அன்று ஓர் நாள்,
நான் யார், நான் எப்படி இங்கே, என யோசிக்க தொடங்கினேன்...
இன்று இப்பொழுது, நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றினை மறந்து..
சிறுக சிறுக.. என் நினைவுகளை பின்னே தள்ளினேன்..
அந்த ஓர் நாள்,
நான் இவ்வுலகை முதல் முதலாய் பார்த்த நாள்...
விழி மூடி, சுவாசம் அடக்கி பலநாள் காத்திருப்பு கலைந்து...
மெல்ல மெல்ல.. புவி காற்று என்மீது பட புல்லரித்தேன்..
அது ஓர் நாள்,
யார் யாரோ என்னை உற்று உற்று பார்க்க..
யார் யாரோ என்னை தொட்டு தொட்டு வியக்க ..
நானோ எதுவும் அறியாதவளாய்.. மிரண்டேன்..
அதே நாளில்,
விழிகளை லேசாக சுழற்றி சுழற்றி பார்த்தேன்...
இது என்ன இடம்.. நான் ஏன் இங்கே வந்தேன்...
என்னை சுற்றி ஏன்.. இப்படி ஒரு கூட்டம் வியந்தேன்..
அந்த நேரம்,
கூட்டங்கள் அதிகமாக அதிகமாக.. பயம் கவ்வியது..
நான் இருந்ததோ.. ஒரு குட்டி அறை போலிருந்தது..
என் நெஞ்சிலும் விழிகளிலும் பயம் தொற்றி கொண்டது..
அதே பொழுது,
அதிகமானோர் வர.. வர.. என் சிறு அறையும் இருளானது ..
நானும் என் சிரசை.. உள்ளே இழுத்து கொண்டேன்..
அதிக பீதியில் ஓஓ... என கரைய தொடங்கினேன்...
அப்பொழுது,
பதட்டம் ஒரு பக்கம்.. பயம் ஒரு பக்கம்,.. பசி ஒரு பக்கம்..
என் சிறிய இதழ்களும் பலகோணங்களில் நெளிந்தது...
அப்படியே ஒரு ஓரமாக ஒளிந்து கண் மூடி கொண்டேன்..
அச்சமயம்,
ஒரு நறுமணம், என் நாசிகள் துளைக்க கண் திறந்தேன்..
இரு கைகள் என் அருகில்.... ஒரு கரம் என தலை கோரா..
மற்றும் ஒரு கரம் என் தோள்களை தட்டி தடவி கொடுத்தது...
அதே நாளில்,
எனை வாரியெத்தாள்.. அவளோடு என்னை அணைத்து.கொண்டாள்
நானும் அவள் கரங்களை. என் பிஞ்சு விரல்களால் பிடித்தேன்..
கரைகளும் அழுக்கும் படிந்த என் முகத்தை.. முகர்ந்து முத்தமிட்டாள்...
அந்நேரம்,
"இவ்வளவு அழகான குழந்தை.. எந்த பாதகி.. குப்பையில் வீசினாளோ .."
ஊர் என்ன சொன்னாலும்... யாரை யார் வசைபாடினாலும்..
என் பிறப்பும் என் தொட்டிலும்.. இந்த குப்பை தொட்டியே..
அதே நொடியில்,
கடவுள் அனுப்பிய தேவதையின் தோள் மீது சாய்ந்து..
அமைதியாக அந்த பசும் நிற தொட்டியை பார்த்தேன்... அதுவும்..
போய்வா மகளே.. போய்வா.. என அமைதியாக சிரித்தது...