FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 20, 2018, 10:12:48 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: Forum on May 20, 2018, 10:12:48 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 185
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/185.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: NiYa on May 20, 2018, 11:34:29 AM
இருமனம் இணைய
இரு குடும்ப சம்மதத்துடன்
என் விரலோடு உன்விரல் இணைய
ஆரம்பமானது இல்லறம்

புதிய இல்லம் புதிய உறவுகள்
முகமறியா பலர் என்னை சுற்றி 
எல்லாம் மாறிப்போனது
என் பெயரும் கூட

எனக்கு தெரிந்து நீ மட்டும்
உன் கைகள் கோர்த்த நேரம்
நான் உன்னுடையவளாக நீ என்னுடையவனாக
உனது எல்லாம்  என்னதாகி போனது

அழகா அமைந்த குடும்ப வாழ்வில்
அடுத்த உறவாக என் கருவறையில்
உருவானது நாம் அன்பின் சின்னம்
சொன்னகனமே நீ கொடுத்த  நெற்றி  முத்தம்
இன்னும் மறக்காது அன்பே

அன்றில் இருந்து என்னவனின்
கரிசனை கவனிப்பு
சொல்ல வார்த்தைகள் இல்லை
என்னிடம்

பத்துமாதம் என் கருவறையில்
குழந்தையை தாங்க
என்னவன் என்னை
அவன் இதயத்தில் தாக்கினான்

இறுதி வலியில் துடித்த அந்த தருணம்
அவன் கைஎன்கையோடு இல்லை
துடிதுடித்து போய் கைகளை மூடிய   
அக்கணமும் அவன் முகமே நிஜபாகம்

சுயம் வந்த போது எதோ ஒரு சந்தோசம் ..
கண் விழிக்கையில் என் முதல் குழந்தையின்
கையில் இரண்டாம் குழந்தை
இதை விட பெண்ணிற்க்கு வேறு இன்பம் உண்டோ
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: AshiNi on May 20, 2018, 12:31:38 PM
தெய்வம் தந்த வரமாய்
  எம்மூன்று கரங்களும் ஒன்றானதோ!
நாம் செய்த தவமாய்
  நம்மூவர் உயிர்களும் கலப்பானதோ!

மங்கள குங்குமம் இட்டேன்
  அவள் பிறை நெற்றியில்
அந்நொடி சங்கமம் ஆனாள்
  என் இதயக் கூட்டினில்

செல்லக்கிளியவள் செல்லத்தினால்
  சேயாகிப் போனேன் அவள் பிடியில்
நம் கொஞ்சலின் மெட்டிலே
   வந்துதித்தாய் எம் மடியில்

என்னில் சரிபாதி கண்ட பெண்மை
  தன் கரத்தை எனக்குள் அடக்கினாள்
நம் உயிரின் அடையாளமாய் வந்த மென்மை
   உன் பிஞ்சுக்கரத்தை எமக்குள் பதித்தாய்

அன்று  இனிமையாய் நாம் கொண்ட
  தூய காதல் பந்தம்
இன்று தொட்டிலில் ஆடும்
   அழகிய வைர சொந்தம்

வாலிபத்தின் காலம் தொட்டு
  கற்பனையில் நான் வரைந்த கன்று
என் மகாராணியின் இதமான
  கருவறை தொட்டு வந்ததே இன்று

அழகுப்பதுமையும் கௌரவ
  அன்னை பதவி கொண்டாள்
அவளின் பரிசாய் உன்னை
   என் ஜீவனாய் தந்தாள்

நீ என் இரத்தமாயினும்
  நான் கண்ட முதல் குழந்தை
      "உன் தாய்"
அவள் உனை ஈன்றிடினும்
   அவளின் நெஞ்சத்தில் நானென்றும்
      "முதல் சேய்"

 எனக்குள் சுவாசமாய் வாழும்
    உம்மிருவருக்கும் குடை நானே...
மனையாளையும் வாரிசுகளையும்
    சீராட்டாத ஆணின் பிறவி
என்றென்றும் வீணே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: thamilan on May 21, 2018, 12:50:15 PM
நாடோடியாய் திரிந்த என்னை
மன்னனாக மகுடம் சுட்டியவள்
என் அன்பு மனைவி
என் இதயத்தில் மகாராணியாக
கொலுவைத்தேன் என் காதல் மனைவியை
என் அன்புக்கு பரிசாக
என் மகுடத்தில் ஒரு வைரத்தைப் பதித்தாள் அவள்
அந்த வைரம்  என் அன்பு மகள்

ஒரு கை தட்டினால் ஓசை வராது
என் மனைவியின் கையும்
என் கையுடன் சேர்ந்த போது
ஆனந்தம் என் வீட்டில் அலைமோதியது
எங்கள் மகள் கைகளும்
 எங்கள் கைகளுடன் ஒன்று சேர்ந்த போது
தேவர்கள் கை தட்டி வாழ்த்தியது போல இருந்தது

என்தோட்டத்தில்  மரமாக மனைவி
அந்த மரத்தின் கனியாக குழந்தை
அந்த இருவரையும் தங்கி நிற்கும் வேராக நான்
கனி பறிக்க வருவான் ஒருவன்
அதுவரை பாதுகாத்திருப்பேன் அந்தக் கனியை   
 
என் கைகளுக்குள் மனைவி மட்டுமே
குடியிருந்தது போய்
என் மகளும் என் கைகளுக்குள் வந்து சேர்ந்தாள்
என்னை தொடும் என் மனைவியின் கைகள்
பஞ்சுக் கைகளா இல்லை 
என்மகளின் பிஞ்சுக் கைகள் பஞ்சிக் கைகளா
புரியாமல் தவித்தேன்

அன்புக்கன்றி அடிக்கவென என் கைகள்
என்றும் தொட்டதில்லை அவர்களை
என் மனைவி செல்லமாக கன்னத்தை தட்டுவாள்
மகளோ கோபம் வந்தால்
தன் பிஞ்சுக் கைகளினால் அடிப்பாள்
இரண்டுமே மயில் இறகினால் வருடியது போலிருக்கும்

என் இரண்டு உள்ளங்கைகளிலும் 
இருவரையும் பொத்தி வைத்து பாதுகாப்பேன்
காலம் முழுவதும் கண்ணிமைக்காமல் காத்திருப்பேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: JeGaTisH on May 22, 2018, 02:59:56 PM
அம்மாவாக உன்னை கருவில் சுமந்தபடி
அப்பாவாக உன்னை மனதில் சுமந்தபடி

எனக்கு வரமென கிடைத்த பரிசு மனைவி
அவளுக்கு வரமென கிடைத்தது குழந்தை.

என் வீட்டுக்குள் மருமகளாக குழந்தைக்கு தாயாக
எனையும் ஓர் குழந்தையாக தாங்குகிறாயே!!!

உன் கனவை மறைத்து என் கனவுக்குள் வந்தது
என் உணர்வை கவர்ந்து என்னை மனிதனாக்கினாய்.

அழகான பாதம் ஓன்று என் முகத்தில் வருட
உணர்சிகள் இல்லாத ஜடமானேன்.

வாழ்க்கையின் அர்த்தம் உன்னால் அறிந்தேன்
கையில் ஏந்திய நொடிகள் உலகம் என் கையிலென உணர்ந்தேன்.

வாழ்க்கை வாழ்வது கடினம் என நினைத்தேன்
அது எளிதென மனையியாக தோள் தாங்கினாள்
காசு பணத்தில் சந்தோஷம் உண்டென நினைத்தேன்
என் குழந்தை பிறந்த பொழுது உணர்ந்தேன்
வாழக்கையின் மொத்த சந்தோஷம் உன் சிரிப்பிலேன .


         அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: joker on May 22, 2018, 05:37:20 PM
இதோ மருத்துவமனை முன்
சீனி தேடி அலையும் நேரத்தில்
வழிமறந்து திரியும் எறும்பை போல
தவித்து கொண்டிருக்கிறேன்

சிலவருடம் முன்
தூரத்து உறவு சொல்லி
உறவாக்கி  கொள்ள
அவளை பார்க்க செல்கையில்
கதவின் இடுக்கில் இருந்து இருவிழியால்
என் இதயத்தில் அம்பெய்துகொண்டிருந்தாள்

அவள் கால்கள் ஏனோ கோலம் இட்டுக்கொண்டிருக்க
என் மனதோ அலைக்கழிந்து கொண்டிருந்தது
அவள் பின்னால் ...

இதுதானோ காதல் என உணருமுன்
முகூர்த்தநாள் குறித்து  நல்ல நேரம் பார்த்து
கழுத்தில் மூணுமுடிச்சு  ஏன் என தெரியாமல் இட்டு
எனக்கு சொந்தமாக்கினேன்

எங்கள் வாழ்க்கையில்
வருடங்கள், மாதங்களாய் உருண்டோட
விசாரிப்புகள் மெல்ல எட்டி பார்த்தன

அன்பு பகிர ஓர் உறவு வேண்டுமென
அக்கரையில் சிலர் , ஆர்வத்தில் சிலர்
அனாவசியமாய்  சிலர்  கேட்க

பரிச்சியமில்லா தெய்வங்களும் கண்டு
பரிகாரமாய் சொன்னதையும் செய்து
காத்திருக்கும் வேளையில் விஞ்ஞானத்தின்
துணையும்  கொண்டு

என்னவள் அவள் வயிற்றில் கருவாய்
எங்கள் உயிர்
இதோ
கேட்கிறது எங்கள் குழந்தையின்
அழுகுரல் ஓடோடி செல்கிறேன்
அவள் இருந்த அறைக்குள்

அங்கு
குழந்தையின் கை பிடித்து
என்னவள் இருக்க
இருவர் கையும் சேர்த்து என் கை பிடிக்க
எங்கள் கண்களின் ஓரத்தில் பிறந்த
கண்ணீர் சொல்லியது
இது தான் காதல் என !!!


            ****ஜோக்கர் ****

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: சாக்ரடீஸ் on May 24, 2018, 02:22:41 AM

என்னவளே
உன் குறும்பு
உன் திமிரு
உன் கோபம்
உன் ரகளை
உன் அரவணைப்பு
உன் பரிதவிப்பு
உன் பிள்ளை குணம்
இவை அனைத்தும் ரசித்தபடி
ஒரு ரசிகனாக ரசித்து ரசித்து
உனக்காக இந்த  கிறுக்கன் கிறுக்கும்
ஒரு கிறுக்குத்தனமான கிறுக்கல்

என்னவளே
சில நேரங்களில்
நான் கேட்கும்
சில கேள்விகளுக்கு
பதில்  சொல்ல தெரியாமல்
எதிர் கேள்வி கேட்டு
உன் வழக்கமான திமிர்த்தனத்தை
வெளிப்படுத்துகையில்
உன்னை நான் ரசிக்கிறேன்

என்னவளே
நீ என்னோடு சண்டையிட்டு
இனி என்னிடம்
நீ பேசவே பேசாதே
என்று கூறி
மறுநொடி பரிதவிக்கும்
உன் இதயத்தை நான் ரசிக்கிறேன்

என்னவளே
என் தவறை
உணர்ந்து உன்னிடம்
மன்னிப்பு கேட்கையில்
தெரியாமல் செய்த
தவறுக்கு தான்
மனிப்பு ...
தெரிந்தே செய்யும்
தவறுக்கு
தண்டனை தான்…
என்று கூறி
என் மரமண்டையில்
டொங்கென்று கொட்டு
வைக்க ரகளை செய்து
அடம் பிடிக்கையில் …
உன் பிள்ளைகுணத்தை
நான் ரசிக்கிறேன் ....

என்னவளே
நீ என் வாழ்க்கையில்
வந்த பிறகு
காற்றில் அசையும் மரமாய் நான்
என்னை தாங்கும் வேராய் நீ
என் கனவுகளை நிஜமாக வந்தவள் நீ
என் கவலைகளை கலைக்க வந்தவள் நீ
என் சாபங்களையும் வரமாய்  மாற்ற வந்தவள் நீ
 
என்னவளே
உன் சொங்கங்களை மறைத்து
இன்று என் வாழ்கையில் வசந்தம் வீசுகிறாய்
உன் சோகங்களை போக
தமிழ் வேதங்கள் தேவை இல்லை
நம் இருவரின்  வேதியல்(chemistry)  மட்டும் போதும்
உன் சோகங்கள் விமானம் ஏறி செல்லும்
நம் வேதியல் வெளிப்படுகையில்

என்னவளே
நான் உன்னை நேசிக்க
நீ என்னை நேசிக்க
நம்மை நேசிக்க
நம் காதலுக்கு ஆதாரமாய்
நமக்காக நமக்கு பிறந்த
ஒரு அழகான சிப்பி முத்து
நம் படைப்பு திறனுக்கு
எடுத்துக்காட்டாய்
மென்மையான பிஞ்சு கைகள் நம் கைகளில் .....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: VipurThi on May 24, 2018, 11:59:29 AM
கருவிலே சுமந்து தாயானார்- இருவரையும்
நெஞ்சிலே சுமந்து தந்தையானார்
கையில் ஏந்திய நொடிதனிலே
ஆயிரம் நினைவுகள் என்னை
ஆளாக்கி பார்ப்பதே இவர்கள் கனவுகள்

என் சிரிப்பிலே சிரிப்பவர்கள்
என் அழுகையிலே பதறுபவர்கள்
என் மழலையிலே மகிழ்பவர்கள்
ஈடு இணையில்லா அன்பின் அர்த்தங்கள்

கண்ணிமையாய் காப்பவர்கள்
கை கொடுத்து தூக்குபவர்கள்
வாழ்கை எனும் காலத்தின் பாடத்தில்
வழிநடத்தும் வழிகாட்டிகள்

வளர்ச்சி எனும் படி மிதித்து
ஏறி நானும் சென்றாலும்
அன்று எனை ஏந்திய உங்கள்
கைகள் என்றும் என்னை ஏந்திடுமே....

                                  **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 185
Post by: KaBaLi on May 26, 2018, 08:25:35 AM
இருண்ட குகையில் என்னை இரும்பாய் காத்தவள்
ஆணோ பெண்ணோ எதுவென்று அறியாதிருப்பினும்
பிறக்கும் முன்பே பெயர் சூட்டி அழகு பார்த்தவள் !

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே!!

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா
நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா!!


நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா!!

நீ ஊட்டிய நிலா சோற்றின் நினைவுகள்
என்னுள் நீங்க இடம் பெற்று விட்டன

ஒழுக்கங்கெட்ட சுற்றம் அமையினும்
என்னை ஒழுக்கமாய் வளர்த்தவர் அப்பா

தான் சாப்பிடாமல் இருந்தாலும்
மகனை சாப்பிட வைத்து அழகு பார்த்தவள் !

நல்லது இன்னெதன்று நயமாய் சொன்னவர் அப்பா

நினைத்துப் பார்க்கின்றேன்
என் மழலைப் பருவத்தைப் 
பக்கத்தில் கட்டியணைத்து
நான் படுத்திருப்பது
என் ஆசை தந்தையோடு

எப்படி  எப்படி எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில் எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை...

சொல்லிக்கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு

எப்படி வாழ வேண்டும் எப்படி இருக்கவேண்டும்
என்று உணர்த்திய அன்பு அப்பா

கண்டதும் கேட்டதும் குறைவில்லாது கற்றுத் தந்தீர்
வாழும் முறைகள் நிறைவாகவே கற்றுத் தந்தீர்

இன்னமும் உங்களிடம் கற்க உண்டு ஏராளம்
கற்கையில் நீங்கள் தரும் விவரம் தாராளம்

உங்கள் மகன்  என மனதாரச் சொல்வதில்
எனக்குண்டு மகிழ்ச்சியும் சிறு கர்வமும்
எப்போதும் அப்பா !!!

எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை என்றென்றும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்

நன்றி நன்றி நீங்கள் நீங்களாகவே இருப்பதற்காக...
இப்போதும் எப்போதும் நான் உங்களுக்கே மகனாக  வேண்டும்
இந்த மகனும்  ஒரு ஜென்மத்திலேனும் உமக்கு அன்னையாக வேண்டும்
என்றும் உங்கள் அன்பு ஒன்றையே வேண்டும் உங்கள் பிரிய மகன் .....


உங்கள் அன்புக்கும்
உங்கள் அமைதிக்கும்
உங்கள் கனிவுக்கும்
உங்கள் மரியாதைக்கும்
உங்கள் பெருமைக்கும்
என்றென்றும் உங்கள் பிள்ளைகள்
நாங்கள்
தலை வணங்குகிறோம்…

உங்களை வாழ்த்த வயதில்லை ஆதலால் வணங்குகிறேன்