Author Topic: அப்பா  (Read 2841 times)

Offline Anu

அப்பா
« on: July 24, 2012, 02:51:44 PM »
வழக்கம்போல் சூழ்ந்த இருள் வழக்கத்திற்கு மாறான கருமையைக் கொண்டுவந்து சேர்க்குமென்று யாருக்கும் தெரியவில்லை. படிக்கட்டுப் பக்கம் இருட்டு அப்பிக்கிடந்தது. வாசலில் நின்ற மகளிடம் ”ஏங்கண்ணு இந்த லைட்டக்கூட போடலையா?” எனக்கேட்க, சிரித்துக்கொண்டே விளக்குப் பொத்தானை அழுத்தப்போனாள். மொட்டை மாடியில் இருக்கும் தலைகவிழ்ந்த ஒற்றை விளக்கு ஒளியைக் கொட்டத்தொடங்கியது.

விடிந்தால் மாரியம்மன் கோவில் திருவிழா. நினைக்கவே மனம் முழுதும் மத்தாப்பாக பூத்தது. சாப்பிட்டுவிட்டு கோயில் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார். தொலைக்காட்சியில் தலைப்புச் செய்திகள் உரத்த குரலில் ஒலி(ளி)த்துக்கொண்டிருந்தது. கையில் ரிமோட்டோடு தரையில் கிடந்த தலையணைமேல் சாய்ந்திருந்த மாப்பிள்ளை சிநேகமாய் புன்னகைத்தார். அங்கே அமரத்தோன்றவில்லை. என்றுமில்லாத பதட்டம் ஏதோ வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே உருண்டு கொண்டிருப்பதாக உணரமுடிந்தது. ஓரிடத்தில் உட்கார முடியவில்லை. ஏதோ இம்சையாய் இருப்பதுபோல் உணரமுடிந்தது.

சமையல்கட்டில் இரவுச் சாப்பாட்டுக்கான பரபரப்பு தெறித்துக் கொண்டிருந்தது. இன்று ஏனோ கொஞ்சம் கூட பசிக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. ”சாப்பிடலாம் வாங்க” என்ற மனைவியின் அழைப்புகூட சாப்பிடலாம் என்ற எண்ணத்தைத் தூண்டவில்லை. இருந்தாலும் இரவில் உணவெடுக்க வேண்டுமே என்ற எண்ணம், உடலை தன்னிச்சையாய் கை கழுவும் இடத்திற்கு நகர்த்திச் சென்றது. கை கழுவக் குனியும்போது அதுவரை அடைபட்டுக்கிடந்த ஏதோ ஒன்று குமட்டிக்கொண்டு வந்தது. ”ஏன் குமட்டுகிறது, என்ன தின்றோம், எது சேரவில்லை” என நினைக்கும் போதே குபீரென கொப்பளித்து வந்தது வாந்தி அடர்த்தியான ரத்தக்குளம்பாய்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டும்மீளாமல், டப்பாவில் அள்ளிய தண்ணீரை ஊற்றி அடித்துவிட நினைக்கும்போதே, ஓங்காரமாய் குமட்டிய சப்தம்கேட்டு ஓடிவந்த மனைவி, நாலாபக்கமும் பரவும் இரத்தக் குளம்பைப் பார்த்து ”அய்யோ”வென அலறியது மிக மெதுவாய் காதுகளில் விழுந்தது. லேசாய் உடம்பு நடுங்கத்துவங்கியது. எனக்கு என்ன நடக்கிறது என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, மனைவி பிள்ளைகள் பரபரப்பாய் இயங்குவதும் மெதுவாய் புரிய ஆரம்பித்தது.

எங்கோ போனில் பேசுவது கேட்டது. சின்னவனிடமாக இருக்கும். மீண்டும் மீண்டும் என்ன நடக்கிறது எனக்கு, ஏன் உடம்பு நடுங்குகிறது, ஏன் கைகள் எல்லாம் துவளுகின்றன என நினைக்கும்போதே அருகில் இருக்கும் மனைவி, மகள், மருமகன், பேரக்குழந்தைகள் எல்லாம் அந்நியப்படுவதாய் தோன்றியது. குழந்தைகள் இரண்டும் ஒன்றும் புரியாமல் தங்களுக்குள் கைகோர்த்து வெளுத்த கண்களோடு அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தன.

ஆஸ்பிடலுக்கு போகலாம் என அவர்களாகவே அவசரமாகப் பேசி எடுத்த முடிவுக்கு என்னிடம் ஒப்புதல் கேட்கும் போது, சரி அல்லது வேணாம் என்று சொல்லும் திராணிகூட அற்றுப்போயிருந்தது. இமைச்செவுள்கள் தாங்களாகவே இழுத்து பூட்டிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தன. காருக்குள் திணிக்கப்பட்டு சாய்ந்து படுக்கவைக்கப்பட்டதை உணரமுடிந்தது. கார் வேகங்கொண்டு கிளம்பியது மனைவியும், முன்னிருக்கையிலிருந்து மகளும் ”ஒன்னுமில்ல..ஒன்னுமாகாது... மாரியாயா காப்பாத்து சாமி” என எட்டியெட்டி தடவிக் கொடுக்க முனைந்ததை உணரமுடிந்தது. கார் சன்னல் வழியே மாரியம்மன் கோவில் கோபுர விளக்கின் வெளிச்சம் ஒரு கணம் உள்ளே விழுந்து மறைந்தது தெரிந்தது.

அதுவரை அவர் எனப்பட்டவர் அதுவாகிப்போனார். விரைந்து, சாலை நெருக்கடிகளுக்குள் சீறிப்பாய்ந்து மருத்துவமனையை எட்டுமுன்னே உடல் அதீதமாய்ச் சில்லிட்டுப்போயிருந்தது. உடன் வந்த எல்லோருக்கும் புரிந்து போயிருந்தாலும், ஒருவருக்கும் அதை அப்படித்தான் என ஏற்றுக்கொள்ள புரண்டு போராடத்தயாரான மனது, தயாராக இல்லை. மருத்துவமனை வாயிலுக்கே ஓடிவந்த மருத்துவர், சம்பிரதாயமாக சில சோதனைகள் செய்துவிட்டு உதட்டைப்பிளுக்கினார். ”உள்ளே வரவேண்டியதே இல்ல, நடந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சுங்க, ஒன்னும் வாய்ப்பில்லீங்க” என்றார்.

அவரோடு போன கார் அதுவோடு திரும்பிவந்தது. நிதானமாய் ஊர்ந்து ஊர் திரும்ப காருக்குள் நடுங்கும் கையோடு கைபேசியில் மகள் வெளியூரிலிருக்கும் சகோதரனோடு பேச, பின் புலத்தில் கதறும் அம்மாவின் குரல் காட்டிக்கொடுத்தது. மாப்பிள்ளை போனை வாங்கி கொஞ்சம் நிதானித்து விளக்கி, உடனே புறப்பட்டு வரச்சொன்னார்.

மூவருக்குமே உடலெல்லாம் படபடத்தது. எப்போது வீடு வந்து சேர்ந்தோம் என்று தெரியவில்லை. இருண்ட வாசலில் ஆட்கள் குழுமியிருப்பது காரின் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. கூசும் விளக்கிற்கு கண்களை கைகளால் மறைத்துக்கொண்டு காரை நோக்கி கும்பலாக ஓடிவந்தனர். மகளிடம் சாவி வாங்கி வீட்டு நடை திறக்க யாரோ ஓடினர். பக்கத்துவீட்டுப் பெண்கள் இருவர் மனைவியை கட்டியணைத்து தூக்கியவாறு வீட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.

வாசலில் போடப்பட்ட கட்டிலில் அது இறக்கிப்படுக்க வைக்கப்பட்டது.

”காத்தால நோம்பிய வெச்சுக்கிட்டு சவத்த எப்படி வெக்கிறது” என காற்றில் மிதந்த குரல்களை எல்லோருமே தடவிப்பார்த்தனர்.

”பங்காளியூடு வரவேணும், பசங்க வரவேணுமேப்பா”

”பங்காளிக, பசங்க எல்லாமே வரட்டும், எப்டியிருந்தாலும் பொழுது வெடியறதுக்குள்ளே எல்லாமே முடிச்சாகனுமப்போய்” என்ற குரல் எல்லோருமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை கோவில் திருவிழா உருவாக்கியது.

எப்படி நடந்ததென்று தெரியவில்லை. எல்லாம் படபடவென முடிந்து வாசலில் தண்ணீர் கொட்டி அடித்து விடும்போது, காதுவரை மூடிக்கட்டிய துண்டோடு தினமும் பால் வாங்கவரும் பால்காரர், வந்த வேகத்தில் மணியடித்துவிட்டு, சூழ்நிலையைக்கண்டு விக்கித்து நின்றார். வண்டியைவிட்டு இறங்கி வந்த அவருக்கும் உடல் நடுங்கத் தொடங்கியது. ஒரு பாத்திரம் கொண்டு வரச்சொல்லி அதுவரை மற்ற கட்டுத்தரைகளில் வாங்கி வந்திருந்த பாலை அப்படியே கவிழ்த்து விட்டுக்கிளம்பினார். நடு ராத்திரியில் யாரோ எழுப்பி வந்திருந்த சமையல்காரர் காபி போடுவதற்காக பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினார்.

”திடிர்னு இப்படியாயிப் போச்சேப்பா” என்ற துக்கமடர்ந்த வார்த்தைகளோடு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தது. பொழுது விடிய விடிய விளக்குகள் தூங்க ஆரம்பித்தன.

சூரியன் வீரியமாய் கதிர் பாய்ச்சத் துவங்க, கொஞ்சம் கொஞ்சமாக, தகவல் கிடைத்த ஆட்கள் அடர்ந்து வரத்துவங்கினார். எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி அப்பிக்கிடந்தது.

“இதென்ன சாவற வயிசா?”

”அட ரெண்டு நாள் முன்னாடிதானப்பா பேசுனனே”

”நேத்து சாயந்தரம், மாமங்கூட பேசுலாம்னு நெனச்சனே” என்ற ஆயாச வரிகள் காற்றில் மிதந்து கொண்டேயிருந்தன.

வரிசையாய் நின்ற ஆண்களிடம் புடவைத் தலைப்பு சுருட்டிய கைகளை நீட்டிவிட்டு, உள்நுழைந்தவர்கள் பெரும்பாலும் ஒப்பாரியெடுத்து அழ ஆரம்பித்தனர். துண்டோ கைக்குட்டையோ கைகளில் வைத்து கை நீட்டிய ஆண்கள் ஓரமாய்க் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்து, அன்றைய செய்தித் தாளைப் புரட்டிக் கொண்டே அக்கம் பக்கம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தனர். நேரம் கடக்கக்கடக்க துக்கம் அடைத்த கண்களோடு வந்தவர்கள், கொஞ்சம் அழுது, ’ப்ச்’ கொட்டி, ஆசுவாசப்பட்டு, தேநீர் குடித்து கலைந்து கொண்டிருந்தனர்.

ஒன்றுமே புரியாமல் சுருண்டு கிடந்த மகளுக்கு எச்சில் கசந்தது. எல்லாம் அடைபட்டுக்கிடந்ததுபோல் இருந்தது. அப்பா இல்லையென்று நினைக்கக்கூடத் தோன்றவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நினைக்கவோ, நம்பவோ சற்றும் இடம் கொடுக்காமல் மனம் அடைபட்டுக்கிடந்தது. இறுக்கம் சற்றும் தளரவில்லை. ஒரு துளி அழுகை வரவில்லை. அழுவது எப்படி என்றுகூடத் தெரியாமல் மனம் கெட்டிப்பட்டுக்கிடந்தது.

அப்பாவின் நிலைகுத்தியகண்கள் மட்டும் மூடிய இமைக்குள் பரவிக் கிடந்தது.

”பரவால்ல பாப்பா அழுவாம இருக்கா, என்னாயா பண்றது, நடந்தது நடந்து போச்சு, எல்லாம் நம்ம கையிலையா இருக்கு, தலசுழுப்பு அவ்வளவுதான்னு இருந்துருக்குது” என யாரோ பேசிக்கொண்டிருந்தது மெதுவாய் காதுகளில் விழுந்தது. கதறி அழும் அம்மாவையும், அவ்வப்போது கசிந்து வரும் அண்ணன், தம்பியின் அழுகுரல்களையும் நீண்ட நேரமாய் தனக்குள் அடர்த்தியாய் சேமிக்க மட்டுமே செய்தாள்.

ஒன்று சாப்பிடாமல் கசந்த வாயைக்கொஞ்சம் கொப்பளிக்கலாமே என்று எழுந்தவளை, அண்ணி என்னவென தலையசைத்துக் கேட்டாள். வாய் கொப்பளிக்கனும் என்று சைகை காட்ட, கைபிடித்து அணைத்து வெளியில் கொண்டுவந்தாள். அணைத்த அண்ணியின் கதகதப்பு கொஞ்சம் தேவையானதாக இருந்தது. வெளியில் தெறிக்கும் வெயில் கண்ணைக் கூசவைக்க இமை சுருக்கி பழக்கப்படுத்தினாள்.

வாசலையொட்டியிருந்த குளியலறைப் பக்கம் நகர்ந்தவளின் கவனத்தை ஒற்றைக் காக்கையின் குரல் மாடியை நோக்கி ஈர்த்தது. திக்கென்று நிமிர்ந்தவளின் கண்ணில் மாடி கைப்பிடிச்சுவர் மேலிருக்கும் விளக்குக் கம்பத்தில் உட்கார்ந்துகொண்டு கீழே பார்க்கும் ஒற்றை காகம் தெரிந்தது. காகத்தின் காலடியில் முதல் நாள் இரவு அப்பா போடச்சொன்ன விளக்கு வெயிலில் மிக மங்கலாய் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. ஏற்றிய விளக்கை அணைக்கும் முன் நிரந்தரமாய் இல்லாமல் போன அப்பாவை நினைக்க கண்கள் சுழன்றன. எங்கிருந்தோ வந்த அப்பா அப்படியே மனதுக்குள் பலமாய் இறங்கினார்.

அடிவயிற்றிலிருந்து எழுந்த ”அப்ப்ப்பாஆஆஆஆஆ....” என்ற அழுகுரல் அண்டமெங்கும் அதிரத்துவங்கியது.