தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

(1/6) > >>

Gayathri:
எஸ். ராமகிருஷ்ணன்



S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.

He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.

Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.

His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.

A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.

His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.

He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.

A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.

The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.

He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like Baba, Album, Chandaikkozhi, Unnale Unnale, Bhima, Dhaam Dhoom, Chikku Bukku and Modhi Vilaiyadu with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.

Among the many important awards won by him are  Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.

Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.

Gayathri:
எதிர் கோணம்
சிறுகதை

பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான்,

ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள்  அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது

சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான்,

அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர்  விளம்பரத்தில் பார்த்திருக்கிறார், சமீபத்தில் அவர் பார்த்த ஒரு திரைப்படத்தில் கூட அதன் நாயகன் இது போன்ற ஒரு கேமிராவை கையில் வைத்திருந்த ஞாபகம் வந்தது.

அதே  கேமிரா தான், பார்க்க பார்க்க ஆசையாக வந்தது, ஒரு காலத்தில் சவரிமுத்துவிற்கு சொந்தமாக ஒரு அக்பா கேமிரா ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்த்து, ஆனால் அதற்காக அவரால் பணம் சேர்க்க முடியவில்லை, மூத்த மகள் சுகுணாவிற்கு திருச்செந்தூரில் மொட்டை போட சென்ற போது மச்சினன் வைத்திருந்த யாசிகா கேமிராவை இரவல் வாங்கிக் கொண்டு போய் புகைப்படம் எடுத்தார்,

பிளாஷ் இல்லாத காரணத்தால் உருப்படியாக போட்டோ எடுக்கமுடியாமல் போய்விட்டது, ஆனாலும் இரண்டு நாட்களாக அந்த கேமிராவை தன்னோடு கூடவே வைத்திருந்த்து அவருக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது, கேமிராவை கழுத்தில் போட்டுக் கொண்டவுடன் திடீரென தனது உயரம் மிக அதிகமாகிப்போனது போலவும், தன்னையே எல்லோரும் வியப்போடு பார்ப்பது போலவும் அவருக்கு தோன்றியது,

அந்த உந்துதலில் தான் டைம்கீப்பர் லாசரிடமிருந்த பழைய கேமிரா ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் வீட்டிற்கு தெரியாமல் கடன்வாங்கி ரகசியமாக கேமிராவை வாங்கி வந்தார், பொங்கல் விடுமுறையில் பிள்ளைகளை ஆற்றின் மணல்திட்டிற்கு அழைத்துப் போய் விதவிதமாகப் போட்டோ எடுக்க வேண்டும் என்று இரண்டு பிலிம் ரோல்கள் கூட வாங்கி வைத்திருந்தார்

தைப்பொங்கலுக்கு மறுநாள் வைப்பாற்றுக்குள் பெரிய விழா நடக்கும், ராட்டினங்கள், பலூன்விற்பவர்கள், விதவிதமான ரிப்பன் வளையல் விற்பவர்கள், தூள் ஐஸ், பாம்பே விற்பவர்கள், குறவன் குறத்தி ஆட்டம்,  இசைக்கச்சேரி என்று ஒரே குதூகலமாக இருக்கும்,

ஆற்றின் தென்பகுதியில் ஒரு உயரமான மணல்திட்டிருந்த்து, அதிலேறி பிள்ளைகள் மணலறச் சறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள், அந்த உயரமான மணல்திட்டினை ஒட்டி எஸ் வடிவில் வளைந்த கூந்தல்பனைமரம் ஒன்றிருந்தது,

அந்த பனைமரத்தின் அருகில் கையில் ஒரு ஒலைக்கிளி ஒன்றை கொடுத்து இரண்டுபிள்ளைகளையும் நிறுத்தி கலர் படம் எடுத்தால் மிக அழகாக இருக்கும் என்று கற்பனை செய்திருந்தார், அதற்காகவே பிள்ளைகளுக்கு அடர்ந்த நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் உடைகளும் வாங்கியிருந்தார்,

அன்றைக்கு ஆற்றில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, தனது கைப்பையில் இருந்து அவர் கேமிராவை வெளியே எடுத்த போது சுகுணா ஆச்சரியத்துடன் ஏதுப்பா என்று கேட்டாள்

டிரைவர் ரவியோடது என்று பொய் சொல்லி சமாளித்தபடி அவர்களை மணலில் நடத்திக் கூட்டிக் கொண்டுபோனார், அவர்கள் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாக ஒலைக்கிளி ஒன்றை வாங்கி கொடுத்து பனைமரத்தடிக்கு கூட்டிப் போனார்,

மணல்மேட்டில் இருந்து சரிந்து விழும் சிறுவர்கள் கைகளை விரித்தபடியே கூச்சலிட்டிக் கொண்டிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து சென்று கொண்டிருந்தது, பருத்திப்பால் விற்கின்றவன் தனது பானையில் மணல் விழுந்துவிட்டது என்று ஏசிக் கொண்டிருந்தான்,

சறுக்கும் சிறுவர்களை விலக்கி விட்டு இரண்டு மக்ள்களையும் பனைமரத்தடியில் நிறுத்திவிட்டு வாகான ஒரு கோணத்தில் படம் பிடிப்பதற்காக கேமிராவை முடுக்கினார், அதன் ஷட்டர் திறந்து கொள்ளவேயில்லை, கேமிராவை ஒரு குலுக்கி குலுக்கிவிட்டு மறுபடியும் இயக்கிப் பார்த்தார், இப்போது பட்டனை அமுக்கவே முடியவில்லை, எரிச்சலுடன் ஒங்கி அழுத்தினார், பட்டன் அப்படியே அமுங்கி நின்றுவிட்டது, என்ன எழவு கேமிரா என்று அலுத்துக் கொண்டபடியே அதை மறுபடியும் கடகடவென குலுக்கினார், கேமிராவின் அமுக்கும் பட்டன் வேலை செய்யவேயில்லை,

இப்போது கேமிராவை கழட்ட முடியாது, பிலிம்ரோல் வேறு போட்டாகிவிட்டது, என்ன செய்வது என்று புரியாமல் அதை மேலும் கீழுமாக மறுபடியும் குலுக்கி பார்த்தார், கேமிரா சுத்தமாக வேலை செய்யவில்லை, சே ஆயிரம் ரூபாயை ஏமாற்றி பிடுங்கிவிட்டானே என்று லாசர் மீது ஆத்திரமாக வந்தது, பிள்ளைகள் கையில் ஒலைக்கிளியோடு நின்று கொண்டேயிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து கொண்டேயிருந்தது

சவரிமுத்துவின் மனைவி கலா பொறுமையற்றவளாக சொன்னாள்

சுகுணா நீங்க போயி விளையாடு, உங்கப்பா போட்டோ எடுக்க ரெடியானது நானே கூப்பிடுறேன்

பிள்ளைகள் குடை ராட்டினத்தை நோக்கி நடந்து போனார்கள்,

சவரிமுத்து சலிப்போடு ஆற்றின் கரையில் டெண்ட் அடித்து பேமிலி போட்டோ எடுத்த தரும் ராயல் ஸ்டுடியோவிற்கு போய் ஆலோசனை கேட்கலாம் என்று நடந்து போனார், அங்கே போட்டோ எடுப்பதற்காக நிறைய கூட்டம் சேர்ந்திருந்த்து,

வேலை நேரத்தில் இதை எல்லாம் கவனிக்கமுடியாது என்று ஸ்டுடியோ முதலாளி சவரிமுத்துவை துரத்திவிட்டார்

திரும்பி வந்த போது ஏமாற்றமாக இருந்தது, வெயில் வேறு போய்க் கொண்டேயிருந்த்து, நினைத்தது போல ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது,

சவரிமுத்துவின் மனைவி மணலில் ஜமுக்காளத்தை விரித்து உட்கார சொன்னாள், ஒரமாக உட்கார்ந்தபடியே கேமிராவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்,

தன்னை சுற்றி நடக்கும் கொண்டாட்டங்ஙகள், ஆடல் பாடல்கள் எதுவும் அவர் மன்தின ஈர்க்கவேயில்லை, கேமிராவை எப்படியாவது சரிசெய்து பிள்ளைகளை போட்டோ எடுக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணம் ஒடிக் கொண்டிருந்த்து,

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் தலைகலைந்து பறக்க, உடைகள் கசங்க, அவரிடம் ஒடி வந்து கேமிராவை சரி பண்ணியாச்சாப்பா என்று கேட்டார்கள்,

இல்லைடா கண்ணு, நாளைக்கு எடுப்போம் என்று தலைகவிழ்ந்தபடியே சொன்னார், அவரது வருத்தமான முகத்தை கண்ட கலா சொன்னாள்

போட்டோ வேணும்னா, ஸ்டுடியோவில போயி பிடிச்சிகிடலாம், அதுக்கு எதுக்கு நல்ல நாளும் அதுவுமா மூஞ்சியை தூக்கிவச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க,  கைமுறுக்கு கொண்டு வந்திருக்கேன், தரவா

வேண்டாம் என முறைத்தபடியே கையில் மணலை அள்ளி அள்ளி மறுபக்கம் கொட்டிக் கொண்டிருந்தார், அன்று உருவான தீராதமனவருத்தம் இன்றைக்கு விழித்துக் கொண்டது

பஸ்ஸின் படியில் நின்றிருந்த அந்த பையன் கழுத்தில் இருந்த கேனான் கேமிரா அவரது ஆசைளை கிளறிவிட்டது,

பக்கத்தில் உள்ள சமணர்மலைக்கு போய்விட்டு வருகிறான் போலும்,

இந்த வயதில் டிஜிட்டல் கேமிரா, நிறைய லென்சுகளும் வைத்திருக்கிறான், கொடுத்துவைத்த பயல், ஆசையை அடக்கமுடியாமல் அவனிடம்  சவரிமுத்து கேட்டார்

கேனான் 5 டியா

அந்தப் பையன் காற்றில் மோதும் கேசத்தை இடது கையால் ஒதுக்கிவிட்டபடியே சொன்னான்

5டி, மார்க் 3, சிங்கப்பூர்ல வாங்கினது

பள்ளிபடிப்பை கூட முடித்திருப்பானா என்று தெரியாது, அதற்குள் 5 டி மார்க் 3 வாங்கியிருக்கிறான், அதுவும் சிங்கப்பூருக்கு போய் வாங்கியிருக்கிறான்,

வாழ்க்கை சிலருக்கு எல்லாவற்றையும் வாறி வழங்குகிறது, சிலருக்கு எதையும் அடைய முடியாமல் செய்துவிடுகிறது என ஆத்திரமாக வந்தது

பேருந்து சின்ன ஒடை பஸ் ஸ்டாப்பில் நின்றது, நாலைந்து கிராமவாசிகள் ஏறிக் கொண்டார்கள், சவரிமுத்து விசில் அடித்துவிட்டு கேமிரா வைத்திருந்த பையனுடன் எப்படி பேச்சு கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்,

பஸ்  சீரற்ற சாலையில் சென்று கொண்டிருந்த்து, ஒரு பள்ளத்தில் டயர் விழுந்து ஏறியதில் பேருந்து குலுங்கியது.

தம்பி நீங்க வேணும்னா என் சீட்ல வந்து உட்காருங்க.  ஏன் கேமிராவை வச்சிகிட்டு சிரமப்படுறீங்க என்று தனது சீட்டை விட்டு எழுந்து கொண்டான் சவரிமுத்து

அந்த பையன் வேண்டாம் என்று மறுத்தபடியே படியிலே நின்று கொண்டான்,, அதுவரை கால்கடுக்க நின்று கொண்டுவந்த ஒரு முதியவர் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார்,

சவரிமுத்து அந்த பையனிடம் பேசுவதற்கு தோதாக தானும படிக்கட்டில் நின்று கொண்டான். பையன் போட்டிருந்த பாரீன் செண்டின் மணம் தூக்கலாக இருந்தது

கேமிரா என்ன விலையாகுது எனக் கேட்டான் சவரிமுத்து

ஒன் செவண்டி எயிட் என்றான் அந்த பையன்

ஒரு லட்சத்து எழுபத்தியெட்டாயிரம் கொடுத்து ஒரு கேமிராவை விலைக்கு வாங்கியிருக்கிறான், ஒரு வருஷம் கண்டக்டர் உத்யோகம் செய்தால் கிடைக்க கூடிய வருமானமது,

என்ன வேலையிது, எதற்காக இந்த கண்டக்டர் உத்யோகத்தில் வந்து சேர்ந்தோம், எதற்காக திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டோம், ஏன் கைக்கு கிட்டாத விஷயங்களை மனது திரும்ப திரும்ப ஆசைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது என தன்மீதே ஆத்திரமாக வந்த்து

சமண மலைல மேற்கே ஒரு குகை இருக்குமே, அதுக்குள்ளே போனீங்களா, பேக் லைட்ல பாக்க ரொம்ப நல்லா இருக்கும், என ஆர்வத்துடன் சொன்னான் சவரிமுத்து

அந்த பையன் பதில் பேசவில்லை,  கேமிராவை நைசாக கையால் தொட்டு பார்க்கலாமா என ஆசையாக இருந்தது

பைபர் பாடியா என்று கேட்டான் சவரிமுத்து

அந்த பையன் கண்டு கொள்ளவேயில்லை, வேண்டுமென்றே தலையை திருப்பி சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியை வேடிக்கை பார்த்தபடியே வருவது சவரிமுத்துவுக்கு ஆத்திரமூட்டுவது,

படிக்கிறவயதில் ஆசைப்பட்டதை வாங்கமுடியாமல் போவதை கூட தாங்கிக் கொள்ள முடிகிறது, ஆனால் வேலைக்கு போன பிறகும் ஆசைப்பட்ட எதையும் வாங்க முடியவில்லை என்றால் என்ன வாழ்க்கையிது என்று எரிச்சலாக வந்த்து

பேருந்தின் வேகத்தில் அந்த பையன் கழுத்தில் இருந்த கேமிரா ஊசலாடி சவரிமுத்துவின் மேல்பட்டது, அந்த உரசலை அவர் ஆனந்தமாக அனுபவித்தார், எப்படியாவது ஒரு முறை அந்த கேமிராவை  கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும், முடிந்தால் ஒரு ஸ்நாப் அடித்துவிட வேண்டும் என உள்ளுற தோன்றிக் கொண்டேயிருந்தது

அந்த பையன் டீசர்ட்டினுள் காற்று புகுந்து சட்டையை படபடக்க செய்ய ஏகாந்தமாக  வந்து கொண்டிருந்தான்

என்ன இருந்தாலும் பிலிம்ல எடுக்குற மாதிரி கான்டிராஸ்ட் டிஜிட்டல்ல வராது, இப்போ கோடாக் பிலிம் கம்பெனியை நிறுத்திட்டாங்களாமே, என்றார் சவரிமுத்து

இதெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறாய் என்பது போல அந்த பையன் சவரிமுத்துவை முறைத்துப் பார்த்தான், பிறகு தானாக நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்துக் கொண்டான்,

அந்த சிரிப்பு சவரிமுத்துவிற்கு ஆத்திரமூட்டியது , ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை,

இதுல மெமரி 64  ஜிபியா.  பாடி மட்டும் எவ்வளவு வெயிட் இருக்கும் என மறுபடியும் கேட்டார்,

பையன் கடந்து செல்லும் வேப்பமரங்களையே பார்த்தபடி வந்தான்,

தன்னோடு அந்த பையன் பேசவிரும்பவில்லை என்பது சவரிமுத்துவிற்கு நன்றாக புரிந்த்து, ஏன் பேசினால் என்ன குறைந்து போய்விடுவான், காக்கி சட்டை போட்டுக் கொண்டு கண்டக்டராக இருப்பவனுடன் கேமிரா பற்றி பேசுவது அவமானத்திற்கு உரிய ஒன்றா, இந்த காலத்து பையன்கள் பெற்றோர்களுடன் கூட முகம் கொடுத்து பேசுவதில்லை, பிறகு எப்படி வெளியாட்களுடன் பேசுவார்கள்,

அந்த பையனின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்று சவரிமுத்துவிற்கு தெரியவில்லை, அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் ஏறினார்கள், பேருந்தினுள் முண்டியத்து  டிக்கெட் கொடுத்துவிட்டு திரும்ப வருவதற்குள் அந்த பையன் முன்படிக்கட்டிற்கு மாறியிருந்தான், சவரிமுத்துவிற்கு ஆத்திரமாக வந்த்து,

தன்னை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் முன்படிக்கட்டிற்கு போயிருக்கிறான், அவனை அப்படியே விட்டுவிடக்கூடாது, பயணிகளை விலக்கி  தள்ளி  நகர்ந்து முன்படிக்கட்டிற்கு வந்த போது அந்த பையன் ஒற்றைக் கையில் தொங்கிக் கொண்டு வருவது தெரிந்தது.

சவரிமுத்து ஒங்கி விசில் அடித்தார், பேருந்து சடன் பிரேக் போட்டு நின்றது

புட்போர்ட்ல நிக்குறவங்க எல்லாம் மரியாதையா மேலே வாங்க, யாராவது கிழே விழுந்து செத்துகித்துப் போனா நான் போலீஸ் கேஸ்ல லோல்பட வேண்டியிருக்கும், யோவ் உன்னை தான்யா  சொல்றேன், மேலே வா, என கத்தினார்

புட் போர்டில் நின்றிருந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கேலி செய்தபடியே சற்று உடலை வளைத்து உள்ளே வந்தார்கள்,

படியில் நின்றிருந்த நடுத்தரவயது ஆளின் சட்டையை  பிடித்து உள்ளே இழுத்து கத்தினார் சவரிமுத்து,

உனக்கெல்லாம் என்ன இளவட்டம்னு நினைப்பா, அவங்க தான் தண்ணி தெளிச்சிவிட்ட மாதிரி அலையுறாங்க, உனக்கு என்ன கேடு வந்துச்சி, உள்ளே வாய்யா

அந்த ஆள் வெளிறிப்போன முகத்துடன் உள்ளே காத்துவரலை, அதான் என்று சமாளித்தார்

காத்து வரல்லன்னா, டாப்புல ஏறி உட்காந்துக்கோ, ப்ரீயா காத்துவரும் என்றார் சவரிமுத்து,

அதைக்கேட்டு யாரோ சிரித்தார்கள், தனது வேடிக்கையை பேருந்தில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் நடுத்தரவயது ஆளை மேலும் கிண்டல் செய்த ஆரம்பித்தார் சவரிமுத்து, படியில் நின்றிருந்த கேமிராபையன் அந்த வேடிக்கைகளை ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்தில் தெரிந்தது,

புளியம்பட்டி ஸ்டாப்பை தாண்டியதும் பேருந்து பிரேக் அடித்து நிற்க துவங்கியது  சவரிமுத்து தலையை வெளியே எட்டிப்பார்த்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது, இந்த நேரத்திற்கு தூத்துக்குடி செல்லும் கூட்ஸ் ரயில் ஒன்று கடந்து போகும்,  கூட்ஸ் வருவதற்கு இன்னும் பத்து நிமிஷமிருக்கிறது,

கேமிரா வைத்திருந்த பையன் கிழே இறங்கி நின்றிருந்தான், கிழேயே அவனிடம் பேசி கேமிராவை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையோடு சவரிமுத்து   இறங்கி நின்று கொண்டார்,

அந்த பையன் வேண்டுமென்றே அவரை விட்டு விலகி ரயில்வே கேட் அருகில் போய் ரயில் வருவதை போட்டோ எடுப்பதற்கு உரிய இட்ம் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்

இந்த கல்லு மேல ஏறி நின்னு  ரயிலை போட்டோ எடுக்கலாம், நல்ல வியூ கிடைக்கும் என்றார் சவரிமுத்து

ரயிலை எல்லாம் போட்டோ எடுக்க பிடிக்காது என்றான் அந்த பையன்

அந்த குரலில் எரிச்சல் இருந்த்து போல தெரியவில்லை, நம்மோடு பேச ஆரம்பித்துவிட்டான், இனி அப்படியே பிடித்துக் கொள்ள வேண்டியது தான், என்று மனதிற்குள் சொல்லியபடியே, லோ ஆங்கிள்ல தண்டவாளத்தோட் கூட்ஸ் டிரைனை போட்டோ எடுத்தா சூப்பரா இருக்கும். என்று சொல்லி சிரித்தார் சவரிமுத்து

அந்த பையன் பதில் சொல்லாமல் ஒரு சூயிங்கத்தை வாயிலிட்டு மெல்ல ஆரம்பித்தான்

நானும் உன் வயதில் போட்டோ எடுத்திருக்கிறேன், அதில் ஒன்றுக்கு காஷ்மீரின் சுற்றுலா துறை விருது கூட கிடைத்திருக்கிறது என்பதை எப்படி சொல்வது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் சவரிமுத்து,

கடந்த காலத்தை இந்த ஐந்து நிமிசத்திற்குள் சொல்லி புரிய வைப்பது எளிதானதில்லை,

கூட்ஸ் ரயில் வருவத்ற்குள்  கேமிராவை ஒரேயொரு முறை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கிக் கொண்டிருந்த்து

எதற்குத் தயக்கம், வாய்விட்டு கேட்டுவிட வேண்டியது தான் என்பது போல அந்த பையனிடம் சிரித்த முகத்துடன் சொன்னார்

நானும் நல்லா போட்டோ எடுப்பேன்,

அந்த பையன் உதட்டை மடித்து அழுத்தியபடியே அப்படியா என்பது போல தலையாட்டினான், அந்த செய்கை சவரிமுத்துவை மேலும் ஆத்திரப்படுத்திய போதும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை, தொலைவில் இருந்து ரயில்வரும் ஹார்ன் ஒசை கேட்க ஆரம்பித்தது

உங்க கேமிராவை ஒரு நிமிஷம் பாக்கலாமா என்று கேட்டார் சவரிமுத்து,

அதை காதில் கேட்காதவனை போல நடித்த அந்த பையன் த்ரையில் கிடந்த ஒரு சிறிய கல்லை எடுத்து தண்டவாளத்தை நோக்கி வீசினான்

ஒருவேளை தான் கேட்டது அந்த பையனுக்கு நிஜமாகவே காதில் விழாமல் போயிருக்குமோ,இன்னொரு முறை எப்படிக் கேட்பது என்று கூச்சமாக இருந்தது,

அதற்காக கேட்காமல் விட்டுவிட்டால் இது போன்ற லேட்டஸ்ட் கேமிராவை கையால் தொட்டு பார்ப்பது இயலாமல் போய்விடுமே, சவரிமுத்து மீண்டும் முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னார்

நல்ல சாப்ட் லைட்டிங் இருக்கு, பஸ் பக்கத்தில வந்து நில்லுங்க, நான் உங்களை ஒரு போட்டோ எடுத்து தர்றேன்

நோ, ஐ டோண்ட் வான்ட் என்றான் அந்த பையன்,

இப்போது எதற்காக ஆங்கிலத்தில் பேசினான், டிக்கெட் கேட்கும் போது ஒழுங்காக தமிழில் தானே பேசினான், பிறகு இப்போது என்ன கேடு,  அவன் வேண்டுமென்றே தன்னை எரிச்சல்படுத்துகிறான், போடா மசிரே என்று திட்டுவதற்கு பதிலாக நாகரீகமாகச் சொல்கிறான், ஆனாலும் ஆத்திரப்படக்கூடாது,  வயது பையன்கள் அப்படிதானிருப்பார்கள்,  அது அவர்களின் இயலபு, மறுபடியும் அவனோடு இயல்பாக பேச வேண்டும்,

கூட்ஸ் ரயில் வரத் துவங்கியது, நிறைய பெட்டிகள் கொண்ட கூட்ஸ் அது, தடக் தடக் என நீண்டு போய்க் கொண்டேயிருந்த்து, பேருந்தின் கசகசப்பில் பெருமூச்சிட்டுக் கொணடிருந்தவர்கள் கூட தங்களை மறந்து கூட்ஸ் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள், வண்ணத்துபூச்சிகளின் கூட்டம் ஒன்று சாலையோரம் அடர்ந்திருந்த தும்பை செடிகளின் மீது பறந்து கொண்டிருந்தன,

பேருந்து  மறுபடியும் கிளம்பியது, அந்த பையன் இப்போது தனது கேமிராவையும் முதுகில் இருந்த பையையும் முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் நீட்டி மடியில வைச்சிகிடுங்க, இறங்கும் போது வாங்கிகிடுறேன் என்றான், அந்த பெண் வாங்கிக் கொண்டாள்

சவரிமுத்துவால் அதை தாங்கிக்  கொள்ளவேயில்லை, இந்த மயிரான் வேண்டுமென்றே தன்னுடன் விளையாடிவிட்டான், அவனுக்கு தான் யார் என்பதை புரிய வைக்க வேண்டும் போலிருந்தது,

பேருந்து வள்ளிக்குளம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒடிவந்து ஆட்கள் பேருந்தில் ஏற முண்டியத்தார்கள், துணிமூட்டையுடன் ஒரு ஆள் பேருந்தில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான், சவரிமுத்துவின் ஆத்திரம் அந்த துணிவியாபாரி மீது திரும்பியது

துணிமூட்டையை உள்ளே திணித்துக் கொண்டிருந்த ஆளின் சட்டையை பிடித்து கிழே இறக்க முயன்றார் சவரிமுத்து, அந்த ஆள் அதை கண்டுகொள்ளாமல் முண்டியத்து உள்ளே போய்க் கொண்டிருந்தான்

சவரிமுத்து ஆத்திரத்துடன் கத்தினார்

யோவ் அறிவு கெட்ட முண்டம், பஸ்ஸை விட்டு கையை எடுயா, இவ்வளவு பெரிய துணிமூட்டையை எல்லாம் பஸ்ல ஏத்த முடியாது, கிழே இறங்கு

டபிள் லக்கேஜ் வாங்கிக்கோங்க, எப்பவும் கொண்டு போறது தானே , இப்படி ஒரமா வச்சிருக்கிடுறேன், என்றான் துணிவியாபாரி

லக்கேஜ் எவ்வளவு போடணும்னு எனக்கே சொல்லி தர்றியா,  வண்டில ஏற்றமுடியாதுன்னா, முடியாது தான், துணிமூட்டையை ஏத்திகிட்டு போக இது என்ன கழுதையா, கையை எடுய்யா,

பேருந்தினுள் இருந்து  ஒருவர் குரல் கொடுத்தார்

கண்டக்டர், ஏன்யா வெட்டியா தகராறு பண்றே, பாசஞ்சர் லக்கேஜ் கொண்டுவரக்கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா, காக்கி சட்டையை போட்டுட்டா பஸ்ஸே இவங்க அப்பன் வீட்டு இதுனு நினைச்சிடுறாங்க

அதைக்கேட்ட சவரிமுத்துவுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது,

சட்டம் பேசுற அந்த முகரை யாரு, எங்கே காட்டு பாப்போம், யாருடா அது, என சப்தமிட்டார்

பேருந்தினுள் அப்படி பேசியது யார் என தெரியவில்லை, பேருந்து மெதுவாக புறப்பட்டது, சவரிமுத்து கோபம் தணியாமல் ஒங்கி விசில் அடித்தான்,

பேருந்து பிரேக் அடித்து நின்றது

துணிவியாபாரிக்கு ஏண்டுகிட்டு சப்தம் போட்ட முகரை யாருனு தெரியாம வண்டி கிளம்பாது, கண்டக்டர்ன்னா என்ன இளக்காரமாக போச்சா,  நானும் காலேஜ்ல படிச்சிருக்கன், எனக்கும் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கு, காஷ்மீர்ல போயி வேலை பாத்தவன்டா நான்,  எகத்தாளம் பேசுன அந்த ஆள் யாருனு இப்ப தெரிஞ்சாகணும்

தாடி நரைத்துபோயிருந்த ஒருவர்  அமைதியான குரலில் சொன்னார்

கண்டக்டர், யாரோ தெரியாம பேசிட்டாங்க விடுங்க, நீங்க் தான் அனுசரிப் போகணும்

அப்படி விடப்போயி தான் தலைமேல ஏறுறாங்க, இன்னைக்கு நான் ரூல் படி தான் நடக்க போறேன், படிக்கட்டில நிக்குற எல்லா ஆட்கள் எல்லாம் கிழே இறங்கி அடுத்த பஸ்ல வாங்க, இல்லேன்னா பஸ் கிளம்பாது

படியில் நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிரைவர் ஹார்ன் அடித்தபடியே நேரமாச்சி சவரியண்ணே என்று குரல் கொடுத்தார்

படியில நிக்குற ஆள் எல்லாம் தான  இறங்குறாங்க, இல்லே நான்  போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விடச்சொல்லட்டும்மா என்றார்

சும்மா ஒண்ணும் நிக்கலை, டிக்கெட் எடுத்திருக்கோம் என்று யாரோ சொல்வது கேட்டது

அப்போ வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுவோம், புட்போட் டிராவலுக்கு 500  ரூவா பைன்னு சட்டம் இருக்கு, தாசண்ணே வண்டியை எடுங்க,

படிக்கட்டில் நின்றிருந்த ஏழெட்டு பேர் பேருந்தை விட்டு இறங்கிக் கொண்டார்கள், கேமிரா பையன் தனது பையை, கேமிராவை அந்தபெண்ணிடம் இருந்து வாங்கிக் கொண்டான், அவன் முகத்தில் கலக்கம் தெரிகிறதா என்று சவரிமுத்து பார்த்தார், சலனமேயில்லை, அவன் கேமிராவை  கழுத்தில் போட்டபடியே நடக்க துவங்கியிருப்பது தெரிந்தது

பேருந்து கிளம்பியது, வெளியே எட்டிப்பார்த்தார், அந்த பையன் தனது கேமிராவை திறந்து ஒடும் பஸ்ஸையும் அதிலிருந்து எட்டிப்பார்க்கும் சவரிமுத்துவையும் சேர்ந்து போட்டோ எடுப்பது தெரிந்தது

தனது முகம் அந்த போட்டோவில் நன்றாக வந்திருக்குமா, என்ன லென்ஸ் போட்டிருப்பான், அவன் நின்ற இடத்தில் இருந்து பேருந்து எவ்வளவு தூரத்தில் போய் கொண்டிருந்தது, போகஸ் சரியாக வந்திருக்குமா, என்று அடுத்தடுத்து ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின,

எதற்காக  தேவையில்லாமல் இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆழமான வருத்தமும் அவருக்குள் எழுந்து அடங்கியது,

அந்த பையனை அப்படி நடத்தியிருக்ககூடாது என்று நினைத்தபடியே பேருந்தின் விசில் அடித்து அடுத்த ஸ்டாப்பில் இருந்த கல்லூரி மாணவர்களை படியில் ஏற்றி கொண்டார்,

படியில ஆள் ஏத்தக்கூடானு இப்போ தான் சண்டைபோட்டு கத்துனான் அதுக்குள்ளே என்ன ஆச்சி  என டிரைவர் திட்டுவது காதில் கேட்டது,

விடுங்கண்ணே, நாம தான் அனுசரிப்போகணும் என்றபடியே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தான் சவரிமுத்து

•••

உயிர்மை இதழில் வெளியான சிறுகதை.

Gayathri:
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை
2007ல் வெளியான சிறுகதை


ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் பலமுறை முயன்றிருக்கிறாள். ஆனால், தண்ணீருக்குள் வீசிய ரப்பர்பந்து தானே மேலே வந்துவிடுவது போல, அவள் எவ்வளவு முயன்றாலும் பிறந்த நாள் தானே நினைவுக்கு வந்துவிடுகிறது.

ஜி.சிந்தாமணி ராயப்பேட்டையில் வசிக்கிறாள். 40 வயதை நெருங்குவதற்குள் நரையேறி, பருத்த சரீரம் கொண்டவளாகிவிட்டாள். அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்குக்கூட இப்போதெல்லாம் மறந்து போய் விடுகிறது.

அதை யார் கவனிக்கப் போகிறார்கள்! இப்போது அவள் முகத்தை கூர்ந்து நோக்குகிறவர்கள் யார் இருக்கிறார்கள். அவளாகவே தன்னைப் பார்த்துக்கொள்வதைத் தவிர மற்றவர்களுக்கு அவளிடம் ஈர்ப்பில்லை.

அவள் கடந்த சில வருடங்களாகவே எப்போதும் ஒரு வட்டக்கண்ணாடியை தனது ஹேண்ட்பேகில் வைத்திருக்கிறாள். அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதோ, சாப்பிட்டு முடித்த பிறகோ அந்தக் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொள்வாள். அப்போதெல்லாம் அவளுக்குத் தன் மீதே தாங்க முடியாத வேதனை கவிழத்தொடங்கிவிடும். கண்ணுக்குத் தெரியாமல் உப்பு தண்ணீரில் கரைந்துவிடுவதைப் போல அவளிடமிருந்த அழகு யாவும் கரைந்து போய்விட்டது அவளை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவளுக்குத் தனது பிறந்தநாள் வரப்போவது நினைவுக்கு வந்தது. அதை அலுவலகத்தில் உள்ள யாரிடமாவது சொல்லலாமா என்று யோசித்தாள். கேலி செய்வதைத் தவிர அவர்களால் தனது பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றியது.

இந்த முறை எப்படியாவது அந்த நாளை மறந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளாக முடிவு செய்துகொண்டாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவளுக்கு இரண்டு நாட்களாகவே பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன வயதில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் போலிருந்தது.தன்னை அறியாமல் ஒவ்வொருவரையாகக் கூர்ந்து பார்க்கத் துவங்கினாள். உலகில் 40 வயதைக் கடந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தருவதாக இருந்தது. அதோடு, எவரும் தங்கள் வயதை நேரடியாக வெளிக்காட்டிக்கொள்வது இல்லை என்பது அவளுக்கு மகிழ்வைத் தந்தது.

இன்றைக்கும் அவள் விழிப்பதற்கு முன்பாகவே மனதுக்குள் ஒரு குரல் ‘இன்றைக்கு உனது பிறந்தநாள்’ என்று கூவியது. அதற்குச் செவிசாய்க் காதவளைப் போல கொஞ்ச நேரம் வேண்டுமென்றே படுக்கையில் கிடந்தாள். கல்லூரிக்குச் செல்லும் மகள் குளித்துவிட்டு ஈரத்தலையோடு அறைக்குள் வந்து தனது உடையை தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. மணி ஆறரையைத் தாண்டி யிருக்கவேண்டும்.

சிந்தாமணி எழுந்து எப்போதும் போல அவசர அவசரமாகச் சமையல் செய்யத் துவங்கினாள். இருப்பதிலேயே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத அரக்கு நிற பூ போட்ட சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வீட்டில் அவளது கணவன் டி.வி. பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். சின்னவள் பள்ளிக் கூடம் கிளம்புவதற்காகபுத்த கங்களை எடுத்துத்திணித்துக் கொண்டிருந்தாள்.

யாராவது தனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பார்களோ என்று ஒரு நிமிஷம் தோன்றியது.அவர வருக்கு அவரவர் அவசரம். இதில் தானே சொல்லாமல் எப்படித் தன் பிறந்தநாளை நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்தபடியே, தன் டிபன்பாக்ஸில் சாப் பாட்டை அடைத்துக்கொண்டாள். மணி எட்டு இருபதை நெருங்கும்போது அவள் மணிக்கூண்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பாள். இன்று ஐந்து நிமிஷம் லேட்!

பேருந்து நிலையத்தில் பூ விற்பவள் முன்பாக சிவப்பு, மஞ்சள் ரோஜாக்கள்குவிந்து கிடந்தன. கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருந்தவள் சிந்தாமணியைக் கண்டதும் மௌனமாகிவிட்டாள். தான் மஞ்சள் ரோஜாவை வாங்கமாட்டோம் என்று எப்படி இந்தப் பூக்காரி முடிவு செய்தாள் என்று அவள் மீது ஆத்திரமாக வந்தது. அவளிடம் இனிஒரு போதும் பூ வாங்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பள்ளி மாணவிகள் எதற்கோ சத்தமாகச் சிரிப்பதும் ஒருவரையருவர் வேடிக்கையாக அடித்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ‘40 வயதைத் தொடும்போது உங்களிடமிருந்து சிரிப்பு யாவும் வடிந்து போய்விடும். அதற்குள் சிரிக்கிற மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்’ என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டாள்.

ஜி.சிந்தாமணியின் அலுவலகம் சானிடோரியத்தை ஒட்டியிருந்தது. இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். அன்றைக்கு பேருந்துகளில் கூட்டம் ததும்பிக்கொண்டு வந்தது. அதோடு பேருந்து நிறுத்தத்தை விட்டுத் தள்ளி நிறுத்தினார்கள். அவள் ஓடிப்போய் ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. பெருமூச்சு வாங்க அவள் நின்றபோது, பிறந்த நாளும் அதுவுமாக ஏன்தான் இப்படி உயிரைக் கொடுத்து ஓடுகிறோமோ என்று வருத்தம் கொப்பளித்தது.

பிரமாண்டமாக சிதறிக்கிடக்கும் இந்த நகரம், அதன் லட்சக்கணக்கான மக்கள், இரக்கமில்லாத சூரியன், நெருக் கடியான சாலைகள், எவரையும் அர வணைத்துக்கொள்ளாத கடல், புகையும் தூசியும் படிந்துபோய் காற்றில்லாமல் நிற்கும் மரங்கள் என எல்லாவற்றின் மீதும் கோபம் பொங் கியது. தனக்குத்தானே அவள் எதையோ பேசிக்கொண்டு இருப்பதை அருகில் இருந்த பெண்கள் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வெயில் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டு இருந்தது. முன்பாவது அவள் குடை வைத்திருந்தாள். அதை கல்லூரிக்கு செல்லும் மகள் கொண்டு போக துவங்கியபிறகு புதிதாக குடை கூட வாங்கத் தோன்றவில்லை.

ஒவ்வொரு பேருந்தாகக் கடந்து சென்றபடியே இருந்தது. மணி 9:20&ஐ தாண்டியது. அலுவலகம் போய்ச் சேர் வதற்குள் மணி பத்தரை ஆகிவிடும் போலிருந்தது. இன்றைக்கு ஏலச்சீட்டு விடும் நாள் வேறு. அவள் சீட்டு பிடிக்கிறவள் என்பதால், அதை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிடும்.

சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை ஒரு பசு தின்றுகொண்டு இருந்தது. போஸ்டர் தின்னும் பசுவின் பாலைத்தான் நாம் குடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சிறு ஆத்திரம் முளைவிட்டு எழுந்து, மறுநிமிஷமே அடங்கியது.

ஷேர் ஆட்டோ வந்து நின்றது. ஜி.சிந்தாமணி அதற்குள் தன்னைத் திணித்துக்கொண்டபோது மூச்சு முட்டியது. ஆட்டோவினுள் ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரோடு ஒருவர் நெருங்கி, அடைந்து கிடந் தார்கள். அந்த முகங்களில் நிம்மதி இல்லை.

ஆட்டோ சம்ஸ்கிருத கல்லூரியைக் கடந்தபோது, ‘எதற்காக நான் அலுவலகம் போகவேண்டும்? ஏன் இப்படிப் பறந்து பறந்து வேலை செய்யவேண்டும்? யாருக்குப் பயந்து இப்படி அல்லாடவேண்டும்?’ என்று தோன்றியது. அந்தக் கேள்விகள் அவளுக்குள் நீருற்று போல வேகத் தோடு பொங்கி வழியத்தொடங்கின.ஏதோ முடிவு செய்தவளைப் போல, லஸ் கார்னரில் ஆட்டோ நின்றபோது இறங்கிக்கொண்டாள்.

சாலையைக் கடந்து எதிர் திசைக்கு வந்தபோது, மனது சிக்கலில் இருந்து விடுபட்டது போன்ற நிம்மதி அடைய துவங்கியது. என்ன செய்வது என்று யோசித்தாள். முதலில் ஒரு பூக்காரி யிடம் மஞ்சள் ரோஜாவாகப் பார்த்து வாங்கவேண்டும் என்று தோன்றியது.அவள் தன் ஹேண்ட் பேகை திறந்து பார்த்தாள். சீட்டுப் பணம் ரூ.2000 இருந்தது. ஒன்று போல உள்ள இரண்டு மஞ்சள் ரோஜாக்களை வாங்கிக் கூந்தலில் சொருகிக்கொண் டாள். பிறகு, தன் வட்டக்கண்ணா டியை எடுத்து முகம் பார்த்துக்கொண் டாள். அந்த ரோஜா அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மெல்லிய வெட்கம் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.

ஏதாவது ஓட்டலில் போய் இனிப்பு சாப்பிடவேண்டும் போல் இருந்தது. ஆட்டோவில் ஏறிக் கொண்டு, பெங்கால் ஸ்வீட்ஸ் விற்கும் கடைக்குப் போகச் சொன்னாள். கடை முழுவதும் குளிர்சாதனம் செய்யப் பட்டிருந்தது. காலை வேளை என்ப தால் ஆட்கள் அதிகம் இல்லை. அவள் ரசகுல்லா, குலோப் ஜாமூன் என நான்கு விதமான இனிப்பு சாப் பிட்டாள். பில் கொடுக்கும்போது, கடையில் இருந்த வயதானவங்காளியிடம் தனக்கு இன்று பிறந்தநாள் என்று சொன்னாள். அவர் மௌனமாகத் தலையாட்டியபடியே மீதிச் சில்லறையைக் கொடுத்தார்.

வெளியே வந்தபோது, சாலையில் வெயில் ஒரு சினைப்பாம்பு போலத் திணறியபடியே ஊர்ந்துகொண்டு இருந்தது. அவள் ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தாள். கடைக்குச் சென்று, பெரிய ஃப்ரேம் வைத்த கறுப்புக் கண்ணாடி ஒன்றை 200 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவளுக்கு வேடிக் கையாக இருந்தது.

திடீரென உலகம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு சாந்தம்கொண்டது போலிருந்தது. ஸ்பென்சருக்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். அவள் தன் மகளோடு ஸ்பென்சருக்கு சென்றிருக்கி றாள். ஆனால், தனியே இது போன்ற இடங்களுக்குப் போனதில்லை.

ஸ்பென்சரில் போய் இறங்கியபோது, உள்ளே இருபது வயதைத் தொட்டும் தொடாமலும் உள்ள இளைஞர்கள் ஆண் பெண் பேதமின்றி ஆங்காங்கே நிரம்பியிருந்தார்கள். இவ்வளவு பேர் இங்கே என்ன வாங்குவார்கள் என்று யோசனையாக இருந்தது.

நீலநிற ஜீன்ஸ் அணிந்த பெண் ஒரு இளைஞனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, மறுகையால் அவன் முகத்தைத் தடவியபடி நடந்துபோய்க்கொண்டு இருந்தாள். ஆங்காங்கே இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

தான் வாழ்வில் ஒரு முறைகூட இதுபோலப் பொதுஇடங்களில் கணவனோடு கை கோத்து வந்ததில்லை; ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றுக் கடந்து போய்விட்டது! 17வய தில் கல்யாணம் நடந்தது.அப்போதும் சிந்தாமணி வேலைக்குப் போய்க்கொண்டு தான் இருந்தாள். திருமணத் துக்காக ஐந்து நாள் லீவு கொடுத் தார்கள். அந்த ஐந்து நாட் களும் அவள் உறவினர்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போனதும், ஒரேயரு சினிமா வுக்குப் போனதும் மட்டுமே நடந்தது.

திருமணமான மூன்றாம் மாதமே அவள் சூல்கொண்டு விட்டாள். அதன் பிறகு எங்கேயும் போகவே முடிந்ததில்லை. அடுத்த வருஷம் ஒரு பையன், அதன் இரண்டு வருஷம் தள்ளி ஒரு பெண் என்று மாறி மாறி குழந்தைப் பேறு. வைத்தியம், வீடு, வேலை தவிர, அவள் இந்த யுவதிகள் போல ஐஸ்க்ரீமை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துச் சாப்பிடுவதை அறிந்ததே கிடையாது.

சிந்தாமணி மிகப்பெரிய ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கிக்கொண்டு, தனியே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். ஐஸ்க்ரீமை உதட்டின் நுனியில் வைத்து சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். இந்த ஐஸ்க்ரீம் கரைந்துபோவது போல தன் வயதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விடக்கூடாதா என்று தோன்றியது.

15 வயதில் அவளைப் பார்த் தவர்கள், அவள் நடிகை தேவிகாவைப் போலவே இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்கு தேவிகா வின் நினைவு வந்தது. ‘நீலவானம்’ படத்தில் தேவிகா இப்படியரு கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஓலைத் தொப்பியும் அணிந்திருப்பாள். அவள் சிரிப்பது தன்னைப் போலத்தான் இருக்கிறது. அதை யார் ஒப்புக்கொள்ளாவிட் டாலும் கவலை இல்லை என்று தோன்றியது. தனது ஹேண்ட் பேகில் இருந்த வட்டக் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்துக்கொண் டாள். முகத்தின் ஊடாக எங்கோ தேவிகாவின் சாயல் ஒளிந்துகொண்டிருப்பது போலி ருந்தது.

தான் இப்படிக் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்போல் இருந்தது. அதோடு, எதற்காகவோ தான் சத்தமாகச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. இது போன்ற வணிகவளாகங்களில் எங்கு பார்த்தாலும் சிரிப்பு சிந்திக்கிடக்கின்றது. ஆனாலும், தன் வயதுடைய பெண்களில் எவரும் சிரிக்கிறார்களா என்று ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். அவள் மேஜையைச் சுத்தம் செய்ய வந்த பையனிடம் இன்று தனக்குப் பிறந்தநாள் என்று சொன் னாள். அவன் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

எழுந்து லிப்டில் ஏறி, மூன்றாவது தளத்துக்குச் சென்றாள். விரல் நகங்களுக்கு பூசும் மினுமினுப்பாக பச்சையும் ஜிகினாவும் கலந்த நெயில்பாலீஷ் ஒன்றை வாங்கி பூசிக் கொண்டாள். பினாயில் வாசம் வீசும் பாத்ரூமின் மிகப் பெரிய கண்ணாடி முன் நின்றபடியே தன்னைத்தானே பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

வயது அன்று ஒரு நாள் மட்டும் அவளிடமிருந்து பின்திரும்பிப் போய்க்கொண்டு இருந்தது போலிருந்தது. அவள் சிரிப்பை அடக்கமுடியாமல் கர்சீப்பால் வாயைப் பொத்தியபடி வெளியே வந்தாள். தனது டிபன்பாக்ஸில் இருந்த சாப்பாட்டை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு காலி டிபன்பாக்ஸை பையில் போட்டுக்கொண்டாள். நாள் முழுவதும் அப்படியே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

திடீரென இந்த நகரம் அவளுக்கு மிகப் புதிதாக தெரிந்தது. தான் இதுவரை பார்த்திராத கட்டடங் களும் கார்களும் மனிதர்களும் நிரம்பியதைப் போல் இருந்தது. கால் டாக்ஸியிலும் ஆட்டோவிலு மாக அவள் சுற்றி அலைந்தபடியே இருந்தாள். தனக்கு இந்த நகரில் வீடில்லை. குடும்பமில்லை. தெரிந்த மனிதர்கள்கூட யாருமில்லை. தான் தனியாள், தன் பெயர் தேவிகா என்று சொல்லிக்கொண் டாள். அன்றைய பகல் முழுவதும் திரையரங்கம், உணவகம், ஜவுளிக் கடைகள் என்று அலைந்து திரிந் தாள்.

மாலையில் அவள் கடற்கரையைக் கடந்தபோது, ஆயிரமாயிரம் கால்கள் தழுவிச் சென்றபோதும் கடல் தனிமையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அலுவலகம் முடிந்து ஆட்கள் வீடு திரும்பும் நேரத்தில், அன்றைய நாள் முடிந்து கொண்டு இருப்பது அவளுக்குள் புகையைப் போல ஒரு மெல்லிய வேதனையை வளர்க்கத் துவங்கியது. இன்றைக்கு ஏல நாள்; தன்னை எதிர்பார்த்துக்கொண்டு ஆட்கள் காத்திருப்பார்கள் என்று தோன்றியது. மறுநிமிஷமே அது தனக்கில்லை; ஜி.சிந்தாமணிக்கு! தான் தேவிகா என்று அவளாகவே சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.

இரவில் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே நகரின் வீதிகளில் நடந்துகொண்டிருந்தாள். இரானி டீக்கடையில் அமர்ந்து சமோசாவும் டீயும் குடித்தாள். புதிதாக ஒரு செருப்பு வாங்கிக் கொண்டாள். யோசிக்கும்போது, அவளுக்கு தன்னிடம் ஆசைகள்கூட அதிகம் இல்லை என்று தோன்றியது.

சாலையைக் கடந்தபோது காய்கறிக் காரன் ஒருவன் அப்போதுதான் பறித்து வந்தது போன்ற கேரட்டுகளை குவித்துப் போட்டு விற்றுக்கொண்டு இருந்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகலாமா என்று நினைத்தாள். திருமணமான இந்த 22 வருஷத்தில் எவ்வளவு காய்கறிகள் வாங்கிவிட்டோம்! இனியும் எதற்காக வாங்கவேண்டும் என்று எரிச்சலாக வந்தது. ஒரேயரு கேரட்டை மட்டும் காசு கொடுத்து வாங்கிக் கடித்துத் தின்றபடியே, சாலையைக் கடந்து நடக்கத் தொடங்கினாள்.

சாலையோரம் ஒரு ஆள் ரப்பர் பந்துகள், பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தான். அவன் முன்னால் நாலைந்து பேர் தரையில் கொட்டிக்கிடந்த பொருட்களில் தேடி ஏதோ வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சிந்தாமணி குனிந்து தானும் ஒரு தண்ணீர்த் துப்பாக்கி வாங்கிக் கொண்டாள். அதில் எப்படி தண்ணீர் ஊற்றுவது என்று கேட்டதும், பொம்மை வியாபாரி தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த கலங்கிய தண்ணீரை அதில் ஊற்றி அடித்துக் காட்டினான். அவள் அதைக் கையில் வாங்கி சாலையை நோக்கித் துப்பாக்கி விசையை அமுக்கினாள். தண்ணீர் சாலையில் நெளிந்து போனது அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

மணிக்கூண்டை நெருங்கும் போது, மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. பேருந்து நிலையத் தில் யாருமே இல்லை. ஒரேயரு பிச்சைக்காரன் மட்டும் தனியே ஏதோ கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டு இருந்தான். அவள் தன் வீட்டை நோக்கி நடந்து வர துவங்கியபோது நடை வேகம் கொள்ளத் துவங்கியது. எங்கிருந்தோ மறைந்திருந்து வயது தன்மீது தாவி ஏறிக் கொண்டது போலிருந்தது. அவள் தன்னிடமிருந்த கறுப்புக் கண்ணாடி மற்றும் நெயில் பாலீஷை என்ன செய்வது என்று தெரியாமல், இருட்டில் தூக்கி எறிந்தாள். அவள் வீடு இருந்த சந்தில் தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டு இருந்தது.

தன்னிடமிருந்த தண்ணீர்த் துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு அவள் முகத்தில் வழிந்தது. ஒரு நிமிஷம் தன்னை மறந்து நின்றபடியே அழத் தொடங்கினாள். அன்றைக்குத் தனது பிறந்த நாள் என்பதை நினைத்து, கேவிக் கேவி அழுதாள். பிறகு, ஆத்திரத்தோடு அந்தத் துப்பாக்கியை குப்பைத் தொட்டியை நோக்கி வீசினாள்.

கடகடவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீடு பூட்டிக்கிடந்தது. உள்ளே தொலைகாட்சி ஓடும் சத்தம் கேட்டது. காலிங்பெல்லை அமுக்கும்போது, ஒரு முறை அவளை அறியாமல் தேவிகா வின் நினைவு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் ஜி.சிந்தாமணி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

கதவு திறந்து, வீடு எந்த மாற்றமும் இல்லாமல் அவளை உள்வாங்கிக் கொண்டது.

Gayathri:
தூய வெளிச்சம்
சிறுகதை

கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு  அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று,

இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள்,  அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த குடும்பமது, எண்பது வருஷத்திற்கும் மேலாக மூன்று தலைமுறையினர் வாழ்ந்தவீடு கண்முன்னே இடிபட்டுக் கொண்டிருந்தது,

அந்த வீட்டை பத்து வருஷமாக கோர்ட் கேஸ் ஒன்றின் காரணமாக மூடிப்போட்டிருந்தார்கள், இப்போது சென்னையில் உள்ள குமாரசாமி மகன் பக்கம் கேஸ் ஜெயித்துவிட்டதாகவும் அவன் உடனே கைமாற்றி விற்றுவிட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்

வீட்டிற்குள் போய் பார்க்கலாமா என்ற யோசனையுடன் கோச்சடை சாலையிலே நின்று கொண்டிருந்தான், அந்த வீட்டிற்குள் அவன் ஒரேயொரு முறை இரவில் திருடுவதற்காக போயிருக்கிறான், வீட்டிற்குள் அவன் வந்து போனது வீட்டுஆட்கள் எவருக்கும் தெரியாது, திருடியதை கூட யாரும் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடைக்கு நன்றாக நினைவிருந்தது

அன்று மழை நாள், அந்த வீட்டிற்குள் நீலநிற விடிவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது, அந்த வெளிச்சத்தில் சுவரில் இருந்த புகைப்படங்கள்,  காலண்டர் மற்றும் மரமேஜை யாவும் விசித்திரமாக தெரிந்தது, ஹாலில் பெரிய ஊஞ்சல் போட்டிருந்தார்கள், அந்த ஊஞ்சலை தாண்டியதும்  சாப்பிடும் மேஜை கிடந்தது, சாப்பிடும் நாற்காலியில் அழுக்கு துணியொன்று தொங்கிக் கொண்டிருந்த்து, கழுவப்படாத குழந்தைக்கான ரப்பர் பாட்டில், திறந்து கிடக்கும் பால்பவுடர் டின்,  காபி டம்ளர்கள், பாதி சாப்பிட்டு மிச்சம் வைத்த பருப்புசாதமுள்ள கிண்ணம் யாவும் தென்பட்டன, வெளியே கம்பீரமாக தெரியும் வீடு உள்ளே அலங்கோலமாக கவனிப்பாரற்று கிடந்தது

மழையின் காரணமாக எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால் வீடு வெம்மையாக இருந்தது, மயக்கமூட்டிய அந்த வெளிச்சமும் வெளியே கொட்டிய மழையும், ஒத்தடம் கொடுப்பது போன்ற வெம்மையும் அவன் நினைவில் அப்படியே இருந்தன

இடிபடும் வீட்டிலிருந்து ஒரு ஆள் வெளியே வந்து ஒரு பழைய காலண்டர் ஒன்றினை வீசி எறிந்தான், சரஸ்வதி படம் போட்ட காலண்டர்,  கோச்சடை குனிந்து அதை எடுத்துப்பார்த்தான், காலண்டரில் யாரோ ஒரு பெண் பால் கணக்கு எழுதி வைத்திருந்தாள், வீடு ஒங்கிஒங்கி இடிபட உதிரும் கற்களுடன் பலத்த  புழுதி கிளம்பியது, ஒரு கல்தெறித்து சாலை வரை வந்து விழுந்தது, காலம் எவ்வளவோ வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது,

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் சென்டரல் தியேட்டருக்கு போகின்ற வழியில் குமாரசாமியின் வீடு மட்டுமே இருந்தது, வீட்டின் முகப்பில் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் துதிக்கையை வளைத்து நிற்பது போன்ற ஆர்ச் அமைக்கபட்டிருக்கும், அதன் ஆர்ச்சின் மீது விளக்கு ஒன்றைப் பொருந்தியிருந்தார்கள், அதன் தூய வெளிச்சம் தெருவிளக்கு போல இரவெல்லாம் ஒளிர்ந்து கொண்டிருக்கும்,

குறிப்பாக இரவு செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்புகின்றவர்கள் அந்த வெளிச்சத்தை அதிகம் அனுபவித்திருக்கிறார்கள், பள்ளிவயதில் கோச்சடையே பலநாட்கள் அந்த வெளிச்சத்தில் பாதுகாப்பாக தெருவை கடந்து போயிருக்கிறான், வெளிச்சம் ஒரு துணை, ஆள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஆறுதல் என்று தோன்றும், ஆனால் களவிற்குப் போன பிறகு வெளிச்சம் பிடிக்காமல் போய்விட்டது,  கண்கள் இருட்டிற்கு பழகிப்போய்விட்டன

இளைஞனாக இருந்த போது குமாரசாமி வீட்டினை கடந்து போகையில் ஒவ்வொரு முறையும் இப்படி அழகாக வீடு கட்டி குடியிருக்க எத்தனை பேருக்கு அதிர்ஷடமிருக்கிறது என்று நினைத்துக் கொள்வான், சில சமயம் அந்த வீட்டின் பின்பக்கச்சுவர் அருகே ஒட்டி நின்று கொண்டு வீட்டின் உள்ளிருந்து ரிக்கார்ட் பிளேயரில் ஒலிக்கும் கனவு கண்ட காதல் கதையாகி போச்சே பாடலை கேட்டிருக்கிறான், அந்தப் பாடலை அவனுக்கு பிடிக்கும், அவன் யாரையும் காதலித்து கிடையாது, ஆனாலும் சோகத்தில் பாடுகின்ற பாடல்களை கேட்கின்ற நேரத்தில் அது மனதில் வலியை உண்டாக்கிவிடுகிறது

யார் அந்த பாடலை இப்படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கோச்சடைக்கு தெரியாது, அந்த வீட்டுப் பெண்களை வெளியே காண்பது அபூர்வம், எப்போதாவது குமாரசாமியின் மனைவி கெடிலாக் காரில் கோயிலுக்கு போய்வருவதை பார்த்திருக்கிறான், அந்த கார்  அழகானது, சென்ட்ரல் தியேட்டரை கடந்து போகையில் டிக்கெட் எடுக்க நிற்கின்ற பலரும் அந்த காரை திரும்பி பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

ஒரு முறை குமாரசாமியின் வீட்டிற்கு ஜெமினி கணேசனும் சாவித்திரியும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள் என்று அவர்களை பார்ப்பதற்காக ஊரே கூடியிருந்தது, வீட்டின் மாடியில் நின்றபடியே ஜெமினியும் சாவித்திரியும் கை அசைத்ததை கோச்சடையின் மனைவி மீனா சிறுமியாக பார்த்திருக்கிறாள்,

ஜெமினியும் சாவித்திரியும் அந்த வீட்டில் எந்த அறையில் உறங்கியிருப்பார்கள், எந்த தட்டில் சாப்பிட்டு இருப்பார்கள், எந்த டம்ளரில் பால் குடித்திருப்பார்கள், அதை எல்லாம் ஒரு முறை தொட்டுபார்க்க வேண்டும் போலிருக்கும்,

கோச்சடை சிலசமயம் பின்னிரவில் சைக்கிளில் வரும்போது அந்த வீட்டின் முன்பு வேண்டுமென்றே சைக்கிளை நிறுத்தி ஏறிட்டு பார்ப்பான், யானை படுத்திருப்பது போல பிரம்மாண்டமாக தோன்றும், அதன் கழுத்துமணி போல அந்த குண்டுபல்ப்பின் வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருக்கும், அந்த காட்சி இன்றும் அவன் மனதில் அப்படியே உறைந்து போயிருந்தது

இன்று அந்த வீட்டினை ஒரு நாளைக்குள் பாதிக்கும் மேலாக உடைத்து போட்டுவிட்டார்கள், வீட்டை கட்டுவதற்கு தான் மாசக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது, இடிப்பதற்கு அதிக நாட்களாவதில்லை, மனிதர்களின் அழுகையும் சிரிப்பும் வலியும் கவலையும் அறிந்த வீடு மரம் முறிந்து கிடப்பது போல மௌனமாக இடிந்து கிடந்தது

குமாரசாமி பிள்ளையின் வீட்டிற்கு கோச்சடை திருடச் சென்ற போது அவன் மனைவி மீனா மூன்றாவது பிள்ளை உண்டாகி கர்ப்பிணியாக இருந்தாள், ரத்தசோகை கண்டிருக்கிறது அவளை பொது மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் பெட்டில் வைத்திருந்தார்கள், அவளுக்காக பழங்களும், சத்து டானிக்குகளும் வாங்க வேண்டும் என்று நினைத்து தான் கோச்சடை களவிற்கு கிளம்பியிருந்தான்

திருடுவதற்காக இல்லாவிட்டாலும் அந்த வீட்டின் உட்புறங்களை பார்க்க வேண்டும், ஜெமினி படுத்த தலையணையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்பதற்காகவாவது அந்த வீட்டிற்குள் ஏறிக்குதிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் இருந்தது. இப்படியான சில கிறுக்குதனங்களில் அவன் விரும்பியே ஈடுபடுவான்,

முன்பு ஒரு முறை தம்பானூர் முதலாளி வீட்டிலிருந்த  கறுப்பு நிற குதிரை ஒன்றினை பார்ப்பதற்காக பதினாறு அடி உயர இரும்பு கேட்டை தாண்டி குதித்திருக்கிறான்,  கறுப்பு நிற அரபுக்குதிரையை பார்ப்பது அபூர்வம், தம்பானூர் முதலாளி மைசூர் ராஜாவிடமிருந்து அந்த  கறுப்பு குதிரையை வாங்கி ஆசையாக வளர்த்துக் கொண்டிருந்தார், அக்குதிரையை பார்க்கும் போதெல்லாம் ஒருமுறையாவது அதில் ஏறிபார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்,

அதற்காகவே கோச்சடை அவ்வீட்டினை பல நாட்கள் நோட்டம் பார்த்து பின்பனிக்காலத்தில் ஒருநாளிரவு யாருமறியாமல் வீட்டிற்குள் நுழைந்து லாயத்தில் கட்டியிருந்த குதிரையின் மேலே ஏறினான், கால்களை அகட்டி உட்கார முடியாமல் கஷ்டமாக இருந்த்து, ஆனாலும் குதிரையின் மேலே உட்கார்ந்து இருப்பது சிரிப்பாக வந்தது, கண்ணை மூடிக் கொண்டு ராஜா போல தன்னை நினைத்துக் கொண்டு ஹேஹே என்று கையை அசைத்தான், குதிரை தலையை அசைத்து அவனை முதுகில் இருந்து கிழே தள்ளியது, ஆள் அரவம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாரோ வருவது தெரிந்த்துவுடன் அவன் குதிரையின் காதை தடவி கொஞ்சிவிட்டு தப்பியோடிவிட்டான், அதெல்லாம் ரத்தவேகம் கூடிய இளவட்டமாக இருந்த போது நடந்தது,

கோச்சடை குமாரசாமியோடு பேசியதில்லை, ஆனால் பார்த்திருக்கிறான், ஆள் குள்ளமான உருவம், நெற்றியில் திருநிறுபூசி கழுத்தில் ருத்ராட்சமாலை போட்டிருப்பார், தூய வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை,  கையில் எப்போதும் ஒரு குடை வைத்திருப்பார், வீட்டில் கார் இருந்தாலும் அவர் பஜாரில் இருந்த பாத்திரக்கடைக்கு நடந்து போய்வருவதை பார்த்திருக்கிறான், நாள் தவறாமல் மாலைநேரத்தில் அவர் கோவில் தெப்பக்குளத்தின் படியில் உட்கார்ந்து கொண்டு மீனிற்கு பொறி போடுவார், இப்போது கோவில் குளம் பாசியேறி தூர்ந்துகிடக்கிறது,  பொறி விற்பவனையும் கண்ணில் காண முடியவேயில்லை,

ஆனால் அவனது பால்ய வயதில் கடைமுதலாளிகள் பலரையும் தெப்பக்குளத்தில் வைத்து பார்க்கலாம், அது தான் கடன் கேட்கிற இடம், யாருக்காவது ஏதாவது உதவி தேவை என்றால் அங்கே வைத்து தான் கேட்பார்கள், கோவிலில் கேட்டால் மறுக்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை, கோச்சடை ஒரேயொரு முறை வக்கீல்பிள்ளையை பார்ப்பதற்காக அங்கே போயிருக்கிறான், மற்றபடி அவனுக்கு கோவிலுக்கு போவது பிடிக்காது

மீனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த இரண்டாம் நாள் சோமுவை பார்த்து கடன்கேட்டுவிட்டு கோச்சடை திரும்பி வந்து கொண்டிருந்தான், தம்பா பிள்ளை தெருவை தாண்டும் போது அடர்ந்த இருட்டாக இருந்தது, சட்டென மண்டையில் உறைத்தது, குமாரசாமிபிள்ளை வீட்டில் லைட் எரியவில்லை, ஏன் அணைத்து விட்டிருக்கிறார்கள், ஒரு வேளை பல்ப் ப்யூஸாகி இருக்குமோ,

இருட்டிற்குள்ளாகவே நடந்து வீட்டின் முன்பாக நின்று பார்த்தான், எப்போதும் ஒளிரும் அந்த மஞ்சள் வெளிச்சமும் அதைச் சுற்றிபறக்கும் ஈசல்களின் பறத்தலும் நினைவில் வந்து போனது, மௌனமாக அந்த வீட்டினையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் எதற்கென தெரியாமல் உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது,

மறுநாள் கைவண்டி இழுக்கும் மாரியப்பனிடம் இதைபற்றி பேசியபோது, காலம் காலமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை, வெட்டித்தெண்டமாக எரிகிறது  என்று  குமாரசாமியின் மருமகள் பேச்சியம்மாள் அணைத்துவிட சொல்லி தகராறு செய்து விட்டாள், இனிமேல் அந்த வீட்டில் முகப்புவிளக்கு எரியாது என தெரிந்து கொண்டன், அன்றைக்கு தான் கோச்சடை அந்த வீட்டில் திருடுவது என்று முடிவு செய்தான்

அவன் திருடுவதற்கு துணையாக அன்று மழை சேர்ந்து கொண்டது, மழை பெய்யும் நாட்களில் மனிதர்களை பீடிக்கும் தூக்கம் விசித்திரமான ஒன்று, அது எவரையும் எளிதில் எழும்ப விடாது, மழைநாளில் வரும் கனவுகள் அபூர்வமானவை, அன்றும் கனவில் ஊறிக்கிடப்பவர்களை போல தான் குமாரசாமியின் வீட்டில் ஆழ்ந்து உறங்கிக் கிடந்தார்கள்,

மழைக்குள்ளாக நனைந்தபடியே பின்பக்கச்சுவரில் இருந்த தூம்புவாய் வழியே ஏறி அவன் அடுப்பங்கரை இருந்த பின்கட்டிற்கு வந்தான், எல்லா வீடுகளும் முகப்பில் தான் அலங்காரமாக இருக்கின்றன, அடுப்படி கருமைபடிந்து அலங்கோலமாக தானிருக்கிறது, குமாரசாமிபிள்ளை வீட்டிற்குள் அவன் குதித்த போது வெளியே மழை சீராக பெய்து கொண்டிருந்தது, அவன் பூனையை போல நடந்து சென்று குமாரசாமியின் படுக்கை இருந்த அறையைத் தேடினான், வீட்டினுள் நான்கு அறைகள் தெரிந்தன, இடது பக்கமிருந்த ஒரு அறைக்கதவு லேசாக திறந்து வைக்கபட்டிருந்தது, அப்படியானால் அந்த அறையில் முதியவர்கள் உறங்குகிறார்கள் என்று அர்த்தம்,

வயதானவர்கள் கதவை மூடிக்கொண்டு உறங்குவதில்லை, குமாரசாமி பிள்ளைக்கும் அப்போது அறுபது வயதை தாண்டியிருந்தது, அதுவும் மனைவி இறந்து போன மனிதர் என்பதால் எதற்காக கதவை மூடிக் கொள்ளப்போகிறார் என்று கோச்சடைக்கு தோன்றியது

அவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி  அதே வீட்டில் தான் வசித்தார்கள், ஒருச்சாத்திய கதவை ஒசைப்படாமல் தள்ளி உள்ளே சென்ற போது குமாரசாமி ஒரு சிறுவனை போல சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார், அறையின் மூலையில் பெரிய இரும்புப் பெட்டியிருந்தது.

திண்டுக்கல்  கோபாலகிருஷ்ணா கம்பெனி தயாரிப்பு அது , அந்த வகை இரும்புப்பெட்டிக்கு இரண்டு பூட்டுகளிருக்கும், மறைவாக உள்ள விசையை அழுத்திக் கொண்டு திறக்காவிட்டால் பூட்டை திறக்கமுடியாது, இது போன்ற சூட்சுமங்கள் அத்தனையும் அவனுக்குத் தெரியும்,  இரும்பு பெட்டியைத் திறந்து உள்ளே பார்த்த போது உள்ளே ஒரு பட்டுச்சேலை, இரண்டு  வெள்ளி டம்ளர்கள், ஒரு வெள்ளிதட்டு, குழந்தைகளின் மோதிரம் ஒன்று இவை மட்டுமேயிருந்த்து, ரொக்கம் கூட நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது,

கோச்சடைக்கு ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு பெரிய வீடுள்ள மனிதன்  வீட்டில் கையிருப்பும் இல்லை, நகையும்  இல்லை, குடும்பம் கடனில் ததளித்துக் கொண்டிருக்கிறது போலும், வெளியே சொல்லாமலே நிலைமையை சமாளித்து வருகிறார்கள் என்று தோன்றியது

பட்டுபுடவையை தொட்டு பார்த்தான், நிறைய ஜரிகை வைத்திருப்பது தெரிந்தது, மீனா இதுவரை பட்டுபுடவையே கட்டிக் கொண்டதில்லை, ஆனால் யாரோ ஒருத்தி கட்டிய புடவையை அவளுக்கு திருடிக் கொண்டு போய் கொடுக்ககூடாது, மதுரைக்கு அழைத்துப் போய் பெரிய ஜவுளி கடையில் அவளுக்கு நீலநிற பட்டுபுடவை வாங்கி தர வேண்டும என்று நினைத்துக் கொண்டு இரும்பு பெட்டியில் இருந்து ஒரு வெள்ளி டம்ளரையும் ஐம்பது ரூபா பணத்தையும் குழந்தையின் மோதிரம் ஒன்றையும் மட்டுமே திருடி எடுத்துக் கொண்டான்,

அவன் அந்த வீட்டிற்குள் திருட வந்ததையோ, பொருட்கள் காணாமல் போனதையோ மறுநாள் அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடை உணர்ந்ததைப் போல அந்த குடும்பம் கொஞ்சநாளில் கடன்சிக்கலில் மாட்டிக் கொண்டது, பனிரெண்டு லட்சம் கடன் என்றார்கள், அவரது மூத்தமகன் தேவையில்லாமல் பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்திருக்கிறான் என்று குமாரசாமி வேதனைபட்டுக் கொண்டார்

அதனால் உருவான சண்டையில் மூத்தவன் தன் மனைவி பிள்ளைகளை மதுரையில் தனியே வீடு பார்த்து கூட்டிக் கொண்டு போனதோடு அப்பாவிடம் தனக்குரிய சொத்தை கேட்டு தகராறு செய்ய ஆரம்பித்தான், தான் செத்துப்போனபிறகு தான் பிள்ளைகளுக்கு சொத்து என்பதில் குமாரசாமி உறுதியாக இருந்தார்

அப்படியானால் நீ செத்து போ, நீ உசிரோட இருந்து இந்த மசிருக்கு கூட பிரயோசனமில்லை  என்று அப்பாவை இதே வீட்டு வாசலில் வைத்து திட்டினான் மூத்தமகன் நெட்டிலிங்கம்,

அந்த வருத்தத்தில் குமாரசாமி பிள்ளை தாடி வளர்க்க ஆரம்பித்து கொஞ்ச நாளில் அவரது நரைத்த தாடி மார்பில் புரளும்படியானது, அவரது கண்களில் சொல்லமுடியாத வருத்தமும், நடையில் தளர்ச்சியும் இருப்பதை கோச்சடை கண்டிருக்கிறான், இரவு கோவில் நடைசாத்தும்வரை கோவில் குளத்திலே அவர் உட்கார்ந்திருப்பதையும் பலநேரம் தனக்கு தானே பேசியபடியே வீட்டை நோக்கி நடந்து வருவதையும் கூட பார்த்திருக்கிறான்,

அப்போதெல்லாம் அந்த குடும்பத்திற்கும் தனக்கும் ஏதோவொரு ஒட்டுதல் இருப்பது போலவே தோன்றும், தான் அந்த வீட்டிற்குள் போகிறோம், அவ்ரது இரும்பு பெட்டியை திறந்து பணம் எடுத்திருக்கிறோம், அவர்கள் அறியாவிட்டால் என்ன, அந்த வீட்டில் திருடிய மோதிரத்தை தானே மூன்றாவது மகன் பிறந்த போது கையில் போட்டிருந்தோம், இதை என்னவிதமான உறவென்று சொல்வது என்று கோச்சடைக்கு புரியாது

ஆனால் அதன்பிந்திய நாட்களில் குமாரசாமிபிள்ளை வீட்டினை கடந்து போகையில் விளக்கு அணைக்கபட்டிருப்பதை காணும்போது தாங்கமுடியாத வருத்தமாக இருக்கும்.

கோச்சடையின் கண்முன்னே அவ்வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறத் துவங்கியது, குமாரசாமியின் சாவுக்கு பிறகு அந்த வீட்டில் எவரும் குடியிருக்கவேயில்லை, மூத்தவன் ஊரைவிட்டுப் போய்விட்டான், இளையவன் குடித்து கடன்வாங்கி மனைவியின் ஊரான தென்காசிக்கு போய் வேன் ஒட்டுகிறான் என்றார்கள்,

கோச்சடை குமாரசாமியின் சாவுக்கு போயிருந்தான், வீட்டின் உள்ளே போய் துக்கம் கேட்க கூச்சமாக இருந்தது, வாசலை ஒட்டி போடப்பட்டிருந்த பந்தலில் நின்று கொண்டிருந்தான், பிணம் சுடுகாடு போகையில் கூடவே நடந்து போய் வந்தான், சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பி வரும்போது சாலையில் கிடந்த உதிர்ந்த ரோஜா இதழ்களை கண்டதும் தாங்கமுடியாத வருத்தம் பீறிட்டது

அதன்பிறகு கோச்சடை தாரமங்கலத்தில் களவு செய்யப்போன போது  பிடிபட்டு  நாலுவருசம் சிறையில் இருந்தான், அவன் ரிலீஸ் ஆகி வெளியே வந்த போது அந்த வீடு சிமெண்ட் குடோனாக மாறியிருந்தது, இரவும் பகலும் சிமெண்ட் மூடைகள் வந்து இறங்கும் போவதுமாக இருந்தன, அப்போதும் கூட ஒரேயொரு தடவை பகலில் அந்த வீட்டிற்குள் போய் பார்த்துவர வேண்டும் என்று தோன்றும், ஏதோவொரு தயக்கத்தில்  போகாமல் வாசலில் நின்றே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திரும்பிவிடுவான்

அதன்பிறகு அந்த வீடு கைவிடப்பட்டு பல ஆண்டுகள் பூட்டியே கிடந்த்து, ஆர்ச்சில் இருந்த யானைகளின் தும்பிக்கைகள் உடைக்கபட்டிருந்தன, தூசியும் குப்பையும் அடைந்து போய்  சாலையில் அடிபட்டு செத்துப்போன பறவை  ஒன்றை போலவே அந்த வீடு மாறியிருந்தது, பல நேரம் அவ்வீட்டினைக் கடந்து போகும்போது திரும்பிக் கூட பார்க்க வேணாம் என்று தோன்றும், ஆனாலும் அவனால் பார்க்காமல் இருக்க முடியாது

கைவிடப்பட்ட வீட்டைக் காண்கையில் இவ்வளவு தான் வாழ்க்கையா என் வருத்தம் கவ்வும், கண்முன்னே ஊரில் அவன் பார்த்த மனிதர்கள் மறைந்து கொண்டேவருகிறார்கள், அவன் கூடவே வாழ்ந்த மீனா இப்போதில்லை, குமாரசாமி வீட்டில் திருடி மோதிரம் போட்டு பார்த்த மூன்றாவது மகனும் இப்போது உயிரோடில்லை, பதினெட்டுவயதில் களவு செய்ய துவங்கி நாற்பத்தைந்து வயதில் எல்லாம் ஒடுங்கிப்போக மிஞ்சிய வாழ்க்கையை ஒட்டுவதற்காக வாழைக்காய் மண்டியில் வேலைக்கு சேர்ந்து இன்று கோச்சடை செயிண்ட் ஆண்ட்ருஸ் பள்ளியின் வாட்ச்மேனாக இருந்தான்,

பல நாட்கள் மூடப்பட்ட பள்ளியின் வாசலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆள்இல்லாத வீதியை பார்த்துக் கொண்டேயிருப்பான், இவ்வளவு தானா  வாழ்க்கை என்று தோன்றும், கூடவே குமாரசாமிபிள்ளை வீட்டின் மஞ்சள் வெளிச்சம் நினைவில் வந்து போகும்

இன்றைக்கும் கூட அந்த வீட்டினை இடிப்பதற்குள் அதற்குள் ஒருமுறை போய்விட்டுவர வேண்டும் என்பதற்காகவே அவசரமாக அங்கு வந்திருந்தான்,  ஆனால் வாசலில் வந்து நின்றபோது வீட்டிற்குள் போவதற்கான தகுதி தனக்கு இல்லை என்று தோன்றியது,  வெளியிலே நின்று கொண்டேயிருந்தான், இடிபட்ட கற்கள் தெறித்துவிழுந்து கொண்டிருந்தன, அதை பார்க்க பார்க்க இறந்த குழந்தையை குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடுவதை விடவும் அது சோகமானதாக தோன்றியது

கோச்சடை தலைகவிழ்ந்தபடியே மௌனமாக நின்று கொண்டேயிருந்தான், அப்போது சாலையில் ஒரு டாக்சி வந்து நிற்கும் சப்தம் கேட்டது, வெளிர்நீல சட்டைஇ வேஷ்டி அணிந்த ஒருஆள் கிழே இறங்கி போன்பேசியபடியே நடந்தவர் கோச்சடை பக்கம் திரும்பி என்ன வேணும் என்று கேட்டார்,

ஒண்ணுமில்லை அண்ணாச்சி சும்மா பாக்கேன் என்றான் கோச்சடை,

அந்த ஆள் உள்ளே  நடந்தபடியே கத்தினார்

டேய் வேலு, என்னடா செய்றீங்க, களவாணிப்பயக உடைஞ்சி கிடக்கிற  மரச்சாமானை தூக்கிட்டு போயிறப் போறாங்கடா , வெளியே ஒருத்தன் நிக்கான் அவன் முகரையே சரியில்லை, அடிச்சிபத்தி விடுங்கடா

யாரோ ஒருவன் உள்ளேயிருந்து கையில் ஒரு இரும்பு ராடுடன் வாசலை நோக்கி ஆவேசமாக வருவது தெரிந்தது

இடிந்து கிடந்த வீட்டில் இருந்து தெறித்து விழுந்த ஒரு சிறுகல்லை எடுத்து சட்டை பையில் போட்டு கொண்டு கோச்சடை மெதுவாக வீட்டை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான், சுவர் விழுந்து எழுந்த புழுதி காற்றில் கரைந்து கொண்டிருந்தது

Gayathri:
மழைமான்
சிறுகதை

தேவபிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

தனது மேஜையில் ஆத்தியப்பன் ரிஜிஸ்தரை வைத்து விட்டுப் போகும்வரை அந்த யோசனை தோன்றவேயில்லை. திடீரென்று தான் மனதில் உருவானது.

எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் மனதில் மானைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகக் கொப்பளிக்கத் துவங்கியது. இப்படி யாருக்காவது விசித்திரமான எண்ணம் வருமா என்ன… தன்னைச் சுற்றிலும் இருந்த சக ஊழியர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

மின்வாரியத்தின் நிர்வாகப் பிரிவு அலுவலகமது. காரை உதிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய ஹாலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

வலது புறம் நேராக நடந்து போனால் உயரதிகாரிகளின் அறைகள். அதை ஒட்டியது போல காப்பறை. கடந்து போனால் கீழும் மேலுமாகச் செல்லும் சிமெண்ட் படிக் கட்டுகள். அலுவலகத்தில் மொத்தம் முப்பத்தியெட்டு படிகள் இருக்கின்றன.

தேவபிரகாஷ் பலமுறை அப்படிகளை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப்போய்விடுகின்றன. ஒருவேளை தன்னைப் போல புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

இடது பக்கம் நீளும் வழி எப்போதுமே இருட்டடிந்து போயிருக்கிறது. மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமர மிருக்கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசிபடிந்து, வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளி யைப் போல அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டமானது. யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின் மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள்.  மூன்றாவது மாடியில் வேலைசெய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன. அந்த மரத்தில் இருந்து ஒரு அணில் அலுவலகத்திற்குள் வந்துவிடுகிறது என்று சொல்லி புனிதவல்லி எரிச்சல்பட்டு பெரிய கிளை ஒன்றை வெட்டிவிடச் செய்தாள். அதன் பிறகு அந்த அணில் வருவதும் நின்று போய்விட்டது.

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அது போலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒருநாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன. சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது. ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை இது போன்ற மதிய நேரம் அந்த எண்ணம் அவரை உந்தத் துவங்கியது.

உடனே கிளம்பி சுந்தரவதனியைப் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனக்குரல் ஆவேசமாகச் சொல்லத் துவங்கியது. ஏடிஎம் போய் பணம் எடுத்துவர வேண்டும் என்று உயரதிகாரியிடம் பொய் சொல்லிவிட்டு அன்பு பீறிட சுந்தரவதனி வீடு இருந்த ராமாவரத்திற்கு ஆப்பிள் பழங்களுடன் போயிருந்தார்.

அலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு கடுமையான முகத்தோடு தானிருப்பாள்.  ஒரு மழை நாளில் அவர் ஏறிய ஷேர் ஆட்டோவில் அவளும் உடன் பயணம் செய்தாள். அப்போது தனது வீடு ராமாவரத்தில் உள்ளதாகத் தெரி வித்திருந்தாள். அதைத் தவிர அவளோடு அதிகம் பேசிப் பழகியதில்லை.

ராமாவரத்தில் அவளது வீட்டை விசாரித்துக் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்தது. இரும்பு கேட் போட்ட பெரிய வீடு. வீட்டின் முகப்பில் எண்டோவர் கார் நின்றது. இவ்வளவு வசதியானவள் என்பதை அவள் காட்டிக் கொள்ளவேயில்லையே என்று தோன்றியது. காலிங்பெல்லை அடித்தபோது சுந்தரவதனி நைட்டியுடன் வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வரக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்த மாத்திரம் திகைத்துப் போனவளாக சோபாவில் உட்காரச் சொன்னாள்.

‘என்ன பேசுவது?’ என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என விருப்பமற்ற குரலில் கேட்டாள்.

‘சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ என்றார் தேவபிரகாஷ்.

அவள் அதை நம்பமுடியாதவள் போல ‘ஏதாவது கடன்கிடன் வேணுமா?’ என்று நேரடியாகக் கேட்டாள்.

‘அதெல்லாமில்லை. ஆறுமாதமாக நீங்க ஆபீஸ் வரவில்லையே… அதான்’ என்று சமாளித்தார்.

தன்னை வேவு பார்க்க வந்திருக்கிறாரோ என நினைத்து அவள் கடுமையான முகத்துடன் ‘நான் சிக் லீவுல இருக்கேன்’ என்றாள். பிறகு அவரிடம் ‘இது போல போன் செய்யாமல் பார்க்க வருவது தனக்குப் பிடிக்காது. இனிமேல் இப்படி வராதீர்கள்’ என்று சொல்லி ஆப்பிள் பழத்தை அவரையே திரும்பி எடுத்துக் கொண்டு போகும்படியாகச் சொன்னாள்.

ஆத்திரத்தில் அவள் வீட்டின் வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் அந்தப் பழங்களைப் போட்டுவிட்டு அலுவலகம் போகாமல் வீட்டிற்குப் போய் படுக்கையிலே கிடந்தார். யோசிக்க யோசிக்க  சகல மனித உறவுகளும் அர்த்தமற்றுப் போய்விட்டதாகத் தோன்றியது. யாரும் யாரையும் நம்புவதில்லை. காரணமில்லாமல் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது கூட ஏன் இயலாமல் போயிற்று? பணம் தவிர உலகில் வேறு எதுவுமே முக்கியமானதில்லையா?  ஏன் இப்படி மனக்குரலின் பேச்சைக் கேட்டு நாம் அவமானப்பட்டுப் போகிறோம்? இது என்ன நோய்? ஏன் நம் இயல்பு வாழ்க்கை இப்படி அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்து வேதனை கொண்டார்.

அலுவலகத்தில் அவருக்கு விருப்பமான-வர்கள் என்றோ நண்பர்கள் என்றோ யாருமேயில்லை. மதிய சாப்பாட்டைக் கூட தனியாகத் தனது மேஜையில் வைத்தே சாப்பிட்டு முடித்து விடுவார். அலுவலகத்தில் மட்டுமில்லை.,ஒரு கோடி பேருக்கும் மேலாக வசிக்கும் இந்த மாநகரில் கூட அவருக்கு நண்பர்கள் என்று எவருமில்லை.  முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டே பிரிவுதான்.

ஐம்பதாவது வயதில் நுழையும் வரை அவருக்கு ஒருநாளும் இப்படியான உணர்வுகள் ஏற்பட்டதேயில்லை. இப்போது தான் ஏதேதோ கொந்தளிப்புகள் மனதில் தோன்றுகின்றன. திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றத்துவங்கி முழுவதும் ஆக்ரமித்துவிடுகிறது. வேறு எந்த வேலை செய்தாலும் மனது அடங்குவதில்லை.

ஒரு குரல், அழுத்தமான ஒரு குரல் அந்த எண்ணத்தை நிறைவேற்றும் படியாக அவரை வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அக்குரலைக் கண்டு-கொள்ளாமல் விடும்போது மனது வேறு எந்த வேலையிலும் கவனம் கொள்ள மறுப்ப-தோடு, உடலிலும் மெல்லிய படபடப்பு உருவாகிவிடுகிறது.

இன்றைக்கும் அப்படியான ஒரு குழப்பமான எண்ணமாகவே மானைக் காண வேண்டும் என்று மனதில் உதயமானது. மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. இதற்கு முன்பு எப்போது எங்கே வைத்து மானைப்பார்த்தோம் என்ற நினைவுகள் மனதில் குமிழ்விடத் துவங்கின.

பதினைந்து வருஷத்தின் முன்பு ஒரு முறை தேக்கடியில் வைத்து அவர் மானைக் கண்டிருக்கிறார். அப்போது அவரது  மகள் விலாசினிக்கு ஐந்து வயது. மான்கள் உலவும் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. கம்பிமீது ஏறியபடி அவள் மானைக் கையசைத்துக் கூப்பிட்டாள். புல்வெளியில் உலவிக் கொண்டிருந்த மான்கள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

‘அப்பா, மானை எப்படிக் கூப்பிடுவது?’ என்று விலாசினி கேட்டாள்.

மானை என்ன சொல்லிக் கூப்பிடுவது என்று அவருக்கும் தெரியவில்லை. அதை மறைக்க விரும்பி-யவரைப் போல “கையசைத்துக் கூப்பிடு. வரும்” என்றார்.
அதற்குள் அவளாகப் ‘பூசி பூசி’ என்று அர்த்தமற்ற ஒரு சொல்லைக்  கொண்டு குரல் கொடுத்தாள்.

ஒரு மான் தலை திரும்பியது.

“அப்பா, நான் கூப்பிடுறது அதுக்குக் கேட்குது. புள்ளி புள்ளியா மான் ரொம்ப அழகா இருக்குல்லே! நாம இந்த மானை வீட்டில கொண்டு போய் வளக்கலாமா?” என்று கேட்டாள்.

“இல்லை விலாசினி, மானை வீட்ல வளர்க்கவிடமாட்டாங்க” என்றார்.

“யாரு?” என கேட்டாள்.

“கவர்மெண்ட்” என்றார்.

மானை ஆசையாகப் பார்த்தபடியே மறுபடியும் கேட்டாள்.

“ஏன்பா விடமாட்டாங்க?”

“அதுக்கு நாம் கவர்மெண்ட்ல பெர்மிஷன் வாங்கணும்மா” என்றார்.

“நீங்க கவர்மெண்ட்ல தானே வேலை பாக்குறீங்க, அப்போ பெர்மிஷன் வாங்க வேண்டியது தானே” என்று சொன்னாள்.

“இல்லைடா, மானை வீட்ல வளர்க்க முடியாது. மான் வளரணும்னா காடு வேணும்ல.” என்றார்.

அவள் ஆதங்கத்துடன் “அப்போ நம்ம வீட்டைச் சுற்றிக் காடு வளர்த்திட்டா, பிறகு மான் வளர்க்க விடுவாங்களா?” என்று கேட்டாள்.

“முதல்ல நாம ஒரு காடு வளர்க்கலாம். பிறகு மானை வாங்கிடலாம்” என்று சமாதானம்  சொன்னார். ஊர்வரும்வரை மான் வளர்ப்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் விலாசினி. அதன்பிறகு மானை மறந்து போய்விட்டாள். குழந்தைகள் தனது ஆசையை எளிதாகக் கைவிட்டுவிடுகிறார்கள். அவரும் அதன்பிறகு மானை மறந்து போயிருந்தார்.

இப்போது எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மறுபடி வந்தது எனப் புரியவேயில்லை. ஆனால் அந்த எண்ணம் மனதைக் கொஞ்சம் கொசமாக வதைக்க ஆரம்பித்திருந்தது.

மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்த பெரிய டெலிபோன் டைரக்டரியைத் தேடி எடுத்து வந்து புரட்டத் துவங்கினார். மானைப் பற்றி எதில் தேடுவது என தெரியாமல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.  எப்போதோ ஒரு முறை பரங்கிமலைச் சாலையில் மான் ஒன்று அடிபட்டுக் கிடந்ததாக பேப்பரில் செய்தி ஒன்றை வாசித்த நினைவு வந்தது,

பரங்கிமலைக்குப் போனால் மானைப் பார்க்க முடியுமா என்ன… யாரைக் கேட்கலாம்?  இருபத்திநாலு மணி நேர இலவச சேவையான ஹலோ சிட்டி நம்பருக்கு போன் செய்து கேட்டால் சொல்லிவிட மாட்டார்களா என்று நினைத்தபடியே அலுவலக போனில் இருந்து ஹலோ சிட்டியைத் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் ஒரு இளம்பெண் மென்மையான குரலில் பேசத் துவங்கினாள். தயங்கித் தயங்கி அவளிடம் இந்த நகரில் மான்கள் எங்கேயிருக்கின்றன என்ற விபரம் தனக்குத் தெரிய வேண்டும் என்றார்.

அவள் குறிப்பாக ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்த மானைப் பற்றிக் கேட்கிறாரா அல்லது பொதுவாக மான்களைக் காண விரும்புகிறாரா என்று கேட்டாள்.

தனது மகளை அழைத்துப் போய் வேடிக்கை காட்ட விரும்புவதாக அவர் பொய் சொன்னார்.

அவள் இதற்கான  பதிலைத் தருவதற்குள் அவரது சுயவிபரங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்லி அவரது வயது, வேலை, முகவரி என ஆறு கேள்விகளைக் கேட்டாள். முடிவில் வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மான்கள் இருக்கின்றன.  ஆனால் இன்று விடுமுறைநாள் என்றாள். நாளை வரை தன்னால் காத்திருக்க முடியாது. வேறு எங்காவது  மான்கள் இருந்தால் சொல்லுங்கள். தூரத்தில் நின்று பார்த்தால் போதும் என்றார்.

வேறு எங்கும் மான்கள் இருப்பதாகத் தகவல்மையம் தெரிவிக்கவில்லை. உங்கள் மகளுக்காக ஒரு ஆலோசனை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு கிண்டி கவர்னர் மாளிகை தெரியுமில்லையா? அதன் உள்ளே பாதுகாப்பு பணிக்காக வசிப்பவர்களுக்கான குடியிருப்பு இருக்கிறது. அதில் யாரையாவது தெரியும் என்று பொய் சொல்லி உள்ளே போய்விடுங்கள். அங்கே மான்களை எளிதாகக் காண முடியும். நான் அப்படி ஒரு முறை என் தோழிகளை அழைத்துப் போயிருக்கிறேன் என்றாள்.

இதைச் சொல்லும்போது அவள் சிரித்தாள். அது சந்தோஷத்தின் வெளிப்பாடா அல்லது தன்னை மாட்டிவிட முயற்சிக்கிறாளா என புரியாமல் இருந்தது. குரலை வைத்து அந்தப் பெண்ணின் இயல்பைக் கற்பனை செய்துக்கொள்ள முடியாது. ஒரு வேளை அந்த சிரிப்பு இயந்திரக் குரலாகக்கூட இருக்கக் கூடும்.

கிண்டிக்குப் போய் மானைக் காண முயற்சி செய்ய வேண்டியதுதான் என்றபடியே  தனக்குக் குளிர் சுரம் போல இருப்பதாகச் சொல்லி அலுவலகத்தில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டார். கொண்டு வந்திருந்த மதிய சாப்பாட்டை பையில் வைத்து  எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து விடைபெற்றபோது மணி பனிரெண்டரையாகி இருந்தது. கிண்டி செல்வதற்கான பேருந்திற்காகச் சாலையில் காத்துக்கிடந்த போது அவரது வயதில் யாராவது இப்படி திடீரென மானைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு போவார்களா எனத் தோன்றியது. தான் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறோமா? என்ன மனநிலையிது. . . மனது வேறு எதையும் யோசிக்க மறுத்தது.

மான் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  உலகில் வேறு எந்த மனிதனும் இப்படி தனது அலுவலகத்தைப் பாதியில் போட்டுவிட்டு மானைப் பார்க்கப் போக மாட்டான். தனக்கு ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது தன்னை ஏதோ பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சே, என்ன சிந்தனையிது.

இதிலிருந்து உடனே விடுபட வேண்டும். இல்லா-விட்டால் மனது துவண்டு போய்விடுகிறது, தலையைத் திருப்பிச் சாலையைக் கவனித்தார்.

அவரது வயதை ஒத்த பலர் பரபரப்பாக பைக்கிலும், காரிலும் போய்க் கொண்டிருந்தார்கள். பொதுவாக அவரது கண்ணில் சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே தென்படுகிறார்கள். இளைஞர்கள், அதிலும் குறிப்பாக பதின்வயது பையன்கள், பெண்களைக் காணும்போது மனதில் தேவையில்லாத பொறாமையுணர்வு அல்லது கோபம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலும் அவர்களைக் கண்டுகொள்ளாதவரைப் போலவே நடந்து கொள்கிறார். ஆனால் உலகில் இளைஞர்கள்தான் அதிகமாக நடமாடுகிறார்கள். கூடிப்பேசுகிறார்கள். சிரிக்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். கனவுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது வயதை ஒத்தவர்களுடன்  பேசப் பழக அவருக்குப் பிடிப்பதில்லை. அதே நேரம் அவரை விட மிகவும் வயதானவர்களுடன் பேசும்போது சலிப்பாக இருக்கிறது. ஈரமில்லாமல் சுண்ணாம்பு உலர்ந்து உலர்ந்து பொக்காகி உடைந்து சிதறுமே, அப்படித்தான் தானும் மாறிக் கொண்டிருக்கிறோமா என தோன்றும். இல்லை, வெடித்துப்போன பலூன் இனி எவருக்கும் உபயோகமில்லாமல் கிழிந்து கிடப்பது போன்றதுதான்  தனது வாழ்க்கையா? அவருக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் தன்னை அப்படித் தாழ்மையாக உணர்கிறோம் என்ற மறுயோசனையும் அவருக்குள் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
கிண்டி செல்லும் நகரப்பேருந்து வந்து நின்றது. ஏறிக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். இந்தப் பேருந்தில் யாராவது மானைப் பார்க்கப் போகிறவர் இருப்பாரா என்ன… அவர் டிக்கெட் எடுத்து பையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

***

போனவாரம்  இது போன்ற ஒரு காலை நேரத்தில் மனதில் பென்சில் சீவி எவ்வளவு நாளாயிற்று என்று ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. பகல் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

பென்சில் திருகிகள் வந்த பிறகு பிளேடால் பென்சிலை சீவுவது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. அன்றாடம் பென்சிலை உபயோகிப்பதே அரிதாகிப் போன பிறகு பென்சிலை ஏன் பிளேடால் சீவ வேண்டும். வீட்டில் மூத்தமகள் ஓவியம் வரைவதற்கு வண்ணமயமான பென்சில்களை வைத்திருக்கிறாள். ஆனால் சாதாரண மஞ்சள், பச்சை நிறப் பென்சில்கள் அவளிடமும் கிடையாது.

அவரும் பள்ளி வயதிற்குப் பிறகு பென்சிலை விலை கொடுத்து வாங்கியதே கிடையாது. பிறகு எதற்கு அந்த யோசனை வந்தது எனப் புரியவில்லை. அலுவலக மேஜையைக் குடைந்து ஏதாவது பென்சில் கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தார். உடைந்துபோன ரெனால்ட்ஸ் பேனாக்கள், அழிரப்பர்கள், ரெவின்யூ ஸ்டாம்ப், நூல்கண்டு, துளையிடும் கருவி, ஜெம்கிளிப் என ஏதேதோ இருந்ததேயன்றி பென்சிலைக் காணோம்.

உடனே பென்சிலை வாங்கி சீவ வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடையத் துவங்கியது. சே, என்ன இழவு யோசனை… ஏன் நம்மை இப்படிப் படுத்துகிறது என்று நினைத்தபடியே அலுவலக பியூன் பழனியை வரவழைத்து ரத்னா பென்சில் ஒன்றை வாங்கிக் கொண்டு வரும்படியாகச் சொன்னார்.

‘சார், அதெல்லாம் இப்போ கிடையாது. நட்ராஜ் பென்சில் இருக்கும், வாங்கிட்டு வரவா?’ என்று பழனி கேட்டான்.

‘அப்படியே ஒரு புது பிளேடு ஒன்றும் வேண்டும்’ என்று சொல்லி இருபது ரூபாயை நீட்டினார்.

“பிளேடு எதற்கு சார்!  பென்சில் சீவி இருக்கு, நானே சீவிக் கொண்டுட்டு வர்றேன்” என்றான்,

அதுதான் அலுவலக நடைமுறை. உயர் அலுவலர், ஊழியர்கள் அனைவரின் பேனாவிற்கு மை ஊற்றுவது, பென்சிலை சீவித் தருவது, கழற்றிய பேனாவின் மூடியை மாற்றி விடுவது, தபாலைப் பிளேடால் பிரித்துக் கொடுப்பது, ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒற்றித் தருவது, கீழே விழுந்த குண்டூசியைப் பொறுக்கி எடுத்துத் தருவது, இதெல்லாம்தான் பியூனின் வேலைகள், இதுவரை ஒரு உயர் அலுவலர் கூட தானாகக் கீழே விழுந்த குண்டூசியைக் குனிந்து எடுத்த சரித்திரமே கிடையாது.

“வேணாம் பழனி, நானே சீவிக்கிடுவேன். நீ பென்சில், பிளேடு மட்டும் வாங்கிட்டு வா” என்றார்

இது போன்ற அற்ப எண்ணம் யாருக்காவது வருமாயென்ன…  சிறுவயதில் பென்சிலை சீவும்போது பிளேடு கையில் பட்டு பெருவிரலில் ரத்தம் வந்த நாட்கள் நினைவில் வந்து போனது. பழனி வரும்வரை மனது கொதிப்பிலே இருந்தது.

பழனி பென்சிலையும் பிளேடையும் நீட்டினான். அரக்கு வண்ணக் கோடு போட்ட பென்சிலது. அதை முகர்ந்து பார்த்தபோது வாசனையேயில்லை. வழக்கமாக புதுப்பென்சிலில் ஒரு மணமிருக்குமே. அது ஏன் இந்தப் பென்சிலில் இல்லை என்று ஆழமாக நுகர்ந்து பார்த்தார். ஒரு வாசனையும் இல்லை.

பிளேடைப் பிரித்து பென்சிலை  சீவ ஆரம்பித்தார். ஆப்பிள் பழத்தின் தோலை உரிப்பது போல கவனமாக, மெதுவாக, வளைய வளையமாக அவர் பென்சிலை சீவத் துவங்கினார். அந்த நிமிசம் மனம் மெல்ல சந்தோஷம் கொள்ளத் துவங்கியது. பென்சிலை சீராக சீவச்சீவ மனது தீவிரமாக உற்சாகம் கொள்ளத் துவங்கியது.

பென்சில் முனையைக் கூர்மையாகத் தீட்டினார். அழகாகச் சீவப்பட்டு பென்சில் எழுதத் தயாராக இருந்தது. ஏதாவது வரையலாமா என்று யோசித்தார். என்ன வரைவது?  ஒரு முட்டை போல வரைந்து அதற்கு இரண்டு கண்கள் வைத்தார். மூக்கை எப்படி வரைவது என்று யோசிப்பதற்குள் படம் வரையும் ஆசை வடிந்துவிட்டிருந்தது.

மனதில் அதே குரல் மீண்டும் எழுந்தது.

பென்சில் சீவு.  நன்றாக பென்சில் சீவு.

‘என்ன இம்சை இது’ என்றபடியே அவர் பென்சில் நுனியை மேஜையில் அழுத்தி உடைத்தார். மறுபடியும் பிளேடை எடுத்து பென்சிலை சீவத்துவங்கினார். அன்று மாலை வரை அது ஒரு முடிவில்லாத விளையாட்டு போலவே நடந்தேறியது. அலுவலகம் விடும்போது அவர் கையில் சுண்டுவிரல் அளவு பென்சிலே மீதமிருந்தது.

சீவிச்சீவிப் போட்ட பென்சில் வளையங்கள் அவரது மேஜையடியில் சிதறிக்கிடந்தன. மனதில் அந்தக் குரல் அடங்கியிருந்தது. என்ன விளையாட்டு இது, யாராவது தனது செய்கையைக் கவனித்திருப்பார்களா? சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். ஒருவேளை அவர்களும் தன்னைப் போல விசித்திர விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று தோன்றியது.

மீதமான பென்சிலைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். பென்சிலை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். மனைவி துணி துவைக்கும்போது கவனமாக அதை வெளியே எடுத்து வைக்கிறாளா எனப் பரீட்சை செய்து பார்க்க வேண்டியதுதான் என தோன்றியது. இதை வைத்து அவள் தன்மேல் கொண்டிருக்கிற அக்கறையை முடிவு செய்துவிடலாம் என்றபடியே பென்சிலை சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

அன்றிரவு வேண்டுமென்றே அவராக சட்டையைக் கழட்டி அழுக்குக் கூடையில் போட்டுவந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவி துவைத்து தேய்த்து வைத்த சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்த சட்டையைக் கண்டார். உடனே மனைவியை அழைத்து “இதில் ஒரு பென்சில் இருந்ததே, அதைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.

அவள் “அப்படி எந்தப் பென்சிலையும் தான் பார்க்கவில்லை” என்றாள்.

“சட்டைப் பையில்தான் வைத்திருந்தேன். அதைக் கூட கவனிக்கவில்லையா?: என்று கடுமையான குரலில் சொன்னார்.

அவளோ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல “சட்டையை அப்படியே எடுத்து வாஷிங் மிஷினில் போட்டு இருப்பேன். இப்போ எதுக்கு அந்தப் பென்சில்!” என்று முறைத்தபடியே கேட்டாள்.

அவருக்கு ஆத்திரமாக வந்தது. இவ்வளவுதான் தனது இடம். வீட்டில் தன் மீது யாருக்கும் எவ்விதமான அக்கறையும் கிடையாது. தனது சம்பாத்தியத்திற்காக மட்டுமே தன்னை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலை இப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது என்று கோபம் பொங்கியது.

“சட்டையில் என்ன இருக்குனு பாக்கவே மாட்டாயா?” என்று கோபப்பட்டார்.

“அதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னு தெரியலை.  வாஷிங் மிஷின்ல கதவு சரியில்லாமல் தண்ணி ஒழுகுது. இதுல உங்க இம்சை வேறயா? ஒருநாள் நீங்க பக்கத்தில இருந்து துணி துவைச்சிப் பாருங்க, அப்போ தெரியும்” என்றாள்.

தாங்க முடியாத ஆத்திரத்துடன் அன்று காலை உணவை வீட்டில் சாப்பிட மறுத்துப் பசியோடு அலு வலகம் வந்து சேர்ந்தார். அலுவலக பாத்ரூமிற்குள் போய் நின்றுகொண்டு தனது முகத்தை தானே பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்கள் ஒடுங்கியிருந்தன. புருவம் தளர்ந்திருந்தது. கண் இரைப்பைகள் ஊதி தொங்கிக் கொண்டிருக்கின்றன. நெற்றி, கன்னம் இரண்டும் உலர்ந்து போயிருக்கிறது. உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு உதிர்ந்து விட்டிருக்கிறது.  தன்னிடமிருந்த யௌவனம் முற்றிலுமாகப் போய்விட்டது. இனி தன் முகத்தில் ஒருபோதும் இளமையில் கண்ட பொலிவு திரும்ப வரப்போவதில்லை. தான் தோற்றுவிட்டோம். இளமையை இழந்துவிட்டோம். அதுதான் இது போன்ற கிறுக்குத்தனமான எண்ணங்களை உருவாக்குகிறது. இனி தான் ஒரு காலிபாட்டில் மட்டுமே… நினைக்க நினைக்க தன்மீதே ஆத்திரமாகவும் கோபமாகவும் வந்தது.

சே, என்ன வாழ்க்கையிது… முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல பேருந்து பயணம். அலுவலகம், மதிய உணவு, வேலை முடிந்து வீடு திரும்புதல், டி.வி.பார்ப்பது, இரவு உணவு, உறக்கம், விடிகாலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்ளுதல், குளிப்பது, சாப்பிடுவது, மறுபடி பேருந்துப் பயணம் என ஓடிக் கொண்டேயிருப்பது தாங்க முடியாத சலிப்பூட்டுகிறது.

அதே பற்பசை, அதே சோப்பு, அதே சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி, அதே இட்லி, தோசைகள், அதே கோடு போட்ட சட்டை, கைக்குட்டை, செருப்பு, அலுவலக மரமேஜை, குண்டூசிகள், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது.

மாற்றம் வேண்டும். ஏதாவது செய்து உடனே தனது வாழ்வை மாற்றியாக வேண்டும் என்ற குரல் ஆழமாக எழுந்தது. என்ன செய்வது, எப்படி மாற்றுவது, யாரிடம் கேட்பது, அவர் குழப்பத்தினுள் ஆழ்ந்துபோய்க் கொண்டிருந்தார்.

என்ன செய்து இதை மாற்றுவது என்று புரியவில்லை. ஆனால் மாறிவிடு மாறிவிடு என்ற அந்தக் குரல் மண்டைக்குள் சதா கேட்டுக் கொண்டேயிருந்தது. அதுவரை நிம்மதியாக உலவி வந்த தினசரிவாழ்வின் இயல்பிற்குள் அடங்கவிடாமல் அக்குரல் அவரைத் திணறடித்துக் கொண்டிருந்தது.

அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. இந்த ஆதங்கம் பற்றியோ, வேதனை குறித்தோ மனைவியோ, பிள்ளைகளோ கவலைப்படவேயில்லை. அவர்களிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாளிரவு படுக்கையில் கிடந்தபடியே மனைவியிடம் கேட்டார்:

“சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, டி.வி. பார்ப்பது, உறங்குவது என இதையே  திரும்பத் திரும்பச் செய்வது அலுப்பாகயில்லையா?”

“அலுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி ஒன்றும் இல்லையே” என்றாள்.

“நீ ஏன் இப்போது  இரட்டை சடை பின்னிக் கொள்வதில்லை? நிறைய நேரங்களில் பவுடர் கூட போட்டுக் கொள்வதில்லையே” என்று கேட்டார்.

“பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனிமேல் எதற்கு பவுடர்? ஜடைபின்னல்? வரவர கண்ணாடி பார்க்கவே அலுப்பாக இருக்கிறது. நிறைய நேரங்களில் கண்ணாடி பார்க்கும்போது அழுகை வந்துவிடுகிறது” என்றாள்.

அது நிஜம். தன்னாலும் இருபது வயதில் கண்ணாடியை ரசித்தது போல இன்று ரசிக்க முடியவில்லை. ஆழமான குற்றவுணர்ச்சி மேலோங்கிவிடுகிறது. கண்ணாடி மௌனமாகப் பல உண்மைகளை நமக்குப் புரிய வைத்து விடுகின்றது.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். காதோரம் நிறைய நரைமயிர்கள் வந்துவிட்டிருக்கின்றன. அதை மைபூசி மறைக்க விரும்பாதவள் ஆகிவிட்டாள். உடலில் இருந்த பெண்மையின் நளினங்கள் மறைந்து போய்விட்டன. தொடர்ச்சியாக ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பதன் மூலம் தனது அலுப்பைக் கடந்து போய்விடுகிறாளோ என்று தோன்றியது.

நரை மயிர்கள் பெண்களுடன் பேசும் என்று அம்மா சொல்வாள். இவளிடம் அவளது நரைமயிர் என்ன பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.

மாற வேண்டும் என்று நீ நினைக்கவில்லையா என்று கேட்க நினைத்தார். ஆனால் அதை அவளிடம் கேட்கவில்லை. அவள் தலையணையால் முகத்தை மூடியபடியே உறங்கத் துவங்கியிருந்தாள். இதே போலத்தான் இத்தனை ஆண்டுகாலமாகத் தூங்குகிறாள். அது அவளது இயல்பு. ஒருவர்  போல இன்னொருவரால் உறங்கவே முடியாது. அன்றிரவு குழப்பமான சிந்தனைகள் அவரை வாட்டி எடுக்க ஆரம்பித்தன.

சொந்த வீடு வாங்கியாகிவிட்டது. பேங்க் சேமிப்பு இருக்கிறது. பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்கிறார்கள். உடம்பில் சக்கரை நோய் வந்துவிட்டது. இனி என்ன மிச்சமிருக்கிறது. ஆனால் வாழ்வின் பாதியில் தானே வந்துநிற்கிறேன். சைக்கிள் சுற்றுபவன் ஒரே வட்டத்திற்குள் ஓய்வேயில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பது போன்றதுதான் மிச்சமிருக்கும் வாழ்க்கையா? அதுதான் நிஜமென்றால் அது எவ்வளவு பெரிய தண்டனை!

இதை அனுமதிக்கக் கூடாது, மாறிவிட வேண்டும்.

ஒருநாள் பேருந்தில் போவதற்குப் பதிலாக ஆட்டோ வில் அலுவலகம் போய் பார்த்தார். வீட்டு உணவைச் சாப்பிடாமல் பீட்சா கார்னரில் போய் பீட்சா சாப்பிட்டுப் பார்த்தார். கோடு போட்ட சட்டைக்குப் பதிலாக டீசர்ட் போட்டார். வழக்கமாகக் கேட்கும் பழைய பாடல்களுக்குப் பதிலாக ராப் பாடல்கள் கேட்கத் துவங்கினார். விடுப்பு எடுத்து ஊட்டிக்குப் போய் தனியே இருந்து வந்தார். ஆனால் இந்த மாற்றங்கள் எதுவும் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. மாறாக, மனம் பழைய விஷயங்களை ஆழமாகப் பற்றிக் கொள்ளத் துவங்கியது.

இவ்வளவுதானா வாழ்க்கை, இதற்காகவா ஓடியோடி வேலை செய்தோம். அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்கோ ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தவறை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. எதிலும் ஒன்ற முடியாத தத்தளிப்பு அவரை இப்படிக் காரணமில்லாத எண்ணங்களாகத் துரத்தியது.

***

பேருந்து கிண்டி வந்து நின்றதும் இறங்கி அவர் ராஜ் பவனை நோக்கி நடந்து போகத் துவங்கினார். பலமுறை பேருந்தில் இதைக் கடந்து போயிருக்கிறார். ஒருமுறை கூட ராஜ்பவன் உள்ளே போனது கிடையாது. இப்போது யார் கவர்னர் என்று கூட அவருக்குத் தெரியாது.

ஆர்ச் உள்ளே நடந்தபோது வெள்ளையும் காக்கியுமாக யூனிபார்ம் அணிந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை நிறுத்தி யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் மின்சாரத்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார்.  அவரை உள்ளே செல்வதற்கு அனுமதித்தார்கள். இவ்வளவு பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி சென்னைக்குள் தானிருக்கிறது என்பது வியப்பாக இருந்தது. கவர்னரின் மாளிகை என்பது பழங்கால அரண்மனை போல இருந்தது. அதைக் கடந்து உள்ளே போனபோது ஒரு இளம்பெண் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேச்சின் ஊடாகவே அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை செய்தாள்.

அவர் நடந்து உள்ளே சென்றபோது சிவப்பு ஓடு வேய்ந்த குடியிருப்புகள் தெரிந்தன. முதுமலையில் பார்த்த வனசரகர்களுக்கான குடியிருப்புகள் நினைவிற்கு வந்தன. பசுமையின் ஊடாக அமைந்த அந்த வீடுகளும் அதன் முகப்பில் பீச்சியடிக்கும் தண்ணீர்க் குழாயும்  சாலை முழுவதும் உதிர்ந்து கிடக்கும் பூக்களும் விட்டு விட்டுக் கேட்கும் குயிலின் குரலும் அந்த இடத்தை மிகுந்த ஈர்ப்புடையதாக்கியது.
மான்கள் எங்கேயிருக்கின்றன என ஒரு நடுத்தர வயது ஆளிடம் கேட்டதும் அவன் தெற்குப்பகுதியை நோக்கி கையைக் காட்டினான்.

அந்த மண்சாலையில் உள்ளே நடந்தபோது காய்ந்து போன சருகுகள் பழுத்து மக்கியிருந்த வாசனை அடித்தது. கவர்னர் மாளிகையின்  புறத்தோற்றத்திற்கு மாறாக உட்புறம் அடர்ந்த காடு ஒன்றின் பகுதி போலவே இருந்தது. அவரது காலடிச் சப்தம் கேட்டு எங்கிருந்தோ ஒரு பறவை சடசடவென சிறகடித்துப் பறந்து போனது.

அவர் ஈரம் படிந்த மண்ணில் நடந்து திரும்பியபோது காய்ந்துபோன புற்களின் ஊடாக நாலைந்து மான்கள் வெயில்பட படுத்துக் கிடப்பதைக் கண்டார். அந்த மான்கள் சோர்வுற்றிருந்தன. அதன் கண்களில் அச்சம் மேலோங்கியிருந்தது. அவை வாகனங்களின் சிறுசப்தத்திற்குக் கூட திடுக்கிட்டு எழுந்தன. நகரம் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை. சூழ்நிலைக்குப் பழகிப் போய்விடுவதுதான் மான்களின் பிரச்சினை.  தனக்கு விருப்பமான சூழ்நிலையை மான்களால் உருவாக்கி கொள்ள முடியாது.  வாழ்நாள் முழுவதும் துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான் அதன் வாழ்க்கை, எவ்வளவு பெரிய அவலமது.

மான்களைப் பார்க்கப் பார்க்க அதன் உடலில் இருந்த புள்ளிகள் உதிர்ந்து போய் அவை வெறும் ரப்பர் பொம்மைகள் போல தோன்றின. தான் காணவிரும்பியது இது போன்ற சலிப்பூட்டும் மான்களையில்லை. இவை நகரவாசிகள் வேடிக்கை பார்ப்பதற்காக  வளர்க்கப்படும் மான்கள்.

இந்த நகரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது என்பதை நினைவூட்டுவதற்காக மிச்சமிருக்கும் மான்கள். இவை குற்றவுணர்வின் சின்னங்கள். மனசாந்தியை அளிப்பதற்குப் பதிலாக இவை குற்றவுணர்வைத் தூண்டுகின்றன.

ஒரு மான் வீசி எறியப்பட்ட காகிதம் ஒன்றினை முகர்ந்து பார்த்துவிட்டு மூக்கால் உரசத் துவங்கியது. எரிச்சலூட்டும் இந்த மான்களை ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். போய்விடலாம் என்று தோன்றியது.

நிழல் விரிந்து கிடந்த மரங்களுக்கு இடையில் நடந்து வந்தபோது சிவப்பு ஓடு வேய்ந்த வீடுகள் தென்பட்டன. அதன் ஊடாகவே நடந்தார்.  ஒரு வீட்டின் வாசலில் கோடுபோட்ட ஜிப்பா அணிந்த ஒரு முதியவர் கையில் ஒரு மான்குட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது,

ஆச்சரியத்துடன் அவரை நெருங்கிப் போய் நின்றார்.

அந்த முதியவர் சிறிய பால்புட்டி ஒன்றினை மானுக்குப் புகட்டி விட்டுக் கொண்டிருந்தார். மான் புட்டிப்பால் அருந்துவது வியப்பாக இருந்தது. மான் குட்டியைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. வய-தானவர். சும்மா தொடுங்க என்றார். அவர் மான்குட்டி-யின் உடலில் கை வைத்தபோது மிருதுவாக, கோரைப் புல்லைத் தடவுவது போல இருந்தது. மானின் மூச்சுக் காற்று சீராகக் கையில் பட்டுக் கொண்டிருந்தது.

“இந்த மான்குட்டியோட தாய் ரோட்டை கிராஸ் பண்றப்போ கார்ல அடிபட்டுச் செத்துப்போச்சி. அதான் குட்டியைத் தூக்கிட்டு வந்து நான் பால்குடுத்து வளக்கேன். தானாக இரை எடுக்கிற வரைக்கும் வளர்த்து விட்டுட்டா அப்புறம்  அது புல்லைத் தின்னு வளர்ந்துக்கிடும். இப்படி எது மேலயாவது நாம அக்கறை காட்டாட்டி நாம வாழ்ந்து என்ன பிரயோசனம்? சொல்லுங்க” என்றார்.

அவர் மௌனமாக அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

இது முதுமையில் ஏற்படும் மனப்பக்குவம். மிச்சமிருக்கும் வாழ்க்கையை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அன்பைப் பற்றி பேசச் செய்கிறது. அதிகாரியாக இவர் வேலை செய்த காலத்தில் தனது அலுவலகத்தை விட்டுவிட்டு இப்படி மான்குட்டிக்குப் புட்டிப்பால் கொடுப்பாரா என்ன… சூழ்நிலையைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்கிறார். அவ்வளவே. நாளை இந்த மான்குட்டியைப் பற்றி இவர் ஒரு கட்டுரை எழுதுவார். மான்குட்டியை அணைத்தபடியே உள்ள தனது புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டி சந்தோஷப்படுவார். சுயநலம் கலந்த அன்பிது.
அவர் வெளியேறிச் சாலையில் நடந்தபோது வெயில் உச்சிக்கு வந்திருந்தது. வீடு செல்லும் பேருந்தில் ஏறிய போது ஒரு பள்ளிச் சிறுவன் அருகே இருக்கை காலியாக இருந்தது. அதில்  போய் உட்கார்ந்து கொண்டார்.

அந்த சிறுவன் சாலையை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அவனிடம் “நீ மானைப்  பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

அவன் டி.வி.யில் பார்த்திருப்பதாகச் சொல்லியதோடு, தன்னால்  நன்றாக மானை வரையமுடியும் என்றான்.

தான் ஒரு அதிசயமான நீலப்புள்ளிகள் கொண்ட மழைமானைப் பார்த்து வந்ததாகவும், அந்த மான் அமேசான் மழைக்காடுகளில் மட்டுமே வாழக்கூடியது என்றும், அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு தண்ணீரை அருந்தாது என்றும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லத் துவங்கினார். சிறுவன் வியப்போடு “அப்படியான மான் எங்கேயிருக்கிறது” என்று கேட்டான்.

தான் இப்போது தான் அதை கவர்னர் மாளிகையினுள் கண்டதாகவும், அதை மெக்சிகோவில் இருந்து கொண்டு வந்திருப்பதாகவும் கதைவிடத் துவங்கினார். அந்த சிறுவன் நீலநிறப் புள்ளிகள் எது போல இருந்தன என்று கேட்டான். அது எரியும் சுடர் போல ஒளிர்ந்தன என்று சொன்னார். அந்த சிறுவன் கண்ணை மூடிக் கொண்டு நீலப்புள்ளி கொண்ட மழைமானைப் பற்றிக் கற்பனை கொள்ளத் துவங்கினான். அதன்பிறகு அச்சிறுவன் மானைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்தை விட்டு இறங்கும்போது சிறுவனை ஏமாற்றியது மிகவும் வருத்தமாக இருந்தது. தான் நிஜமாக நீலப்புள்ளி உள்ள ஒரு மழைமானைக் கண்டிருக்கக் கூடாதா என ஆதங்கமாக இருந்தது.
வீடு வந்து சேரும்போது திடீரெனத் தோன்றியது, எதையுமே நாமாக கற்பனையில் நினைத்துக் கொள்வது தான் சுகம். நிஜம் ஒருபோதும் ருசிப்பதில்லை. தேவையில்லாமல் நம்மை நாம் அலைக்கழித்துக் கொள்கிறோம் என்று.

வீடு வந்த சேர்ந்தவுடன் அவரது மனைவி  அலுவலகப் பையை வாங்கி வைத்துவிட்டு “முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? கிட்ட வாங்க, கண்ல ஏதோ ஒட்டியிருக்கு” என்றாள்.
சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டபடியே சொன்னார்:

“அது மானோட உடம்புல இருந்து உதிர்ந்த புள்ளியாக இருக்கும். இன்னைக்குத் திடீர்னு ஆபீஸ்ல இருந்து கவர்னரைப் பார்க்கப் போகச் சொல்லிட்டாங்க. அங்கே ஒரு மழைமானைப் பார்த்தேன். அப்பா, என்ன ஒரு ஜொலிப்பு! நீ பாக்கணுமே. அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு எதையும் குடிக்காதாம்” என்று கடகடவென தனக்குத் தோன்றிய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவள் அதைக்கேட்டு சிரித்தபடியே சொன்னாள்:

“போதும் உங்க கதை. நான் ஒண்ணும் பச்சைப்பிள்ளையில்லை, எனக்கும் வயசாகுது.”

“எனக்கும்தான்” என்றபடியே அவர் சிரித்துக் கொண்டார். பிறகு அப்படி சிரித்ததற்காக மிகவும் வருத்தமாக உணர்ந்தார். அந்த வருத்தமான மனநிலையின் அடியாழத்தில் மழைமான் ஒன்று பெரும் சிறகுகளுடன் பசுமையான வனத்தில் பறந்து கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version