FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on September 18, 2017, 09:02:15 PM

Title: படித்ததில் பிடித்தது
Post by: NiYa on September 18, 2017, 09:02:15 PM
இன்றும் திலீபன் பசியுடந்தான் இருக்கிறான்

உடல்கருகிச் சாவதிலும்
கொடுமை
குடல் கருகி வீழ்வது

ஒரு நேர உணவு உடல்
நிரப்பாவிடினும்
உயிர் போகும் வேதனை
வந்துவிடுகிறது எமக்கு

அன்று பன்னிரெண்டு நாளாய்
பட்டினிகிடந்தவன்
வலிகளை கணக்கிட
விஞ்ஞானத்தாலும்
முடியாது

அடுத்த நாட்டவன்
மரணத்திற்கெல்லாம் அழுகிறோமே!
அன்று லட்சம் மக்கள்
சுற்றியிருக்க அணுவணுவாய்
குலைந்தானே பார்த்தீபன்

பார்வையாளராய் அன்றி
வேறெதுவும் செய்ய முடியாது
அழுது வடித்தோமே
எத்தனை பெரிய கொடியவர்கள் நாங்கள்
ஒருவனை பசித் தீயில்

எரியவைத்து வேள்வி வளர்த்தோம்
அந்த வெக்கையில்
எம் பிள்ளைகள் அச்சம் விலகுமென
காத்துக்கிடந்தோம்

அன்று நல்லூர் முன்றலில்
நீறு பூத்த நெருப்பில்
காறி உமிழ்ந்தவர்தான்
காந்தியம் பேசுகிறார்கள்

அட அது போகட்டும்
அவர்கள் அந்நியர்
அப்படித்தான் செய்வார்கள்
இந்த நல்லூரானுக்கு
என்ன நேர்ந்தது...?

கண்முன்னே எம் பிள்ளை
வதங்கிச் சாகயில்
சும்மாதானே இருந்தார்
சுடரேத்தி கும்பிட்ட
குற்றத்துக்காகவேனும்
ஒரு சிறு வழி செய்திருந்தால்
பசித்த பிள்ளை இன்னும் சில
பத்தாண்டுகள் வாழ்ந்திருப்பான்

கடவுளும் சதி
கயவனும் சதி
தமிழர்கள் எல்லோரும்
செத்தொழிந்து போங்கள்
என்பதுதான் விதி
இறக்கும் வரையிலும்
இலட்சியம் காக்கும்

உன்னத வீரத்தின்
உதாரணம் எம் மாவீரர்கள்
அதில் முதல்வன்
எம் திலீபன்
எம் பார்த்தீபனின் பசி
பன்னிரெண்டு நாட்களோடு
முடிந்துவிடவில்லை

இன்றும்
பசியுடன்தான்
இருக்கிறார்
ஆம் தாயகப் பசியுடன்

விடுதலை வேண்டாமென்போரே
நீங்கள் வென்றெடுக்காவிடினும்
பறவாயில்லை
அவர்கள் வீரத்தை
ஈகத்தை
விமர்சிக்காதிருங்கள்