FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 08, 2020, 08:16:04 AM

Title: காதல் தேர்தல்
Post by: thamilan on August 08, 2020, 08:16:04 AM
பெண்ணே ஒரு தொகுதிக்கு
இரு வேட்பாளகர்களா நாங்கள்

உன் விழிக் கோப்பையில்
வழிகிற பார்வை மதுவை
பருகி போதையில் திளைக்கிறது
என் மனம்

வாசமாய் நீ வரும் போது
வளர்பிறையாகிறது அவன் முகமும்

நீ தெருவில் வரும் போது
சிரிப்புக் காசுகளை அள்ளி வீசுகிறாய்
பொறுக்கிக் கொள்கிறோம்
 நானும்  அவனும்

என்னை கடக்கும் போது மட்டுமல்ல
அவனைக் கடக்கும் போதும்
உன் முகத்தில் மலர்கிறது
நாணம்

எங்கள் கண்களில் மட்டுமல்ல
கனவுகளிலும் நீ

உன் பார்வை மழை பெய்வதால்
இருவர் நதிகளிலும்
கரைபுரண்டோடுகிறது  காதல் வெள்ளம்

எந்த நதிக்கு கட்டப்போகிறராய்
காதல் கட்டு
எந்த நதிக்கு போடப் போகிறாய் 
அணைக் கட்டு

ஒரு தொகுதியில் இரு வேட்பாளர்கள்
நிற்பது நியாயம் தானே - ஆனால்
வெற்றிமாலை ஒருவருக்கு தானே
யாருக்கு சூடப்போகிறாய்
வெற்றிமாலையை

முன்பெல்லாம் நாங்கள்
நண்பர்களாக இருந்தோம்
நீ யாருக்கு என்ற போட்டியில்
முன்னாள் நண்பர்கள் ஆனோம்

நீ நரகமா சொர்க்கமா
உன்னை அடைந்த பின்னே
உண்மை தெரியும்

எங்கள் இளமையை வதைக்கும்
இம்சை அரசியே
சொல்
யாரைக் காதலிக்கிறாய் நீ!

நுண்ணறிவு கொண்ட அந்த
பெண்ணறிவு பேசியது

" என் இனிய நண்பர்களே .....
வாழ்க்கை வாகனத்தில்
விரைந்து கொண்டிருக்கும்
நீங்கள்
காதல் வாகனத்துக்காக
காத்திருக்காதீர்கள்....

இழக்காதீர்கள்
நட்புக்காக காதலயோ
காதலுக்காக நட்பையோ
இரண்டுக்காகவும் வாழ்க்கையை"

அவளோடு
கை குலுக்கிக் கொண்டது
எங்கள் நட்பு!