Author Topic: திருமூலர் - திருமந்திரம்  (Read 42949 times)

Offline Anu

பதிகம் எண் :08. உயிர் நிலையாமை

(பாடல்கள்:10)


பாடல் எண் : 01
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

பொழிப்புரை :தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப் படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.
****************************************************
பாடல் எண் : 02
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.

பொழிப்புரை : உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ்ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத்தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.
****************************************************
பாடல் எண் : 03
மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொழிப்புரை :பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.
****************************************************
பாடல் எண் : 04
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை : இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.
****************************************************
பாடல் எண் :05
சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

பொழிப்புரை : பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப்பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.
****************************************************
பாடல் எண் : 06
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

பொழிப்புரை :: பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொருவர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!
****************************************************
பாடல் எண் :07
துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

பொழிப்புரை :ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றி வைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.
****************************************************
பாடல் எண் : 08
இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே.

பொழிப்புரை : தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாதது போல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.
****************************************************
பாடல் எண் : 09
ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொழிப்புரை :மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசு புண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுதலாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.
****************************************************
பாடல் எண் : 10
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.

பொழிப்புரை : வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்டதென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.


Offline Anu

பதிகம் எண் :9.கொல்லாமை

(02பாடல்கள்)


பாடல் எண் : 01
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

பொழிப்புரை : மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.
****************************************************
பாடல் எண் : 02
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை. குறிப்புரை : : ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யமதூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது. இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.
****************************************************
பதிகம் எண் :10.புலால் மறுத்தல்  (01பாடல்)
பாடல் எண் : 01
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
 
குறிப்புரை :  பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.   
 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315  ......என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
 
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252.....என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
 
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255.....எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.


Offline Anu

பதிகம் எண்: 11 பிறன்மனை நயவாமை

 (பாடல்கள்:03) 

பாடல் எண் : 01
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

பொழிப்புரை :  அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப்பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.
****************************************************
பாடல் எண் : 02
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

பொழிப்புரை :  தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளி, மாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.
****************************************************
பாடல் எண் : 03
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொழிப்புரை : செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.


Offline Anu

முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)

பதிகம் எண் :12.மகளிர் இழிவு


(06 பாடல்கள்)
 
பாடல் எண் : 01
இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

பொழிப்புரை : இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவருமாயினும், குலை மாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்கு பயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந்நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்பு மாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்றுகின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன்னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.
***************************************************
பாடல் எண் : 02
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.

பொழிப்புரை : இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும் பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக் கொள்வது போல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொதுமகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.
****************************************************
பாடல் எண் : 03
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

பொழிப்புரை : ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம் கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில்லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.
****************************************************
பாடல் எண் : 04
வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.

பொழிப்புரை : நிலவுலகத்தில் வாழும் பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ்கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப்பட்ட வேம்பு போல்வதுமாகும்.
****************************************************
பாடல் எண் : 05
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

பொழிப்புரை : வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக்கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.
****************************************************
பாடல் எண் : 06
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

பொழிப்புரை : `பிறஉயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காத வழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.


Offline Anu

பதிகம் எண் :13.நல்குரவு

(05 பாடல்கள்)
 
பாடல் எண் : 01
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.

பொழிப்புரை : ` ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்த தென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந்ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.
****************************************************
பாடல் எண் : 02
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொழிப்புரை : ``பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.
****************************************************
பாடல் எண் : 03
கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

பொழிப்புரை : ` மக்கள் அன்னமே(சோறே)யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.
****************************************************
பாடல் எண் : 04
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.

பொழிப்புரை : ` புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழவினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவதற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.
****************************************************
பாடல் எண் : 05
அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.

பொழிப்புரை : ` ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக் கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றையெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.


Offline Anu

பதிகம் எண் :14.அக்கினி காரியம்

(10 பாடல்கள்)

பாடல் எண் : 01
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

பொழிப்புரை : சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.
****************************************************
பாடல் எண் : 02
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓதுகின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.
****************************************************
பாடல் எண் : 03
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

பொழிப்புரை :உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து  நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.
****************************************************
பாடல் எண் : 04
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொழிப்புரை : இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.
****************************************************
பாடல் எண் : 05
நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே.

பொழிப்புரை : நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறிகின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.
****************************************************
பாடல் எண் : 06
பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே.

பொழிப்புரை :ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.
***************************************************************
பாடல் எண் : 07
பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே.

பொழிப்புரை :மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து  நும் அருஞ் செல்வமாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.
***************************************************
பாடல் எண் : 08
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

பொழிப்புரை : எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர்களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.
***************************************************************
 பாடல் எண் : 09
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை 
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் 
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் 
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.
பொழிப்புரை : வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.
**************************************************** 
பாடல் எண் : 10
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
பொழிப்புரை : வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.


Offline Anu

பதிகம் எண் :15.அந்தணர் ஒழுக்கம்

(14 பாடல்கள்)


பாடல் எண் : 01
அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

பொழிப்புரை : ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லனவும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.
****************************************************
பாடல் எண் : 02
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.

பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.
****************************************************
பாடல் எண் : 03
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொழிப்புரை : அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.
****************************************************
பாடல் எண் : 04
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.

பொழிப்புரை : பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான்காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.
**************************************************** பாடல் எண் : 05
சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே.

பொழிப்புரை : `பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்கதாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.
****************************************************
பாடல் எண் : 06
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையேயாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.
****************************************************
பாடல் எண் : 07
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

பொழிப்புரை : முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.
****************************************************
பாடல் எண் : 08
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.

பொழிப்புரை : மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.
****************************************************
பாடல் எண் : 09
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.

பொழிப்புரை : ``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.
****************************************************
பாடல் எண் :10
மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே.

பொழிப்புரை : அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.
****************************************************
பாடல் எண் : 11
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

பொழிப்புரை : உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப் பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.
****************************************************
பாடல் எண் : 12
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

பொழிப்புரை :  நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.
****************************************************
பாடல் எண் : 13
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * *

பொழிப்புரை : இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.
****************************************************
பாடல் எண் : 14
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
* * * * * *

பொழிப்புரை :இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.


Offline Anu

பதிகம் எண் :16.அரசாட்சி முறை

(10 பாடல்கள்)

பாடல் எண் : 1
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

பொழிப்புரை : நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.
****************************************************
பாடல் எண் : 2
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

பொழிப்புரை : நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலையறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வனே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.
****************************************************
பாடல் எண் : 3
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.

பொழிப்புரை : யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வனே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.
****************************************************
பாடல் எண் : 4
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே.

பொழிப்புரை :  `பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம் முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன்மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடைய னாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.
****************************************************
பாடல் எண் : 5
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொழிப்புரை : சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.
****************************************************
பாடல் எண் : 6
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரையும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடி யாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழிவனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.
****************************************************
பாடல் எண் : 7
திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

பொழிப்புரை : பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங்களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.
****************************************************
பாடல் எண் : 8
வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

பொழிப்புரை :  அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.
****************************************************
பாடல் எண் : 9
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொழிப்புரை : `கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழி மேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப்பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப்பேதைமாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.
****************************************************
பாடல் எண் : 10
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

பொழிப்புரை :  சமயிகள் பலரும் தம் தம் சமய அடையாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லாதொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.


Offline Anu

பதிகம் எண் :18.தானச்சிறப்பு

முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு


பாடல் எண் : 1
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

பொழிப்புரை : வற்றாத அமுத ஊற்றுப் போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.
***************************************************
பாடல் எண் : 2
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

பொழிப்புரை : எம் தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.
***************************************************
முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
பாடல் எண் : 1
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொழிப்புரை : அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை `அவர் நல்லர் இவர் தீயர்` என அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடி வைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.


Offline Anu

பதிகம் எண் :19.அறஞ்செய்வான் சிறப்பு

(09 பாடல்கள்)

பாடல் எண் : 1
தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

பொழிப்புரை :  `சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.
***************************************************
பாடல் எண் : 2
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

பொழிப்புரை :  உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.
***************************************************
பாடல் எண் : 3
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.

பொழிப்புரை : `பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.
***************************************************
பாடல் எண் : 4
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.

பொழிப்புரை : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?
***************************************************
பாடல் எண் : 5
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொழிப்புரை : கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.
***************************************************
பாடல் எண் : 6
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.

பொழிப்புரை : மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.
***************************************************
பாடல் எண் : 7
தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.

பொழிப்புரை : மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.
***************************************************
பாடல் எண் : 8
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

பொழிப்புரை : அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.
***************************************************
பாடல் எண் : 9
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொழிப்புரை : சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.


Offline Anu

பதிகம் எண் :20.அறஞ்செயான் திறம்

(10பாடல்கள்)

பாடல் எண் : 1


எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

பொழிப்புரை : எட்டிமரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிந்தாலொப்பனவாகிய, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மிகப் பெறுதலாலே குவிந்து, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டொழிவதேயாகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.
***************************************************
பாடல் எண் : 2
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

பொழிப்புரை : உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும், உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும், தாம் எண்ணிய எண்ணங் களும் கைகூடாது கனவுபோலக் கழிதலையும், பசி பிணி பகை முதலியவற்றால் பெருந்துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்க, சாறுபிழியப்பட்ட கரும்பின் கோதுபோலாகி வலியழி தலையும் கண்டுவைத்தும் மக்களிற் பலர் அறத்தை நினைக்கின்றிலர்.
***************************************************
பாடல் எண் : 3
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

பொழிப்புரை : அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 4
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே.

பொழிப்புரை : பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையையும் அவை நோக்கா.
***************************************************
பாடல் எண் : 5
பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.

பொழிப்புரை : வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களே, நீவிர் யாவராலும் போற்றப் படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை; இரப்பார்க்கு ஈதலும் இல்லை; குடத்தால் நீர்முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை; ஆகவே, இறந்தபின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?
***************************************************
பாடல் எண் : 6
வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.

பொழிப்புரை : உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.
***************************************************
பாடல் எண் : 7
கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

பொழிப்புரை : உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான். ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.
***************************************************
பாடல் எண் : 8
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொழிப்புரை : இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார்.
***************************************************
பாடல் எண் : 9
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே
பொழிப்புரை : அறிவுடையீர், சிலவிடத்துச் சிலராகவும் சில விடத்துப் பலராகவும் வாழ்வாரது பெருவாழ்வாகிய செல்வத்தைக் கண்டு, அதனானே அவர் ஈவர் என்று கருதி அற்பராயிருப்பாரைப் புகழ்ந்து, பயன் கிடையாமையால் பின் மெலிவடைதலைச் செய்யாமல், நுமக்குப் புக்கிலாம் வீடு கருதி இறைவனைத் துதியுங்கள். அதுவே வில் வல்லோன் எய்த அம்புக் குறிபோலத் தப்பாது பயன் தருவதாகும்.
***************************************************
பாடல் எண் : 10
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

பொழிப்புரை : பொருள் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர். அவன் திருவடியல்லாத பிற பொருள்களில் ஆசை நிறைந் தவர், தாம் இறக்குங்காறும் தமக்கு உய்யப்போவதொரு நெறியும் இன்றி, அறிவின்மை காரணமாக, தம்பால் வந்து இரப்பவரிடத்தும், `இரப்பவர்க்கு இல்லை என்னாது ஈக` என்று அறிவுறுப்பாரிடத்தும் கொள்கின்ற சினமாகிய தீயில் விழுந்து அழிவர்.


Offline Anu

பதிகம் எண் :21.அன்புடைமை

(10பாடல்கள்)

பாடல் எண் : 1


அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
**************************************************
பாடல் எண் : 2
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொழிப்புரை :  ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.
**************************************************
பாடல் எண் : 3
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

பொழிப்புரை :  மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற் செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.
**************************************************
பாடல் எண் : 4
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொழிப்புரை :  சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடையவராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற் சென்று, கொங்கு நாட்டை அடைந்தவர்போல் ஆவர்.
**************************************************
பாடல் எண் : 5
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.

பொழிப்புரை :  உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.
**************************************************
பாடல் எண் : 6
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொழிப்புரை :   வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாதவாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.
**************************************************
பாடல் எண் : 7
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

பொழிப்புரை :  தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.
**************************************************
பாடல் எண் : 8
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

பொழிப்புரை :  கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற் கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.
**************************************************
பாடல் எண் : 9
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே.

பொழிப்புரை :  எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள்தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர் தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.
**************************************************
பாடல் எண் : 10
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

பொழிப்புரை :   உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறுதுணையாவான்.


Offline Anu

பதிகம் எண் :22.அன்பு செய்வாரை அறிவன் சிவன்

(10பாடல்கள்)

பாடல் எண் : 1


இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே.

பொழிப்புரை :  மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத்தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.
**************************************************
பாடல் எண் : 2
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

பொழிப்புரை :  முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.
**************************************************
பாடல் எண் : 3
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொழிப்புரை :  அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடைய வளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.
**************************************************
பாடல் எண் : 4
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே.

பொழிப்புரை :  பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப்பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகி விளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.
**************************************************
பாடல் எண் : 5
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொழிப்புரை :  அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார் களில்லை.
**************************************************
பாடல் எண் : 6
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

பொழிப்புரை :  கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத்தாமரையின் கண் விளங்குபவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.
**************************************************
பாடல் எண் : 7
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

பொழிப்புரை :  அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவரல்லது பிறர் அறியமாட்டார்.
**************************************************
பாடல் எண் : 8
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

பொழிப்புரை :  இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.
**************************************************
பாடல் எண் : 9
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.

பொழிப்புரை :  இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
**************************************************
பாடல் எண் : 10
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே.

பொழிப்புரை :  மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெருமானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெருமானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.


Offline Anu

பதிகம் எண் :23.கல்வி

(10பாடல்கள்)

பாடல் எண் : 1


குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.

பொழிப்புரை :  மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.
***************************************************
பாடல் எண் : 2
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

பொழிப்புரை :  கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ்வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லுகின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.
***************************************************
பாடல் எண் : 3
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே.

பொழிப்புரை :  இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 4
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே.

பொழிப்புரை :  கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழிகின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவதாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.
***************************************************
பாடல் எண் : 5
துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.

பொழிப்புரை :  உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.
***************************************************
பாடல் எண் : 6
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொழிப்புரை :  வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்யமாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்மலாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அதுமாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்மலாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப்பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுகமாட்டா. அதுபோல மெய்யறிவு உடையாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன்கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!
***************************************************
பாடல் எண் : 7
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

பொழிப்புரை :  பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடையார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 8
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

பொழிப்புரை :  வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)
***************************************************
பாடல் எண் : 9
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொழிப்புரை :  யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.
***************************************************
பாடல் எண் : 10
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

பொழிப்புரை :  சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.


Offline Anu

பதிகம் எண் :24.கேள்வி கேட்டமைதல்

(10பாடல்கள்)

பாடல் எண் : 1


அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொழிப்புரை :  முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.
*********************************************************
பாடல் எண் : 2
தேவர் பிரான் றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.

பொழிப்புரை :  `சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.
*********************************************************
பாடல் எண் : 3
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

பொழிப்புரை :  திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கன வாதல், சிவபெருமானது ஆணைவழியேயாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.
*********************************************************
பாடல் எண் : 4
பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :  உலகியலை விட்டு மெய்ந்நெறி நோக்கி வருகின்ற தவத்தோர்க்கு அதனை அருளுபவன் அரிய தவக்கோலத்தையே தனது கோலமாக உடைய எங்கள் சிவபெருமானே. அதனால், `இவனே யாவர்க்கும் தலைவன்` என்று உணர்ந்து அவனது புகழைத் தம்மிடையே பேசிக் களிக்கும் திருவுடை மக்களே பின்னர் எப் பயனையும் எளிதிற் பெறுவர்.
*********************************************************
பாடல் எண் : 5
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளின் பெருமையையும், இறப்புப் பிறப்புக்களது சிறுமையையும் ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து, அவனது திருவருளையே காதலித்துப் பிதற்றி மகிழ்ந்தால், அப்பெருமான்மேல் அன்பு, முறுகி வளரும். வளர்ந்தால், அப்பெருமான் அவ்வன்பில் விளங்குகின்ற பேரொளியாய் எதிர்ப்பட்டு நின்று, பின்னர் மலரில் நின்று கமழும் மணம்போல உள்ளே நிலைபெற்று, இன்பம் தருவான்.
*********************************************************************
பாடல் எண் : 6
விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

பொழிப்புரை :  `உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச்செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.
*********************************************************
பாடல் எண் : 7
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.

பொழிப்புரை :  சிறுமகார் தம் விளையாட்டு விருப்பம் காரணமாகத் தாம் சோறாகக் கருதிக்கொண்ட மணலாலே வயிறு நிரம்பினார் போலத் தேக்கெறிந்து கொள்ளுதல்போல, உலகப் பற்றுக் காரணமாகச் சுற்றத் தொடக்குண்டு வாழும் வாழ்க்கையாலே இன்பம் கிடைத்துவிடும் என்பவர் உளராயின் அவர், தம்மையும், தலை வனையும் அறியாத மடவோரேயாவர்.
*********************************************************
பாடல் எண் : 8
உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :  உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றது, யாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது; அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளே; பெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின், பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.
*********************************************************
பாடல் எண் : 9
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

பொழிப்புரை :  எங்கள் சிவபெருமான், ஒருப்பட்டு நிற்கும் அன்பர்க்கும், ஒருப்படாது முரணி, இகழ முற்பட்டு நிற்கும் வன்பர்க்கும் மூதாதையே. எனினும், தம்மொடு மேவாத மைந்த ரிடத்து அன்பு செய்யாத தந்தையர்போல, தன்னை இகழ்ந்து, தனது பெருமையை மகிழ்ச்சியுண்டாகக் கற்றும் கேட்டும் உணராது நீங்கி நிற்பார்க்குத் துன்பத்திற்கு ஏதுவாக, பால் கறவாத கற்பசுப்போல அருள்செய்யாது நிற்பன்.
*********************************************************
பாடல் எண் : 10
வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே.

பொழிப்புரை :  சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.