Author Topic: திருமூலர் - திருமந்திரம்  (Read 21752 times)

Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #75 on: May 29, 2012, 07:34:37 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:03. அருச்சனை
(பாடல்கள்:12)
 
பாடல் எண் : 1
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொழிப்புரை :  தாமரை முதல் செவ்வந்தி ஈறாக இங்குக் கூறப்பட்ட பூக்கள் வழிபாட்டிற்குக் கொள்ளத் தக்கனவாம்.
=============================================
பாடல் எண் : 2
சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.

பொழிப்புரை :  சந்தனத் தேய்வையைக் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம், அகிற் சாந்து இவை சேர்த்துப் பனிநீராற் குழம்பாக்கிச் சாத்தி நீரால் ஆட்டி அன்போடு வழிபடுங்கள்.
=============================================
பாடல் எண் : 3
அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.

பொழிப்புரை :  நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.
=============================================
பாடல் எண் : 4
எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே

பொழிப்புரை :  வழிபாட்டினை அன்போடு மனம் பற்றிச் செய்தால், கிடைக்காதன இல்லை. எண்வகைச் சித்திகளும், இந்திராதி போகங்கள் மட்டுமன்று; முக்தியும் கிடைப்பதாகும்.
=============================================
பாடல் எண் : 5
நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.

பொழிப்புரை :  பிறருக்கு உரியராய மனைவியரை விரும்புதலை விட்டவர்களும், புலனடக்கம் உள்ளவர்களும் ஆகிய அவர்களது நிவேதனம், தோத்திரம், வணக்கம், செபம், ஓமம் என்னும் இவையே வழிபாட்டிற்கு உரியனவாம். அவ்விடத்தில் காற்றும் தூய்மை யுள்ளதாய் இருக்கும்.
=============================================
பாடல் எண் : 6
வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொழிப்புரை :  சிவபெருமானுக்கு அடியவராகத் தம்மை ஒப்படைத்துவிட்டவர்களும், பசு புண்ணியத்தால் விளையும் சிறு பயன்களில் விருப்பம் இல்லாதவர்களும். உயர்ந்த சிவயோகத்தில் நிற்பவர்களும், பயன் கருதிச் செய்யும் காமிய வழிபாடுகளை மேற் கொள்ளாது, ஆய்ந்துணர்ந்த உணர்வினால் மிக்க அன்பு ஒன்றே காரணமாக வழிபாட்டினை மேற்கொள்வர்.
=============================================
பாடல் எண் : 7
அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொழிப்புரை :  அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறிவாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.
=============================================
பாடல் எண் : 8
இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
அருள் இவை விட்டறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.

பொழிப்புரை :  ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.
=============================================
பாடல் எண் : 9
தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.

பொழிப்புரை :  சிவம் தான் தோன்றாது ஆன்மாவேயாய் நிற்றலும், ஆன்மா தான்தோன்றாது சிவமேயாய் நிற்றலும் என்னும் இருநிலைகளுள், அறிபவனாகிய ஆன்மா அறியப்படுபொருளாகிய சிவமேயாகி விடுகின்ற இரண்டாம் நிலையை எய்தினவன் பின்பு `அறிபவன்` என்பதோடு நில்லாது, அன்பு செய்பவனாயும் நிற்பான். இந்நிலையே, `சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவ போகம்` என்னும் நான்கனுள் இறுதிக்கண்ணதாகிய சிவபோகத்தை அடையச் சிவமாம் தன்மையை எய்தும் வழியாம்.
=============================================
பாடல் எண் : 10
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

பொழிப்புரை :  பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.
=============================================
பாடல் எண் : 11
நமஅது ஆசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவ தன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொழிப்புரை :  `நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. சிவ- என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப் பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய் விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.
=============================================
பாடல் எண் : 12
தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.

பொழிப்புரை :  `சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #76 on: May 29, 2012, 07:35:37 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:04. நவகுண்டம்.
(பாடல்கள்:01-15/30)


பகுதி-I

பாடல் எண் : 1
நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

பொழிப்புரை :  அழலோம்புதற்குரிய குண்டங்கள் ஒன்பது வகையின. அவற்றின் சிறப்பை நான் சொல்லுமிடத்து, சிவபெருமானது சிறந்த உருவமாகிய ஒளிப்பிழம்பு ஓங்கி விளங்குவது அக்குண்டங்களிலேதான். அதனால், அப்பெருமானை அம்முறையில் வழிபடும் வழிபாட்டினால் எல்லா நன்மைகளும் விளையும். அது பற்றி அவற்றின் முறையை நான் இங்குக் கூறுகின்றேன்.
=============================================
பாடல் எண் : 2
உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

பொழிப்புரை :  மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங்களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக்குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.
=============================================
பாடல் எண் : 3
மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டம் சிறகற நின்றது
நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.

பொழிப்புரை :  பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத்தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந்திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.
=============================================
பாடல் எண் : 4
கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

பொழிப்புரை :  நான் மெய்ப்பொருளைப் பெற்ற வகைகளுள் ஒன்றாகிய குண்டத்தீயால் பதினான்கு உலகங்களை ஆக்கவும் முடியும்; பழமையாய் அவற்றுப் பரந்து கிடந்த மறைகளின் விரிந்த பொருள்களை நான் இன்று செய்கின்ற இந்தச் சிறிய ஒரு நூலின் பகுதியிலே எடுத்துக் கூறினேன்.
=============================================
பாடல் எண் : 5
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

பொழிப்புரை :  புறத்தே அமைக்கப்பட்ட குண்டத்தினில் எழுகின்ற தீயினிடத்தும் உடம்பில் சொல்லப்பட்ட பதினாறு இடங்களைக் கற்பித்து வழிபட அவ்விடங்களில் உள்ளே தியானிக்கப்பட்ட பிராசாத கலைகள் பதினாறும் இனிது அருள் வழங்கி நிற்கும். இவ்வாறு அகவழி பாட்டோடு ஒன்றி நிற்கும் வகையில் குண்டத் தீயைக் காண்பவர் களுக்கே அவர்கள் மேல் சீற்றங்கொண்டு எழுகின்ற வினைகள் அவரைச் சாரமாட்டாவாய் ஒழியும்.
=============================================
பாடல் எண் : 6
கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

பொழிப்புரை :  ஒன்பது வகைக் குண்டங்களுள் அறுகோணமாய் அமைந்த குண்டத்தில் ஐம்பெரும் பூதங்களும் அக்குண்டத் தீயின் அகமாயும், அதன் புறமாயும் நிற்கும். அதனையும் நினைந்து நிலவுலகத்தின் பகுதிகளாகிய மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகளையும் அக்குண்டத்திலே பாவித்து வழிபடுவார்க்கு அதனின்றும் எழுகின்ற தீ எல்லாத் தேவரையும், கோள்களையும் மகிழ்விக்கின்ற நல்ல தீயாய் அமையும்.
=============================================
பாடல் எண் : 7
நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.

பொழிப்புரை :  அங்கியங் கடவுட்குச் சிரசும், முகமும், கொழுந்தாகிய சுடர்களாம். பக்கங்களில் படர்ந்து தாவுகின்ற சுடர்கள் கைகளாம், கீழ்நின்று பசிய நிறத்தை உள்ளே உடையதாய் எழுகின்ற இடை ஒளிப் பிழம்பே மேனியாம், இவ்வாறாதலின் வேள்வித் தீயே சிவனது வடிவமாகவும் எண்ணப்படுகின்ற நன்மையை உடையதாகின்றது என்று சிவசக்தி கூறினாள்.
=============================================
பாடல் எண் : 8
நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

பொழிப்புரை :  வேள்வித் தீயினது சிறப்பைக் கூறிய அந்தச் சிவ சக்தியே, `நம்மைச் செலுத்தி நிற்பன மந்திரங்களே` என அருளிச் செய்தாள். அம் மந்திரங்களையே தனக்கு முடி முதல் அடிவரையும் உள்ள உறுப்புக்களாகக் கொண்டு அருளோடு நிற்கின்ற அவளது உண்மையை உணராதவர்கள், எல்லாக் கல்விகளையும் அடி தொடங்கி முறையாகக் கற்றும் அக்கல்விகள் பகலில் காணப்படுகின்ற வான வில்போல வெறுந்தோற்ற மாத்திரையாய்ப் பயன்படாதொழியும்.
=============================================
பாடல் எண் : 9
வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

பொழிப்புரை :  வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.
=============================================
பாடல் எண் : 10
இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக
நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச்
சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

பொழிப்புரை :  சிவபிரானது அகத்தொளி வடிவில் ஊன்றிய திருவடி அக்கினி மண்டலமாகிய மூலாதாரமும், சுவாதிட்டானமும் ஆம். தூக்கியாடுந் திருவடி நீர் மண்டலமாகிய மணிபூரகமும், அனாகதமுமாகும். திசைகளை அளக்கும் எட்டுக் கைகள் உடலகம் எங்கு மாகும். முகமும், அதன்கண் உள்ள முச்சுடர்களாகிய மூன்று கண்களும் விசுத்தியும், ஆஞ்ஞையுமாகிய இடங்களாகும்.
=============================================
பாடல் எண் : 11
முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.

பொழிப்புரை :  மூன்று கண்களை உடையவனாகிய சிவபெருமானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.
=============================================
பாடல் எண் : 12
எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

பொழிப்புரை :  சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறுமுகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க அதுவும் கூடி ஆறுமுகம் வெளிப்படையாய்த் தோன்றும்படி முருகன் உமையிடத்து உதியாது சிவபிரானது, முகங்களினின்றே தோன்றினமையாலும், பின்னும் சிவனும், சத்தியுமாகிய தந்தை தாயரது இடையிலே முருகன் குழவியாய் என்றும் நீங்காதிருத்தலாலும் `மைந்தன் தந்தையின் மறுவடிவமே` என்னும் ஒற்றுமை பற்றி, மேற்கூறிய ஓமாக்கினியை, `சிவாக்கினி` என்றலேயன்றி, `குகாக்கினி` எனவும் ஆகமங்கள் கூறுதலின் பொருத்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
=============================================
பாடல் எண் : 13
மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

பொழிப்புரை :  அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத்திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.
=============================================
பாடல் எண் : 14
நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

பொழிப்புரை :  மொழியையே அறிவாகப் பெற்று இயங்கிவரும் மக்களுயிர்க்கெல்லாம் மாணிக்க ஒளிபோல உள்நின்று, கண்மணி போல உதவி வருகின்ற சிவன், இவ்வுலக முழுதிலும் வேள்வித் தீயாக விளங்கியே திருக்கோயிற் படிமங்களில் உள்ளொளியாய்க் கலந்து நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 15
நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.

பொழிப்புரை :  மேற் கூறியவாறு சிவன் திருக்கோயிலில் விளங்கி நிற்றற்கு உரியது, சிறப்பாக அறுகோணக் குண்டமே. அவற்றோடு முன்னே சொன்ன பிறவும் இருத்தல் சிறப்பே இதனுள், விளங்குகின்ற சிவாக்கினியையும், தம்மையும் முன்போல யோகியராகச் செய்தலேயன்றி, முப்பத்தாறாய தத்துவ ரூபிகளாகவும் செய்தால், எவ் வுலகத்தில் உள்ளார்க்கும், எப்பொருளையும் அவன் வாயிலாகக் கொடுத்தல் கூடும்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #77 on: May 29, 2012, 07:36:33 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:04. நவகுண்டம்
(பாடல்கள்:16-30/30)

பகுதி-II

பாடல் எண் : 16
எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.

பொழிப்புரை :  குண்டத்தில் தீயாய் விளங்கும் சிவனுக்கு, (சிவாக்கினிக்கு) நடக்கின்ற பாதங்கள் மூன்று; `ஐ` என்னும் எழுத்தின் வடிவை ஒத்த முகம் இரண்டு; அம்முகங்களில் உள்ள கண்கள் ஆறு; நாக்கு ஏழு; தலையிரண்டிலும் கொம்புகள் நான்கு; கை ஏழு; இவ்வாறு அமைந்துள்ளன.
=============================================
பாடல் எண் : 17
அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.

பொழிப்புரை :  அழிவில்லாத சிவாக்கினியைத் தன்னுள் வியாப் பியமாகக் கொள்வதோர் இடமில்லை. (அவனே எல்லாவற்றிலும் வியா பகன்.) அவனுக்குத் தோற்றமும், முடிவுமாகிய கால எல்லையும் இல்லை. (என்றும் உள்ளவன்.) அவனது இயல்பை முற்றக் கூறச் சொல்லில்லை. ஆகவே, அவனைத் திருவைந்தெழுந்துள் யகர வாச்சியமாகிய ஆன்மாவினுள்ளே காண்பதே அறிவுடைமையாம்.
=============================================
பாடல் எண் : 18
பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொழிப்புரை :  பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.
=============================================
பாடல் எண் : 19
பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.

பொழிப்புரை :  மேற் கூறிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவ ராகிய, மனோன்மனி மணாளராகிய சதாசிவ மூர்த்திக்கு முகம் ஐந்தாகலின், உச்சி முகம் நீங்க ஏனைய நாற்றிசையில் உள்ள நான்கு முகங்கட்கும் முகம் ஒன்றிற்கு நான்காகக் கைகள் இருபதும், எல்லா முகங்கட்குமாக வாய் ஐந்தும், கண்கள் ஐம்மூன்று பதினைந்தும், காதுகள் பத்துமாய் உள்ளன.
=============================================
பாடல் எண் : 20
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொழிப்புரை :  ஐந்து முகங்களால் ஐந்து வேறுபட்ட நிலைகள் போலக் காணப்படுகின்ற சதாசிவரால் அளவிட்டறிந்து ஆளப்படும் மகேசுவரரது நிலைகள் இருபத்தைந்தும் புகை பொருந்திய ஓம குண்டத்தில் பொருத்தி விளங்குதலால், சதாசிவர் முதல் ஐவராக விரிந்து நிற்கின்ற சிவன் மகிழ்ந்து தோன்றுகின்ற ஓமாக்கினியை நல்ல வகையில் ஓம்பி வாழ்தலே முத்தி நிலையாகும்.
=============================================
பாடல் எண் : 21
முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :  வீடு பேற்றைத் தருகின்ற ஞானவடிவினனும், வேள்வியில் நிறைவுடைய தீயாய் நிற்பவனுமாகிய சிவன், வேதங்களைக் கற்று அவ்வொழுக்க நெறியில் குற்றமின்றி நிற்பவரது உள்ளத்திலே விளங்கி நிற்பான். உலகப் பற்றுக்களைவிடுத்து அவனையே நாடி, படர்ந்து எரிகின்ற அத்தீயிடமாக அவனை அணுகி வெகுளி முதலிய குற்றம் நீங்கி நின்றவர் அவனைப் பெற்று நின்றார்கள்.
=============================================
பாடல் எண் : 22
சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொழிப்புரை :  எல்லாவற்றையும் வியாபித்து நிற்கின்ற நிவிர்த்தியாதி பஞ்சகலைகளும், ஓமத் தீயும் ஒன்றாய் இயைந்து நிற்கும், அதனால், எல்லா உலகங்களும் அத்தீயினிடத்து அடங்கி நிற்பனவாம். ஆகையால், அந்தத் தீயை நிவிர்த்திக்குமேல் பிரதிட்டையில் சிறிது எல்லையளவிலே நிற்கின்ற ஐம்பூதங்களின் ஒன்றாகிய தீயாக எண்ணும் எண்ணத்தை வெறுத்தவரே மேற் சொல்லியவாறு சிவனோடு என்றும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையைப் பெற்றவராவர்.
=============================================
பாடல் எண் : 23
மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

பொழிப்புரை :  கடல் சூழ்ந்த நிலவுலகின் ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) உயிர் உய்தி பெறுதற்கு உரிய உலகமாக அமைத்த ஒருவனாகிய சிவனை அவ்விடங்களில் பிறந்துள்ள நீங்கள் வழிபாட்டினால் அடையுங்கள், அவனால் படைக்கப்பட்ட அவ்வுலகம் முழுதையும் அறியும் அறிவைப் பெற்ற தேவர்களும் அதன்கண் சென்று அவனை வழிபட்டே மெய்ப் பொருளைப் பெற்றார்கள் ஆதலால்.
=============================================
பாடல் எண் : 24
கலந்திரு பாதம் இருகர மாகும்
அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.

பொழிப்புரை :  சிவாக்கினியது உருவத்தை மேல் ``எடுக்கின்ற பாதம்` (1013) என்னும் மந்திரத்திலும், ``பார்ப்பதி பாகன்`` (1016) என்ற மந்திரத்திலும் கூறியவாறன்றி வேள்வி வேட்பார் தம் வடிவு போன்ற வடிவமாகவும் தியானிக்கலாம். அவ்விடத்திடல் நெற்றிக்கண் ஒன்று மட்டுமே சிறப்புருவமாகக் கொள்ளத்தக்கது.
=============================================
பாடல் எண் : 25
உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

பொழிப்புரை :  சிவபெருமான் வாகீசுவரிக்கு நாயகனாய் இன்புற்று மகிழ்ந்ததனால் உண்டாகிய ஓமத்தீ குண்டத்தின் கீழ்ப்பாதியோடு நில்லாமல் மேற்பாதியிலும் பரத்தலால், அங்கு உள்ள இடங்களும் வேறுபடும். அந்நிலையில் அச்சிவனே அந்தத் தீயுருவில் முதலிலே குழவிப் பருவத்தனாயும், பின்பு காளைப் பருவத்தனாயும் இருப்பான்.
=============================================
பாடல் எண் : 26
கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாதவாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.
=============================================
பாடல் எண் : 27
மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

பொழிப்புரை :  தன்னைக் காண்பவர்க்குப் பெரிய செல்வமாய் வளர்கின்ற ஓமத்தீயைத் தனக்குப் பயன் தரும் சாதனமாகக் கொண்ட ஆசாரியன், எப்பொழுதும் மாணவர்களது சத்திநிபாத வகையைத் தெரிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அதனை அறிவித்தலை மேற் கொள்வானாயின், அவன் உலகம் முழுதிற்கும் குருவாய்ப் பலரை ஆட்கொள்ள வல்லவனாவன்.
=============================================
பாடல் எண் : 28
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

பொழிப்புரை :  உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்றதாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந்தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப்படுகின்றது.
=============================================
பாடல் எண் : 29
உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

பொழிப்புரை :  அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவகுண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.
=============================================
பாடல் எண் : 30
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளைவாறு பூநிலை
போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடும் நவகோடி தானே.

பொழிப்புரை :  பயன்களில் சரியை முதலிய நான்கிற்கும் நாற்கோண குண்டமும், வேள்விக் கடன் முற்றுதற்கு முக்கோண குண்டமும், வெற்றிக்கு வில்லை ஒத்த பிறைக் குண்டமும், துன்ப நீக்கத்திற்கு விருத்த குண்டமும், எல்லாப் பயன்கட்கும் அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு அட்டகோண குண்டமும், ஆசிரியத் தன்மைக்குப் பதும குண்டமும், அழகிய கையையுடைய யானைமேற் செல்லும் அரசச் செல்வத்திற்குப் பஞ்சகோண குண்டமும் சிறப்பாக உரியனவாம். நவகுண்டங்களை இவ்வாறு பெரும்பான்மை பகுத்துணர்ந்து கொள்க.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #78 on: May 29, 2012, 07:37:36 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:05/1. சத்தி பேதம்
(பாடல்கள்:01-15/30)


பகுதி-I

பாடல் எண் : 1
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.

பொழிப்புரை :  மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.
=========================================
பாடல் எண் : 2
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொழிப்புரை :  மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, அவ்வகையிலெல்லாம் விளங்குவாள்.
=========================================
பாடல் எண் : 3
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொழிப்புரை :  சத்தி, தனது வியாபகத்தைப் பெற்றுள்ள, `உருத்திர லோகம், விட்டுணுலோகம், பிரமலோகம்` என்னும் மூன்று உலகங்களில் தலைமை பூண்டு நிற்கின்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் மூவரையும் தோற்றி ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பாள். அவள் ஓருத்தியே பொன்னிறம் உடைய சத்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
=========================================
பாடல் எண் : 4
நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

பொழிப்புரை :  ஐந்தொழில் முதல்வரைத் தருகின்ற திரிபுரை நாதம், நாதாந்தம், பலவாய் விரியும் பரவிந்து, நிலம், வானம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள். அதனால், அவள் அனை வர்க்கும் மேலானவள்; பலரையும் இன்புறச் செய்பவள்; மன வாக்குகளுக்கு அகப் படாதவள். பக்குவம் வந்த நிலையில் அருட் சத்தியாயும் பதிவாள். பின்பு ஞானத்தைக் கொடுத்துத் தன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்வாள்.
=========================================
பாடல் எண் : 5
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொழிப்புரை :  திருவடிகளில் சிலம்பு, இடையில் சிவந்த பட்டுடை, மார்பில் கச்சு, நான்கு கைகளிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடி, காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் - இவைகளே திரிபுரைக்கு உள்ள அடையாளங்களாம்.
=========================================
பாடல் எண் : 6
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொழிப்புரை :  குண்டலம் அணிந்த காதினை உடையவள்; கொலை செய்கின்ற வில்லை ஒத்த புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறை அணிந்தவள்; `சண்டிகை` என்னும் பெயர் உடையவள்; இவள் உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருள்கின்றாள்.
=========================================
பாடல் எண் : 7
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொழிப்புரை :  நித்தியளாகிய திரிபுரை கால எல்லையைக் கடந்த பழமை உடையவள். மாயை வழியாக உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற உருத்திராக்க மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.
=========================================
பாடல் எண் : 8
சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.

பொழிப்புரை :  திரிபுரை இன்னும் தூய, அழகிய, திண்ணிய கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றத்திலே விளங்கு பவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள். எல்லாச் சத்திகளினும் பெரியளாய் மேலான சத்தி; அப்பொழுதே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியளுமாய் எண்ணப்பட்டு அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளுமாவாள்.
=========================================
பாடல் எண் : 9
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொழிப்புரை :  [இதன் பொருள் வெளிப்படை.]
குறிப்புரை : ஐவர், படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் தலைவர். ஊர், முத்தி. சிவ பரத்துவம் உணர்த்திய. ``அவனை ஒழிய அமரரும் இல்லை`` என்ற மந்திரத்தினை (41) இதனுடன் வைத்து நோக்குக. இதனாலும், அவளது பெருமை பிற சில கூறப்பட்டன.
=========================================
பாடல் எண் : 10
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொழிப்புரை :  திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.
=========================================
பாடல் எண் : 11
தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.

பொழிப்புரை :  உடம்புகள் எங்கு உள்ளனவோ அங்கெல்லாம் உள்ள உயிர்களைக் காப்பவனாகிய சிவன், தான் எங்கு இருப்பவனாக அறியப்படுகின்றானோ அங்கெல்லாம் சத்தியும் உடன் இருக் கின்றாள். அதனால், ஆகாயம் உள்ள இடங்களில் எல்லாம் இருக்கின்ற எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்றும், அப்பொருள்களையும், அவற்றிற்கு இடம் தந்து நிற்கின்ற ஆகாயத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் எங்கும் விளங்குகின்ற எந்த உருவமும் சத்தி என்றே அறிவாயாக.
=========================================
பாடல் எண் : 12
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொழிப்புரை :  `திரிபுரை` என்னும் சத்தியே மேலானவளும், பெரியவளும் ஆவள். அதனால், அவளே பல்வேறு வகையான காப்புச் சத்தியாய் நிற்றலை, மாணவனே, நீ அறிவாயாக. இனி, அக் காப்புத்தான், திரிவுபடுகின்ற ஊழிகள் தோறும் உடனாய் நின்று புண்ணியத்தின் பயனாகிய உலகின்பத்தைத் தருதலேயாம்.
=========================================
பாடல் எண் : 13
போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொழிப்புரை :  அடியார்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் தியானிக்க, அங்ஙனம் தியானிக்குந்தோறும் அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படர்தற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தியே, முன்பு ஒரு கூற்றில் அவ் விடத்துத் திரோதான சத்தியாய் நின்று, பின் அருட் சத்தியாயே விளங்குவாள்.
=========================================
பாடல் எண் : 14
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.

பொழிப்புரை :  [இதன் பொருள் வெளிப்படை.]
குறிப்புரை : கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்றவள். வம்பு அவிழ்கோதை - வாசனையோடு மலர்கின்ற பூக்களையுடைய மாலையை அணிந்தவள். நாடி - நாடப்பட்டவள். சிறுமி - கன்னி. நம்பி - தெளிந்து. நயந்து - விரும்பி. இதனுள்ளும் அம்மைக்குச் செம்மை நிறம் கூறப்பட்டமை அறியத் தக்கது. ``மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி [அபிராமி`` ௧]  எனப் பின்வந்த அடியவரும் கூறினார். இதனால், திரிபுரையது தியானச் சிறப்புக் கூறப்பட்டது.
=========================================
பாடல் எண் : 15
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.

பொழிப்புரை :  பலவகை வழிபாட்டிலும் விளங்கும் தலைவி யாகிய திரிபுரையே, உலகத்தில் வைக்கப்பட்டுள்ள பல சடப்பொருள் களும், அளவிறந்த உயிர்களாகிய சித்துப்பொருள்களும், உலகின் பத்துத் திசைகளும், சூக்குமை முதலிய நால்வகை வாக்குகளும் அந்தக் கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாற்றல்களுமாய் நிற்பாள்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #79 on: May 29, 2012, 07:38:39 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:05/2. சத்தி பேதம்.
(பாடல்கள்:16-30/30)


பகுதி-II

பாடல் எண் : 16
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :  `வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள்; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.
=========================================
பாடல் எண் : 17
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.
=========================================
பாடல் எண் : 18
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :  அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத் தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார்களில்லை.
=========================================
பாடல் எண் : 19
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :  உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள்ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்றவர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.
=========================================
பாடல் எண் : 20
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :  அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற்பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப் படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
=========================================
பாடல் எண் : 21
உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :  காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரிபுரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமயவாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவிய தில்லையின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.
=========================================
பாடல் எண் : 22
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :  சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமேயாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
=========================================
பாடல் எண் : 23
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :  எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தியிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.
=========================================
பாடல் எண் : 24
தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :  காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்களாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற்காகவே உலகில் வாழ்வீராக.
=========================================
பாடல் எண் : 25
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :  ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படுபவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப்பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.
=========================================
பாடல் எண் : 26
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :  திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள்கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.
=========================================
பாடல் எண் : 27
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :  மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மையான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவராயுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.
=========================================
பாடல் எண் : 28
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :  திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்றவராக முகத்தை உடையவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.
=========================================
பாடல் எண் : 29
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :  பரவிந்துவாய் நிற்கின்ற சிவ சத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனியளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.
=========================================
பாடல் எண் : 30
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :  உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான்கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியனவுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #80 on: May 29, 2012, 07:40:19 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:06/1. வயிரவி மந்திரம்
(பாடல்கள்:01-25/50)

பகுதி-I

பாடல் எண் : 1
பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.

பொழிப்புரை :  பன்னிரு கலைகளை உடையதாகச் சொல்லப்படு கின்ற ஓங்காரத்தில் நாத விந்துக்களைப் பாவித்து, அதன் பின் ஆதி யாகிய வயிரவியது மந்திரத்தில் முதல்எழுத்து அகாரம் முதலிய வற்றில் பன்னிரண்டாம் எழுத்தாகிய `ஐ` எனவும், ஈற்றெழுத்து அவற்றில் பதினான்காம் எழுத்தாகிய `ஔ` என்பது பதினாறாம் எழுத்தாகிய விசர்க்கத்தோடு கூடியது எனவும் அறிந்து அவ்வாறே ஓதிப் பயன் பெறுக.
==============================================
பாடல் எண் : 2
அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :  மேற் கூறியவாறு விசர்க்கத்தோடு கூடி இறுதியில் நிற்கின்ற `ஔ` என்னும் எழுத்தே வயிரவி மந்திரமாகிய சொல் தொடருக்கு முன்னும், ஏனைய `ஐ, ஓம்` என்பவை முறையே அந்த ஔகாரத்திற்கு முன்னே நடுவணதாயும், முதற்கண்ணதாயும் உள்ள பீசங்கள் முன்னே நிற்க. அவ்வாற்றால் உள்ளக்கமலத்தில் விளங்குகின்ற பராசத்தியாகிய வயிரவி, உலகிற்கு முடிவும் முதலுமாய் உள்ளாள்.
==============================================
பாடல் எண் : 3
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

பொழிப்புரை :  உலகிற்குக் காரணர்களாகின்ற `அயன், அரி, அரன்` என்னும் மூவரும் வயிரவியது அழிப்பும், காப்பும், படைப்பும் ஆகிய செயல்களில் ஒரு கூற்றிலே அடங்குபவர் ஆதலின், வீடாகிய பெரும் பயனைப்பெற விரும்பி அவளை வழிபடுகின்ற சிறந்த புண்ணியத்தை உடையவர்கள், நிலையற்ற அம்மூவர் பதவிகளுள் ஒன்றனையும் விரும்பார்.
==============================================
பாடல் எண் : 4
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

பொழிப்புரை :  இருபத்தேழு நாட்களைக் கொண்ட மதியளவை (சாந்தரமான) மாதம் ஒன்றுகாறும் அகத்தும், புறத்தும் வளர்க்கப்படுகின்ற ஓமாக்கினியே வயிரவி வடிவமாகும். அதனைப் பகல் இரவு இடைவிடாது ஓம்புகின்ற மன உறுதியுடையவன் `சிவனே` என எண்ணத்தக்க பெருமையுடையவனாவன்.
==============================================
பாடல் எண் : 5
தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

பொழிப்புரை :  :  உள்ளத்தில் பொருள் வடிவாக எண்ணப்படுகின்ற திரிபுரை மந்திரத்தை, உயர்த்துச் சொல்லப்படுகின்ற அன்பினாலாகிய மேற்கோளோடு வாழ்நாளின் இறுதி வரை சிவனொடு வைத்து, சொல் வடிவிலும் ஓதிவரும் அன்பன் பொருட்டாக அவளை நிலவுலகம் கயிலாயமலை போலவே சிவனோடு தன்னகத்து வைத்துப் போற்று கின்றது.
==============================================
பாடல் எண் : 6
ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

பொழிப்புரை :  நூல்களால் சொல்லப்படுகின்ற சிவனுடையதும், உணர்வுடையோரால் உணரப்படுவதும் ஆகிய திருவருட் சத்தியும், வேதத்தின்வழி வழுவாது ஒழுகி வருவோரால் வழிவழியாக உபதேசிக்கப்பட்டு வருகின்ற ஞானமும், மேற்கூறியவாறு இருபத்தேழு நாள்களை உடைய ஒரு மதி வட்டங்காறும் விளங்கி நிற்கின்ற ஓமாக்கினியை வயிரவி தேவி தன் அடியார்களின் முன் சூலத்தோடு வந்து அருள் புரிவாள்.
==============================================
பாடல் எண் : 7
சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

பொழிப்புரை :  வயிரவிக்கு அழகிய கைகள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் என்பவற்றை ஏந்தியிருப்பாள். இவள், மாலாலும், அயனாலும் அறியப்படாத அழல் வடிவத்தை உடைய சிவனுக்குச் சிறந்த திருமேனியாகின்ற அருளேயன்றி, வேறல்லள்.
==============================================
பாடல் எண் : 8
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.

பொழிப்புரை :  மேலும் இவள், மென்மையான இயல்பை உடையவள்; வஞ்சிக் கொடி போலும் வடிவினையுடையவள்; சிறிது சினங்கொண்ட மனத்தினள்; பலகலையும் உணர்ந்தவள் ; தோன்றுகின்ற வாய் முள்முருக்க மலர்போலச் சிவந்திருப்பவள்; நீல மணி போன்ற நிறத்தை உடையவள்; பல நிறத்தோடும், பல மணிகளோடும் கூடிய உடையை அணிந்தவள்.
==============================================
பாடல் எண் : 9
பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

பொழிப்புரை :  இன்னும் இவள், பல வயிரங்கள் இழைத்த கோடி சந்திரன்போலும் அழகிய முடியை அணிந்தவள்; சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரத்தின குணடலத்தை அணிந்த காதினை உடையவள்; மான் போல மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள்; சிறந்த ஒளிகளாகிய சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவள்; பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையும் நிரம்ப உடையவள்.
==============================================
பாடல் எண் : 10
பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

பொழிப்புரை :  விரிந்துநின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் (பொகுட்டில்) மேலான சத்தி ஒருத்தி இருக்கின்றாள். அவ் எட்டிதழ்களில் கன்னியர் எண்மரும், அவருள் ஒருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் பணிமகளிரும் அங்குச்சூழ்ந்து பணிபுரிந்து அந்தச் சத்தியைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.
==============================================
பாடல் எண் : 11
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

பொழிப்புரை :  இறைவியாகிய பராசத்தி மேற்கூறிய மனோன்மனியாய்ப் பூசிக்கப்படும் பொழுது கன்னித்தன்மையைக் குறிக்கச் சிலம்பும், வளையலும் அணிந்தவளாகவும், உலகத்தைக் காக்கின்ற செயலைக் குறிக்கச் சங்கு சக்கரங்களை ஏந்தியவளாகவும், எட்டுத் திசையும் நிறைந்தவளாதலைக் குறிக்க எட்டிதழ்த் தாமரையின் நடுவில் உள்ளவளாகவும் கருதப்படுவாள்.
==============================================
பாடல் எண் : 12
பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.

பொழிப்புரை :  எங்கும் நிறைந்தவளாகிய சத்திக்கு உரிய பூசைப் பொருள்களாவன. சந்தனம் குங்குமம் பனிநீர் முதலிய நறுமணப் பொருள்கள். சூடத்தக்க மிக்க பல மலர்கள், ஐவகை வாத்தியங்கள், ஒலிக்காத மணிபோல வாய்க்குள்ளே சொல்லப்படும் மந்திரங்கள் முதலியனவாம்.
==============================================
பாடல் எண் : 13
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.

பொழிப்புரை :  உலகில் காணப்படுகின்ற பலப்பல தெய்வங்களும், வேறு வேறு வகையாய் அணியப்படுகின்ற அணிகலங்கள் பலப்பலவும் ஒரு பொன்னின் வேறுபாடேயாதல் போலத் தோன்று வனவாம். அவைகளுள் முதல்வராகப் போற்றப் படுகின்ற மும்மூர்த்தி காணப்படுந் தலைவி உலக காரணியாகிய ஆதிசத்தியே.
==============================================
பாடல் எண் : 14
காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

பொழிப்புரை :  தூலம், சூக்குமம் முதலாக வகுத்துச் சொல்லப் படுகின்ற மந்திரங்களுள் காரண மந்திரத்தை ஓதுவோரது உள்ளக் கமலத்தில், பூரக கும்பக இரேசகங்களாகின்ற பிராணாயாமத்தால் விளங்கி நிற்கின்ற சத்தி, சத்தனாகிய சிவனது நடுவில் உள்ளவளாய் இருப்பாள். இவ்வாறு சொல்லுகின்ற வேதப் பகுதி வேதத்தின் முடிவாய் விளங்குவதாம்.
==============================================
பாடல் எண் : 15
அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.

பொழிப்புரை :  கைகளில் மோதிரவிரல், சிறுவிரல் முதலாகத் தொடங்கி வலமாகப் பெருவிரலின் நுனியால் வரைகளைத்தொட்டு உருவை எண்ணி நடுவிரலில் முடிக்கும் வகையால் மீள மீள உருவேற்றப்படும் தமிழ்மந்திரம் முதலிய மந்திரங்களை அவ்வவற்றிற்குரிய தெய்வங்களாகவே தெளிந்து வழிபடுங்கள்; (பயன் விளையும்.) இதனை எங்கள் நந்திபெருமான் நான் உணரும் வண்ணம் உரைத்தருளினார்.
==============================================
பாடல் எண் : 16
உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

பொழிப்புரை :  ``மேல்,`` ``பூரித்த பூவிதழ்`` (1067) என்னும் மந்திரத் திற் சொல்லப்பட்ட ஒன்பது சத்திகளுள் இறுதியதாகிய `மனோன்மனி` என்ற ஒன்று முடிவாய் நிற்க. மற்றைய எட்டினையும், வரிசைப்பட்ட எட்டு இடங்களில் வைத்து ஒன்றன்பின் ஒன்றாக முறையே எண்ணிப் பிராசாத கலைகள் பன்னிரண்டில் இறுதி எட்டோடும் அவற்றை முன்னே கூறிய நந்திபெருமான், அவ்வாற்றானே வரிசைப்பட நியமிக்கப்பட்ட முறையில் வழிபாட்டு முறையை ஆக்கியருளினார்.
==============================================
பாடல் எண் : 17
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.

பொழிப்புரை :  மாலையையணிந்த கூந்தலை உடையவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், உயிரின் அறிவில் பொருந்திய வலிய ஆணவ இருள்போகும்படி ஞான ஒளியைப் பரப்பு கின்ற இளமையான கொடிபோல்பவளும் ஆகிய வயிரவி, வெளியில் ஓமத்தீ வடிவாயும், உள்ளே மூலாக்கினி வடிவாயும் பொருந்தி, விந்துத் தானத்து அமுதத்தோடு இருதயத்தில் வந்து நின்றதை, நீ காண்பாயாக.
==============================================
பாடல் எண் : 18
காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.

பொழிப்புரை :  இருதய மந்திரமும், சிரோமந்திரமும் `நம:` என்னும் முடிபினை உடையன. சிகா மந்திரமும் `வஷட்; என்னும் முடிபினை உடையது.
==============================================
பாடல் எண் : 19
சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.

பொழிப்புரை :  சிகா மந்திரத்தில் உள்ள `வஷட், என்னும் முடிபு சிறிது வேறுபட்ட `வௌஷட்` என்பது கவச மந்திரத்திற்கும், `பட்` என்பது அத்திர மந்திரத்திற்கும் முடிபாகும். நேத்திரங்கட்குரிய மந்திரத்திற்கு, பொதுவாயுள்ள, `நம:` என்பதே முடிபாம். நேத்திர நியாசத்தில் திரிசூல முத்திரை காட்டல் வேண்டும். சத்தி வழிபாட்டில் யோனி முத்திரை காட்டலும் பொருந்தும்.
==============================================
பாடல் எண் : 20
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.

பொழிப்புரை :  கைகளை உள்முகமாகக் கொண்டு முயற்சியோடு சிறுவிரல் இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக மாறி வைத்து அணிவிரல்களையும் அவ்வாறே சுட்டு விரல்களால் மாறிப்பிடித்து மோதிர விரல்களின் மேல் நீண்டதாகிய நடுவிரல் ஒவ்வொன்றையும் நிமிர்த்திப் பொருந்த வைத்துப் பெருவிரல் இரண்டையும் மாற்ற மின்றி உள்ளே புகச் செய்தபின், நேத்திர மந்திரத்தைச் சொல்லுக.
==============================================
பாடல் எண் : 21
பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

பொழிப்புரை :  சத்தி வழிபாட்டில் பிராண வாயு வசப்படுதற்கு உரியதாகிய உபதேசத்திற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, இகர உயிர், அம்ச மந்திரத்தினின்று பிரித்துத் தனியே தயக்கம் இல்லாமல் சொல்லப்படுகின்ற சகர மெய்யை முன்னர்க் கொண்டு, இறுதியில், முடித்துச் சொல்லப்படும் விந்துவாகிய மகாரத்தையும் ஏற்று நிற்கச் சொல்லப்படுவதாம்.
==============================================
பாடல் எண் : 22
கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

பொழிப்புரை :  மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 23
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

பொழிப்புரை :  துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழி பட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.
==============================================
பாடல் எண் : 24
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

பொழிப்புரை :  முக்கண்ணியும், சோதி (ஒளி) வடிவானவளும், பராபரையும், `ஆதி` என்னும் பெயரொடு முதல்வியாய் நிற்பவளும் ஆகிய வயிரவி தனது ஆற்றலால் வேதம் சராசரப் பொருள்கள், ஐம்பூதம், நான்குதிசை, இருள், ஒளி, பலவகை உடம்புகளாய்த் தோன்றுகின்ற பல உயிர்கள் முதலிய எல்லாமாய் நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 25
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :  :  தென்கோடியாகிய குமரித்துறையில் நிலைபெற்றிருப்பவளும் எப்பொருட்கும் ஆதியுமாகிய வயிரவியைத் துதித்தும், தியானித்தும் நின்றால், உடலில் உள்ள உயிர் சிவமாகும். அறியாமை பொருந்திய இவ்வுலகில் பலவாறு பிறக்கும் பிறவிகள் ஒழியும். அவளது வடிவு எண்ணிறந்த வகையினது ஆகலின், அஃது ஒன்றாயே இருத்தல் கூடுமோ!
« Last Edit: May 29, 2012, 07:42:12 AM by Anu »


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #81 on: May 29, 2012, 07:41:06 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:06/2. வயிரவி மந்திரம்
(பாடல்கள்:26-50/50)

பகுதி-II

பாடல் எண் : 26
கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொழிப்புரை :  `அழகிய கூந்தல், வளைந்த புருவம்` நீல நிறத்தை உடைய குவளை மலர்போலும் கண்கள்` களிப்பைத் தருகின்ற இனிய அமுதம் போன்ற ஆனந்தமே உருவான அழகிய வடிவம், இவைகளை உடைய வயிரவியே எப்பொருட்கும் மேலான சிவத்தை உயிர்கட்கு வெளிப்பட்டுத் தோன்றச் செய்தாள்.
==============================================
பாடல் எண் : 27
வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.

பொழிப்புரை :  முன்னே சிவத்தை வெளிப்படுவித்துக் காணச் செய்து, பின் அக்காட்சியின் பயனாக முற்றறிவையும், முற்றறிவின் பயனாகத்தெளிவையும், தெளிவின், பயனாக இன்ப அனுபவத்தையும், அவ்வனுபவத்தின் பயனாக, சிவத்தைவிட்டு நீங்காது அதனுள்ளே அடங்கியிருத்தலையும் முறையே பெறச் செய்து என்னை உய்யக் கொண்டாள் வயிரவி.
==============================================
பாடல் எண் : 28
கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொழிப்புரை :  வணங்குவாரது உச்சிமேல் நிற்பவளாகிய `வயிரவி` என்னும் நல்ல சத்தி, அளவிறந்த வடிவுகளைக் கொண்டாள், கொண்டு, அக இருளை நீக்குதற்கு `அறுபத்து நான்கு` எனப்படும் கலைத்துறைகள் அனைத்திலும் நூல்களை ஆக்கினாள். புற இருளைப் போக்குதற்கு வானத்தில் விளங்கும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் படைத்தாள்.
==============================================
பாடல் எண் : 29
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொழிப்புரை :  (இதன் பொருள் வெளிப்படை.)
குறிப்புரை :  ``பைய`` என்றது, `இயன்ற அளவு` என்றவாறு, அவளது பெருமை முழுவதையும் அறிந்து துதித்தலும், அப்பெருமை யளவிற்குத் தக வழிபடுதலும் ஒருவர்க்கும் கூடாமையின் ``பைய`` என்றார். மலையளவு சுவாமிக்குக் கடுகளவு கர்ப்பூரம்` என்பது பழமொழி.
``ஏழை அடியார் அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்`` 2...  என்பதில் ஞானசம்பந்தர். அடியார்களை, `ஏழை அடியார்`` என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றி,
``யானறி யளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்`` 3 ....என்றார் முருகாற்றுப்படையிலும், நூக்குதல் - போக்குதல். பவம் - பிறப்பு.  இதனால், சத்தியது பெருமையும், உயிர்களது சிறுமையும் கூறுமுகத்தால், உயிர்கள் அவளை வழிபடும் கடப்பாடுடையன வாதல் கூறப்பட்டது.
==============================================
பாடல் எண் : 30
வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

பொழிப்புரை :  [ இதன் பொருள் வெளிப்படை.]
குறிப்புரை : வேய் - மூங்கில். விரை - நறுமணம். ஏய - பொருந்திய. குழல் - கூந்தல். பிறையைச் சூடிய ஏந்திழை` என்க. பிறை சடையில் உள்ளது. சூலினி - சூலத்தை ஏந்தியவள். ஏய் உள்ளம் - தான் இருத்தற்குப் பொருந்திய உள்ளம்; அஃதாவது, அறிவும், அன்பும் நிரம்பிய உள்ளம். ``சுந்தரி`` என்பதை ``குழலி`` என்பதன் பின்னர்க் கூட்டி, அது காறும் ஒருவகைக் கோலமும், பின், ``சூலினி`` என்பது காறும் வேறொரு வகைக் கோலமும் ஆக இருவேறு வடிவங்களைக் கூறினமை கொள்க. முன்னது அமைதிக் கோலமும், பின்னது கடுமைக் கோலமுமாதல் அறிக. எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.  இது முதல் ஐந்து மந்திரங்களால் சத்தி தமக்கு அருள் புரிந்தவாறு கூறினார் என்க.
==============================================
பாடல் எண் : 31
இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொழிப்புரை :  தென்கோடியில் உள்ள இனிய கடற்கரையில் எழுந்தருளியிருக்கும் குமரியாகிய வயிரவி, தன்னோடு இணை ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவி; அதனால், அவள் ஒருத்தியே உலகத்திற்கு முதல்வி. அவள் என்னை உலகச் சார்பினின்றும் நீக்கித் தனியனாகச் செய்து, பின் தனது துணைமையில் இருக்கவைத்து, இன்பத்தை மிக உண்டாக்கி, இவ்வாறு என் உள்ளத்தில் நின்று பயனளித்தாள்.
==============================================
பாடல் எண் : 32
நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.

பொழிப்புரை :  `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளுள் நடுவிலே ஓங்குகின்ற நாளம் போல்வதாகிய சுழுமுனை நாடியுள்ளே பொருந்தி நின்ற, இளையவளும், கன்னிகையும் ஆகிய சத்தியது பாடகம் அணிந்த சிறிய பாதத்திலே உள்ள பசிய பொன்னா லாகிய சிலம்பினது ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக் கவும் அதனைக் கேட்கமாட்டாமல் உறங்குகின்றேன் என்றால், எனது அறியாமையை என்னென்பது.
==============================================
பாடல் எண் : 33
உறங்கு மளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.

பொழிப்புரை :  மேற் கூறியவாறு யான் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனோன்மனியாகிய சத்தி வந்து, ஒலிக்கின்ற வளையணிந்த தனது கைகள் என் கழுத்திற் பொருந்தும்படிக் கட்டிக்கொண்டு, விளங்குகின்ற ஒளியை உடைய தம்பலத்தை என் வாயில் உமிழ்ந்து உடனே `யான் சிறிது விழித்தபொழுது, ஐயா உறங்கியே காலத்தைக் கழிக்காதே` என்று சொல்லி, உறக்கம் வாராதிருத்தற்கு வழியும் செய்தாள்.
==============================================
பாடல் எண் : 34
உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.

பொழிப்புரை :  எல்லாவற்றுக்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவள் ஆகிய சத்தி எனது மனத்தில் உண்டாகின்ற தீங்குளையெல்லாம் அறவே போக்கி, அவ்விடத்தில் அன்பு விளையச் செய்து, நல்லாள் ஆகிய குண்டலியை விளங்கச் செய்கின்ற சுழுமுனை நாடியினுள்ளே எனது மனத்தை ஒடுங்கப் பண்ணி `இனி நீ எதற்கும் அஞ்சவேண்டா` என்று என் அச்சத்தை நீக்கியருளினாள்.
==============================================
பாடல் எண் : 35
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொழிப்புரை :  `சத்தி தனது திருவடியையே தஞ்சமாகக் கருதிப் போற்றுபவர்க்கே அருள்புரியும் இறைவியாவாள்` என்று அறிந்தோர் சொல்லுவர்.
==============================================
பாடல் எண் : 36
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

பொழிப்புரை :  சத்தியானவள், அரிய உயிர்களின் பக்குவங்களையே எப்பொழுதும் நோக்கி நிற்பவளாதலின், இயல்பிலே அவள் ஞானத்தைத் தருகின்ற சாந்த ரூபியாயினும், உயிர்களது அபக்குவ நிலைபற்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் துன்பத்திற்கு ஏதுவான தொழில்களைச் செய்பவளாகின்றாள். எனினும், என் உள்ளத்தில் அவள் சாந்தரூபியாயே விளங்குகின்றாள்.
==============================================
பாடல் எண் : 37
குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு என் உள்ளத்திலே மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்தச் சத்தி அவ்வாறு அளவற்ற காலங்கள் இருந்தும் நீங்குதல் இல்லாதவளாய், நான் பிராசாத யோகத்திலே உழன்று நின்ற பொழுது அதன் கலைகளில் முடிவானதற்கு இடமாகிய துவாத சாந்தத்தில் பொருந்தி நிற்பவளாயினாள்.
==============================================
பாடல் எண் : 38
கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.

பொழிப்புரை :  மேற் கூறிய அச்சத்தி, உன்மனாகலையின் இடமாகிய அந்தத் துவாத சாந்தத்தில் தான் தனியே இராது சிவத்தோடு கூடியே விளங்குவாள். அவ்வாறு விளங்குதல், பிராசாத யோகிகட்கு அவ்யோகத்தால் புருவ நடுவில் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்ற உணர்வைக் கண்டுகொண்டேயாம்.
==============================================
பாடல் எண் : 39
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொழிப்புரை :  என் இருதயத்தில் இருப்பவளாகிய அந்தச் சத்தி, மேற்கூறியவாறு சிவனுடன் துவாதசாந்தத்தில் விளங்குதல், பிராசாத யோகத்தைப் பற்றி இருதயத் தினின்றும் எழுந்து கண்டத்தானத்தை அடைந்து, அதன்பின்னர் அங்கு நின்றும் துவாதசாந்தத்தில் சென்றேயாம். அந்நிலையும் பழமையானதேயன்றிப் புதியதன்று.
==============================================
பாடல் எண் : 40
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

பொழிப்புரை :  என் உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு எல்லா வற்றையும் அறிவித்துக் கொண்டு என்னோடு உடனாய் இயைந்திருக்கின்ற சத்தி, ஆதியாதல் முதலிய பல பெருமைகளை உடையவள்.
==============================================
பாடல் எண் : 41
இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.

பொழிப்புரை :  சத்தி எனது உள்ளத்தில் பொருந்தியதனோடு அதனை விரும்பியும் இருக்கின்றாள். அவள், நான் அஞ்செழுத்தை ஓதி உணரும் பொழுது அவ்விடத்தைப் பற்றியிருக்கின்றாள். அதனை ஓதாத பொழுது நீங்கிவிடுகின்றாள். ஆயினும், பிற மந்திரங்களையும், பயனில்லாத சொற்களைப் பேசுதலையும் என்னிடத்தினின்றும் நீக்கிவிட்டாள்.
==============================================
பாடல் எண் : 42
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.

பொழிப்புரை :  ஞானத்தைக் கொடுத்துப் பின் அது வழியாக முத்தியைத் தருகின்ற முதல்வியாகிய சத்தியது கயல்போலும் மூன்று கண்களும், அறைகூவி அருள்செய்கின்ற சிவந்த வாயும், முகத்திலே உள்ளதாகிய திருவருட் பார்வையும் அடியார்களுக்குத் கண்முன் னாகவே நிற்பனவாயிருக்க, அவைகளை எண்ணித் துதியாமல் அறிவில்லாத மக்கள் எதைஎதையோ பிதற்றிவிட்டுப் போய்விடுகின்றார்கள்; அவர்தம் அறியாமை இருந்தவாறு என்!
==============================================
பாடல் எண் : 43
உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொழிப்புரை :  பரசிவத்தினது சத்தியாகிய பராசத்தியது வயிற்றில் உள்ள சுத்த மாயையின் தோன்றி மறையும் ஒளியாகிய கருவினுள் நிற்பவளாகிய ஆதி சத்தி, பிள்ளையாய்ப் பிறந்து தவழும் இடமும் அகத்து உள்ளதாகவே சொல்லும்படி அங்குப் பிறந்தது, `சித்தம், புத்தி, மனம்` என்னும் மூன்றனிடத்துமாம்.
==============================================
பாடல் எண் : 44
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.

பொழிப்புரை :  பராசக்தியின் வயிற்றினின்றும் பிறந்த ஆதி சத்தியாகிய பெண் தனது கன்னித்தன்மை அழியாமலே ஒருவனுக்கு மனைவியாய்ப் பொருந்தி ஐவர்மக்களைப் பெற்றாள். அவர்கள்பால் நல்ல நூல்களைக் கேட்டுணர்ந்த அறிவரும் பலர் உளர். இவ்வியப்புதான் என்னே!
==============================================
பாடல் எண் : 45
இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :  சிவம் வெளிப்படாது நிற்க நிகழும் செயல்களெல்லாம் ஆதிசக்தியுடையன. அவற்றின் பயனாகப் பின்னர்ச் சிவம் வெளிப்படுவதாகும். அவ்வெளிப்பாட்டினைப் பெற்ற புண்ணியர்கள் இம்மையிலும் பொருளாகத் தெளிவது சிவானந்தம் ஒன்றையே. அத்தகைய தெளிவைப் பெற்ற உள்ளமே சிவனுக்கு இருப்பிடம் என்று அறிந்தால், சிவன் முன்னின்று அருள்செய்வான்.
==============================================
பாடல் எண் : 46
ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.

பொழிப்புரை :  உலகத்தைத் தோற்றுவிக்க நினைப்பவளும், அத்தோற்றத்திற்கு முன்னே உள்ளவளும், சிவத்தில் செம்பாதியாய் நிற்பவளும் ஆகிய பராசத்தி, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவற்றிற்கு அப்பாலும் உள்ளவளாய்ப் பின்பு சமாதியில் மேற் கூறியவாறு மனோன்மனியாயும், நன்மையையே உடையவளாயும் உள்ள அவளைத் துதிக்கின்ற எனது உள்ளத்தில் விரையத் தோன்றினாள்.
==============================================
பாடல் எண் : 47
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

பொழிப்புரை :  `பிறப்புக்கள் பலவும், பலவேறு வகைப்பட்ட ஏனைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய தத்துவங் களுமாய் ஆதி சத்தி ஒருத்தியே நிற்பாள்` என்று ஆவுருவாய் நிற்கும் பெருமாட்டி எனக்கு அறிவித்தாள். எல்லா நூல்களிலும் மேம்பட்டதும், தனக்கு ஒரு முதல்நூல் இன்றித் தானே முதல் நூலாய் நிற்பதுமாகிய வேதம் சொல்லிய முறையும் இதுவே என்பதைப் பலர் அறிந்திலர்.
==============================================
பாடல் எண் : 48
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

பொழிப்புரை :  ஆவுருவாய் நின்ற பெருமாட்டி திருவாவடு துறையில் பக்குவர்களுக்கு உண்மையை யுணர்த்துபவளும், தனது நன்மைகளை உயர்ந்தோர் பலரும் எடுத்துக் கூறித் துதிக்கின்ற கடவுள் தன்மை உடையவளும், முத்திச் செல்வத்தை உயிர்கள் அடைதற்கு ஏதுவான சிவசத்தியாய் நிற்பவளுமாய் இருந்து, உயிர்களின் சஞ்சித வினையை நீக்குகின்றாள்.
==============================================
பாடல் எண் : 49
வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

பொழிப்புரை :  என்னை அடிமையாகக் கொண்ட அந்தத் தலைவி, வினை நீங்கியவரது உள்ளத்தில் ஞானமாய் நின்று, தன்னைப் புகலிட மாக அடைந்தவர்க்கெல்லாம் மெய்ப்பொருளாய் (சத்தாகி) நிற்பாள். இனி அவள், சிவனிடத்தில் அவனைத் தலைப்பட்டுணரும் பொழுது அவனோடு இயற்கையாயுள்ள எண் குணங்களாயும் நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 50
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

பொழிப்புரை :  சத்தியே வேதியர்கள் பொருட்டு வேதத்தை நுட்பமாக ஓதியும், உணர்த்தியும் நின்றாள். ஒளி வடிவினனாகிய சிவனுக்கு அவ்வுருவமும் ஆவாள். பன்னிரு கலையை உடைய பிரணவ ரூபியாகிய குண்டலியாயும் விளங்குவாள்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #82 on: May 29, 2012, 07:48:14 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:07. பூரண சத்தி
(பாடல்கள்:01-15/30)


பகுதி-I

பாடல் எண் : 1
அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொழிப்புரை :   சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின் கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.
==============================================
பாடல் எண் : 2
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

பொழிப்புரை :   பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ள வழி பிராணனைக் கும்பிப்பதே.
==============================================
பாடல் எண் : 3
கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.

பொழிப்புரை :   மத்தகத்தையுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.
==============================================
பாடல் எண் : 4
இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொழிப்புரை :   எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப்பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.
==============================================
பாடல் எண் : 5
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று
உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன்
மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொழிப்புரை :   உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ்விடத்தே உளனாவன். இனி, `அத்தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.
==============================================
பாடல் எண் : 6
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகி வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொழிப்புரை :   காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின் மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.
==============================================
பாடல் எண் : 7
ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொழிப்புரை :   திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.
==============================================
பாடல் எண் : 8
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொழிப்புரை :   உயிர்களின் முயற்சியாலன்றித் தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச் செய்தாள். இனி, இனிமையைத் தருவதாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.
==============================================
பாடல் எண் : 9
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரின்
பிறியா அறிவறி வாருளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.

பொழிப்புரை :   அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.
==============================================
பாடல் எண் : 10
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொழிப்புரை :   `இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தியையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 11
பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

பொழிப்புரை :   `முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 12
நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.

பொழிப்புரை :   `முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய்விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர்களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப்படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திகளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.
==============================================
பாடல் எண் : 13
மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

பொழிப்புரை :   சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.
==============================================
பாடல் எண் : 14
சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

பொழிப்புரை :   மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 15
ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொழிப்புரை :   தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவினளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புறநோக்கத்தை விடுத்து அகநோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப்பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரிபப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #83 on: May 29, 2012, 07:49:21 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:07. பூரண சத்தி
(பாடல்கள்:16-30/30)


பகுதி-II

பாடல் எண் : 16
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :    `வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள் ; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 17
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :   மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.
==============================================
பாடல் எண் : 18
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :   அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத்தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பலவகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார்களில்லை.
==============================================
பாடல் எண் : 19
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :   உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள் ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்ற வர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.
==============================================
பாடல் எண் : 20
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :   அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற்பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப்படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
==============================================
பாடல் எண் : 21
உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :    காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரிபுரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமய வாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவிய தில்லையின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.
==============================================
பாடல் எண் : 22
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :   சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
==============================================
பாடல் எண் : 23
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :   எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தி யிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.
==============================================
பாடல் எண் : 24
தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :   காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்க ளாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற் காகவே உலகில் வாழ்வீராக.
==============================================
பாடல் எண் : 25
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :   ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படுபவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப்பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.
==============================================
பாடல் எண் : 26
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :   திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள் கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.
==============================================
பாடல் எண் : 27
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :   மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மையான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவரா யுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.
==============================================
பாடல் எண் : 28
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :   திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 29
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :   பரவிந்துவாய் நிற்கின்ற சிவசத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனியளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.
==============================================
பாடல் எண் : 30
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :   :  உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான்கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியனவுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #84 on: May 29, 2012, 07:50:43 AM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:08/1. ஆதார ஆதேயம்
(பாடல்கள்:01-25/100)


பகுதி-I

பாடல் எண் : 1
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

பொழிப்புரை :   நான்கு இதழ்களையுடைய தாமரையாகிய மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் சுத்த தத்துவம் ஐந்தும், புருடன் ஒன்றும் தவிர, ஏனையதத்துவ தாத்துவிகங்கள் தொண்ணூறும் அடங்கி நிற்கின்றன. இடைநான்கு ஆதாரத்தின் தாமரைகளில் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இரண்டிதழ்களையுடைய அந்த ஆஞ்ஞைத் தாமரைக்கு அடியாயுள்ள ஏனைய ஆதாரத் தாமரைகளாய் நின்று அந்த ஆஞ்ஞையைத் தாங்கியும், அவ் ஆஞ்ஞைத் தாமரையாய் நின்று அதன்கண் விளங்கும் தியானப்பொருளைத் தாங்கியும் அருள் புரிகின்றாள் சத்தி.
===============================================
பாடல் எண் : 2
தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொழிப்புரை :   சத்தி அனைத்துயிர்க்கும் தாயாகலின் அவள் மேற் கூறியவாறு ஆதார பங்கயங்களின் ஆதாரமும், ஆதேயமுமாய் நிற்றல் தனது ஒளியுருவை யோகியர் காணுதல் குறித்தும், கலைஞானத்தை மிகத்தந்தும், ஐம்புல ஆசைகளின் கொடுமையைக் கண்டு அதனைத் தடுத்துக் கொண்டுமாம்.
===============================================
பாடல் எண் : 3
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொழிப்புரை :   சத்தி தனது மணாளனாகிய சிவன் ஒருபோதும் தன்னைவிட்டு நீங்காதிருத்தலினாலே ஒரு பாதியே தானாய், மற்றொரு பாதி அச்சிவனாய் இருக்கின்றாள். (இந்நிலை எக்காலத்தும் வேறு படுதல் இல்லை என்றபடி) அத்தன்மையை உடைய ஒளி வடிவி னளாகிய அவளைத் துணையாக உங்கள் உள்ளத்தில் இருத்த வல்லீராயின், எல்லாத் துன்பமும் நீங்கும்; வெளுக்கப்பட்ட ஆடைபோல் ஆன்மா மும்மலங்களும் நீங்கத் தூயதாய் விளங்கும்.
===============================================
பாடல் எண் : 4
வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.

பொழிப்புரை :   கருவி கரணங்கள் சென்று பற்றும் வகையில் வெளி நில்லாதவனும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற மலர்களின் தேன் பொருந்தி நிரம்புதலால் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிரால் மனம் வருந்துதல் இல்லாதவனும் ஆகிய சிவன், அத் தன்மையனாயினும், சிலபொழுது தனது கூறேயான ஒரு பெண்ணைத் தன் உடம்பில் ஒருபாதியில் கொண்டவனாய்க் காணப்படுதலும், சிலபொழுது பெண்ணேயாய்க் காணப்படுதலும் உடையன்.
===============================================
பாடல் எண் : 5
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொழிப்புரை :   ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு புணர்தலால் பயனின்மையின் அங்ஙனம் புணர்தல் பேதமைச் செயலாதல் தெளியப்பட்டதாயினும், அச்செயலால் ஆண் ஒன்று பிறந்த பயன் ஓரிடத்தில் காணப்படுகின்றது (இஃது அதிசயம்) இனி, புணரப்பட்ட அப் பெண்ணிடத்தினின்றும் பிறந்த அந்த ஆணின் உண்மையை உணர்ந்து, யாவரையும் அந்த ஆணினிடத்தே ஈர்த்து வைக்கின்ற அந்தப் பெண்ணைத் துணைவியாக உடைய அந்த ஆணின்பக்கல் அந்தப் பெண் ஈர்த்தவாறே சென்று அடைவதே, `இஃது இயற்கைக்கு மாறாய் இயலாததொன்றாம்` என்று பேசும் பேச்சு அற்றொழிதற்கு வழியாம்.
===============================================
பாடல் எண் : 6
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.

பொழிப்புரை :   சொல்லற்ற இடத்தில் நிற்கும் தலைவனாகிய சிவன் குற்றம் அற்ற ஒளிப்பொருள். துணைவியாகிய சத்தியும் அங்ஙனம் குற்றம் அற்ற ஒளிப்பொருளே. ஆயினும் சத்தியே சிவத்துடன் வந்து குற்றம் அற்ற என்உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்றாள்.
===============================================
பாடல் எண் : 7
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஓலித் தொருவன் உகந்துநின் றானே.

பொழிப்புரை :   என் உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்ற கன்னிப் பெண்ணாகிய சத்தி பெண் தன்மையை உடையளாய் உலகெங்கும் நிறைந்து உலகினைப் பாதுகாத்து நிற்பாள். உலகத்தலைவியும், வேதங்களால் குறிப்பிடப்படும் முதல்வியுமாகிய அவளை வேதங்களும் காணமாட்டாது ஓலமிட்டு நிற்கின்ற சிவன் யாண்டும் பிரியாதே கூடி நிற்கின்றான்.
===============================================
பாடல் எண் : 8
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.

பொழிப்புரை :   நம்பியாகிய சிவன் காமனை எரித்த நெற்றிக் கண்ணோடு நின்றே மேற்கூறிய நங்கையாகிய வேத முதல்வியை விரும்பி நின்றான். பின்பு அவளது தோள்களைத் தன் தோளோடு ஒன்றாகும்படிச் சேர்த்து மகிழ்ந்து நின்றான். இவை முறையே அவன் உயிர்களாகிய நம்மிடம் வருதல் குறித்தும் அனைத்து உயிர்களுக்கும் போகத்தைத் தருதல் குறித்துமாம்.
===============================================
பாடல் எண் : 9
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே.

பொழிப்புரை :   சத்தி பெண்ணியல்புகள் பலவும் தோன்ற நின்று சிவனை மணந்ததில் உள்ள கருத்து சொல்லுதற்கரிதாம்.
===============================================
பாடல் எண் : 10
சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

பொழிப்புரை :   அருள் ஒளி மண்டலம் உயிர்களது சொல்லுக்கு எட்டாதது. அதனால், அங்குச் செல்லமாட்டாது பலரும் திகைத்து நிற்கின்றார்கள். அம்மண்டலமாவாள் பிறரால் கடத்தற்கரிய செயல்களை உடையவளும், வலிந்து பற்றிக் கொள்ளவாராதவளும் ஆகிய சத்தியே.
===============================================
பாடல் எண் : 11
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண்கடற் கண்ணே.

பொழிப்புரை :   (இதன் பொருள் வெளிப்படை)
குறிப்புரை :  ``தான்`` என்றது சத்தியை. தாங்குதல், இடந்தருதல். மழை பொழி தையல், கங்காதேவி. எனவே, கங்கையை உமைக்கு மாற்றாள்போல வைத்துச் சொல்வனவெல்லாம் செய்யுளின்பம் படக்கூறும் கூற்றேயாதல் தெளியப்படும். வடவரை - மேருமலை. தலைமை பற்றி இதனைக் கூறவே பிறமலைகளும் கொள்ளப்படும். ``கண்`` என்பது, `இடம்` எனப் பொருள்தரும் பெயர்ச்சொல். எனவே, ``கடற்கண்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `தண்கடலாகுமே` என்பதும் பாடம்.  இதனால், சத்தி ஆதராமாய் நிற்கும் வகைகள் சில கூறப்பட்டன. மழை பொழி தையலாய் நிற்றல் உயிர்கள் அழியாதவாறு நிறுத்தலாம். இதனுள் ``தான்`` என்றதனைச் சிவத்திற்கு ஆக்கி, சிவபரத்துவ அதிகாரத்திலும் இம்மந்திரத்தை, ``பொன்னாற் புரிந்திட்ட`` என்னும் மந்திரத்தின்பின் ஒருமுறை ஓதுவாரும் உளர்.

===============================================
பாடல் எண் : 12
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொழிப்புரை :   எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக்கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணாதொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).
===============================================
பாடல் எண் : 13
கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.

பொழிப்புரை :   எல்லா உலகங்களையும் நினைவு மாத்திரத்தாலே உண்டாக்கி, அவை அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சத்தி, அதற்கு முன்னே அவ்வுலகங்களைக் கடந்து நின்ற ஒரு சத்தியாய் இருப்பாள். அதனால், எட்டுத்திக்கில் உள்ளாரும் தாம் தாம் தமக்கு ஏற்ற பெற்றியால் மணம் பொருந்திய மலர்களைக் கையிலே கொண்டு தோத்திரங்களைச் சொல்லித் தொண்டுபட்டு அம்மலர்களைத் தூவித் தொழுகின்ற தேவி அப்பராசத்தியே யாவாள்.
===============================================
பாடல் எண் : 14
கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொழிப்புரை :   இறைவி அழியாத ஒளி வடிவாய் நிற்கும் இடம் இது போலும் பிறைவடிவம் பொருந்தியிருக்கின்ற ஆஞ்ஞைத்தானமாம். அது சிவந்த நிறத்தை உடைய தாமரை மலர் வடிவும் உடையது. அவள் தலையாகிய இருப்பிடத்தில், நிரம்பிய பதினாறு கலைகளையுடைய சந்திரனோடு கூடியிருக்கும் பொழுது பராசத்தியாய் விளங்குவாள்.
===============================================
பாடல் எண் : 15
பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.

பொழிப்புரை :   `பராசத்தி` என்றே பல வகையிலும் பன்முறை துதிக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் ஆதார சத்தியாய் நிற்கின்ற, வேதத்தின் வழி அறியப்படுகின்ற அவளே முழுமுதற் சத்தியாம். அவளை யாமள ஆகமம் பலபடக் கூற, அவ்வாறும் பல்கி நின்ற அவளது பல கோலங்களையும் யான் அவளது அருளாலே அறிந்தேன்.
===============================================
பாடல் எண் : 16
உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே.

பொழிப்புரை :   சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி,  தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச்சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச்சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.
===============================================
பாடல் எண் : 17
இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்
பொதுவக் கலவியுள் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மனி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

பொழிப்புரை :   `போகத்தைத் தருவது` என மேற்கூறப்பட்ட இம்மறைப்புச் சத்தி சிவனுடன் உயிர்கட்கெல்லாம் பொதுவாயுள்ளபோகக் கலப்பில் நின்று போகத்தைத் தந்து `அருட்சத்தி` என்னும் அந்தச் சத்தியாய் அச்சத்திக்கும் சிவத்திற்குமே சிறப்பாய் உள்ள அந்த அருட்கலவியுள் நின்றவழி உயிர்கட்கு யோகம் உளதாகும்.
===============================================
பாடல் எண் : 18
யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.

பொழிப்புரை :   `போகசத்தி, யோகசத்தி` என்னும் இருசத்திகளில் யோக சத்திக்கு வானத்தில் சூரியனும், பூமியில் வேள்வித்தீயும் ஆசனமாகும். அவ்வாசனங்களின்மேல் அவள் தெற்கு நோக்கிய முகத்துடன் உடம்பை நடுவில் வைத்துக் கால்களைப் பாதங்கள் வடக்குநோக்க மடக்கி நீட்டிக்கிடந்த கோலமாய் இருப்பாள். இதனை அறிந்து வழிபடுக.
===============================================
பாடல் எண் : 19
தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற
ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொழிப்புரை :   யோக சத்தி யோகத்தை விரும்புவர்க்கு அதனை அருளுமாற்றை யறிந்து சிவாக்கினியோடு பொருந்தி நிற்பின், பல்வேறு வகையாய்ப் பரிணமித்து நின்று பந்திக்கின்ற மாயை அங் ஙனம் பந்தத்தைச் செய்தலைத் தவிர்ந்து, ஞானத்திற்குத் துணையாய் நிற்கும். அதன்பின் விந்து நாதங்களின் வடிவாய் உள்ள குண்டலி சத்தி துயிலெழுந்து மேலோங்கிச் செல்லுமாறு யோகசத்தி மேலும் அருள் மிகுந்து நிற்பாள்.
===============================================
பாடல் எண் : 20
தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
தானான வாறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொழிப்புரை :   சத்திக்குத்தானே அதுவாய் நின்று அருள்செய் கின்ற சிறந்த ஆதாரம், உள்ளே எட்டாயும் வெளியே பதினான்காயும், இடையில், `இரண்டு பத்து` என்னும் சம அளவினவாயும் உள்ள கோணங்களை உடைய சக்கரமாகும். இச்சக்கரம் சொல்லும், பொருளும் ஆகிய இருவகை உலகங்களாயும், அவற்றைச் செயற்படுத்துகின்ற கடவுளராயும், அக்கடவுளரது செயல்களாயும் விளங்கும்.
===============================================
பாடல் எண் : 21
தக்க பராவித்தை தான்இரு பானேழில்
தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.

பொழிப்புரை :   ஸ்ரீ சக்கரத்தில் சத்தியை வழிபட்டு, அவளுக்கு உரிய மந்திரங்களில் எந்த ஒரு மந்திரத்தையேனும் திரும்பத்திரும்பச் சொல்லி உருவேற்றினால், வெண்ணிறமும், மூன்று கண்களும், திருமேனி அழகும், அபய வரத முத்திரைகளும் உடையவளாகிய ஞான சத்தியாகிய மனோன்மனியே ஏனை வாமாதி எண்சத்திகளாயும் மிகத்தோன்றி அருள்புரிவாள்.
===============================================
பாடல் எண் : 22
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொழிப்புரை :   மலரில் மணம் போலச் சிவத்தில் வேறாகாது நிற்பவளாகிய சத்தி மூன்று பிரிவுகளாய் அமைந்த பஞ்ச தசாட்சரி (பதினைந்தெழுத்து) மந்திரத்தில் முற்ற விளங்குகின்ற மெய்ஞ்ஞான வடிவினள்; தத்துவங்களாயும், அவையல்லவாயும் எல்லாமாய் இருப்பவள்; வேதம் முதலிய நூல்கள் பலவும் முடித்துக் கூறுகின்ற சிவனோடு ஒன்றான சிவையாய் விளங்குபவள்; அருட் சத்தியும், ஆனந்த சத்தியுமானவள்.
===============================================
பாடல் எண் : 23
கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம்எனும் அகி லம்களி
தங்கும் அவள்மனை தானறி வாயே.

பொழிப்புரை :   `நறுமணத்தை வெளிப்படுத்துகின்ற பூங்கொம்பில் தென்னங்குரும்பைகள் விளங்குவது போலும் தோற்றத்தையுடைய கன்னிகையாகிய சத்தி, குங்குமம், பூசப்பட்ட தோள்களை உடை யவள்` என்றும், அங்குச பாசங்களை ஏந்தியவள்` என்றும், `அவளது மகிழ்ச்சியுள்ள கோயில் அகில உலகங்களும்` என்றும் உண்மை நூல்கள் கூறும். இதனை அறிந்து போற்றுவாயாக.
===============================================
பாடல் எண் : 24
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொழிப்புரை :   (இதன் பொருள் வெளிப்படை).
குறிப்புரை :  இப்பொருள் மேலேயும் குறிக்கப்பட்டது. ``தாய்`` எனல், சத்தி தத்துவ சத்தியினின்று சதாசிவன் தோன்றுதல் பற்றி. ``மகள்`` எனல், சிவ தத்துவ சிவத்தினின்று மேற்கூறிய சத்தி தத்துவ சத்தி தோன்றுதல் பற்றி. ``தாரம்`` எனல், யாண்டும் சத்தனுக்குச் சத்தியாய் நிற்றல் பற்றி. வாய் - வாக்கு. கணம் - பூதக் குழாம்.
இதனால், சத்தி சிவனுடன் பல்வேறு வகையில் இயைந்து நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.
===============================================
பாடல் எண் : 25
தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொழிப்புரை :   (இதன் பொருளும் வெளிப்படை).
குறிப்புரை :  தத்துவம் - முதற்பொருள். தாய் நிலை காரணமும், மகள் நிலை காரியமும் ஆதல் அறிக. கலப்புச் சிவனோடென்பது வெளிப்படை. பூரணம் - பெரு வியாபகம். விந்து - சுத்த மாயை. `விந்துவிற் பொதிந்த` என்க. புராதனி - பழமையானவள். பார் - உலகம்.  அளவு - எல்லை. உடையாள் - தன்னுடையனவாக உடையவள். இதனால்,  மேலதனை வேறோராற்றால் விளக்கி, சத்தி உலக நாயகியாதல் கூறப்பட்டது.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #85 on: July 27, 2012, 02:16:15 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:08/2. ஆதார ஆதேயம் 

(பாடல்கள்:26-50/100) பகுதி-II


பாடல் எண் : 26
பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

பொழிப்புரை :   பத்துத் திசைகளையும் நோக்கிய பத்து முகங்களை உடையவளாகிய, நமக்குத் தலைவியாம் பராசத்தி நம் பொருட்டு நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆக்கி வைத்து, அவற்றிற் கூறப்பட்ட பொருளாகியும் நின்றாள். அத்தகைமைய ளாகிய அவள் ஒப்பற்ற ஓர் ஆதாரமாகிய ஷ்ரீசக்கரத்தில் நீங்காது நிற்கின்றாள். அவளை அந்நூல்களின் வழிப்போற்றுக.

==============================================
பாடல் எண் : 27
கூறிய கன்னி குலாய பருவத்தள்
சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள்
ஆறிய நங்கை அமுத பயோதரி
பேறுயி ராளி பிறிவறுத் தாளே.

பொழிப்புரை :   மேற் சொல்லப்பட்ட சத்தி இளமையான தோற்றத்தையுடையவள்; ஏழுலகிலும் நுண்ணியளாய் நிறைந்தவள்; அடக்கமான பெண்மை இயல்புடையவள்; அமுதமயமாம் பால் நிறைந்த தனங்களை உடையவள்; வீடு பெறுதற்குரிய உயிர்களை ஆட்கொண்டு, அவை தன்னை விட்டுப் பிரிதலை நீக்குபவள்.
==============================================
பாடல் எண் : 28
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொழிப்புரை :   சிவத்தோடு வேற்றுமையின்றி நிற்பவளாகிய சத்தி அடியவரது தியானத்திலே பொருந்தி விளங்குகின்ற அழகிய பூங் கொம்பு போன்றவள்; அதனால், முன்னர் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வழியே தலைப்பட்டுப் பின்னர் உயிர்களினது அறிவுக் கறிவாய் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 29
உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.

பொழிப்புரை :   தன்னைக் கூடியதனால் விளைகின்ற இன்பத்தை யுடைய வள்ளலாகிய சிவனுக்குத் தேவியாய் உள்ள சத்தி அடி யேனைத் தன்வசப்படுத்தித் தவநெறியை அடையச்செய்தது, என் உள்ளத்திலே நின்று ஐம்புலக்கள்வர் தம் கள்ளத்தைப் போக்கி இரண்டறக் கலந்து, என்றும் உடனாய் இருந்ததாம்.
==============================================
பாடல் எண் : 30
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொழிப்புரை :   உயிர்களுக்கு நலம் செய்ய விரும்பி அங்ஙனமே செய்துவருகின்ற போக சத்தி, உயிர்களிடத்துத் தான் தங்கியிருந்து ஆக்க இருக்கின்ற இன்பம் இது என்பதனை உலகர் ஒருவரும் அறிய மாட்டார். பூவில் நிறம்போல உயிர்களிடத்தில் பொருந்தியிருக்கின்ற அவள், தான் அவ்வாறிருக்கின்ற குறிக்கோளினின்றும் சிறிதும் மாறுபடாமலே இருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 31
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொழிப்புரை :   சத்தி, யான் உள்ளம் திருந்தித் தன்னை அடைய விரும்பிய நிலையில் அந்நிலையை நன்குணர்ந்து அவளும் எனது உள்ளத்தை விரும்பி, அதன்கண் இருப்பாளாயினாள். அவ் இருப்பு, இடையறாது ஓடும் நீர், தான் ஓடுகின்ற திசையை நோக்கி ஓடும் ஓட்டத்தை ஒப்ப இடையறாது இருக்கும் இருப்பாம்.
==============================================
பாடல் எண் : 32
அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொழிப்புரை :   `எனக்கு அது வேண்டும், இது வேண்டும்` என்று அவாவுகின்ற அவாவை விடுத்து, சந்திர மண்டலத்தில் உள்ள ஆயிர இதழ்த்தாமரையில் விளங்குபவளாகிய சத்தி விளக்கியருளிய மூன்று மண்டலங்களில் உள்ள பொருள்களைப் போற்றி செய்து சுழுமுனை யில் நின்று பொருந்த நோக்கினால் விதியையும் வெல்லுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 33
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

பொழிப்புரை :   மேற்கூறிய மூன்று மண்டலங்களும் அசுத்த மாயையின் காரியங்களாய் நிற்கும் உடம்பில் உள்ள இடங்களே. எனினும், உச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலத்தில் உணர்வு செல்லின் அது சுத்த மாயையைப் பொருந்தியதாகும். அங்ஙனம் உணர்வு செல்லும்பொழுது சத்தி, பிராசாத கலைகள் பதினாறில் ஒன்பதை ஏற்றுச் சந்திர மண்டலத்தைக் கீழ்படுத்தி நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 34
இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொழிப்புரை :   பிறை வடிவாயுள்ள ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழுந்து நுணுகிச் செல்கின்ற நாதம், (வாக்கு) கீழே வந்து, நாவினால் பிராணவாயு அலைக்கப்படும் பொழுது பரு வடிவினதாய்ச் செவிக்குப் புலனாகிக் கேட்போருக்கும் பொருளை இனிது விளங்கச் செய்யும் முடிவு மொழியாம். ஆகவே, கண்டத் தானத்தில் உதான வாயுவால் உந்தப்பட்டுச் சொல்வோனுக்கு மட்டும் பொருள் விளங்க நிற்கின்ற இடைமொழியும், அங்ஙனம் உதான வாயுவாலும் உந்தப் படாமல் இதயத்தானத்தில் பொதுமையில் விளங்கியும் விளங்காதும் நிற்கும் முதல்மொழியும், ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழும், எனப்பட்ட, ஒடுக்கமாகிய அந்த நாதத்தின் விரிவேயாகும்.
==============================================
பாடல் எண் : 35
ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொழிப்புரை :   மேல், ``இந்துவின் மேல் உற்ற ஈறு`` எனப்பட்ட அந்த நாதமே சொல்லுலகங்கள் எல்லாவற்றிற்கும் (வேதம், வேதாங்கம், ஆகமம், புராணம், இதிகாசம், மிருதி முதலிய எல்லா நூல் கட்கும், பலவாய் வழங்கும் மொழிகட்கும்) முதல். சில சுழிக் கூட்டத்தால் பூங்கொத்துப் போல்வதாய வடிவினையுடைய அது நிராதார யோகத்தில் பிராசாத கலைபதினாறில் முடிவாயுள்ள உன்மனா கலையிலும், ஆதாரயோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை யிலும் மனம் யாதோர் அசைவுமின்றி நின்று வசமாகும்படி உயிரினது ஆற்றலை மிகக் குவிப்பதாகும். அதனால், அதனைக் காணுதலையே சத்தி தன் அடியவர்க்குப் பெரும்பேறாக அளித்துத் தானும் அவ்விடத்தே அவர்கட்குக் காட்சியளித்து நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 36
இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொழிப்புரை :   சத்தி மேற்கூறிய அவ்விடத்தே இனிது விளங்கி யிருக்கின்றாள்; பல புவனங்களில் உள்ளோரும் தாம் பேரானந்தத்தை அடைதற்குரிய செவ்விய வழியைப் பொருந்தித் தன்னை, `போற்றி` என்று சொல்லித் துதித்துப் பெருமுயற்சி செய்யவும் சத்தி அவர்கள் முன் வெளிப்படாமல், மேற்கூறிய இடத்தே அந்த ஆனந்தம் விளையும்படி அங்கே விளங்கி நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 37
மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

பொழிப்புரை :   சத்தியும், சிவனும் தம்மிற் கூடிநின்று, தம்மைப் போலவே மங்கையர் ஐவரையும், அவர்கட்கு ஏற்ற காளையர் ஐவரையும் கை கோத்துவிட்டு, அவர்களது கருத்தையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தம்பதியர் தங்களுள் அன்பு செய்து கூடித் தங்கள் தொழிலைக் கடமையாக நன்கு நடாத்தி வருகின்றார்கள்.
==============================================
பாடல் எண் : 38
சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி னுள்ளே கருதுவ ராயின்
தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

பொழிப்புரை :   புறத் தொழிலைச் செய்யும் அளவில் தவத்தில் நிற்போர், உடம்பில் அகமுகத் தியானித்தலில் பழகுவார்களாயின், அந்தத் தியான உணர்வு தொடர்ந்து முதிர்ந்து, சுழுமுனை பற்றுக் கோடாக மேல் ஏறிச் சென்று, உயிர்களின் அன்பிற்குச் சார்பாகிய சத்தியிடத்தில் மேற்கூறிய இடத்தில் சென்று அடங்கும்.
==============================================
பாடல் எண் : 39
பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்தின் மேலது முத்தது வாமே.

பொழிப்புரை :   துணைவழி ஏறுதற்குத் துணையாகின்ற மந்திரம் முதல் நிலையாகிய மூலாதாரத்திலே உள்ளது. அதுவே இரண்டாவது முதல் ஏழாவது முடிய உள்ள ஆறு நிலங்களின் தாமரைகளிலும் ஏற்ற பெற்றியிற் பொருந்தி, அவற்றைக் காத்து நிற்கும். அதனால், அம் மந்திரம் ஒன்றே அந்நிலங்களில் அழுந்தி விடுவதாகிய நிலையினை விடுத்து மேன்மேற் செல்லுதற்குச் சிறந்த துணையாம்.
==============================================
பாடல் எண் : 40
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதுரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.

பொழிப்புரை :   மேல் (1155 - ல்) கூறப்பட்ட யோக நற்சத்தி முத்து வதனம் முதலியவைகளை உடையவளாய், என் உள்ளத்தில் விரும்பி இருக்கின்றாள்.

குறிப்புரை :  எனவே, `அவளை அவ்வாறு தியானித்தல் வேண்டும்` என்பதாம். ``சத்தி`` என்பதை முதலிற்கொள்க. முத்து, பற்களைக் குறித்து உவமையாகுபெயர். வதனம் - முகம்; என்றது வாயினை, சதுரி - திறமை உடையவள். சகளி - உருவத் திருமேனி கொண்டவள். ``பைந்தொடி`` என்பது, `தேவி` எனப் பொருள் தந்தது. ஏனையவை வெளிப்படை. பத்துக்கரம் கூறப்படுதலால் ஐம்முகம் உடையளாதல் பெறப்பட்டது.
இதனால் யோக சத்தியது வடிவு கூறப்பட்டது.
==============================================
பாடல் எண் : 41
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.

பொழிப்புரை :   அக்கினி மண்டலம் முதலிய மூன்று மண்டலங் களுடன் அவற்றிற்குரியோராகிய, `அக்கினிதேவன், நிலவோன், கதிரோன்` என்னும் மூவரும் கலந்து, அவரே சத்தியாய் முன்னிற்பர். அவர்களுக்கு உள்ளீடாக ஓங்காரத்தினின்றும் மேலெழுந்து செல்கின்ற மந்திர ஒளி உளதாகும்.
==============================================
பாடல் எண் : 42
உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

பொழிப்புரை :   மேற்கூறிய உள்ளொளி உயர்ந்து செல்கின்ற ஆறு ஆதாரங்களாகிய உறுப்புக்கள் வெண்மையான வேள்வித் தீயிலும் அவற்றின் அதிதேவர் வழியாகச் சத்தியைப் பொருந்தி விளங்கும். அதனால், அத்தீயின் வழியாகத் தேவர்கள் ஏற்கின்ற அவிசுகளும், யாவர்க்கும், எல்லாப் பயனையும் தருகின்ற சத்தியே யாய் நிற்கும்.
==============================================
பாடல் எண் : 43
கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொழிப்புரை :   ``சிந்திக்கொடி`` என மேற் கூறப்பட்ட சத்தியது உருவம் ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் வெளிப்படாது மறைந்து நிற்கும் நிலையில் யாவரும் மூழ்குவது சிற்றின்பத்திலேயாம். ஆகவே, சிவனது வடிவாய் உள்ள ஆனந்தத்தை (சிவானந்தத்தை,ஆறு ஆதாரங் களிலும் முறையே வந்து வழங்குகின்ற முதல்வி யோக சத்தியே.
==============================================
பாடல் எண் : 44
ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொழிப்புரை :   மேற் கூறப்பட்ட யோக சத்தி `அயன், மால், உருத்திரர்` என்னும் மும்மூர்த்திகளும், அவர்களுக்குத் தேவியராய் உள்ளோரும், ஒளியை உடைய ஆதாரங்கள் ஆறுமாய் உள்ள ஆதார சத்தியும், `கலை` என்னும் பொருளாகச் சொல்லப்படுகின்ற மேதை முதல் உன்மனை ஈறாக உள்ள பதினாறு நிலைகளையுடைய குண்ட லினியும், மக்கள் அறிவில் பொருந்திப் புலன்களை அறிவிக்கின்ற திரோதாயியும், மந்திர மகேசுவர மகேசுவரிகளாய் உள்ள கூட்டத் தினரும் தன்னையடைந்து துதிக்கும்படி மேற்கூறிய மேல் நிலங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 45
சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொழிப்புரை :   `சத்தி` என்று யாவராலும் போற்றப்படுகின்ற தேவி, வேண்டுவார் வேண்டும் பயனைப் பெறுதற்குத் துணைபுரிகின்ற ஒரு கன்னிகை. ஆயினும், வீடு பேற்றைத் தரும் முதல்வி அவளே என்பதைப் பலர் அறியமாட்டாதவராய் அவளிடத்துத் தாம் செய்கின்ற அன்புக்கு உலக வாழ்வே பயனாக எண்ணி அந்த அன்பினை வீணாக்கி யொழிகின்ற அறிவிலிகள் அவளை உலக வாழ்வை அளிப் பவளாகவே சொல்லிப் புகழ்ந்து, அறிவுடையோரால் நாய் போன்ற வராக வைத்து இகழப்படுகின்றது.
==============================================
பாடல் எண் : 46
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

பொழிப்புரை :   பிறிது பயனை வேண்டாது தன்னைப் பெறு தலையே பயனாகக் கருதி, மந்திரங்களைச் சொல்லி, மறவாது தன்னை நினைக்கவும் வல்லவர்களுக்கே அம்மை தனது தாமரை மலர் போன்ற அழகு பொருந்திய சிவந்த திருவடிகளை அவர்களது உள்ளக் கம லத்தில் பதிய வைத்துக் காட்சி வழங்குகின்றாள். ஆகவே, அந்நிலை யில் நின்று அவளது திருவடிகளைக் காண வல்லார் உலகருள் எவர்!.
==============================================
பாடல் எண் : 47
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொழிப்புரை :   தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.
==============================================
பாடல் எண் : 48
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை
நவாதியில் ஆக நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே.

பொழிப்புரை :   தன்னைத் தியானித்துத் தன்னிடத்து வேறற ஒன்றி நிற்கும் உணர்வுடையவர்கட்குத் தலைவியாய், `சிவா` என்பதை முதலாகக் கொண்ட மந்திரத்தில் பொருந்தி நிற்பவளாகிய சத்தியை, `நவாக்கரி` எனப்படும் ஒன்பது பீஜங்களில் பொருந்த வைத்து அந்த மந்திரத்தை விருப்பத்துடன் ஓதினால், செயற்கையாய் நிற்கின்ற நிலைமை அவளிடத்துப் பொருந்துதல் இல்லையாம்.
==============================================
பாடல் எண் : 49
உறைபதி தோறும் உறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.

பொழிப்புரை :   சத்தி இந்நிலவுலகத்தில் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்களில் அவள் எழுந்தருளியிருக் கின்ற வகைகளை விருப்பத்துடன் உணர்ந்து, நாள்தோறும் அவ்விடங் களை அடைந்து, அவளுக்குரிய மந்திரத்தோடு நீங்காது நிற்கின்ற `பிர ணவம், பீஜம், சக்தி, கீலகம்` என்னும் நான்கினையும் தெய்வத் தன்மை மிகும்படி ஓதி வழிபட்டால், பயன்கள் பலவற்றை அடையலாம்.
==============================================
பாடல் எண் : 50
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

பொழிப்புரை :   ஞானிகட்கு உரிய இருவினைப் பயனாவன, அம்மையிடத்தில் அன்பு செய்தலும் `செய்யாமையுமாகிய அவற்றால் வருவனவாம்.
« Last Edit: July 27, 2012, 02:18:41 PM by Anu »


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #86 on: July 27, 2012, 02:20:05 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:08/3. ஆதார ஆதேயம் 

(பாடல்கள்:51-75/100) பகுதி-III

பாடல் எண் : 51

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
பொழிப்புரை :  சத்தியிடத்து மனம் செல்லும் பொழுது அதனை நன் மனமாகச் செய்து, அதன்கண் உள்ள எண்ணங்களெல்லாம் குவிகின்ற இடமாகிய இருதயத்தில் ஒப்பற்றவளாகிய அவளையே முதல்வியாக உணர்ந்து தியானி. அங்ஙனம் தியானித்தால், அவள் உன்னை மேன் மேல் உயரச் செய்வாள். அதனால், நீ முடிவில் சிவனது எண்குணங் களையும் பெற்று விளங்கலாம்.
==============================================
பாடல் எண் : 52
ஆமைஒன் றேறி அகம்படி யான்என
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.
பொழிப்புரை :   யான் ஆமையைப்போல ஐம்புல ஆசைகளைத் திருவருளுக்குள்ளே அடக்கி, மெல்லென மேலேறிச் சென்று, புறத்தே செல்லாது அகத்தே நிற்பவனாகி, ஓங்காரத்தை உச்சரித்து, எம்போல் வார்க்கு உள்ளொளியாய் விளங்குகின்ற யோக சத்தியைத் தரிசித்த பின்பு, அவள் சந்திரமண்டலத்தில் உள்ள நறுமணம் பொருந்திய தாமரை மலரைச் சூடி வெளிநின்றாள்.
==============================================
பாடல் எண் : 53
சூடிடும் அங்குச பாசத்துளை வழி
கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.
பொழிப்புரை : யோக சத்தியை அணுகும் வழி சுழுமுனா நாடி. அவளது இருகைகளில் காணப்படுவன சங்கமும், குண்டிகையும். அவளுக்குரிய சீருத்திர மந்திரம் சிகாரமும், வகர ஆகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்களால் ஆகிய சொல். அவள் நடனம் புரிகின்ற அரங்கு `புகழை உடைய பொன்மன்று` எனப்படும் புருவநடு.
==============================================
பாடல் எண் : 54
ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.
பொழிப்புரை :  உலகிற்கு முதல்வராம் `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்` என்னும் ஐவர்தாமும் சத்தியை வழிபட்டே தங்கள் பதவியைப் பெற்றார்கள். மற்றும் காமன், சாமன், சூரியன், அங்கி, சந்திரன் என்னும் இவர்களும் வந்து வணங்க அவள் வீற்றிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 55
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞாளம் உருவநின்
றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.
பொழிப்புரை :   உலக முதல்வியாகிய சத்தி இளம் பிறையைச் சூடிக் கொண்டும், சூலத்தையும் கபாலத்தையும் ஏந்திக் கொண்டும், என்றும் மாறாத கொடிபோல்பவளாய் இருப்பாள்; இயல்பாகவே மலம் நீங்கியவள்; நேரிய (நுண்ணிய வேலைப்பாடமைந்த) அணி கலங்களை யணிந்தவள். அவள் நடு நாடியாகிய சுழுமுனையிடத்து அதன் உள்துளையில் பிராணவாயு ஊடுருவிச் செல்லும்பொழுது அவ்வாயுவின் வழியே நின்று நடனம் புரிவாள்.
==============================================
பாடல் எண் : 56
அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.
பொழிப்புரை :   ஆகாயம் முதல் பூமி ஈறாகப் பார்த்தால் நாம் கண்டது சத்தியைத் தவிர வேறொரு பொருளும் இல்லை. சத்தி தான் மாத்திரமாய் நின்று உலகிற்கு முதற்பொருளாகாது சிவத்தொடு கூடி நின்றே முதற்பொருளாயிருத்தல், உலகம், `ஆண், பெண்` என்னும் இரு பகுதிப்பட்டே நிற்றலைக் காண்கின்ற அதனானே அறியப்படும்.
==============================================
பாடல் எண் : 57
ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.
பொழிப்புரை :   சத்தி, எல்லா உலகங்களையும் கடந்து சென்று எய்தப்படுவதாகிய சிவலோகத்திற்குத் தலைவனாகிய சிவனுடனே மிக அணிமையில் வந்து யோகியர்தம் உச்சியிலே இருக்கின்றாள். அவளை அடைதலாலே, சிவன் நஞ்சை உண்டதனால் அமுதத்தை உண்ணப் பெற்ற அந்தத் தேவர்கள் பதவிகள் மிகக் கிடைக்கும்; அதுவேயன்றிச் சரியை முதலிய தவங்களால் வருகின்ற சிவலோகத்து இன்பமும் கிடைக்கும்.
==============================================
பாடல் எண் : 58
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.
பொழிப்புரை :   உணவுப் பொருளாய் நின்று உடம்பையும், அது வழியாக உயிரையும் வளப்பவளாகிய சத்தி, நாலிதழ்த் தாமரையாகிய மூலாதாரத்திலிருந்து மேலேற்றிப் பல ஆதாரங்களில் ஊன்றப்பட்டு முடிவில் தலைக்குமேல் உள்ள துவாதசாந்தத்தில் முடிகின்ற பிரணவ வடிவாய் இருந்து அருள் புரிகின்றாள். இதனை யறியாது, பலர் மேலாகிய ஞானயோகம் முதிர்தற்பொருட்டு மலை, காடு, தீர்த்தக்கரை முதலிய இடங்களை அடைந்து துன்புற்று விரைய இறந்தொழி கின்றார்கள்.
==============================================
பாடல் எண் : 59
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
பொழிப்புரை :  அடப்படாத உணவுப் பொருளாயிருந்து பின் அடப்பட்ட உணவாகவும் ஆகின்ற சத்தி, வயிற்றுத் தீயும், குண்டத் தீயு மாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் இருந்து அவற்றை அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவு கின்றாள். அவளது பெயராகிய திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி அமைதியுற்று இருப்பவர்கட்கு, தவத்தின் முதல்வியாகிய அவள் இனிது விளங்கி அருள்புரிவாள்.
==============================================
பாடல் எண் : 60
நிலாமய மாகிய நீள்படி கத்தி
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.
பொழிப்புரை :   நிலவைப் போன்ற ஒளியையுடைய படிகத்தின் நிறத்தையும், ஒளிக் கல்லாகிய முத்தின் நிறத்தையும் உடையவளும், செறிந்த சுரிந்த கூந்தலை உடையவளும் ஆகிய சத்தி பிரணவ கலைகளின் வடிவாய் யோகிகளிடத்தில் கலந்து நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 61
கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.
பொழிப்புரை ::   சத்தி சிவனோடு தாதான்மியமாய் ஒன்றுபட்டு நின்றே, உயிர்களின் அறிவு. வேதம் முதலிய எண்ணிறந்த நூல்கள், காலம் முதலிய தத்துவங்கள் ஆகிய எல்லாப் பொருளிலும் அத்து விதமாய் ஒன்று பட்டிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 62
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.
பொழிப்புரை :   காலமாய் இருப்பவளும், எல்லா இடமுமாய் இருப் பவளும், உயிர்களின் எண்ணமும், விருப்பமும் கைகூட உதவியாய் இருப்பவளும், எல்லாப்பொருளிலும் தான் ஒன்றாயிருக்கும் கலப்பினைச் செய்தவளும், உயிர்களை மயக்குகின்றவளும், அம்மயக்கம் நீங்கத் தெளிவைத் தருகின்ற மேன்மை வாய்ந்தவளும், மந்திரங்களின் ஆற்றலாய் நிற்பவளும், உயிர்களைக் காக்கின்றவளும் ஆகிய சத்தி தன்னில் ஒரு கூறாய் நிற்கின்ற சிவனிடத்துத் தான் அவனிடத்தில் ஒரு கூறாய் இருப்பாள்.
==============================================
பாடல் எண் : 63
பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
ஏக இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.
பொழிப்புரை :   பசிய பொன்போலும் சடைமுடியையும், ஒரே எண்ணத்தையும். திண்ணிய பத்துத்தோள்களையும், விருப்பத்தைத் தருகின்ற ஐந்து முகங்களையும், முகந்தோறும் மும்மூன்று கண் களையும் கொண்டு, யானையை உரித்துப் போர்த்து நடனம் புரிபவ னாகிய சிவபெருமானுக்கு அவனது ஒரு கூறாய் இருப்பாள் பராசத்தி.
==============================================
பாடல் எண் : 64
நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.
பொழிப்புரை :  தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 65
ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.
பொழிப்புரை :  உலகம் தோன்றும்பொழுது பஞ்ச கலைகளிலும் நிற்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் முதலில் முறையானேதோன்ற, அவற்றிற்கு முதல்வர் ஐம்பத்தொருவரும் உடன்தோன்றி நிற்பர். அங்ஙனம் நிற்கும் அவர் எல்லார்க்கும் சத்தி உயிராய் உள் நிற்பாள். ஆகவே, அவ் எழுத்துக்களைப் பல்வேறு முறையில் தம்முட்கொண்ட சக்கரங்களில் எல்லாம் அச்சத்தி உயிராய் நிற்றல் பெறப்படுதலின், சிவனும் அவளிடத்து நீக்கமின்றி அச்சக்கரங்களில் நிற்பவனாவான்.
==============================================
பாடல் எண் : 66
ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.
பொழிப்புரை :  சத்தி, சிவன் இருவருக்கும் உரிய இடம், உலக முதல்களுக்கு மேலாய், எட்டாய் அமைந்த இதழ்களையுடைய தாமரை மலராகும். அதுவன்றியும் தியான வகையால் வேறுபடுகின்ற ஆறு இடங்களும் உள. எல்லாவற்றிலும் சத்தி இனிது வீற்றிருக் கின்றாள்.
==============================================
பாடல் எண் : 67
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.
பொழிப்புரை ::   யான் சத்தியோடு ஒன்றிச் செவ்வியனாகும்படி அவள் எனக்கு இனிது வெளிநிற்கின்றாள். எதனால் எனின், இப் பொழுது என் உடலுள்ளே உயிர்ப்புக் காற்று என் வசமாய் ஆறு ஆதாரங் களிலும், அவற்றின்மேல் உள்ள ஏழாந்தானமாகிய சிரசிலும் செல் கின்றது. பத்து வாயுக்களும் நெருங்கி நின்று சுழலுகின்ற உடம்பினுள் ஏனை ஒன்பதினும் உயர்வுடையது. உயிர்ப்புக் காற்று ஒன்றே என்பதை எனக்கு அவள் அறிவித்து, என்பொருட்டு அறிந்தும் நின்றாள்.
==============================================
பாடல் எண் : 68
உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழு மாகதி யாகிய தாகும்
கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.
பொழிப்புரை :   உயிர் உணர்ந்து உணர்ந்து மேன்மேல் உயர்தற் குரிய மந்திரம் `ஓம்` என்பது எனச்சொல்லப்படும். உணர்வால் இறையொடு கூடி மேன்மையுறுகின்ற முடிந்த பேறாகிய வீடுபேறும், பிறவும் அதனாலே கிடைக்கும். உயிரை இவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டு செல்கின்ற கள்வனும், கள்வியுமாகிய சிவனும், சத்தியும் இணைந்து நிற்றலும், அதனால் விரைய விளங்கும். அங்கு முன்னர்க் காணப்படுபவள் சிவனிடத்துப் பெருவிருப்புடையளாகிய சத்தியே.
==============================================
பாடல் எண் : 69
ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டலம் மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
பொழிப்புரை :  `ஆதி` எனப்படுபவளாகிய சத்தியும், `ஈசன்` எனப் படுபவனாகிய சிவனும் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாகச் சொல்லப் படுகின்ற வேள்வித்தீ, யோகத்தில் சிறப்பிடம் பெற்று நிற்கும் சந்திர மண்டலம், வாயு முதலிய பூதங்கள் என்னும் இவைகளாய் நின்று உயிருக்கு நலம் செய்கின்றனர். அவ்விடத்தில், சத்தி, யோகியரது உடம்பில் தோன்றுகின்ற நரை முதலியவை அங்ஙனம் தோன்றாது அகலச் சிகை கறுத்தல் முதலிய இளமைத் தன்மைகள் தோன்றும்படி அவரது ஆஞ்ஞைத் தானத்தில் விளங்கி நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 70
ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
பொழிப்புரை :  `மேன்மைத் தானம்` எனப்படுவதாகிய ஆஞ்ஞை யில் சத்தி விளக்கமுற்றுத் திகழும் நிலையில் அது முதல் மூலாதாரம் ஈறாக நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் அவளிடத்தே செயலற்று அடங்கிவிடும். அஃது எவ்வாறெனின், சுத்த மாயையினின்றும் விருத்திப்படுகின்ற நால்வகை வாக்குகளில் அவ் எழுத்துக்களுக்கு முதல் நிலைகளாகிய `பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குகளாய் நிற்றலோடு, ஐந்தொழிலையும் தன்னுடையனவாக உடையவள் அவளேயாதலின்.
==============================================
பாடல் எண் : 71
தானிகழ் மோகினி சார்வான யோகி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
தானாம் பரசிவம் மேலது தானே.
பொழிப்புரை :   சிவசத்தி தனக்கு இடமாகக் கொள்கின்ற குண்டலினி சத்தி, அவளைச் சார்பாகக் கொண்டு விளங்கும் யோகினி சத்தி என்னும் இவர்கள் நீங்கத் தாம் தூயராய் நிற்போரே ஆதி சத்தியைத் தலைப் படுவர். அவரது உணர்வில் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற ஆதி சிவமாம் நிலையை அடைகின்ற பரசிவம் அந்நிலைக்கு மேலுள்ளது.
==============================================
பாடல் எண் : 72
தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.
பொழிப்புரை :  ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.
==============================================
பாடல் எண் : 73
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.
பொழிப்புரை :  ஆதி சத்தி, பலவகைப்பட்ட யோக நெறிகளையும் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அமைத்து வைத்தவள்; நிலையான மங்கலத்தை உடையவள்; ஆதலின், அவள் யார்க்கும் அறிதற்கரிய வளாவாள். ஆயினும் பாச ஞானம், பசுஞானம் என்னும் இரண்டும் ஒருசேர நீங்கும்படி விட்டுப் பதிஞானத்தால் அறிகின்ற பெரியோர்க்கு அவரது அறிவுக் கறிவாய் அவள் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 74
நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.
பொழிப்புரை :  மக்கட்கு ஐம்புலன்களில் செல்லுகின்ற அறிவு சுதந்திர அறிவாகவே தோன்றும்; ஆயினும், சிவனுடைய அறிவு அவர் தம் அறிவை அவற்றின் பின்னே இருந்து செலுத்துகின்ற அறிவாய் நிற்கும். (அஃது இல்லையாயின், எவரது அறிவும் ஒன்றிலும் நுழைய மாட்டாது. ஆகவே, உயிர்களின் அறிவு இறைவனது அறிவின் வழி யவேயன்றிச் சுதந்திரம் உடையன அல்ல). இங்ஙனம் சிவனது அறிவாய காட்டினை (காட்சிக்குத் துணையாவதை) அறிவதே செந்நெறியாம். இனிச் சிவனை அடைய விரும்புவோர்க்கு அவனது அறிவாலே அவனை அறிதலே தக்க நெறியாம்.
=============================================
பாடல் எண் : 75
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.

பொழிப்புரை :   ஒன்றாக அமைந்த நன்னெறி ஏனை தீநெறிகள் பலவற்றையும் போக்கிவிடும்; அந்நன்னெறிக்கு முதல்வராய கடவுள ராயும், அவரால் தோற்றுவித்துக் காக்கப்படும் அந்நன்னெறியாயும், அந்நன்னெறியால் அடையப்படும் அருட் சத்தியாயும் உள்ளவள், தலைமை பற்றி, `சத்தி` என்று, அடைகொடாது யாவராலும் சொல்லப்படுகின்ற சிவசத்தியேயாவாள்
==============================================


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #87 on: July 27, 2012, 02:23:02 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:09/1. ஏரொளிச் சக்கரம்

(பாடல்கள்:01-18-36/36) பகுதி-I

பாடல் எண் : 1

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொழிப்புரை :   தன்னுள்ளே ஏரொளி எழப்பெறுவதாகிய தாமரை மலர் நான்கிதழ்களை யுடையது. அவ் ஏரொளியாவது, சுத்த மாயையினின்றும் தோன்றும் வாக்கேயாம். அவ்வொளி பல கூறுகளாய் வளர்ந்து உடம்பெங்கும் குறைவின்றி நிறையப் பெற்ற பின், உடலாகிய சக்கரம் (யந்திரம்) ஏரொளிச் சக்கரமாய்விடும். அப்பொழுது ஐம்பூதங்களில் ஒளிப் பொருளாகிய தீ, அச்சக்கரத்தின் நடுவிலே அணையாது நின்று ஒளிர்வதாம்.
==============================================
பாடல் எண் : 2
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.

பொழிப்புரை :    தீயின் பீசாக்கரங்களே ஏனைய பூத அக்கரங்கள் எல்லாவற்றினும் சிறந்து நிற்கும். அதனால், அவை வானத்தையும் அளாவி நிற்கும். அவற்றையே `சக்கரம்` என்று கூடச் சொல்லி விடலாம்; அவற்றைச் சக்கரத்துள் இடும் முறை இங்குச் சொல்லப்படும்.
==============================================
பாடல் எண் : 3
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :   ``விந்துவினால் எழும் நாதம்`` என்புழிச் சொல்லப் பட்ட சுத்த மாயை வாக்காக விருத்திப்படுமிடத்துப் பன்னிரு பிராசாத கலைகளாயும் விருத்திப்படுவதாம். அக்கலைகளே சிவமாயும் விளங்கும். அவைகளை, நூற்று நாற்பத்து நான்கு அறைகளில் அமைக்க, மேற்கூறிய ஏரொளிச் சக்கரம் தோன்றுவதாம்.
==============================================
பாடல் எண் : 4
மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :   உயிரெழுத்துக்களின் ஈற்றில் ஓதப்படும் விந்து வாகிய `அம்` என்பது தனிஓர் எழுத்தாய் நிற்பினும், அகரம் முதலிய பிற உயிர்களோடு கூடி நிற்றலும் உடைத்து, முடிவில் உள்ள நாதமாகிய `அ;` என்பதும் அத்தன்மையது. சக்கரங்களில் முதற்கண் உள்ள அறையில் எந்த எழுத்து உள்ளதோ, அந்த எழுத்துக்குரிய கலையின் சக்கரம் அதுவாகும். அவ்விடத்து அச்சக்கரம் அக்கலைக்குரிய பிண்டமாதலேயன்றி அண்டமாயும் விளங்கும்.
==============================================
பாடல் எண் : 5
ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரம் பல உலகங்களாயும் அமையும் பெருமையது. அதில் உள்ள விந்து நாதங்களும் அன்ன. அதனால் அச்சக்கரத்தில் இருக்கும் எழுத்துக்களை அறிவுடையோர் சிவமேயாக எண்ணுதலில் தலைப்படுவர்.
==============================================
பாடல் எண் : 6
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொழிப்புரை : சுத்த மாயையினின்றும், விருத்திப் பட்ட எழுத்துக்கள் முதற்கண் `நாதமும், விந்துவும்` என்னும் சூக்கும, சூக்குமாசூக்கும நிலைகளாய் நின்று, பின்னரே தூலமாயினவாம். அந்த எழுத்துக்களால் சக்கரங்கள் அமையுமிடத்து ஒடுக்க முறையில் முதற்கண் பிருதிவி சக்கரமும், அதன்மேல் அப்பு சக்கரமும் நிற்கும்.
==============================================
பாடல் எண் : 7
அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொழிப்புரை : மேற்சொல்லிய அப்புசக்கரத்தின்மேல் தேயுசக்கரம், அதன்மேல் வாயுசக்கரமும், அதன்மேல் ஆகாய சக்கரமும் அமையும்.

குறிப்புரை :  முதலடி அனுவாதம், இம் மந்திரத்தில் அப்புவை அடியாக எடுத்தமையின்யாவும் அதன்மேல் உள்ளனவாக ஓதினார்.
இதனால், அவை மற்றும் சில கூறப்பட்டன.
==============================================
பாடல் எண் : 8
ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.

பொழிப்புரை :   ஆகாய பீசத்தைச் சொல்வதனால், ஆகாய சக்கரத்தில் அமைந்த எழுத்துக்கள் யாவும் அந்த ஆகாய பீசமாகவே ஆய்விடும். அதனால், ஆகாய சக்கரம் சிவானந்தத்தைப் பயக்கும் ஆற்றலுடையதாம்.
==============================================
பாடல் எண் : 9
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.

பொழிப்புரை :   இங்கு அறியப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரம், வரிசைக்கு ஐந்தாக ஐந்துவரியில் இடப்படும், இருபத்தைந்து புள்ளி களால் அமைவது. (எனவே அப்புள்ளிகளை நேர்க் கோடுகளால் இணைக்கத் தோன்றும் நானான்கு (4X4=16) பதினாறு அறை களால் அமைதல் பெறப்பட்டது.) அவ் அறைகளில் உயிரெழுத்துப் பதினாறும் நாதம் முதலாக அடைக்கப்படும். இவ்வாறாக அமையும் இச்சக்கரம் பொதுவே சிவசூரியனால் விளக்கப்படுவது.
==============================================
பாடல் எண் : 10
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

பொழிப்புரை :    மாதுருகாட்சரங்களில் அகாரம் முதலிய ஆறு எழுத்துக்களும் சிவன் எழுத்துக்களும் ஏகாரம் முதலிய ஆறு எழுத் துக்கள் சத்தி எழுத்துக்களும், இவற்றுக்கு இடையே உள்ள நான்கு எழுத்துக்கள் அங்கி எழுத்துக்களும் ஆகும். ஆதலின், உடலெழுத் துக்கள் பலவும் இந்த உயிரெழுத்துப் பதினாறனுள்ளே அடங்கிநிற்கும்.
==============================================
பாடல் எண் : 11
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் கள் நூற்று நாற்பத்து நான்கும் மந்திர கலை உளப்பட ஆறு வட்டங் களில் நிற்பனவாம். அவ் ஆறுவட்டங்களின் நடுவே அமைந்த இடமே ஏரொளிச் சக்கரத்தின் நடுவிடமாக, அவ்விடத்திலே முதற்கண் (1238) கூறிய வன்னி பீசமாகிய `ஓம் ரம்` என்பதுபொறிக்கப்படும். அவ் விடத்து நிற்கும் பிரணவமும், பீசமுமாகிய அவையே சிவசோதி சொரூபமாய் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக் களிலும் தனது ஆற்றலால் வியாபித்து நிற்கும்.
==============================================
பாடல் எண் : 12
அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.

பொழிப்புரை :    உடலெழுத்துக்களில் கவர்க்கமாதி ஐவருக்கத்தின் ஈற்றெழுத்துக்களும், யகாராதி சகாராதி (‹) வருக்கங்களின் ஈற்றெழுத்துக்களும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்துக்களோடு கூடி அனாகத சக்கரத்தோடே நீங்கி யொழிய, விசுத்தி, ஆஞ்ஞை என்னும் இறுதி இரண்டாதாரங்களிலே உயிரெழுத்துப் பதினாறனோடு மற்றிரண்டெழுத்துக் கூடப் பதினெட்டெழுத்தே நிற்றலால், எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய பரசிவனும் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக் கடந்து நிற்பவனாகவே எண்ணப்படுகின்றான். அதனால், யோகத்தின் முடிவும் சந்திர மண்டலத்தையும் கடந்து துவாதசாந்தத்தை அடைவதே யாகின்றது.
==============================================
பாடல் எண் : 13
ஆஇன மானவை முந்நூற் றறுபதும்
ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும்
ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும்
ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.

பொழிப்புரை :   ஐம்பதெழுத்துக்களில் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அவ்வுயிரெழுத்துக்கள் பன்னிரண்டுமே முந்நூற்றறுபது நாள்களாகிய ஆண்டும், பதினைந்து நாள்களாகிய பக்கமும், ஆறும், பன்னிரண்டும் ஆகிய இருதுக்களும், மாதங்களும் என்று இவை அனைத்துமாய் நிற்கும். அவற்றிற்கு அச்சிறப்பு, சிவ சூரியனது தோற்றத்தால் ஆனதாம்.
==============================================
பாடல் எண் : 14
வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.

பொழிப்புரை :  ஏரொளிச் சக்கரமே மேற்கூறிய சிவசூரியன் தோன்றும் ஆகாச வழியாகும். அதனால், அதன்கண் உள்ள எழுத்துக் களே அச்சூரியன் இயக்கத்தால் அமைகின்ற நாழிகைகளும், அந் நாழிகையால் ஆம் நாட்களும், அந்நாட்களால் ஆம் மாதங்களும், அம் மாதங்களின் நாள் முந்நூற்றறுபதால் அமைகின்ற ஆண்டும் ஆகும்.
==============================================
பாடல் எண் : 15
அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொழிப்புரை :  இராசிகள் பன்னிரண்டில் இடபம் முதல் நான் கினை முதற் கூறாகவும், விருச்சிகம் முதல் நான்கினைக் கடைக் கூறாகவும், எஞ்சிய நான்கையும் இடைக் கூறாகவும் பகுத்து, அக்கூறுகளை முறையே `மேட வீதி, மிதுன வீதி, இடப வீதி` எனக் கொள்க. இராசிகள் பன்னிரண்டும் இங்ஙனம் இம் மூன்று வீதிகளாய் அமைவனவாம்.
==============================================
பாடல் எண் : 16
இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு சக்கரங் களும் முறையே மேடம் முதலிய பன்னிரண்டு இராசியுள் நிற்பன வாகக் கருதித் தியானிக்கப்படும். அத்தியானம் பன்னிரண்டாம் ராசி முடியச்சென்று முற்றின், தியானிப்பவன் விந்து வெளியைப் பெற்ற வனாய்த் திகழ்வான். அவன் பின்னும் அந்தத் தியானத்திலே அழுந்தி நிற்பின், நாத ஒலியைக் கேட்பவனாகவும் ஆவான். பன்னிரு சக்கரங் களும் பன்னிரண்டு இராசிக்குள் நிற்பனவாகக் கருதும் கருத்திற்கு இதுவே பயனாகும்.
==============================================
பாடல் எண் : 17
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொழிப்புரை :   தம்மை அடுத்து நிற்கும் எழுத்துக் காரணமாகத் தாமும் விந்துவாய் நிற்கின்ற, ஏரொளிச் சக்கர எழுத்துக்கள், அன்ன காரணத்தானே நாதமாயும் நிற்கும். அவ்வெழுத்துக்களை அங்ஙனம் தியானித்தலில் சிறிதும் திரியாது நிற்பின், அந்நிலையின்பின் மேற்கூறிய ஒளிக்காட்சி விண்மீன்போலப் புலப்படும்.
==============================================
பாடல் எண் : 18
தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொழிப்புரை :   மேற் கூறியது காரணமாக ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு கலா சக்கரங்களைப் பன்னிரு விண்மீன்கள் என்று கூறலாம். ஆயினும் அவற்றின் தியான முதிர்ச்சியில் விண்மீனினும் மிக்க பேரொளி ஒன்று மேலே உள்ளமை புலனாகும். ஆதலால், அந்த விண்மீன்போல நிற்கும் ஒளிக்காட்சியை இடைவிடாது காணுதல் அப்பேரொளி சிறிதுசிறிதாக மிக்கு விளங்குதற் பொருட்டாம்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #88 on: July 27, 2012, 02:24:17 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:09/2. ஏரொளிச் சக்கரம்

(பாடல்கள்:19-36/36) பகுதி-II


பாடல் எண் : 19
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.

பொழிப்புரை :   மேற்கூறியவாற்றாற் கண்டு தியானிக்கின்ற சக்கரத்தின் பயன் விந்துவாகிய ஒளிக்காட்சியின் வளர்ச்சியே. அவ்வளர்ச்சியோடுகூட அதற்குத் தக நாத ஒலியும் மிக மிகக் கேட்கப்படும், அவ்விரண்டனாலும் ஆன்மாவின் உள்ளொளியாய் அதனுட் கரந்து நின்ற சிவமும் அனுபவப் பட்டுவரும். அன்னதொரு சிவானுபூதிக்குப்பின் ஆன்மாவைத் தன்னுள் அடங்கக்கொண்டு விரிந்துள்ள சத்தி ஒளியாகிய நீல ஒளி காட்சிப்படுவதாம்.
==============================================
பாடல் எண் : 20
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொழிப்புரை :  யோக முதிர்ச்சியில் நீல ஒளியாய்க் காணப்படும் சத்திஒளி பூதாகாயத்தின் மேற்பட்ட பராகாயமாய் உலகத்தைத் தன்னுட் கொண்டு பரந்து நிற்றலாலே ஐம்பெரும் பூதங்கள் முதலிய பொருள்கள் பலவும் பயன் தரும் பொருளாய்ச் சிறந்து விளங்கு கின்றன. அச்சத்தி ஒளியூடே அதனினும் நுண்ணிய சிவமாகிய மெய்ப் பொருள் ஒன்றுபட்டு அச்சத்தி ஒளி உள்ள பொருள்களில் எல்லாம் தானும் உடன் நிறைந்து நிற்கின்றது.
==============================================
பாடல் எண் : 21
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.

பொழிப்புரை :   மேற் கூறியவாறு சத்தியாகிய பராகாயம் பல அண்டங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிப் பரந்து நிற்பது, அவை நிலைபெறுதலைச் செய்தற் பொருட்டாம். இனி அவ்வண்டம் முதலிய பொருள்கள் மாயையின் விளைவுகளாய் உயிர்கட்குச் சிவத்தை மறைத்துத் தம்மையே காட்டி நிற்றலால், அவற்றை அவ்வாற்றாற் செயற் படச் செய்யும் சத்தியும் ஓராற்றால் ஆணவ மலத்தோடு ஒப்பதாம்.
==============================================
பாடல் எண் : 22
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொழிப்புரை :  `ஏரொளிச் சக்கரம் எல்லா உலகங்களையும் அடக்கி நிற்கும்` என்பது விளக்குதற்கு இது முதல் நான்கு மந்திரங்களால் உலக உற்பத்தி முறையை உணர்த்துகின்றார்.
`விந்து, நாதம்` என்ற இரண்டு தத்துவங்கள் உலகிற்கு அடி நிலையாய் உள்ளன. அவை யிரண்டும் முதற்கண் நிற்றல் போலத் தனித்து நில்லாது சமமாய்க் கலந்து கீழ்வருமாயின், அங்ஙனம் கலந்த அக்கலப்பே உலகத்திற்கு முதலாய் நிற்கும். பின்பு விந்து மிகுதியாக நாதம் குறைந்து நிற்க வேண்டில், அங்ஙனம் நிற்றற்கும் நாதத்தினும் விந்துவை எண்மடங்கு மிகுதியாகக் கொண்ட ஒருநிலை முதலாக அமையும்.
==============================================
பாடல் எண் : 23
வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற
வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொழிப்புரை :   சிவத்தினின்றும் தோன்றும் உலக முதல்கள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று மேலாய் நிற்கும். (எனவே, மற்றொன்று கீழாய் நிற்பதாம். ) சிவத்தினின்றும் தோன்றும் அவ் இரு முதல்களும் முதற்கண் தனித்து நின்றவாறு நில்லாது சமமாய்க் கூடி நின்ற, பின்பே சுத்தமாயை பல உலகங்கட்கு முதலாய் நின்று, அவையாய் விரியும்.
==============================================
பாடல் எண் : 24
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

பொழிப்புரை :   சுத்த மாயையே அனைத்தையும் வியாபித்து நிற்ப தாகலின், அதனை அறியாதார், `முக்குண வடிவான பிரகிருதி ஒன்றே உலகிற்கு முதனிலை` எனக் கூறும் கூற்று உண்மையன்றாய் ஒழிந்தது. சுத்த மாயை வித்தை முதலாக நாதம் முடிய விரிந்துநின்று அறுபத்து நான்கு கலைகளாகச் சொல்லப்படுகின்ற நூல்களையும் தன்னுட் கொண்டு நிற்குமாயின், சுத்த மாயையே வியாபகமானது; அதுவே உலகிற்குப் பெரு முதல்நிலை.
==============================================
பாடல் எண் : 25
விதையது விந்து விளைந்தன எல்லாம்
விதையது விந்து விளைந்த உயிரும்
விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விதையது விந்து விளைந்தவன் தாளே.

பொழிப்புரை :  சுத்த மாயை முதனிலையாக நிற்பவே பலவகை உலகங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், சவிகற்ப ஞானமும் உளவாவன. ஆயினும் அவை அங்ஙனம் உளவாதல் அம்மாயை சிவசத்தியை நிலைக்களமாகக் கொள்ளுதலாலேயாம்.
==============================================
பாடல் எண் : 26
விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
விளைந்த எழுத்தவை சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொழிப்புரை :   காரணகாரியங்கட்கு உள்ள ஒற்றுமையால் விந்து நாதங்களின் காரியமாகிய எழுத்துக்கள் பலவும் விந்து நாதங் களாகவே கொள்ளப்படும். அத்தன்மையவான எழுத்துக்களாலே எல்லாச் சக்கரங்களும் அமைதலின், அச்சக்கரத் தியானத்தால் அவை உடம்பினுள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நின்று உடம்பை யும் விந்து நாதமயமாக்கி, ஆன்மாவையும் மந்திரான்மாவாகச் செய்யும்; அஃது எவ்வாறெனில் எழுத்துக்கள்தாமே மந்திரமாய் உருப் பெறுதலின்.
==============================================
பாடல் எண் : 27
மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

பொழிப்புரை :   `மந்திரம், சக்கரம்` என்பவற்றின் உண்மையைச் சொல்லுமிடத்து, அவைகளைக்கூறும் நூல்களின் கருத்து, `நாதமாகிய உண்மை எழுத்து ஒன்றே சோதி மண்டலமாம்` என்பதே. ஆகையால், அவ்வுண்மை எழுத்துக்களை உணர்த்தும் கருவிகளாகிய ஆகாய ஒலியையும், அதற்கு அறிகுறியாய் உள்ள வரிவடிவத்தையும் மிகச் சிறப்பித்துக் கூறும் அந்நூன்மொழிகள் முகமனாய் (உபசாரமாய்) அமைவனவே. இதனை, உணர்ந்து பரமபந்தமாய் உள்ள பிரணவத்தைத் தியானிப்பாயாக.
==============================================
பாடல் எண் : 28
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

பொழிப்புரை :   தியானத்தின் பொருட்டு வரையப்பட்ட அறை களில் பொருந்தி விளங்கும் எழுத்துக்கள் அவ் அறைகளின் எல்லைக் கோடுகளைக் கடந்து ஒன்று மற்றொன்றிற் செல்வதில்லை. ஆகை யால், தியானிப்பவன் அவைகளைத் தனக்கு இயல்பாயுள்ள மறதி யாகிய தடை அற்றொழிய, அவ் அறைகளின் வழியே நின்று நினைக்கும் நிலையுடையனாயின், மேற்சொல்லிய உண்மை மந்திரத்தை நேரே காணுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 29
பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :  மேற்கூறிய முறைகளை அறிய வல்லவர்க்கு மந்திரங்களின் உண்மைக் காட்சியைக் காணுதலும், புறப்பகை அகப் பகைகளை நீக்குவதாய சக்கரத்தை நழுவ விடாது பற்றி அதனாற் பயன் அடைதலும், இருந்த இடத்திலிருந்தே எவ்விடப் பொருளையும் அகத்தில் காண்டலும், நுண்ணியவற்றிலும் நுண்ணிதாகிய சிவத்தைக் தன்னிடத்திலே பெறுதலும் கூடும்.
==============================================
பாடல் எண் : 30
அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

பொழிப்புரை :  ஏரொளிச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்கள் மேல் ``அம் முதல் ஆறும்`` என்னும் மந்திரத்தில் (1247) கூறியபடி முதலில் ஆறும், ஈற்றில் ஆறும், இடையில் நான்கும் ஆகிய எழுத்துக்கள் முறையே `சிவன், சத்தி, அக்கினி` என்னும் மூவருக்கும் உரியன ஆதலின், அவை முத்திறமும் கூடிநிற்கும் இச்சக்கரத்தின் பெருமை சொல்லில் அடங்குவதோ!
==============================================
பாடல் எண் : 31
கூறிய சக்கரத் துள்எழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்தில் உள்ள எழுத்துக்களாகிய மந்திரங்கள், சிற்றறிவினார் மதித்து விரும்பும் `தம்பனம், வசியம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம்` என்னும் ஐந்தோடு `மாரணம்` என்பதும் கூட ஆறாகின்ற மாறுபட்ட செயல்களை நல்லனவாக மதித்து விரும்புகின்றவர்கட்கு அவ்வாறே வேறுபட்டனவாகவும் அமைந்து விரிந்துநிற்கும்.
==============================================
பாடல் எண் : 32
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

பொழிப்புரை :   மேற்கூறிய அம் மந்திரங்கள் அவரவரது பக்குவத் திற்கு ஏற்ப, ஒருத்தியே ஆய அருட்சத்தியாயும், அளவற்றவளாய திரோதான சத்தியாயும் நிற்கும். அச்சத்திகள் பலவுமாகின்ற பராசத்தி நீறுபூத்த நெருப்பு போல்பவள். ஆதலின், அம்மந்திரங் களால் உலகப் பயன்கள் கைகூடுமாயினும், பிறரை நலிய எண்ணு கின்ற தம்பனம் முதலியவைகளைச் சிறப்பாக மாரணத்தைப் பெரிதாக மதித்து அவற்றைச் செபித்தால் அவை சீற்றம் அடையும்; அதனால், அவ் இழி பயன்கள் கைகூட மாட்டா.
==============================================
பாடல் எண் : 33
கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை : ஏரொளிச் சக்கரத்தின் சிறப்பை ஆராய்ந்து அதனை, `இம்மை மறுமை நலங்களைப் பயக்கும் திருவருளின் வாயில்` என்பதாக உள்ளத்திலே தெளிந்து, அவ்வாற்றால் அதனை மேற்கொள்பவர்க்கு, மேலே கூறிய தம்பனம் முதலிய ஆற்றல்கள் விளையாட்டின் தன்மையாக அவர்களிடம் தாமேவந்து பொருந்தி நிற்கும். அதனால், அவர்களைக் கெடுக்க எண்ணுகின்ற பகைவரும் அவர் இருக்கும் திருவருளாகிய பாசறைக்குள் புகமாட்டாதவராவர்.
==============================================
பாடல் எண் : 34
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்துள் அகார கலா சக்கரத்தை மூலா தாரத்தில் கருதிக் குண்டலினியோடு பொருந்த வைத்துத் தியானத்தைத் தொடங்க, கலா சக்கரங்கள் பலவும் பிராணாயாமத்தால் முறையே அருளுருவாய் முதிர்ந்து பயன் தரும்.
==============================================
பாடல் எண் : 35
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :  கால், அரை, முக்கால், ஒன்று என இங்ஙனம் பல வகையால் வரையறுக்கப்பட்ட மாத்திரைகளின் படி அகாரம் முதலிய கலைகள் மந்திரங்களாக உச்சரிக்கப்பட்டுத் தோன்றிப் பொருந்தி அழுந்தி நின்று வளர்ந்து தம் தம் பயனைத் தந்து மேற்போய் பிறவி யாகிய பகை நீங்கும்படி முற்றி நிற்குமாயின், ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அம்மந்திரங்களை அம் முறையானே மாறி நிற்கக் கொண்டு செபிக்கின்ற அவர்களுக்கு அம்மந்திரங்கள் அவர்களை மிகவும் விரும்புகின்றனவாய் அமையும்; `அஃதாவது அவர்க்குக் கைவந்து நிற்கும்` என்பதாம்.
==============================================
பாடல் எண் : 36
கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
என்றும் இதயத் தெழுந்து நமவே.

பொழிப்புரை :  பிராசாத கலைகளுக்குரிய மந்திரங்களாகக் கொள்ளப்பட்ட ஏரொளிச் சக்கர எழுத்துக்கள் இறைவன் எழுத் தாகவே ஆகி, யோக முறைப்படி உள்நாக்கில் மாறுபாடு நீங்க ஒலிக்கப் பட்ட பின்னர், முத்திக்கு நேரே வாயிலாகிய திருவைந்தெழுத்து இருதயத்திலே தோன்றி, அவ்வம்பலத்தில் நிறைந்து நிற்கின்ற, சிவமாகிய தூண்டாவிளக்காய் என்றும் ஒளிவிட்டு விளங்கும்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #89 on: July 27, 2012, 02:25:37 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:10.

வைரவச் சக்கரம் (பாடல்கள்:6)


பாடல் எண் : 1
அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

பொழிப்புரை :   முற்பக்கம் (பூர்வ பக்கம்) பிற்பக்கம் (அபர பக்கம்) என்னும் இருபக்கங்களில் உள்ள பதினைந்து திதிகளையும் அவ்ஆறு திதிகளாகப் பிரிக்கும் முறையில் சக்கரத்தை அமைத்து, உவாக்களோடு கூடப் பதினாறு திதிகட்கும் பதினாறு உயிரெழுத்துக்களில் அகாரத்தைக் கடையுவாவிற்கும், (அமாவாசைக்கும்) பதினாறாவது உயிரெழுத்தைத் தலையுவாவிற்கும் (பௌர்ணிமைக்கும்) உரியவாக வைத்து, ஏனையவற்றை ஆகாரம் முதலாக நேர்முறையில் முற்பக்க பிரதமை முதலியவற்றிற்கு உரியவாக எண்ணியும், பதினைந்தாம் உயிர் முதலாக எதிர்முறையில் பிற்பக்கப் பிரதமை முதலியவற்றிற்கு உரியவாகவும் கொண்டு, முதல் அறை ஒன்றில் மட்டும் அகாரத்தை யும், அடுத்து உள்ள அறைகளில் முறையே வலமாக ஆகாரம் முதல் பதினைந்தாம் உயிர்முடிய ஓர் எழுத்தை இவ்விரண்டு அறைகளிலும், பதினாறாம் உயிரெழுத்தை மட்டும் ஓர் அறையிலும் அடைக்க, (14X2) இருபத்தெட்டும், இரண்டும் ஆக முப்பது அறைகள் நிரம்ப, ஆறு அறைகள் நடுவில் வெற்றிடங்களாய் நிற்கும்.

அவற்றிற்கு நடுவில் `ஓம் பம்` என்னும் பிரணவ பீசங்களையும், அவற்றின் கீழ்த் தொடங்கி, `பைரவாய நம` என்னும் ஆறெழுத்துக்களை ஆறு அறைகளிலும் எழுதச்சக்கரம் நிரம்பியதாம். இரண்டிரண்டாய் உள்ள ஆகாரம் முதலியவற்றை அமாவாசை தொடங்கி அகரத்தை அடுத்த ஆகாரம் முதலியவற்றை ஒன்றுவிட்டு ஒன்றான அறைகளில் நேரே முற்பக்கப்பிரதமை முதலியவாக ஓர் எழுத்தைப்பத்துருச் செபித்துப் பௌர்ணிமை முடிவில் நடுவில் உள்ள பிரணவ பீசங்களோடு மூலமந்திரத்தைப் பத்துருச்செபித்து அமாவாசை முதல் பௌர்ணிமை முடிய ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபாடு செய்தல் வேண்டும்.

பின்பு பௌர்ணிமை தொடங்கிப் பிற்பக்கப் பிரதமை முதல் ஒவ்வொருநாளும் பதினைந்தாம் உயிர் முதலாக எதிர் முறையில் அவ்வாறே ஒன்றுவிட்டொன்றாக ஒவ்வோர் எழுத்தையும் பத்துருச் செபித்து, முடிவில் மேற்கூறியவாறு நடுவில் உள்ள மந்திரத்தைச் செபித்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபடும் நாளில் அன்றைய திதிக்குரிய எழுத்து முதலாகத் தொடங்கி அதற்கு முன்னுள்ள எழுத்தில் வந்து முடியவே செபித்தல் வேண்டும். எழுத்துக்களை முதலில் பிரணவத்தையும், ஈற்றில் மகாரத்தையும் கூட்டி உச்சரித்தலே முறை. பதினைந்தாம் உயிரைமட்டும் ஹகாரத்தின் மேல் ஏற்றி `ஹம்` எனக்கூறல் வேண்டும். அகாரம் ஒழிந்த பிற உயிர்களையும் ஹகாரத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் வடமொழி வழக்கு.
==============================================
பாடல் எண் : 2
நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பொழிப்புரை :   இச்சக்கரத்தில் விளங்கும் வயிரவ மூர்த்தி, சிறப்பாகச் சூல கபாலங்களை ஏந்திய வேகவடிவத்தினர். அதனால், அவர் தம் அடியவரை வென்ற பகைவரைத் தாம் போர்ச்சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்தம் உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக அவர்களது உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவார்.
==============================================
பாடல் எண் : 3
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.

பொழிப்புரை :   நரசிங்கன், திரிவிக்கிரமன் இவர்களது தோலைப் போர்த்துள்ள ஆதி வயிரவர் மேற்கூறிய சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். இனித் தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.
==============================================
பாடல் எண் : 4
கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொழிப்புரை :  ஆறுகைகளும் நெஞ்சில் விளங்கும்படி நினைக்கப் படுகின்ற திருமேனி செந்நிறம் உடையதாக விளங்குகின்ற வயிரவ மூர்த்தியினது, தூயவர் உள்ளத்தில் துலங்கி நிற்பதாகிய வடிவம், உனது நெஞ்சிலும் உள்ளதாகக் கருதி, மாணவனே, நீ வஞ்சனையற்ற, மெய்யான அன்போடு அக்கடவுளை வழிபடுதலைச் செய்.
==============================================
பாடல் எண் : 5
பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொழிப்புரை :   வயிரவ வழிபாட்டினைச் செய்ய விரும்பினால், மேற்கூறிய வயிரவச் சக்கரத்தினை மேற்கூறிய வகையில் ஓர் ஆயிரம் நாள் வழிபடல் வேண்டும். வழிபடின் அச்சக்கர வழிபாட்டின் பயன் கூடுவதாகும். அவ்வழிபாட்டினை, சந்தனம், சவ்வாது, புனுகு, நெய் என்னும் இவைகளைச் சிறப்பாகக் கொண்டு செய்து. அது நிறைவெய்திய பின் பகைவர்பால் உங்கள் பகையைப் புலப்படுத்திக் கொள்ளுங்கள்.
==============================================
பாடல் எண் : 6
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொழிப்புரை :  ஒரு வரிசையில் ஆறு அறைகளை உடைய சக்கர வழிபாட்டின் பயன் கிடைக்கப்பெறின் பகைவர்பால் நீ கருதிய மாறுபாட்டுச் செயல் நீ நினைத்தவாறே முடியும். இனித்தம்பனம் முதலிய அறு செயல் ஆற்றலை அடைய விரும்பி இவ்வழிபாட்டினைச் செய்யின் அவ்விருப்பமும் இதனால் நிறைவுறும்.


Tags: