Author Topic: அசத்தலான கிச்சன் டிப்ஸ்கள்!  (Read 3723 times)

Offline kanmani

அருமையான வீட்டுக் குறிப்புகள்!



சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.

* பாலோ, பன்னீரோ, எது போட்டாலும், கூடவே வெந்நீர் ஊற்றினால் மேலும் மென்மையாக இருக்கும். வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது கூடவே, சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றிப் பிசைந்தால் சுவை கூடும்.

* பூரி செய்யும்போது சில நேரங்களில், விரிந்து வராமல் போகும். மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு விரிந்து கொடுக்கும். சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக பூரித்து வரும்.

* வீட்டிலேயே 'பனீர்' தயார் செய்யும்போது, எஞ்சி இருக்கும் நீரை சப்பாத்திக்கான மாவு தயாரிக்கப் பயன்படுத்தினால், 'சூப்பர் சாப்ட்' சப்பாத்தி செய்யலாம்.

* உப்பு சேர்க்கப்படாத, 'கார்ன்பிளேக்ஸ்" வாங்கி வைத்துக் கொண்டால், பிரெட் ரவைக்கு பதிலாக பயன்படுத்தலாம். 'கார்ன்பிளேக்'கை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, சப்பாத்தி உருட்டியால், உருட்டி நசுக்கினால், ரவையாகி விடும். கட்லெட் போன்றவற்றுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம்.

* உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டு வைத்தால், உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.

* பச்சை காய்கறிகளை பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் 'பிரெஷ்'ஷாக இருக்கும்.

* மஸ்லின் துணியில் சிறிய அளவில் பைகள் தைத்து வைத்துக் கொண்டால், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்; இலைகள் நிறம் மாறாமல் இருக்கும்.

* பிளாஸ்டிக் கவரில் ஒரே ஒரு துளை இட்டு, பச்சை மிளகாய்களைப் போட்டு பிரிட்ஜில் வைத்தால், மிளகாய், மாதக் கணக்கில் கெடாமல் இருக்கும்.

* உப்பு ஜாடியில் சிறிது அரிசியைப் போட்டு வைத்தாலும், உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.

* மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, சிறு துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டிப்போட்டு வைத்தால் போதும்.

* பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள், விரைப்பாகி விடுவதைத் தவிர்க்க, அவற்றுடன் உருளைக் கிழங்கைப் போட்டு வைப்பது நல்லது.

* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

* இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.

* தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும், அதை சில நிமிடங்கள் தண்­ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

* ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீ ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

* இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.

* முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.

* கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்­ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.

* கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

* வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

* உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

* உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்­ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் தண்­ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.

* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

* பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.

* மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

* கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

* தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.

* தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.

* மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.

* வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.

* காலிப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காளிப்ளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்து விடும்.

* தோசைக்கு, இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை, இட்லி பூவாயிருக்கும்.

* சாதம் மிஞ்சி விட்டால், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும் போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வேக வைக்கலாம்.

* காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும்.

* போளி தட்டும் வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

* கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர் உறையாது. எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது பாத்திரத்தை வைத்தால் தயிர் விரைவில் உறைந்து விடும்.

* தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

* உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.

* கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.

* வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டால் பாகு முற்றாது.

* வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்­ரில் போட்டு உரிக்கவும். கண்ணும் கரிக்காது.


தேன் பாட்டிலில் இரண்டு மிளகை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. நீண்ட நாள் தேன் கெட்டுப்போகாமலிருக்க, இரண்டு அல்லது மூன்று நெல்மணிகளை தேனில் போட்டு வைத்தால் தேன் எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது.

ரவையில் பூச்சி வராமலிருக்க ஆறு அல்லது ஏழு கிராம்புகளை போட்டு வைக்க வேண்டும்.

அரிசியில் சிறிது போரிக் பவுடரை போட்டு வைப்பதன் மூலம் பூச்சி வருவதை தவிர்க்கலாம்.

புதினாவை காய வைத்து, அதை பவுடராக்கி, 10 கிலோ அரிசிக்கு 50 கிராம் பவுடரை போட்டு வைத்தால் புழு, வண்டு வராது. இது பூச்சி வருவதை தடுப்பது மட்டுமின்றி உணவில் சுவையையும் கூட்டும்.

பூண்டை உரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், குளிர்ந்த நீரில் போட்டு ஊற வைத்து, அதன்பின் தோலை உரித்தால் எளிதில் வந்து விடும். அல்லது தனித்தனி பல்லாக எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் நன்றாக வதக்கி விட்டு உரித்தால் சுலபமாக உரிக்கலாம்.

பச்சை நிற காய்கறிகள் நிறம் மாறாமலிருக்க, சமைக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும்.

ஊறுகாயில் பூஞ்சை படர்வதைத் தடுக்க, எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பின் ஊற்ற வேண்டும்.

கேக்கில் முட்டை சேர்த்து செய்யும் போது, முட்டை வாடை அடிக்கும். கேக் மாவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தால் வாடை இருக்காது.


« Last Edit: July 20, 2011, 10:04:30 AM by kanmani »