Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 253  (Read 1991 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 253
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
அந்த நாட்களின் நினைவுகள்
ரம்மியமானவை
அவளின்
ஒற்றை விரல்  பிடித்து
உலகளந்த நாட்களவை ..

உலகமே,
சுமந்தவளின்
விரல்  நுனியில்
உருள்வதாய் என் நினைவு ...

என் நினைவுகளோடு
மட்டுமன்றி
என் கனவுகளோடும்
என்றும் பயணமாகிறாள் அவள் ..

அவள் கன்னம் உரசும் பொழுதெல்லாம்
உலகையே வென்ற
ஒரு உன்னத உணர்வு
என் சின்ன சின்ன
சில்மிஷங்களில்
அவள் சிலிர்த்து
சிரித்து மகிழ்ந்த
நாட்களவை
இன்னும் என்
நினைவுப் பொக்கிஷத்தில்
பதுங்கி இருக்கின்றது

காலங்கள் கடந்தும்
சில கனவுகள் தொலைந்து
சில பல
பாலைகளை  கடந்தும்
என்னை சுமந்த
அவளின் இதய சுவர் எங்கும்
கண்ணா என
என் பெயர் எழுதி இருக்கும்
என் சுவர் எங்கும்
அம்மா என நான் எழுதியதை போல...
« Last Edit: December 20, 2020, 08:20:02 PM by Raju »

Offline thamilan

நான் முதல் பார்த்த என் தெய்வம்
நீயே அம்மா
என்நாவில் உதித்த முதல் சொல்
அம்மா நீயே
எனக்கு உருவம் தந்து
உன் உதிரத்தை பாலாக கொடுத்து
என்னை வளர்த்த அன்னையே
காலமெல்லாம் உன்காலடி  செருப்பாக
தேய்ந்தாலும் பெற்றகடன் தீருமா அம்மா

எனக்கு நடை பயிற்றுவித்தாய்
மரியாதையாய் பேச சொல்லித்தந்தாய்
கொடுத்து சாப்பிட கற்றுத்தந்தாய்
நான் பள்ளியில் படித்ததை விட
உன்னிடம் தானே அதிகம் அறிந்து கொண்டேன்

சிறகுக்குள் குஞ்சிகளை
பொத்தி வளர்க்கும் கோழிகள் போலே
வெயில் படாமல் தூசுப்படாமல்
என்னையும் பொத்தி பொத்தி வளர்த்தாயே
 
உன் அரவணைப்பில் உள்ள ஆனந்தம்
இதுவரை நான் அனுபவித்ததே இல்லையம்மா
நான் படுக்கையில் இருக்கும் போது
என்னை அன்பாக அணைத்து
உன் ஒரு விரலால் நெற்றில் விழும்
முடியை சுருட்டி சுருட்டி விடுவாயே
என் நெற்றில் முடி விழும்போதெல்லாம்
இன்னும் அந்த சுகம் 
மனக்கண்முன்னே தெரிகிறதே
அம்மா அன்று நீ எனக்கு
சந்திரனை காட்டி
அங்கே பாட்டி வடை சுடுவதாய் சொன்னாயே
பொய்யாக இருந்தாலும் மெய்யாக
தெரிந்ததன்று எனக்கு
 
அம்மா
உன்வானில் என்னை நிலவாக
உன் தோட்டத்தில் என்னை மலராக
நான் மரமாக வளர வேராக
என் துக்கத்தில் தோழியாக
தோள்கொடுக்கும் நண்பனாக
உன் ஒருத்திக்குள்ளே எத்தனை எத்தனை
பரிமாணங்கள்

நான் வளர்ந்து உன்னை
என்கைகளில் தாங்க வேண்டும்
உன்னை என் சேயாக
என்வீட்டின் மகாராணியாக
மகுடம் சூட்டவேண்டும் என்ற
என்கனவை பகல்கனவாகி
தூக்கத்தில் உயிர் துறந்தாயே
என்னை வாழ்நாள் எல்லாம்
கடன்காரனாகி விட்டாயே அம்மா 

« Last Edit: December 20, 2020, 11:47:24 PM by thamilan »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்பானவளே! என் முழுமதி அறிவானவளே!
என்றென்றும் எனை  காக்கும்  அகழி ஆனவளே!
உன் கையணைப்பின் நிமிடங்கள் என்றுமே! 
 மகரந்தத்தை அணைக்கும் பூவிதழ் போலவே !

அறுசுவையும் இதுவென அறிமுகப்படுத்தியவளே!
உயிர்களின் செயல்பாடுகளை அறிய செய்தவளே!
பஞ்சபூதங்களின்  தன்மையை உணர்த்தியவளே!
உன் சுட்டு விரலால் என் உலகை படைத்தவள் நீயே!

தலைமுறை கதைகளை நானும் தெரிந்தேன் உன்னாலே!
பதறிய பருவ மாற்றங்களை பக்குவமாக பகர்ந்தவளே!
மனித மனப்போக்குகளை உணர்த்தி பக்குவமாக்கியவளே!
உலகறிவை நான் அறியாமலே என்னுள் புகுத்தியவளே!

நீ கற்பித்த கல்விகளை எக்கணமும் மறவேனே!
நீ காட்டிய வழியே என் வாழ்வின் சாஸ்திரமே!
அன்னையின் அன்னையே! என் அழகு தேவதையே!
உன் பார்வை என்றும் என் வாழ்வின் அரணே!

Offline MoGiNi

அவன்  நினைவு மலர்களை
சுகிப்பதிலேயே
சுகம் காணுகிறது மனது ..
தென்றல் சுமக்கும் நறுமணங்களில்
அவன்  மன வாசனையை
நுகர்ந்துவிடத் துடிக்கிறது
மரணித்தும் துடிக்கும் இதயம் ...

குருதித் கலன்களின்
ஒவ்வொரு துகளுக்குள்ளும்
துல்லியமாய் உட்புகுந்து
உறையும் அவன்  நினைவுச் சிற்பங்கள்
கண்களில் மின்னுகின்றது
கண்ணீர் துளிகளென ...

ஒற்றையடிப் பாதையின்
ஓரங்களில்
ஒற்றையாய் வளர்ந்த
கள்ளிப்பூ ஒன்று
அவன்  கடினத்தை
கணத்தில் நினைவுறுத்துகிறது ..

கலந்து பிரிந்த
கைகளின் விரல் இடுக்கில்
பிரியாத பிரியங்களின் ரேகைகள்
நம் உறவின்  ஆயுளை
கூட்டி குளிர்விக்காதோ ?

ஒற்றையாய் உலவுகிறேன்
இலை உதிர்த்த
மரத்தின் கிளைகள் எல்லாம்
பசுமைக்கு ஏங்குவது போல்
உன்னை எண்ணி
அனைத்தும் இழந்து தவிக்கும்
என் இருதயம்
உன் நினைவு சுமந்து வாழ்கிறது
நடைப்பிணமென .

உன்னை சுமந்த கணங்கள்
இன்னும் என் நினைவில் இருக்கிறது
என்னை சுமக்க
உன்னை கோரவில்லை என் மகனே
தொலைவினில்
தொலைந்து கிடக்கும்
உன் நினைவுகளிலாவது
என்னை சுமக்கிறாய் ,
எனும் சமிக்கையாவது கொடுத்துவிடு
உன்னை சுமந்த கருவறை
குளிர்ந்து உறையட்டும் - மகனே .

Offline SweeTie

அதோ தெரிகிறதே   அந்த மலைகள்
அவை காலத்தை  கடந்தவை  '
மலையோடு  முட்டி மோதும்  கடலைப்பார்
கடலுக்கும்   வரையறை கிடையாது
இயற்கையின்   சொந்தங்கள்  இவை

மகனே
நீ வளர்ந்து  பெரியவன்  ஆனதும்   
உன் சிந்தனைகள்    ஆற்றல்கள்     
இந்த மலைபோன்று  வானை  தொடவேண்டும் 
 வரையறை இல்லாத   கடலைபோன்று 
உன் பெயரும்  புகழும்  காலத்தை  கடக்கவேண்டும்

உன்னை ஈன்ற  பொழுதில்   பெரிதுவந்தேன்
குலம்  காக்க வந்த   குலசாமி   நீ என்று
உற்றாரும்  மாற்றாரும்    மனதார வாழ்த்தவேண்டும்     
கற்றோரின்  வாய்மொழியில்     சான்றோன் எனக்கேட்டு   
பெற்றவள் நான் பேரின்பமடையவேண்டும். 

இல்லைஎன்ற  பேச்சை  இல்லாமல் செய்யவேண்டும்
இர ப்பவர்க்கு இன்முகம் காட்ட வேண்டும்   
நான்மறையும் கற்று நல்வழி ஒழுக வேண்டும்
நல்லதோர்  சமூகம்  உருவாகவேண்டி   
நற்பணிகள்  செய்ய வேண்டும்.

அன்பும் அறமும்  கண்ணென கொண்டு   
பண்பும்   பயனும்  பெற்று    வாழவேண்டும்
சினமும்  சீற்றமும்   தவிர்த்து  யாவர்க்கும்
இன்முகம்  காட்டவேண்டும்   
மகனே  சொல்வது  என் கடமை  ...சொல்லிவிட்டேன்
வாழ்வது   உன்  பொறுப்பு.   வாழ்ந்துவிடு





 

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
தூர தேசத்தில் ஓர் அந்தகார வேளையில்
நிலவின் பிடியிலிருக்கும்
மலைமுகட்டில் அமர்ந்திருக்கிறேன்.
சுழன்றோடும் காலத்தின் பிடியில் சிக்கி
தனியனாய் நின்றிருப்பவனுக்கு
அம்மா என்பவளின் நினைவுகள் மட்டும்
இறுக கைகோர்த்து அமர்ந்திருக்கிறது

எத்தனை துன்பங்களை புதைத்திருந்தாலும்
எப்பொழுதும் புன்னகையை ஏந்தி இருந்திருக்கின்றது உன் முகம்.
உன் விரல் கோர்த்து நடையிடுவதை விடவும்
கீழே விழுந்து நான் எழுந்திருக்கும் நொடிக்காக அமைதியாக காத்திருக்கும்
வித்தியாசமானவளாய் இருந்தாய்
இன்று உன்
 தளர்ந்த நடைகளும்,
மூச்சிறைக்கும் வார்த்தைகளும்
என்னை நிலைகுலைய செய்கின்றன

யாருமே அறிந்திட முடியாத தற்கொலையை பரீட்சித்து பார்த்த
நாட்களில்
தன்னையறியாமல்
என் தலைகோதி அமர்ந்திருந்திருக்கிறாய்.
மொத்தக் குடும்பத்தையும் பிணைக்கும்
ஒற்றைக்கண்ணியாய் இருந்த நீ
நூலறுந்த  பட்டம் போல
அங்கும் இங்குமாய் அல்லாடுவதை
காண சகிப்பதில்லை எனக்கு.

எவ்வளவு பக்கத்தில் நான் இருந்தாலும்
உனக்கு அது தொலைவு தான்.
பக்கத்து ஊரிலிருந்தாலும்,
பக்கத்து அறையில் இருந்தாலும்,
அது உனக்குத் தொலைவுதான்.
மற்றவரின் பிரிவுகளை வெறும் 'பிரிவு' மட்டுமே,
உன்னுடனான பிரிவு
என்னை அத்தனையிலும் இருந்து
பிரித்து வைக்கிறது.

பண்டிகை நாட்களிலிருந்து என்னை விடுவித்துக் கொண்ட காலங்களிலும்
தவறாமல் ஒலிக்கும்
உன் அலைப்பேசி அழைப்புகளை
நான் நிராகரித்து திரிந்திருக்கிறேன்.
எப்பொழுதாவது யாரோ கொடுக்கும் பண்டிகையின் பட்சணங்களில்
ஒளிந்திருக்கும் யாரோ ஒருவரின் 'அம்மாவின்'
புன்னகையின் பின்னால் உன்னை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

இந்த இடைவெளிகளை எதனைக் கொண்டாவது நிரப்பிட வேண்டும்.
அறுத்துக் கொள்ள விரும்பாத அந்த
கண்ணிகளை மீட்டெக்க வேண்டும். 
என்னை விடவும்,
என் பைத்தியக்காரத்தனங்களை தாங்கி நின்ற உன்னிடம் தஞ்சமடைய வேண்டும்.
என் பிரிய தேவதையின் அணைப்பில்
நான் பார்த்து ரசித்த
அதே மலைமுகட்டின் உச்சியில்
தனியனாய்
அம்மா என்பவளின் நினைவுகளோடு மட்டும் அமர்ந்திருக்காமல்
நிலவொளியில் உன் மடிமீது மீண்டும்
தலை சாய்த்திட வேண்டும்.
« Last Edit: December 25, 2020, 03:54:22 PM by Ninja »