Author Topic: பரம(ன்) ரகசியம் ( தொடர் கதை )  (Read 2931 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 364
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
பரம(ன்) ரகசியம்! - 1


புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு.  சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரையும், முன்னால் இருந்த பெரிய இரும்புக் கதவையும் அவன் ஒருவித அலட்சியத்துடன் ஆராய்ந்தான். இரும்புக் கதவை ஒட்டிய சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகையில் ”சர்வம் சிவமயம்” என்ற வாசகம் கரும்பலகையில் தங்க எழுத்துகளில் மின்னியது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. உள்ளே நாய்கள் இல்லை என்ற தகவலை அவனுக்கு அந்த வேலையைக் கொடுத்தவர்கள் முன்பே சொல்லி இருந்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் அனாயாசமாக அந்த இரும்புக் கேட்டில் ஏறி உள்ளே குதித்தான்.


வீட்டினுள்ளே அந்த நேரத்திலும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் பயப்படவும் இல்லை. அவன் தன் சிறிய வயதில் இருந்து அறியாத ஒரு உணர்ச்சி பயம் தான். பன்னிரண்டு வயதில் திருடவும், பதினேழு வயதில் கொலை செய்யவும் ஆரம்பித்தவன் அவன். எத்தனை கொள்ளை அடித்திருக்கிறான், எத்தனை கொலை செய்திருக்கிறான் என்ற முழுக்கணக்கை அவன் வைத்திருக்கவில்லை. போலீசாரிடமும் அதன் முழுக்கணக்கு இல்லை. அத்தனை செய்த போதும் சரி, அதில் சிலவற்றிற்காக பிடிபட்ட போதும் சரி அவன் பயத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.


ஒரு அமானுஷ்ய அமைதியைத் துளைத்துக் கொண்டெழுந்த சுவர்க்கோழியின் சத்தம் தவிர அந்த இடத்தில் வேறெந்த ஒலியும் இல்லை. அவன் சத்தமில்லாமல் வீட்டை நோக்கி முன்னேறினான்.  வீட்டை முன்பே விவரித்திருந்தார்கள். ஒரு ஹால், படுக்கையறை, பூஜையறை, சமையலறை,  குளியலறை, கழிப்பறை கொண்டது அந்த வீடு. வீட்டின் முன் கதவு மிகப்பழையது, மரத்தினாலானது, பழைய பலவீனமான தாழ்ப்பாள் கொண்டது, அதனால் உள்ளே நுழைவது அவனுக்கு அத்தனை கஷ்டமான காரியம் அல்ல என்று சொல்லி இருந்தார்கள்.


ஹாலில் தான் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஹால் ஜன்னல் திறந்து தான் இருந்தது. மறைவாக நின்று கொண்டு உள்ளே பார்த்தான். முதியவர் ஒருவர் ஹாலில் ஜன்னலுக்கு நேரெதிரில் இருந்த பூஜையறையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். பூஜையறையில் இரண்டு அகல்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பூஜையறையில் ஒரு சிவலிங்கத்தைத் தவிர வேறு எந்த விக்கிரகமோ, படங்களோ இல்லாதது விளக்கொளியில் தெரிந்தது.


இந்த சிவலிங்கம் தான் அவர்கள் குறி. அந்த சிவலிங்கத்தை அவன் உற்றுப்பார்த்தான். சாதாரண கல் லிங்கம் தான். இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு உடல் வலிமையும், மன தைரியமும் இருந்த அளவுக்கு அறிவுகூர்மை போதாது. அதனால் அவன் அதைத் தெரிந்து கொள்ளவும் முனையவில்லை.


அந்த முதியவர் மிக ஒடிசலாக இருந்தார். அவரைக் கொல்வது ஒரு பூச்சியை நசுக்குவது போலத் தான் அவனுக்கு. இந்த வேலையை முடிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது பேரம் பேசுவார்கள் என்று நினைத்து இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டான். அவர்கள் மறுபேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. மூன்று லட்சமாகக் கேட்டிருக்கலாமோ?


ஆனால் பண விஷயத்தில் பேரம் பேசாதவர்கள், முன்னதாகவே ஒரு லட்ச ரூபாயையும் முன்பணமாகக் கொடுத்தவர்கள், மற்ற சில நிபந்தனைகள் விதித்தார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த முதியவரை பூஜையறையில் கொல்லக் கூடாது, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் அந்த பூஜையறைக்குள் நுழையவோ,  சிவலிங்கத்தைத் தொடவோ கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருந்தார்கள். அவன் அறிவுகூர்மை பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களோ என்னவோ, சொன்னதை அவன் வாயால் திரும்பச் சொல்ல வைத்துக் கேட்டார்கள். அந்த லிங்கத்தில் ஏதாவது புதையல் இருக்குமோ? தங்கம் வைரம் போன்றவை உள்ளே வைத்து மூடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு இப்போது வந்தது. அப்படி இருந்தால் கேட்ட இரண்டு லட்சம் குறைவு தான்.


கிழவர் அந்த பூஜையறையில் அமர்ந்திருப்பது இப்போது அவனுக்கு அனுகூலமாக இல்லை. முன்னால் சிவலிங்கம் சிலையாக இருக்க, முதியவரும் இன்னொரு சிலை போல அசைவில்லாமல் உட்கார்ந்திருந்தார். மனதுக்குள்ளே கிழவரிடம் சொன்னான். “யோவ் சாமி கும்பிட்டது போதும்யா. வெளியே வாய்யா”


அவன் வாய் விட்டுச் சொல்லி அதைக் கேட்டது போல் முதியவர் கண்களைத் திறந்து அவனிருந்த ஜன்னல் பக்கம் பார்த்தார். அவனுக்கு திக்கென்றது. அவனை அறியாமல் மயிர்க்கூச்செரிந்தது. ஒருசில வினாடிகள் ஹால் ஜன்னலைப் பார்த்தார் அவர். கண்டிப்பாக இருட்டில் நின்றிருந்த அவனை அவர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்றாலும் அவர் பார்வை அவனைப் பார்ப்பதாக அவன் உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு பயம் வந்து விடவில்லை. அவனைப்பார்த்து மற்றவர்கள் தான் பயப்பட வேண்டுமே ஒழிய அவன் யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.


கிழவர் முகத்தில் லேசானதொரு புன்னகை அரும்பி மறைந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவர் அமைதியாக எழுந்து நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார். வணங்கி எழுந்து அவர் திரும்பிய போது அவர் முகத்தில் அசாதாரணமானதொரு சாந்தம் தெரிந்தது. அவர் பூஜையறையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் பத்மாசனத்தில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடியே ஹாலில் அமர்ந்தார்.


அவன் உள்ளுணர்வு சொன்னது, அவன் அங்கே இருப்பது அவருக்குத் தெரியும் என்று. அவனுக்கு சந்தேகம் வந்தது. வீட்டுக்குள் வேறு யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ? அதனால் தான் அவர் அவ்வளவு தைரியமாக அப்படி உட்கார்கிறாரோ? மெல்ல வீட்டை சத்தமில்லாமல் ஒரு சுற்று சுற்றி வந்தான். எல்லா ஜன்னல்களும் திறந்து தான் இருந்தன. அதன் வழியாக உள்ளே நோட்டமிட்டான். இருட்டில் பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு உள்ளே வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபடி அவன் பழைய இடத்திற்கே வந்து ஹால் ஜன்னல் வழியாக அவரைப் பார்த்தான். அவர் அதே இடத்தில் பத்மாசனத்திலேயே இன்னமும் அமர்ந்திருந்தார். பூஜையறையில் அகல்விளக்குகள் அணைந்து போயிருந்தன.


இனி தாமதிப்பது வீண் என்று எண்ணியவனாக அவன் வீட்டின் கதவருகே வந்தான். கதவு லேசாகத் திறந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். அவனுக்கு இது எல்லாம் இயல்பாகத் தெரியவில்லை. அவனுக்குப் புரியாத ஏதோ ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக அங்கே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் மெல்ல கதவைத் திறந்து ஒரு நிமிடம் தாமதித்தான். பின் திடீரென்று உள்ளே பாய்ந்தான். அவனை ஆக்கிரமிக்க அங்கே யாரும் இல்லை.


அவன் பாய்ந்து வந்த சத்தம் அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் தியானம் கலையவும் இல்லை. அவனுக்கு அவர் நடவடிக்கை திகைப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. ”என்ன இழவுடா இது. இந்த ஆள் மனுசன் தானா?” என்று தனக்குள்ளே அவன் கேட்டுக் கொண்டான்.  உடனடியாக வேலையை முடித்து விட்டு இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.


அதற்குப் பின் அவன் தயங்கவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்திருந்த அவர் கழுத்தை அசுர பலத்துடன் நெரித்தான். அவர் உடல் துடித்தாலும் அவரது பத்மாசனம் கலையவில்லை. அவர் அவனைத் தடுக்கவோ, போராடவோ இல்லை. அவர் உயிர் பிரியும் வரை அவன் தன் பிடியைத் தளர்த்தவில்லை.  அவர் உயிர் பிரிந்த அந்த கணத்தில் பூஜையறையில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது. அவன் திகைத்துப் போனான். ஒளி தோன்றியது பூஜை அறையின் எந்த விளக்காலும் அல்ல, அந்த சிவலிங்கத்தில் தான் என்று ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. யாரோ சிவலிங்கத்தில் வெள்ளை ஒளியை பாய்ச்சியது போல, ஒரு மின்னல் ஒளி அந்த சிவலிங்கத்தில் வந்து போனது போல, அந்தக் கிழவரின் உயிரே ஒளியாகி அந்த சிவலிங்கத்தில் சேர்ந்து மறைந்தது போல... அதே நேரத்தில் அவனை வந்து ஏதோ ஒரு சக்தி தீண்டியதைப் போலவும் உணர்ந்தான். அது என்ன என்று அவனுக்கு விளக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் ஒரு அசௌகரியத்தை உணர்ந்தான்.


முதல் முறையாக இனம் புரியாத ஒரு பயம் அவனுள் எட்டிப்பார்த்தது. யோசித்துப் பார்க்கையில் அந்த முதியவர் சாகத் தயாராக இருந்தது போலவும் அதற்காகக் காத்துக் கொண்டு இருந்தது போலவும் அவனுக்குத் தோன்றியது.  கடவுளை நம்பாத அவனுக்கு, அமானுஷ்யங்களையும் நம்பாத அவனுக்கு, சிவலிங்கத்தில் வந்து போன ஒளி கண்டிப்பாக வெளியே இருந்து யாரோ டார்ச் மூலம் பாய்ச்சியதாகவோ, அல்லது ஃப்ளாஷ் காமிராவில் படம் எடுத்ததாகவோ தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும்ப வேகமாக வெளியே ஓடி வந்து வீட்டை சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. தோட்டத்தில் யாராவது ஒளிந்து இருக்கலாமோ? அவனுக்கு இந்த வேலை தந்தவர்களில் யாராவது ஒருவரோ, அவர்கள் அனுப்பிய ஆள் யாராவதோ  இருக்கலாமோ என்றெல்லாம் சந்தேகம் வந்தது.  ஆனால் அதே நேரத்தில் அவனை வந்து தீண்டியதாக அவன்  உணர்ந்த சக்தி என்ன? அது பிரமையோ?


அவனுக்கு குழப்பமாக இருந்தது. தலை லேசாக வலித்தது. அவர்கள் ஒரு மொபைல் போனைத் தந்து அதில் ஒரு எண்ணிற்கு வேலை முடிந்தவுடன் அழைக்கச் சொல்லி இருந்தார்கள். அவன் வெளியே வந்து அவர்கள் சொன்னபடியே அந்த மொபைல் போனை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்துச் சொன்னான்.


“கிழவனைக் கொன்னாச்சு”


“பூஜையறைக்கு வெளிய தானே?”


“ஆமா”


“நீ பூஜையறைக்குள்ளே போகலை அல்லவா?”


“போகலை”


“அந்த சிவலிங்கத்தை தொடலை அல்லவா?”


அவனுக்குக் கோபம் வந்தது. “உள்ளே போகாம எப்படி அதைத் தொட முடியும்? என் கை என்ன பத்தடி நீளமா”


அந்தக் கோபம் தான் அவன் உண்மையைச் சொல்கிறான் என்பதை அந்த மனிதருக்கு உணர்த்தியது போல இருந்தது. அமைதியாகச் சொன்னார். “அங்கேயே இரு. கால் மணி நேரத்தில் என் ஆட்கள் அங்கே வந்து விடுவார்கள்”


அவன் காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக மிக மந்தமாக நகர்ந்தது போல இருந்தது.  வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தான். முதியவரின் உடல் சரிந்து கிடந்தாலும் கால் பத்மாசனத்திலேயே இருந்தது இயல்பில்லாத ஒரு விஷயமாகப் பட்டது. அப்போது தான் அந்தக் கிழவரின் முகம் பார்த்தான். மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்திருந்தாலும் அந்த முகத்தில் வலியின் சுவடு கொஞ்சம் கூட இல்லை. மாறாக பேரமைதியுடன் அந்த முகம் தெரிந்தது. உள்ளே நுழைந்து ஹாலில் இருந்தபடியே அந்த சிவலிங்கத்தைக் கவனித்தான். சிவலிங்கம் சாதாரணமாகத் தான் தெரிந்தது.


அதைத் தொடக்கூடாது, பூஜையறைக்குள் நுழையக் கூடாது என்று திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி இருந்ததும், இப்போதும் கூட அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதும் ஏதோ ஒரு ரகசியம் இந்த சிவலிங்கத்தைச் சூழ்ந்து இருப்பதை அவனுக்கு உணர்த்தியது. சிறு வயதிலிருந்தே செய்யாதே என்பதை செய்து பழகியவன் அவன்.... அவன் கடிகாரத்தைப் பார்த்தான். அவர் சொன்ன கணக்குப்படி அவர்கள் வர இன்னும் பன்னிரண்டு நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் அந்த சிவலிங்கத்தில் அப்படி என்ன தான் ரகசியம் புதைந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் வலிமையாக அவனுக்குள்ளே எழ அவன் அந்தப் பூஜையறைக்குள் நுழைந்தான்.(தொடரும்)   

« Last Edit: August 14, 2012, 03:02:12 AM by Global Angel »
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 364
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பரம(ன்) ரகசியம்
« Reply #1 on: August 14, 2012, 02:57:45 AM »
பரம(ன்) ரகசியம்! - 2                         
அந்தக் கொலைகாரனிடம் போனில் தெரிவித்தபடி ஆட்கள் மூன்று பேர் இரண்டு கார்களில் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த போது அவன் தோட்டத்தின் முன் இரும்புக் கதவு பாதி திறந்து கிடந்தது. மறுபாதிக் கதவின் கீழ்க்கம்பிகளில் ஒன்றைப் பிடித்தபடி அவன் கீழே உட்கார்ந்திருந்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தால் கூட இப்படியா தெருவிளக்கின் ஒளியில் அலட்சியமாக உட்கார்ந்திருப்பது என்று நினைத்தவனாய் முதல் காரில் இருந்து இறங்கியவன் அவனை நெருங்கினான்.


கார்கள் வந்து நின்ற சத்தம் கூட அந்தக் கொலைகாரன் கவனத்தைத் திருப்பவில்லை.  அதனால் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த முதல் கார் ஆசாமி குனிந்து அந்தக் கொலைகாரனை உற்றுப்பார்த்தான். பின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். மூச்சில்லை. அப்போது தான் அந்தக் கொலைகாரன் இறந்து போயிருந்தது உறைத்தது. திகைப்புடன் அவனை முதல் கார் ஆசாமி கூர்ந்து பார்த்தான். உடலில் எந்தக் காயமும் இல்லை. முகத்தில் மட்டும் எதையோ பார்த்து பயந்த பீதி பிரதானமாகத் தெரிந்தது. ஏதோ அதிர்ச்சியில் இறந்து போயிருக்க வேண்டும்....


இரண்டாவது காரில் இருந்து ஒருவன் தான் இறங்கி வந்தான். “என்னாச்சு”


“செத்துட்டான்”


“எப்படி?”


“தெரியல. முகத்தப் பார்த்தா ஏதோ பயந்து போன மாதிரி தெரியுது”


“பயமா, இவனுக்கா....” என்று சொன்ன இரண்டாவது கார் ஆசாமி அருகில் வந்து இறந்தவனை உற்றுப்பார்த்தான். அவன் சொன்னது உண்மை என்று தெரிந்தது. தேர்ந்தெடுக்கும் போதே பயமோ, இரக்கமோ, தயக்கமோ இல்லாத ஆளாகப்பார்த்துத் தான் அவர்கள் அவனைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட அவனையே இந்தக் கோலத்தில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருகணம் இரண்டாவது கார் ஆசாமி பேச்சிழந்து போனான்.


“என்ன செய்யலாம்?” முதல் கார் ஆசாமி கேட்டான்.


ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும், இந்த சூழ்நிலையை சிறிதும் எதிர்பாராமலிருந்தாலும் கூட இரண்டாவது கார் ஆசாமி தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவன் அமைதியாகச் சொன்னான். “முதலில் இவனுக்கு நாம் கொடுத்த செல்லை எடு”


முதல் கார் ஆசாமி இறந்தவன் சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டு செல் போன்களை வெளியே எடுத்தான். ஒன்று கொலைகாரனுடையது. இன்னொன்று அவர்கள் அவனுக்குக் கொடுத்தது.


“நம் செல்போனில் வேறு யாரிடமாவது எங்காவது பேசியிருக்கிறானான்னு பார்”


முதல் கார் ஆசாமி தாங்கள் கொடுத்திருந்த செல்போனில் ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “நம்மிடம் மட்டும் தான் பேசியிருக்கான். வேற எந்தக் காலும் இதுக்கும் வரல. இவனை என்ன பண்ணறது?”


”இவனை சுவரின் மறைவுக்கு இழுத்து விடு. வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி இருந்தால் போதும்”


கவனமாக பிணத்தை சுவர்ப்பக்கம் அவன் இழுத்துப் போட்ட பிறகு இரண்டாம் கார் ஆசாமி சொன்னான். “போய் உள்ளே என்ன நிலவரம்னு பார்க்கலாம் வா”


அவர்கள் இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள்.  நடக்கும் போது முதல் கார் ஆசாமி கேட்டான். “அவன் பயத்துலயே செத்திருப்பானோ? என்ன ஆகியிருந்திருக்கும்?”


”தெரியல. எனக்கு சந்தேகம், நாம சொன்னதையும் மீறி அந்த பூஜையறைக்குள்ளே நுழைஞ்சிருக்கலாம். ஏதாவது செய்திருக்கலாம்.....”


“அது அவ்வளவு அபாயமானதா?”


இரண்டாம் கார் ஆசாமி பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் வீட்டை எட்டி விட்டிருந்தார்கள். சர்வ ஜாக்கிரதையுடன் வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். பத்மாசனத்தோடே கவிழ்ந்திருந்த முதியவர் பிணம் அவர்களை வெறித்துப் பார்த்தது. முகத்தில் இரத்த வரிகள் இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த அமைதியையும் அவரைக் கொன்றவன் முகத்தில் இருந்த பீதியையும் ஒப்பிடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை....


“இதென்ன இந்த ஆள் பத்மாசனத்துலயே இருக்கார். இது இயல்பா தெரியலயே...” முதல் கார் ஆசாமிக்குத் தன் திகைப்பை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.


“உன்னால கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியுமா?” என்று குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன இரண்டாம் கார் ஆசாமி ஹாலை ஆராய்ந்தான். கிழவரின் பிணத்தைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை.


உள்ளே அவன் நுழைந்தான். படபடக்கும் இதயத்துடன் பூஜையறையைப் பார்த்தான். சிவலிங்கம் இன்னும் அங்கேயே இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து முதல் கார் ஆசாமியும் உள்ளே நுழைந்தான்.


இரண்டாம் கார் ஆசாமி எச்சரித்தான். “எதையும் தொட்டுடாதே. கவனமா இரு”


முதல் கார் ஆசாமி தலையசைத்தான். இருவரும் மெல்ல பூஜையறைக்கு இரண்டடி தள்ளியே நின்று பூஜையறையை நோட்டமிட்டார்கள். பூஜையறையில் திருநீறு டப்பா கவிழ்ந்து திருநீறு தரையில் கொட்டிக் கிடந்தது. ஹாலின் விளக்கொளியில் அதற்கு மேல் பூஜையறையில் வேறு அசாதாரணமானதாக எதுவும் தெரியவில்லை.


இரண்டாம் கார் ஆசாமி தன் கைக்குட்டையை எடுத்து அதைப்பிடித்தபடி ஹாலில் இருந்த பூஜையறை ஸ்விட்ச்சைப் போட்டான். ஓரடி தூரத்தில் இருந்தே பூஜையறையை மேலும் ஆராய்ந்தான். அப்போது தான் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார, திருவாசகப் புத்தகங்கள் சரிந்து கிடந்தது தெரிந்தது.


“முட்டாள்... முட்டாள்.... அவன் உள்ளே போயிருக்கிறான்” இரண்டாம் கார் ஆசாமி ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவன் அடுத்தவனிடம் சொன்னான். “அவனை வரச் சொல்...”


முதல் கார் ஆசாமி அவசரமாகப் போனான். வெளியே இருந்த முதல் காரின் பின் கதவைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தவனை “வாங்க” என்றான்.


இடுப்பில் ஈரத்துண்டை கச்சை கட்டிக் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் காரில் இருந்து இறங்கினான். அவன் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் இருந்தான். அவன் நெற்றியிலும், கைகளிலும், புஜங்களிலும், நெஞ்சிலும் திருநீறு பூசி இருந்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.


இருவரும் உள்ளே போனார்கள். அந்த இளைஞன் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் சீரான வேகத்தில் சென்றான். வீட்டினுள்ளே நுழையும் போது முதியவரின் பிணத்தைப் பார்க்க நேர்ந்த போது மட்டும் அவன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவனையும் அந்த விலகாத பத்மாசனம் திகைப்பை அளித்திருக்க வேண்டும்.


தாமதமாவதை சகிக்க முடியாத இரண்டாம் கார் ஆசாமி அவனுக்கு பூஜையறையைக் கை நீட்டி காண்பித்தான். அந்த இளைஞன் திகைப்பில் இருந்து மீண்டு பூஜையறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான். மந்திரங்களை உச்சரித்தபடியே அந்த சிலையை அவன் பயபக்தியுடன் தொட்டு வணங்கினான். ஏதோ ஒரு லேசான மின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அவனுக்கு உடல் சிலிர்த்தது.


அதைக் கவனித்த முதல் கார் ஆசாமி “என்ன?” என்று சற்றே பயத்துடன் கேட்டான்.


அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. இரண்டாம் கார் ஆசாமி தன் சகாவிடம் அவசரமாய் தாழ்ந்த குரலில் எச்சரித்தான். “அவன் கவனம் இப்போது எதிலும் திரும்பக்கூடாது. நீ எதுவும் கேட்காதே....பேசாமலிரு”


முதல் கார் ஆசாமி அதற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.


அந்த இளைஞன் கை கூப்பி ஒரு முறை வணங்கி விட்டு அந்த சிவலிங்கத்தைத் தூக்கினான். அந்த சிவலிங்கம் மிக அதிக கனம் இல்லை. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தான் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே வந்தான். அவன் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தன.


அவன் வேகமாக சிவலிங்கத்துடன் வெளியே செல்ல மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் கையில் இருக்கும் சிவலிங்கம் கனத்துக் கொண்டே போவது போல் உணர்ந்தான். அவன் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டிருந்தான். ” அந்த சிவலிங்கம் இங்கு வந்து சேர்வதற்குள் நீ எதிர்பாராத எத்தனையோ நடக்கலாம். சிவலிங்கம் உன் கையில் இருக்கும் போது பிரளயமே ஆனாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்வதை மட்டும் நீ நிறுத்தி விடக்கூடாது. இது தான் உன் பாதுகாப்பு கவசம். அதே போல சிவலிங்கத்தைக் கீழே போட்டு விடவும் கூடாது....”


அந்த நள்ளிரவுக் குளிரிலும் அந்த இளைஞனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிவலிங்கம் அநியாயத்திற்கு எடை கூடிக்கொண்டு போனது. ஏதோ ஒரு அசௌகரியத்தை உடலெல்லாம் அவன் உணர்ந்தான். முன்பே அறிவுறுத்தப்பட்டபடி அவன் அந்த மந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, காரை வந்தடைந்தான்.


முதல் காரின் பின் சீட்டில் முன்பே புதிய பட்டுத்துணி ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது.  அதில் மிகக் கவனமாய் அந்த சிவலிங்கத்தை வைத்து விட்டு அதன் அருகில் அந்த இளைஞன் தானும் அமர்ந்தான். இறக்கி வைத்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கார் வேகமாகக் கிளம்பியது.


முதல் காரைத் தொடர்ந்தே இரண்டாவது காரும் வேகமாகத் தொடர்ந்தது. இரண்டாவது கார் ஆசாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். வந்த வேலை நன்றாகவே முடிந்து விட்டது. அந்தக் கொலைகாரன் தான் தேவை இல்லாமல் உயிரை விட்டு விட்டான்.... அவன் எப்படி இறந்தான்? பயமே அறிந்திராத அவன் எதைப்பார்த்து பயந்தான்? கிழவரைக் கொன்று விட்டு தெரிவித்த போது கூட அவன் சாதாரணமாகத் தானே இருந்தான்! பிறகு ஏதோ ஒரு உந்துதலில் அவன் பூஜையறைக்குள் நுழைந்திருக்க வேண்டும். பின் என்ன ஆகியிருந்திருக்கும்?... மனதின் நீண்ட கேள்விகள் செல் போன் சத்தத்தில் அறுபட்டன. செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ”முதல் கார் ஆசாமி தான் பேசினான். “ஏ.சி போட்டுக்கூட இவனுக்கு அதிகமா வியர்க்குது. ஏதோ ஜுரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இவ்வளவு நேரமா மந்திரத்தை மெல்ல உச்சரிச்சிட்டு இருந்தவன் சத்தமாய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான்.  ஏதோ பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி தோணுது. என்ன செய்யறது?” அவன் குரலில் பயம் தொனித்தது.


இரண்டாம் கார் ஆசாமி காதில் அந்த இளைஞன் சத்தமாகச் சொல்லும் மந்திரம் நன்றாகவே கேட்டது. இரண்டாம் கார் ஆசாமி அமைதியாகச் சொன்னான். “இதுல நாம் செய்யறதுக்கு எதுவுமில்லை. சீக்கிரமா அந்த சிலையை அங்கே சேர்த்திட்டா போதும். மீதியை அவர் பார்த்துக்குவார். நீ கண்டுக்காதே”


ஆனால் முதல் கார் ஆசாமிக்கு அப்படி இருக்க முடியவில்லை. நடக்கிற எதுவுமே இயல்பானதாக இல்லை.... ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.


(தொடரும்)

                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 364
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பரம(ன்) ரகசியம்
« Reply #2 on: August 14, 2012, 02:58:59 AM »
பரம(ன்) ரகசியம்! - 3
மிக நேசித்த மனிதர்களின் மரணத்தைக் காண்பது பரமேஸ்வரனுக்கு அறுபத்தி எட்டாண்டு கால வாழ்க்கையில் புதியதொன்றும் அல்ல. பதினேழு வயதில் தந்தை, முப்பத்தெட்டு வயதில் மனைவி, அறுபத்தி ஏழு வயதில் மகன் என மூவர் மரணத்தை சந்தித்திருக்கிறார். மூன்றுமே அகால மரணங்கள் தான். அதற்கெல்லாம் யாரையும் அவரால் குற்றப்படுத்த முடியவில்லை. விதி என்று தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் அண்ணன் பசுபதியின் மரணம் கொலையாக இருந்ததால் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தகவல் கிடைத்ததும் தளர்ந்து போய் அப்படியே இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார். மருமகனையும் பேரனையும் அழைத்து அங்கு நடக்க வேண்டியதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பிய அவருக்கு அண்ணனின் மரணத்தைத் தாயிடம் எப்படி சொல்வது என்ற கவலை மலை போல் மனதை அழுத்தியது.


ஆனந்தவல்லிக்கு எண்பத்தி எட்டு வயது ஆகியிருந்த போதும் உடல் ஆரோக்கியமோ, மன உறுதியோ குறைந்திருக்கவில்லை. என்றாலும் மூத்த மகன் மரணத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று அவர் பயப்பட்டார்.  கடிகாரத்தைப் பார்த்தார். மணி காலை ஏழு. அம்மா ஐந்தரை மணிக்கே எழும் வழக்கம் உடையவள். இன்னேரம் குளித்து விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தினசரிப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம்பித்திருப்பாள்... கனத்த இதயத்துடன் தாயின் அறைக்குள் நுழைந்தார்.


அவர் கணித்த படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி மகனைப் பார்த்ததும் புன்னகை பூத்தாள்.
அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளைப் பட்டுப்புடவை அல்லாமல் வேறெந்த புடவை அணிந்தும் அவர் பார்த்ததில்லை. அவள் உடலில் சுமார் முப்பது பவுன்களுக்கு குறைந்து நகைகள் இல்லாமல் இருந்ததில்லை. ஒரு நாள் பார்த்த நகையை பதினைந்து நாட்களாவது கழியாமல் மறு முறை அவள் உடலில் பார்க்க முடியாது. அதே போல் ஒரு நாள் அணிந்த பட்டுப்புடவை சில மாதங்கள் கழியாமல் அவள் அணிவதில்லை....


“என்னடா வாக்கிங் போகலையா?”  அவள் கேட்டாள்.


“இல்லம்மா”


“ஏண்டா உடம்பு சரியில்லையா. என்னவோ மாதிரி இருக்கே?”


பரமேஸ்வரன் சொல்ல வாய் வராமல் தவித்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தயக்கமில்லாமல் செய்ய வேண்டியதைச் செய்ய முடிந்த அவளுடைய இளைய மகனின் தயக்கம் ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்த அவள் செய்தித்தாளை கீழே வைத்தாள்.


“யாருக்கு என்ன ஆச்சு”


எந்தத் தாயும் கேட்க விரும்பாத செய்தியை அவர் அவளுக்கு எப்படிச் சொல்வார்? மெல்ல வந்து அவள் அருகே அமர்ந்து அவள் கைகளைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க பரமேஸ்வரன் சொன்னார். “அண்ணா காலமாயிட்டான்மா”


ஆனந்தவல்லி இடி விழுந்தது போல் உணர்ந்தாள். நம்ப முடியாதவளாய் சில வினாடிகள் இருந்து விட்டு கேட்டாள். “என்ன ஆச்சு?” அவள் குரல் உடைந்திருந்தது.


அவர் சுருக்கமாக அண்ணன் கொலை செய்யப்பட்டார் என்பதைச் சொன்னார். அவரையே வெறித்துப் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்த அவள் கண்களில் நீர் நிறைந்தது.


அவளுக்கு இன்னமும் கேட்டதை நம்ப முடியவில்லை. “யாருக்குமே எந்த தீங்கையும் மனசால கூட அவன் நினைச்சதில்லையேடா. நமக்கெல்லாமாவது ஆகாத ஆள் இருப்பாங்க. அவனுக்கு அப்படி யாரும் இருக்க முடியாதேடா... பின்ன எப்படிடா?” அவள் நம்ப முடியாமல் கேட்டாள்.


அவள் சொன்னது போல பசுபதி புழு பூச்சிக்குக் கூட தீங்கு எண்ணத் தெரியாதவர். கோடிக்கணக்கான சொத்துக்களை தன் தம்பிக்கே எழுதிக் கொடுத்து விட்டு “எனக்கு இது போதும்” என்று ஒரு சிவலிங்கத்தோடு தோட்ட வீட்டில் ஒதுங்கியவர். ஒரு துறவியைப் போல வாழ்ந்தவர். எதையும் யாரிடமும் எதிர்பாராதவர். அன்பைத் தவிர வேறு ஒரு தன்மை அறியாதவர். அவரைக் கொலை செய்ய யாருக்கு எப்படி மனம் வந்தது? அந்தக் கேள்விக்குப் பதில் அந்த காணாமல் போன சிவலிங்கத்தில் இருப்பதாகத் தான் அவருக்குத் தோன்றியது. அதைத் தாயிடம் அவர் வாய் விட்டுச் சொன்னார். அவள் அதிர்ச்சியும் துக்கமும் மனதை மலையாய் அழுத்த சிலையாய் சமைந்தாள்....


அந்த சிவலிங்கம் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் அவர்கள் குடும்பத்திடம் வந்து சேர்ந்தது. பரமேஸ்வரனின் மூதாதையர்கள் சிவனின் பரம பக்தர்கள். பெரும் பணக்காரரான பரமேஸ்வரனின் தந்தையும் சிவபக்தர்கள், சிவன் கோயில்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவரிடம் பல சைவ அடியார்கள் வந்து செல்வது வழக்கம். இரண்டரை ஏக்கர் தோட்ட வீட்டை பரமேஸ்வரனின் தந்தை அவர்கள் வந்து தங்கிச் செல்வதற்காகவே ஒதுக்கி வைத்திருந்தார். அப்படித்தான் ஒரு நடுத்தர வயது சித்தர் அறுபது வருடங்களுக்கு முன் அந்தத் தோட்ட வீட்டிற்கு வந்தார். அந்த சித்தர் தன்னுடன் ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்திருந்தார். அப்போது பசுபதிக்கு வயது பத்து. பரமேஸ்வரனுக்கு வயது எட்டு. பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் தந்தை அந்த சித்தரை தரிசிக்கச் சென்றார்.


அந்த சித்தர் தோற்றத்தில் கருத்து மெலிந்து இருந்தாலும் அவர் கண்களில் இருந்த ஜொலிப்பு இப்போதும் பரமேஸ்வரனுக்கு நினைவிருக்கிறது. நேராக அவர் கண்களை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருப்பது முடியாத காரியம் தான். ஆனால் சிறுவன் பசுபதி அந்த சித்தரைப் பார்த்தபடியே வசீகரப்பட்டபடி நிறைய நேரம் நின்றிருந்தான். அவர்கள் தந்தை கிளம்பிய போது பசுபதி திரும்ப வீட்டுக்கு வர மறுத்தான். அன்று அங்கேயே தங்க விருப்பம் தெரிவித்தான். அந்த சித்தரும் அவர்கள் தந்தையிடம் அவன் இருக்கட்டுமே என்று சொல்ல, அவருக்கு மகன் நடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் சம்மதித்து இளைய மகனை மட்டும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.


அன்று அவருக்கு மனைவி ஆனந்தவல்லியிடம் இருந்து கிடைத்த அர்ச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆன்மிக விஷயங்களில் அவரளவு ஈடுபாடு இல்லாத ஆனந்தவல்லி மூத்த மகன் நடவடிக்கையில் ஏதோ ஒரு ஆபத்தை உணர்ந்தாள். அவள் உணர்ந்ததை உறுதிப்படுத்துகிற மாதிரி மறு நாள் வீடு திரும்பிய பசுபதி நிறைய மாறியிருந்தான். விளையாட்டிலும், சாப்பிடுவதிலும், மற்றவர்களுடன் பழகுவதிலும் ஆர்வம் அவனுக்குப் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. அந்த சித்தர் இரண்டு நாளில் தோட்ட வீட்டை விட்டுப் போயிருந்தாலும் சிவலிங்கத்தை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றிருந்தார்.


பசுபதி அடிக்கடி தோட்ட வீட்டுக்குச் சென்று அந்த சிவலிங்கத்துடன் அதிகப் பொழுதைக் கழிக்க ஆரம்பித்தான். ஆனந்தவல்லி தன் மகனை மாற்ற தன்னால் ஆன அத்தனையும் செய்து பார்த்தாள். ஆனால் பசுபதி மாறியவன் மாறியவன் தான். ஒரு நாள் அங்கு போனவன் வீடு திரும்பவே இல்லை. இனி தனக்கு அது தான் வீடு என்றான். கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கையில் அதற்குப் பாத்தியப்பட்டவன் இப்படி மாறுவதில் சிறிதும் விருப்பமில்லாத ஆனந்தவல்லி ஒரு நாள் தோட்ட வீட்டில் மகன் முன்னிலையில் உண்ணா விரதம் கூட இருந்து பார்த்தாள். தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்தியும் பார்த்தாள். தானிறந்தால் கொள்ளி போடக் கூட அவன் வரக்கூடாது என்று சொன்னாள். தாயை இரக்கத்துடன் பசுபதி பார்த்தானே ஒழிய அசைந்து கொடுக்கவில்லை.


ஆனந்தவல்லி தோற்றுப் போய் வீடு திரும்பினாள். பசுபதி அடுத்ததாக அவர்கள் வீட்டுக்குத் திரும்பியது தந்தையின் மரணத்தின் போது தான். தந்தையின் அந்திமக் கிரியைகள் முடிந்த பின் மறுபடி தோட்ட வீட்டுக்குச் சென்ற பசுபதி பின் கடைசி வரை அங்கிருந்து வேறங்கும் சென்றதில்லை. அவர் வாழ்க்கை ஒரு துறவியினுடையதாக இருந்தது. எல்லா சொத்துக்களையும் தம்பியின் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். அதற்குப் பின் வீட்டின் எந்த சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கெடுத்தது இல்லை.


ஆனால் அண்ணன் மீது அதீத பாசம் கொண்டிருந்த பரமேஸ்வரன் மட்டும் மாதமொரு முறையாவது அண்ணனைப் போய் சந்திப்பார். சில முறை தன் மனைவியையும், குழந்தைகளையும் உடன் அழைத்துப் போயிருக்கிறார் என்றாலும் அதிகம் அவர் போனது தனியாகத் தான். அப்போதெல்லாம் பசுபதி பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் சகோதரனைச் சென்று சந்தித்து விட்டுத் திரும்பும் போதெல்லாம் மன அமைதியை பரமேஸ்வரன் உணர்ந்தார். ஏதாவது பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அண்ணனிடம் மனம் விட்டு பரமேஸ்வரன் சொல்வார். பசுபதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சில சமயங்களில் ஓரிரு சொற்கள் பதிலாக வரும். பல சமயங்களில் மௌனமே பதிலாக அமையும். ஆனாலும் வீடு திரும்பும் போது பரமேஸ்வரன் தெளிவடைந்து இருப்பார்.


ஆரம்பத்தில் இளைய மகன் போய் விட்டு வரும் போதெல்லாம் தன்னைப் பற்றி மூத்த மகன் விசாரித்தானா என்றறிய ஆனந்தவல்லி ஆர்வம் காட்டினாள். இல்லை என்பதை அறிந்த போது அவள் முகத்தில் பரவிய சோகம் பரமேஸ்வரனுக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. இயல்பிலேயே சுயமரியாதை, கௌரவம், தன்மானம் ஆகியவை அதிகம் உள்ள அவள் மூத்த மகனின் பாராமுகத்தில் மனமுடைந்து போனாலும் வெளியே காட்டிக் கொண்டதில்லை. பின் மூத்த மகனைப் பற்றி விசாரித்ததும் இல்லை, பேசியதும் இல்லை. எத்தனையோ முறை அண்ணனைப் பார்க்கச் செல்லும் போது தாயையும் உடன் வர பரமேஸ்வரன் அழைத்திருக்கிறார். ஆனால் அவள் போனதில்லை. மகனே ஆனாலும் சுய கௌரவத்தை விட்டுப் போய் பார்ப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.


இரண்டு மாதங்களுக்கு முன் பரமேஸ்வரன் சென்றிருந்த போது முதல் முறையாக பசுபதி கேட்டார். “அம்மா எப்படி இருக்கா?”


பரமேஸ்வரனிற்கு ஆச்சரியமாக இருந்தது. “நல்லா இருக்கா”


“ஒரு தடவை கூட்டிட்டு வா. பார்க்கணும் போல இருக்கு”


வீட்டுக்கு வந்த பின் பரமேஸ்வரன் தாயிடம் சொன்ன போது அவள் அப்படியே உறைந்து போனது போல் இருந்தது. கனவா நனவா என்பது போல கண்களை கசக்கி விழித்துப் பார்த்தாள். நிஜம் தான் என்றானவுடன் அவள் கண்களில் அவளையும் மீறி நீர் கோர்த்தது. அவன் கூப்பிட்டவுடனே போய்த்தான் ஆக வேண்டுமா என்று அவள் யோசித்தது போல இருந்தது. ஆனாலும் மறு நாளே பரமேஸ்வரனுடன் தோட்ட வீட்டுக்குச் சென்றாள்.


மூத்த மகனைப் பார்த்தவுடன் அத்தனை ஆண்டுகள் சுமந்து கொண்டு இருந்த உள்ளக் குமுறலை எல்லாம் ஆனந்தவல்லி கொட்டித் தீர்த்தாள். அம்மா என்று ஒருத்தி இருப்பது உனக்கு இப்போது தானா ஞாபகம் வந்தது என்று ஆரம்பித்தவள் அரை மணி நேரம் அழுகையுடனும் ஆத்திரத்துடனும் மகனை வாயிற்கு வந்தபடி திட்டித் தீர்த்தாள். ஒரு குழந்தையின் புலம்பலைக் கேட்டுக் கொள்வது போல புன்னகையுடன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்த பசுபதி அவள் ஓய்ந்த பிறகு ஒரு அன்பான மகனாய் இயல்பாய் பேசினார். தாயின் உடல்நலம் விசாரித்தார். அவள் தன் உடல் உபாதைகளைச் சொன்ன போது சாப்பிட வேண்டிய காய்கறிகள், உணவுகளையும், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் உணவுகளையும் சொன்னார். ஆனந்தவல்லி சொன்ன குடும்ப விஷயங்களைப் பொறுமையோடு கேட்டார். இரண்டு மணி நேரம் அங்கு இருந்து விட்டுக் கிளம்பிய போது ஆனந்தவல்லி மூத்த மகனிடம் கறாராகச் சொன்னாள். “இனிமே நான் வர மாட்டேன். அம்மா வேணும்னா நீ தான் என்னைப் பார்க்க வரணும்”


பதிலாக பசுபதி புன்னகைக்க மட்டுமே செய்தார். ஆனால் அதுவே தாயிற்கும் மகனிற்கும் இடையேயான கடைசி சந்திப்பாக அமைந்து விட்டது.....


பரமேஸ்வரன் எழுந்தார். ”அம்மா அண்ணா பிணத்தை இங்கே கொண்டு வரணுமா?”


“வேண்டாம்.” யோசிக்காமல் வந்தது பதில்.


”அண்ணாவை கடைசியா ஒரு தடவை அங்கே வந்து பார்க்கறியா?” அவர் தயக்கத்துடன் கேட்டார்.


”அவனை அந்தக் கோலத்துல பார்க்கற சக்திய கடவுள் தரலைடா. நீ போ.... போய் ஆக வேண்டியதைப் பார்...” என்று கரகரத்த குரலில் சொன்ன ஆனந்தவல்லி இளைய மகன் அறையிலிருந்து வெளியேறிய பிறகு வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்...


அண்ணனின் கடைசி காரியங்களைக் கவனிக்க விரைந்த பரமேஸ்வரன் மனதில் அந்த சிவலிங்கத்தைக் குறித்து சிறு வயதிலிருந்து கேள்விப்பட்ட சில விஷயங்கள் நினைவுக்கு வர ஆரம்பித்தன. எல்லாம் நிஜமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது.


“சேச்சே... இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இதெல்லாம் என்ன முட்டாள் தனம்” என்று
அறிவு சொன்னது.


அப்படியென்றால் ஏன் இந்தக் கொலை? ஏன் அந்த சிவலிங்கம் களவாடப்பட்டது? என்று மனம் கேட்டது.


அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.(தொடரும்)
                    

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 364
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பரம(ன்) ரகசியம்
« Reply #3 on: August 14, 2012, 03:00:25 AM »
பரம(ன்) ரகசியம்! - 4மயானத்தில் இருந்து திரும்பி வந்து நிறைய நேரம் ஆன பின்னும் கூட சகோதரன் மரணத்தை ஜீரணிக்க முடியாதவராய் பரமேஸ்வரன் தவித்தார். நள்ளிரவாகி விட்ட போதும் அவருக்கு உறக்கம் வரவில்லை.


பசுபதியின் மரணம் நிறைய கேள்விக்குறிகளை எழுப்பி இருந்தது. பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு, கைதாகி, சமீபத்தில் சிறையிலிருந்து தப்பி வந்த
ஒரு கொலையாளியின் பிணம் அந்தத் தோட்ட வீட்டின் உள்ளே மதில்சுவர் அருகே விழுந்து கிடந்தது பல குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது. இன்னும் பிரேத பரிசோதனை மற்றும் கைரேகைத் தடய அறிக்கைகள் எல்லாம் வர வேண்டி இருக்கிறது என்றாலும் அவன் தான் பசுபதியைக் கொன்றிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தில் தான் போலீசார் இருந்தார்கள். ஆனால் அவனை யாரும் கொன்ற அறிகுறிகள் இல்லை. அவன் எப்படி இறந்தான் என்பதை இனி வரும் பரிசோதனை முடிவுகள் தான் சொல்ல வேண்டும். அவன் முகத்தில் தெரிந்த பயம் தான் போலீசாரை ஆச்சரியப்படுத்தியது போல் இருந்தது. அவனை அறிந்த போலீசார் பயம் என்பது அவன் அறியாத உணர்ச்சி என்றார்கள். 


அதே போல் போலீசாரை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் பசுபதியின் மரணத்திலும் கலையாத பத்மாசனம். பசுபதியைப் பற்றி அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். எல்லா விதமான யோகாசனங்களும் முறையாக அவர் அறிந்திருந்தார் என்றும் கடைசி வரை அவற்றை செய்து கொண்டிருந்தார் என்று மட்டும் பரமேஸ்வரன் சொன்னார்.


அடுத்தபடியாக போலீசாரின் கேள்விகள் அதிகம் சிவலிங்கத்தைச் சுற்றியே இருந்தன. அந்த சிவலிங்கம் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம் போன்ற விலையுயர்ந்த லிங்கமா, இல்லை லிங்கத்திற்குள்ளே ஏதாவது விலை உயர்ந்தவற்றை மறைத்து வைத்திருந்தீர்களா, இல்லை விலை மதிப்பற்ற வரலாற்று சிறப்பு மிக்க புராதன லிங்கமா என்றெல்லாம் கேட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை என்று அவர் சொன்ன போது போலீசாருக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது அவர்கள் முகபாவத்திலேயே தெரிந்தது. இறந்தவருக்கு எதிரிகளும் கிடையாது, களவு போன பொருள் விலையுயர்ந்ததும் கிடையாது என்றால் கொலை நிகழக் காரணமே இல்லை என்று அவர்கள் நினைத்ததில் பரமேஸ்வரனுக்குத் தவறு சொல்லத் தோன்றவில்லை....


”இன்னும் தூங்கலையா”- தாயின் குரல் கேட்டு பரமேஸ்வரன் திரும்பினார். ஆனந்தவல்லி அவர் அறைக் கதவைப் பிடித்தபடி நின்றிருந்தாள். இந்த ஒரே நாளில் மேலும் பல வருடங்கள் கூடியது போலத் தளர்ந்து தெரிந்தாள்.


“தூக்கம் வரலம்மா. வா, உட்கார்”


ஆனந்தவல்லி அவருடைய படுக்கையில் மெல்ல வந்து உட்கார்ந்தாள். கண்ணீரோடு சொன்னாள். “அவனுக்கு சாகப்போகிறது முதல்லயே தெரிஞ்சுடுச்சு. அதான் என்னை ஒரு தடவை பார்க்கணும்னு சொல்லி இருக்கான். அவனை அன்னைக்கு மட்டும் நான் போய் பார்க்காம இருந்திருந்தா இன்னைக்கு என்னையே என்னால மன்னிச்சிருக்க முடியாது. என் குழந்தை எனக்கு அந்தக் குறை இருந்துடக்கூடாதுன்னு தான் கூப்பிட்டு பேசியிருக்கான்”


பரமேஸ்வரனுக்கும் அப்படியே தோன்றியது. இப்போதும் அம்மாவின் திட்டுகளை எல்லாம் மலர்ச்சி சிறிதும் குறையாத முகத்தோடு அண்ணன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது அவர் மனதில் பசுமையாக நினைவில் நின்றது. தாயைப் பார்த்தார். அவளும் மூத்த மகனுடன் கழித்த அந்தக் கடைசி கணங்களை மனதில் ஒருமுறை வாழ்ந்து பார்த்தது போல் இருந்தது. கண்கள் ஈரமாக அவள் பிறகு மெல்லக் கேட்டாள். ”போலீஸ் என்ன சொல்றாங்க?”


”அந்த சிவலிங்கத்திற்காகத் தான் இது நடந்திருக்கணும்னு நினைக்கிறாங்க”


சிவலிங்கத்தைப் பற்றி சொன்னவுடனேயே ஆனந்தவல்லி மௌனமானாள். அம்மா ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த பரமேஸ்வரன் சிறிது நேரம் பொறுத்திருந்து விட்டுக் கேட்டார்.


“அந்த சிவலிங்கத்தைப் பத்தி நாம நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். அதெல்லாம் உண்மையாய் இருக்குமாம்மா?”


அந்தக் கேள்வியே அவளை சங்கடப்படுத்தியது போல் இருந்தது. சிறிது நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டு “தெரியலையேடா....” என்ற ஆனந்தவல்லி ஆதங்கத்துடன் சொன்னாள். “அந்த சிவலிங்கத்தை ஏதாவது கோயிலுக்குக் கொடுக்காமல் அந்த சித்தர் இங்கே கொண்டு வந்தது என்ன கர்மத்துக்குன்னு தெரியல. அதுவே அவனுக்கு எமனாயிடுச்சு பார்த்தியா”


பரமேஸ்வரன் மெல்ல சொன்னார். “அம்மா அந்த சித்தரை இன்னைக்கு நம்ம தோட்ட வீட்டுல நான் பார்த்த மாதிரி இருந்துச்சு”


ஆனந்தவல்லிக்கு மயிர் கூச்செறிந்தது. “என்னடா சொல்றே”


“அண்ணா பிணத்தைப் பார்க்க வந்த கூட்டத்தோட கூட்டமா அவரும் நின்னிருந்த மாதிரி இருந்துச்சு”


ஆனந்தவல்லி திகைப்புடன் மகனைப் பார்த்தாள். பின் சந்தேகத்தோடு சொன்னாள். “நீ பார்த்தது வேற யாரையாவது இருக்கும். நீ அந்த ஆளை சின்னதுல பார்த்தது. இப்ப எப்படி உனக்கு சரியா ஞாபகம் இருக்கும். ”


பரமேஸ்வரன் யோசித்தபடியே சொன்னார். “பார்த்தது சின்ன வயசுலன்னாலும் அவரோட கண்களை மறக்க முடியாதும்மா. பிரகாசமா ஜொலிக்கற அந்தக் கண்களை மறுபடி இன்னைக்கு பார்த்த மாதிரி இருந்துச்சு. அந்த நேரமா பார்த்து மேயர் துக்கம் விசாரிக்க வந்தார். மேயர் கிட்ட பேசிட்டு திரும்பிப் பார்த்தா அவர் இருக்கல…”


ஆனந்தவல்லி திகைப்பு மாறாமல் சொன்னாள். “அந்த ஆள் இப்பவும் உயிரோட இருக்க முடியுமாடா? அப்பவே அந்த ஆளுக்கு வயசு கம்மியா இருக்கல. இப்ப இருந்தா அவருக்கு வயசு நூறுக்கு மேல இருக்குமேடா?”


“சித்தர்களுக்கு எல்லாம் ஆயுசு அதிகமா இருக்கும்னு சொல்றாங்க”


பரமேஸ்வரனின் கண்கள் மிகக்கூர்மையானவை. அவர் பார்த்தது போல் இருந்தது என்றால் பார்த்தே தான் இருக்க வேண்டும். ஆழ்ந்த யோசனையுடன் மகனைக் கேட்டாள். “அந்த ஆள் எதுக்குடா இப்ப வரணும்?”


“தெரியலைம்மா”


ஆரம்பத்திலிருந்தே தன் கணவர் ஆதரவு கொடுத்து வந்த சாமியார் கூட்டத்தை ஆனந்தவல்லியால் சகிக்க முடிந்ததில்லை. அதுவும் மூத்த மகன் துறவி போலவே வாழ ஆரம்பித்த பிறகு அது போன்ற ஆட்கள் தன் வீட்டுக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நுழையக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னவள் அவள். மீறி நடந்தால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கையும் செய்திருந்ததால் அவள் கணவர் அவள் சொன்னதை சோதித்துப் பார்க்க விரும்பவில்லை. அதன் பின் எந்த சிவனடியாரும் அந்த வீட்டுக்குள் நுழைந்ததில்லை.


ஆனால் ஆனந்தவல்லியால் அதை நினைத்து சந்தோஷப்பட முடிந்ததில்லை. மூத்த மகனை இழந்தது இழந்தது தானே. முதலெல்லாம் மகன் எப்படியானாலும் அவன் வழியில் சந்தோஷமாக இருக்கிறான், நன்றாக இருக்கிறான் என்கிற திருப்தியாவது அவளுக்கு இருந்தது. ஆனால் இப்போதோ முழுவதுமாகப் பறி கொடுத்ததை எண்ணுகையில் அவள் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.


ஆனந்தவல்லி அந்த சித்தர் அன்று வந்ததையும் இன்று வந்ததையும் எண்ணிப்பார்த்து விட்டு கண்கலங்க விரக்தியுடன் சொன்னாள். “அறுபது வருஷங்களுக்கு முன்னால் அந்த ஆள் வந்தப்ப என் மகன் வீட்டை விட்டுப் போனான். இப்ப வந்தப்ப அவன் உலகத்தை விட்டே போயிட்டான்...”பரமேஸ்வரனும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்திருந்தார். அறுபது வருடத்திற்கு முன்பு வந்த சித்தர் இத்தனை காலம் கழித்து மறுபடி பசுபதியின் மரணத்திற்குப் பின் வந்திருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றி இருந்தது. ஆனால் யோசித்துப் பார்த்த போது அப்படியே இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது. அதைத் தாயிடம் வெளிப்படையாகச் சொன்னார்.


”அறுபது வருஷங்களுக்கு முன்னாலயும், இப்பவும் அவரைப் பார்த்திருக்கோம். அதனால தெரிஞ்சுது.  ஆனா அந்த சித்தர் இடையில பல தடவை அண்ணன் கிட்ட வந்து போயிருக்கலாம். தோட்ட வீட்டுல நடக்கற முழுசும் நமக்கு தெரியறதில்லையேம்மா”


ஆனந்தவல்லி திகைப்புடன் மகனைக் கேட்டாள். “என்னடா சொல்றே?”ஒரு கோயிலுக்குள்ள சூழலில் தான் அந்த வீடு இருந்தது. “ஓம் நமச்சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரம் ஒலித்தகடின் மூலம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கம் பல விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்தது. வில்வ இலைகளும், மலர்களும் அதை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஊதுபத்தியின் நறுமணம் வீடெல்லாம் நிரம்பி இருந்தது. பேரமைதி அங்கே நிலவியது.


ஆனால் அதைத் தூக்கிக் கொண்டு வந்து அங்கே வைத்த இளைஞன் தான் அமைதியிழந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். இன்னமும் அந்த மந்திரத்தை அவன் உச்சரித்துக் கொண்டு தான் இருந்தான். அது தான் அவனை இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் இப்போது உறுதியாக நம்பினான். அவன் உடல் இப்போதும் அனலாய் கொதிக்கிறது. பாரஸ்டமால் மாத்திரைகள் பல விழுங்கியும் அவன் ஜூரம் குறைகிற மாதிரி தெரியவில்லை.


அந்த சிவலிங்கம் சாதாரண சிவலிங்கம் அல்ல என்பதை அவன் அனுபவம் சொன்னது. அந்த லிங்கத்தை ஆரம்பத்தில் அந்த தோட்ட வீட்டில் இருந்து தூக்கிய போது அவன் உணர்ந்த கனமே வேறு. அவன் காரில் அதை வைத்த போது உணர்ந்த கனமே வேறு. வினாடிக்கு வினாடி எடை கூடியது போல் இருந்தது. அதே போல காரில் இருந்து அதை மறுபடியும் எடுத்து இங்கே அந்த பூஜையறையில் வைப்பதற்குள் அவன் நிறையவே திணறி விட்டான். நல்ல தேக பலத்துடன் இருந்த அவனுக்கு இந்த சிவலிங்கத்தின் ஆரம்ப கனத்தைப் போல மூன்று மடங்கு சுலபமாகத் தூக்க முடியும். அப்படி இருக்கையில் கடைசியாக எடுக்க பெரும்பாடு பட்டது திகைப்பாகவே இருந்தது.


இரண்டு பிணங்களை இயற்கையில்லாத விதத்தில் பார்த்தது தான் அவனை பயமுறுத்தி விட்டதாக இரண்டு கார்களில் வந்தவர்களும் பேசிக் கொண்டது அவன் காதில் விழாமல் இல்லை. அதில் உண்மையும் இருந்தது. ஆனால் அதையும் மீறி அவனைப் பயமுறுத்தியது அந்த சிவலிங்கம். அந்த சிவலிங்கத்தின் கனம் அவன் கற்பனையல்ல, பிரமையும் அல்ல என்று அவன் உறுதியாக நம்பினான். ஏனென்றால் இப்போதும் அவன் கைகள் பயங்கரமாக வலித்தன. அந்த சிவலிங்கத்திற்கு ஏதாவது சேதம் ஆனால் கொன்று விடுவோம் என்று அவர்கள் பயமுறுத்தி இருந்தார்கள்.  எங்கே கீழே போட்டு உடைத்து விடுவோமோ என்று அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் வரை பயந்தபடியே தான் அவனிருந்தான்.


அதற்கு அபிஷேக பூஜை செய்ய ஆரம்பித்த போது உடலில் லேசாக எரிச்சலும்  ஆரம்பித்தது அவன் திகிலை அதிகரித்திருந்தது. அதையெல்லாம் இப்போது நினைத்து பார்த்து பிரயோஜனமில்லை என்று எண்ணிக் கொண்டான். ஏழ்மையின் அடித்தளத்தில் இருந்த அவனுக்கு அந்த சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து அங்கே வைக்க இருபதாயிரம் ரூபாயும், தினசரி பூஜை செய்ய தினமும் ஆயிரம் ரூபாயும் தருவதாகச் சொன்ன போது சுலபமாக பணம் வருகிறதே என்று தான் அவன் ஏமாந்து ஒத்துக் கொண்டு விட்டான்.  மாதம் இரண்டாயிரம் சம்பாதிப்பதே பெரிய கஷ்டமான விஷயமாக இருந்த போது இத்தனை பணம் சம்பாதிக்க எத்தனை காலம் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று அவன் கணக்குப் போட்டதன் விளைவு தான் இத்தனைக்கும் காரணம்.


இப்போது ஆழம் தெரியாமல் இதில் இறங்கி விட்டோமோ என்ற சந்தேகம் அவனுள் பலப்பட ஆரம்பித்தது. காரில் அவனை அழைத்து வந்தவர்கள் இது போன்ற பிரச்சினைகளை அறிந்து வைத்திருந்து தானோ என்னவோ சிவலிங்கத்திலிருந்து சில அடிகள் தூரத்திலேயே தான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இருந்தார்கள். அவர்கள் இருவரும் இந்த சிவலிங்கத்தைத் தூக்க சக்தி இல்லாதவர்கள் அல்ல. அப்படி இருந்தும் அவர்கள் அவனுக்கு அந்த அளவு பணம் கொடுத்து இதை எல்லாம் செய்யச் சொல்லி இருப்பது அதில் உள்ள ஆபத்தை எண்ணித் தான் போல இருக்கிறது. அது ஆபத்தா  பேராபத்தா...? நல்ல திடகாத்திரமான அந்தக் கொலையாளி முகத்தில் தெரிந்த பீதியும், அவன் செத்துக் கிடந்த விதத்தையும் மறுபடி நினைக்க நினைக்க அவன் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாற ஆரம்பித்தன. மாரடைப்பு வந்து தானும் செத்து விடுவோமோ என்று அவன் பயப்பட ஆரம்பித்தான்.

(தொடரும்)
                    

Tags: