FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: kanmani on September 06, 2013, 10:28:37 PM

Title: மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்
Post by: kanmani on September 06, 2013, 10:28:37 PM
மிதுனம் (மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)

மிதுனராசியின் அதிபதி வித்தை, கல்வி, கேள்வி, விவேகம், கலை, ஆகியவற்றிற்கெல்லாம் காரகம் வகிப்பவரும், ராஜோ குணம் கொண்டவருமான புதன் பகவானாவார். கால புருஷனது அங்க அமைப்பில் தோள் பாகத்தை குறிப்பது மிதுன ராசி என்பதால் இது முதல் உபய ராசியாகும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3,4 பாதங்களும், திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன.

உடலமைப்பு

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும். கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை  வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும். அடிக்கடி மனக் குழப்பமும் உண்டாகும். நீண்ட ஆயுள் அதாவது 80 வயதுக்கு குறைவில்லாமல் வாழ்வார்கள்.

மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் கழிக்க மாட்டார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கோமாளி போலவும் ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும்  அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்வார்கள்.  மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம்  எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை  துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களுக்கு  துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்டவர்களின் கூட்டத்தில் கூட தன்னுடைய  ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும். கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

மணவாழ்க்கை,

திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகளாகவே இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவர்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள். சிற்றின்பத்தில் சற்று  ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் தேவையற்ற தொடர்புகளும் இருக்கும்.

பொருளாதார நிலை,

மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் சுக வாசிகள் என்றே சொல்லலாம். வீடு, மனை, வசதியும், வண்டி, வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும்.  பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வாழ்க்கை வசதிகளுக்காக விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாழ்க்கை வசதிகளைபெருக்கி கொள்ள அதிகமாக கடன் வாங்கவும் தயங்கமாட்டார்கள். இதனால் நிறைய கடனும் அதற்காக வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வம்பு, பிரச்சினைகளை சந்தித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.

புத்திரபாக்கியம்,

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். புத்திர பாக்கியமும் சற்று தாமதித்தே அமையும். இவர்கள் தங்களது அவசர முடிவால் உற்றார், உறவினர் மற்றும் பெற்ற பிள்ளைகளின் ஆதரவைக்கூட இழந்து விடக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடித்தாலே உறவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

தொழிலமைப்பு,

மிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பலருக்கு ஆலோசனைகள் வாங்கக்கூடிய திறமை இருக்கும்.  உத்தியோக அமைப்பு பெற்றவர்களாக இருந்தாலும் ஏதாவது உபதொழில் செய்து சம்பாதிக்க முடியுமா என யோசிப்பார்கள். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில் வல்லவர்கள். விவசாயத்திலும் ஈடுபாடு இருக்கும். முடிந்தவரை கடின உழைப்பின்றி நாசூக்கான வேலைகளையே  தேர்ந்தெடுப்பார்கள். கணக்கு, கம்ப்யூட்டர் விஞ்ஞான ஆராய்ச்சி, கதை வசனம் போன்றவற்றிலும் இவர்களின் திறமை  பளிச்சிடும். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும்.

உணவு வகைகள்,

மிதுன ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை காரமாக உண்பதையும் உஷ்ண சம்மந்த உணவு வகைகளையும் தவிர்க்கவும். பால், தயிர், நெய், வெண்ணெய், பசலை கீரை, தக்காளி, பார்லி, அவரை, தர்பூசணி, முட்டை, பழவகைகள், வாழைப் பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் -5,6,8,14,15,17
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் -மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் - விஷ்ணு