Author Topic: நளதமயந்தி  (Read 6531 times)

Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #15 on: March 09, 2012, 11:26:53 AM »
நளதமயந்தி பகுதி-16

சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்...நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. நெய்க்கு அலையலாமா? இன்னும் ஒரு முக்கியப்பொருள் உன்னிடம் இருக்கிறது. அந்தப் பொருள், இங்கே நீ என்னிடம் தோற்ற அத்தனைக்கும் சமம். அந்தப் பொருளை வைத்து நீ விளையாடு. அவ்வாறு விளையாடி ஜெயித்தால், உன் தேசத்தை உன்னிடமே தந்து விட்டு, அப்படியே திரும்பி விடுகிறேன். என்ன விளையாடலாமா? என்றான். தன்னிடம் அப்படி எந்தப் பொருளும் இல்லாதபோது, இவன் எதைப் பற்றிச் சொல்கிறான் என நளன் விழித்தான்.புட்கரன் அட்டகாசமாக சிரித்தான். என்னப்பா இது! ஒரு கணவனுக்கு துயரம் வந்தால் மனைவி என்ன செய்வாள்? அதைத் துடைக்க முயல் வாள். உன்னிடம் ஒரு அழகுப்புயல் இருக்கிறதே! தேவர்கள் கூட அவளை அடைய முயன்று தோற்றார்களே! கருவிழிகள், மயங்க வைக்கும் பார்வை, தாமரைப் பாதங்கள், குறுகிய இடை... என்று இழுத்ததும், சே...பொருளை ஒருவன் இழந்து மதிப்பு மரியாதையின்றி நின்றால், அவனது மனைவிக்கல்லவா முதல் சோதனை வருகிறது.

எந்தத் தகுதியும் இல்லாத இவன், தன் தம்பியின் மனைவி என்று கூட பாராமல், அவளை வைத்து சூதாடச் சொல்கிறானே! இவன் ஒரு மனிதனா? என்று எண்ணி, அதே நேரம் ஏதும் பேச இயலாமல், இனி இந்தக் கொடிய சூதாட்டம் வேண்டாம். போதும், அதுதான் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டாயே! மகிழ்ச்சியாக இரு, என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான்.இந்தத் தொடரை ஆரம்பம் முதல் வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரியும். வியாச மகரிஷி, மனைவியையே வைத்து சூதாடித்தோற்ற தர்ம மகாராஜாவுக்கு நளனின் கதையைச் சொல்கிறார். நளன் என்பவன் எல்லாப் பொருட்களையும் தோற்றான். ஆனால், தன் மனைவியை மட்டும் வைத்து சூதாட மறுத்துவிட்டான். இழந்த பொருளை சம்பாதித்து விடலாம். ஆனால், மனைவியை சம்பாதிக்க முடியுமா? நளனைப் போல் இல்லாமல், நீ உன் மனைவியைத் தோற்றாயே! என்று தர்மனின் புத்தியில் உரைக்கும்படி சொன்ன கதையே நளபுராணம். அதையே நாம் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். தன் அன்பு மனைவி தமயந்தியிடம் சென்று நடந்ததைச் சொன்னான். கணவன் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டால், இக்காலத்துப் பெண்கள் அவனை உண்டு, இல்லை என பண்ணி விடுவார்கள். ஆனால், அக்காலத்தில் அப்படியில்லை. தன் மணாளனுக்கு இப்படி ஒரு நிலை விதிவசத்தால் வந்ததே என தமயந்தியும் வருத்தப்பட்டாள். தமயந்தி! சூதாடி நாட்டை இழந்து விட்டேன். வா! நாம் வேறு ஊருக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம், என்ன சொல்கிறாய்? என்றான். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. வருகிறேன் அன்பே, எனச்சொல்லி அவனுடன் கிளம்பி விட்டாள்.  இதைத்தான் வினைப்பயன் என்பது!  சிலர் புலம்புவார்கள்! நான் நல்லவன் தானே! எனக்குத் தெரிந்து யாருக்கும் இப்பிறவியில் எந்தப் பாவமும் செய்யவில்லையே! ஆனாலும், ஏன் எனக்கு சோதனை மேல் சோதனை வருகிறது என்று! நல்லவராக இருந்தாலும், முற்பிறவியில், நாம் யாருக்கு என்ன செய்கிறோமோ, அதன் பலனை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும். அதைத் தான் நளதமயந்தி இப்பிறவியில் அனுபவிப்பதாக எண்ணிக் கொண்டனர்.

நளமகாராஜா நாட்டைத் தோற்ற விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. தங்கள் மன்னரை வஞ்சகமாக புட்கரன் ஏமாற்றிவிட்டானே என்று அவர்கள் புலம்பினர். மேலும், மன்னர் நாட்டை விட்டு அருகிலுள்ள காட்டுக்குச் செல்லப்போகிறார் என்ற விஷயமும் அவர்களுக்குத் தெரிய வரவே, அவர்கள் கண்ணீர் விட்டனர். நளதமயந்தி அரண்மனையை விட்டு வெளியேறி தெருவில் நடந்தனர்.பணமிருப்பவர்கள் ஆட்டம் போடக்கூடாது. ஏனெனில், திருமகள் ஒரே இடத்தில் நிலைத்திருப்பவள் அல்லள்! எங்கே ஒழுக்கம் தவறுகிறதோ, அந்த இடத்தை விட்டு அவள் வேகமாக வெளியேறி விடுவாள். அதுவே அவள் செல்வத்தில் திளைத்து அட்டகாசம் செய்பவர் களுக்கு வழங்கும் தண்டனை. நேற்று வரை ராஜா, ராணியாக இருந்தவர்கள், இன்று அவர்களால் ஆளப்பட்ட குடிமக்களையும் விட கேவலமான நிலைக்குப் போய்விட்டார்கள். அரண்மனை அறையில் இருந்து வாசல் வரை பல்லக்கிலும், வாசலில் இருந்து தேரிலும் பவனி வந்து, தங்கள் கால்களைத் தரைக்கே காட்டாதவர்கள், இன்று நடக்கிறார்கள்... நடக்கிறார்கள்..மக்கள் இதைப் பார்த்து கண்ணீர் பொங்க அழுதார்கள். மகாராஜா! எங்கள் தெய்வமே! வேலேந்தி பகைவர்களை விரட்டியடித்த வேந்தனே! உன் வெற்றிக்கொடி இந்த தேசத்தில் நேற்று வரை பறந்தது. எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொண்டவர் நீங்கள். உடனே காட்டுக்குப் போக வேண்டாம். எங்களுடன் இன்று ஒருநாளாவது தங்குங்கள், என வேண்டினர். எங்களை தொடர்ந்து ஆளுங்கள், என்று மக்கள் கேட்குமளவுக்கு ஒரு ஆட்சி இருக்க வேண்டும். நளனின் ஆட்சி அப்படித்தான் இருந்தது. மக்களின் வேண்டுதலை ஏற்கலாமா? நளன் தமயந்தியின் பக்கம் திரும்பி, மக்கள் நாம் இங்கு ஒருநாள் தங்க வேண்டுமென விரும்புகிறார்கள். நீ என்ன சொல்கிறாய்? என்றான்.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #16 on: March 09, 2012, 11:27:55 AM »
நளதமயந்தி பகுதி-17

இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் அளித்தான். நளனின் பின்னாலேயே வந்த ஒற்றர்கள் மக்களும், நளனும் இவ்வாறு பேசுவதைக் கேட்டு உடனடியாக புட்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். சற்றுநேரத்தில் முரசு ஒலித்தது. நிடதநாட்டு மக்களே! நளன் இந்த நாட்டின் ஆட்சி உரிமையை இழந்து விட்டார். அவருக்கு யாராவது அடைக்கலம் அளித்தாலோ, அவருடன்  பேசினாலோ அந்த இடத்திலேயே கொல்லப்படுவார்கள். இனி உங்கள் ராஜா புட்கரன் தான். அவர் இடும் சட்டதிட்டங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும். மீறுபவர்கள் மரணக்கயிற்றில் உங்களை நீங்களே மாட்டிக் கொள்ளத் தயாரானதாக அர்த்தம். இது மகாராஜா புட்கரனின் உத்தரவு...., என்று முரசு அறைவோன் சத்தமாக நீட்டி முழக்கினான். நளன் தனது நிலை குறித்து வருந்தினான். சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டில் இறங்கி, நாட்டை இழந்தோம், ஏதுமறியா அபலைப் பெண்ணான இந்த தமயந்தியின் கால்கள் பஞ்சுமெத்தையையும், மலர்ப்பாதையையும், சிவப்புக் கம்பளத்øயும் தவிர வேறு எதிலும் நடந்தறியாதவை. இப்போது அவளை கல்லும், மண்ணும், முள்ளும் குவிந்த பாதையில் நடக்க வைத்து புண்படுத்துகிறோமே! இப்போது ஊரில் கூட இருக்க இயலாத நிலை வந்துவிட்டதே! தனக்கு ஆதரவளிப்பவர்களையும் கொல்வேன் என புட்கரன் மிரட்டுகிறானே! தன்னால் தமயந்தியின் வாழ்வு இருளானது போதாதென்று, இந்த அப்பாவி ஜனங்களின் உயிரும் போக வேண்டுமா! ஐயோ! இதற்கு காரணம் இந்த சூதல்லவா! என்று தனக்குள் புலம்பினான். பொழுதுபோக்கு கிளப்கள் என்ற பெயரில் நடக்கும் சூதாட்ட கிளப்களுக்கு செல்பவர்கள் நளனின் நிலையை உணர வேண்டும். சூதாட்டத்தில் கில்லாடியான ஒரு புட்கரன் பல நளன்களை உருவாக்கி விடுவான்.

சூதாடுபவர் மட்டுமல்ல...அவன் மனைவி, மக்களும் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். மானம் போகும், ஏன்...உயிரே கூட போகும்! நளதமயந்திக்கு இரண்டு செல்லப் பிள்ளைகள் பிறந்தார் கள் அல்லவா! அந்த மகளையும், மகனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறினர். ஒரு துக்கவீட்டில், இறந்தவரின் உறவினர்கள் எப்படி சோகத்துடன் இருப்பார்களோ, அந்தளவுக்கு துயரமடைந்தனர் மக்கள். இதையெல்லாம் விட மேலாக, பால் குடி மறவாத பச்சிளம் குழந்தைகள் கூட, அன்று தங்கள் தாயிடம் பால் குடிக்க மறுத்து, சோர்ந்திருந்தன. நளன் வீதியில் நடக்க ஆரம்பித்தான். தமயந்தியின் பஞ்சுப்பாதங்கள் நஞ்சில் தோய்த்த கத்தியில் மிதித்தது போல் தடுமாற ஆரம்பித்தது. குழந்தைகளின் பிஞ்சுப்பாதங்களோ இதையும் விட அதிகமாக தள்ளாடின. அம்மா...அப்பா என அவர்கள் அழுதபடியே நடந்தனர். இந்த இடத்தில் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு என்னதான் ஆண்டவன் வசதியான வாழ்க்கையைக் கொடுத்திருந்தாலும், குழந்தைளுக்கு கஷ்டநஷ்டத்தைப் பற்றிய அறிவையும் ஊட்டி வளர்க்க வேண்டும். காலையில் நூடுல்ஸ், பூரி மசாலா, மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார் என விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தாலும் கூட, பழைய சாதம் என்ற ஒன்று இப்படி இருக்கும் என்பதையும், கிராமத்து ஏழைக் குழந்தைகள் அதைச் சாப்பிட்டு விட்டு தான் பள்ளிக்கு  கிளம்புகிறார்கள் என்பதையும் சொல்லித் தர வேண்டும், எதற்கெடுத்தாலும் கார், பஸ், ஆட்டோ என கிளம்பாமல், நடக்கவும் சொல்லித் தர வேண்டும். வாழ்வில் யாருக்கும் எப்போதும் ஏற்ற இறக்கம் வரலாம். அதைச் சமாளிப்பது பற்றிய அறிவு நம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருந்த வரை புத்தருக்கு ஒன்றும் தெரியாது. வெளியே வந்த பின் தானே மரணம், நோய் பற்றியெல்லாம் உணர்ந்தார்! அதுபோல நம் பிள்ளைகளை சுதந்திரமாக உலகநடப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அனுப்ப வேண்டும்.

நளனின் பிள்ளைகள் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! அவர்களுக்கு தெருமுனை எப்படி இருக்கும் என்று கூட தெரியாது! அப்படிப்பட்ட பிள்ளைகள் இன்று தெருவில் சிரமத்துடன் நடந்தனர். நீண்ட தூரம் நடந்து நாட்டின் எல்லையை அவர்கள் கடந்து விட்டார்கள். எங்கே போக வேண்டும் என்று நளனுக்குப் புரியவில்லை. குழந்தைகள் மிகவும் தளர்ந்து விட்டார்கள். தமயந்தியோ பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தாள்.அப்பா! நாம் எங்கே போகிறோம்? கடக்க வேண்டிய தூரம் முடிந்து விட்டதா? இன்னும் போக வேண்டுமா? என்று அழுதபடியே கேட்டாள் மகள். மகனோ, அம்மாவின் கால்களைக் கட்டிக்ககொண்டு, அம்மா! என்னால் நடக்கவே முடியவில்லை. எங்காவது அமர்வோமா! என கண்ணீருடன் கெஞ்சலாகக் கேட்டான். பன்னீர் தூவி வளர்த்த தன் குழந்தைகளின் கண்களில் கண்ணீரா! தமயந்தியின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. நளனுக்கு அவர்களின் துயரத்தைப் பார்க்கும் சக்தி இல்லவே இல்லை. வெட்கம் வேறு வாட்டி வதைத்தது! ஆம்...எதைத் தொடங்கினாலும், ஒரு மனிதனுக்கு முதலில் தன் மனைவி, பிள்ளைகளின் முகம் நினைவுக்கு வர வேண்டும்..இதைச் செய்தால் அவர்களுக்கு நன்மை விளையுமா! கேடு வந்துவிடுமா என்று ஆராய வேண்டும்.இதைச் செய்யாத எந்த மனிதனாக இருந்தாலும், தன் மனைவி, பிள்ளைகள் முகத்தில் கூட விழிக்க இயலாத நிலை ஏற்படும்! என்ன தான் சனி ஆட்டினாலும், சுயபுத்தி என்ற ஒன்று இருக்கிறதல்லவா! அந்த புத்தியை இறைவன் தந்திருக்கிறான் அல்லவா! அந்த இறைவனைப் பற்றிய நினைப்பு வந்திருந்தால், இந்த சனியால் ஏதாவது செய்திருக்க முடியுமா! காலம் கடந்த பின் நளன் வருந்துகிறான். வரும் முன்னர் தன்னைப் பாதுகாத்து கொள்ளாதவனின் வாழ்க்கை எரிந்து தானே போகும்!  நளன் தமயந்தியிடம், அன்பே! இனியும் பிள்ளைகள் கதறுவதை என்னால் தாங்க முடியாது. அதனால், நீ பிள்ளைகளுடன் உன் தந்தை வீட்டுக்குப் போ, என்றான். இதுகேட்டு தமயந்தி அதிர்ந்துவிட்டாள்.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #17 on: March 09, 2012, 11:29:28 AM »
நளதமயந்தி பகுதி-18

அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை பிரியமாட்டோம் என உறுதியளித்தீர்களே! அது காதல் மோகத்தில் சொன்னது தானா? என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன், கேளுங்கள். ஒரு பெண் குழந்தைகளை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவள் தன் கணவனை இழந்துவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை அடைவாள். அவளது கற்புக்கு களங்கம் கற்பிக்கப்படும், அல்லது பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, எந்த ஒரு பெண்ணும் தன் கணவனை இழக்க சம்மதிக்கவே மாட்டாள், என்றாள்.தன் மனைவியின் உறுதியான மனநிலை கண்டு, அந்த துன்பமான சூழலிலும் நளன் உள்ளூர மகிழ்ந்தான். ஆனாலும், மற்றொரு உண்மையை அவன் அவளுக்கு எடுத்துச் சொன்னான்.தமயந்தி! உனக்குத் தெரியாததல்ல! இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள். ஒருவன் மரணமடைந்து விட்டால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பிள்ளைகள் வேண்டும். அப்படியானால் தான் அவன் சொர்க்கத்தை அடைவான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. நீ கேட்கலாம், புண்ணியம் செய்தால் சொர்க்கத்தை அடைய முடியாதா என்று! நிச்சயம் அது முடியாது. எந்த வித தவறும் செய்யாமலும், பிறருக்கு வஞ்சனை செய்யாமலும் இருப்பவராக இருந்தாலும் கூட, எவ்வளவு நல்லறிவு பெற்ற உயர்ந்தவரானாலும் கூட, நல்ல பிள்ளைகளைப் பெறாத பெற்றோருக்கு சொர்க்கம் கிடைக்காது, என்றவனை இடைமறித்த தமயந்தி, ஐயோ! என்ன சொல்கிறீர்கள்! நீங்களே எனது சொர்க்கம், நான் வாழும் போது சொர்க்கத்தைத் தேடுகிறேன். நீங்கள் வாழ்க்கையின் முடிவுக்கு பிறகுள்ள விஷயங்களைப் பேசுகிறீர்களே! என இடைமறித்தாள்.
நளன் அவளைத் தேற்றினான்.

அன்பே! எவ்வளவு தான் பணமிருந்தாலும் சரி! புகழின் உச்சத்தில் இருந்தாலும் சரி! இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நற்பெயர் பெற்றிருந்தாலும் சரி! ஒருவனுக்கு இவையெல்லாம் மகிழ்ச்சி தராது. சாதாரண தட்டில் சோறிட்டு, அதை தன் பிஞ்சுக்கரங்களால் அளைந்து சாப்பிடுமே குழந்தைகள்! அந்தக் குழந்தைகளின் செய்கையும், அவை குழலினும் இனியதாக மழலை பேசுமே! அந்தச் சொற்களுமே இவ்வுலக சொர்க்கத்தை மனிதனுக்கு அளிக்கின்றன. தமயந்தி! பல அறிஞர்களும், புலவர்களும் அரிய பல கருத்துக்களை பேசுவதை நீ கேட்டு மகிழ்ந்திருப்பாய். ஆனால், அவற்றையெல்லாம் விட, பால் குடித்து அது வழிந்தபடியே, நம் குழந்தைகள் பேசும் பேச்சு தானே காதுகளை குளிர வைக்கிறது! எனவே குழந்தைகள் தான் நமக்கு முக்கியம். அவர்களை அழைத்துக் கொண்டு உன் இல்லத்துக்குச் செல். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், என தன் கருத்தில் விடாப்பிடியாக இருந்தான் நளன். பிள்ளைகளும், மனைவியும் இனியும் தன்னால் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். இப்போது, தமயந்தி வேறுவிதமாக கிடுக்கிப்பிடி போட்டாள். என் தெய்வமே! அப்படியானால் ஒன்று செய்வோம். நீங்களும் எங்களுடன் என் தந்தை வீட்டுக்கு வாருங்கள். அங்கே, நாம் வாழத் தேவையான பொருள் உள்ளது. அவர் என் சிரமத்தைப் பொறுக்கமாட்டார். உதவி செய்வார். புறப்படுங்கள், என்றாள். நளன் இந்த இடத்தில் தான் தன் உறுதியான மனப்பான்மையைக் காட்டினான். இப்போதெல்லாம் ஒருவனுக்கு கஷ்டம் வந்துவிட்டால் போதும். மனைவியை தந்தை வீட்டுக்கு அனுப்பி ஏதாவது வாங்கி வாயேன், என கெஞ்சுகிறான். இன்னும் சிலர், அடியே! உன் அப்பன் சம்பாதிச்சு குவிச்சு வைச்சிருக்கான். அதிலே நமக்கு கொஞ்சம் கொடுத்தா குறைஞ்சா போயிடும்! போ! அந்த கல்லுளி மங்கனிடம் ஏதாச்சும் வாங்கிட்டு வா, என திட்டுகிறான்.

இன்னும் சிலர் மனைவியை அவர்களது வீட்டுக்கே அனுப்பி, இவ்வளவு தந்தால் தான் உனக்கு வாழ்க்கையே! இல்லாவிட்டால் விவாகரத்து, என மிரட்டி பணிய வைக்கிறான். நளமகாராஜா அப்படி செய்யவில்லை. என் அன்புச்செல்வமே! பைத்தியம் போல் பேசாதே! இந்த உலகத்தில் பணம் உள்ள வரையில் தான் ஒருவனுக்கு மதிப்பு! ஏதோ நோய் நொடி வந்தோ, பிள்ளைகளை கரை சேர்க்கவோ ஆகிய நியாயமான வழிகளில் பணத்தைக் கரைத்தவன் கூட, ஒருவனிடம் உதவி கேட்டுச் சென்றால், அவன் இவனைக் கண்டு கொள்ள மாட்டான்! நானோ, சூதாட்டத்தில் பணத்தைத் தொலைத்தவன். உன் தந்தையின் முன் நான் தலைகுனிந்து தானே உதவி கேட்க வேண்டியிருக்கும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்! பணமில்லாதவன், ஒரு செல்வந்தனிடம் போய், எனக்கு உதவு என்று கேட்டால், அவன் அவமானத்துக்கு ஆளாவான். அது அவனது புகழை அழிக்கும். தர்மத்தின் வேரை வெட்டி வீழ்த்தி விடும். அதுமட்டுமல்ல! அவனது குலப்பெருமையையும் அழித்து விடும், என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.அப்போதும் தமயந்தி விடவில்லை. அன்பே! நாம் கஷ்டத்தில் அங்கு வந்திருக்கிறோம் என்பதைக் கூட யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம். வாருங்கள், என்றாள்.என்னைக் கோழையாக்க பார்க்கிறாயா தமயந்தி. நான் அரசனாக இருந்தவன். உன் தந்தை எனக்கு மாமனார் என்பது இரண்டாம் பட்சம் தான். அவரும் ஒரு அரசர்! ஒரு அரசன், இன்னொரு அரசனிடம் உதவி கேட்பதா! சூதில் தோற்று, ஒன்றுமில்லாமல் நிற்கும் என்னை ஆண்மையற்றவன் என்றும் எண்ணி விட்டாயா? பிறரிடம் உதவி கேட்பவன் பைத்தியக்காரன் என்கிறார்கள் பெரியோர். அப்படியானால், நானும் பைத்தியக்காரனா? நளன் ஆவேசப்பட்டான்.  இவர்களுக்குள் வாதம் வலுத்தது.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #18 on: March 09, 2012, 11:30:37 AM »
நளதமயந்தி பகுதி-19

தமயந்தி நளனிடம்,  தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு வழியில் வரும் போது, நம்முடன் ஒரு பிராமணர் சேர்ந்து கொண்டார் அல்லவா! அவருடன் நம் குழந்தைகளை அனுப்பி குண்டினபுரத்திலுள்ள எங்கள் தந்தை வீட்டில் சேர்க்கச் சொல்லிவிடுவோம். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பது தானே உங்கள் நோக்கம்! அது நிறைவேறி விடும். நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது, வாழவும் முடியாது. இந்த யோசனையை ஏற்பீர்களா? என்னைக் கைவிட்டு சென்று விடாதீர்கள், என தமயந்தி, கல்லும் கரையும் வண்ணம் அழுதாள். செல்லப்பெண்ணாய் இருந்து, காதலியாகி, மனைவியாகி மக்களையும் பெற்றுத்தந்த அந்த அபலையின் கதறல் நளனின் நெஞ்சை உருக்கியது. அதேநேரம், பிள்ளைகளைப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் இதயத்தை மேலும் பிசைந்தது. தேவை தானா! இவ்வளவு கஷ்டங்களும். கெட்ட வழியில் செல்லும் ஒவ்வொரு ஆணும் நளனின் இந்த நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். சம்பாதிப்பதை விட, அதை நல்ல வழியில் கட்டிக் காக்கலாம். கெட்ட வழிகளில் செலவழித்து தானும் அழிந்து, குடும்பத்தையும் அழிப்பதை விட, இருப்பதில் பாதியை தர்மம் செய்திருந்தால் கூட புண்ணியம் கிடைத்திருக்கும். எதையுமே செய்யாமல், புட்கரன் உசுப்பிவிட்டான் என்பதற்காக அறிவிழந்த நளன் போல, எந்த ஆண்மகனும் நடந்து கொள்ளக்கூடாது. கெட்ட வழிகளில் ஈடுபடும்படி நம்மை வலியுறுத்தும் உறவுகள் மற்றும் நட்பிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துச் சொல்கிறது.

அதேநேரம், பெற்ற பிள்ளைகளைக் கூட ஒரு பெண் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், கட்டிய கணவனை எக்காரணம் கொண்டும், அவனது துன்பகாலத்தில் கைவிடவும் கூடாது. அவன் மனம் திருந்திய பிறகும், என்றோ செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவனை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கவும் கூடாது. தமயந்தி தன் கணவனிடம்,ஏன் இப்படி செய்தீர்கள்? பகடைக்காயை தொடும்போது என் நினைவும், உங்கள் பிள்ளைகளின் நினைவும் இருந்ததா? என்று ஒருமுறை கூட கேட்டதில்லை. நல்லவனான அவனை விதி என்னும் கொடிய நோய் தாக்கியதாக நினைத்து, அவனது கஷ்டத்தில் பங்கேற்றாள். இன்றைய தம்பதிகள், நளதமயந்தி போல் சிரமமான நேரங்களில் ஒருவருக்கொருவர் குத்திக்காட்டி சண்டை போடாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். இனியும் பழைய தவறைச் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். நளனுக்கு இந்த யோசனை நல்லதாகப்பட்டது. ஒருவழியாய், பிள்ளைகளை தாத்தா வீட்டுக்கு அனுப்புவதென முடிவாயிற்று. ஆனால், புதுபூதம் ஒன்று கிளம்பியது. தங்களை பெற்றோர் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்த பிள்ளைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பா! எங்களைப் பிரியப் போகிறீர்களா! எங்களை தாத்தா வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள். இனிமேல், நான் நடந்தே வருவேன். என் கால்களை முட்கள் குத்தி கிழித்தாலும் சரி. என்னைத் தூக்கச் சொல்லி உங்களிடம் நான் இனி சொல்லவே மாட்டேன். அமைதியாக உங்களைப் பின் தொடர்ந்து வருவேன், என்று கல்லும் கரைய அழுதாள் மகள்.மகனோ அம்மாவைக் கட்டியணைத்துக் கொண்டு,அம்மா! உன்னிடம் நான் இனி உணவு கூட கேட்கமாட்டேன், பசித்தாலும் பொறுத்துக்கொள்வேன். நீ என்னைப் பிரிந்து விடாதே. என்னை உன்னோடு அழைத்துச்செல், எனக் கதறினான்.

அப்போது, அந்த காட்டில் இருந்த பூக்களில் இருந்து சிந்திய தேன், இவர்களது துயரம் கண்டு கண்ணீர் வடித்தது போல் இருந்ததாம். பிள்ளைகள் தங்கள் மீது கொண்டுள்ள பாசம் கண்டு கலங்கிய தமயந்தி வடித்த கண்ணீர், அவளது உடலில் அபிஷேக தீர்த்தம் போல் ஓடியது. பிள்ளைகளை மார்போடு அணைத்துக்கொண்டாள். என் அன்புச் செல்வங்களே! நீங்கள் இனியும் எங்களுடன் கஷ்டப்பட வேண்டாம். தாத்தா உங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார். நாங்கள் விரைவில் அங்கு வந்துவிடுவோம். மீண்டும் வாழ்வோம் ஓர் குடும்பமாய், என்று ஆறுதல் மொழி சொல்லித் தேற்றினாள். அந்தணரை அழைத்த நளன், சுவாமி! தாங்கள் இவர்களை குண்டினபுரம் அரண்மனையில் சேர்த்து விடுங்கள். நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம், என்றான். அவர்களது துயரநிலை கண்ட அந்தணரும், அதற்கு சம்மதித்தார். பிள்ளைகளுடன் குண்டினபுரம் கிளம்பிவிட்டார். நளனும், தமயந்தியும் கண்ணில் நீர் மறைக்க, தங்கள் குழந்தைகள் தங்கள் கண்ணில் இருந்து மறையும் தூரம் வரை அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றனர்.  பின்னர், பிரிவு என்னும் பெரும் பாரம் நெஞ்சை அழுத்த, அதைச் சுமக்க முடியாமல் தள்ளாடியபடியே சென்றனர். அந்தக் கொடிய காட்டில் கள்ளிச்செடிகள் வளர்ந்து கிடந்த ஒரு பகுதி வந்தது. அந்த இடத்தைக் கடந்தாக வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த கொடிய காட்டை எப்படிக் கடப்பது என நளன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சனீஸ்வரர் இவர்களைப் பார்த்தார். ஆஹா! வசமாகச் சிக்கிக் கொண்டாயடா! வாழ்வில் ஒருமுறை தப்பு செய்தவனை நான் அவ்வளவு லேசில் விடமாட்டேன். தப்பு செய்தவர்கள் மீது எனக்கு இரக்கமே ஏற்படாது.. புரிகிறதா! பிள்ளைகளைப் பிரிந்தாய். உன் மனைவி என்னவோ புத்திசாலித்தனமாக உன்னைப் பின் தொடர்வதாக நினைக்கிறாள்! உன்னை மனைவியோடு வாழ விடுவேனா! இதோ வருகிறேன், என்றவர், தங்கநிறம் கொண்ட ஒரு பறவையாக மாறினார். வேகமாகப் பறந்து வந்து கள்ளிச்செடி ஒன்றின் மீது அமர்ந்தது அந்தப்பறவை.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #19 on: March 09, 2012, 11:31:49 AM »
நளதமயந்தி பகுதி-20

பெண்களைஎந்தச் சூழலிலும் தங்கத்தின் மீதான ஆசை விடாது போலும்! கணவனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலும், அந்த தங்கநிற பறவை மீது தமயந்தியின் கண்பட்டது.ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, அந்தச் சிரமமான வாழ்க்கை நிலையிலும், தன் கண்ணில் பட்ட தங்க நிற மானைப் பிடித்துத் தரச்சொன்னாளே! சீதாதேவி...அது போல, தமயந்தியும் தன் கணவனிடம் குழைந்தாள்.அன்பரே! அந்தப் பொன்னிற பறவையைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்குப் பிடித்துத் தாருங்களேன், என்றாள் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும்.மங்கையரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மாமலையும் ஆடவர்க்கு ஓர் கடுகாம் என்பார்களே! இவனுக்குப் பொறுக்குமா? தன் காதல் மனைவி, தனக்காக நாட்டையும், சுகபோகங் களையும், ஏன்...பெற்ற பிள்ளைகளைக் கூட மறந்து தன்னோடு காட்டில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என நடக்கிறாளே! அவளது துன்பத்தை மறக்க இந்த பறவை உதவுமென்றால், அதை பிடித்தாக வேண்டுமல்லவா! அவ்வளவு தானே! சற்றுப் பொறு தமயந்தி! நீ இங்கேயே இரு! அதை நான் நொடியில் பிடித்து வருகிறேன், எனச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் நளன்.கெட்ட நேரத்தின் உச்சக்கட்டமாய் வந்த அந்தப் பறவையை, சனீஸ்வரன் என அறியாமல் அதை நோக்கி பூனை போல் நடந்தான் நளன். அது கையில் சிக்குவது போல பாவனை காட்டியது. அவனது கை இறக்கைகளின் மேல் படவும், சுதாரித்துக் கொண்டு பறந்து போய் வேறு கள்ளிச் செடியில் அமர்ந்தது. நளன் அங்கே ஓடினான். அது மீண்டும் பழைய செடிக்கேவந்து அமர்ந்தது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் சற்றுநேரம் தொடர்ந்தது.

என்னிடமா பாவ்லா காட்டுகிறாய்? உன்னைப் பிடிக்கும் கலை எனக்குத் தெரியும், என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், தன் இடுப்பில் கட்டியிருந்த பட்டு வேட்டியை அவிழ்த்தான். தமயந்தியை அழைத்தான். பூங்கொடியே! உன் ஆடையை நாம் இருவரும் உடுத்திக் கொள்வோம். என்னுடைய ஆடையை இந்தக் கள்ளிச்செடியில் அமர்ந்துள்ள பறவையின் மீது போட்டு பிடித்து விடுவோமா! என்றான். அவளும் ஆர்வமாக சரியெனத் தலையாட்டினாள். தன் பட்டாடையை பறவையின் மேல் போட்டான். அவ்வளவு தான்! பறவை பட்டாடையுடன் உயரே பறக்க ஆரம்பித்து விட்டது. கவுபீனம் (கோவணம்) மட்டுமே அணிந்திருந்த நளன், ஐயோ! பறவை எங்கோ பறந்து போகிறதே! என்றவன், ஹோ...ஹோ... என கூச்சலிட்டு நின்றான். அந்தப் பறவை நடுவானில் நின்றபடியே, ஏ மன்னா! பொருளின் மீது கொண்ட பற்று காரணமாகத்தானே ஏற்கனவே நாட்டை இழந்தாய். இப்போதும், அந்த ஆசை விடவில்லையோ! தேவர்களைப் பகைத்து இந்த இளம் நங்கையை மணம் செய்து கொண்டவனே! புட்கரனுடன் சூதாடும் மனநிலையை உனக்கு உருவாக்கி,  உன்னை நாடு இழக்கச் செய்த சனீஸ்வரன் நானே! யார் ஒருவரை நான் பற்றுகிறேனோ, அவர்களின் மன உறுதியைச் சோதிப்பதே என் பணி. மனைவி, பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அவர்களுக்கு உரிய புத்திமதியைக் கனிவுடனும், கண்டிப்புடனும் சொல்வது கணவனின் கடமை. இல்லாவிட்டால், அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற சிறிய இலக்கணம் கூட தெரியாமல் இருக்கிறாயே! வருகிறேன், என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டது. விதியை எண்ணி வருந்தினான் அவன்.

ஒரு குடும்பத்தை அழிக்க மூன்று போதைகள் உலகில் உள்ளன. சூது, மது, மாது என்பவையே அவை. அதற்கு அடிமையானவர்கள் உடுத்திய துணியைக் கூட இழப்பது உறுதி. போதையில் தெருவில் ஆடையின்றி உருளும் எத்தனையோ ஜென்மங்களை இன்றும் பார்க்கத்தானே செய்கிறோம்! பணத்தாசையால் இன்றும் கூட விளையாட்டுகள் கூட சூதாக மாறி, இடுப்புத்துணியைக் கூட இழப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! இவர்களுக்காகத் தான் நளதமயந்தியின் வரலாற்றை வியாசர் மகாபாரதத்தின் கிளைக்கதையாக எழுதி வைத்தார். இதைப் போன்ற கதைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனதில் இளமையிலேயே நல்லெண்ணங்கள் பதியும். இதையெல்லாம் விட்டு, குழந்தைகளுக்கு போலிச்சான்று வாங்கக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனம் விஷமாகித்தானே போகும்! அவர்களெல்லாம், இன்று சனீஸ்வரனின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார்களே! கட்டிய துணியை இழந்த நளன், மனைவியின் ஆடையில் பாதியை வாங்கி உடுத்திக் கொண்டான். உடல் இரண்டாயினும் உயிர் ஒன்றாகட்டும் என்பார்களே! அப்படித்தான் நளதமயந்தி தம்பதியர் இருக்கிறார்கள். இப்போது ஆடையாலும் ஒன்றானார்கள். தமயந்திக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. சனீஸ்வரரையே சபிக்க ஆரம்பித்து விட்டாள். தர்மம் தவறி நடப்பவர்கள், பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வளர்பவர்கள், நெஞ்சில் ஈரமில்லாதவர்கள், மானத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாதவர்கள், தெய்வத்தை பழிப்பவர்கள், உழைப்பை நம்பாமல் பிச்சை கேட்பவர்கள்...இவர்களெல்லாம் நரகத்திற்குப் போய்ச் சேர்வர் என்கிறது சாஸ்திரம். ஏ சனீஸ்வரா! நீயும் இப்போது இந்த ரகத்தில் சேர்ந்துவிட்டாய். நீயும் நரகத்துக்குப் போவது உறுதி, என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #20 on: March 09, 2012, 11:33:03 AM »
நளதமயந்தி பகுதி-21

பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் விதிப்பலன். நடப்பது நடக்கட்டும். வாருங்கள். இந்த இடத்தை விட்டு கிளம்புவோம், என்றாள். நளனும் கிளம்பினான். காட்டுப்பாதையில் அவர்கள் நீண்டதூரம் சென்றனர். மாலை நேரமானது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. அந்தக் கரிய இருளில் தன்  மனைவியுடன் நடந்தான் நிடதநாட்டு மன்னன். தமயந்தியோ தடுமாறினாள். பேய்களுக்கு கூட கண் தெரியாத அளவுக்கு இருட்டு..எங்கே தங்குவது? நடுக்காட்டில் அங்குமிங்குமாய் முட்செடிகள் வேறு. பாதுகாப்பாக இருக்க இடமே கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏதோ நல்வினையின் பலன் குறுக்கிட்டது போலும்! பாழடைந்து போன மண்டபம் ஒன்று நளனின் கண்களில் பட்டது. தமயந்தி! வா! இந்த மண்டபத்தில் இன்றைய இரவுப்பொழுதைக் கழிப்போம், என்றாள்.தூண்களெல்லாம் இடிந்து எந்த நேரம் எது தலையில் விழுமோ என்றளவுக்கு இருந்த அந்த மண்டபத்தில் அவர்கள் தங்கினார்கள். நளன் சற்றே பழைய நினைவுகளை அசைபோட்டான். பளிங்கு மாமண்டபத்தில், பால் போல் ஒளி வீசும் வெண்கொற்றக்குடையின் கீழ் தமயந்தியுடன் கொலு வீற்றிருந்த கோலமென்ன! கொடிய சூதாட்டத்தால், இந்த இடிந்த மண்டபத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை வந்ததென்ன! அந்த மண்டபத்தின் தரைக்கற்கள் பெயர்ந்து மண்ணாகக் கிடந்தது. சற்று சாய்ந்தால் கற்கள் உடலில் குத்தியது. காட்டுக்கொசுக்கள் ஙொய் என்று இரைந்தபடியே அவர்களின் உடலில் கழித்தன.

தமயந்தி கலங்கிய கண்களுடன்,  நிடதநாட்டு சோலைகளில் வண்டுகளின் ரீங்காரம் செய்ய, அதைத் தாலாட்டாகக் கருதி உறங்கினீர்களே! அப்படிப்பட்ட புண்ணியம் செய்த உங்கள் காதுகள், இங்கே இந்த கொடிய கொசுக்களின் இரைச்சலில் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதே! என்று கணவனிடம் சொன்னாள். நளன் அவளிடம்,கண்மணியே! கெண்டை மீன் போன்ற உன் கண்களில் இருந்து கண்ணீர் வழியலாமா? மனதைத் தேற்றிக்கொள்!  முன்வினைப் பயனை எல்லாருமே அனுபவித்தாக வேண்டும்! இப்பிறவியில் நாம் யாருக்கும் கேடு செய்யவில்லை. முற்பிறவிகளில் என்னென்ன பாவங்கள் செய்தோமோ! ஆனால், அதை உன்னையும் சேர்ந்து அனுபவிக்க வைத்துவிட்டேனே என்பது தான் கொடுமையிலும் கொடுமை, என்று வருத்தப்பட்டான் நளன். ஆண்கள் என்ன தான் தேறுதல் சொன்னாலும், பெண்கள் ஒன்றை இழந்துவிட்டால், அவர்களின் மனதை ஆற்றுவது என்பது உலகில் முடியாத காரியம். தமயந்தியின் நிலையும் அப்படித்தான். அன்பரே! வாசனை மலர்களால் ஆன படுக்கையில், காவலர்கள் வாயிலில் காத்து நிற்க படுத்திருப்பீர்களே! இங்கே, யார் நமக்கு காவல்! என்று புலம்பினாள். உடனே நளன், தமயந்தி! இழந்ததை எண்ணி வருந்துவது உடலுக்கும் மனதுக்கும் துன்பத்தையே தரும். இதோ பார்! இந்தக் காட்டிலுள்ள பூக்களும், செடிகளும், மரங்களும் தனித்து தூங்கவில்லையா? திசைகள் இருளில் மூழ்கி உறங்கவில்லையா? பேய்கள் கூட தூங்கிவிட்டன என்று தான் நினைக்கிறேன். எங்கும் நிசப்தமாயிருக்கிறது. இப்படி இரவும் பகலும் விழித்தால் உன் உடல்நிலை மோசமாகி விடும். உறங்கு கண்ணே! என் கைகளை மடக்கி வைக்கிறேன். அதைத் தலையணையாக்கிக் கொண்டு தூங்கு, என்றான். அவளும் கண்களில் வழிந்த நீர் அப்படியே காய்ந்து போக, தலைசாய்த்தாள்.  இருவருக்கும் தூக்கம் வரவில்லை. தன் அன்பு மனைவியின் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

பாவம் செய்தவள் நீ! இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கைப்பட்டிருப்பாயா! வீமராஜனின் மகளாகப் பிறந்து, நட்ட நடுகாட்டில், மண் தரையில் உறங்குகிறாய். உன்நிலை கண்டு என் உயிரும் உடலும் துடிக்கிறது. இந்தக் காட்சியைக் காணவா நான் உன்னைக் காதலித்தேன்! இப்படியொரு கொடிய வாழ்வைத் தரவா உன் கழுத்தில் தாலிக் கொடியைக் கட்டினேன்! என் இதயம் இப்படியே வெடித்து விட்டால் என்னைப் போல் மகிழ்பவர்கள் உலகில் இருக்க முடியாது! நான் இப்படியே மரணமடைந்து விடமாட்டேனா! என்று அழுதான்.பெண்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  அழுவார்கள். ஆனால், கணவன் அழுதால் அவர்களால் தாங்க முடியாது.அன்பரே! தாங்கள் கண்ணீர் வடிக்குமளவு நான் தான் உங்களுக்கு கொடுமை செய்தேன்! அற்ப பறவை மீது கொண்ட ஆசையால், உங்கள் ஆடையை இழக்கச் செய்தேன்! என் முந்தானை உங்கள் ஆடையானதால், அதை விரித்து உங்களைப் படுக்க வைக்க இயலாமல் போனேன். இப்படி ஒரு கொடுமை இந்த உலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது, என்று புலம்பித் தீர்த்தாள். இப்படி புலம்பியபடியே அவள் தன் கைகளை அவனுக்கு தலையணையாகக் கொடுத்து, கால்களை குறுக்கே நீட்டி, அதன் மேல் அவனது உடலைச் சாய்க்கச் சொல்லி, மண்டபத்து மணலும், கல்லும் அவன் முதுகில் குத்தாமல் இருக்க உதவினாள். ஒருவழியாக அவள் உறங்கத் தொடங்கினாள். இப்படி இவள் படும் பாட்டைக் கண்கொண்டு பார்க்க நளனால் முடியவில்லை. இவளை இங்கேயே விட்டுச்சென்று விட்டால் என்ன! இவள் காட்டில் படாதபாடு படுவாள் என்பது நிஜம்! ஆனாலும், அது நம் கண்களுக்குத் தெரியாதே! என்ன நடக்க வேண்டுமென அவளுக்கு விதி இருக்கிறதோ, அது நடக்கட்டும்! இவளை இப்படியே விட்டுவிட்டு கிளம்பி விடலாமா! நளனின் மனதில் சனீஸ்வரர் விஷ விதைகளை ஊன்றினார்.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #21 on: March 09, 2012, 11:34:29 AM »
நளதமயந்தி பகுதி-22

 
நளன் கிளம்பி விட்டான். இரண்டடி நடந்திருப்பான், மனம் கேட்கவில்லை. மீண்டும் வந்து தமயந்தியை எட்டிப்பார்த்தான். ஏதுமறியா, அந்த பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரியான அவள், பச்சைமழலை போல், பால் மாறா முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளை விட்டா பிரிவது? வேண்டாம்.. இங்கேயே இருந்து விடலாம்... என்று எண்ணியவனின் மனதில் கலியாகிய சனீஸ்வரன் மீண்டும் வந்து விளையாடினான். போடா போ, இவள் படும் பாட்டை சகிக்கும் சக்தி உனக்கில்லை, புறப்படு, என்று விரட்டினான்.ஆம்..கிளம்ப வேண்டியது தான்! அவள் படும்பாட்டை என்னால் சகிக்க முடியாது. புறப்படுகிறேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவனின் மனம் தயிர் கடையும் மத்தை கயிறைப் பிடித்து இழுக்கும்போது, அங்குமிங்கும் கயிறு போய்வருமே...அதுபோல் வருவதும், போவதுமாக இருந்தான். ஒரு வழியாக, உள்ள உறுதியுடன் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான். செல்லும் வழியில் அவன் தெய்வத்தை நினைத்தான். தெய்வமே! அனாதைகளுக்கு நீயே அடைக்கலம். என் தமயந்தியை அனாதையாக விட்டு வந்து விட்டேன். உன்னை நம்பியே அவளை விட்டு வந்திருக்கிறேன். அவளுக்கு ஒரு கஷ்டம் வருமானால், அவளை நீயே பாதுகாத்தருள வேண்டும். இந்தக் காட்டில் இருக்கும் தேவதைகளே! நீங்கள் என் தமயந்திக்கு பாதுகாவலாக இருங்கள். அவள் என்னிடம் பேரன்பு கொண்டவள், நானில்லாமல் தவித்துப் போவாள். நீங்களே அவளுக்கு அடைக்கலம் தர வேண்டும், என வேண்டியபடியே நீண்டதூரம் போய்விட்டான். நள்ளிரவை நெருங்கியது. ஏதோ காரணத்தால், தூக்கத்தில் உருண்ட தமயந்தி கண் விழித்துப் பார்த்தாள். இருளென்பதால் ஏதும் தெரியவில்லை. காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம், ஆங்காங்கே கேட்கும் மிருகங்களின் ஒலி தவிர வேறு எதுவும் அவள் காதில் விழவில்லை. இருளில் தடவிப் பார்த்தாள். அருகில் இருந்த மணாளனைக் காணவில்லை.

மன்னா...மன்னா... எங்கே இருக்கிறீர்கள்? இந்த இருளில் என்னைத் தவிக்க விட்டு எங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று, பக்கத்தில் எங்காவது அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில் மெதுவாக அவள் அழைத்தாள். சப்தமே இல்லை. சற்று உரக்க மன்னவரே! எங்கிருக்கிறீர்கள்? என்று கத்தினாள். பலனில்லை. போய் விட்டாரா! என்னைத் தவிக்க விட்டு எங்கோ போய்விட்டாரே! இறைவா! நட்ட நடுகாட்டில்  கட்டியவர் என்னை விட்டுச்சென்று விட்டாரே! நான் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பதற்கென்றே பிறந்தவளா? ஐயோ! நான் என்ன செய்வேன்? அவள் புலம்பினாள். பயம் ஆட்டிப்படைத்தது. நடனமாடிக் கொண்டிருந்த மயில் மீது, வேடன் விடுத்த அம்பு தைத்ததும் அது எப்படி துடித்துப் போகுமோ அதுபோல இருந்தது தமயந்தியின் மனநிலை. கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, கூந்தல் கலைய அழுது புரண்டாள். விடிய விடிய எங்கும் போகத் தோன்றாமல் அவள் அங்கேயே கிடந்து என்னவரே! எங்கே போய்விட்டீர்கள்! இது உங்களுக்கே அடுக்குமா! இறைவா! ஒரு அபலைப் பெண்ணென்றும் பாராமல் இப்படி கொடுமைக்கு ஆளாக்கிப் பார்க்கிறாயே! என்று அந்தக் காட்டிலுள்ள புலியின் கண்களிலும் கண்ணீர் வழியும் வகையில் அவள் உருகி அழுதாள். அவளது துன்பத்தை சற்றே தணிக்கும் வகையில் சூரியன் உதயமானான். அவள் முன்னால் சில மான்கள் துள்ளி ஓடின. மயில்கள் தோகை விரித்தாட ஆரம்பித்தன. மான்களே! மயில்களே! நீங்கள் நீண்ட காலம் இந்தக் காட்டில் மகிழ்வுடன் வாழ வேண்டும். என் மன்னவரைக் கண்டீர்களா? அவர் எங்கிருக்கிறார்? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்,  என்று  கதறினாள்.அங்குமிங்கும் சுற்றினாள். அந்த நேரத்தில் வேகமாக ஏதோ ஒன்று அவளது கால்களைப் பற்றி இழுத்தது. தன்னை யார் இழுக்கிறார்கள் என்று பார்த்தபோது, மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்கியிருப்பதே அவளுக்கு புரிந்தது. அவள் அலறினாள்.

மகாராஜா... மகாராஜா...இந்தப் பாம்பிடம் சிக்கிக் கொண்டேன். அது என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஓடி வந்து காப்பாற்றுங்கள், என்ற அவளது அலறல் சுற்றுப்புற மெங்கும் எதிரொலித்தது. இதற்குள் பாம்பு அவளது வயிறு வரை உள்ளே இழுத்து விட்டது. அப்போது அவளது பேச்சு மாறியது. தாங்கள் என்னை விட்டுப் பிரிந்த போதே என் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாத கல் மனம் கொண்டவள் என்பதால், இந்தப் பாம்பு என்னை விழுங்குகிறது போலும்! இருப்பினும், இந்த கல் நெஞ்சத்தவளை மன்னித்து என்னைக் காப்பாற்ற ஓடோடி வாருங் கள், என்றாள். கிட்டத்தட்ட இறந்து விடுவோம் என்ற நிலை வந்ததும், என் இறைவனாகிய நளமகராஜனே! இந்த உலகில் இருந்து பிரிய அனுமதி கொடுங்கள், என்று மனதுக்குள் வேண்டிய வேளையில், வேடன் ஒருவன், ஏதோ அலறல் சத்தம் கேட்கிறதே எனக் கூர்ந்து கவனித்தபடி அந்தப் பக்கமாக வந்தான். அவனைப் பார்த்த தமயந்தி, மனதில் சற்று நம்பிக்கை பிறக்கவே, ஐயா! இந்தப் பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,என்று கத்தினாள்.உடனே வேடன் அந்த பாம்பை தன் வாளால் வெட்ட, அது வலி தாங்காமல் வாயைப் பிளந்தது. இதைப் பயன்படுத்தி அவளை வெளியே இழுத்துப் போட்டான். பாம்பு வலியில் புரண்டபடிதவித்துக் கொண்டிருக்க, அவளை சற்று தள்ளி அழைத்துச் சென்றான் வேடன்.ஐயா! என்னைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றினீர்! இதற்கு பிரதி உபகாரம் என்ன செய்தாலும் தகும். தங்களுக்கு நன்றி, என்றாள். வேடன் அவளை என்னவோ போல பார்த்தான். இப்படி ஒரு பருவச்சிட்டா? இவளைப் போல் பேரழகி பூமிதனில் யாருண்டு, நான் ஒரு இளவஞ்சியைத் தான் காப்பாற்றியிருக்கிறேன்! என்று அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தவன், ஆம்..உன்னைக் காப்பாற்றியதற்கு எனக்கு பரிசு வேண்டும் தான்! ஆம்...அந்தப் பரிசு நீ தான்! என்றவன், அவளை ஆசையுடன் நெருங்கினான்


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #22 on: March 09, 2012, 11:35:40 AM »
நளதமயந்தி பகுதி-23

வேடன் இப்படிச் சொன்னானோ இல்லையோ!அட தெய்வமே! இப்படி ஒரு சொல் என் காதில் விழுந்ததை விட, அந்தப் பாம்பின் பசிக்கே என்னை இரையாக்கி இருக்கலாமே! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என யோசித்தவள், சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.மனிதனை சூழ்நிலைகள் தான் மாற்றுகின்றன. பஞ்சணையில் படுத்தவள்...தோழிகள் மலர் தூவ கால் நோகாமல் நடந்து பழகியவள்...ஒரு கட்டத்தில், கணவனின் தவறால் காடு, மேடெல்லாம் கால் நோக நடக்கவே சிரமப்பட்டவள்... இப்போது, ஓடுகிறாள்... ஓடுகிறாள்...புதர்களையும், காட்டுச்செடி, கொடிகளையும் தாண்டி... கற்பைப் பாதுகாக்க உயிரையும் பொருட் படுத்தாத நம் தெய்வப்பெண்கள் இன்றைக்கும் நம் தேசத்துப் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.வேடனுக்கோ அந்த காடு, அவன் வீடு மாதிரி...பழக்கப்பட்ட அந்த இடத்தில் அவனுக்கு ஓடுவது என்பது கஷ்டமா என்ன! வேட்டையாடும் போது, வேகமாக ஓடும் சிறுத்தையைக் கூட விடாமல் விரட்டுபவனாயிற்றே அவன்...மான்குட்டி போல் ஓடிய அவள் பின்னால் வந்து எட்டிப்பிடிக்க முயன்றான். தன்னால், இனி தப்பிக்க இயலாது என்ற நிலையில் தமயந்தியும் நின்று விட்டாள்.அந்தப் பூ இப்போது புயலாகி விட்டது. கண்களில் அனல் பறந்தது. வேடனே அவள் தோற்றம் கண்டு திகைத்து நின்று விட்டான். அந்தக் கற்புக்கனலே வேடனை எரித்து விட்டது. அவன் பஸ்மமாகி விட்டான். வேடனிடமிருந்து அவள் தப்ப காரணம் என்ன தெரியுமா? தன் கணவன் தன்னைக் கைவிட்டுப் போனதால் தானே இந்த நிலை ஏற்பட்டது என்ற எண்ணம் அவள் மனதுக்குள் இருந்தாலும், அந்த நிலையிலும் கூட, அவள் தன் கணவனைத் திட்டவில்லை. இதெல்லாம் தனது தலைவிதி என்றே நினைத்தாள்.

நன்மை நடக்கும் போது கணவரைப் பாராட்டுவதும், கஷ்டம் வந்ததும் அதற்கு அவனையே பொறுப்பாக்கி திட்டுவதும் இக்காலத்து நடைமுறை. ஆனால், அக்காலப் பெண்கள் அவ்வாறு இல்லை. எந்தச்சூழலிலும் கணவனைத் தெய்வமாகவே மதித்தனர். அதனால் தான் மாதம் மும்மாரி பெய்தது. தங்களுக்கு துன்பம் செய்தவனை கற்புக்கனலால் எரிக்குமளவு பெண்கள் சக்தி பெற்றிருந்தனர். என்ன தான் சனியின் கொடியகாலத்தை அனுபவித்தாலும் கூட, தமயந்தி தன் கற்புக்கு வந்த சோதனையில் இருந்து தப்பித்தாள் என்றால், அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மம் தான் அவளைக் காத்தது.இந்த சமயத்தில் வணிகன் ஒருவன் அவ்வழியாக வந்தான். அவன் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் அழுவதற்கான காரணத்தைக் கேட்டான்.நான் முன் செய்த பாவத்தின் காரணமாக காட்டுக்கு வந்தேன். என் கணவரைப் பிரிந்தேன். அவரைத் தேடி அலைகின்றேன், என்றாள். அந்த வணிகன் நல்ல ஒழுக்கம் உடையவன். பிறர் துன்பம் கண்டு இரங்குபவன்.பெண்ணே! இந்தக் காட்டில் இனியும் இருக்காதே! இங்கிருந்து சில கல் தூரம் நடந்தால், சேதிநாடு வரும். அங்கே சென்றால், உன் பிழைப்புக்கு வழி கிடைக்கும். உன் துன்பம் தீரும்,என்றாள்.மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றி சொன்ன தமயந்தி, வேகமாக நடந்து சேதிநாட்டை அடைந்தாள். கிழிந்த புடவையுடன் தங்கள் நாட்டுக்கு வந்த புதுப்பெண்ணைக் கண்ட சில பெண்கள், தங்கள் நாட்டு அரசியிடம் ஓடிச்சென்று, தாங்கள் கண்ட பெண்ணைப் பற்றிக் கூறினர்.அவளை அழைத்து வரும்படி அரசி உத்தரவிடவே, தோழிகள் தமயந்தியிடம் சென்று, தங்கள் நாட்டு அரசி அவளை வரச்சொன்னதாகக் கூறினர். தமயந்தியும் அவர்களுடன் சென்றாள்.அரசியின் பாதங்களில் விழுந்த அவள், விதிவசத்தால் தன் கணவனைப் பிரிந்த கதியைச் சொல்லி அழுதாள்.

அவள் மீது இரக்கப்பட்ட அரசி, அவளது கணவனைத் தேடிப்பிடித்து தருவதாகவும், அதுவரை பாதுகாப்பாக தன்னுடனேயே தங்கும்படியும் அடைக்கலம் அளித்தாள். ஒருவாறாக, தமயந்தி பட்ட கஷ்டத்துக்கு தற்காலிகத் தீர்வு கிடைத்தது. இதனிடையே, நளதமயந்தியால், அந்தணருடன் அனுப்பப்பட்ட அவர்களது பிள்ளைகள் விதர்ப்பநாட்டை அடைந்தனர். தங்கள் தாத்தா வீமனைக் கண்ட பிள்ளைகள் அரண்மனையில் நடந்த சம்பவங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். வீமன் அந்த அந்தணரிடம், அந்தணரே! நீர் வேகமாக இங்கிருந்து புறப்படும்! நளனும் தமயந்தியும் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வாரும்,என உத்தரவிட்டார். அந்தணர் மட்டுமின்றி, பல தூதுவர்களை நாலாதிசைகளுக்கும் அனுப்பி நளதமயந்தியைக் கண்டுபிடிக்க அனுப்பி வைத்தார். அரசனின் கட்டளையை ஏற்ற அந்தணன், ஏழுகுதிரை பூட்டிய தேரில் நளதமயந்தியை தேடிச்சென்றார். பலநாடுகளில் தேடித்திரிந்த அவர், அழகு பொங்கும் தேசமான சேதிநாட்டை அடைந்தார்.சேதி நாட்டு அரண்மனைக்குச் சென்ற அந்தணர், அந்நாட்டு அரசியுடன் இருந்த பெண்ணைப் பார்த்தார். அவள் தமயந்தி என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. அவள் முன் பணிந்து நின்ற அவர், அம்மா! தங்களைத் தங்கள் தந்தையார் அழைத்து வரச்சொல்லி உத்தரவிட்டார், என்றார். தமயந்தி அவரது பாதங்களில் விழுந்தாள்.தமயந்தி வடித்த கண்ணீர் அவரது பாதங்களைக் கழுவியது. அவளது துயரம் தாங்காத அந்த மறையவரும் கண்ணீர் வடித்தார். இந்த சோகமான காட்சி கண்டு, சுற்றி நின்றோர் முகம் வாடி நின்றனர். இந்தப் பெண் மீது இந்த அந்தணர் எந்தளவுக்குபாசம் வைத்துள்ளார், என தங்களுக்குள்பேசிக்கொண்டனர். அப்போது தான் சேதி நாட்டரசிக்கு அதிசயிக்கத்தக்க செய்தி ஒன்று கிடைத்தது


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #23 on: March 09, 2012, 11:36:56 AM »
நளதமயந்தி பகுதி-24

சேதிநாட்டரசி முன் நின்ற அந்தணர்,தேவியே! தங்கள் முன் நிற்கும் இந்தப்பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? என்றார். அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள். தமயந்தியிடம்,இவர்கள் நாட்டில் இத்தனை காலம் இருந்தாயே! இந்த பேரரசியை யாரென்று நீயும் அறிந்து கொள்ளவில்லை. காரணம், நீ இவர்களை இளமையிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,என்றவர், அரசியை நோக்கி, அம்மா! இவள் உங்கள் மூத்த சகோதரியின் மகள். அதாவது, நீங்கள் இவளுக்கு சிற்றன்னை முறை வேண்டும், என்றார்.அவள் அதிர்ந்து போனாள். தமயந்தியை அள்ளி அணைத்துக் கொண்டாள். அன்புமகளே! இளவரசியான நீயா, இத்தனை நாளும் எங்கள் இல்லத்தில் இருந்தாய்? உன் துயர் அறிந்துமா நான் தீர்க்காமல் இருந்தேன்! என்றவள் மயங்கியே விழுந்துவிட்டாள். அவளுக்கு சுற்றியிருந்தவர்கள் மயக்கம் தெளிவித்தனர். சேதிநாட்டரசன், தன் மனைவி மயக்கமடைந்த செய்தியறிந்து விரைந்து வந்தான். கண்விழித்த ராணி,அன்பரே! இவள் என் சகோதரி மகள். இந்த மறையவர் சொன்னபிறகு தான், இவள் நம் உறவினர் என்று தெரிய வந்தது. இவளைப் பத்திரமாக, விதர்ப்ப நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இவளுக்கு இனியாவது நல்ல காலம் பிறக்கட்டும். இவளது கணவன் நிச்சயம் இவளுடன் வந்து சேர்வான், என்றாள்.சேதிநாட்டரசனும் மனம் மகிழ்ந்து அவளைத் தேரில் ஏற்றி அந்தணருடன் அனுப்பி வைத்தான். அவள் சென்ற தேர் விதர்ப்ப நாட்டுக்குள் நுழைந்ததோ இல்லையோ, மக்களெல்லாம் குழுமி விட்டனர். அழகே உருவாய் இருந்த தங்கள் இளவரசி, கணவனால் கைவிடப்பட்டு, குழந்தைகளையும் இதுவரைக் காணாமல், உருக்குலைந்து வந்தது கண்டு அவர்கள் அழுதனர். குறிப்பாகப் பெண்கள், அம்மா! உங்களுக்கா இந்த நிலை வரவேண்டும்! என வாய்விட்டுப் புலம்பினர். சிலர் மணலில் விழுந்து புரண்டு அழுதனர்.

நமக்கே இப்படி இருக்கிறது. அரண்மனையில் இருக்கும் இளவரசியின் தந்தை வீமராஜாவும், தாயும் இவளது இந்தக் கோலத்தைப் பார்த்தால் மனமொடிந்து போவார்களே! என்ன நடக்கப்போகிறதோ, என்று பயந்தவர்களும் உண்டு. பெண்ணே! உன் கணவன் உன்னை விட்டுப் பிரிந்து நடுக்காட்டில் தவிக்கவிட்டானே! அப்போது நீ என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாயோ? என்று கதறியவர்களும் உண்டு.இவ்வாறாக தமயந்தி நாடு வந்த சேர்ந்த அந்த சமயத்தில், அவளை விட்டுப் பிரிந்து சென்ற நளன் கால்போன போக்கில் சென்றான். ஓரிடத்தில் பெருந்தீ எரிந்து கொண்டிருந்தது. மன்னா, என்னைக் காப்பாற்று...என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது, காப்பாற்று, என்று அபயக்குரல் எழுந்தது. தன்னை ஒரு மன்னன் எனத்தெரிந்து அழைப்பது யார் எனத் தெரியாமல் நளன் சுற்றுமுற்றும் பார்த்தான். தீக்குள் இருந்து குரல் வருவது கேட்டதும், ஐயோ! யாரோ தீயில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள், என உறுதிப் படுத்திக் கொண்டான். கருணையுள்ளம் கொண்ட அவன் அங்கு ஓடினான்.தீக்குள் புகுந்து உள்ளே சிக்கித்தவிப்பவரைக் காப்பாற்றுவது எப்படி என்று யோசித்த வேளையில், முன்பு அவன் தேவர்களின் திருமண விருப்பத்தை தமயந்தியிடம் தெரிவிப்பதற்காக தூது சென்ற போது, இந்திரன், அக்னி முதலானவர்கள் அளித்த வரம் ஞாபகத்திற்கு வந்தது. அதன்படி அக்னி அவனைச் சுடாது என்பது அவன் பெற்ற வரம். அந்த வரத்தைப் பயன்படுத்தி, அக்னி பகவானை மனதார துதித்தான். ஐயனே! இந்த நெருப்புக்குள் யாரோ சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும், என்றான். யாரென்றே தெரியாத, நல்லவனா, கெட்டவனா என்றே புரியாத முன்பின் அறியாதவர்களுக்காகச் செய்யும் உதவி இருக்கிறதே! இது மிகப்பெரிய உதவி! நல்ல மனமுடையவர்களால் தான் அதைச் செய்ய முடியும்!

அப்போது, முன்பு கேட்ட குரல் பேசியது.மன்னா! நீ சிறந்த குணநலன்களைக் கொண்டவன் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரிய தபஸ்வி. வேதநூல் களைக் கற்றறிந்தவன். இந்த நெருப்பில் சிக்கித் தவிக்கிறேன். என்னை கார்க் கோடகன் என்பர். நான் நாகங்களுக்கு தலைவன், என்னைக் காப்பாற்று. நெருப்பில் இருந்து தூக்கி வெளியே விடு, என்றது. நளனும் அக்னியைத் துதிக்கவே, அவன் பாம்பைக் கையில் தூக்கினான். இந்நேரத்தில், சனீஸ்வரர் தன் பணியைத் துவக்கி விட்டார். பாம்பு அவனிடம்,மகாராஜா! என்னை உடனே வீசி விடாதே. ஒன்று, இரண்டு என எண்ணி தச (பத்து) என எண்ணி முடித்தபின் தரையில் விடு, என்றது. அப்பாவி நளனுக்கு, தச என்பதற்கு பத்து என்ற பொருள் தான் தெரியும். அதற்கு கடி என்ற பொருள் இருப்பது தெரியாது.  இவனும் அந்த பாம்பு சொன்னது போல எண்ணவே, தச என்றதும் அவனைக் கடித்து விட்டது பாம்பு. அவ்வளவு தான்! நளனின் உடலில் விஷமேறி, காண்பவர் வியக்கும் வண்ணமிருந்த அவனது சிவப்பழகு, கன்னங்கரேலென்றாகி விட்டது. கார்க்கோடகா! இது முறையா? ஆபத்தில் தவித்த உன்னைக் காத்த எனக்கு இப்படி ஒரு கதியைத் தந்துவிட்டாயே! நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? என்றான். மன்னவனே! உன்னைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்தேன். நீ இந்தக் காட்டில் மனைவியைப் பிரிந்து சுற்றுவதை நான் அறிவேன். மனிதனுக்கு எல்லா கஷ்டங்களும் விதிப்படியே வருகின்றன. இந்த கரிய நிறத்தில் மாறியதன் காரணத்தை நீ விரைவிலேயே தெரிந்து கொள்வாய். இந்த கருப்பு தான் உன்னைக் காப்பாற்றப் போகிறது. அதே நேரம், கொடிய வெப்பத்தை எனக்காக தாங்கிய உன் வள்ளல் தன்மைக்கு பரிசும் தரப்போகிறேன். இதோ! பிடி! என்று ஒரு அழகிய ஆடை ஒன்றை நீட்டியது. இந்த ஆடை எனக்கு எதற்கு?என்றான் நளன்.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #24 on: March 09, 2012, 11:38:15 AM »
நளதமயந்தி பகுதி-25

அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். இங்கிருந்து அயோத்தி செல். அந்நாட்டு மன்னன் இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும், சமையல் காரனாகவும் இரு, என சொல்லி விட்டு மறைந்து விட்டது. நளனும் அயோத்தி வந்து சேர்ந்தான். அரசனை சந்திக்க அனுமதி பெற்றான். இருதுபன்னனிடம் பேசி சமையல்காரன் ஆனான். இதனிடையே கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் இருந்த தமயந்தி, ஒரு புரோகிதரைஅழைத்து, நீர் என் கணவர் நளனை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வாரும். அவர் ஒருவேளை மாறுவேடத்தில் இருந்தாலும், அடையாளம் காண ஒரு வழி சொல்கிறேன். காட்டிலே கட்டிய மனைவியை தனியே விட்டு வருவது ஒரு ஆண்மகனுக்கு அழகாகுமா? என்று நீ சந்தேகப்படுபவர்களைப் பார்த்துக் கேளும். இந்தக் கேள்விக்கு யார் பதிலளிக்கிறார்களோ அவர் யார் எனத்தெரிந்து அழைத்து வாரும், என்றாள். அவரும் கிளம்பி விட்டார். பல இடங்களில் சுற்றி, அயோத்தியை வந்தடைந்தார். பொது இடத்தில் நின்று கொண்டு, தமயந்தி தன்னிடம் சொல்லியனுப்பிய கேள்வியைச் சத்தமாகச் சொன்னார். அப்போது தற்செயலாக அங்கு நின்ற நளன் காதில் இது கேட்டது. அவன் புரோகிதர் அருகே வந்தான்.புரோகிதரே! நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. விதிவசமாக நாங்கள் பிரிந்தோம்,என்று பதிலளித்தான். அவனது உருவத்தைப் பார்த்தால் அவன் நளனாக தெரியவில்லை புரோகிதருக்கு. யாரோ ஒருவன் நம் கேள்விக்கு பதிலளிக்கிறான் என நினைத்து நாடு திரும்பி விட்டார். அவர் வரவுக்காக காத்திருந்த தமயந்தி,புரோகிதரே! நான் சொன்ன கேள்விக்கு யாராவது பதிலளித்தார்களா? என்று கேட்டாள்.

அம்மா! ஒரே ஒருவன் தான் என் கேள்விக்கு பதிலளித்தான். அவனது உடல்வாகு மன்னன் போல இருக்கிறது. ஆனால், அவன் கருப்பு நிறத்தவன், மன்னனாகத் தெரியவில்லை, என்றார். அப்படியா? என்ற தமயந்தி,புரோகிதரே! ஒரு யோசனை. மீண்டும் அயோத்தி செல்லும்! எனக்கு மீண்டும் சுயம்வரம் நடக்கப்போவதாக அயோத்தி மன்னரிடம் சொல்லும். ஒருவேளை அங்கிருப்பவர் எனது கணவராக இருந்தால், அவர் பதறிப்போய் மன்னனுக்கு தேரோட்டி இங்கு வருவார், என்றாள். இரண்டாம் சுயம்வரமா? இது பெண்களுக்கு ஏற்புடையதல்லவே என்று இருதுபன்னன் யோசித்த வேளையில், நளன் மன்னனிடம், அரசே! கற்புடைய பெண் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவே மாட்டாள். நளன் பிரிந்து விட்டான் என்ற காரணத்துக்காக அவள் இப்படி செய்வாள் என என்னால் நம்ப முடியவில்லை, என்று மன்னனைப் போக விடாமல் நளன் தடுத்தான். வாகுகா! நீ சொல்வது பற்றி எனக்கு கவலையில்லை. அந்த தமயந்தி கடந்த சுயம்வரத்திலேயே எனக்கு கிடைத்திருக்க வேண்டியவள். அந்த நளன் அவளைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளோடு வாழ முடிவு செய்து விட்டேன், எடு தேரை, என உத்தரவு போட்டுவிட்டான் இருதுபன்னன். நளன் வருத்தப்பட்டான். இருப்பினும், தன்னைப் பற்றி புரோகிதர் சொன்னதைக் கேட்டு சந்தேகப்பட்டு, தன்னை வரவழைக்க இப்படி செய்திருக்கலாம் என்று முடிவு செய்து கிளம்பினான். தேர் விதர்ப்ப நாடு நோக்கி மனோவேகத்தை விட வேகமாகப் பறந்தது. அயோத்தி மன்னன் மனதில் சந்தேகம் ஏற்பட்டது.  இப்படி ஒரு தேரோட்டியா! இந்த வேகத்தில் தேரோட்ட யாராலும் முடியாதே. இவன் இப்படிப் போகிறானே! எதற்கும் இவன் யாரென சோதனை செய்து பார்ப்போம் என முடிவு செய்து, வாகுகா! அதோ! ஒரு மரம் தெரிகிறதே! அதில் பத்தாயிரம் கோடி காய் இருக்கும் என்கிறேன். சரியாவென்று எண்ணிப்பார்த்துக் கொள், என்றான். நளனும் அம்மரத்தின் கீழே தேரை நிறுத்தி அண்ணாந்து பார்த்து,நீங்கள் சொல்வது சரிதான், என்றான்.

அயோத்தி மன்னன் அவனிடம், நளனே! எதையும் எண்ணிப் பார்க்காமலேயே இதில் இத்தனை தான் இருக்கும் என்று சொல்லும் கலையில் நான் வல்லவன். நீயோ அதிவேகமாக தேரோட்டும் கலையில் வல்லவனாக இருக்கிறாய். நம் தொழில்களை ஒருவருக்கொருவர் சொல்லித் தருவோமா? என்று கேட்டான். கேட்டதுடன் நிற்காமல், நளனுக்கு எண்ணாமலேயே கணக்கிடும் கலையைச் சொல்லியும் தந்தான். பின் இருவரும் விதர்ப்ப நாட்டை அடைந்தன். தமயந்தியின் தந்தை வீமராசன் ஆச்சரியத்துடன், அயோத்தி மன்னா! நீ என்னைக் காண எதற்காக வந்தாய்? எனக்கேட்டார். உன்னைப் பார்க்கத்தான், என்று பதிலளித்தான் இருதுபன்னன். இதற்குள் குதிரைகளை இளைப்பாற வைத்தான் நளன். பின் சமையலறைக்குள் சென்றான். வந்திருப்பவனை தமயந்தியால் அடையாளம் காண முடியவில்லை. இவன் இவ்வளவு கருப்பாக இருக்கிறானே! ஏதும் வர்ணம் பூசி மறைத்திருப்பானோ? எதற்கு சந்தேகம்? என நினைத்தவள், ஒரு பணிப்பெண்ணை அழைத்து, நீ மறைந்திருந்து அந்த சமையல்காரன் செய்யும் வேலைகளைக் கவனித்து வந்து சொல், என்றாள். இன்னொருத்தியை அழைத்து, நீ என் மகன் இந்திரசேனனையும், மகள் இந்திரசேனையையும் அந்த சமையல்காரனுடன் நீண்டநேரம் விளையாட வை, என்றாள். அந்தக் குழந்தைகள் நளன் அருகே சென்றனர். அவர்களை அழைத்த நளன்,நீங்கள் என் பிள்ளைகள் போலவே உள்ளீர்கள். நீங்கள் யார்? என்று கேட்டான். தாயை விட்டு தந்தை பிரிந்த கதையையும், தங்கள் தந்தை நளமகாராஜா என்றும் அவர்கள் சொல்ல அவன் மனதுக்குள் அழுதான். குழந்தைகளிடம் அவன் பேசியதை பணிப்பெண் வந்து சொன்னாள். இன்னொருத்தி வேகமாக வந்து, இளவரசி! அந்த சமையல்காரன் தீயின்றியே சமைத்தான். அவன் உள்ளே சென்றதுமே உணவு தயாராகி விட்டது, என்றாள். இதைக்கேட்டதும் தமயந்தி மயக்கநிலைக்குப் போய்விட்டாள்.


Offline Anu

Re: நளதமயந்தி
« Reply #25 on: March 09, 2012, 11:39:36 AM »
நளதமயந்தி பகுதி-26

ருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே அக்னி பகவான், நெருப்பின்றியே சமைக்கும் வரத்தையும் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த விஷயம் தமயந்திக்குத் தெரியும். தன் தந்தையிடம் ஓடினாள். தந்தையே! இங்கே சமையல்காரராக இருப்பவர் என் கணவர் தான்,  என்று உறுதியாகச் சொன்னாள். இதைக்கேட்ட வீமராசன் மனம் பதைத்து சமையலறைக்கு ஓடினான்.நளனிடம்,உண்மையைச் சொல்! நீ யார்? உன் உண்மை உருவைக் காட்டு, என்றான். நளனும் இதற்கு மேல் எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. அவன்,  கார்க்கோடகன் தனக்கு தந்த ஆடையை எடுத்து தன் மேல் போர்த்தினான். பழைய உருவத்தை அடைந்தான். சிவந்த மேனியைப் பெற்றான். இந்த சமயத்தில் அவனைப் பிடித்திருந்த சனிபகவானும், தனது காலத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். நளன் புத்துணர்ச்சி பெற்றான். அவனைக் கண்ட தமயந்தி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள். தன் மேல் கொண்ட அன்பால், தன்னைக் கண்டுபிடிக்க அவள் எடுத்த முயற்சிகளை நளன் நாதழுக்க கூறி அவளை வாழ்த்திய நளன், காட்டிலே உன்னை விட்டுச்சென்ற இந்தக் கயவனைக் காணப் பிடிக்காமல், உன் விழித்திரைகளை நீர் நிறைத்து மறைக்கிறதா கண்ணே! என நளன் அவளிடம் கேட்டான். அவளோ அவனது பாதங்களில் விழுந்து, இல்லை அன்பரே! உங்களை மீண்டும் காண்போம் என்று நினைக்கவே இல்லை. இது ஆனந்தத்தில் வழியும் கண்ணீர், என்று அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். குழந்தைகளும் ஓடிவந்து தந்தையை அணைத்துக் கொண்டனர்.

வாழ்க்கையில் மனிதன் நிறைய துன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஏனெனில், துன்பத்திற்குப் பிறகு வரும் இன்பத்தைத் தான் மனிதன் சுவைத்து அனுபவிக்க முடியும். நளனும், தமயந்தியும்,  குழந்தைகளும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமா! இப்போது, அவர்கள் இன்பமலையின் உச்சத்தில் இருந்தனர். வீமராசனும், தன் மகளுக்கு மீண்டும் நல்வாழ்வு கிடைத்தது குறித்து மகிழ்ந்தான்.இந்த இன்பக்காட்சி கண்டு தேவர்கள் கூட மகிழ்ந்தார்கள். வானில் இருந்து பூமழை பொழிவித்தார்கள். நளனே! உன்னைப் போல் உயர்ந்த குணமுள்ளவர்கள் யாருமில்லை. எந்தச்சூழலிலும் நீ பிறர் உதவியைக் கேட்கவில்லை. ஏன்...உன் மாமனார் வீட்டில் கூட நீ தங்க மறுத்தாய்! கஷ்டங்களை மனமுவந்து அனுபவித்தாய். சனீஸ்வரன் உனக்கு தொல்லை கொடுப்பது தெரிந்தும், நீ ஆத்திரப்படவில்லை. உன்னிலும் உயர்ந்தவன் உலகில் இல்லை, என்று அசரிரீ எழுந்தது.இந்த நேரத்தில் சனீஸ்வரரே அங்கு வந்துவிட்டார்.நளனே! நல்லவனான ஒருவன், பாதை தவறும் நேரத்தில் அவனைச் சீர்படுத்த பல தொல்லைகளைத் தருகிறேன். அதை அனுபவப்பாடமாகக் கொண்டு அனுபவிப்பர்களை மீண்டும் நான் அணுகமாட்டேன். நீ நீதிதவறாத ஆட்சி நடத்தினாய் என்றாலும் சூது என்னும் கொடிய செயலுக்கு உடன்பட்டாய். இனி அத்தகைய நினைப்பே உனக்கு தோன்றக்கூடாது என்பதற்கே இத்தனை சோதனைகளையும் அனுபவித்தாய். இருப்பினும், சூதால் தோற்ற நீ போர் தொடுத்து உன் நாட்டைப் பெறுவது முறையல்ல. மன்னர்களுக்குரிய தர்மப்படி மீண்டும் சூதாடியே நாட்டை அடைவாய். உன் மனைவியின் கற்புத்திறனும் உன்னைக் காத்தது, என்றவர்,நீ என்னிடம் என்ன வரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன், என்றார்.நாமாக இருந்தால் என்ன கேட்டிருப்போம்? அந்த புட்கரனைப் போய் பிடி. அவனிடமிருந்து நாட்டை எனக்கு வாங்கிக் கொடு, என்று தானே! பொதுநலவாதியான நளனோ, அப்போதும், சனீஸ்வரரே! என் சரிதம் இந்த உலகத்துக்கு பாடமாக இருக்கட்டும். என் கதையை யார் ஒருவர் கேட்கிறாரோ, அவரை நீர் பிடிக்கக்கூடாது. அவருக்கு எந்த சோதனையும் தரக்கூடாது, என்றான்.

நளனே! உன் கோரிக்கையை ஏற்கிறேன். உன் கதை கேட்டவர்களை நான் எக்காரணம் கொண்டும் அணுகமாட்டேன், இது சத்தியம், என்ற சனீஸ்வரன் அங்கிருந்து மறைந்து விட்டார்.பின், விதர்ப்பநாட்டரசன் வீமன் தன் மகள், மருமகன், பேரக்குழந்தைகளுக்கு விருந்து வைத்தான். அப்போது இருதுபன்னன் வந்தான். நளனே! உன்னை என்னிடம் பணி செய்ய வைத்த காரணத்துக்காக வருந்துகிறேன். உன் பணிக்காலத்தில் நான் உன்னிடம் ஏதேனும் கடுமையாகப் பேசியிருந்தால் அதைப் பொறுத்துக் கொள், நான் அயோத்தி கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு போய்விட்டான். இதன்பிறகு, வேலேந்திய வீரர்கள் பின் தொடர, தன் சொந்த நாடான நிடதநாட்டுக்கு கிளம்பினான். புட்கரனுடன் மீண்டும் சூதாடினான். முன்பு சனீஸ்வரரின் அருளால் தான் சூதில் வென்றோம் என்பதைக் கூட மறந்து விட்ட புட்கரன், ஆசையில்  பகடைகளை உருட்ட நாட்டை இழந்தான். மீண்டும் ஆட்சிப்பொறுப்பை நளனிடம் ஒப்படைத்து விட்டு, தனது நாட்டுக்கு போய்விட்டான். தன் தலைநகரான மாவிந்தத்தில் இருந்த அரண்மனைக்கு மனைவி, குழந்தைகளுடன் நளன் சென்றான். மக்கள் மீண்டும் நளனை மன்னனாகப் பெற்ற மகிழ்ச்சியில் அவனை வாழ்த்தினர். மக்களின் முகம் மேகத்தைக் கண்ட மயில் போலவும், பார்வையற்றவனுக்கு பார்வை கிடைத்தால் ஏற்படும் பிரகாசம் போலவும் ஆனது. நளனின் இந்த சரித்திரத்தை தர்மபுத்திரருக்கு வியாசமுனிவர் சொல்லி முடித்தார்.தர்மபுத்திரா! கேட்டாயல்லவா கதையை! நளனின் இந்த துன்பத்தில் நூறில் ஒரு பகுதியைக் கூட நீ அனுபவிக்க வில்லை, அப்படித்தானே! இருப்பினும், சூதால் வரும் கேட்டை தெரிந்து கொண்டாய் அல்லவா! எனவே, நீயும் சூதால் தோற்றது பற்றி வருந்தாதே. உனக்கும் நல்ல நேரம் வரும், என்று சொல்லி விடை பெற்றார். நாமும் நளசரிதம் கேட்ட மகிழ்ச்சியுடன், சனீஸ்வரரின் அன்புத்தொல்லையில் இருந்து விடுபடுவோம். நல்ல பழக்கங்களை மேற்கொள்வோம். நல்லதை மட்டுமே சிந்திப்போம்.