FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 20, 2018, 10:12:52 AM

Title: மரமும் மனிதனும்
Post by: thamilan on January 20, 2018, 10:12:52 AM
மரம் மனிதனை புத்தனாக்கியது
மனிதனோ மரத்தை ரத்தமாக்கினான்

சிலுவையான பின்பும் மரம்
ஏசுவை தாங்கியது
மனிதனோ வீழும் மரத்தின் சோகத்தை
நினைத்தும் பார்ப்பதில்லை

ஒரு மரம் வெட்டப்படும் போது
அதன் வீறிட்ட அழுகைகக்குரல்
வானத்தில் பதிகிறது
மேகங்கள் காணாமல் போகின்றன

ஒரு மரத்தின் நிழலில்
பலபேர் ஒதுக்குவார்கள்
மனிதனின் நிழலிலோ
அவனால் கூட ஒதுங்க முடியாது

மரங்கள் உனக்காக வீடுகளை தந்தது
மரங்களுக்காக மனிதன்
காடுகளைக் கூட விட்டுவைக்கவில்லை

மிருகங்கள் வீட்டில் மரங்கள்
பயப்படுவதில்லை
மனிதர்கள் காட்டில் தான் மரங்கள்
பயந்து பயந்து வாழ்கின்றன

மனிதனே எப்போதாவது நீ
உணர்ந்திருக்கிறாயா
கிளைக்கரம் நீட்டி மரம்
உன்னை அன்போடு அழைக்கும் போது 
உன்  அம்மாவை........
ஈரக்காற்று கொண்டு மரம்
உன்னை சில்லென்று தழுவும் போது
உன் மனைவியை .......
பூக்களைச் சிந்தி  மரம்
உன்னை குதூகலப்படுத்தும் போது
உன் குழந்தையை.......
எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா

இப்போது சொல்
உன் தாயை
உன் மனைவியை
உன் குழந்தையை
ஒரே நேரத்தில் கொல்ல
உன்னால் முடியுமா