Author Topic: அதிசய பூவான பிரம்ம கமலத்தை வீட்லயும் வளர்க்கலாம்!!!  (Read 2806 times)

Offline kanmani



பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அந்த மலர் மலரும் போது, நாம் என்ன நினைத்து வேண்டினாலும், அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண இயலும். ஆகவே இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க, ஒரு சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம். இல்லையென்றாலும் அந்த செடிப் பற்றிய சில டிப்ஸ்களை தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அதை கவனமாகப் படித்து, அந்த செடியை வளர்த்துப் பயன் பெறுங்களேன்!!!

பிரம்ம கமலச் செடியை வளர்க்க சில டிப்ஸ்...

இந்த செடி பொதுவாக வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும். அதிலும் அதன் இலைகளைப் பார்த்தால், தட்டையாக மற்றும் தடிமனாக இருக்கும். இதன் தண்டு பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டிருக்கும். மேலும் இதிலிருந்து வரும் பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது.

பிரம்ம கமலச் செடியை குளிர் காலத்திற்கு சற்று முன்னர் வைக்க வேண்டும். அதிலும் இந்த செடி, மிகவும் குளிர்ந்த ஹிமாலயாவில் வளர்வதால், தோட்டத்தில் சற்று குளிர்ந்த இடத்தில் வைத்து வளர்த்தால், மிகவும் நன்றாக வளரும்.

அந்த மலர் வருவதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் படாதவாறு மற்றும் வளமான, பாறை மண்ணில் வைக்க வேண்டும். அதற்காக மிகவும் கடினமான மண்ணை நான் சொல்லவில்லை, மலைப்பிரதேசத்தில் வளர்ந்ததால், சற்று மலை மண்ணாக இருந்தால் நல்லது. அதிலும் மண் தண்ணீரை நன்கு உறிஞ்சுமாறும், சற்று சீரை தேக்கி வைக்குமாறும் இருக்க வேண்டும்.

பிரம்ம கமலம் ஒரு வித காக்டஸ் செடி. இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வற்றி, செடி வாடி இறந்துவிடும்.

இந்த செடி மிகவும் நீளமாக வளராது. இது ஒரு குறுந்தாவரம் தான். மேலும் இது சற்று அதிகமான நீளத்தில் வளர்ந்தால், அதனை வெட்டி தனியாக ஒரு தொட்டியில் வளர்க்கலாம்.

அதிலும் இந்த பிரம்ம கமலம் பொதுவாக இரவிலேயே மலரும் பூ வகையை சேர்ந்தது. சிலசமயங்களில் மாலை நேரத்தில் பூவானது முழுமையாக மலர்ந்துவிடும், இல்லையெனில் இரவு 10 மணிக்கு மேல் தான் முழுமையாக மலரும். ஆகவே அதிர்ஷ்டம் இருந்தால், இந்த செடியை வைத்து மகிழுங்கள். மேலும் இந்த அதிசயப் பூவைப் பற்றிய சிறப்புக்கள் தெரிந்திருந்தால், கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.