FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on February 01, 2013, 05:14:54 AM

Title: மனதும் ஆரோக்கியம் ஆகட்டும்!
Post by: Global Angel on February 01, 2013, 05:14:54 AM
உடல் ஆரோக்கியம் மட்டுமே ஒருவருக்கு போதுமானதல்ல. மனஆரோக்கியமும் முக்கியம். மனதை கண்டபடி ஒடவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளையெல்லாம் மூளைக்குள் திணித்து விட்டு, உடலுக்கு மட்டும் பயிற்சி கொடுப்பது எந்த விதத்திலும் சரியாக இருக்காது.

இம்மாதிரியாக மனதை பாதிக்கும் முதல் விஷயம் எது என்று பட்டியலிட்டால், முதல் இடத்தில் வந்து நிற்பது பொறாமை. தெரிந்தவர்கள் யாராவது உங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தால் அப்போது ஒட்டிக் கொள்கிறது பொறாமை. மற்றவர்களோடு உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் தான் கடைசியில் இந்த பொறாமையை உங்களுக்குள் அனுமதித்து விடுகிறது.

ஏற்றத்தாழ்வு என்பது எப்போதுமே நம்முடன் கலந்துபோன ஒரு விஷயம். இது பணம் படைத்தவர்களிடம் தொடங்கி பிச்சைக்காரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. தனக்கு சமமான பணம் படைத்த ஒருவர் திடீரென புதிதாக ஒரு எஸ்டேட் வாங்கி விட்டால், இந்த பணக்காரர் மனதளவில் சோர்ந்து விடுகிறார். தன் அந்தஸ்தை சுட்டிக்காட்ட அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதிலேயே அவர் நேரம் கரைகிறது. இதில் தன் குடும்பத்தையும் வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களையும் பாடாய்ப்படுத்துபவர்களும் உண்டு.

பொறாமை எந்த அளவுக்கு மனிதனை கொண்டு போகும் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு.

ஒரு பக்தன் அனுதினமும் தன் பிரார்த்தனையில் இறைவனிடம் தனக்கு காட்சி தர வேண்டும் என்றே கேட்டு வந்தான். ஆனால் அடிப்படையில் அவனுக்குள் ஒரு பொறாமை சிந்தனை ஊறிக்கிடந்ததை தெரிந்து கொண்ட இறைவன், அவனை சோதிக்க எண்ணி, ஒருநாள் கனவில் அவனுக்கு தரிசனம் தந்தார். “மகனே… வேண்டுவன கேள்” என்றார்.

பக்தனுக்கு ஆச்சரியம். அதிர்ச்சி. எதிரே இறைவன் காட்சி கொடுத்து `வேண்டுவன கேள்’ என்கிறார். சட்டென எதைக் கேட்பது? எதையாவது கேட்கும்போது மற்ற எதுவும் விடுபட்டுப் போய் விடக்கூடாதே என்ற கவலையில் இறைவன் கேள்விக்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருக்கிறான்.

அவள் குழப்பத்தில் இருப்பதை சுலபத்தில் புரிந்து கொண்ட இறைவன், “மகனே, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நான் அப்படியே தந்து விடுவேன். அதேநேரம் உன் எதிர்வீட்டில் உள்ள ஏகாம்பத்துக்கு நீ கேட்டதை விட இரண்டு மடங்கு கொடுத்து விடுவேன். அதாவது உனக்கு பத்துலட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று நீ கேட்டால் அடுத்த நொடியில் உன் வீட்டில் பத்து லட்சரூபாய் இருக்கும். அதேநேரம் உன் எதிர்வீட்டுக்காரன் வீட்டில் 20 லட்சம் இருக்கும்” என்றார்.

இப்போது பக்தன் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது. எதிர்வீட்டில் இருப்பவைனை விட பொருளாதாரத்தில் வளர்ந்து காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனிடம் பிரார்த்தனைக்கே முன் வந்தான். இப்போதோ இறைவன் அவன் கோரிக்கையின் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று உள்ளுர வருந்தினான்.

இருந்தாலும் வந்திருப்பது இறைவனாயிற்றே. அதனால் அவரிடம் எதையாவது கேட்டுத்தான்ஆக வேண்டும். யோசித்தபோது அவனுக்குள் ஒரு புதிய திட்டம் தோன்றியது. அவனின் ஒரே எதிரியான எதிர்வீட்டு ஏகாம்பரம் தான் கேட்கும் எந்த வரத்தின் மூலமும் தன்னை விட பெரியவன் ஆகிவிடக் கூடாது.

இவன் தாமதிப்பதைக் கண்ட இறைவன், “மகனே…சீக்கிரம் கேள். எனக்கும் உன் போன்ற பக்தர்களை சந்தித்து அவர்கள் கேட்டதை கொடுக்கும் கடமை இருக்கிறது அல்லவா” என்று நினைவூட்டினார்.

இதற்குள் இவனும் என்ன கேட்கலாம் என்று தீர்மானித்து விட்டான். இறைவனிடம், `இறைவா…என் ஒரு கண்ணை குருடாக்கி விடுங்கள். அதுபோதும்’ என்றான்.

இப்போது இறைவனுக்கே அதிர்ச்சி. இந்த பக்தன் நினைத்திருந்தால் கோடிகோடியாய் கேட்டு தன்வாழ்வை வளப் படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அனால் அதுபற்றியெல்லாம் இவன் கேட்காமல், தன்ஒரு கண்ணை குருடாக்கச் சொன்னால் என்னஅர்த்தம்?

இந்த சந்தேகத்தையே இறைவனும் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

`இறைவா…என்னை எல்லாவிதத்திலும் டென்ஷனாக்குவதே அந்த எதிர்வீட்டு ஏகாம்பரம் தான். அப்படியிருக்க, அவன் உங்கள் வரத்தால் என்னை விட பெரியவனாக எப்படி விடுவேன்? இப்போது நான் கேட்ட வரத்தின்படி என் ஒரு கண் தான் குருடாகிப் போகும். ஆனால் எதிர்வீட்டு ஏகாம்பரத்துக்கோ இரண்டு கண்ணுமே குருடாய்ப் போய் விடும். அவன் தன் பேரக்குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிப்படியில் ஏறும்போது கண் தெரியாமல் என்றாவது ஒருநாள் தடுக்கி விழும்வான் அதை எதிர் வீட்டில் இருந்தபடி என் ஒற்றைக் கண்ணால் பார்த்து புளகாங்கிதம் அடையணும்’ என்று சொன்னான்.

நல்ல வேளையாக அவன் கேட்ட வரத்தை இறைவன் கொடுத்தாரா, இல்லையா என்பதற்குள் அவன் கண் விழித்து விட்டான்.

பொறாமை ஒருவனை எந்த மாதிரி நிலைக்கு கொண்டு போய்விட்டது பார்த்தீர்களா? மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து நாமும் அவர்கள் மாதிரி உயர எந்த மாதிரியான வாய்ப்பு இருக்கிறது என்பதை சிந்திக்க தடையாக இருப்பதே இந்த மாதிரியான பொறாமைக் குணம் தானே. எனவே பொறாமையை விட்டொழிப்போம். அப்போது உடல் மாதிரியே மனமும் ஆரோக்கியம் ஆகி விடும்.
Title: Re: மனதும் ஆரோக்கியம் ஆகட்டும்!
Post by: vimal on February 13, 2013, 11:43:24 AM
naama udaluku mana arokiyatha vida sirantha marunthu edhume illa... nalla msg GA