3
« Last post by Shreya on Today at 03:37:35 AM »
நினைவுப் பெட்டகம்!!
ஜன்னல் ஓரமாய், ஆச்சி தந்த சுக்குமல்லி
காபியின் நறுமணம்..நேற்று பெய்த பனிப்பொழிவில்,
நிலமெல்லாம் வெண் போர்வை!
கவலையறியாது அதில் திளைக்கும் அந்தச் சிறுமி...
எனக்குள் கிளறுகிறாள், நான் ஓடித்திரிந்த
அந்த 'அக்னி' காலத்தை!!
சுடலைமாடன் கொடைச் சத்தமும், செந்நிறத் தேரி மணலும்..
தாகம் தீர்த்த செக்கச் சிவந்த கொள்ளாமரப் பழங்களும்!
சொர்க்கமாய் விரிந்திட, ஆச்சியின் விரல் பிடித்து நான் நடந்த நாட்கள்!!
சாணம் மெழுகிய முற்றம், வியர்வை சிந்திய ஆட்டம்,
அரசமரப் பீப்பியின் ஓசையும், அந்த வாழைக்குருத்தின் வாசமும்...
பல்லாங்குழியும், கூட்டாஞ்சோறும்
இன்றும் என் நினைவலைகளில்!!
"என்ன பிள்ளை இப்படியா சாப்பிடுவாய்?" - ஆச்சியின் அதட்டலில்
வட்டில் நிறைய நெல் சோறு.. பேரன்பின் ருசியோடு!
அவளுக்கு 'சம்பா', எனக்காக 'நெல்' அரிசி,
விக்கிடுமோ எனத் துடித்த அவளின் அந்தப் பாசம்,
இந்தப் பனிக் குளிரை விடவும் இதமான கதகதப்பு!!
நிழல் தேடும் வெயிலில் நாவூறும் நுங்கும், சுடச்சுடப்
பனங்கிழங்கும்..குச்சி ஐஸும், கிணற்று நீச்சலும்,
பனை ஓலை மாம்பழம் போட்ட பதநீரும்..ஜவ்வு மிட்டாயும்..
கருப்பட்டி கிடங்கில் அவள் கொடுத்த கூப்பணியும்..
அந்தக் கயிற்றுக் கட்டிலில் கிடைக்கும் சுகமான தூக்கம்!!
சுமைகளற்ற அந்த வசந்த காலம்!
மீண்டும் வாராதா அந்தப் பிள்ளைப்பருவம்??
ஏக்கத்தின் விளிம்பில் நின்று - என்
இதயம் இன்று ஏதிலியாய் அலைகிறது!!
நாட்கள் நகர்ந்து தொலைந்தாலும் - என்
நினைவுப் பெட்டகத்தில் இன்றும்
பசுமையாய்... உயிர்ப்புடன்!