ஜென் துளிகள்
ஆசையின் வலி....
ஒரு காலத்தில், கல் உடைப்பவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அன்றாடம், அவர் மலைகளின் உச்சிக்குக் கல் உடைப்பதற்காகச் செல்வார். அவர் கல் உடைக்கும் பணியைப் பாடியபடி உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் அவர் தன்னிடம் இருப்பதைவிட அதிகமாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை. அதனால், அவர் உலகத்தைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. ஒருநாள், ஒரு செல்வந்தரின் மாளிகைக்குப் பணியாற்றுவதற்காக அழைக்கப்பட்டார்.
அந்த மாளிகையின் கம்பீரத்தைப் பார்த்த அவர், முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் ஆசையின் வலியை உணர்ந்தார். “நான் மட்டும் செல்வந்தனாக இருந்திருந்தால்! இப்போது கஷ்டப்படுவதுபோல், வியர்வையில் கடினமாக உழைக்க வேண்டியிருந் திருக்காது” என்று பெருமூச்சுவிட்டார். “உன் விருப்பம் நிறைவேறட்டும். இனிமேல், நீ ஆசைப்படுவதெல்லாம் உனக்குக் கிடைக்கும்” என்ற ஒரு குரலைக் கேட்டதும் கல் உடைப்பவர் ஆச்சரியப்பட்டுப்போனார். பணியை முடித்து, மாலை அவர் தன் குடிசைக்குத் திரும்பினார். அவருடைய குடிசை இருந்த இடத்தில் அவர் ஆசைப்பட்ட கம்பீரமான மாளிகை வீற்றிருந்த். அவர் வாயடைத்துப்போனார். கல் உடைக்கும் பணியை நிறுத்திவிட்டு, அவர் செல்வச் செழிப்பான வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினார்.
வெப்பம் அதிகமாக இருந்த ஒரு நாளில், அவர் தன் மாளிகையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். அப்போது ஓர் அரசர், தன் படை பரிவாரங்களுடன் பல்லக்கில் சென்றுகொண்டிருந்தார். உடனே, “நான் மட்டும் அரசராக இருந்தால், எப்படிக் குளுமை நிறைந்த அரச பல்லக்கில் அமர்ந்தபடி செல்வேன்” என்று அவர் நினைத்தார். அவரது விருப்பம் அடுத்த நொடியில் நிறைவேறியது. அவர் அரச பல்லக்கில் அரசராகச் சென்றுகொண்டிருந்தார்.
ஆனால், அவர் நினைத்த மாதிரி, அரச பல்லக்கு முற்றிலும் குளுமையுடன் இல்லை. அவர் நினைத்ததைவிட அதிக வெப்பம் நிறைந்ததாக அது இருந்தது. பல்லக்கின் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்த அவர், சூரியனின் ஆற்றலைப் பார்த்து ஆச்சரியத்துக்குள்ளானார். சூரியனின் வெப்பம் எப்படி இவ்வளவு வலிமையான பல்லக்கிலும் ஊடுருவுகிறது என்று நினைத்தார். “நான் மட்டும் சூரியனாக இருந்திருந்தால்” என்று நினைத்தார். மீண்டும் அவர் ஆசை நிறைவேறியது. அவர் சூரியனாக மாறி, ஒளிக் கதிர்களையும், வெப்பக் கதிர்களையும் பிரபஞ்சத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
சிலகாலம் எல்லாமே நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. ஒரு மழைநாளில், அவர் அடர்த்தியான மேகங்களுக்குள்ளிருந்து வெளியே வர முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. அதனால் அவர் தன்னை மேகமாக மாற்றிக்கொண்டு, சூரியனை மறைக்கும் தன் ஆற்றலைக் கொண்டாடத் தொடங்கினார். எல்லாம் அவர் தன்னை மழையாக மாற்றிக்கொள்ளும்வரைதான். ஆனால், மழையாகப் பெருக்கெடுத்து ஓடும்போது ஒரு பெரும்பாறை அவர் ஓட்டத்தைத் தடுத்தது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் பாறையைச் சுற்றிக்கொண்டு தன் ஓட்டத்தைத் தொடர வேண்டியிருந்தது.
“என்ன? ஒரு பாறை என்னைவிட ஆற்றல்வாய்ந்ததாக இருப்பதா? அப்படியென்றால், நான் பாறையாக விரும்புகிறேன்” என்று நினைத்தார். அதனால், இப்போது அவர் மலையில் ஒரு பெரும்பாறையாக நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தன் தோற்றத்தை ரசிப்பதற்குக்கூட நேரம் அளிக்கப்படவில்லை. அதற்குள் ஒரு வித்தியாசமான சத்தத்தைத் தன் காலடியில் கேட்டார்.
கீழே பார்த்தால், ஒரு சிறிய மனிதன் அங்கே அமர்ந்து, அவரின் பாதங்களிலிருந்து கற்களை உடைத்துகொண்டிருந்தான். “என்ன? இவ்வளவு பலவீனமான ஒரு மனிதன் என்னைப் போன்ற ஒரு மாபெரும் பாறையைவிட ஆற்றல்நிறைந்தவனா? நான் மனிதனாக வேண்டும்!” என்று நினைத்தார். மீண்டும் அவர் ஒரு கல் உடைப்பவராக மலை ஏறிக்கொண்டிருந்தார். வியர்வையுடன், கடின உழைப்புடன் தன் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால், மனத்துக்குள் முன்பைப் போலவே பாடல் நிறைந்திருந்தது. ஏனென்றால், தான் யாராக இருக்கிறோம் என்பதைத் தெரிந்திருந்தார்,
தன்னிடம் இருப்பதை வைத்து வாழ்வதற்கான மனநிறைவு அவரிடம் இருந்தது..