Author Topic: சுயம் தொலைத்தேன்  (Read 665 times)

Offline இளஞ்செழியன்

சுயம் தொலைத்தேன்
« on: February 04, 2021, 10:08:11 AM »
ஒரு விட்டுக் கொடுத்தலில்
ஒரு கையேந்துதலில்
ஒரு தோற்றுப்போதலில்
பிரியங்கள் பிசுபிசுத்திடும்
ஒரு நேசத்தால் ஆட்கொண்டிருக்கிறேன்

என்னை நிலைதிறுத்திடும் தேவைகள் நேர்த்திடாத
என்னைத் தேடிடும் நிலையெழுப்பிடாத

மனமுருக்கும் ஓர் கவிதையாய்
புலன் மயக்கும் வாசனையாய்
உயிர் தழுவும் உரையாடலாய்
அக்கறையின் அதீதங்களாய்
எனை ஆட்கொள்ளும்
உன் நேசத்தின் வாயிலோரம்
என் சுயங்கள் உதிர்த்தே வீற்றிருக்கிறேன்

ஹார்மோன்கள், புறத்தோற்றம்,
பொருத்தம், இணக்கம்,பெருமிதம் இளமை,புணர்ச்சி
என காரணங்களுக்குள்
அடைபடா காதலுக்கு
நீ என்னும் ஓர் தகுதி போதுமானதாகிவிடும்

மழையென பொழியும்
நேசத்தின் இடைவெளிகளில்
உன் சுயம் தேடி நீயாகிறாய்..
காரணங்கள் தேடி
கோபங்களாய் கதவடைக்கிறாய்
பதில் செய்யும் கதவடைப்புகளில்
நிஜமிழக்கிறேன்.

என் நிஜங்களை நான் அறிவேன்
அதில் நீக்கமற நிறைந்திருக்கிறாய் நீ
உன்னில் நிறைவுறும் என்னை
நீயும் அறிவாய் தானே?.

மன்னிப்பின்
அழைப்பு மொழிகள் கொண்டேனும்
உன் வாயில் நுழைகையில்
சுயம் கரைய நிஜம் மீட்கிறேன்

நம்மை தேடிடும் நிலையெழுப்பிடாத
ஒரு நேசத்தில்
சுயம் தொலைத்தலை
என்னவென்று பெயர் சொல்வது சகி!
பிழைகளோடு ஆனவன்...