Author Topic: பச்சை தாஜ்மகால்  (Read 1202 times)

Offline thamilan

பச்சை தாஜ்மகால்
« on: February 01, 2018, 06:54:46 PM »
காதலுக்கென்று எந்த சக்தியும் இல்லை. காதல் மகத்துவமிக்கது, எதையும் சாதிக்கவல்லது என்பதெல்லாம் பொய்.நான் பத்து வருடங்களளாக காதலித்துக் கொண்டிருக்கிறேன். எனக்காக காதல் எதையும் சாதிக்கவில்லை.

          வா நாம் வாழ்வததற்காக  வாங்கியிருக்கும் வீட்டை பார்த்து விட்டு வருவோம்" என்று காரில் என்னை ஏற்றி அழைத்து வருகையில் இப்படி பேசுகிறார் அவர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

           உன்னை முதல் முறையாக பச்சை பாவாடை சட்டையில் பார்த்தது..... எனக்கு என்றும் மறக்காது. ஏனென்று சொல்லாமல் முதல் பார்வையிலேயே என்னை சுற்றி வளைத்துக் கொண்டாய். கனவுகளையும் ஆசைகளையும் என் மேல் அள்ளித் தெளித்தாய்.,,,,,,,,
      உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய் நாய்க்குட்டி போல அன்பாக வளர்க்க ஆசை .....
     நீ செல்லும் இடமெல்லாம் உன்னை நிழலாக பின் தொடர்ந்து உன் நிழலாகிப் போவதே என் கனவு ,,,,,,
     நான் படிக்கும் பி.எஸ் ஸி. முதல் ஆண்டை விட்டு விட்டு, உன்னோடு பத்தாம் வகுப்பில் படிக்க முடியாதா என்ற கவலை  ......
      ஆனால், கடைசிவரை என் கல்லூரிக்காலம் முடிந்து போகிறவரை, உன்னிடம் பேச வேண்டும் என்ற குறைந்த பட்ச ஆசை கூட நிறைவேற்றி வைக்கவில்லை காதல். நெஞ்சு நிறைய காதலுடன் போய் விட்டேன் கல்லூரியை விட்டு.
      அதன் பிறகு ஏழு வருடங்கள் ஓடி விட்டன. உன்னோடு வாழ்வதற்கு தேவையான, உன்னை சொந்தமாக்கிக் கொள்ளத் தேவையான தகுதியுடன் இன்று வந்து உன்னை சொந்தமாக்கிக் கொண்டேன். இப்போது கூட நான் தான் எனது காதலுக்காக வெற்றியை தேடிதந்தேனே ஒழிய, காதல் எனக்கு எதையும் தந்ததில்லை.
       சாதித்த சந்தோசம் தான் ,!!! ஆனால், பத்து வருடங்களுக்கு முன் பதினைந்து வயதில் உன்னிடம் எனக்கிருந்த ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனக்கு.
இவர் பேச்சு என்னைத் திகைக்க வைக்கிறது. எனக்கும் இவருக்கும் சில தினங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. அதும் எனது அப்பா பார்த்து   சொன்ன மாப்பிள்ளை இவர். ஆனால் இவரோ என்னைப் பத்து வருடங்களாக காதலித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்

   அந்த பச்சை வர்ண உடையே நீ பள்ளிக்குப் போகையில் எதிரே உன்னையே பார்த்துக்கொண்டுவரும் என்னைக் கொஞ்சம் கூட பார்க்காமல், என் கண்களில் வழியும் காதலைக் கொஞ்சம் கூட அறியாமல் நீ கடந்து போகையில், என் இதயம் அடைந்த வேதனைகள்.....
    அதே வேளைகளில், அதே உடையில்,அதே சாலையில்.... நீ என்னைக் கடந்து போகுமுன் ஒரு முறையேனும் என்னைப் பார்த்து சிரித்தாலொழிய மறந்து  போகாதுஎன் ஆசைகள்.
        உன்  மீது எவ்வளவு ஆசையோ, அவ்வளவு  ஆசை உன் சிவப்பு சைக்கிளின் மேலும். நீ நிறுத்திவிட்டு போகும் உன் சைக்கிளை சுற்றி சுற்றி வந்திருக்கிறேன் உன்னையே சுற்றிவருவதாக நினைத்து. தொட ஆசை,தொட்டதில்லை. உன்னைத் தொட அனுமதி இல்லாத என்னால், எப்படி உன் சைக்கிளைத் தொட முடியும்? ஆனால், இப்போது தொட வேண்டும்.நீ நிறுத்திவிட்டுப் போன சைக்கிளை..... இது எனது காதலின் சைக்கிள் என்கிற உரிமையோடு தொட வேண்டும். முடியுமா?

         என்னைக் காதலிப்பதாக என்னிடம் எத்தனையோ ஆண்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், நேற்றுவரை நான் யாரையும் காதலித்தது இல்லை. என் கணவரோ என்னை பத்து வருடங்களாக காதலிப்பதாக சொல்லி விட்டு, காதலுக்கு எந்த சக்தியும் இல்லை என்கிறார். நம்ப முடியவில்லை என்னால். இத்தனை காலமாக எனக்காக இவர் காத்திருந்து, எனக்கு இதுவரை கல்யாணம் ஆகாமல் போனது இவர் என்மேல் வைத்திருக்கும் காதலால் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது எனக்கு
அது மட்டுமல்ல,.....
வழக்கமாக எனது பழைய உடைகளை வேலைக்கார பெண்ணிடம் கொடுத்துவிடும் நான், இவர் சொல்கிற அந்தப் பச்சை மிடி,ஸ்கர்ட்டை மட்டும் கொடுக்க மறந்தது என்னவோ, அப்படியே வைத்துவிட்டேன் போல. ஒரு நாள் பெட்டியை குடையும் போது அடியில் பார்த்த ஞ்பகம். ஏன் அது என்னோடு தங்கி விட்டது?
      அப்பாவிடம் அடம்பிடித்து கைனட்டிக் ஹோண்டா வாங்கியபோது, அப்பா அந்த சைக்கிளை விற்று விடலாம் என்கிறார். யோசிக்காமல் " வேண்டாம்" என் எனது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் இவருக்காகத் தானா? இன்று வரை இருக்கிறதே அந்த சைக்கிள்.


            " இது தான் நமக்காக நான் வாங்கிய வீடு"

நம்ப முடியவில்லை என்னால். காதலுக்கு எந்த சக்தியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு , இந்த வீட்டையா விலைக்கு வாங்கி இருக்கிறார்?! இது நான் பிறந்து வளர்ந்த வீடு. சில வருடங்களுக்கு முன்புவரை நாங்கள் வாடகைக்கு  குடியிருந்த வீடு.அப்பா சொந்த வீடு கட்டிய பின் இதை காலி செய்துவிட்டு போய்விட்டோம்

நீ இந்த வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டதாக கேள்விப்பட்டதும், எங்கே நான் காதலில் தோற்றுப்போய்விடுவேனோ என்கிற பயம் முதல் முறையாக வந்தது. இத்தனைக் காலமும் நான் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கை, அதற்காக நான் படும் கஷ்டங்கள் எல்லாம் வீண் போய்விடுமோ. என்று கலங்கினேன். முதல் முறையாக அப்போது தான் எனக்கு காதலின் மேல் கோபம் வந்தது.
    இந்த  வீட்டில்  தான் நான் உன்னை முதல் முதலில் பார்த்தேன். எத்தனை முறை இந்த வீட்டு ஜன்னல், வாசல் வழியே எனது கண்களை நீட்டியிருக்கிறேன், உன்னை நோக்கி. உன்னோடு சேர்த்து உனது உடமைகளையும்  காதலிப்பவன் நான்.  இந்த வீடும் உனது உடமை என நினைத்தேன். நீ விட்டுவிட்டு போய்விட்டாய்.
     ஆனால் நான் விடவில்லை.இந்த வீட்டை நீ போனபிறகு இந்த வீட்டில் வேறு யாரும் கூடிவந்து விடக் கூடாது என்பததற்காக, இதனை வாடகைக்கு எடுத்தேன். என்றாலும் நானும் குடிவரவில்லை. தினம் காலையிலும் மாலையிலும் வந்து உன் வாசம் பிடித்துவிட்டுப் போவேன். இரவு பகல் பாராமல் மூர்க்கத்தனமாய் உழைத்து இந்த வீட்டை சொந்தமாக வாங்கிவிட்டேன்.
      எப்போதும் நீ அமர்ந்து படிக்கும் இந்த கட்டம் போட்ட மர ஜன்னலுக்கு பின்புறம் ஒரு முறையேனும் அமர்ந்து, தெருவில் போகும் உன்னைப்  பார்க்க  ஆசை, நீ வீட்டை காலி செய்துவிட்டுப் போய் விட்டாய் என்று கேள்விப்பட்டதும் ஆடிபோய் விட்டதுஎன் மனம்.என் ஆசையில் ஒன்று குறைந்தாலும், என் காதல் குறைவுள்ளதாக ஆகிவிடாதா?
      ஒரு முறை நீ இங்கமர்ந்து காய் நறுக்கிக்கொண்டிருப்பதை பார்த்தேன். ஒரு கால் மடக்கி அழகாக உட்கார்ந்திருந்தாய். எங்கே அந்த மாதிரி எனக்காக உட்கார். நீ டான்ஸ் பிராக்டிஸ் செய்யும் இடம் எது? தரையில் காது வைத்துக் கேட்க வேண்டும் உன் பாத ஒலியை. நீ தூங்கும் இடம் எங்கே சொல்.
      மஞ்சள் காமாலையில் ஒரு முறை மருத்துவரிடம் போய் திரும்பும் உன்னைப் பார்த்தேன்.நோயில் வாடிய உன் முகம் பேரழகாக இருந்தது. அகல்விளக்கு போல என் இரு கைகளிலும் உன் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில், அன்று முழுவதும் வீட்டை சுற்றி சுற்றி வந்தேன்.

இவர் தேக்கி வைத்திருந்த எனக்கான எல்லாம், என்றோ நடந்த எனக்கே மறந்து போன எல்லாம், இவர் சொல்லச் சொல்லக் கேட்கும் போது, அப்படியே அவரை கட்டிக்கொண்டு அழத் தான் முடிந்தது என்னால். என் மேல் இவ்வளவு ஆசையாக, காதலாக பத்து வருடங்களாக இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது, அவர் தான் இப்போது எனது கணவர் எனும் போது, எனக்குள்ளே எழும் உணர்வுகள்..... இது தான் காதலா? இதைத் தான் இவர் இத்தனை வருடங்களாக சுமந்திருந்தாரா?  இன்று எல்லாவற்றையும் என்மேல் இறக்கி வைத்து விட்டாரா?

காதலர்கள் தான், அவர்கள் தியாகங்கள் தான், காதலை இன்னும் இந்த மண்ணில் வாழவைத்திருக்கிறதே ஒழிய, காதல் எந்தக் காதலர்களின் வாழ்க்கைக்காகவும் எந்த தியாகங்களையும் செய்துவிடவில்லை.
        ஷாஜகான் காதலுக்கு தந்த அற்புதம் தான் தாஜ்மகால். ஆனால், காதல் அவனுக்கு என்ன தந்தது? குறைந்தபட்சம் மும்தாஜை உயிர்ப்பித்து தந்திருக்க வேண்டாமா?
        தரவில்லையே! தரமுடியாது அதனால். அப்படி அதனிடம் எந்த சக்தியும் இல்லை. இருந்திருந்தால், உன்னை பதினைந்து வயது பெண்ணாக மாற்றித் தர சொல் பார்ப்போம்?


காதல் தருகிறதோ இல்லையோ .....இவரின் காதலுக்காக நான் இவருக்கு எதாவது தந்தே ஆகவேண்டும். வீடு வந்தவுடன் ஓடிபோய் பெட்டி திறந்து அந்த பச்சை உடையை எடுத்தேன். கண்ணாடி முன்னின்று, மேல் வைத்துப் பார்க்கையில், என்னை விட ரொம்ப சின்னதாக இருந்தது உடை. நான் வளர்ந்து விட்டேன் அது வளரவில்லை. அவரிடம் சொன்னால் அதை வளர்க்கிற சக்தி காதலுக்கு இல்லை என்பார். இந்த உடையை எனது அளவுக்கு தைக்க வேண்டும் . அப்பாவிடம் சொல்லி சைக்கிளை எடுத்து வர சொல்ல வேண்டும்.
« Last Edit: February 02, 2018, 09:14:01 AM by thamilan »

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 411
  • Total likes: 1074
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: பச்சை தாஜ்மகால்
« Reply #1 on: February 02, 2018, 07:30:15 PM »
Wowwwwwww!!!! :)

Very Nice story!!!

Tags: