9
« Last post by Yazhini on Today at 03:20:44 AM »
அப்பா செய்துதந்த காகித கப்பல்களில்
இன்றுவரை மூழ்காமல் பயணிக்கிறது
குழந்தை உள்ளம்...
அடை மழைக்காலம்...
அப்பாவின் அண்மையில் தராசின் மேல்,
மூக்குப்பொடி நறுமணத்துடனே
ஆணியில் ஆடிய காகிதம்
கப்பலாக உருமாறிய அதிசயம்...
அந்த அழகிய காகித கப்பல்
தெருவில் தேங்கிய மழைநீரில்
தன் பிரம்மாண்டமான
முதல் பயணத்தை ஆரம்பித்தது...
தண்ணீரில் அங்குமிங்கும் அசைந்தாடிய
கப்பலைக் கண்டு பிரமித்து
கைத்தட்டி ஆரவாரித்த என் கன்னத்தில்
அப்பாவின் அன்பு முத்தம் - இன்றும்
அதனை முத்தாரமாக்கும்
முத்து மழைத்துளிகள்...
குளிருக்கு இதமாக அன்னைமடி
சுடசுட போண்டா பஜ்ஜி.
இடி இடித்தால் என்ன?
செவியைக் கிழித்தால் என்ன??
பாதுகாத்து கட்டிப்பிடித்து கொள்ளும்
அம்மாவின் கைகள்...
மழைக்கால சோம்பலுக்கு
தீனிப்போடும் அம்மாவின் பழங்கதைகள்.
அதில் பேய்கள் ஆட்டம் போடும்
பூதம் ஆளைத் தின்னும்.
ஆனால் அம்மாவின் பாதுக்காப்பால்
எதுவும் என்னை நெருங்காது...
இன்றும் அன்னைமடி கதகதப்பை
தேட செய்கிறது மழை...
நண்பர்கள் அனைவரும் வந்துவிட வேண்டும்
ஆனால் ஆசிரியர் ஒருவர்கூட வரக்கூடாது
என்ற பிரத்தனையுடன்
முழுமையாக நனைந்து தண்ணீர்
சொட்டசொட்ட வகுப்பறை...
மழையின் காரணமாக நடைபெறாத வகுப்பறை
உச்சக்கட்ட மகிழ்ச்சியின் வரையறை.
இடிசத்தத்திற்கு "ஓ" என்ற
பின்பாட்டு பாடியது இன்றும்
இடியின் முழக்கத்தோடு
இணைந்தே ஒலிக்கும்...
மழலையோடு மழலையாக மாற்றும் மழை...
தன் வெள்ளிக்கம்பிகளால்
பல அழகிய நினைவுகளைக் கோர்த்து
பூமியை மட்டுமல்லாமல்
மனதையும் குளிர செய்கிறது.... ☔ ☔ ☔