Author Topic: ராமானுஜன் - சினிமா விமர்சனம்  (Read 3842 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ராமானுஜன் - நாளைய கணிதத்தை நேற்றே கண்ட கணிதத் தீர்க்கதரிசியின் கதை!

சுலபத்தில் கணிக்க முடியாத கணிதச் சூத்திரங்களை, வெகு தீர்க்கமாக அனுமானித்து உலக அரங்கில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர் ராமானுஜன். சிறுவயதில் இருந்தே கணிதத்தின் மீது அபார ஆர்வமும் தீராக்காதலும் கொண்டு வளர்கிற ராமானுஜனால், மற்ற பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனாலேயே தேர்வுகளில் தோல்வி அடைகிறார். கல்வி நிறுவனங்களோ ராமானுஜனின் கணித மேதைமையைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்த, 'எப்படியும் ஒரு டிகிரி முடிச்சிருவான்’ என்ற தந்தையின் ஆசை கானல் நீராகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் குமாஸ்தாவாக வேலை பார்த்துக்கொண்டே, கணித ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறார். இதைக் கண்டுபிடித்துக் கண்டிக்கும் உயர் அதிகாரி, பிறகு ராமானுஜனின் திறமையைப் புரிந்துகொள்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கணித விஞ்ஞானி ஹார்டி, ராமானுஜனை  லண்டனுக்கு வரவழைக்கிறார்.  ராமானுஜனின் சைவ உணவுப்பழக்கம், பிறரை ஆச்சர்யப்படுத்தும் அவரது கடவுள் நம்பிக்கை, ரத்தத்தில் ஊறிப்போன தாழ்வுமனப்பான்மை, மனைவியின் கடிதங்களை மறைக்கும் அம்மாவின் சதி... எனப் பல பிரச்னைகளால் அவரது உடல்நலம் குன்றுகிறது. இறுதியில் அந்த மகா கணிதமேதைக்கு என்ன நிகழ்ந்தது என்பதே படம்.

'பாரதி’, 'பெரியார்’ எனத் தொடர்ச்சியாக தமிழ் வரலாற்றின் தனித்துவமிக்க ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படப்பதிவாக்கும் இயக்குநர் ஞான ராஜசேகரனின் 'அசகாய அரித்மேட்டிக் முயற்சி’க்கு 'சென்டம்’ மரியாதை! படத்தில் வணிக சமரசம் மட்டும் அல்ல, சினிமா மொழியின் சம்பிரதாயச் சமரசங்களைக்கூட கண்டுகொள்ளவில்லை இயக்குநர்.

ராமானுஜனாக... அபிநய். ஒருபுறம் மேதைமை, மறுபுறம் தாழ்வு மனப்பான்மை. மனைவியுடனான காதல் காட்சிகள், வேதிக் மேத்தமேட்டிக்ஸ் குறித்த மாணவர்களுடனான விவாதம், பூக்களோடு பேசித் திரிவது, ஆவேசமாக மருத்துவரிடம் சான்றிதழ் கேட்பது... என ராமானுஜனின் ஆன்மாவைச் சுமந்திருக்கிறார் அபிநய். 

ராமானுஜனின் அம்மாவாக அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார் சுஹாசினி. மகனுக்குச் செல்லம் கொடுப்பதும், மருமகளிடம் கறார் காட்டுவதுமாக அப்போதைய சராசரித் தமிழ்ப் பெண்ணின் மனநிலைக் கண்ணாடி. 'வளர்ந்த சிறுமி’ போன்ற தோற்றத்திலும், 'புருஷனோட ஒரு ராத்திரி குடும்பம் நடத்திட்டா, எந்தப் பெண்ணும் குழந்தை இல்லை’ என்ற துடுக்குப் பேச்சிலும், மாமியாரின் சூழ்ச்சிகளில் சிக்கி வெதும்பும்போதும் அன்றைய 'மாட்டுப்பொண்’ணுக்கு உணர்வும் உருவமும் கொடுத்திருக்கிறார் ராமானுஜனின் மனைவியாக நடித்திருக்கும் பாமா.

'மதிப்பு இல்லாத பூஜ்ஜியம் சேர்ந்த பிறகே, எண்களின் மதிப்பு அதிகரிக்கிறது’ என பூஜ்ஜியத்துக்கு ராமானுஜன் அளிக்கும் விளக்கம் ஆர்வம் கிளப்புகிறது. ஆனால், அதன் பிறகு அப்படியான ராமானுஜனின் கணித ஆராய்ச்சி ஆச்சர்யங்களோ அருமைகளோ பேசப்படவே இல்லையே. 'ஆராய்கிறார்... ஆராய்கிறார்... கண்டுபிடித்துவிட்டார்’ என்று வசனங்களிலேயே கடந்தோடிவிடுகிறது மேதையின் மேன்மைகள்!

ராமானுஜன் வைதீகத்தில் ஊறியவர். பேராசிரியர் ஹார்டியோ, நாத்திகர்; நவீனச் சிந்தனையாளர்; போர் எதிர்ப்பாளர். இத்தகைய முரண்பாடுகள் இருந்தாலும், தான் ஏன் ராமானுஜனை ஆதரிக்கிறேன் என்பதற்கு அவர் மாணவர்களிடம் அளிக்கும் விளக்கம்... அட்டகாசம்!

ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை கதை நிகழும் காலகட்டத்தை அழுத்தமாக மனதில் பதிக்கிறது. ஒளிப்பதிவு, கலை இயக்கம் கூட்டணி அமைத்து முந்தைய நூற்றாண்டைப் பிரதியெடுத்திருக்கிறது.

பிறந்த சாதியின் சனாதனக் கட்டுப்பாடுகள், 'நாமகிரித் தாயார் நாக்கில் ஃபார்முலா எழுதுவார்’ என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கை, ஜோசியத்தை நம்பி மகன்-மருமகளின் உணர்வுகளைச் சிதைக்கும் அம்மா போன்ற சில காரணிகள் ஒரு மேதையின் வாழ்வை எப்படிச் சிதைத்தன என்பதைச் சொன்ன வகையில் 'ராமானுஜன்’ மிக முக்கியமான பாடம். ஆனால், ராமானுஜன் எத்தகைய கணிதமேதை, அவரது கண்டுபிடிப்புகள் இன்றும் நம் அனுதின வாழ்வுக்கு எப்படி உதவுகின்றன என்பதை எல்லாம் இன்னும் துல்லியமாகச் சொல்லியிருந்தால், அது தவறவிடக் கூடாத படம் என்ற அந்தஸ்தை எட்டியிருக்குமே!

'ஏ.டி.எம் பின் நம்பர் செயல்பாட்டுக்கு ராமானுஜனின் கண்டுபிடிப்புகள்தான் ஆதாரம்’ போன்ற ஆச்சர்யத் தகவல்களை, வார்த்தைகள் அல்லாமல் காட்சிகளாகப் பதிவாக்கி இருக்க வேண்டாமா?! 

எண்களை ஆட்சிசெய்த கணித மேதையின் வாழ்க்கை ஆவணத்துக்கு, இரண்டு இலக்க மதிப்பெண்கள் மரியாதை செய்துவிடுமா என்ன? ராமானுஜன் என்ற மேதையின் கண்டுபிடிப்புகளில் இருந்து கணிதத்தையும் வாழ்க்கையில் இருந்து பகுத்தறிவையும் கற்றுக்கொள்வதே ஒவ்வொரு தமிழனின் கடமை!


Offline EmiNeM

miga sirandha vimarsanam...