Author Topic: தொலைந்தவன் வரைந்த கோலம்  (Read 2897 times)

Offline Anu


வழக்கம் போல் அந்த மாலை நேரத்தில் நானும், நண்பர் தனபாலனும் நடந்து கொண்டிருந்தோம். தார் சாலையில் நடப்பதை தவிர்த்து, அந்த மண் பாதையில் பெரும்பாலும் நடப்போம். மாலை நேரத்தில் அதுவும் வெளிச்சத்தின் மேல் இருள் கசியும் அந்த இனிய மென்மையான பொழுதில் நடப்பது சுகம். நாங்கள் சற்று வேகமாக நடக்கும் இயல்பு கொண்டிருப்பதால், தொடர்ச்சியான பேச்சு இல்லாமல். சீரான இடைவெளி விட்டு பேச்சு, இருவருக்கும் பொதுவான ஒரு தளத்தில் வந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் தொலைவிலிருந்தே கவனித்தேன், ஒரு ஆள் அந்த மண் சாலையின் மையத்தில் அமர்ந்திருந்ததை. என் பார்வைக்கு முதுகு மட்டும் தெரிந்தது. கொஞ்சம் நெருங்கி வரும் போது கவனித்தேன் அது ஒரு வயதான மனிதன், சுமார் 60 வயது இருக்கலாம். மேல்சட்டை எதுவும் இல்லை, உற்றுக் கவனிக்கும் முன்பே, உடையையும், தலையையும் வைத்து உள் மனது அடையாளப்படுத்தியது அது ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனெற்று.

வழக்கமாக இதுபோன்ற மனிதர்களை கடந்து போக மனது மிக எளிதாக பழகிப் போய் விட்டது. முன்தினம் தான் புத்தகத் திருவிழாவில் பெரியார்தாசன் “மனம் அது செம்மையானால்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் மனப்பிறழ்வு, மனநோய் பற்றியும், அதற்கான எளிய சிகிச்சை பற்றியும் அற்புதமாக உரை நிகழ்த்தியிருந்தார். இந்த மனிதனை பார்த்த விநாடி சட்டென நண்பர் பெரியார்தாசன் சொன்ன ஒரு வாசகத்தை நினைவு கூர்ந்தார்.

நடக்கும் வேகத்தைக் குறைக்காமல், சற்று ஒதுங்கி அந்த மனிதனை கடந்தோம். கடக்கும் போது அந்த மனிதன் ஏதோ தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பது கேட்டது அதில் “அப்படியே பண்ணு” என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது. அதற்கு முன், பின் பேசிய வாசகங்கள் புரியவில்லை, என்னவாக இருக்கும் என்று ஒரு விநாடி கூர்ந்து யோசித்தேன். அந்த மனிதன் பரபரப்பாக அந்த மண் தடத்தில் தன் விரலால் எதோ செய்து கொண்டிருந்தார். ஏதாவது எழுதுகிறாரா என ஒரு ஆர்வத்தோடு பார்த்தேன். எழுத்துகள் இல்லை, வெறும் கோடுகள் வளைவுகளும், நெளிவுகளுமாக இருந்தது. தலையை சற்றே சிலுப்பிக்கொண்டு மீண்டும் நடையில் கவனமானேன்.

எப்படி அந்த துர்நாற்றத்தின் அருகே, புழுதியில் அந்த மனிதன் உட்கார முடிகிறது. துர்நாற்றம் சிரமமாக இருக்காதா என மனம் நினைத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனிதனை மறந்தும் போனேன். 25 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நீள் சுற்று வட்டத்தில் நடந்து, அந்த இடத்தை நெருங்கும்போது தெரிந்தது, அந்த மனிதன் இன்னும் அதே இடத்தில் பரபரப்பாக அந்த மண் தடத்தில், தன் விரல்கள் மூலம் இயங்கிக் கொண்டிருப்பது. நண்பரிடம் கேட்டேன் “இந்த மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கும் தானே” அவர் ஒற்றை வார்த்தையில் அழுத்தமாக சொன்னார் “கண்டிப்பாக”. மீண்டும் இருவரிடமும் மவுனம் அடர்த்தியாக ஒட்டிக் கொண்டது.

நெருங்கிய போது கவனித்தேன் அந்த மனிதன் முதல் தடவை பார்த்தபோது இருந்த இடத்தைவிட சில அடி தூரம் தள்ளி அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருந்தார். என்ன கிறுக்கியிருக்கிறார் என்று உற்றுப்பார்த்தேன். மனம் அதிர்ந்தது, அந்த புழுதி மண்ணில் வெறும் கோடுகளும், வளைவுகளும் கொண்டு பூ மாதிரியான ஒரு படத்தை பல முறை அச்சு எடுத்தது போல் ஒரு கோலத்தை மிக அழகாக வரைந்திருந்தார். மிக நுட்பமான கோலம் போன்று அது தெரிந்தது. நண்பரிடம் “கோலத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

சில அடிகள் தூரம் நடந்திருப்போம். மனம் பட படவன துடித்தது, திரும்ப ஓடிப்போய் அந்த மனிதனைப் பாராட்டலாமா என மனது தவித்தது. கொஞ்சம் செயற்கையாக இருக்குமோவென்று முட்டாள் தனமாக எண்ணம் தடைபோட்டது. எது என்னை அந்த இடத்தில் நிற்காமல் என்னை விரட்டியது என மனது குறுக்கும் நெடுக்குமாக பரபரத்தது. அடுத்த சில நிமிடங்களில் மனது முழுக்க அந்த மனிதன் பற்றிய சிந்தனை என்னை கவ்வியது.

யாராக இருக்கும் இந்த மனிதன், இந்த மனிதனின் பெற்றவர்கள் நாம் நம் குழந்தையை வளர்ப்பது போல்தானே வளர்த்திருப்பார்கள். படித்திருப்பாரா? திருமணம் ஆகியிருக்குமா? எதன் காரணமாய் மனநிலை பிறழ்ந்திருக்கும். எந்தக் விநாடியில் இந்த மனிதன் மனிதனிலிருந்து பைத்தியகாரனாக தடம் புரண்டிருப்பான். அது சினிமாவில் காட்டுவது போல் சட்டென ஒரு விநாடியில், மின்னல் போல் நிகழ்ந்திருக்குமா? அல்லது தொடர்ச்சியான பற்பல தோல்விகள், இழப்புகளில் சிறிது சிறிதாக மனது விரிசல் விட்டு சிதறிப் போயிருக்குமோ? அந்த மனப்பிறழ்வு அணைக்கட்டில் கசியும் நீர்போல் மெலிதாக, சீரான இடைவெளியில் நிகழ்ந்திருக்குமா?. எல்லோரிடமும் இருக்கும் இயல்பான காதல், காமம், கோபம், பாசம், ஆசை போன்ற ஏதாவது உணர்வுகள் இவருக்கு இப்போதும் இருக்குமா?

மனநிலை பிறழும் நிலை வரை அவர்களை அவர் என்றொ, அவன் என்றொ அல்லது அவள் என்றொ அழைத்த நாம், மனநிலை பிறழ்ந்த தருணத்திலிருந்து “அது” என்றே அழைக்கிறோமே, ஏன் அவர்களை மனிதனாக பார்க்க முடிவதில்லை. எதன்பொருட்டு சகமனிதனிடமிருந்து இவர்கள் தொலைந்து போகிறார்கள்?.


பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளின் ஓரத்திலும், உணவு விடுதிகளின் அருகிலும் தவறாமல் அவர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனாலும் நம்மால் அவர்களை ஒரு சக மனிதனாக பார்க்க முடிவதில்லையே, அது எதனால்?

எத்தனையோ முறை அவர்களைப் பார்த்திருந்தாலும், அன்று அந்த மனிதனை பார்த்த பின் கேள்விகள் சுனாமியாய் மனதினுள் அடித்தது. எந்தச் சுயநலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கிறது. விடைதேட மனது வெட்கப்பட்டது.

அந்த மண் சாலையில் இவ்வளவு நுணுக்கமாக கிறுக்கப்பட்ட இந்த கோலத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆயுள் இருக்கப் போகிறது. அநேகமாக அந்த மண் தடத்தில் அடுத்து வரப்போகும் நாலு சக்கர வாகனம் வரை தானே!!!???

வாழ்க்கையும் ஒரு கோலம் போலத்தானோ?
« Last Edit: June 04, 2012, 02:31:42 PM by Anu »


Offline Yousuf

Re: தொலைந்தவன் வரைந்த கோலம்
« Reply #1 on: June 04, 2012, 05:20:59 PM »
நிதர்சனமான உண்மை அணு அக்கா!

அன்றாடம் இப்படி பட்ட மனிதர்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் இவர்களை பற்றி சிந்திக்கின்றோமா என்றால் இல்லை.

இது தான் வாழ்க்கை தம் நலத்தை பற்றி என்னும் சுயநல வாதிகளோடு பழகி பழகி நமக்கும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வந்து விட்டதன் விளைவோ இது என்று என்ன தோன்றுகிறது.

நல்ல சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு அணு அக்கா!

நன்றி!


Offline Anu

Re: தொலைந்தவன் வரைந்த கோலம்
« Reply #2 on: June 05, 2012, 01:02:56 PM »
நிதர்சனமான உண்மை அணு அக்கா!

அன்றாடம் இப்படி பட்ட மனிதர்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் இவர்களை பற்றி சிந்திக்கின்றோமா என்றால் இல்லை.

இது தான் வாழ்க்கை தம் நலத்தை பற்றி என்னும் சுயநல வாதிகளோடு பழகி பழகி நமக்கும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வந்து விட்டதன் விளைவோ இது என்று என்ன தோன்றுகிறது.

நல்ல சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு அணு அக்கா!

நன்றி!
Nandri yousuf