FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 16, 2023, 11:50:52 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: Forum on December 16, 2023, 11:50:52 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 332

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/332.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: TiNu on December 17, 2023, 12:45:50 PM
மடந்தையே!
தன்னை அழகாக..  சீவி சிங்காரித்து..
தன்.. கள்ளமில்லா வெள்ளை சிரிப்பில்..
தரணியில் அழகாக உலாவரும்.. அகவையில்... 
ஏன்! இந்த இறுகிய முகம் உனக்கு.. 
ஏன்! இந்த வெறித்த பார்வை உனக்கு..
ஏன்! இந்த உயிர் குடிக்கும் வாள் உனக்கு..
ஏன்! இந்த இரும்பு உடை உனக்கு..  மங்கையே..

மடந்தையே! பெதும்பை பருவத்தில்..
உன்னுடன் பழகிய உலகுக்கும்.. இன்று
உனை நெருங்கி வரும் சுற்றத்துக்கும்..
உன் உள்ளுணரவு ஏதேனும் சொல்கிறதோ..?
உன் கைவாளின் கூர்மையை விட  .
உன் விழிகளின் கூரிய பார்வை..
உயிர்களை காவு வாங்கிடுமோ? என (அச்சத்தில்)
உறைய வைக்கிறது.. உன் அசைவுகள்..
 
இரும்பு தேவதையே! ஒரு கணம்..
இவள் உரைப்பதை.. நின்று நிதானமாக கேட்பாயா?
மடந்தையே! இந்த பருவத்தில் இந்த உலகமே..நமக்கு
சற்று புதிதாய்.. அதிசயமாக அச்சமாக தோன்றும்..
அது! மனிதர்களின் பார்வை மாற்றத்தில் அல்ல...
அவை! மனிதர்களில் பருவ மாற்றத்தில் தான்...

கல்விசாலையில் ஆண்டுகள் கடக்க 
பல பல பருவங்கள் மாறுவது போல..
உயிர் தோற்றத்திலும், வருடங்கள் உருண்டோட.
பல பல பருவ மாற்றங்கள் வந்து மறையும்..
அந்த மாற்றங்களை.. உன் மனதில்.. உள்வாங்கி..
மங்கையே!  உன் கூரிய மதி துணை கொண்டு....
தூய நல்வழி வகுத்து.. அதை கடந்து செல்.

பயம், சந்தேகம் அற்று..  அழகு பார்வை வீசு.. 
அழகான உலகம்.. உனக்காக காத்திருக்கிறது...
அவநம்பிக்கை விட்டு.. அழகு நடை போடு..
அன்பான உள்ளங்கள் உனக்காக காத்திருக்கிறது..

மாற்றங்களை ஏற்றுக்கொள்.. மதியோட கடந்து செல்.
என் செல்ல அழகு.. சுந்தர....  இரும்பு தேவதையே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: Mr.BeaN on December 17, 2023, 01:12:40 PM
பொறுமைக்கு  இங்கே உவமையாய்
குலம் காக்கும் பண்பை கடமையாய்
எந்நாளும் ஏற்கும் பதுமையும்
சில நேரம் செய்வாள் புதுமையே

எத்தனை சுமை என்றாலும்
சத்தியம் காத்து உயிர் தாங்கும்
புவி போல நமை தாங்கி
காக்கும் சுமை தாங்கி

பூ உலகில் தோன்றும் பூகம்பம் போல
இடர் என்றால் பொறுமைதனை இழந்து
தீங்கிலைப்போர் தீண்டிட
பிரளமாய் உரு மாறும் மா சக்தி

உயிரை தன்னுள் சுமந்து
உலகை அதற்கும் கொடுத்து
உயிர் காக்க உயிர் வலி தாங்கும்
அன்பின் அடையாளமும் அவள்தான்

கெடுதல் செய்வோர் கண்டால்
விடுதல் இன்றி அவரை
கடிந்தே குற்றம் தடுக்கும்
மங்கை ஒரு சிங்கம்

கைதனில் வாளோடு நின்று
கண்ணிரண்டை கூர் வாளாய் தீட்டி
பார்வையாலே பகைவர் உயிரெடுக்க
பத்தினிதான் இங்கு வந்தாலோ

எண்ணும் எழுத்தும் கண் என சொல்லும்
என் தமிழ் பெண்ணை இப்படி சொல்லும்
பொன்னும் அவளே பொருளும் அவளே
சீண்டி பார்த்தல் சீரும் புயலே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: SweeTie on December 18, 2023, 05:27:03 AM
பெண்மையே  உலகம் உன்னிடம்  மயங்கி நின்று
உன்னை போற்றி துதித்த காலம்   
காலங்கள்  மாறினாலும் காதலியே 
உன்னை மறவேன்   நீயே என் உயிரும் உடலும்
என நப்பாசை  காட்டியது  போதும்
அத்தனையும் மாயை என அறிந்துவிட்டாய்

வாள்போன்ற புருவம்  கொண்டவள்
கையில்  வாளேந்தும்   காலத்தில் வாழ்கிறாள் 
வீணர்கள் மத்தியில்    வீசி எறியும்   எச்சில் இலைகள்போல்
வாழ வரவில்லை  வீரக்குலத்துதித்த  பெண்ணினம் 
வேங்கையென பாய்ந்து வீணர்களை  அழிக்க
வாளேந்தி  நிற்கிறார்   இன்று   

சிவகங்கை சீமையிலே பிறந்து    ஆங்கிலேயரை
வாள்கொண்டு  வீழ்த்திய   வீரமங்கை வேலுநாச்சியார் 
வெள்ளையனின்  மார் துளைக்க  வாளேந்திய ஜான்சிராணி
நாட்டை நயவஞ்சகரிடமிருந்து  காக்க வாளேந்திய ராணி துர்காவதி
இந்திய நாட்டின் வீர மங்கையர்  வழிவந்த    பெண்ணினம்
வாளேந்துவதில் புதுமையே இல்லை   

காலத்தால் அழியாத  வீர பரம்பரை   வழித்தோன்றல்கள்
இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்
முப்படையில்  ஆண்கள் போலவே கோலோச்சுகிறார்கள்
ஆண்களோடு  பெண்களும்  சரிநிகர் சமானமாக
வாழ்வோம் இந்த நாட்டிலே   என்றான்  முண்டாசுக்கவிஞன்
அவன் வாக்கு ஒருநாள்  பலிப்பது  திண்ணம்.

அன்பின் சிகரம்  பெண்மை  என்கிறார்  ... அது உண்மை
சிகரமும்  எரிமலையாய் கொந்தளிக்கும்   என்பதும் உண்மை
வன்மம் தலை தூக்கும்போது   
உணர்வுகள்  அழிக்கப்படும்போது 
பெண்மை  ஏமாற்றப்படும்போது
ஆளுமை கொண்ட அன்பு  ஆத்திரம் கொள்கிறது

சித்திர பதுமைகளாய்  சித்தரிக்கிறது
ஆணாதிக்கத்தில்  ஊறிய  ஆணினம்
பத்தாம் பசலியாய்  பாதி வாழ்க்கையை 
வாழ்ந்தோம்  கழித்தோம்   என்றிராமல் 
வாளேந்தி   வலம்வரும்   புதுமைப்பெண்களே
என்றும் நீங்கள் நாட்டின் ராணிகளே  !

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: Vethanisha on December 18, 2023, 12:28:25 PM
மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்
என்றார் கவிமணி
பெண்க ளறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்
 என்றார் மகாகவி
நன்றிகள் பல

அன்று
பெண்களின் பெருமையை எடுத்துரைக்ககூட
தேவைப்பட்டது ஆண்களின் துணை எமக்கு 

இன்று

கேட்கட்டும் எமது உரிமை கூறல்
புவியெங்கும்  எமக்காய் 

இன்றும் உண்டு

பதவியில் பாகுபாடு
படிப்பில் பாகுபாடு
உரிமையில்  பாகுபாடு
உணர்விலும்  பாகுபாடு

தேவை அல்ல இந்த 'பெண்தானே'
என்ற வேறுபாடு
வேண்டும் எமக்கு ஆண்பெண் சமம் என்ற
மனிதத்துவ பண்பாடு

விருப்பம் அல்ல 'மகளிர் நாள்' என்ற
ஒரு நாள் ஆராதிப்பு அலங்காரம்
வேண்டும் எமக்கு வாழ்நாள் முழுப்
பாதுகாப்பு அங்கீகாரம்
 

இதோ

தீட்டி வைத்தேன்யெம் பார்வையை
கையில் ஏந்தினேன் கூறிய வாளை
உடலில் ஏந்தினேன் இரும்பு திரையை

ஏன்

மதிகெட்டு கிடைக்கும் சமுதாயத்திடம் இருந்து - இனி 
எம்மை யாமே பாதுகாக்க

மாதர் அறிவை கெடுக்கும்  மூடரை  யாமே
பதம் பாப்போம் என்று - என் 
பாரதியிடம் பறைசாற்ற

எம் கற்பு உடையில் அல்ல
எம் கருணை  நகையாட அல்ல
எம் கண்ணீர் பலவீனத்தின் அடையாளம் அல்ல
எம் குலம் யாருக்கும் அடிமையும் அல்ல
என்று உலகுக்குக் உரக்கக்  கூற

உலகமே நினைவு கொள்

அன்பென்றால் அதன் உச்சமும் யாம் தான்
அழிவென்றால் அதன் முற்றமும் யாம் தான்



VethaNisha.M


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: Vijis on December 18, 2023, 05:13:17 PM
என் அன்பு தோழியே

 இவள் மிகவும் அழகானவள் அனைவரிடமும் அன்பாய் பழகுபவள்

 எப்போதும் புன் சிரிப்புடன் இருப்பவள் அன்பு என்ற வார்த்தை கற்று கொண்டது இவளிடமே

   எதிரிகளை நட்பாய் பழக வேண்டும் என்று கற்று கொடுத்தவள்

 எல்லா துன்பங்களிலும் புன்னகை செய்ய வேண்டும் என்றாள் இவள் அன்பால் எல்லாருரையும் தோற்கடித்துவிடுவாள்

 இவள் எப்போதுமே அழகான ஆடை அணிந்து நெற்றில் திலகம் இட்டு கூந்தலில் மலர் சூடி அழகான தோற்றத்துடன் இருப்பாள்

 இவளின் இந்த கம்பிரமான தோற்றமும் திமிரான கோபத்துடன் கையில் எடுத்தால் வாளை ஏன் என்று புரியவில்லை

ஆனால் இன்று இந்த தோற்றம் வியப்பாக உள்ளது எதுவாயினும் உண்மையில் உறைவிடம் ஆயிற்றே

இவள் அன்பில் மட்டும் சிறந்தவள் அல்ல வீரத்திலும் சிறந்தவள் என்று எனக்கு தெரியும்

 இவள் வாள் வீசும் அழகை பார்க்க கோடி கண்கள் போதாது

மின்னலை போல் கண் கொண்ட இவளுக்கு மின்னும் வாள் எதுக்கு என்று ஐயம் கொண்டேன் நான்

ஆனால் இவள் என் தோழியாயிற்றே

 அவள் நாட்டின் களையை அகற்றவே இவ்வேடம் இட்டுஇருப்பாளோ இல்லை

நாம் இந்த வீர உடையில் இருந்தால் எப்படி அழகாக இருப்போம் என்று அணிந்திருப்போலோ

 எதுவாயினும் உண்மைக்கு உறைவிடம் ஆனவள் ஒரே கருவறையில் பிறவா ஒரே ரத்தத்திலும் பிறவா என் உயிர் தோழியே

 பெண்ணாய் பிறப்பது ஒரு வரமே நானும் ஓர் பெண் என்று மகிழ்தேன் நன்றி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: VenMaThI on December 21, 2023, 10:31:20 PM


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்க்கு
ஆணுக்கு பெண் அடிமை என்றெல்லாம்
அடுகடுக்காய் வசனம் பேசி.. பெண்ணை
அடக்கியாளும் கூட்டமும் உண்டு...

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகியாய் இருந்தாலும்...
அழகை ஆராதிக்கும் பாங்கறியாமல்.. தன்
இச்சைக்காய் இம்சைப்படுத்தும் ஈனர்களும் சிலருண்டு....

கருவிலே வளரும் பிள்ளை தனை
பத்திய சோறு தான் உண்டு
பாத்துகாப்பாகவும் தான் நடந்து
பக்குவமாய் பெற்றெடுக்கும் பலசாலி தான் பெண்....

பாராளும் பதவியில் அமர்ந்தாலும்
நாடாளும் நங்கையாய் இருந்தாலும்
கற்பென்ற ஒற்றை சொல் கொண்டு
கசக்கி போட நினைப்பவர் மத்தியில்...

கருணை மழை பொழியும் கண்களால்
கடும்பார்வை கொண்டு கண்டிக்கவும் தெரியும்...
பாலூட்டி வளர்த்த கரங்களால்
வாள் கொண்டு வீழ்த்தவும் தெரியும் ....

அன்பால் அரவணைக்கும் அன்னைக்கு
அநீதியை எதிர்க்கவும் தெரியும்...
வாழ்க்கை நெறி அறிந்த பெண்மைக்கு
அதர்மத்தை வீழ்த்தவும் தெரியும்..

அன்பே வடிவான பெண்ணை
அடக்கி ஆள நினைக்காதே...
பெண் தானே என எண்ணாமல்
"பெண்ணே" என போற்றிடு .....

❤️❤️❤️

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: Sun FloweR on December 21, 2023, 11:05:25 PM
நான் ராஜ வம்சத்தில் பிறந்தவள் ..
நான் ராணி அம்சத்தில்
வளர்ந்தவள் ..

காதலைக் கசியும் கண்களில் கனலைக் கக்குபவள்..
மலர்களைப் பறிக்கும் கைகளால் போர் வாள் சுமப்பவள் ..

எதிர்த்து நிற்கும் எதிரிகளை எகிறி ஓடச் செய்பவள்..
படைகள் சூழ்ந்து நின்றாலும் பகைவர்களை பதறி ஓடச் செய்பவள்...

புயலாகிப் போன பூவையும்
நானே..
வதம் செய்யும் காளி ஆனவளும் நானே..

உடையில் மட்டுமல்ல மனதிலும் இரும்பு பூண்ட இரும்புத் தாரகையும் நானே..
ஒப்பனை இல்லாமல் வாழ்க்கை வாழ உறுதி பூண்ட பருவக் கன்னிகையும் நானே..

எதிரிகளை துவசம் செய்வது எளிது..
துரோகிகளை இனங்காண்பது
கடிது..
நான் கொண்ட மன உறுதியும்
கையில் ஏந்திய வாளும்
என்னை மட்டுமல்ல என் இனத்தையே காக்கும்..

பெண்மை எப்போதும் மென்மையாய் மட்டும் இல்லாமல் திண்மையாய் வாழப் பழகுங்கள்...
உறுதியாய் தன் நிலையில் நிற்கப் பழகுங்கள்...

பெண்மையுள் இருக்கும் வலிமையை சற்றே தூண்டி விடுங்கள்..
உலகையே தன் பாதுகையின் கீழ் கொண்டு வாருங்கள்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332
Post by: MoGiNi on December 22, 2023, 02:18:38 AM
நினைவாற்றல் கடந்து
நிதானித்து நிலைக்கிறாள்
வாழ்கின்ற
இல்லையில்லை
வாழ்ந்து முடிந்த
ஒரு ஜென்மத்தின்
மீழ்பிறப்பினை ஒத்தது
இந்நிலை...

தூரமாய் நில்லுங்கள்
உங்கள் விருப்பங்களுக்கு
இவள் ஏற்றவள் அல்ல
உலர்ந்து கரக்கும்
உங்கள் நாசிகளில்
இவளால் குருதிகளையே
நிரப்ப முடியும்...

ஒர் வாழ்முனையின்
வளவளப்பை மிஞ்சியது
இவள் அழகு..
அதன் கூர் முனைகளை
ஒத்தது இவள் உறவு..
காற்றிலே கலைந்து
பறக்கின்ற நினைவுகளை
கவசமிட்டு கனக்கின்றாள்..
யாராவது
மெல்லத்தான் தீண்டுங்களேன்
யார் கண்டது
அவள் மேன்மைகள்
தெரியலாம்...