Author Topic: உனக்கும் எனக்குமானது காதல் மட்டும் இல்லை..  (Read 609 times)

Offline Guest

நினைவுகளை கொல்லுதல்
 என்பதொன்றும் அத்தனை எளிதில்லை..

நீ ஏன் நினைவுகளாய் தொடர்கிறாய்
 என்பது கோடிப் பொன் பெறுமானமுள்ள
கேள்வியும் இல்லை.

'காதலென்பது யாதெனில்' என
 பட்டியலிட்டு வாய்ப்பாடெழுத உன்னோடானது
 காதல் மட்டுமில்லை.

வா என்றழைத்தால் நீ வரப்போவதும் இல்லை,
வந்துவிடு என நான்
அழைக்கப்போவதும் இல்லை.

உன்னில் நான் என்பது
'எனக்கு பிடித்தமான நான்'
என்னில் நீ என்பதும்
'எனக்கு பிடித்தமான நீயே'.

ஏன்/எப்போது
காதல் கொண்டோம்?.
என்றோ ஒரு நாளில் காதலுக்கும்
 முந்தைய ஒரு இனக்கவர்ச்சியில்
ஆரம்பித்திருக்கும்...

ஒவ்வொன்றாய் யோசித்தலில்
ஒன்றிலும் தீராத காரணங்களோடு
தொடர்கிறது பட்டியல்.

"மனிதர் உணர்ந்து கொள்ள இது" என
மிகைப்படுத்துதலிலும் நம்பிக்கை இல்லை...
நமக்குள் இன்ன உறவென்று
நாம் ஒருபோதும் ஒப்புக்கொண்டதும் இல்லை.

காதலில்லை என்றோம், ஆம் என்றோம்.

புரியவைக்க வேண்டிய தேவைகள்
 நமக்கில்லை என்றோம், ஆமோதித்தோம் .

நட்பென்றோம், அதையும் தாண்டி என்போம்.

நம் குறைகளுக்காய் பரஸ்பரம்
அனுதாபம் கொண்டோம்,
நிறைகளில் பெருமிதமும்.

இயல்பாய் ஒத்துப் போயிருந்தோம்...
எந்த மெனக்கெடல்களும் இன்றி
நினைவுகளை ஆக்கிரமித்திருந்தோம்.

சுயமாய் மிகைப்படுத்தி தூரமாவோம்,
வலிகள் உள்ளிருத்தி உனக்காய்
அகன்றதாய் நானும்
 எனக்காய் அகன்றதாய் நீயும்
பொய்யாய் உருவகித்து அகன்று
 மீண்டும் தொடர்வோம்.

மீண்டும் ஏதேனும் பயண வழிகளில்
 காலம் நம்மை எதிரில் நிறுத்தும் மட்டும்,
உன்னை கொள்வதற்கு எனக்கும்
என்னை கொள்வதற்கு உனக்கும்
 தகுதியில்லை என சுயம் தாழ்த்தி தொலைந்தும் போனோம்.

காலம் தொலைத்துப்போன
காதலர்கள் நாம்,
காலத்தை தொலைத்த காதல் நம்முடையது .
உனக்கும் எனக்குமானது காதல் மட்டும் இல்லை..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ