நேசிப்பதற்ககவே
பெற்றெடுத்தவள் அம்மா..
பாலகனாக பார்த்து பழகியவள்
நரைத்து துவங்கிய பின்னரும், முன்னரும்
குழந்தையென்றே கொண்டிருக்கிறாள் என்னை.
பெருமிதங்களிலும், உபதேசங்களிலும்
அவ்வப்போதான கோபங்களிலும்
சறுக்கல்களின் போதான குறைபடுதல்களிலுமென தாய்க்கோழியின் சிறகுகளை
உயிர்ப்பித்து கொள்கிறாள்
அவள்.
உலகம் புரிந்திடாத ஒரு துவண்டுபோதலில்
மனம் நீவிவிடும் அக்கறையின் மௌனங்கள் தாண்டி
பேரன்பால் என்னை போர்த்திவிட
எந்த விளக்கமும் வேண்டி நிற்பதில்லை
அவளின் தாய் மனம்.
பிரபஞ்சத்தின் மிகையன்பை
பிறப்புரிமை என்பதாலயே
இருத்தலின் உன்னதங்கள் உணர்ந்திடாது
பொடுபோக்காக நேசித்து நகர்கின்றேன்.
ஆயினும்
மீண்டுவரும் பிள்ளையின் மனம் தாண்டி
ஒருபோதும் நீள்வதில்லை
அவளின் வீம்பு.
குறைபட்டுக் கொள்ளுகையிலும்
குறைகளின் பதிவேடுகளை
காலிபக்கங்களாய் நிரப்பி
நேசம் செய்து கொண்டிருக்கிறாள் அம்மா.
அம்மாக்கள் அன்பின் இராட்சசிகள்..❤❤❤