Author Topic: பக்தி கதைகள்  (Read 1996 times)

Offline Anu

பக்தி கதைகள்
« on: March 29, 2012, 01:26:05 PM »
பிரம்மாவாலும் கண்டு பிடிக்க முடியாத புதிர்!!


ரோமசர் ஓர் இளைய துறவி. அவர் உடம்பில் அடர்த்தியாக உரோமம் இருந்ததால் அவர் ரோமசர் என்று அழைக்கப்பட்டார். இவர் வேதங்களில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் சிறந்த ஜோதிடராகவும் திகழ்ந்தார். மக்களின் நெற்றியில் பிரம்மதேவனால் எழுதப்பட்ட தலையெழுத்தை படித்துச் சொல்லக் கூடிய வல்லமை பெற்றவர். ஒரு நாள் தன் தலையெழுத்தைத் தான் அறிய குருவினிடம் தனக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டார். அவரும், உன் விதி உன் உடலில் உள்ள உரோமம் சம்பந்தமாக உள்ளது என்று கூறினார். இதற்கு அர்த்தம் தெரியாமல் அவர் பலரையும் கேள்வி கேட்க அதில் ஒருவர், பிரம்மாதான் உனக்கு பதில் சொல்ல முடியும் என்று கூறினார். ரோமச முனிவரும் தன்னுடைய தவ வலிமையால் பிரம்மதேவரின் இருப்பிடம் அடைந்தார். பிரம்மதேவன் பூஜையில் இருந்ததால் அங்கு காத்திருக்க நேர்ந்தது. பூஜை முடிந்ததும் பிரம்மதேவன் ரோமசரைக் கண்டு எந்த விஷயமாக தன்னைக் காண வந்ததாகக் கேட்டார். ரோமசரும், அடுத்தவர்களின் தலையெழுத்தைக் கூறும் நான் எனக்குள்ள படி விதி என் ரோமத்தால் ஏற்படும் என அறிந்தேன். அதைப் பற்றி விவரமாக அறிய விரும்புகிறேன் என்றார்.

பிரம்மாவிற்கோ வியப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அவரால் ரோமசருக்கு அப்படி எழுதியதாக நினைவு இல்லை. இது எப்படி விட்டுப்போனது. ஆனால் தன் குழப்பத்தை ரோமசரிடம் வெளிக்காட்டாமல், நீங்கள் சிறிது நேரம் காத்திருந்தால் நான் எழுதிய குறிப்புகளைப் பார்த்துக் கூறுகிறேன். நான் தினமும் கோடி கோடியாக எழுதுவதால் நினைவில்லை. பார்த்துக் கூறுகிறேன் என்றதும், அதற்கென்ன நான் காத்திருக்கிறேன் என்று ரோமசரும் கூறினார். நீங்கள் ஏற்கெனவே காத்திருந்து இருக்கிறீர்கள். இன்னமும் காத்திருக்க வேண்டுமா? மேலும் நான் பூஜை செய்யும் சமயத்தில் காத்திருந்த நேரம் சத்யலோகத்தில் இரண்டரை நாழிகை. இது பூமியின் 35 கோடி எழுபது லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்குச் சமம். நீங்கள் உங்கள் இடத்திற்குச் சென்றால் கூட உங்களால் அதைத் தெரிந்து கொள்வது கடினம். எல்லாம் மாறியிருக்கும் என்றார் பிரம்மா.

ரோமசருக்கு வியப்பு ஏற்பட்டது. உடனடியாக தன் இடத்திற்குச் சென்றார். எல்லாமே மாறி இருந்தது. அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த பிரம்மதேவன் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர். பூமியின் 35,70,40,000 வருடங்கள் சத்யலோகத்தின் இரண்டரை நாழிகைக்கு ஈடானது. எனக்கு மட்டும் இப்படிப்பட்ட நீண்ட ஆயுள் கிடைத்தால் பூஜையை மணிக்கணக்கில் செய்ய முடியுமே என்று எண்ணி இப்படியும் அப்படியும் பார்த்தார். இப்போது என்ன செய்வது? பிரம்ம லோகம் திரும்பச் செல்வதா என்று யோசித்த போது கோயில் ஒன்றிலிருந்து விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் ஓம் பூத பவ்ய பவத் ப்ரபவே நமஹ என்ற நாமம் இவர் காதில் விழுந்தது. இதற்கு அர்த்தம் - எல்லாவற்றிற்கும் காரணமானவர் பகவான். அவன் நிலைத்திருப்பவன். மேலும் அவனே அனைத்து பிரம்மாக்களின் தலைவன். காலத்திற்கு உட்படாதவன்.

இந்த பிரம்மாவின் இரண்டரை நாழிகையே இத்தனை வருடங்கள் பூமியின் காலத்திற்குச் சமம் என்றால் பகவானின் காலக்கணக்கு எப்படி இருக்கும் என்பதை ரோமசர் புரிந்து வியந்தார். பிரம்மாவிடம் செல்வதைவிட பகவானின் நாமத்தைச் சொல்வதுதான் உசிதம் என்று ஓம் பூதபவ்ய பவத் ப்ரபவே நமஹ என்று மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ரோமசரின் பக்திக்கு இறங்கி பகவான் நாராயணன் அவருக்குக் காட்சியளித்து ரோமசருக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, நான் பிரம்மா மாதிரி நீண்ட ஆயுள் பெற்று உம்மை அதிகமாக பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டார். பகவானும், உன்னுடைய உடம்பில் ஒரு முடி விழும் போது ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும். உன் உடம்பில் எப்போது அனைத்து முடிகளும் உதிருகிறதோ, அப்போது நீ மோட்சம் அடைவாய் என்று அருள் பாலித்தார்.

இப்போது தன் விதி தன் ரோமத்தோடு எப்படி சம்பந்தப்பட்டது என்பதை ரோமசர் புரிந்து கொண்டார். பிரம்மதேவனால் கூட ரோமசரின் முடி உதிர்வில் எத்தனை பிரம்மாக்கள் தோன்றுவார்கள் என்பதை கணக்கிட முடியாது. எல்லாவற்றையும் அறிந்தவன் பகவான் நாராயணனே. அதனால்தான், ரோமசர் பிரம்மாவிடம் சென்று தன் தலையெழுத்து பற்றிக் கேட்டபோது பிரம்மாவினால் கூற முடியவில்லை. பகவான் ஒருவரே அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் என்று இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.


Offline Anu

Re: பக்தி கதைகள்
« Reply #1 on: March 29, 2012, 01:28:00 PM »
பக்தையின் காலணியை ஏந்திய பரமாத்மா!

 
குரு÷க்ஷத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதிபயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன், மறுநாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியாமல் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திரௌபதியிடம் விளக்கினார். நீ எப்படியாவது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார். என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி, திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில், கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களைத் தொட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி மீண்டுமொருமுறை அவரது பாதங்களை கண்களில் ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ! என்று சொல்லிவிட்டார். பிறகுதான் பீஷ்மர், விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திரௌபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசிர்வதித்த பிறகு, இனி அவர் அர்ச்சுனனை எவ்வாறு கொல்ல முடியும்? முடியாதே!

இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார். அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுனனும் என் பக்தர்கள். என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித்தார். ஆம்! அது உண்மைதான் ! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கைவிடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.


 


Offline Anu

Re: பக்தி கதைகள்
« Reply #2 on: March 29, 2012, 01:35:04 PM »
ஊரைத்திருத்த நாம யாரு!


ஊருக்கு உபதேசம் செய்யும் பலர், தங்கள் விஷயத்தில் அதைக் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை. அவங்களுக்கு ரொம்ப ஆசை, அதனால் தான் ஆட்சியில் அமர்ந்து மோசடி செய்றாங்க! என்று விமர்சிக்கும் பலர், அதையே சிறிய அளவில் தங்கள் பணியில் செய்கிறார்கள். ஒரு பெரியவர் குற்றால மலை மேல் ஏறி பொங்குமாங்கடலையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கேவந்த ஒரு இளைஞன், அங்கே என்ன உற்றுப் பார்க்கிறீங்க! உள்ளே விழுந்தா என்னாகும் தெரியுமா! வாங்க, கீழே போகலாம். அருவியிலே குளிச்சிட்டு ஊரைப் பார்த்து போங்க, என்றான் கரிசனையுடனும் கண்டிப்புடனும்.நான் உள்ளே விழுந்து உயிரை விடணும் தானே எட்டிப் பார்த்துட்டே இருக்கேன், என்றவரிடம், இந்த வயசுலே வாழ்க்கையிலே அப்படி என்ன வெறுப்பு? என்றான் இளைஞன்.

இந்த ஊரும் புடிக்கலே, உலகமும் புடிக்கலே, ஆசை புடிச்ச உலகம். இதை விட்டு போகணும், என்றவரின் அருகில், ஒரு பை இருந்ததை பார்த்தான் இளைஞன். சரி...பைக்குள்ளே என்ன வச்சிருக்கீங்க! என்றான் இளைஞன். கொஞ்சம் சாதம் இருக்கு! உள்ளே விழறதுக்கு முன்னாடி பசிச்சா சாப்பிடத்தான், என்றார் பெரியவர். இளைஞன் சிரித்தபடியே, சாகப்போகிற நிலையிலும் சாப்பாடு மேலே ஆசையை விடாத நீங்க, இந்த உலகத்திலே வாழ நினைக்கிறவங்க ஆசைப்படுறதைப் பத்தி கோபிக்கிறதுலே என்ன அர்த்தம் இருக்கு! ஊரை திருத்த கீழே குற்றாலநாதர் இருக்காரு. அவரு பாத்துக்கிடுவாரு. நீங்க கிளம்புங்க, என்றான். ஆசை காரணமாக சட்டத்துக்குப் புறம்பாக நடப்பவர்களைத் தண்டிப்பது ஆண்டவனின் வேலை. அவன் நினைத்தால் ஒரே பூகம்பம்! ஊரையே காலி செய்து விடுவான். ஒருவன் தன் அளவில் ஒழுக்கமாக இருந்தால், ஊரே திருந்தி விடும். சரி தானே!


Offline Anu

Re: பக்தி கதைகள்
« Reply #3 on: March 29, 2012, 01:36:13 PM »
நிஜம் ..

நமக்கு தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள் என்று எத்தனையோ உறவுகள்.. எந்த வீட்டிலாவது யாராவது யாரையாவது பிரியாமல் இருக்கிறார்களா! நன்றாக வாழ்ந்து முடிந்த ஒருவர், இறைவனை அடைந்தாலே நமக்கு இதயம் வலிக்கிறது. இளவயதில், ஒருவரைப் பிரிய நேர்ந்தால் அப்பப்பா... அந்த சோகத்துக்கு மருந்தே இல்லை. இப்படி ஒரு நிலைமை தான் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டது. அவளது மகன் இறந்து விட்டான். அவளால் தாங்க முடியவில்லை. எவ்வளவு கண்ணீர் சிந்தினாலும் இதயத்தின் கனம் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. அப்போது தான் பொறி தட்டியது.  அன்னை சாரதாவிடம் அவள் ஓடிவந்தாள். அம்மா! என் மகன் போய்விட்டான், தங்களை வணங்கும் எனக்கு இந்தக் கதியா? என்று கதறினாள். அவளது கதறலைப் பொறுக்காத அன்னை சாரதா, அந்தப் பெண்ணின் குரலை விட பெருங் குரலெடுத்து அழுதார்.

ஆகா... ஆன்மிகம் அழுகிறதே! இதென்ன புதுமை! வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய ( பழைய உடைகளைக் களைந்து விட்டு, புதிய உடைகளை மனிதன் அணிவது போல, ஆன்மா பழைய உடல்களை விட்டு பிரிந்து புதிய உடல்களை அடைகிறது) என்று கீதோபதேசம் செய்பவர் அழுகிறாரா?  அங்கிருந்தோர் வியப்பில் ஆழ்ந்தனர். அன்னை அழுவதைப் பார்த்து, அந்தப் பெண்ணால் பொறுக்க முடியவில்லை. அம்மா! வாழ்வில் கஷ்டம் வரும் போகும், என் மகன் இறந்த துக்கத்தைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீங்கள் அழுவதை என்னால் பொறுக்க முடியாது, என்றாள். அன்னை அவளுக்கு பிரசாதம் அளித்து, வசதிப்படும் போதெல்லாம் இங்கு வா, என்று அனுப்பி வைத்தார்.  அவரது ஸ்டேஷன் வந்து விட்டது, இறங்கிவிட்டார். எனது ஸ்டேஷன் வந்ததும் நானும் இறங்கியாக வேண்டும், என்று தன் மனைவியை இழந்த சமயத்தில் குறிப்பிட்டார் வாரியார் சுவாமி. நிஜம் தானே


Offline Anu

Re: பக்தி கதைகள்
« Reply #4 on: March 29, 2012, 01:40:03 PM »
ஆசையே துன்பத்துக்குக் காரணம்!
   

மகத நாட்டின் தலைநகரான ராஜக்ருஹத்தின் வெளிப்புற சத்திரத்தில் தங்கியிருந்தார் புத்தர். மக்கள் தினமும் அவருடைய பேச்சைக் கேட்கத் திரளாக வந்தனர். அன்றும் அப்படியே ஜனங்கள் குழுமியிருந்தனர். புத்தர் தன் பரிவாரத்தைச் சேர்ந்த பிட்சு கஸ்யபனையே உறுத்துப் பார்த்தவாறு பேச்சைத் தொடங்கினார். துக்கத்துக்குக் காரணம் ஆசை, அதனால் துக்கத்திலிருந்து மீளும் மார்க்கம் ஒன்றே. ஆசையை விட்டொழிக்க வேண்டும். அவசியமற்ற பொருட்களின்மீது விருப்பம். அவற்றின்மேல் வளர்த்துக் கொள்ளும் பற்று, அவற்றைப் பெறவும் பெற்றதைப் பேணவும் இடையறாத பிரயத்தனம்-இவையே துக்கத்தின் காரணங்கள். சாதனை வழியில் செல்பவர்கள், முக்கியமாகத் துறவிகள் துக்கத்துக்குக் காரணமான கிரியைகளிலிருந்து விலகியே இருக்கவேண்டும் என்றார்.

கஸ்யபனின் முகம் வாடிவிட்டது. அன்று காலை அவன் ராஜக்ருஹத்துக்குப் பிச்சைக்காகப் போயிருந்தான். அங்கு ஒரு திருவிழா நடந்துகொண்டிருந்தது, அவ்விழாவில் ஒரு பந்தயம். ஒரு தங்கப் பேழையில் முத்து, ரத்தினங்களை நிரப்பி உயரத்தில் தொங்க விட்டிருந்தனர் மேலே ஏறாமல், சங்கிலியைத் துண்டிக்காமல் , பேழையையும் விழச் செய்யாமல் யார் அதைக் கீழே இறக்குகிறானோ அவனுக்கே அது சொந்தம் என்பது தான் பந்தயம். பலரும் இது வெறும் பாசாங்கு என்றனர். இன்னும் சிலர், முயன்று தோற்றவர்கள்! இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் கஸ்யபன். அவனுக்கு அபூர்வமான யக்ஷிணி வித்தை தெரிந்திருந்தது. அதன் உதவியால் பேழை தானாகவே கீழிறங்கும்படி செய்து, வெற்றியடைந்தான். தான் வென்ற பேழையை, புத்தருக்கு அர்ப்பணிக்க எண்ணினான். ஒருவேளை அது புத்தருக்குத் தெரிந்து, அவனுக்காகவே இந்த அறிவுரையைச் சொன்னாரா என்று அவன் மனம் பேதலித்தது. பிரவசனம் முடிந்து அனைவரும் போனபின், தான் கொண்டுவந்த பேழையை புத்தரின்முன் வைத்து, தலைவணங்கி நின்றான்.

புத்தர் புன்சிரிப்புடன், கஸ்யபா! உனக்கு இந்தப் பேழை மற்றும் உள்ளே இருக்கும் செல்வத்தின் அவசியம் இருந்ததா? எனக் கேட்டார். இல்லை என்று தலையாட்டினான். அடுத்த கேள்வி வந்தது. பிட்சுக்களும் சாதகர்களும் ஆடம்பரப் பொருட்களை வைத்துக் கொள்ளலாமா? இதற்கும் பதில் இல்லை என்பதாக வந்தது.  புத்தர் மறுபடியும் கேட்டார்: ஏன்?  ஏனெனில் அவை துக்கத்துக்கு மூல காரணங்கள் என்றான் கஸ்யபன்.  புத்தர், இந்த துக்கத்தின் காரணங்களைப் பெறுவதற்காக நீ சிரமப்பட்டு சம்பாதித்த ஸித்திகளைச் செலவழித்துவிட்டாய். அதனால் பேழை உனதாயிற்று. கூடியிருந்த மக்கள் உன் வித்தையைக் கண்டு பிரமித்தனர். அவர்கள் பார்வையில், நீ ஒரு தெய்வீக சக்தியுடைய அற்புத மனிதன். உன்னை அறியாமலேயே உன் மனதில் அகங்காரம் துளிர்த்தது. இதுவும் போதவில்லை உனக்கு! இதை எனக்கு அர்ப்பித்து என்னை மகிழ்விக்க முயற்சித்தாய்! பிட்சு தர்மத்திலிருந்து வழுவினாய். இதற்கு என்ன சொல்கிறார்? என்று கேட்டார். கஸ்யபன் தன் தவற்றை உணர்ந்தான். புத்தர் அருளால், அவனது மன இருள் மாயை அகன்றது


Offline Anu

Re: பக்தி கதைகள்
« Reply #5 on: March 29, 2012, 01:44:33 PM »
கீதை சொல்லும் பாதை!


ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.

இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!


Offline Anu

Re: பக்தி கதைகள்
« Reply #6 on: March 29, 2012, 01:49:56 PM »
கண்ணனின் கதை கேளுங்க!

கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா? என்றார் மந்திரி. அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும்.  பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல...பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.

இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம்,யோவ் பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை... என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார்.  வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள். இவள் என்ன உளறுகிறாள்? என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே! நானிருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.

மறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி,மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்? என்றான் மன்னன் ஆச்சரியமாக. மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர். மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு  பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்? என்ற மன்னனிடம்,நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப்படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா! என்றாள். மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான்.