FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 02, 2023, 11:38:30 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: Forum on December 02, 2023, 11:38:30 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 330

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/330.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: Ishaa on December 03, 2023, 03:29:26 AM
இன்று அல்ல
நேற்று அல்ல
பல வருடமாய்
நடக்குறது இந்த அநியாயம்!

நிலைத்தை இழந்தோம்
சொத்தை இழந்தோம்
படிப்பை இழந்தோம்
வேலையை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
வீரர்களை இழந்தோம்
இழப்பதற்கு நம் உயிர் மட்டுமே  மிச்சம்
அதுவும் கூட விட்டு வைக்கப்படவில்லை..

குழந்தைகள் ஒளிந்து விளையாடும் வயதில்
அணுகுண்டுக்கு பயந்து ஒளியும் நிலை .
சிரித்து குடும்பத்தோடு வாழும் வயதில்
தனியாய் நின்று தவிக்கிறார்கள்.

கைகளில் மையின் கறை ஆக வேண்டிய நேரத்தில்
இப்போது இரத்த கரையோடு நிற்கிறார்கள் மாணவர்கள் .

பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் பெற்றோர்
தம் கரங்களால் இன்று கொள்ளி வைக்கும் பரிதாபம்....

தொலைந்த வாழ்க்கை போர் முடிந்தபின் கிடைக்க போவது இல்லை .
வாழும் வாழ்க்கை நரகம் ஆகுது
வாழ்ந்த நினைவுகள் என்றும்
தீராத வடுவாகுது....

இது எல்லாம் எதற்காக?
மண்ணுக்கு!
மண்ணை எடுத்துக்கொள்.
எங்களை வாழ விடு

இன்னும் பல மதங்கள் உருவானாலும்
உலகில் நிலைப்பது ஒரு மதமாம்
அதுவே மனிதமாம்!!!

யார் உயிர் போனாலும்
ஆண்டியோ அரசனோ
கடைசியில் மிஞ்சுவது என்னவோ
ஒரு பிடி சாம்பலே...

உயிருக்கு பயந்து
உயிர் காக்க இடம் பெயர்ந்து
வாழ்ந்த ஊரை விட்டு
பிறந்த மண்ணை விட்டு
வாழும் மனிதனின் பெயர் அகதி
அவர்களின் அடையாளத்தையும்
அழிக்க முடியாது
அவர்களின் வரலாற்றையும்
அழிக்க முடியாது....

உலகத்தில் நியாயம் கேட்டால் .
வாயை மூடி வாழ கற்று கொடுத்தது இந்த உலகம் .
அகதிகளுக்காய் கதவை திறக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: VenMaThI on December 03, 2023, 07:05:44 AM






ஆடி அடங்கும் வாழ்க்கையடா , ஆறடி நிலமே சொந்தமடா
சொன்னவன் அன்று அறியவில்லை .
நிலத்தில் மக்கும் உடலும் ஓர் நாள்
நெருப்பிலிட்ட சாம்பலாய் நீரில் கரையுமென்று ....

குழந்தையின் கண் முன்
பெற்றோர் பிணமாய் விழுவதும்
பாசமாய் வளர்த்த பிள்ளை
பெற்றோரின் கரங்களில் சடலமாய் விழுவதும் ..

காலத்தின் கொடுமையாய்
நாம் கண்ணால் காணும் நிலை ...
எங்கோ எவனோ பிழைக்க
எத்துனை உயிர்களடா நீங்கள் பறிக்க ...

பால் மனம் மாறாப்பிள்ளையும் கூட
பரிதவிக்குதடா உங்கள் போர் முறையால்
பாதுகாக்க வந்த வீரனும் கூட
பொசுங்கி விட்டானடா உங்கள் சுயநலத்தால்

தாயின் தாலாட்டு கேட்ட காதுகளோ இன்று
விண்ணதிரும் வெடி சத்தம் கேக்குது
பறிவோடு பிற உயிரைப்பார்த்த கண்களோ இன்று
பூமி பிளக்கும் பீரங்கியின் முழக்கம் காணுது ...

மண்ணுக்காய் உன் மக்களை அழித்தாய்
தேசிய கீதமாய் இன்று..மக்களின்
கூக்குறளே கேக்குதடா....
" சொந்த மண்ணில் கூட இன்று
சிரித்து வாழ முடியல
ஆடம்பர வாழ்க்கை வேண்டாம்
அமைதியான வாழ்க்கை போதும்...."

இறைவன் அளித்த இயற்கையோ நீ
அனுபவிக்கவேயின்றி அழிக்க அல்ல
அவன் படைத்த உயிர்களும் கூட
வாழவேயன்றி உன்னால் வீழ அல்ல

வீழும் உயிர் அனைத்தும்
விதையாய் மாறும்
விதை அனைத்தும் ஒரு நாள்
விருட்சமாய் மாறும் ...

வாழ்க்கையே ஓர் போர்க்களம் அதை நாம் வாழ்ந்து தான் பாக்கணும்

சொன்னான் ஒருவன் அந்நாளில்
அதை எதிர் கொள்கிறோம் நாமும் இந்நாளில்
சொல்லி சென்றவன் மாண்டு விட்டான்
அவன் வார்த்தையை மட்டும் நம் மனதில் பதித்துவிட்டான் ..

வாழ்க்கை போரில் போராடுவோம்
ஆயுதமாய் அணுசக்தி கொண்டல்ல
அமைதியாய் அன்பைக்கொண்டு
வாழ்வோம் வாழ்விப்போம்.....
மனிதனாய் பிறந்துவிட்டோம்
சிறிதேனும் மனிதம் காப்போம் ....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: அனோத் on December 03, 2023, 01:41:01 PM

மனிதமதை மதிகெட்ட மனிதன் அழிக்கும்
  ஆயத்தங்களின் பெயர் தான் யுத்தம் .......
விதிவிலக்கின்றி விஷமங்களின் வாயுக்களை
    வீதிதோறும் விட்டெரியும் வீணர்களால் யுத்தம் ..........
சதிகொண்ட அரசுகளால் சாமானிய வாழ்வு
     சரமாரியாய் சரிவது தான் யுத்தம்..........

சகோதர உணர்வின்றி அகோரத் தாண்டவங்களால்
      மாண்டு மானிடம் அழிவது தான் யுத்தம் .....
ஆறாய்ப்  பெருகும் இரத்த தெறிப்புகளால்
   ஆறாத வடுவாய் உரத்த உணர்வுகள் தான் யுத்தம் ......

உதிரம் கொடுத்த தாயும் தந்தையும்
   உதிரும் பூக்களாய் மண்ணில் சரிவதுதான் யுத்தம்...

அவர்கள் பெற்றடுத்த மழலை குண்டதன் மழையில்
   புழுவாய் தவிப்பது தான் யுத்தம்......

போலி நட்பாடும் நண்பர்களால் யுத்தம் ......

அறத்தைக் கொன்று அரசமைப்பதால் யுத்தம்.....

சமத்துவம் மீறும் சம்பாத்தியங்களால் இந்த யுத்தம்   ......

அன்பைக் கொன்று வன்மம் காப்பது யுத்தம்.....

இறுதியில் அனாதையாக அரவணைக்க யாருமின்றி
 தொடரும் பயணத்தின் பெயர்தான் இந்த

இறுதி யுத்தம் ............

ஏன் இந்த யுத்தம் ?

பாலகன் என்ன செய்வான் பாவம் ?
   மீண்டுமோர் யுத்தம் தொடர ஏன் இந்தச் சாபம் ?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: KS Saravanan on December 03, 2023, 03:58:29 PM
அறிவுதனை மனதில் தீயிட்டு
அறம் எனும் பெயரினிலே
ஆற்றலை உலகிற்கு நிலை நாட்ட
இன்பம் கொண்ட மாந்தர்களே,
ஈனப்பிறவிகளே...!
உங்களில் அனைவருக்கும்
ஊனமில்லா மனங்களை
எட்டா கனியாக்கிய
ஏட்டு சுரைக்காயாய் இருக்கும் இறைவனுக்கும்
ஐந்தறிவா...?  இது சாபமே..!

ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் கனவுகளுடன்
இடிந்த சுவர்களோடு
மரணித்த மனிதநேயம்
ஒன்றாய் கூடிய பிணங்கள்
உயிர்தவனுக்காக பிராத்தனை
செய்யும் அவலநிலை...
தண்ணீரெல்லாம் செந்நீராய் மாற்றி
பிண்டம் வைத்து இந்த
அண்டம் காக்க தேவையில்லை...!

ஆயுதமே ஆயுதமே,
ஒட்டுமொத்த ஆயுதமே...!
செவி சாய்த்து கேட்டுக்கொள்...மறந்துவிடாதே...
உன்னையும் கூறு கூறாய் கொன்று குவித்து
மரணித்த புதைந்து போன மனிதநேயத்தை
இப்பூவுலகில் புதியதொரு உருவமாய்
மீண்டு வரும் யூகம் தொலைவில் இல்லை...!

ஆளுமையே ஆளுமையே,
அழிய போகும் ஆளுமையே...
நீ விதையாய் விதைத்த ஆயுதம் எல்லாம்
விஷமாய் மாறி ஒரு நாள் உன்னையும்
அழிக்கும் நினைவில் கொள்...ஆளுமையே...!

புதியதாய் பிறந்த பூக்களையும்
புரியாத புதிராய் புழுதியில்
புதைத்ததின் வினையின் பலனை......இறைவனே...!!!
உனக்கும்
படைத்து பங்கிட வேண்டுமே..!

இது சாபமல்ல, சாப விமோட்சனம்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: TiNu on December 03, 2023, 07:41:01 PM


குளிரும் அதிகாலை.. வைகறை பொழுது..
அனைவரும் அயர்ந்து.. உறங்கும் நேரம்..
ஏதோ.. ஒரு மெல்லிய வெடி.. ஓசை -என்
காதுகளில் கேட்க, விழித்தேன்.. எழுந்தேன்..

விழித்ததும்.. ஒன்றும் புரியாமல் திகைத்தேன்..
என்னுடைய அழகு அழகு .. பொம்மைகள்
அடுக்கிவைத்த என் குட்டி அலமாரி எங்கே?
என் Tom & Cherry சுவரோவியம் எங்கே?

வீட்டின் வெளிப்புறம் ஒரே இரைச்சல்..
இந்த சத்தத்தை நாம் கேட்டதில்லையே.
இல்லை இல்லை.. நம்ம பழகிய ஓசையே..
படுத்துக்கொண்டே ஆழமாக யோசித்தேன்..

ஆ.. ஆ... இது நம்ம ஆம்புலென்ஸ் பொம்மை..
அதே சத்தம் தான்.. அதே..அதே.. அப்படியானால் 
நம் பொம்மை... வெளியே போய்விட்டதோ..
எப்படி?... குடுகுடுவென எழுத்து கொண்டேன்.

நம்ம அம்புலன்ஸ்?.. எப்படி? வெளியே?.....
ஐயோ.. பசி வேறு வயிற்றை கிள்ளுதே....
"அம்மா. அம்மா"...தொட்டிலில் இருந்து 
மெல்ல தரையில் இறங்கினேன்.. "அம்மா"..

தரையெல்லாம் ஒரே தூசு.. ஒரே கல்லு..     
நடக்க முடியவில்லை.. தடுக்கி விழுதேன்..
பசி.. "அம்மா அம்மா".. அம்மா தேடினேன்..
யாரும் காணுமே.. வீடும் மாறிவிட்டதே..

மெல்ல மெல்ல நடந்து வெளியே வந்தேன்..
சூரியன் ஒளிக்கீற்று.. பளீரென தெரிய கண்கூசியது.
அது என்ன.. பஞ்சு மிட்டாய்? ஐய்.. ஆ உஉ ஓஒ 
கைகள் கொட்டியவாறே, அதன் அருகில் போனேன்...

சுள்ளென சுட்டது.. அருகே போகமுடியவில்லை..
இது என்ன? அப்பா.. அப்பா.. அப்பா காணும்..
என்னோட ஆம்புலன்ஸ் பொம்மைக்காணுமே..
நம்ம வீடு காணுமே... அம்மா காணுமே...

"அம்மா... அம்மா..." "அப்பா.. அப்பா..."
தட்டு தடுமாறி விழுந்து எழுந்து நடந்தேன்..
 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: Minaaz on December 03, 2023, 08:59:57 PM
FTC க்கு எனது நன்றிகள்.. இந்த வார நிழல் படத்துக்கு... நெடுநாளாக இப்படி ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற அவா.. இன்று நிறைவேறியது..


மதிப்பற்று போன உயிர்களை கொண்ட வினோத உலகம் 

சலனமற்ற இரவில் திடிக்கிடும் சப்தம் வெறியர்களின் பெரு மூச்சலைகளாய் அணு குண்டுகள்... அணு அணுவாக வதைத்திட..


இம் மண்ணில் பிறந்த ஒரே ஒரு தவரிற்காய் பதை பதைத்திடும் பிஞ்சு உள்ளங்கள்..


கண்முன்னே என்ன நடக்கிறது என்று கூட அறிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத மழலைகள்..


'நெருப்பு சுடும் ' என்று அறிந்திராத, பொத்தி வைத்து காத்த பிஞ்சுகள் கொழுந்து விட்டு எரியும் அனல் பிழம்பில் கருகி சாம்பலை கூட அடையாளம் காண முடியாத அவலம்..

 

மழலை மொழி பேசி கொஞ்சல் மொழிகளும் கூச்சல்களும் பெரின்பமாய் கொண்டாடும் வயதில் கூக்குரலும் கதரலும் கேட்க்கும் நிர்ப்பந்தம்...


தன்னோடு பேசி கொண்டிருந்த , விளையாடி கொண்டிருந்த உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிதறிய சதையும் சிந்திய ரத்தமுமாக கண் முன்னே  பார்க்க வேண்டிய கட்டாயம்...


தாயை, பிள்ளையை, கணவனை, மனைவியை, தந்தையை, ஏன் ஒன்றாக வாழ்ந்த ஒரு குடும்பமே இருந்த தடயம் கூட இல்லாமல் தரை மட்டமாக்கிய ஈவிறக்கம் இல்லாத மனித மிருகங்கள்..


என்னதான் வேண்டும் இந்த பினம் திண்ணிகளுக்கு.... ??
என்னதான் சேர்த்து வைத்தாலும் நாம் சேர போவது என்னவோ ஆறடி பூமி தான்.. அதற்குள் எவ்வளவு போராட்டம்..


அடுத்த கணம் தன் உயிர் பிரியக்  கூடும் என்று கூட அறிந்திராத பேதையர்கள், உயிரற்ற பூமிக்காய் உயிருள்ள ஜீவன்களை துச்சம் என எண்ணுவது ஏனோ...??


நிச்சயமாக இவர்கள் இன்னல் படும் தருணம் தொலைவில் இல்லை, இன்று இழக்கும் ஒவ்வொரு உயிரிட்கும் மண்ணிலோ விண்ணிலோ பதில் கூறும் தருணம் வந்தே தீரும்...


இந்த உலகில் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் போதும்.. இனியும் வேண்டாம் இந்த பிழைப்பு..


 ஒவ்வொரு நாளும் அடுத்த நொடி என்ன ஆகுமோ...?? யாரை இழக்க போகிறோமோ..?? என்று வாழும் நரகம் வேண்டாம்... விண்ணுலக சொர்க்க தோட்டத்தில நிம்மதியாக இருங்கள்... நிம்மதியுடன் இருங்கள்... நீதி காணும் நேரம் நிச்சயம் வந்தே தீரும்..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: Vijis on December 03, 2023, 11:08:08 PM
போர் தேவையற்றது
போர் என்று சொன்னாலே
அனைவரும் மனதிலும் பயமும் பதட்டமும் தன் வருகிற்து
முன்பு எல்லாம்
பொன் பொருள்களுக்கு போர் செய்தனர்
ஒரு பெண்ணை
மணம் முடிக்க போர் செய்தனர்
வேறொரு நாட்டை
தன் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றும் போர் தொடுத்தனர்

இப்போது
இந்த மழலை செல்வங்களையும் அளிக்க தொடங்கிவிட்டனர்
இந்த போரின் வரலாறை பார்த்தால்
மக்கள் பட்ட கஷ்டமும்
அவர்கள் சிந்திய ரத்தமும் தன் தெரிகிற்து
தன் குழந்தை தூக்கி முத்தமிட்டு
அணைத்து கொண்ட தாய் தேடுகிறாள்
என் பிள்ளையின் முகம் எங்க என்று
பல கனவுகளோடு செல்லமாய் வளர்க்க நினைத்த
தந்தை தேடுகிறார் என் மார்பில் எட்டி உதைத்த என் பிஞ்சு விரல்கள் எங்க என்று

இவர்களின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்
இனியும் இந்த போர் தேவையற்றது
வாழ்வது ஒரு வாழ்க்கை
அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்
முடிந்த வரை நல்ல எண்களை பரிசளிப்போம்
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை
ஒரு மனிதன் இனொரு மனிதனிக்கு தரும் அன்பை தவிர

நன்றி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: Sun FloweR on December 03, 2023, 11:59:34 PM
நடு நடுங்க வைக்கும் சத்தத்திலே..
கிடுகிடுக்கும் ஓசையிலே...
வாயில் வச்ச பால் டப்பாவும்
எகிறி விழுந்தது வாசலிலே..
கூடவே விழுந்து எழுந்தேன் நானும்..

வானவேடிக்கையா இது?
சிவகாசி பட்டாசின் கைவண்ணமா இது?
அதில் இவ்வளவு புகை வருமா?
தீபாவளி பண்டிகை கூட சில நாள் முன்பு தானே முடிந்தது?
என்னவாக இருக்கும்?

பிள்ளாய் என்ற கதறலும்
மைந்தனே என்ற ஓலமும்
மகனே என்ற கூப்பாடும்
என் செவியை உராய்ந்து செல்கிறதே..
இதில் ஏதோ ஒரு அவலம் தென்படுகிறதே..
இதில் ஏதோ ஒரு துயரம்
தொண்டை கவ்வுகிறதே..

ரத்தமும் சதையும் கருகிய நெடி நாசி வந்து தீண்டுகிறதே...
நான் புரண்டு வளர்ந்த பாதி சுவர்கள் காணவில்லையே..
நான் தவழ்ந்தோடிய தளங்கள்
காணமல் போய்விட்டதே...

ஆமாம் எங்கே எனது தாய்..?
எங்கே எனது தந்தை...?
அதோ என் தாயின் சிகப்பு சேலை தீ பற்றி எரிந்து கிடக்கிறதே...
அதோ என் தந்தையின் கைக் கடிகாரம் உடைந்து கிடக்கிறதே..

யாரிடம் செல்வேன்?
என் தாயன்றி வேறாரும் தெரியாதே?
யாரிடம் சொல்வேன்?
என் தந்தையன்றி வேறாரும் அறியேனே..?

யார் செய்த சதி இது?
யார் செய்த வஞ்சம் இது?
பழிவாங்கும் வயதிலும் நான் இல்லை..
வன்மம் கொள்ளாமலும் நான் விடுவதில்லை..

இன்னுமோர்  அவலம்
நிகழ்ந்திடாமல்
இன்னுமோர் வேதனை
அரங்கேறாமல்
வளர்ந்து நான் கயவர்களை
வேரறுப்பேன்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: Vethanisha on December 04, 2023, 11:35:57 AM
 மனதைச் சுக்குநூறாக்கியப்    புகைபடம்
 
எழுத வேண்டாம் என்றிருந்தேன் மீண்டும்
 இந்தப் படத்தை காணாதிருக்க வேண்டியிருந்தேன்

இருந்தும் சிறு வரிகள் , என் மமதையை  சுட்டிகாட்டிட 

மனிதனாக பிறந்திட்த்தை எண்ணி வருந்திடவா 
 இல்லை
எதோ பிறந்துவிட்டேன் 
ஆனால் 
நல்ல வேளை இங்கே பிறந்திட்டேன் 
என்றெண்ணி பெரு மூச்சு விடவா 


அன்பே அறம் என வாழ்பவள் நான்
பொதுநலவாதி என்று எண்ணியிருந்தேன் எனை
இல்லை
எங்கோ நடக்கிறது எனக்கென்ன என்று என்னும்
சுயநலவாதி நான் 


யாருக்கும் தீங்கிழையேன் யென்ற
பெரும் புத்தி  கொண்டவள்  என எண்ணியிருந்தேன் எனை   
இல்லை 
அங்கே நடக்கும் தீங்கினை வெறும் செய்தியாய்
படிக்கும் சிறு புத்தி கொண்டவள்   நான் 


குடும்பத்திற்காக எதையும் செய்யும்
உள்ளம் கொண்டவள் நான்  என எண்ணியிருந்தேன் எனை
இல்லை
 அங்கே குடும்பத்தை இழந்து தவித்திடும்
குழந்தைகளின் வலி அறியாதவள் நான் 

வான வேடிக்கையை கூட வேடிக்கையை இரசிக்க தெரியாத
வெகுளி என்று எண்ணியிருந்தேன் எனை
 இல்லை
அங்கு வெடிக்குப் பலியாகும் உயிர்களின்
அவலம் புரியாதவள் நான் 

இன்று வரை சிறு காயம் கண்டால் தாயை தேடும் பிள்ளை நான் 

கண்முன்னே குண்டு வெடிப்பு,
உடலெல்லாம் காயம் ,
நடப்பதை அறியா வயது ,
எங்கே ஓடுவான் இனி
அவன் தாயை தேடி

அவன்   

என்னை விட அன்பானவன்
என்னை விட நல்லவன் 
என்னை விட அறமானவன் 
இனி என்ன நடக்குமோ இறைவா நீயே துணை ,
பார்த்துக்கொள் என வேண்டி
மீண்டும் கண்களை  மூடிக்கொண்டேன்

அதே  சுயநலவாதி  நான்

                                     

 



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330
Post by: joker on December 06, 2023, 09:12:35 PM
பத்து மாதம்
சுமந்து தான்
என்  தாய் என்னை
பெற்றாள்

கொஞ்சி கொஞ்சி
தன் மடியில் கிடத்தி
பாலூட்டி வளர்த்திட தான்
அவள் கனவு கண்டிருப்பாள்

நான்
இன்று அழுகிறேன்
என் முன் என் சொந்தங்களின்
உடல் சிதறுவதை
காண்கையில்
அதில்  என் தாயும் இருக்கலாம்

துயரத்தை சொல்லி
அழ கூட யாருமில்லை
என்பது
அனாதையின்
இன்னொரு
துயரம்

வாழ்வில் இழப்பது
பெரிய வலி அல்ல
அதை பகிர்ந்திட கூட
எவருமில்லாதிருப்பது
பெருவலி

மதங்களாலும், இனங்களாலும் ,
பணத்திற்காகவும்
சண்டையிட்டு பரஸ்பரம் கொன்று
மறந்துவிடுகிறீர்கள்
மனிதத்தை

அன்பு
புரிந்துகொள்ளாத இடத்தில்
எஞ்சி இருப்பது
சாபம்

இழந்து இழந்து
துயரம் அனுபவிப்பதை
தவிர எதுவும் எஞ்சப்போவதில்லை

எதுவும் ஓர் நாள் முடிவுக்கு வரும்
என்று உணரும் பக்குவத்தின்
முதல் படி
அமைதி



****Joker***