Author Topic: இன்னிசை அளபெடை - 6  (Read 400 times)

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 344
 • Total likes: 852
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
இன்னிசை அளபெடை - 6
« on: December 22, 2018, 08:55:13 PM »
இன்னிசை அளபெடை - 6

சங்கீத ஸ்வரங்கள்


இசை ஒருவருக்குள் ஏற்படுத்தும் மாற்றம் அளப்பரியாதது. சிறு மௌனம் கூட நல்ல இசை தான் என்பார்கள். Paulnaவுடனான உரையாடல்களில் சில பிண்ணனி இசை மற்றும் பாடல்களில் வரும் சைலண்டான இடங்களை குறிப்பிட்டு இருக்கிறார், அதை பின்பற்றி கவனித்த பொழுது அந்த அமைதியான இடங்கள் கூட இசையை நிரப்பும் வித்தையை கொண்டது என்பது எத்தனை உண்மையான விசயம் என்று உணர முடிந்தது. இசை நமக்கு ஒவ்வொரு நாளும் புதியதொரு விஷயத்தை கற்று தருகிறது. உண்மையில் இசையை ரசிக்கும்பொழுது மனம் அமைதியடைவதோடு மட்டுமில்லாமல் மனதை ஒருமைப்படுத்துகிறது.

நான் உணர்ந்தவரையில் ஒரு இசையை பகுத்தறிய முதலில் சிரமமாக இருந்தாலும் அது பழகும்பொழுது நம்மையும் அறியாமலே இசையில் ஒன்றிடுவோம், அது அனிச்சையாக தன்னாலேயெ நிகழும். இந்த தெளிவை பிற இடங்களிலும் என்னால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்து பகுத்தாயும்பொழுது நம்மயும் அறியாமல் அந்த நுட்பம் பல இடங்களிலும் பயன்படுகிறது.

சில பாடல்களை நாம் கேட்கும்பொழுது திரும்ப திரும்ப கேட்க  தோன்றும். இசை, பாடல்வரிகள் என பல காரணிகள் இருந்தாலும். அந்த பாடலில்/இசையில் நம்மை நாமே தேடுகிறோம் என்பது தான் உண்மையான விசயம். இசையில் நாமே தொலைந்து நம்மையே நாம் தேடுவது எவ்வளவு அற்புதமான விசயம். அப்படியொரு மாயாஜாலத்தை நிகழ்த்திடும் ஆற்றலை கொண்டது தான் இசை. நான் சில சமயம் வார கணக்கில் கூட ஒரே பாடலை திரும்ப திரும்ப லூப்பில் கேட்டிருக்கிறேன்! உண்மையில் வேற எந்த பாடலையும் கூட கேட்காமல். சில சமயம் அது பித்து நிலை போல் தோன்றினாலும் எதிலிருந்தாவது விடுபடுவதற்கு அதுவே ஆறுதலாகவும் அமைகிறது. ஏனெனில் Music is dope! Absolute dope! அது தரும் போதையிலிருந்து நாம் மீள்வது கடினம்.

காற்குழல் கடவையே!

என்னமாதிரியான போதை வஸ்து இந்த பாடல். சமீபகாலமாக என இரவுகளையும் பகல்களையும் ஆக்ரமித்துக் கொண்டு அகல மறுக்கிறது இந்த பாடல். சந்தோஷ் நாராயணனின் இசை பற்றி தனியாகவே பதிவு எழுத வேண்டும். ஏனெனில் வழக்கமான இசையில் இருந்து (அதாவது இளையராஜா, ரஹ்மான், யுவன், ஹாரிஸ் என பழகிய இசையிலிருந்து) பலவிதமான பரிட்சார்த்த முயற்சியில் வித்தியாசமான இசையை நமக்கு வழங்கி வருகிறார். இசையமைக்கும் எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்களாக கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் நமக்கு புதுவிதமான இசையை கொடுக்க வேண்டும் என்கிற அவரது எண்ணம் நாம் புரிந்து கொள்ள கூடியது தான்.

முக்கியமாக பிண்ணனி இசை. அருமையான பல பிண்ணனி இசையை சனா கொடுத்திருக்கிறார்.

சூது கவ்வும் sudden delight - https://youtu.be/smn6PZkbkkg

சில மியூசிக் கம்போசர்களின் தாக்கம் நிறையவே இருந்தாலும், அதை நமக்கு பிரசண்ட் பண்ணும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணத்திற்கு அந்த பிண்ணனி இசையை கேட்டுவிட்டு SI SEÑOR AMORES PERROS கேளுங்கள் அதுவும் உங்களுக்கு பிடித்துவிடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. குக்கூ பட பாடல்கள் – முதல் முறை கேட்கும்பொழுது எளிமையான பாடலாக தோணும் ஆனால் ஆழமான இசையை கொண்டது அப்படத்தின் பாடல்கள். அட்டக்கத்தியின் கானா பாடல்கள், பிட்சாவில் இராத்திரியில் ஆளும் அரசன், ஜிகர்தண்டாவில் டிங் டாங் என ஜாஸ் தொனியில் அமைந்த பாடல். அப்புறம் சூது கவ்வும் படத்தில் ”மாமா டவுசர்” செம்ம ஜாஸ் அட்டம்பட். One of the finest jazz தமிழ் படத்தில் என்று தாராளாக கூறலாம். Caro Emeraldயின் ஜாஸ் பாடலை கேட்பது போல உற்சாகம் கொள்ள வைக்கும பாடல். இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருபக்கம் அதிரடி, மறுப்பக்கம் மனதை வருடும் மென்மையான பாடல்கள் என versatileலான பாடல்களை கொடுக்க கூடியவர் தான் சனா. சந்தோஷ் நாராணயனன் இசையில் உங்களுக்கு பிடித்த வித்தியாசமான இசையை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
காற்குழல் கடவையே பாடலைப் பற்றி இன்னிசை அளபெடை பகுதியில் எழுத வேண்டும் என்று ஒரு வாரமாகவே உந்துதலாக இருந்த பொழுதும் என்னால் எழுதவே முடியவில்லை, திரும்ப திரும்ப பாடலை மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருந்தேன். எதை எழுதுவது என்று குழப்ப நிலையில் கொண்டு சேர்த்துவிட்டது இந்த பாடல்.


<a href="https://www.youtube.com/v/3VBLaFC8QfQ" target="_blank" class="new_win">https://www.youtube.com/v/3VBLaFC8QfQ</a>


திரைப்படம்: வடசென்னை
பாடல்: காற்குழல் கடவையே
பாடலாசிரியர்: விவேக்
பாடகர்கள்:ஸ்ரீராம் பார்த்தசாரதி,விஜய் நரேன், அனந்து, ப்ரதீப் குமார், சந்தோஷ் நாராயணன்


குழலினிது என்று வெறும் வார்த்தைக்காக சொல்லி சென்றிருக்கவில்லை. மாயவலை போல புல்லாங்குழலின் இசையோடு ஆரம்பிக்கிறது பாடல். மெலிதாக கீபோர்ட் புல்லாங்குழலுக்கு பிண்ணனியில் ஒலித்துக் கொண்டிருக்கும்பொழுதே 0:11ல் இரண்டாவது குழல் குயிலோசை போல ஆரம்பிக்கும் இடம் ரொம்பவே அழகு. முதல் குழலிசைக்கு எதோ பதில் சொல்வது போலவே இரண்டாவது குழலிசை அமைந்திருக்கும். 0:23 வரைக்குமே குழலிசை தான். அப்புறம் தான் ஸ்ரீராமின் குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. “கண்ணாடி கோப்பை ஆழியில்” என்று ஆரம்பிக்கும்பொழுதே அக்வாஸ்டிக் கிட்டாரும் இந்த மாய அழகில் சேர்ந்து இன்னும் அழகு சேர்க்கிறது.

மெதுவாக மென்மையாக ஆரம்பிக்கும் பாடலில் 1:12வில் bass ஆரம்பிக்கும் இடம் (izzz ஒலியை கவனியுங்கள் அது தான் bass ஆரம்பிக்கும் இடம்) இது ஒரே சீராக மென்மையாக அமைந்த பாடல் இல்லை பல்வேறு variations கொண்ட பாடல் என புரியவைப்பது போல ஆரம்பிக்கும்.
இன்னேரம் மின்னல்கள் என்று அனுபல்லவி ஆரம்பிக்கும் இடமும் அது தான், மெல்லிசையாக ஒலித்துக் கொண்டிருந்த பாடல் அடுத்த நிலையை எட்டியிருக்கும். பிண்ணனியில் மெதுவாக தாள ஒலியும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

அதற்கு அடுத்து தான் இருக்கிறது உண்மையான பாய்ச்சல். அனுபல்லவி முடிந்ததும் மீண்டும் குழலிசை ஆரம்பிக்கும், இப்பொழுது குழலிசையோடு ட்ரம்சும் இணைந்து அடுத்த நிலையில் பாடல் நுழைந்திருக்கும். ப்ப்ப்பா என்ன ஒரு variation. அடுத்து எனக்கு பிடித்த இடம் “துருதுரூ” என ஹம்மிங் ஆரம்பிக்கும் இடத்தில் பின்னாலேயே குழலும் ஹம்மிங்கிற்கு ஏற்றார் போல ஒலிக்கும். ஹம்மிங்கா குழலா என்று சிறு போட்டியை போல இருக்கும் அந்த இடம் அவ்வளவு அழகான இடம் (2:05ல் இருந்து) .

இந்த Variation ஏன் சொல்கிறேன் என்றால் பாடல் ஆரம்பிக்கும்பொழுது வரும் பல்லவியையும் இண்டர்லூடில் ஆரம்பிக்கும் பல்லவியையும் கேட்டு பாருங்கள். பாடல் அந்த இடத்திலேயே ஒரு தன்மை மாற்றத்தை அடைந்து விட்டது. அப்படியே தொடராமல் மீண்டும் “கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்” என்று கீழே இறங்கியிருப்பார். இந்த அனுபல்லவியில் ட்ரம் இசை ஒலிக்காமல் வெறும் கிட்டர் இசை மட்டும் பிண்ணனியில் எளிமையாக, இனிமையாக அமைந்திருக்கும்.
 
அவ்வளவு தான் என்று நாம் நினைத்துக் கொண்டே இருக்கும்பொழுது 3:05 உச்சஸ்தாதிக்கு ஸ்ரீராம் செல்லும்பொழுது தபலா இசை ஆரம்பிக்கும் இடம் பேரழகு. அந்த இடத்தில் புல்லாங்குழலையுமே கூட டாமினேட் செய்துவிட்டு தபலா ஒலிக்கும். என்னமாதிரியான இசைக்கோர்வை என்று ஒவ்வொருமுறை கேட்கும்பொழுதும் நான் வியந்து கொள்கிறேன். அதுவும் 3:15லெல்லாம் தபலாவின் பாய்ச்சல் வேறு நிலையில் இருக்கும்.

சரி இப்பொழுதும் அவ்வளவு தான் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும்பொழுதே “உன் கொட்டம் பார்த்து” என அடுத்த புதிதாக ஒரு இடத்தில் நம்மை நிற்க வைத்திருப்பார். முதலில் ஆரம்பித்த இடத்திலிருந்து நாம் எங்கோ வந்துவிட்டோம், மீண்டும் எப்படி செல்வோம் என்று திணறி நிற்கும்பொழுது கிளியே நீ பிரிந்தால் சாகிறேன் என கிட்டார் இசையோடு நம்மை கைபிடித்து அழைத்து செல்கிறார் சனா. மீண்டும் காற்குழல் கடவையே இடத்தை நீங்கள் அடையும்பொழுது இந்த பாடலின் மாயாஜாலம் உங்களுக்கும் புரிந்திருக்கும். அப்பொழுது ஹம்மிங்கோடு இணைந்தொலிக்கும் புல்லாங்குழலில் இசையில் மீண்டும் நம்மை மீட்டெடுப்போம். நான் முன்பே கூறிய அந்த “தொலைந்து, நம்மை நாமே மீட்டெடுக்கும் யுக்தி, இது தான், இது போன்ற இசை தான்”

முழு பாடலையும் ஆக்ரமித்து இருப்பது புல்லாங்குழல் தான். அது தான் இந்த பாடலின் அழகும் கூட. சமீபத்தில் கேட்ட பாடல்களில் (மறு வார்த்தை பேசாதே பாடலில் கூட இதே போன்ற குழலிசை அமைந்திருக்கும்.) புல்லாங்குழலை இவ்வளவு அழகாக எந்த பாடலில் உபயோகப்படுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியேதேனும் பாடல் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள், கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

விஷ்ணு விஜய் அவ்வளவு அழகாக புல்லாங்குழலை இசைத்திருக்கிறார். இந்த பாடலின் முதல் verseல் வரும் புல்லாங்குழல் இசைக்கான கான்செப்ட் யோசனையை ஷான் ரோல்டன் கொடுத்திருக்கிறார். ஆச்சரியப்படத் தேவையேயில்லை.

பின் இணைப்பாக, Guy Ritcheஇன் Snatch படத்தின் முழு பிண்ணினி இசையின் சுட்டியை மட்டும் பகிர்கிறேன் https://www.youtube.com/watch?v=5274MESWgCQ .இது உங்களை உற்சாகம் கொள்ளச் செய்யும் என்று நம்புகிறேன்.

விவேக்கின் காற்குழல் கடவை

யாருடைய இடத்தையும் யாருமே பூர்த்தி செய்ய முடியாது என்கிற திடமான எண்ணம் கொண்டவள் நான். ஒவ்வொருத்தருமே அவருக்கே உரியமுறையில் தனித்துவம் வாய்ந்தவர் தான் என்று எண்ணுவேன். ஆனாலும் சமீபகாலமாக முத்துக்குமார் அண்ணனை மிகவும் நினைவு படுத்திகிறார் விவேக். முக்கியமாக இந்த பாடலில் உபயோகப்படுத்தியிருக்கும் பாடலை கேட்டும்பொழுது என்னால் முத்துக்குமார் அண்ணனின் நினைவு வருவதை தவிர்க்கவே முடியவில்லை. அவ்வளவு அழகான, மனதிற்கு நெருக்கமான, முக்கியமாக அழகான தமிழ் வார்த்தைகளை கோர்த்து இந்த பாடலை நமக்கு தந்திருக்கிறார்.

ஒவ்வொரு வரிக்குமே எதேனும் எழுத வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. காற்குழல் கடவையே என்று பாடலை ஆரம்பிக்கும்பொழுதே வித்தியாசமான வார்த்தையாடலை நமக்கு தருகிறார் விவேக். கடவை என்பது வாசல். அழகிய கருங்கூந்தலை வாயிலாக கொண்டவளே எனை எங்கே இழுக்கிறாய் என ஆரம்பிக்கிறார். அப்பொழுதே உணர்ந்து கொள்ளலாம் ஒரு பெரும்வனத்தில் அவன் விழ போகிறான் என்று. அதை தொடர்ந்தார் போலவே நான் பயங்கரமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவன் ஆனால் என்னுள் நீ உனை பற்றிய கனவுகளை ஊற்றெடுக்க செய்கிறாய் என்பது போல “காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்” அமைந்திருக்கும் (காழகம் – பயங்கரம்)

”கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கை மீறி சேர்ந்த தேயிலை” இது கவிதையன்றி வேறென்ன? தேநீரை ஆழியுடன்(கடலுடன்) ஒப்பிட்டு அதுவும் கைமீறி சேர்ந்த தேயிலை என்று உருவகிப்பதெல்லாம் அழகான கவிதையில்லாமல் வேறென்ன? தனக்கு விருப்பமான அந்த பேரழகி நிலவை ஒத்தவள் என்பதை குறிப்பதற்காக “கன்னங்களை மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை” என கவிஞர் எழுதியிருக்கிறார். ஆக, அவள் முகத்தை பாதி மறைத்தாலே அது தேய்பிறைக்கு ஒப்பானது என்று எழுதியிருக்கிறார்.

நான் கல்லைப் போன்றவன் நீ உளியைப் போன்றவள் நீ என்னை உரசினால் நான் ஏற்பேன், என்னை செதுக்கும் இந்த உளியின் உரசல் இனிமையானது தான் என்பதாக அமைந்திருக்கும் வரிகள் தான் ”உளியே உன் உரசல் ஏற்கிறேன்” அதை தொடர்ந்து நீ என்னை செதுக்குவதால் என்னுள் இருக்கும் குறைகளை நான் உனக்காக தோற்கிறேன் என்று அமைதிருப்பார். இந்த வரிகளலெல்லாம் எனக்கு நிஜத்திற்கும் முத்துக்குமார் அண்ணனை நினைவுப் படுத்துகிறது.

நீ புன்னகைக்கும் நேரம் என்னுள் மின்னல் பாய்வது போன்ற உணர்வும், எனை நோக்கி நீ கண்ணசைத்தால் ஒரு பூகம்பமே ஏற்படுகிறது என்பதை அழகான உவமை வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் விவேக். ஆனால் இதில் மேலும் அழகான விசயம் “செய்தாள் என கூறாமல் செய்தனள் என்று வினைச் சொல் விகுதியாக்கி இருப்பார்.

பெண்ணின் இறுமாப்பை யாரேனும் ரசித்திருக்கிறார்களா? விவேக் அதையும் கூட ரசித்து தான் உன் கொட்டம் பார்த்து, பூ வட்டம் பார்த்து, கண் விட்டம் பார்த்து (அகலமான கண்ணழகில்) காற்று போலிருக்கும் தனக்கும் தீப்பற்றிக்கொள்ளும் என எழுதியிருக்கிறார். அதே போல் “நடை பிழறிற்று” (நடை தவறிற்று) என அமைந்த இடமும் கொள்ளை அழகு.

இரண்டாவது சரணமாக அமைந்த வரிகளில் இன்னும் அழகாக கொஞ்சு தமிழில் எழுதியிருக்கிறார் விவேக். கேட்கும்பொழுது இந்த பாடலையே அப்படியே தூக்கி கொஞ்ச வேண்டும் என்பது போல தோன்றும்.

”எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே”


என் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் குணத்தில் சிறந்தவள் எங்கே? இன்பத்தை மிதமிஞ்சி எனக்களிக்கும் என் மனைவி (இல்லாள்) எங்கே? மனதில் கொஞ்சமும் வஞ்சம் இல்லாதவள் எங்கே ? அழகான மஞ்சள் நிற கொன்றை மலரே கொஞ்சும் என் சில்லாள் எங்கே? (சில்லாள் – என்பது ஆதாமின் வழிவந்த லாமே என்பவனின் இரண்டாவது மனைவி என்றும், மற்றொருத்தி என்றும் பொருள். பைபிளில் இருந்து இந்த வார்த்தை எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை மட்டும் ஏன் பயன்படுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை. புரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்) என்று தேந்தமிழில் அழகுற விவேக் இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

இப்படியாக இந்த இரவையுமே இந்த பாடலுக்காகவே அர்பணிக்கிறேன்.
இந்த பாடல் குறித்து மற்றுமொரு Perspective இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே. தெரிந்து கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். மீண்டுமொரு முறை வேறொரு இசையில் தொலைந்துபோவோம்..

சர்வம் தாள மயம்..
ChikU


வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Karthi

Re: இன்னிசை அளபெடை - 6
« Reply #1 on: December 22, 2018, 11:05:28 PM »
Arumai chikuu :) lyricist vivek eluthinatha vida neenga romba superb ah vaarthaigalai vilaki thelvipaduthirukingaa...also isai ah pathi neenga puriyavaikum vitham nice...innisai payanam thodaraa en vazthukal...next post eponu solungaa ;)

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 344
 • Total likes: 852
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 6
« Reply #2 on: December 22, 2018, 11:49:37 PM »
அன்பும் நன்றியும் கார்த்தி. ஏதாவது விமர்சனம் அல்லது வேற perspective இருந்தாலும் சொல்லுங்க. அடுத்த போஸ்ட் எழுத ஆரம்பிக்கும்பொழுது சொல்றேன் கண்டிப்பா :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Nick Siva

Re: இன்னிசை அளபெடை - 6
« Reply #3 on: December 24, 2018, 10:46:00 AM »
Chiku avargale ungalin unarchi poorvamana eerpanathu isai thuliruku melum uyir tharum vagaiyil ungalin thoguppu katchi aazhaikindrathu.... ungalin manathai kavartha paadalai neengal kettu rasikkum inbathai engaluku ungalin pathivugalin vaayilaga engalin kadhugalil isaiyai ippadium olikka seikireergal.... vimarsanam kodukka mudiyamal thigaithupona vadiveel naangalum ungalin pathippugal meeguntha achiriyathodu kannai immaithu vimarsikkum varthaigal illamal enga enga adutha varthai enum nilaiyil naan..... adutha salangai oliyai ethirpathukkum common man.....

Offline ChikU

 • FTC Team
 • *
 • Posts: 344
 • Total likes: 852
 • Karma: +0/-0
 • வெட்கமில்லை துக்கமில்லை, வேஷமொரு தோஷமில்லை 😎
  • An Insane MusiQoholic's blog
Re: இன்னிசை அளபெடை - 6
« Reply #4 on: December 24, 2018, 11:32:41 AM »
உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு அன்பும் நன்றியும் சிவா. நானும் உங்களைப் போல சாதாரணனள் தான். உங்களின் வார்த்தைகள் தொடர்ந்து எழுத உத்வேகம் அளிக்கிறது. :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Tags: