FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on September 18, 2021, 04:46:07 PM

Title: வெளி
Post by: இளஞ்செழியன் on September 18, 2021, 04:46:07 PM
தூக்கம் பிறழ்ந்த
நேற்றைய இரவிலும்
இன்றும்
நினைவுகளை ஆக்கிரமித்திருந்தது
உன் நியாபகங்கள்

எழுதித் தீராத ஒரு துயரை
பகுத்து தெளிவாகிடாதொரு தவிப்பை
ஏந்தித் தழும்பும் நிகழ்வுகளின் தடாகமாய்
மனக்கரையின் விளிம்புகளில்
மோதித் தெறிக்கும்
உறவுத் தொடர்புகளில்
சிலிர்த்துக் கிளம்புகிறது
நினைவுத் தொடரின் ரோம முனை

என் இருப்பின் தக்கவைப்புகளில் மட்டும்
மீந்திருக்கும் உன்னை
தற்காத்திடவென்றே
ஓடிக் களைக்கிறது உயிர்

ஒருவேளை
மிச்சமிருக்கும் என் ஆகாயத்தில்
மீந்திருக்கும் விடியலின் வெளிச்ச துகள்
நீயாக இருக்கலாம்

இன்னும் இந்த பூலோகம்
பிடித்தமானதாய் தொடர்ந்திடவென்றே
நேசம் தரிக்கிறேன்

அசுரவேகத்தில் சுழன்றபடியே
என் காட்சிகளின் வெறுமை களைகிறேன்

களைப்பாக இருக்கிறது...

அயர்ச்சி மறைக்கவே இன்னும் கொஞ்சம்
நேசம் பூசிக்கொள்கிறேன்

நறுமணத்தால் நிறைகிறது என் வெளி
எங்கோ பூக்கள் மலர்ந்திருக்கலாம்...