில் - குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல - கரிய தாளினையுடைய வரகினது பொரியைப் போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன - (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) அவர் வாரார் என்று - தலைவர் இனி வரமாட்டாரென்று, அவட்கு - தலைவிக்கு, கூர்ந்த - பசலை மிக்கது, எ-று.

ஈர்ந்தண்: ஒரு பொரு ளிருசொல், தெறுழ்-காட்டகத்ததொரு கொடி கூர்ந்தது என்பதில் ஈறுகெட்டது.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:05:48 PM

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

26 நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.



(ப-ரை) சிலமொழி - சிலவாகிய மொழியினையுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் , நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்திவைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது, எ-று.

கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது; ‘குறுமுயன் மறுநிறங்கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடுநாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம' அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு' எனக் களவழிநாற்பதிலும், ‘துளக்கில் கபாலீச்சுரத் தான்றொல் கார்த்தி கைநாள் ............ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' எனத்ம தேவாரத்திலும் ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' எனச் சிந்தாமணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுள்ளமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத் திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப்பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த - ‘கூர்ந்த' என்புழிப்போல் ஈறுகெட்டது.
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:07:27 PM
ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது


27 முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்1
பள்ளியுட் பாயும் பசப்பு.
 


(ப-ரை) வானம் - மேகம், முருகியம்போல் - குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க - முழங்குதலைச் செய்ய, கானம் - காட்டின்கண், குருகுஇலை பூத்தன - குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி - (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று - நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட - நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு - பசலை நோய், பள்ளியுள் பாயும் - படுக்கை யிடத்தில் பரவும், எ-று.

முருகுஇயம் - குறிஞ்சிப் பறைவிசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள் முழங்கி இரங்க; ஒரு பொருளிருசொல். குருகு - குருக்கத்தி; முருக்கென்பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக்கொள்க ஊடு : முதனிலைத் தொழிற்பெயர். இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:08:49 PM
வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

28 இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்1
பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.



(ப-ரை) இமிழ் இசை - ஒலிக்கும் இசையினையுடைய, வானம் முகில், முழங்க - முழங்குதலைச் செய்ய. குமிழின் பூ - குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் - பொன்னாற் செய்யப் பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு, சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின எ-று.

இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அருநெறியுமாம். கவ்வை - அலர்; ஊரார் கூறும் பழமொழி. அழுங்கல் வருந்துதல்; ஈண்டு இலவாதல்.
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:09:32 PM
29 பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய சுரம்.



(ப-ரை) பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின்கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடாநின்றன; பகைகொண்டல், பகைத்தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் எல்லாத்திசைக் கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும் செவ்வி உடைய - தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் - நாம் செல்லக் கடவேம், எ-று.

பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் : வினைத்தொகை சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தித் தேர்ப்பாகற்குக் கூறியதுமாம்.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:10:18 PM
30 வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநற1
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து. 


(ப-ரை) வரைமல்க - மலைகள் வளம் நிறைய, வானம் சிறப்ப வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரிய பூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை விழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழாநிற்க, ஊதை காற்றானது, பேதை பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து. நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையா நிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைசி செலுத்துவாய்) எ-று.

உறை - நீர்த்துளி : மூன்றன் தொகை ஊதை - குளிர்காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர் வாரா ரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:12:25 PM
வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது


31 கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி.



(ப-ரை) எருமை எழில் ஏறு - எருமையினது எழுச்சியையுடைய ஆண், கார்ச்சேண் இகந்த - மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் - கரையின் பக்கத்திலுள்ள, நீர்ச் சேர்ந்து - நீரையடைந்து, ஏறி - எறியப்பட்ட, பவர் - பூங்கொடிகளை, சூடி - சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் - போரின்கண் மறமிக்க வீரரைப்போல, செம்மாக்கும் செவ்வி - இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு - அழகிய நெற்றியை யுடையாளுக்கு, யாம் செய்குறி - நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்) எ-று.

சேண் - ஆகாயம்; தூரமும் ஆம் எழில் - அழகுமாம். எறி துணித்த எனினும் பொருந்தும். பவர் - கொடி ‘அரிப்பவர்ப் பிரம்பின்' எனக் குறுந்தொகையும், ‘நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து' எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர் - வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கியிருக்கு மாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு தருக்கியிருக்கும் என்க. ‘மள்ளரன்ன தடங்கோட்டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்' (ஐங்குறுநூறு) என்றார் பிறரும் குற்றிய லிகரம் அலகு பெறாதாயிற்று.
 
 
Title: Re: கார் நாற்பது
Post by: Global Angel on July 07, 2012, 07:13:15 PM
32 கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு.



(ப-ரை) கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்புகின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படாமகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள்; கானம் - காட்டின்கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை - பெருந்தகை யாளிடத்து, நன்கு - நன்றாக, பாண் முரலும் - இசைப்பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக்கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ-று.

இப் பாட்டு நன்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாடமோதுவாரு முளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு. ‘கொடுஞ்செலவெழிலி' என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாண்மக்கள் பரிசில் கருதிப் பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின வென்றுரைக்கப்பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது நற்கு : வலித்தல் விகாரம்