Author Topic: மதுரை வரலாறு  (Read 6688 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மதுரை வரலாறு
« on: January 26, 2012, 02:17:50 PM »
சங்க காலம், தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் ஆகும். மதுரை தமிழ் சங்கங்களின் இருப்பிடம் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் மதுரை வந்ததாக வரலாறு உள்ளது. மேலும் ரோமானியர், கிரேக்கர்கள் பாண்டிய மன்னர்களுடன் வர்த்தகம் செய்துள்ளனர்.



கி.பி. 920ம் ஆண்டு முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாண்டிய நாடு சோழர்கள் வசம் இருந்தது. கி.பி.1223ம் ஆண்டு பாண்டியர்கள் மீண்டும் தங்கள் நாட்டை பெற்றனர். பாண்டியர்கள் காலத்தில் தமிழ் மொழி தழைத்தோங்கியது. அவர்கள் காலத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.



1311ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி, நகைகள் மற்றும் அரிய பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மதுரைக்கு படை திரட்டி வந்தார். இந்த சம்பவம் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மதுரையில் கொள்ளை அடிப்பதற்கு வழியாக அமைந்தது. 1323ம் ஆண்டில் மதுரை டில்லியை ஆண்ட துக்ளக் மன்னர்களின் ஒரு மாகாணமாக மாறியது. பின்னர் 1371ம் ஆண்டில் மதுரை விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயரின் மறைவிற்கு பின் நாயக்கர்கள் மதுரையை ஆண்டனர். நாயக்கர்களின் ஆட்சியில் திருமலை நாயக்கர் மன்னர் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் மதுரையின் கட்டமைப்பை மேம்படுத்தினார். மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம், புதுமண்டபம் மற்றும் திருமலை நாயக்கர் மகால் ஆகியவை அவரது புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

பின்னர் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட போது, மதுரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. 1781ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதுரைக்கு தங்கள் பிரதிநிதியை அனுப்பினர். ஜார்ஜ் புரோக்டர் மதுரையின் முதல் கலெக்டர் ஆவார். மதுரையின் வரலாற்றில் ராணி மங்கம்மாவை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் சுதந்திரத்திற்காக போராடிய பெண்களில் இவரும் முக்கியமானவர் ஆவார்.


மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் தவிர, தேவார ஸ்தலமான அப்புடையார் கோயில், திவ்ய தேச கோயில்களான கூடலழகர் கோயில், கள்ளழகர் கோயில், காளமேக பெருமாள் கோயில், அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகியவை பிரசித்தி பெற்ற ஸ்தலங்களாகும்.




கலாசாரம்

மதுரை கலாசார சிறப்பு வாய்ந்த நகரமாகும். நட்புணர்வு, உபசரிப்பு, பாரம்பரியத்தை மதித்தல், எளிய வாழ்க்கை முறை மற்றும் விருந்தோம்பல் இங்குள்ள மக்களின் சிறப்பாகும். பரவலாக ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் சேலையும் அணிகின்றனர். தற்போது சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகள் பெண்களின் முக்கிய ஆடையாக மாறியுள்ளது. மதுரையில் 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இவையே மக்களின் முக்கிய பொழுதுபோக்காகும். தவிர இங்குள்ள தீம் பார்க், காந்தி மியூசியம், ராஜாஜி பூங்கா ஆகியவையும் மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகும். மதுரை சிறந்த இசை பாரம்பரியத்தை கொண்டதாகும். மறைந்த, பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி மதுரையில் பிறந்தவராவார்.

உணவு

ஜில் ஜில் ஜிகர்தண்டா, பருத்தி பால், கரும்பு சாறு ஆகியவை மதுரையின் புகழ் பெற்ற பானங்கள் ஆகும். பழமையான உணவகமான மார்டன் ரெஸ்டாரென்ட் 1956ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. மற்றுமொரு புகழ் பெற்ற உணவகமாக முருகன் இட்லி கடை விளங்குகிறது. பழமையான உணவுகளான இட்லி, தோசை, பொங்கல் போன்ற அரிசி உணவுகளுடன், வடக்கிந்திய உணவுகள், சீன உணவு வகைகளும் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.

மல்லிகை

மதுரை மல்லிகை பூக்களுக்கு பெயர் போனதாகும். தமிழகத்தின் எந்த பகுதியில் கிடைக்கும் மல்லிகையை விட மதுரை மல்லிகைக்கு அதிக மணம் உள்ளதால் இதற்கு எப்போதும் வரவேற்பு அதிகமாகும். இங்கு கிடைக்கும் பூக்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தொழில் வளர்ச்சி

மதுரையின் தொழில் வளர்ச்சி, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களை விட மிக பின்தங்யே உள்ளது. டிவிஎஸ், இண்டியா, ஹைடெக் அரே லிமிடட் போன்ற ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்ரீசக்ரா, டிவிஎஸ் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் நிறுவனங்கள், பிவிசி கன்வேயர் பெல்ட் தயாரிக்கும் பென்னர் நிறுவனம், டாபே டிராக்டர் தயாரிப்பு நிறுவனம், மதுரா கோட்ஸ், போன்ற முக்கிய நிறுவனங்கள் உள்ளன. இவை தவிர ஹனிவெல், சாம்ட்ரக் (பிபிஓ நிறுவனம்), செல்லா சாப்ட்வேர், வின்வேஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடட் போன்ற நிறுவனங்களும் உள்ளன.


மத்திய மாநில அரசுகள் மதுரையின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க சிறு தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் மாவட்ட தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் 1979ம் ஆண்டு இத்திட்டம் துவங்கப்பட்டது. இந்த மையம் தொழில்படிப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் தொழில் துறை பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. மேலும் பெண்கள் தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி

மதுரையில் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் அருகிலும், புறநகர் பகுதியிலும் இரண்டு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இலந்தைகுளம் அருகில் 8.81 ஹெக்டேர் நிலமும், கிண்ணிமங்கலத்தில் 16 ஹெக்டேர் நிலமும் எல்காட் நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது. மதுரை மாநகராட்சி, 29.93 ஹெக்டேர் நிலத்தை டைடல் தொழில் நுட்ப பூங்காவிற்காக ஏற்பாடு செய்துள்ளது.

நிர்வாக அமைப்பு

சுதந்திரத்திற்கு பின்னர் மதுரை மாவட்டம், மதுரை நகரை தலைநகராக கொண்டு செயல்பட்டது. மேலும் ராமநாதபுர மாவட்டத்திற்கும் மதுரையே தலைமையகமாக விளங்கியது. 1984ம் ஆண்டு மதுரை மாவட்டம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. 1997ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டின் கிளை தற்போது மதுரையில் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

பொருளாதாரம்

மதுரையின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. அடுத்தபடியாக நெசவுத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறையை சார்ந்துள்ளது. சுங்குடி சேலை, ஜரிகை கரை துணிகள், பிரிண்ட் காட்டன் ஆகியவற்றிற்கு மதுரை புகழ் பெற்றதாகும். தற்போது இறக்குமதி பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதால் விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் நசிவடைந்து வருகிறது. மதுரை மணக்கும் மல்லிக்கு பெயர் பெற்றதாகும். மல்லிகை, கொடைக்கானல் மலையடிவாரம், மற்றும் செம்மண் தரையில் பயிரிடப்படுகிறது. இந்த பூக்களுக்கு மும்பை, பெங்களூரு, கொச்சி, டெல்லி, திருவனந்தபுரம், கோல்கட்டா, ஐதராபாத் போன்ற நகரங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. மதுரை மல்லிகை சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நறுமண தைலம் தயாரிப்பதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரையின் பிரச்னைகள்

மதுரையில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களை கவரும் வகையான அமைப்புகள் இல்லை. மதுரையில் தொழில் வளர்ச்சி இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலைக்காக சென்னை, பெங்களூர் போன்ற தொழில் வளர்ச்சி உள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை சாலை போக்குவரத்து வசதி மற்றும் உட்கட்டமைப்பு மிகுந்த நகரங்களில் நிறுவ விரும்பகின்றன. மதுரையில் தொழிற்சாலைகள் துவங்கும் அளவிற்கு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாததே இதற்கு காரணம். மதுரையில் இருந்த மதுரா கோட்ஸ் நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டு விட்டது.


மதுரையில் பல தொழில்நுட்ப கல்லூரிகள் இருந்தும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு இல்லை. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே வேலை கிடைக்கிறது. நல்ல திறமையுள்ளவர்கள் முக்கிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால் மதுரையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி உள்ளது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மதுரை வரலாறு
« Reply #1 on: January 26, 2012, 02:27:31 PM »
1670ம் ஆண்டு மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் அரண்மனை தற்போது காந்தி மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இந்த இடம் மதுரை கலெக்டர் அலுவலகமாக இருந்து வந்தது. 1955ம் ஆண்டு இந்த அரண்மனை மற்றும் சுற்றியுள்ள 12 ஏக்கர் நிலமும் காந்திய சிந்தனையை வளர்ப்பதற்காக தமிழக அரசு வழங்கியது.


இந்த அருங்காட்சியகத்தில் காந்தியடிகளின் ஓவியம், சிலை, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல்கள், காந்திய சிந்தனை நூல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேலும் காந்தியின் ஆடைகள், ராட்டை மற்றும் அவர் எழுதிய கட்டூரைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு இந்திய வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட வரலாறு குறித்து அறிந்து கொள்ளலாம்.

மதுரையில் தான் காந்தி ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார். 1921ம் ஆண்டு காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார். அப்போது அவர், ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றி குளிரில் வாடுவதை கண்டார். அன்று இரவு முதல் அவர் எளிய ஆடையை உடுத்த வேண்டும் என முடிவெடுத்து அதையே தம் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தினார்.
அருங்காட்சியகம்:  இந்த அருங்காட்சியகம் காந்தி மியூசியத்தின் உள்ளே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 5ம் உலகத்தமிழ் மாநாட்டின் போது விரிவுபடுத்தப்பட்டது.


திருப்பரங்குன்றம்



முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் கட்டட கலைக்கு சிறந்த சான்றாகும்.

முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை சங்காரம் செய்து மீளும்போது பராசரமுனிவரின் புதல்வர்கள் அறுவரும் நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக்கொண்டதை ஏற்று திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினார்.
இந்திரன் பகைவனாகிய சூரபத்மனை அழித்து விண்ணுலக அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய முருகப்பெருமானுக்கு தன் மகள் தெய்வயானையை திருமணம் செய்து வைக்க விரும்பினான்.அவனும் நாரதர்,நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக் கொள்கின்றனர். இதையடுத்து முருகன்-தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் சீரும் சிறப்புமாக நடந்தது.அதனால் தான் இன்றும் திருப்பரங்குன்றத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.

கூடலழகர் கோயில்



108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர் கோயில் மதுரையிலிருந்து வடக்கே 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாகும்.எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது.


இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.இம்மலை 7 மலைகளை கொண்டது.தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சி தந்தார்.இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என் று கேட்டார்.அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம்(வட்ட வடிவ) உள்ள கோயில் கட்டப்பட்டது.புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காகான சரித்திர சான்றுகள் உள்ளன.வைணம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.

சித்திரைத் திருவிழா




10 நாட்களும், ஆடிப் பெருந்திருவிழா - 13 நாட்களும், ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாட்களும்,பங்குனி உத்ரம் திருக்கல்யாணம் - 5 நாட்களும் நடைபெறும்.

இவை தவிர வைகுண்ட ஏகாதேசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி,பொங்கல், தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
வாரத்தின் சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது. அழகர் மலை மீது முருகன் கோயில் ஒன்றும் உள்ளது.

அதிசயம்



மதுரையின் சிறந்த பொழுது போக்கு பூங்காவான அதிசயம் மதுரை திண்டுக்கல் சாலையில் பரவை என்ற இடத்தில் உள்ளது. மதுரையில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

குட்லாடம்பட்டி அருவி



மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. அருவி 87 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அருவி அமைந்திருக்கும் மலை சிறுமலை என அழைக்கப்படுகிறது.விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து இயற்கையை ரசித்து செல்கின்றனர்.அருவியின் அருகில் 500 ஆண்டுகள் பழமையான தாடகை நாச்சியம்மன் கோயில் உள்ளது.


திருமோகூர் கோயில்



மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், ஒத்தகடை பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் திருமோகூர் விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் விஷ்ணு காளமேக பெருமாளாக வீற்றிருக்கிறார்.

திருவாதவூர் கோயில்



சைவத்தலமான இந்த கோயில் மதுரையில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், ஒத்தக்கடையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த இடமாகும்.

ராமகிருஷ்ண மடம்



உலகம் முழுவதும் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை மதுரையிலும் அமைந்துள்ளது


கோச்சடை அய்யனார் கோயில்


மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கோச்சடையில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. எல்லை காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோயிலுக்கு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.


ராஜாஜி பார்க்



ராஜாஜி பார்க், மதுரை மாநகராட்சியினரால் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மாநகராட்சி அலுவலகம் (அண்ணா மாளிகை) அருகே உள்ளது. திறந்திருக்கும் நேரம்

ஸ்ரீ அரவிந்தர் அன்னை அறக்கட்டளை யோகா மையம்

மதுரையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் திருநகர் 6வது பஸ் நிறுத்தத்தில் இந்த மையம் அமைந்துள்ளது. ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னைக்காக இந்த மையம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்கால யோக முறைகள் கற்றுத்தரப்படுகிறது.

புதுமண்டபம்



மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரத்திற்கும் முழுமையாக இல்லாத ராயகோபுரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த மண்டபம் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களில் சிவன், மீனாட்சி மற்றும் நாயக்க மன்னர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வசந்தோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த மண்டபத்தில் தற்போது கடை அதிகரித்து வருகின்றன.

ஈகோ பார்க்:


மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது ஈகோ பார்க். இங்கு குழந்தைகள் விளையாடு வதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விடுமுறை காலங்களில் இசையுடன் கூடிய நீருற்று நிகழ்ச்சி நடத்தப்பெறுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை போட்டிங் செய்யும் வசதியும் உண்டு. பரபரப்பாக இழங்கி் கொண்டு இருக்கும் மதுரை மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக நிகழ்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில்



மதுரையின் மிக முக்கியமான இடமாக மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மதுரைக்கு பெருமை சேர்ப்பதே இந்த கோயில் தான். திராவிட கட்டடகலைக்கு மீனாட்சி அம்மன் கோயில் சிறந்த எடுத்து காட்டாகும். 6 ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைந்துள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலில் 12 கோபுரங்களும் 4 விமானங்களும் உள்ளன. கோயில் கோபுரங்களில் உயரமானது தெற்கு கோபுரம் ஆகும். இதன் உயரம் 170 அடியாகும்.

பொற்றாமரை குளம்



மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பம்சமாக பொற்றாமரை குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 165 அடி நீளமும், 120 அடி அகலமும் உடையது. குளத்தில் அல்லி, தாமரை போன்ற பூக்கள் உள்ளன. மேலும், இந்த குளத்தில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. தற்போது பொற்றாமரை குளத்தில் 7 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன தாமரை மிதக்கவிடப்பட்டுள்ளது.

ஆயிரம் கால் மண்டபம்



மற்றொரு சிறப்பம்சமான ஆயிரம் கால் மண்டபம் திராவிட கட்டடகலைக்கு சான்றாக அமைந்துள்ளது. ஆயிரம் கால் மண்டபத்தில் 999 தூண்களே உள்ளன. மதுரையை ஆண்ட முதல் நாயக்கர் அரசரின் பிரதம மந்திரியான ஆர்யநாத முதலியாரால் கட்டப்பட்டிருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆயிரம் கால் மண்டபத்தில் 1200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் போன்றவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே மேற்கு பகுதியில் இசைத்தூண் உள்ளது. இந்த தூணை தட்டினால் இசை வெளிப்படும். மண்டபத்தின் தெற்கே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தான் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாயக்கர் மகால்



மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து தென்கிழக்கு திசையில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கி.பி. 1636ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனை இந்திய-அரேபிய கட்டட கலைக்கு சான்றாகும். இந்த மகாலில் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி உயரமும், 5 அடி விட்டமும் கொண்டது.

மகாலில் உள்ள ஓவியங்கள் 16ம் நூற்றாண்டின் ஓவியக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. மிகப்பெரியதான இந்த மகாலின் ஒரு பகுதி மட்டுமே தற்போது நம் பார்வைக்கு உள்ளது. செவ்வக வடிவில் உள்ள இந்த அரண்மனையின் முற்றத்தில், மாலை நேரத்தில் தற்போது ஒலி-ஒளி காட்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் நாயக்கர் மகாலும் ஒன்றாகும்.

மாரியம்மன் தெப்பக்குளம்



திருமலை நாயக்க மன்னர், மீனாட்சி அம்மன் கோயில் அளவிற்கு பெரிய சதுர வடிவிலான தெப்பகுளத்தை அமைத்துள்ளார். இந்த குளம் 1000 அடி நீளமும், 950 அடி அகலுமும் கொண்டது. தெப்பக்குளத்தின் நடுவில் மண்டபமும், விநாயகர் சன்னதியும் உள்ளது.


ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு இடையே வரும் பவுர்ணமி மற்றும் திருவிழா காலத்தில் தெப்பக்குளம் நீரால் நிறைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண் கொள்ளா காட்சியாக விளங்கும். இந்த குளத்திற்கு வைகையில் இருந்து நீர் கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது. நீர் நிறைந்திருக்கும் நாட்களில் படகு சவாரி விடப்படும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மதுரை வரலாறு
« Reply #2 on: January 26, 2012, 02:36:15 PM »
திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

அமைப்பு

இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

ஒலி-ஒளி காட்சி

இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டது.

























உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline gab

Re: மதுரை வரலாறு
« Reply #3 on: February 12, 2012, 11:15:20 PM »
நல்ல பதிவு ஸ்ருதி  மதுரை வரலாறு பற்றி  அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாய்  அமைந்திருக்கு உங்கள் பதிவு.( நாங்களும்  மதுரைகாரன்ல  )

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மதுரை வரலாறு
« Reply #4 on: February 13, 2012, 08:48:54 AM »
நல்ல பதிவு ஸ்ருதி  மதுரை வரலாறு பற்றி  அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாய்  அமைந்திருக்கு உங்கள் பதிவு.( நாங்களும்  மதுரைகாரன்ல  )

நன்றிகள்
நீங்கள் இதை பதிவிட்டு இருந்தால் இன்னும் பல தகவல்களை நாங்களும் தெரிந்து இருக்கும் விதமாய் அமைந்திருக்கும்..
விடுபட்ட தகவல்கள் ஏதேனும் இருப்பின் நீங்கள் இதனை தொடரலாமே :) :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்