சொர்க்கம் செய்வோம் 
போக்கிடம் வேறின்றி 
புழக்கத்தில் வந்தாச்சு! 
சாக்கடை இல்லாத 
சமுதாயம் எங்குண்டு? 
நீக்கிவிடக் கூடுமோ? 
நிம்மதி கிட்டிடுமோ? 
தூக்கிவைத்துக் கொண்டாடும் 
தொழில்களால் 
இவைவளரும்! 
தாக்கத்தை நினைக்காமல் 
தவிர்க்கும்வழி தெரியாமல் 
நோக்கமின்றி வளர்கின்றோம்! 
நோய்நொடிகள் 
வளர்க்கின்றோம்! 
மூத்தகுடி என்றுநாம் 
முயன்று கண்டவொரு 
மாற்றுவழி விவசாயம் 
ஏற்றமெனக் அதைக்கண்டோம்! 
இயற்கையுடன் வாழ்ந்தோமே! 
இருகரங்கள் போதுமென 
இயந்திரங்கள் மறுத்தோமே ! 
உருப்படியாய்க் கைத்தொழில்கள் 
ஓங்கிவரக் கண்டோமே! 
பெருத்த,கைத் தொழில்களினால் 
பெருமையும் உழைப்புக்கே! 
பெருத்த ஜனத்தொகையால் 
பேரிடரைப் பின்தூக்கி 
மறுத்த இயந்திரங்கள் 
மலைபோல வந்தனவே! 
சுற்றுப் புறத்தைச் 
சூழ்நிலையைக் கெடுப்பவராய்ப் 
பற்றிவந்த பண்புகளைப் 
பறக்கவிட்டோம் காற்றினிலே 
பொருளும் பெருகினதால் 
இந்தவழி அரசியலில் 
இருப்போரைத் தாக்கியது! 
சொந்தநாட்டை வெளிநாட்டுச் 
சந்தையென ஆக்கியது ! 
சந்தை வளர்ந்ததுவே! 
மந்தையாய் மனிதருமே! 
கந்துவட்டி கொடுத்தேனும் 
கடனாளி ஆயினரே! 
அறிவை வளர்க்காமல் 
ஆசையை வளர்த்ததினால், 
அருளை வளர்க்காமல் 
பொருளை விரும்பியதால் 
சுற்றங்கள் பிரியக் 
குற்றங்கள் பெருகக் 
கற்றும் வழிதவறிக் 
காதம் கடந்துவிட்டோம்! 
எழுகின்ற தெல்லாமும் 
விழுவதுதான் இயற்கைவிதி! 
பெருகினவை எல்லாமும் 
பெருக்கத்தால் அழிவுறுமே! 
சூழல்கள் கெடுக்கும் 
சூழ்ச்சிகளைத் தடுப்போமோ? 
வாழ்நிலம் காப்போமோ? 
வாழ்க்கைநலம் கொள்வோமோ? 
அன்பை வளர்ப்போமோ? 
ஆன்மாவை நினைப்போமோ? 
இன்பம் எவ்வுயிர்க்கும் 
இயற்கையென மதிப்போமோ? 
இயற்கையுடன் வாழ்வோமோ? 
இவ்வுலகே சொர்க்கமென 
எவ்வுயிர்க்கும் செய்வோமோ?