தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்

(1/13) > >>

ஆதி:
மாங்கனி கண்ணதாசனின் க(ன்)னி காவியம், சில சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட இந்த காவியம் பெரும்பேர் பெற்றது..

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச்சென்ற பொழுதில் சிறையில் அவரால் படைக்கப்பட்ட காவியமே இது, இதன் இன்னொரு சுவாரஸ்யம் இந்தக் காவியத்தை எழுத கண்ணதாசன் எடுத்துக்கொண்டது வெறும் ஆறு நாட்கள், அதுவும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமே அவர் எழுத அமருவாராம்..

இந்த காவியம் நாற்பது பாடல் கொண்டது, நாற்பது பாட்டிலும் நாற்பது சம்பவங்கள் நிறைந்திருக்கும்.. எழுதி இரண்டு வருடம் கழித்தே இந்தக் காவியம் புத்தகமானது..

மாங்கனியை நான் என் நடையில் என் வார்த்தைகளில் எழுத வெகு நாளாய் ஆசையுற்றிருந்தேன்.. கண்ணதாசனே இதைக் காவியமாக தான் எழுதி இருக்கிறார், மீண்டும் இதை தொடர்கவிதையாக எழுத என்னக் காரணம் ?

காரணம் இதுதான், நான் தமிழ் படிக்க ஆரம்பித்த காலம் முதல் காவியங்களில் கதைகளில் வெகு சில பாத்திரப் படைப்புகளை ரசித்திருக்கிறேன் கண்ணகி மாதவி மணிமேகலை பதுமை தமயந்தி என்பன சில அதில்..

கண்ணகி - மாதவி என்று வரும் போது எனக்கு இருவரையும் சமமாய் பிடிக்கும்..

அன்னைக் கண்ணகி எந்த அளவுக்கு கற்பில் சிறந்தவளோ அந்த அளவுக்கு மாதவியும் கற்புடையவளே..

அன்னைக் கண்ணகி பிறப்பால் நற்குலத்தாள், கன்னியியம் கற்பியம் என்று கட்டுப்பாடுகள் பல்துக்குள் வளர்ந்தவள்.. அதனால் அவள் வாழ்வின் நன்நெறிப்படி கணவன் இல்லாத தருணத்திலும் வாழ்ந்தாள்..

மாதவி அப்படி இல்லை கணிகையர் குலத்தில் பிறந்தவள், அவள் வாழ்வுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை, யாருடனும் எப்போதும் அவள் வாழ அவள் சமுதாயத்தில் இடமுண்டு வசதி உண்டு, இப்படி கட்டுப்பாடு இன்றி வாழ்கிறாள் என்று அவளை உலகம் இடித்தோ இழித்தோ பேசப்போவதில்லை இருந்தும் அவள் கற்புடையவளாய், கொண்ட கோவலனுக்கு மட்டும் மனைவியாய் வாழ்ந்தாளே அந்த கற்பு எனக்கு அவள்மீது அதிகமாய் மரியாதையைக் கூட்டியது..

இதைப் போல சில பாத்திரப் படைப்புகளை காதலித்திருக்கிறேன், அப்படி நான் காதலித்த முதல் பெண் மாங்கனி, இந்த பாத்திரப் படைப்பு கண்ணதாசனின் கற்பனைப் படைப்புதான் சரித்திரத்தில் இந்த பெயரோ ஆளோக் கிடையாது.. மாங்கனியின் காதல் தோற்ற போது அவளைவிட நான் அதிகமாய் அழுதேன்.. அதற்கு பிறகு நான் காதலித்த மற்றொரு பெண் கல்கி அருளிய சிவகாமி சபதத்தின் சிவமாகி.. என்னை அழவைத்த அடுத்த ஒரு நாயகி சிவகாமி இவளையும் நான் அதிகமாய் காதலித்தேன் இந்த கதையைப் படிக்கிறப் போது நரசிம்ம பல்லவனாய் நடமாடியவன் நாந்தான்..

மாங்கனிப் பற்றி சொல்லும் போது கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்லியது இதுதான், இந்த காவியத்தைப் படைக்கும் போது என் உணர்ச்சி ஓட்டத்தை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை.. அதனால் வார்த்தைகள் இலக்கணத்தின் வரையரைக்குள் வந்தமரவில்லை.. செந்நாப்புலவர்களே மன்னித்துவிடுங்கள் என்றுச் சொன்னார்..

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்

என்று பாடிய என் காதல் கவிஞனாலேயே உணர்ச்சி ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நானோ சிறுவன் உணர்ச்சிகள் கட்டவிழ்ந்து மாங்கனியைக் காதலித்ததில் தவறென்ன வியப்பென்ன இருக்கிறது..

அதனாலேயே இந்த காவியத்தை என் மொழிகளில் எழுத ஆசைப்பட்டேன், கண்ணதாசன் அளவுக்கு சுவையாய் தரமுடியாது என்றாலும் என் முழு திறனையும் முயற்சியையும் கொட்டி எழுத முயற்சிப்பேன்..

வழக்கம் போல் அன்பு உறவுகளின் ஊக்கமும் உற்சாக பின்னூட்டமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

ஆதி:
வள்ளுவனோ கம்பனோ இளங்கோவோ சங்க இலக்கியமோ
வாழ்த்தி இறைவனைப் பாடாமல் வளரவில்லை
தெள்ளு தமிழ்தேவி அவளை வாழ்த்தி
சின்னவனென் படைப்பை துவங்குகிறேன்..

தமிழ் வணக்கம்

பெற்றது தாயெனினும்
உற்றது நீயே தமிழே
கற்றதை அறிந்ததை
கையிருப்பில் உள்ளதை
வைத்தே அன்னை உன்னை
வாழ்த்த வடிக்கிறேன் கவி..
பிள்ளைத் தமிழ்
பெரியவர் தமிழாக ஆசிகொடு
செந்நாப் புலவர்
வாய் தவழ்ந்த செந்தமிழே!
எந்நாவிலும் வந்து நடமாடு..

ஆதி:
பழையனின் அரசவை


"புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி"




என்றொலித்ததும்
எழுந்தனர் அவையோர் யாவரும்..

வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
எழிலுடன் வந்தாள்
பூமீது நடந்து
பூலோக நிலவாய் ஒருத்தி..

வெளிச்ச மேகமாய்
வெண்ணிற உடை
முகத்தில் வசீகரம்
முல்லை மாலை
அகத்தின் தெய்வீகம்
அங்கமெலாம் விரிந்து
தகதகக்கும் தாரகையாய்
தரைமீது மிளிர்ந்தாள்..

மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..

ராணியாக வேண்டியவள்
ஞானியாக நோம்பு கொண்டாள்

நாணமும் முகம்வர
நாணும் வீரமகள்
தானமும் தவமும்
தரித்த ஈரமகள்..
போனது துறவானாலும்
போகவில்லை நாட்டைவிட்டு

வேலேந்திய விழியாள்
வேந்தன் மகள்தான்..
பெண்ணரசிப் பெயர் "பொன்னரசி"

அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..

நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்
அருகே வந்ததும்
அமைச்சன் "அறிவன்"
முன்னே வந்து
முகற்கண் வணங்கினான்..


தொடரும்...

Global Angel:
ஒரு சிறு விளக்கம் வேண்டுகின்றேன் ... இந்த காவியத்தை கண்ணதாசன் எழுதியது கவிதை வடிவிலா இல்லை .. கட்டுரை கதை வடிவிலா... அதை நீங்கள் கவிதை வடிவில் கொடுக்கின்றீர்களா ....? இந்த கவிதை உங்களால் காவியத்தில் இருந்து எழுதபட்டதா ?

ஆதி:
அவரும் கவிதை நடையில் தான் எழுதினார், அந்த கதையை உள்வாங்கி நான் என் நடையில் எழுதுகிறேன்

அதவாது கண்ணதாசன் முடித்த இடத்தில் இருந்து நான் துவங்கி இருக்கிறேன்

பொன்னரசி துறவு பூண்டதோடு காவியம் முடியும், அவள் அரச கட்டில் ஏறுவதாக நான் கதை அமைத்து எழுத முயல்கிறேன்

கண்ணதாசன் மரபு பாக்களில் எழுதினார் நான் புதுக்கவிதை, மரபு மற்றும் நவீன இலக்கியம் கொண்டு எழுத திட்டமிட்டு இருக்கிறேன்

கதை மட்டுமே கண்ணதாசனுடையது கவிதை என்னுடையதுங்க‌

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version