ஒரு பிரிவுக்கு பின்னர் என் செய்வாய்??
வாழ்வில் வந்து போனாய்
பிடித்திருந்தது
அதிகமாகவே நேசித்தோம்
அழித்துவிட முடியாதபடி
மகிழ்வுகளையும் சோகங்களையும்
பரஸ்பரம் தந்தோம் பகிர்ந்தும் இருந்தோம்
பலமானோம் பலம் கொண்டோம்
அன்பு நிறையும் கணங்களையும்
அழகான உரையாடல்களையும்
ஆகச்சிறந்த நினைவுகளையும் கொண்டிருந்தோம்
என்பதைத் தாண்டி
பிரிவுக்கு பின்னரான நம் வாழ்வில்
மகிழ்வான கணங்கள் கூடாத ஒன்றொன்றும் இல்லை
என்னை தள்ளிவைத்திட
அத்தனை பிரயத்தனங்களொன்றும்
செய்திடவேண்டியதில்லை நீ
என் நலங்களை நீ அறியத் தருவேன்
உன்னைக் குறித்த முக்கிய நிகழ்வுகளை
அவ்வப்போதேனும் பகிர்ந்து கொள்
என்னைக் குறித்து சம்பிரதாயமாகவேனும்
விசாரித்துக் கொள்
உன் நலங்களில் மகிழ்ந்து
உன் துயர்களில் பிரார்த்திக்க என்னை அனுமதி
என்ன உதவியென்றாலும் அழை
பின்னெப்போதோ கண்டிட நேர்கையில்
கூட்டிச் சேர்க்கும் மிடுக்குகளின்றி
இயல்பாகவே இரு
சுண்டிய காலத்தின் வரிசையில் நாம் நேசத்திற்குரியவர்கள்
நாம் ஆகச்சிறந்த ஓர் காதலைக் கொண்டிருந்தோம்
ஒரு பிரிவுக்கு பின்னராய் முந்திய காதலை
கழுத்தை நெரித்துக் கொல்லத்தான் வேண்டும் என்பதில்லை.....