Author Topic: வாலிபப் பருவத்தை வீண்செய்யாதீர்கள்!!!  (Read 1527 times)

Offline Yousuf

ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அச்சமூகத்தில் வாழும் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வரலாற்றுப் பக்கங்களில் இளைஞர்கள் கூடியளவு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு சமூகத்தில் வாழும் இளைஞர் அணி பிரியுமானால், கூறுபோடப்படுமானால், அவர்களது, நடத்தைகள், பண்புகள் மோசமாக அமையுமானால் அச்சமூகம் அதலபாதாளத்தை நோக்கி செல்லும்.

இந்த வரிசையில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர். மதீனா மக்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக நபியவர்கள் அனுப்பிய சஹாபி முஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்கள் ஒரு இளைஞராவார்.

யமனுக்கு நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும் நபியவர்கள் அனுப்பிய முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் ஒரு இளைஞரே. மூத்த சஹாபிகள் பலர் பங்குபற்றிய ஒரு படையணிக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களும் ஒரு இளைஞர் ஆவார். கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் குர்ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கெடுத்த பலரும் இளைஞர்களே.

இதே போன்று இஸ்லாமிய வரலாற்றின் பிற்பட்ட காலங்களிலும் இளைஞர்கள் பல பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இஸ்தான்பூல் நகரைக் கைப்பற்றிய முஹம்மத் பின் முறாத் என்பவரும் இருபத்தைந்து வயது நிரம்பிய ஒரு இளைஞரே.

மேலும் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்), உமர் முக்தார் (ரஹ்) போன்ற தளபதிகளின் வெற்றிக்கு இளைஞர்களே பெரும் பங்காற்றியுள்ளனர். இவ்வாறான பல சாதனைகள் நிகழ்த்திய இளமைப் பருவம் இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானது.

வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்? என்ற வினாவுக்கு விடை கொடுக்காமல் ஓர் அடியானின் பாதம் மறுமையில் நகர முடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது- ‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. அவை யாவன…


01. தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்

02. தனது வாலிபப் பருவத்தை எந்த விடயங்களில் ஈடுபடுத்தினாய்.

03. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தாய்.

04. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய். (ஆதாரம் – தபராணி)


ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது எமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர். தமது விரல்களாலே தமது கண்களை குத்திக் கொள்கின்றனர்.

மேற்கத்தைய ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அங்குள்ள மாணவர்கள் வகுப்பறைக்குள் துப்பாக்கிகளுடனும், கத்திகளுடனும் நுழைகின்றனர். போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தமது உணர்வுகளை அழித்துக்கொள்கின்றனர். நாகரீகம் என்ற போர்வையில் ஆண்களும், பெண்களும் சகஜமாகப் பழகி, கூடி கும்மாளமடிக்கின் றனர்.

ஆண்களின் காமப் பசியைத் தீர்க்கும் பண்டமாக பெண்கள் மாறிவிட்ட னர். அமெரிக்காவில் அநாமதேயக் குழந்தைகளை பராமரிக்கும் நிலையங்கள் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் நிம்மதியை தொலைத்து விடுகின்றனர். நிம்மதி தேடி கடற்கரை ஓரங்களிலும் உல்லாச விடுதிகளிலும் அலைந்து திரிகின்றனர். இந்த சீர்கேடுக ளுக்கு எமது நாடும் விதிவிலக்கல்ல.

பல்கலைக்கழகங்கள் பலி பீடங்களாக மாறிவிட்டன. பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் தமது உணவுப் பொருட்களு டன் போதைப் பொருட்களையும் சுமந்து வருகின்றனர். தெருவோரத்தில் இளைஞர்கள் வீடியோவுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளை ஏந்திக்கொண்டு யுவதிகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான இளைஞர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல் :-

இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின் காரணமாக போதையை பாவிக்கப் பழகுகின்றனர். ஆரம்பத்தில் தனது தந்தைக்கு சிகரட்டை வாங்கிக் கொடுத்த பிள்ளை காலப் போக்கில் சிகரட்டை புகைப்பவர்களாக மாறி, இறுதயில் விஸ்கி, பியர், ஹெரோயின், கஞ்சா, அபின், பீடா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை பாவிக்க தொடங்குகின்றான்.

இன்று புதிய புதிய பெயர்களில் போதைப் பொருட்கள், விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.

2. சம வயதுக் குழுக்களின் தாக்கம் :-

ஒருவர் தான் யாருடன் பழகுகின்றேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. இதனை நபியவர்கள் விளக்கும் போது நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான்.

கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாக) தரலாம் அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு வேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். (ஹதீஸ்)

3. விரசம் நிறைந்த ஆபாசமான திரைப்படங்களைப் பார்த்தல் :-

இன்று அதிகமான இளைஞர்களின் நேரங்கள் சினிமாக்களினால் வீணடிக்கப்படுகின்றன. ஓய்வு என்பது அல்லாஹ் எமக்கு அருளிய அருளாகும். அதனை பிரயோசனமாக கழிக்க வேண்டும். இன்றைய ஆய்வுகளின்படி ஒரு மாணவன் பாடசாலை நாட்களில் 36 மணித்தியாலங்கள் தொலைக்காட்சியில் செலவழிப்பதாகவும், வார இறுதி நாட்களில் இது இரு மடங்காக அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சினிமாக்களை பார்ப்பதுடன் நின்றுவிடாமல் அங்கு வரும் நடிகர்கள், நடிகைகள் போன்று நடை, உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் எமது ஈமானை பாதிக்கும். ‘எவர் எந்த கூட்டத்தை ஒத்து இருக்கின்றாரோ அவர் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்’.

(ஹதீஸ்)

4. விரசமான பாடல்களையும் இசைகளையும் செவிமெடுத்தல் :-

பெரும்பாலான இளைஞர்கள் தமது கைகளில் உள்ள கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி விரசமான பாடல்களை வீதி ஓரங்களிலும், தூக்கத்தின் முன்னரும் கேட்டு மகிழ்கின்றனர். இவை உண்மையில் எமது ஈமானை(இறை நம்பிகையை) பறித்துவிடும். எவ்வாறு பாலைவன மணலில் நீரை ஊற்றுகின்ற போது மிக வேகமாக உறிஞ்சி எடுப்பது போன்று இசையானது எமது ஈமானை(இறை நம்பிகையை) உறிஞ்சி எடுத்துவிடும்.

5. கையடக்க தொலைபேசிகளை தவறாக பயன்படுத்தல் :-

இன்று கையடக்க தொலைபேசிகள் உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின் ஈமானிய(இறை நம்பிகையை) உணர்வை அது சீரழித்துக் கொண்டிருக்கின்றது. அதில் திரைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். ஷைத்தானின் ஓசைகள் இளைஞர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

வீதி ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்ற யுவதிகளை படம் எடுத்துக் கொள்கின்றனர். யுவதிகள் இருக்கின்ற வீடுகளுக்கு அனாமதேய தொலைபேசி அழைப்புகளை எடுத்து தொல்லைப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நரகத்தின் வேதனைக்கே எம்மைக் கொண்டு சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.


6. யினிஹிரிஞினிரிஹி இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விடயங்களை கண்டுகளித்தல் :-

இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய படங்கள், காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். இதன் மூலமும் அல்லாஹ்வுடனான எமது நெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.

7. ஓய்வு நேரங்களை பயனற்ற முறையில் கழித்தல் :-

எமது இளைஞர்கள் ஓய்வு நேரங்களை அரட்டை அடிப்பதிலும் வீண் பேச்சுக்கள் பேசுவதிலும், பிறரை மானபங்கப்படுத் துவதிலும், குறிப்பாக பெண்களின் கற்புக்கு அவமானம் ஏற்படுத்துவதிலும், வீண் அவதூறுகளை பரப்பி விடுவதிலும், பிறரின் உயிர், உடமை மானம் சொத்துக்கள் என்பவற்றிற்கு சேதம் ஏற்படுத்துவதிலும், அடுத்தவரின் மனங்களை புண்படுத்துவதிலும், சக நண்பர்களை கேலி செய்தல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலும் தமது பயன்மிக்க நேரங்களை வீணாக்குகின்றனர்.

‘அல்லாஹ்வின் இருபெரும் அருட்கொடைகளில் அதிகமானவர்கள் நஷ்டவாளிகளாகவே உள்ளனர். ஒன்று தேக ஆரோக்கியம் மற்றயது ஓய்வு நேரமாகும்.’ (ஹதீஸ்)

இந்த வகையில் எமது இளைஞர்கள் தமது இளைமைக் காலத்தை இறையச்சத்துடன் கழிக்க வேண்டும்.

அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பதுடன், விலக்கியவற்றை தவிர்ந்து வாழ வேண்டும். இதன் மூலமே எமது நிரந்தர வீடான சுவனத்தை பெறுவதுடன் உலக வாழ்வையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடியும்.

மாணவர்களாகிய நாம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள சவால்களை முறியடித்து எமது மனதை கட்டுப்படுத்தி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் வாழ்கின்ற போதுதான் எமது கல்வி வாழ்க்கையிலும் உயர்ந்த இடத்தை அடைய முடியும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
nalla  pathivu....pasanga kindal panalaina thukkam varathee ponungalukku :( ;) ;)