Author Topic: மொழி  (Read 650 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மொழி
« on: December 15, 2011, 10:48:58 PM »
மொழி


இந்தியாவில் பேசப்படும் மொழிகளிலேயே ஹிந்தியும் தமிழும் சர்ச்சைகளுக்கு உட்பட்டது, வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநில மொழி வெவ்வேறாக இருப்பினும் ஹிந்தி இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்படுவதால் பேசவும் எழுதவும் படிக்கவும் பலருக்கு சுலபமாக உள்ளது, பெரும்பாலான வட மாநில பள்ளிகளில் ஆங்கிலம் என்பது அரிச்சுவடி அளவில் கூட இல்லாமல் இருப்பது தமிழர்களை கிள்ளுவது போன்ற செய்தி. மாநில அளவில் கேரளா, ஆந்திரா கர்நாடகாவிலும் ஹிந்தி பலராலும் பேசப்படுகிறது, தமிழகத்திற்கும் ஹிந்தி மொழிக்கும் சம்பந்தமே இல்லை. ஹிந்தியை மொத்தமாக வேற்று மொழி போன்று மட்டுமே நம்மால் கவனிக்க முடிகிறது, இதற்க்கு காரணம் பள்ளிகளில் ஹிந்தி மொழி என்பது அறவே இல்லை, அதற்க்கு பதிலாக ஆங்கிலம் முழுவதுமாக உபயோகிக்கப்படுகிறது. வட மாநில மக்கள் தங்களது மாநிலத்து மொழி பேசுபவரை தரக்குறைவாக எண்ணுவதே கிடையாது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் பேசுகின்ற தமிழர்களை தரக்குறைவாக எண்ணுவது சாதரணமாகிப் போனது என்பதால் அரைகுறை ஆங்கிலத்திலாவது பேசுவதென்பது வழக்கமாகிவிட்டது,

இந்தியாவிலேயே ஆங்கிலத்தை தங்களது தாய் மொழிக்கு அடுத்ததாக அதிகமாக படிக்கின்ற பேசுகின்ற மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். தற்காலத்தில் வெளிநாடுகளில் பணி செய்வதற்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்வதற்கும் ஆங்கிலம் அத்தியாவசியம் என்கின்ற நிலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆங்கிலம் தரமாக பேச எழுத பயிற்றுவிக்கும் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தினாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணத்தில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். அவ்வாறு ஆங்கில மொழி பிரதானமான மொழியாக எண்ணப்படுவதால், பலரது வீடுகளில் தங்களது தாய் மொழியில் பேசுவதை அறவே விட்டுவிட்டு ஆங்கிலத்திலேயே முழுவதுமாக உரையாடுகின்றனர். ஆங்கில மொழி பேசுபவர்களெல்லாம் அதிகம் படித்தவர் அல்லது உயர்ந்தவர்கள் என்பது போன்றும் தமிழ் பேசுபவர்களெல்லாம் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்பது போன்ற பாவனை நிலவி வருகிறது.

'நாங்கள் தமிழர்கள்', 'தமிழுக்கு முதன்மையான இடத்தை கொடுங்கள்' என்று யாராவது அழுத்தமான குரல் கொடுத்தால், ஆங்கிலமும் ஹிந்தியும் மட்டுமே தங்களது அந்தஸ்த்தை உயர்த்திய 'நன்றி கடன் பட்ட நெஞ்சங்கள்' எல்லாம் ஒன்று திரண்டு 'தமிழை மட்டுமே படித்து பேசிக்கொண்டு தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எங்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது' என்று ஓவென்று ஓலமும் ஒப்பாரியும் வைக்கும் கூட்டம் ஒன்று உண்டு, 'என்னோட பையன் ஸ்டேட்ஸ்ல வேல பாக்கறான்', 'என்னோட அண்ணா மன்னி ஸ்டேட்ஸ்ல இருக்கா' என்று அலட்டிக்கொள்ளும் பேர்வழிகள் நிறைய பேர் தமிழகத்தில் உண்டு. கச்சேரி பண்ணாலும் ஸ்டேட்சுக்கு (USA) போய் பண்ணாத்தான் பெருமை, நடனம் பண்ணாலும் ஸ்டேட்சுக்கு(USA) போய் பண்ணிட்டு வந்தாதான் 'அவாளுக்கு' பெருமை. அப்படி ஒரு கும்பல் இந்த தமிழகத்தின் ஒட்டு மொத்த பெருமைக்கும் தங்களது ஜாதி மட்டுமே காரணம் என்று பெருமை பட்டுக்கொள்வதோடு நில்லாமல், ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் கற்று கொடுக்கும் திறமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்கின்ற ஆணவமும் கொண்டவர்கள்.

தப்பி தவறி தமிழை பற்றி மட்டும் உயர்த்தி பேசிவிட அவர்கள் மனம் ஒரு போதும் இடம் கொடுக்காது ஆனால் தங்களை தமிழர்கள் என்று இடத்திற்கு ஏற்றார் போல காண்பித்துக்கொள்ளும் நடிப்பாற்றலுக்கும் பஞ்சமிருக்காது. இவர்கள் பேசும் தமிழுக்கென்றே ஒரு புதிய அகராதி தேவைப்படும். தமிழர்களே இப்படி என்றால், பகுதி ஆங்கிலேயனும் பகுதி இந்தியனுமாக இந்தியாவில் வாழுகின்ற ஒரு கூட்டமுண்டு. இவர்கள் பேசும் தமிழை புரிந்து கொள்ள தனி அறிவு தேவை, இவர்கள் மூதாதையார்கள் முதல் இன்றுவரையில் உள்ள அனைவருமே தமிழகத்திலும் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்திய மாநில மொழிகளை இவர்கள் பேசுகின்ற விதமே அலாதி, இவர்களுக்கு இந்தியர்கள் என்றால் 'ஆப்பக்கடை', 'ஆயா' என்ற அந்தஸ்த்தை மட்டுமே கொடுக்க முடிந்த மனதுள்ளவர்கள். இந்தியாவினுள் பிறந்து வளரும் ஆங்கிலேயர்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு.

இவர்களில் பலரும் ஆங்கிலேயர்களின் நாகரீகத்தை கடைபிடிக்கின்ற காரணத்தால் இந்தியாவை விட்டு ஆஸ்திரேலியா, ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்து விட வேண்டும் என்கின்ற ஒரே லட்சியமும் கனவையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக கொண்டுள்ளவர்கள், இவர்களுக்கு தமிழ் பேசுபவர்கள் 'அடிமைகள்' என்கின்ற நினைப்பு, ஆங்கிலம் படித்த தமிழர்களை மதிக்கின்றனரா என்றால் சமயத்திற்க்கேற்றார் போல, இவர்களுக்கு எந்த மாநில மொழியையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது, இதனால் இவர்கள் பேசுகின்ற மாநில மொழிகள் இவர்களது பற்களுக்கு இடையிலும் இவர்களது நாவிலும் மாட்டிக்கொண்டு வெளியேறுவதற்கு மிகவும் வருந்துவதை நம்மால் காணமுடியும். பல சமயங்களில் இவர்கள் தாங்கள் இந்தியாவில் உள்ள மாநிலத்தில் பிறந்து வாழ்கின்றோம் என்கின்ற நினைவு அற்றவர்களாய் மாநில மொழிகளையும் மாநிலத்தவர்களையும் கிண்டல் கேலி செய்வதை பார்க்கும் போது அங்கே தமிழுணர்வு நமது ரத்தத்தை சூடாக்காமல் இருப்பதில்லை.

'தமிழகத்திற்கு குடியேறி ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழிந்து விட்டது ஆனாலும் எனக்கு தமிழ் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியாது' என்று கூறுகின்ற வேற்று மாநிலத்து மக்களை நான் சந்தித்ததுண்டு, அதிலும் தெனிந்திய மக்களை பெருமளவில் சந்தித்ததுண்டு, அவ்வாறு சாத்தியமே இல்லை என்ற போதும் தமிழகத்தின் அத்தனை நலன்களையும் அனுபவித்துக் கொண்டு தமிழ் மொழியை மட்டும் கற்றுக் கொள்வதற்கு விருப்பமின்றி பல ஆண்டுகளாக ஒரே மாநிலத்திலே வாழுகின்ற மனப்பான்மையை என்னவென்று சொல்வது, இவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரிகளா அல்லது 'நாங்கள் இந்திய பிரஜைகள் என்பதால் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாழுகின்ற தகுதி படைத்தவர்கள் அதனால் அம்மாநிலத்தின் மொழியை நாங்கள் கற்று கொண்டுதான் ஆக வேண்டுவதில்லை' என்று கூறுகின்ற உள்நாட்டு தீவிரவாதிகளா. இவ்வாறு ஒரு பெரிய கூட்டம் தமிழகத்தில் உண்டு.

தென் தமிழக மக்களில் பெரும்பாலோருக்கு சென்னை என்றால் சென்னையில் பேசப்படுகின்ற மொழிதான் முதலில் கேலி பொருளாகும், சென்னையில் பிறந்து சென்னைவாசிகளாக இருப்பவர்கள் என்றாலே தாழ்வான அபிப்பிராயம், ஆனால் பிழைப்பைத் தேடி வருகின்ற இடம் சென்னையும் அதனை சுற்றி உள்ள இடங்களும் தான். நாளுக்கு நாள் சென்னையில் பெருகி வருகின்ற கூட்டம் சென்னையின் வீடு நிலம் வாடகை என்று எல்லாவற்றையும் உயர்த்திக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் கூட்டம் வெளியே நடமாடுவதற்கு பெரும் சிரமத்தை, போக்குவரத்து நெரிசலை ஏற்ப்படுத்துவதால் சென்னை வீதிகளில் நடப்பதற்கு மன உளைச்சல் ஏற்ப்படுத்துகிறது. இதனால் சென்னையின் புறநகர்களில் வீடு மனைகள் பெருகி வந்தாலும் அதன் விலை விண்ணைத் தொடுகிறது.

[எப்படியோ ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டி குடி புகுந்தால், கொலை கொள்ளை என்று தினம்தோறும் புற நகர்களில் பெருகிவருகின்ற சம்பவங்கள் நிலை குலையச் செய்கிறது, போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள் ஏதும் இன்றி படுகின்ற கஷ்டங்கள் ஒருபுறம், மழை காலத்தில் படகு சவாரி செய்ய வைக்கும் வேதனைகள் இன்னொருபுறம் என சென்னை அதிக மக்களால் அவதியுறுகிறது].