மரம்  
உதிர்ந்த விதையும்
தரைதனில் புதைந்து, நீரது  கண்டு ,
புவிதனை பிளந்து, செடியென வளர்ந்து, 
கிளை பல கொண்டு, விழுதுகள் இறக்கி , 
தழை என கூரை தானே வேய்ந்து, 
மலரென சொல்லும் மனம் பரப்பி,
வண்டுகள் ஈர்க்க மகரந்தம் கொண்டு, 
சூலும் கொண்டு, கருவும் ஆகி ,
காயும் ஆகி ,கனியும் ஆகி 
அடுத்த சந்ததிக்கு விதையும் ஆகி , 
ஆண்டுகள் பலவும் வீசிய காற்றில்
வீராப்புடனே  வீற்றிருந்து , 
வயது முதிர்ச்சி எனக்கும் வந்து ,
வேர்கள் யாவும் மண்ணில் மக்கிட,
உணவது இல்லா நிலையது  வந்து.,
இலைகள் பழுத்து கொட்ட தொடங்க,
பட்டையாகிய சட்டை அவிழ்த்து ,
வண்டுகள் வந்து பொந்துகள் போட
பட்ட மரமென பெயரென கொண்டேன் ..
விறகாய் மாறி தீயாய் கரைந்தேன் ....!
மனிதன் 
தாயின் கருவறை 
என்ற திருவறை திறந்து 
எட்டி பார்த்து குழந்தை ஆகி 
குப்புற கவிழ்ந்து மெதுவாய் எழுந்து 
நடையும் பயில்ன்று ,
நன்னெறி நூல்கள் நாளும் கற்று 
விடலை தாண்டி இளைஞன் ஆகி ,
காதல் உணர்வும் காற்றாய் வீசி ,
மங்கை அவளிடம் மையலும்  கொண்டு,
குடும்பம் என்ற கூரைக்குள் வாழ்ந்து 
சந்ததி என்ற நிம்மதி பெருக்கி 
திரைகடல் ஓடி திரவியம் தேடி 
நரை பல கண்டு ,கிழவன் ஆகி 
நோய்பல கொண்டு , படுக்கையில் வீழ்ந்து 
உடம்பை விட்டு உயிரும் போனதே 
விறகில்  நானும் வெந்து கரைந்தேன் !