FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 27, 2020, 11:47:37 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: Forum on June 27, 2020, 11:47:37 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 237
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/237.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: Ninja on June 28, 2020, 09:36:25 AM
கலவையான மனநிலையோடு
கடைசிப் பரிட்சையை முடித்திருந்தோம்
நிகழ்ந்து முடிந்த மகிழ்ச்சியான கனவொன்றின்
நினைவலைகளோடு மிதந்திருந்தோம்.
நாம் சிறகுகள் விரித்து பறந்திருந்தோம்
கவலைகள் மறந்து  களித்திருந்தோம்
பேதமின்றி கைகோர்த்து இணைந்திருந்தோம்.

நினைவுகளை நிழலாக்கி,
நிழல் தந்த மரங்களை அணைத்திருந்தோம்
விடைகளை சரிபார்த்துக்கொள்ளும் பதற்றங்களின்றி
விடுமுறையை எண்ணி மகிழ்ந்திருந்தோம்.

விடைத்தாள்களுக்குள் உறங்க சென்றிருக்கும் பதில்களுக்கு
மட்டுமே தெரியும்,
ஆசிரியருக்கு தெரியாமல்
நண்பனுக்கு நாம் சொல்லிக் கொடுத்த விடைகளும்
களவாக நாம் கேட்டு வாங்கிய விடைகளும்

ஸ்கேல் கொடு, ரப்பர் கொடு
என அக்கம்பக்கம் கேட்டு வாங்கி
ஆசரியரிடம் சமாளித்து,
கடைசி ஐந்து நிமிடத்திற்குள்
அவசர அவசரமாக தாளினில்
மையை தெளிக்கும் பேனாக்களுக்கு
சிறிது ஓய்வை கொடுப்போம்

தேர்வை முடித்துட்டு அரக்கப் பறக்க
விடைகளை சரிபார்த்து
தெரிந்தே தவறாக எழுதிய விடைகளுக்கும்
தவறுதலாய் தவறவிட்ட விடைகளுக்குமாய்
மதிப்பெண்களை கூட்டிக் கழித்து
ஆசிரியருக்கு முன்னே
சுய மதீப்பீடுகளை செய்து கொண்டோம்

விடுமுறை தினங்களுக்காக கொண்டாட்டங்களை
பட்டியலிட்டுக் கொண்டு,
பாட்டி வீடுகளின் அழகை பெருமிதத்தோடு அளந்துகொண்டு,
வேறு யாருடனும் கூட்டு சேர மாட்டேன்
என உறுதிகள் கூறி
நீலம் பூசிக்கொண்டது
வெள்ளை சட்டைகள் பேனா மையினால்

பழைய வகுப்புகளுக்கு கையசைத்து
பழகிய மேசைகளுக்கு பிரியாவிடை கொடுத்து,
பழையதெல்லாம் இனி கழிந்ததென
உற்சாகமாய்
புதிய வகுப்புகளும் புது நண்பர்களும்
புதிய வருடமுமாய் இணைந்திருப்போம்
இந்த விரல்களில் மீண்டும்
பேனா மை கசிய காத்திருப்போம்
அதுவரை
இந்த நினைவுகள் கொண்டே
நாம் களித்திருப்போம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: TiNu on June 28, 2020, 05:58:33 PM


நாளை இறுதி தேர்வு..
மாலை முதலே தொடங்கிவிடும்
தோழியர்களுடன் சந்தோச
ஆட்டம் பாட்டம் எல்லாம்
இன்று இரவே தூங்கா இரவாகும். 

தோழியரை பிரியும் எண்ணங்கள் கூட இல்லாது..
வீட்டின் நினைவுகளே நிறைந்திருக்கும்..
பாட புத்தகத்தில் அம்மாவின் முகம் தெரியும்.
ஒவ்வொரு வரிகளிலும் வீட்டில் வளர்க்கும்
செல்ல பிராணிகள் ஓடும்.

படிப்பு நேரம் கரைந்து கொண்டு இருக்கும்.. ஆனாலும் 
மனம் ஏனோ நாளை மாலை பொழுதையே
தேடி தேடி ஓடி பறக்கும்.
நாளை நமை வீட்டுக்கு அழைத்து
செல்ல யார் வருவார் என்று..

படிப்பு நேரம் முடிந்த உடனே 
இரவோடு இரவாக.. நாளை மனை செல்ல
எல்லா ஆயத்தமும்  நடக்கும்

உடுப்புகள் எல்லாம் பெட்டிக்குள் போகும்.
என் புத்தகங்கள் இளையவர்களுக்கு  போகும்
அக்காவிடம் இருந்து அடுத்தாண்டு
புத்தகங்கள் வாங்கி அடுக்கி கொள்வேன்..
இப்படியே விடிந்து விடும் இரவுகள்..

பொழுது விடிந்ததும் புரிந்தது..
படிக்காமல் விட்ட கேள்விகள்..
அரக்க பறக்க புத்தகத்தை புரட்டி படித்து..
தேர்விடம் போய் வினா தாள் பார்த்தால்..
எல்லாம் எங்கோ பார்த்த நியாபகங்கள்

என்ன விடைகள் எழுதினோம் என்று கூட தெரியாமல்
விடை தாள்கள் எல்லாம் நிரப்பி நிமிர்ந்தால் கூட
தேர்வு நேரம் முடியவில்லை..

எழுதியதை கூட திருப்பி பார்க்க மனமின்றி..
தோழியர்கள் முகம் பார்த்து பார்த்து சிரித்தே..
நேரங்கள் கடத்தினேன்....

ஒரு வழியாக தேர்வறை விட்டு வெளியே
துள்ளி குதித்து .ஓடி வந்த அந்நிமிடங்கள்.. .
அப்பப்பா வார்த்தைக்குள் அடங்காத சந்தோசம் ..

வினாத்தாளை  சிறு சிறு துண்டுகளை கிழித்து...
ஒன்றன் பின்  ஒன்றுக்காக தேர்வறையில் இருந்து
பறக்க விட்டு கொண்டே சிற்றுண்டி கூடம்
சென்று தோழியருடன் மனம் நிறைந்த மகிழ்வுடன்
நினைத்ததை எல்லாம் உண்டு..  நிமிரும் நிமிடங்களில்
மின்னலென வெட்டி போகும் ஒரு கேள்வி..
நாம் அடுத்த வருடம் சந்திப்போமா?

தூரத்தில் நம்மை அழைத்து செல்ல வரும்
நபர் பார்த்து சந்தோசம் ஒருபுறம் இருக்க..
மறுபுறமோ தோழியர் முகம் கண்டு..
எழும் வேதனைகள் மேலோங்கி
அதுவரை இல்லாத பாரம் மனதை அழுத்த..
பரிமாறிக்கொண்டோம் தொலைபேசி எண்களை..

விடை பெரும் தருணத்தில்.. பட்டென எடுத்தேன்
அவள் தலையில் இருந்த ஹேர் பின்....
இதை நான் வைத்துகொள்ளவா? 
பார்வையாலே நானும் கேட்க..
அவளும் தலை அசைத்து விடை கொடுத்தாள்
கண்களில் நீர் ததும்ப..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: thamilan on June 28, 2020, 09:51:03 PM
இன்று இறுதி நாள்
பரீட்சையின் கடைசி நாள்
மனதுக்குள் ஒரு நிம்மதி
உடம்புக்குள் ஒரு உற்சாகம்

அதிகாலை எழுந்திரு என்று
அதட்டும் அம்மாவின் குரல்
இனி கொஞ்ச நாள் கேட்காது
காலை அரக்கப்பரக்க எழுந்து
குளித்தும் குளிக்காததுமாய் நீராடி
அவசர அவசரமாய் சாப்பாட்டை
வாயில் திணித்து
புத்தக மூட்டையை
முதுகினில் சுமந்து
சீக்கிரம் வா சீக்கிரம் வா என
அப்பாவின் அதட்டல் குரல் கேட்டு
அப்பாவின் பைக்கில் அவசரமாய்
பாடசாலை போகும்
இந்த அலட்டல்கள் இனி இருக்காது

பாடசாலையில் டீச்சரின் அதட்டல்கள்
பிழை செய்தால் பெஞ்சின் மேலே
ஏறி நிற்கும் தண்டனையும் இனி இருக்காது
எப்போது மணி அடிக்கும்
எப்போது வீட்டுக்கு போவோம் என்ற
ஏக்கமும் இனி இருக்காது

இன்றுடன் பரிட்சை முடிவடையும்
இனி ஒரு மாதம்
ஆனந்தம் ஆனந்தமே
விடிந்தும் தூங்கலாம்
விதம் விதமாய்  தின்னலாம்
வீடு முழுக்க ஓடி விளையாடலாம்
தோட்டத்தில் என் செல்லக்குட்டி
ஜிம்மியுடன் கொஞ்சி மகிழலாம்
மொட்டை மாடியில்
பட்டம் விடலாம்
எனது எதிர்வீட்டு தோழி
வெண்பாவுடன் விதம் விதமாய் விளையாடலாம்

நான் பாஸோ பெயிலோ
பரீட்சையை ஒழுங்காக
எழுதினேனோ இல்லையோ
ஐ டோன்ட் கேர்
இந்த விடுமுறை நாளை
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: Raju on June 29, 2020, 12:18:04 AM
நிச்சயமாக
அன்று
இதுபோல்
துயரங்களும்
துன்பங்களும்
இருந்ததில்லை...

இருந்தும்
நண்பன்னின்
சீனி மிட்டாய்க்கும்
தோழியின்
குட்டி நாய்க்கும்
பக்கத்து வீட்டு பாட்டியின்
முறுக்குக்கும்
ஏங்கி தவித்த நாட்களவை...

பள்ளியில்
துள்ளியநாட்களும்
பரீட்சைக்கு
விம்மிய நாட்களும்
மறக்காதவை..

பால்யம் என்பது
கவலைகள் கடந்து
லயித்து கழித்து
கடக்கும்
அந்த
பதின்ம வயதால்
பெயர் கொண்டது போலும்

ஒரு முறையேனும்
நீயும் நானும்
ஏன் பலரும்
திரும்பவும்
காண ஏங்கும்
கனவு நாட்கள் அவை...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: MoGiNi on June 29, 2020, 12:23:28 AM
இருபதாண்டு
பின்நோக்கி
பயணிக்கிறது மனது ....

பதின்மத்தின்
பக்குவமற்ற
நகர்வென்பேன்

குழந்தை தனமான நகர்வு
குதர்க்கமற்ற பேச்சு
வெள்ளந்தியான
வெளிப்பாடு
விரும்பியதை
செய்யும்
விளையாட்டு வயது அது...

பரீட்சையின்
இறுதி நாட்கள்
என்றுமே
ஒர் விடுதலைக்கு
நிகரானது..
முடிந்துவிட்டதென்ற நினைப்பே
முட்டித் தள்ளும்...

இன்பத்தின்
திறவுகோல்
பரீட்சையின்
இறுதி நாளென்பேன்...

மனதில் வராத கணக்கு
மண்டையில் ஏறா விஞ்ஞானம்
கண்ணுக்கு தெரியாத பூகோளம்
மனப்பாடமாகத தேவாரம்
முரண்டு பிடிக்கும் முத்தமிழ்...

எல்லாம் முடிந்திருக்கும்..
முட்டை வரலாம்
இல்லை புள்ளிகள்
முன் பின் இருக்கலாம்..
யாருக்கு வேண்டும்....

இனி வரும்
முப்பது நாட்கள் என்னது..
என் தூக்கம்
என் நட்பு
 என் ஆடல் என் பாடல்
திட்டமிடப்படும் என்னால்
அங்கு
யாருக்கும் அனுமதி  மறுக்கப்பட்டிருக்கும்....

துள்ளிக்கடந்த
என் கண்களில்
பட்டதெல்லாம்
எனைப்போல்
ஏங்கித் தவித்து
காத்திருந்து
கழிப்புறுபவர்தாம்...

இருந்தும்
முப்பது நிமிடத்தில்
முடிந்த பரீட்சையை
மூன்று மணி நேரம்
சரிபார்த்து
ஒரு தவறுக்காய்
உலகையே வெறுக்த்து
முதல் இருக்கையை
முற்றுகை இடுபவர்கள்
என்றும் அறிந்ததில்லை
இறுதி இருக்கையே
தேய்த்துக் கழிக்கும்
மணவரின் இன்பமும் துன்பமும்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: SweeTie on June 29, 2020, 12:33:35 AM
பிள்ளை  கிள்ளைகள்   
பிதற்றும்   ஒலிகள் 
பரீட்சை  முடிந்ததும்
பாடும் சங்கீதம்
கேட்கும்  பொழுதுகள்
இனிக்கும்  நெஞ்சம்

காகிதக்   கப்பல்கள்
நீரில்லாக்    கடல்மேல் 
பறக்கும்  தட்டுகள்
முகில் இல்லா  விண்ணில்
கிழித்தெறியும்
நோட்டு  புத்தகங்கள்
கவலையற்ற  பரீட்சைகள்
காத்திருக்கும் விடுமுறைகள்

கண்கலங்கும்  நண்பர்கள்
கலையும்   கனவுகள்
சண்டைகள்   ஒருபுறம்
நட்புகள்  மறுபுறம்
இரண்டற கலந்திட்ட 
இணையற்ற  வாழ்வு
தொடக்கத்தின் முடிவு

ஜாதிகள் இல்லை இங்கு
மதங்களும்  இல்லை
பாசமும்  நேசமும்
பகிர்ந்திடும்  உள்ளங்கள்
பெண்களும்  ஆண்களும்
சரிசமம் இங்கு 
பாரினில் இல்லை
அடிமைகள்  இவர்கள்

புத்தகம்  சுமந்து
புத்தியில்  பதிந்து 
வித்திடும்  கல்வி
பெற்றிடும் அறிவு
பக்குவம்  நிறைந்த
பண்பான  வாழ்க்கை
பெற்றிட வேண்டும் ...நமது
நாளைய தலைவர்கள்
நம்பிக்கை நட்சத்திரங்கள்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: PowerStaR on July 01, 2020, 08:13:50 AM
துள்ளித்திரிந்த காலம்
 இன்பம் அள்ளித்தந்த காலம்
 பள்ளி என்னும் சோலையில் கல்வி கற்ற காலம்
 அது நம் வாழ்வில் வந்த வசந்த காலம்

 திங்கள் முதல் வெள்ளி வரை
 பள்ளியிலே சுற்றி வந்த காலம்
 படிப்புஎன்னும்இன்பசுமையை
 மனமகிழ்ந்து ஏற்ற காலம்

 சாதி மத பேதமின்றி
 ஒன்றுகூடி கல்வி தனை கற்ற காலம்
 பாடல் பாடி  ஆடல் ஆடி
 தோழர் தோழிகளோடு
 கூடி மகிழ்ந்த  இன்ப காலம்

 காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு
 என பள்ளியில்வந்த தேர்வு காலம்
 உறக்கமின்றி படித்து வாழ்வில் உயர்ந்த காலம
 பெற்றோர்கள் சொல் கேட்காமல்
 நண்பர்களின் சொல் கேட்ட காலம்
 ஒன்று கூடி விளையாடி சண்டைகள் பல செய்த
 காலம்

 கவலை மறந்து சுற்றித்திரிந்து
  சுயநலமற்ற  வாழ்ந்த காலம்
 வேற்றுமையில் ஒற்றுமை கண்டு
 ஒன்று கூடி வாழ்ந்த காலம்

 இறுதித் தேர்வு வரும்போது
 படிப்பை பார்த்து பயந்த காலம்
 சூரியன் உதயம் ஆவதற்குள்
 கண்கள் விழித்து படித்த காலம்

இறுதி தேர்வு முடிந்தவுடன்
விடுமுறை நோக்கி சென்ற காலம்
கல்வி தனை கற்றுமுடிந்த பின்பு
நண்பன் பிரிவின்  துயரக் காலம்

 காலங்களில் பல உண்டு
 ஆனால் நம் வாழ்வில் வந்த வசந்த காலம் இது
 இதயத்தில் எப்போதும் அணையா தீபமாய்
 வீசிக்கொண்டிருக்கும் வசந்த காலம் அது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 237
Post by: BreeZe on July 04, 2020, 04:06:45 PM

அப்போ நான் சின்ன புள்ள
எனக்கு வயதோ ஐந்து
ஏதும் அறியாத வயசு
ஏதும் புரியாத மனசு
உலகம் அறியாம அம்மாவின் புடவையயை
புடிச்சுகிட்டு சுத்தின பொண்ணு நான்

திடீரென்ன ஒரு நாள்
சுனாமி போல வந்தது
முதல் நாள் ஸ்கூல்

புது சட்ட புது சப்பாத்து
புது வாட்டர் பாட்டில் புது புத்தகப்பை
தீபாவளி புதுவருடம் வராமலேயே
எல்லாம் எனக்கு வாங்கி தந்தாங்க   

ஜிங் ஜிங் ஜிங் " பாட்ச" "பாட்சா"
கணக்கு படிக்கணும் பாட்சா"
இங்கிலிஷ்  பேசணும் "பாட்சா"
தமிழ் படிக்கணும் "பாட்சா" - இப்படி
சிட்டுவேஷன்ல பாட்ச சோங் ஓடுது

இப்படி தான் புது சப்பாத்து புது சட்டையுடன்
ஸ்கூல் வாசலில் காலடி  எடுத்து வைத்தேன்
என்னை சுற்றி என்னைப்போலவே
புது சட்டை சத்துடன் நிறைய பேரு

எல்லோரையும் ஆடு மாடு புடிச்சுகிட்டு போறது போல
கொண்டு போய் ஒரு ரூம்ல அடைச்சாங்க
ஒருத்தரும் நான் இதுவரைபார்த்ததில்லை
அடுத்த பெஞ்சில இருந்த பையன்
என்ன பார்த்து சிரிச்சான்
நானும் அவனை பார்த்து சிரிச்சேன்
அவனுக்கு பக்கத்துல இருந்த பொண்ணும்
அவன பார்த்து சிரிச்ச
நாங்க மூணு பேரும் பிரண்ட்ஸ் ஆனோம்

அப்புறம் நாங்க ஒரு கேங் ஆனோம்
நாங்க பிரில்லியண்ட் ஸ்டூடெண்ட்
டீச்சர் ABCD  சொல்லி தந்தா
நாங்க ABCD உங்கப்பன் தாடினு படிச்சோம் அப்புறம்
நோட் புக் கொடுத்தாங்க
நாங்க அத துண்டு துண்டா கிழிச்சி
பேப்பர் கிரைன் செய்து
புடிச்ச பசங்க மேலயும் விட்டோம்
புடிக்காத டீச்சர் மேலயும் விட்டோம்
நீங்க எல்லாம் பசங்கள இல்ல பேய்களா
என்று டீச்சர் பேய் கத்திச்சி
நாங்க அதை கண்டுக்கல

குரூப் ஸ்டடீஸ் சொல்லிட்டு
குரூப்பாவே சுத்துவோம்
கிளாஸ் கிளாஸ்ஸ போய்
கதவை தட்டிட்டு ஓடி போய் ஒளிஞ்சிடுவோம்
எங்க டீச்சரும் கடைசி பெஞ்ச
நாங்க ஏறி நிக்கிறதுக்கினே ஒதுக்கிட்டாங்க

இப்படி போன லைப்ல 
மறுபடியும் சுனாமி வந்தது
எக்ஸாம் என்ற பேருல
எக்ஸாம் எழுதிட்டோம்
பாஸா பெய்லா கவலை இல்ல
ஒரு மாதம் லீவு
அது தான் எங்க கவலை
மறுபடி எப்போ ஸ்கூல் தொடங்குவாங்க
மறுபடி எப்போ நாங்க ஜாலியா இருப்போம்
இது தான் எங்க கவலை

சுனாமி வந்த இடத்துல பூகம்பமும்
வந்தது போல
கொரோனாவும் வந்திச்சி
இப்போ இழுத்து மூடிட்டாங்க ஸ்கூல
எப்போ திறப்பாங்கலோ
எப்போ மறுபடி புது சட்டை
புது சப்பாத்து போடுவேனோ
இது தான் இப்போ எனது கவலை

Copyright by
BreeZe