FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on September 12, 2011, 08:58:12 PM

Title: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 08:58:12 PM
                               பதினெண் கீழ்க்கணக்கு


                                   பூதஞ் சேந்தனார் இயற்றிய

                                        இனியவை நாற்பது  


முகவுரை  
 
இனியவை நாற்பது இன்னா நாற்பதோடு பெயர் ஒற்றுமை உடையது. இந் நூலாசிரியரும் கடவுள் வாழ்த்தில் கபில தேவரைப் போன்றே சிவபெருமானை முற்படக் குறிக்கின்றார். கபில தேவர் இன்னா என்று சுட்டியதை ஒப்ப, இவரும் தாம்கூறும் அறங்களை இனிது என்னும் சொல்லால் குறிக்கின்றார். இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்துக் கூறியுள்ளமையால் இவரது நூல் 'இனியவை நாற்பது' எனவழங்கப் பெறுவதாயிற்று.

எனினும், இன்னா நாற்பது போன்ற கட்டுக்கோப்பு இந் நூலகத்து இல்லை. இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்குதான் உள்ளன(1,3,4,5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன ; இவற்றில்
எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின்இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனத்திற்கு உரியது.

மூன்று இனிய பொருள்களை மிகுதியும் எடுத்துக்கூறும் இந் நூல் திரிகடுகத்தோடு ஒத்த பண்புஉடையது என்று கொள்ளலாம். அன்றியும் திரிகடுகத்தில் எடுத்தாளப் பெறும் சொற்பொருளமைதிகளை இனியவை நாற்பதுபெரிதும் அடியொற்றிச் செல்லுகிறது. இவற்றை நோக்கினால், பொருளமைப்பில் திரிகடுகத்தையும், நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் இந்த ஆசிரியர் மேற்கொண்டனராதல் வேண்டும். திரிகடுகத்தை இளம்பூரணர் முதலிய பழைய உரைகாரர்கள் எடுத்தாளுதலினாலும், இந் நூலை எவரும் எடுத்தாளாமையினாலும், இந்நூல் திரிகடுகத்திற்குப் பிற்பட்டது என்று கருத இடமுண்டு.

இந் நூலின் பெயரை 'இனியது நாற்பது'என்றும், 'இனியவை நாற்பது' என்றும், 'இனிது நாற்பது'என்றும், 'இனிய நாற்பது' என்றும், பதிப்பாரிசியர்கள் முதலியோர் குறித்துள்ளனர். 'இன்னா நாற்பது' என்பதைப் போல 'இனியவை நாற்பது' எனஇந் நூற் பெயரைக் கொள்ளுதல் நலம்.

இந் நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார். இப் பெயரில் சேந்தனார் என்பது இயற் பெயர். பூதன் என்பது இவர் தந்தையார்பெயர். இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராய்ச் சிறந்து விளங்கியமை குறித்து, மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றார். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பதினோராந் திருமுறையில் திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் என்பதும், திவாகரம் செய்வித்தவன் சேந்தன் என்னும் பெயர்பெற்றிருத்தலும் ஈண்டுச் சிந்தித்தற்குரியன.

பூதஞ் சேந்தனார் சிவனை முதலிலும், அடுத்துத் திருமாலையும், பின்னர்ப் பிரமதேவனையும் தமது கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகின்றார்.

பிரமதேவன் வணக்கம் பின் சளுக்கியர் காலத்திலேதான் பிரபலமாகக் காணப்படுகிறது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இவ் வணக்கம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். 'பொலிசை' என இவர் ஆளும் சொல் (39) இலக்கிய வழக்கிலோ சாசன வழக்கிலோ, இக் காலத்திற்கு முன்னர்க் காணப்பெறவில்லை. சீவக சிந்தாமணியிலேதான் (2546) இச் சொல் வழக்கு உள்ளது. எனவே, சீவக சிந்தாமணி தோன்றிய காலப் பகுதியில் இனியவைநாற்பதும் தோன்றியிருக்கலாம்.

கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்றுமே (8 ) பஃறொடை வெண்பா. ஏனைய எல்லாம் நாலடி கொண்ட அளவியல் வெண்பாக்கள். இந் நூல் முழுமைக்கும் செம்மையாய் அமைந்த பழைய உரை உள்ளது.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:09:13 PM
1  

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
 



(ப-ரை)பிச்சை புக்கு ஆயினும் - பிச்சை யெடுத்துண்டாயினும் ; கற்றல் - (கற்பனவற்றைக் கசடறக்) கற்றல் ; மிக இனிது ; நல் சவையில் - (அங்ஙனங் கற்ற கல்விகள்) நல்ல சபையின் கண் கைக்கொடுத்தல் - (தமக்கு) வந்துதவுதல், சாலவும் - மிகவும், முன் இனிது - முற்பட வினிது ; முத்து ஏர் முறுவலார் - முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது, சொல் - வாய்ச்சொல், இனிது -; ஆங்கு - அது போல, மேலாயார்ச் சேர்வு - பெரியாரைத் துணைக் கொள்ளுதல், தெற்றவும் இனிது - தெளியவுமினிது.ஆயினும் என்புழி உம்மை இழிவு சிறப்பு.

" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே "

என்றார் பின்னோரும். சவை - ‘சபா' என்னும் வடசொல் ‘ஆ' ஈறு ‘ஐ' ஆதல் முறைபற்றிச் ‘சபை' என்றாகி, சகர வகர வொற்றுமை பற்றிச் ‘சவை' என்றாயது.

நற்சவை - சபைக்கு நன்மையாவது நல்லோர் கூடியிருத்தல். அதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

(புறம்: 177)

என்பதனா னறிக. கைக்கொடுத்தலாவது கற்றன வெல்லாம் வேண்டுமுன் நினைவிற்கு வந்து நிற்றல்.

"நெடும்பகற் கற்ற அவையத் துதவாது
உடைந்துளார் உட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால்"

என்னும் நீதிநெறிவிளக்கச் செய்யுள் ஈண்டறியத்தக்கது. ஏர் : உவமவுருபு ; ‘தணிகை வெற்பேரும்' என்றார் பெரியாரும். ‘ஏர்' என்பதற்கு ‘அழகு' எனப்பொருள் கோடலுமொன்று. மகளிர் சொல் இனிதாதலைத் ‘தேன் மொழியார்' என்னும் பெயரானு மறிக. சிலப்பதிகார முடையார்,

"பாகுபொதி பவளந் திறந்து நிலா உதவிய
நாகிள முத்தி னகைநலங் காட்டி"

என்றமையும் அப் பொருளை வற்புறுத்து மென்க. தெற்ற இனிதாதலாவது, மிக வினிதாதல்

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:13:07 PM
2

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நான்கு.
 


(ப-ரை.) உடையான் - பொருளுடையானது, வழக்கு - ஈகை, இனிது -; ஒப்ப முடிந்தால் - மனைவி யுள்ளமுங் கணவனுள்ளமும் (மாறுபாடின்றி) ஒன்றுபடக் கூடுமாயின். மனை வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, முன் இனிது - முற்பட வினிது ; மாணாதாம் ஆயின் - (அங்ஙனம்) மாட்சிமைப்படா தெனின், நிலையாமை நோக்கி - (யாக்கை முதலியன) நில்லாமையை ஆராய்ந்து, நெடியார் - தாமதியாதவராய், துறத்தல் - (அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும்) விடுதல், தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக வினிது.

ஒப்பமுடிதலின அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால்' என்றார்.

"காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்"

என நன்னெறியும்,

"மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ்
செல்லாது தெற்றிற்று நின்று "

என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க.

மனைவாழ்க்கை ஏனைய துறவற வாழ்க்கையைக் காட்டிலும் இனிதாதலை,

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

(குறள்- 46)

எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறினார். துறத்தல் (புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய உடம்பின்கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி) விடுதல் நெடியார் - (செல்லற்குக் காலம்) நீட்டியாதவராய் ; இது முற்றெச்சம் இஃது இப்பொருட்டாதலை,

"இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றஞ்
செல்வம் வலியென்று இவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாமுய்யக் கொண்டு "

என்னும் நாலடிச் செய்யுள் வலியுறுத்தும்.

‘தலையாகத் துறத்தல் ' என முடித்து, ‘தலைப்பட்டார் தீரத்துறந்தார் என்பதற் கொப்பத் ‘(தாம்) தலைப்படுமாறு துறத்தல் ' எனப் பொருளுரைப்பாரு முளர்.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:15:56 PM
3  

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
 



(ப-ரை.) ஏவது மாறா - ஏவலை மறாது செய்யும், இளங்கிளைமை - மக்களுடைமை, முன்இனிது - முற்பட வினிது ; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய், நாளும் கற்றல் - நாடோறுங் கற்றல், மிக இனிது -; ஏர் உடையான் - (தனதென) உழுமாடுகளையுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது -; ஆங்கு - அதுபோல , தேரின் - ஆராயின், திசைக்கு - (தான் செல்லுந் திசையில், கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல், இனிது -;

ஏவது ‘ஏவு' முதனிலைத் தொழிற்பெயரும், ‘உணர்வதுடையார் ' (நாலடி) என்புழிப்போல ‘அது' பகுதிப் பொருள் விகுதியுமாம். அன்றி, ‘மேவா ரிலாஅக் கடை' (திருக்குறள்) என்புழிப்போல, ‘ஏவுவது' என்பது விகாரமாயிற் றென்பது மொன்று. இனி ‘ஏவியது' என்னும் வினையாலணைந்த பெயர் ‘ஏவது எனக் குறைந்த தென்பாருமுளர். இளங்கிளையாவார் மிக்க ளென்க ; ‘ கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி ' என்னும் நாலடிச் செய்யுள் காண்க. ஏர் - எருது ; ‘ஏரழ குழுபெற்றப்பேர் ' என்னும் 11 ஆவது நிகண்டு. நாளுங்கற்றல் - நாண்முழுதுங் கற்றலுமாம். வேற்றூராகலின் நட்புக் கோடல் நன்றென்பார், ‘கோணட்புத் திசைக்கு ' என்றார். திசைக்கு : வேற்றுமை மயக்கம் . ‘ தான் செல்லுந், திசைக்குப் பாழ் நட்டாரையின்மை என்னும் நான்மணிக்கடிகையும் ஈண்டுக் கருதத்தக்கது.  

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:24:33 PM
4  

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே1
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.
 


(ப-ரை.) யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை, காண்டல் - (அரசன்) செய்து கொள்ளுதல் முன் இனிது - முற்பட வினிது ஊனை தின்று - (பிறிதோ ருயிரின்) தசையைத் தின்று ; ஊனைப்பெருக்காமை - (தன்) உடம்பை வளர்க்காமை, முன் இனிது -; கான்யாற்று அடை கரை ஊர்-முல்லை நிலத்து யாற்றினது நீரடை கரைக்கண் உள்ள ஊர், இனிது - வாழ்தற் கினிது ; ஆங்கு - அவைபோல, மானம் உடையார் - மானமுடையவரது, மதிப்பு கொள்கை , இனிது -;


"கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென
வுடல்சின வுருமென"
 


(குணமாலையார் - 123)

எனவும்,

"காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றென "

(கனக மாலையார் - 281)

எனவும் சிந்தாமணி யுடையார் கூறியபடி, விசையாற் காற்றும், ஒலியாற் கடலும், வடிவால் வரையும், அச்சத்தா லுருமும், கொலையாற் கூற்று மெனத்தக்க யானைகளைப் பெறுதலின் அருமையும், பெற்ற வழி யுளதாம் பயனுந் தோன்ற ‘யானையுடைய படைகாண்டன் முன்னினிதே ' எனவும்.

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙன மாளு மருள் "

(குறள் - 251)

என்றபடி, தன்னூன் வளர்த்தல் கருதிப் பிறிதோருயிரின் தசையைத் தின்பவன் அருளிலனாய் அவ்வுலகத்தை இழத்தலின், ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே' எனவும்,

"மானயா நோக்கியர் மருங்கல் போல்வதோர்
கானயாற் றடைகரைத் கதிர்கண் போழ்கலாத்
தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணல் "

(கனகமாலையார் - 266)

எனச் சிந்தாமணியுடையார் உரைத்தவாறு, நுடக்கமும் அழகுமுடைய கான்யாற்று நீரடைகரை பொழில் செறிந்து வெண்மணல் பரந்திருத்தலின் வாழ்தற்கு வசதியுண்மை தோன்றக் ‘கான்யாற்றடை கரை யூரினிது' எனவும், தம் நிலையிற் றாழாமையுந் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாகிய மானமுடையார் கொள்கை,

"இம்மையு நன்றா மியனெறியுங் கைவிடா
தும்மையு நல்ல பயத்தலாற் - செம்மையி
னானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண்
மான முடையார் மதிப்பு "

என்று நாலடியாரிற் கூறிவண்ணம் இருமையும் பயத்தலின் ‘ மானமுடையார் மதிப்பு இனிதே' எனவுங் கூறினா ரென்க.

காண்டல் - செய்தல் ; ‘நகரங் கண்டான் ' என்னும் வழக்குண்மை தெரிக. இனி , ‘காண்டல்'‘பார்த்தல் ' என்பாருமுளர்.

பின்னர் நிற்கும் ‘ஊன்' கருவியாகுபெய ரென்க.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:27:55 PM
5  
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.
 


(ப-ரை.) கொல்லாமை - (ஓருயிரைக்) கொல்லாமை, முன் இனிது - மிக வினிது ; கோல் கோடி - (அரசன்) நடுவு நிலைமை தவறி, மாராயம் செய்யாமை (தன்கண் வினை செய்வார்க்குச்) சிறப்புச் செய்யாமை முன் இனிது - மிக வினிது, செங்கோலன் ஆகுதல் (அவன்) முறை செலுத்துவோனாதல், (முன்னினிது) மிகவினிது ; யார் மாட்டும் - யாவரிடத்தும், எய்தும் திறத்தால் கூடியமட்டில், பொல்லாங்கு உரையாமை - (பிறர்மீது) குற்றங்கூறாமை, நன்குஇனிது - மிக வினிது, என்ப - என்பர் (மேலோர்)

கொலை பஞ்சமா பாதகங்களி லொன்றாகலின் ‘கொல்லாமை முன்னினிது ' என்றார். ‘கோல் கோடி மாராயன் செய்யாமை ' என்பது பாடமென்ப. ‘ராயன்' என்னும் வடசொற்றிரிபு அக்காலத்து வழங்கக் காணாமையானும், ‘கோடி செய்யாமை ' என்னும் முடிபு நேரிதன்மை யானும், கோல் கோடிச் செய்யாமையே செங்கோல் னாகுதலாகலிற், கூறியது கூறல் என்னுங் குற்றம் நேர்தலானும் அது பாடமாகாதென்க. ‘மாராயம் -அரசனாற் செய்யுஞ் சிறப்பு ' என்பர் நச்சினார்க்கினியர், (பொருளதிகாரம், புறத் - 69). அரசன் தக்க காரணமின்றி விளையாட்டாக வேட்டமாடி உயிர்களைக் கொல்லுதலும், தன்கண் வினை செய்வார் பலருள்ளும் ஒருவன்மாட்டு விருப்புற்று நடுவு நிலைமை தவறி அவற்குரித்தாகாத சிறப்புகளைச் செய்தலும், மற்றொருவன் மாட்டு வெறுப்புற்று அவன்மீது குற்றஞ் சாற்றலும் கூடாவாம்; இவையின்றி நீதி செலுத்தல் இனிதென்பது கருத்தென்க. பொல்லாங்குரையாமையைச் சோர்வற மேற்கொள்ளுத லரிதென்பார், ‘எய்துந்திறத்தால்' என்றார். ‘கோல் கோடி' என்புழிக் கோலென்றது தராசுக்கோலை என்றுணர்க. செவ்விய கோலொத்தலின் ‘செங்கோல்' ஆயிற்றென்ப.
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:30:35 PM
6  

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.
 


(ப-ரை.) ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும், அறஞ்செய்கை - தருமஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது ; பால்பட்டார் நன்னெறிப் பட்டார் , கூறும் - சொல்லும், பயம் மொழி - பயனுடைய சொல்லின், மாண்பு - மாட்சிமை, இனிது-; வாய்ப்பு உடையர் ஆகி (கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய நலம் யாவும்) பொருந்துதலுடையவராய், வலவைகள் அல்லாரை நாணிலிகளல் லாதவரை, காப்பு அடைய கோடல் - காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல், இனிது-.

அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும், நல்லன செய்தலுமாம். ஆற்றுந்துணையாவது பொருளளவிற்கேற்பச் செய்தல்.

"ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்"

(குறள் - 33)

என்றார் பொய்யில் புலவரும். தமது தன்மையை விடாதார் பகைவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பயனுடை மொழிகளையே பகர்தலின் ‘பாற்பட்டார் கூறும் பயமொழி ' என்றார். கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய எல்லா மிருந்தும் ஒருவன் கண் நாணொன் றில்லையாயின அவன், தன்னை யடைந்தாரைக் கைவிடுவ னென்பது, ‘வாய்ப்புடையராகி வலகைளல்லாரைக், காப்படையக் கோட லினிது' என்பதன் கருத்தென்க.

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:32:25 PM
7  


அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது
.


(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ; தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று) அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங் கருத்தாற் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"

(குறள் - 506)

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"

(குறள் - 834)

என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:34:25 PM
8
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.
 



(ப-ரை.) ஊரும் கலிமா - (தான் ஏறிச்) செலுத்துகின்ற போருக்கு உரிய குதிரை, உரனுடைமை - வலிமையுடையதாயிருத்தல், முன் இனிது - மிக வினிது ; தார்புனை மன்னர் தமக்கு - மாலையணிந்த அரசர்களுக்கு உற்ற வெஞ்சமத்து - போர் வாய்த்த களத்தில் , கார் வரை யானை - கரிய மலை போன்ற யானைகளின், கதம் - வெகுண்டு செய்யும் போரை, காண்டல் - காணுதல், முன் இனிது -; ஆற்றவும் ஆர்வம் உடையவர் - மிகவும் அன்புடையார், நல்லவை - நல்ல கேள்விகளை , பேது உறார் - மயக்கமடையாதவர்களாய், கேட்டல் - கேட்பது ; இனிது-.

அரசன் ஏறிச் செல்லுங் குதிரைக்குப் பசி தாகம் பொறுத்தற்கும் வேண்டியபோது விரைந்தோடுதற்கும் நெடிது நேரஞ்சாரி செல்வதற்கும் வலிமை வேண்டுதலின், ‘ஊருங் கலிமா வுரனுடைமை முன்னினிதே' என்றார். தார் அடையாள மாலை; ‘கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே' என்னுந் தொல்காப்பயிச்சூத்திர வுரை காண்க.

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்பவான் வினை "

(குறள் - 758)

என்றவாறு யானைப்போர் காண்டற்குத் தக்க காட்சியாதலுணர்க. ‘ஆற்றவும் ஆர்வமுடையார் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது' என்றார்; பேரார்வமுடையார்க்கன்றிக் கேட்ட நற்பொருள்களை உட்கொள்ளுதலும், உள்ளத்தமைத்தலும், பின் சிந்தித்துத் தெளிதலும், தெளிந்தவழி நிற்றலுங் கூடாமையினென்க.

‘ஆற்றவும் நல்லவை' என முடிப்பாரு முளர். பேதுறார் : ஒரு சொல் லெனினுமாம்.

இது பஃறொடை வெண்பா.

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:36:30 PM
9  
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.
 

(ப-ரை.) தங்கண் - தங்குமிடத்தே, அமர்பு உடையார் நட்புடையார், வாழ்தல் - (செல்வமுடையராய்) வாழ்தல், முன் இனிது - மிக வினிது ; அம் கண் விசும்பின் - அழகிய இடமகன்ற வானத்தில் அகல் நிலா - விரிந்த நிலாவை, காண்பு - காணுதல், இனிது -; பங்கம் இல் செய்கையர் ஆகி - குற்றமில்லாத நடையுடையவராய், யார்க்கும் பரிந்து - யாவர்க்கும் இரங்கி, அன்புடையர் ஆதல் - அன்புடைய ராயிருத்தல், இனிது-.


தம்மை யடுத்து ஒட்டி வாழ்பவர் நன்மைகளைப் பெற்று வாழ்தல், தம் பெருமிதத்திற்கு கேதுவாகலின், ‘தங்க ணமர் புடையார் தாம் வாழ்தல் முன்னினிதே 'எனவும் , அழகுந் தன்மையுமுடைத்தாய் விழிக்கு விருந்து செய்தலின், ‘அகனிலாக் காண்பினிதே 'எனவும்.

‘என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்'

(குறள் - 77)

என்றிருத்தலின், ‘யார்க்கு மன்புடைய ராத லினிது' எனவுங் கூறினாரென்க.

தாம் : அசை.
 
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 09:38:25 PM
10  
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.
 

(ப-ரை.) கடம் உண்டு - கடன் கொண்டு உண்டு, வாழாமை காண்டல் - வாழாதிருத்தல், இனிது-; நிறை மாண்பு இல் - கற்பு மாட்சிமையில்லாத, பெண்டிரை - மனைவியரை, நீக்கல் - விலக்கி விடுதல், இனிது-; மனம் மாண்பு இலாதவரை - மனத்தின்கண் மாட்சிமை யில்லாதவரை, அஞ்சி அகறல் - அஞ்சி நீங்குதல், எனை மாண்பும் - எல்லா மாட்சியினும், நன்கு இனிது - மிக வினிது.

"உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
பண்டுமிவ் வுலகத் தியற்கைஃ தின்றும்
புதுவ தன்றே புலனுடைய மாந்திர்"

(கலி - 22)

எனவும்,

"விடன்கொண்ட மீனைப் போலும்
வெந்தழன் மெழுகைப் போலும்
படன்கொண்ட பாந்தள் வாயிற்
பற்றிய தேரை போலுந்
திடன்கொண்ட ராம பாணஞ்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலுங்
கலங்கின னிலங்கை வேந்தன் "

எனவும் இருத்தலின், ‘கடமுண்டு வாழாமை காண்ட லினிதே' என்றார். ‘நிறை மாண்பில் பெண்டிரை நீக்க லினிதே ' என்றது. கற்பழிந்த மனைவியொடு கலந்து வாழ்தல் இம்மையிற் றலையிறக்கத்தையும் பெருந்துன்பத்தையும் தருதலே யன்றி, மறுமையினும் நரகத்தைத் தருதல் பற்றி யென்க. அது கூடாதென்பதனை,

"வினையிலென் மகன்றனுடல் வேறுசெய்வித் தோனைக்
குனிசிலையி னாளையுயிர் கோறல்புரி யேனேல்
மனைவியய லான்மருவல் கண்டுமவள் கையாற்
றினையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன் "

(பாரதம்)

"கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனு மற்றோர்
பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானுஞ்
சொற்பொரு ளுணர்த்தி னானைத் தொழவுள நாணு வானும்
விற்பன வலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும் "

‘ஆவனா னுண்மை ........(பிரபுலிங்கலீலை) என்றிருத்தலிற்றெளிக.

மன மாண்பிலாதவார் - கெட்ட எண்ணமுடையார்; துட்டர்கள். ‘துட்டரைக் கண்டாற் றூரநில்' என்னும் பழமொழி காண்க. ‘எனை, மாண்பு' என்புழி இன்னும் உம்மையும் செய்யுள் விகாரத்தாற்றொக்கன.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:02:04 PM
11  
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.
 



(ப-ரை.) அதர் சென்று - வழிபோய், வாழாமை - வாழாதிருத்தல், ஆற்ற இனிது - மிகவினிது; குதர் சென்று - தப்பு வழியிற் சென்று, கொள்ளாத (நூற்குப் பொருள்) கொள்ளாத கூர்மை - மதிநுட்பம் , இனிது-; உயிர் சென்று படினும் - (பசியான்) உயிர் இறந்துபடினும், உண்ணாதார் கைத்து - உண்ணத்தகாதார் கையிலுணவை, உண்ணா - உண்ணாத, பெருமைபோல் - பெருமைபோல ‘பீடு உடையது இல் - பெருமையுடையது (பிறிதொன்று) இல்லை.

அதர் செல்லலாவது,

"பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்"

(தேவாரம்)

என்றபடி ஊரூராய்ச் சென்றிரத்தல். அன்றி , நாடோடியாத லெனினும் வழிபறித்த லெனினுமாம். இவற்றுள் வழிபறித்தல் வேடர்க்குக் குலத்தொழிலாகலின் ஏனையோருள் அத் தொழிலின் முயல்வார் சிற்சிலரையே நோக்கிக் கூறியதாமாகலின், அப் பொருள் சிறவாதென்க. நூற்பொருளை நுனித்தறியாது வலிந்தும் நலிந்துந் தங்கருத்திற் கியைந்தவாறு கொள்பவார் பலராகலின், ‘குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே ' என்றார். உண்ணாரெனப்படுவார் தாழ்ந்த வருணத்தோர்.

"தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க"

என்னும் நாலடியினை ஈண்டறிக.

இனி, ‘உண்ணிருண் ணீரென் றுபசரியார் தம் மனையி 'லுண்ணாமை கோடி யுறும் ' என்றிருத்தலின், ‘ஈண்டு உண்ணார் அன்போடுபசரியாதார் ' என்பாருமுளர். அன்றியும், ‘உண்ணார் என்றது குரு, தெய்வம் , வறிய ராதியரை; அவர் பொருள்கொண்டு உண்ணுதல் பெரும்பாவமாகலின் என்பாருமுண்டு ; அவர் ‘கைத்து' ‘பொருள்' என்பர், தான் ; அசை . ‘உயிர் சென்று படினும் என்புழி உடம்பின் தொழில் உயிர்மே லேற்றப்பட்டது; இஃது உபசார வழக்கு.

 
 
 

Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:03:59 PM
12  
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.
 


(ப-ரை.) குழவி - குழந்தைகள், பிணி இன்றி - நோயில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது -; கழறும் (சொல்லுதற்குரிய சபையினையறிந்து அதற்கேற்பச்) சொல்லுகின்ற , அவை அஞ்சான் - சபைக்கு அஞ்சாதவனுடைய , கல்வி - கல்வியானது, இனிது -; மயரிகள் அல்லராய் - மயக்கமுடைய ரல்லராய், மாண்பு உடையார் சேரும் - மாட்சிமையுடையாரை யடையும், திருவும் - செல்வமும் தீர்வு இன்றேல் - நீங்காதாயின், இனிது - .


பாலக்கிரக தோடம் பட்சிதோட முதலிய அப் பருவத் துணமையின் ‘ குழவி பிணியின்றி வாழ்த லினிதே ' எனவும் ;

"உளரெனினும் இல்லாரோ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்"

(குறள் - 730)

என்றிருத்தலின்,

‘கழறு மவையஞ்சான் கல்வி யினிதே' எனவும்:

"பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு "

(நாலடி - 220)

என்றிருத்தலின் , ‘மாண்புடையார்ச் சேருந் திருவுந் தீர்வின்றேலினிது ' எனவுங் கூறினா ரென்க. ‘திருவும்' என்புழி உம்மை எச்சவும்மையாம்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:05:51 PM
13

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.
 


(ப-ரை.) மானம் அழிந்த பின் - பெருமை கெட்ட பின், வாழாமை - (உயிர்) வாழாமை, முன் இனிது - மிக வினிது ; தானம் அழியாமை (தானிருந்து வாழும்) இருப்புச் சிதையாதபடி, தான் அடங்கி வாழ்வு - தான் அடங்கி வாழ்தல், இனிது-; ஊனம் ஒன்று இன்றி குறைவு சிறிதுமில்லாது, உயர்ந்த பொருள் உடைமை மிக்க பொருளுடையராதல், மானிடவர்க்கு எல்லாம் - எல்லா மக்கட்கும், இனிது -;

மானம் அழிதல் - நிலையினின்றுந் தாழ்தல்.

"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை"

(குறள் - 964)

எனவும்

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் "

(குறள் - 969)

எனவும் பிறருங் கூறுதலின் ‘மான் மழிந்தபின் வாழாமை முன்னினிதே ' என்றார். ஒருவன் தானடங்கி வாழானாயின் அவன் குடியிருப்புச் சிதைதல் ஒருதலை யெனல் குறித்தன ரென்க. ஊனமொன்றின்றி யுயர்ந்த பொருளாவது கல்வியாம் ; என்னை?

"கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை "

(குறள் - 400)

எனவும்,

"தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது"

(குறள் - 68)

எனவும் பெரியாரும் பணித்தமையி னென்க. கலித்தொகையுடையார் ஒரு காரணம் பற்றிச் செல்வப் பொருளைக் ‘கேடில் விழுச்செல்வம்' என்றாரேனும், நச்சினார்கினியர் வழுவமைத்தமையுங் கண்டு தெளிக.

‘ஒன்று' என்புழி முற்றும்மை விகாரத்தாற்றொக்க தென்க.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:07:57 PM
14

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது.
 

(ப-ரை.) குழவி - குழந்தைகளது, தளர்நடை - தளர்ந்த நடையை, காண்டல் - காணுதல், (பெற்றோர்க்கு) இனிது-; அவர் மழலை - அக்குழந்தைகளின் மழலைச் சொற்களை , கேட்டல்-; அமிழ்தின் - தேவாமுதத்தினும் , இனிது-; வினையுடையான் - தீவினை செய்தவன், வந்து அடைந்து - (அதன் பயனாகிய துன்பந்) தன்பால் வந்து சேர்ந்து , வெய்து உறும் போழ்தும் - (தான் தாபமடையுங் காலத்தும், மனன் அஞ்சான் ஆகல் - மனம் அஞ்சாது நிற்றல், இனிது-.

தளர் நடையைக் குறுகுறு நடத்தல் என்ப.

"குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே "

(புறம் - 188)

என்றார் ஒரு புலவர். ‘அமிழ்தின்' என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. ‘இன்' உறழ் பொருளின் வந்தது; ஒப்புப் பொருளின் வந்ததெனினு மமையும். தீவினைப் பயன் நுகர்ந்தே தீரவேண்டுதலின், ‘மனனஞ்சானாக லினிது' என்றார். ‘வெய்துறும்' ஒரு சொல் லெனினுமாம்

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:10:21 PM
15  

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது.
 


(ப-ரை.) பிறன் மனை - பிறனுடைய மனைவியை, பின் நோக்கா - திரும்பிப் பாராத, பீடு - பெருமை, இனிது -; வறன் - நீரின்மை யால், உழக்கும் - வருந்தும், பைங்கூழ்க்கு பசிய - பயிர்க்கு, வான்சோர்வு - மழை பொழிதல், ஆற்ற இனிது - மிக இனிது ; மறம் மன்னர் - வீரத்தையுடைய அரசர், கடையுள் - கடைவாயிலின்கண், மாமலை போல்யானை - பெரிய மலைபோலும் யானைகளது, மதம் முழக்கம் - மதத்தாற் செய்யும் பிளிற்றொலியை, கேட்டல் -, இனிது-
.

‘பிறன் மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா' என்றார் பிறரும்.

பின்நோக்குதல் - திரும்பிப் பார்த்த வண்ணம் நடத்தல் ; இது காதலின் நிகழ்வது என்பதனை,

"எருத்தத் திரண்டு விழிபடை யாமையென் னாருயிரை
வருத்தத் திருத்த முகம்பிறக் கிட்டு மயினடக்குந்
திருத்தத்தைக் கண்டு விளர்த்த வென் னாதய னூர்தி செங்கோல்
பொருத்தத்த னூர்தியும் பண்டே விளர்த்துப் புகழ்கொண்டவே"

(தணிகைப் புராணம் , களவு - 81)

என்னும் பாவானு மறிக. இனி , மனத்துக்கொள்ளுதல் எனினுமாம். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை' என்பதற்குப் பரிமேலழகர் ‘பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண் தகைமை என உரை செய்திருத்தல் காண்க. வான் : ஆகு பெயர்

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:12:40 PM
16  

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகுஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
 



(ப-ரை.) கற்றார் முன் - கற்றவர்க்கு முன்பு, கல்வி உரைத்தல் தங் கல்வியைச் சொல்லி ஏற்றுதல், மிக இனிது - மிகவினிது ; மிக்காரை -(அறிவான்) மேம்பட்டாரை; சேர்தல் பொருந்தல், மிகமாண - மிக மாட்சிமைப்பட, முன் இனிது முற்பட வினிது; எள் துணை ஆனும் - எள்ளளவாயினும், இராவது (தான் பிறரிடம்) யாசி யாது, தான் ஈதல் - (பிறர்க்குக்) கொடுத்தல், எ துணையும் - எல்லா விதத்தானும், ஆற்ற இனிது - மிக இனிது.

"கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
குற்றந் தமதே பிறிதன்று"

(நீதிநெறி விளக்கம் - 25)

என்றிருத்தலின, ‘கற்றார் முற் கல்வியுரைத்தன மிக வினிதே எனவும்,

‘நல்லினத்தி னூங்குந் துணையில்லை என்றிருத்தலின்,
‘மிக்காரைச் சேர்தன் மிகமாண முன்னினிதே எனவும்;
"எள்ளுவ என்சில இன்னுயி ரேனுங்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்"

(கம்பர்)

என்றிருத்தலின், ‘எள்துணையானு மிரவாது தானீதல், எத்துணையுமாற்ற வினிது' எனவுங் கூறினா ரென்க
.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:14:27 PM
17

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது
.


(ப-ரை.) நட்டார்க்கு - (தன்கண்) நட்புடையார்க்கு, நல்ல செயல் - இனியவற்றைச் செய்தல், இனிது-; எ துணையும் ஒட்டாரை எவ்வளவும் (தன் பகைவரோடு) சேராதவரை ஒட்டிக்கொளல் - நட்பாக்கிக் கொள்ளுதல், அதனின்-, முன் இனிது - மிக வினிது ; பற்பல தானியத்தது ஆகி - பற்பலவகை உணவுப் பொருள் களுடையதாய், பலர் உடையும் - (புறத்தார்) பலர் தோற்றம் கேதுவாகிய, மெய்துணையும் - மெய்க் காப்பு வீரரொடும், சேரல் - (அரண்) பொருந்துதல், இனிது-.

"நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்"

(குறள் - 679)

"கொற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்"

(குறள் - 745)

"எல்லாப் பொருளும் உடைத்தா யிட
நல்லா ளுடைய தரண்"

(குறள் - 746)

என்பவற்றின் பொருள் இப் பாவின்கண் அமைந்து கிடத்த லறிக. ‘ஒட்டாரை யொட்டிக் கொளல் ' என்பதற்குத் ‘தன் பகைவர் பிறரொடு கூடாமல் மாற்றிவைத்தல் எனினுமாம். ‘ அதனின்' ஐந்தனுருபு ஈண்டு உறழ்பொருளின் வந்ததென்க. உடையும் காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாதல் காண்க

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:16:32 PM
18


மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது.
 



(ப-ரை.) மன்றின் - அம்பலத்தின்கண், முதுமக்கள் - அறிவுடையோர், வாழும் பதி - வாழ்கின்ற ஊர், இனிது-; தந்திரத்தின் - நூல் விதிப்படி , வாழும் தவசிகள், வாழ்கின்ற தவத்தோரது, மாண்பு - மாட்சிமை, இனிது-; எஞ்சா குறையாத, விழுச்சீர் - மிக்க சிறப்பினையுடைய , இருமுதுமக்களை தாய் தந்தையரை, காலை - காலையில், கண்டு - (அவர் இருக்குமிடஞ் சென்று) கண்டு, எழுதல் - (அவர் பாதங்களின் வீழ்ந்து) எழுதல், இனிது-.

மன்றமாவது ஊர் மன்றம்; அஃதாவது சபைகூடும் பொதுவிடம் மன்றத்து அறிவுடையார் வாழின், நீதி பெறப்படுதலின், ‘மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே' என்றார். தந்திரம் - நூல் ; அஃதிலக்கணையால் நூல்விதிக்காயிற்று. ‘கண்டொழுதல்' என்பது பாடமாயின், ‘அவரிருக்கு மிடத்திற் றொழுதல் ' என்றுரை செய்க
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:19:32 PM
19  

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது.
 



(ப-ரை.) நட்டார் - (தன்னிடம்) நட்புக்கொண்டாரை, புறங்கூறான்- புறங்கூறாதவனாய், வாழ்தல் - வாழ்வது, நனி இனிது - மிகவினிது; பட்டாங்கு - சத்தியத்தை, பேணி பாதுகாத்து, பணிந்து ஒழுகல் - (யாவர்க்கும்) அடங்கி நடத்தல், முன் இனிது - முற்பட வினிது, முட்டு இல் - குறையில்லாத, பெரும் பொருள் - பெரும் பொருளை, ஆக்கியக்கால் - தேடினால், அது அப்பொருளை, தக்க உழி - தக்க பாத்திரத்தில், ஈதல் - கொடுத்தல், இனிது-.

புறங்கூறலாவது காணாவிடத்துப் பிறரை இகழ்ந்துரைத்தல் ; ‘தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு ' என்றர் நாலடியாரினும், ‘பொய்யா விளங்கே விளக்கு' ஆகலின் ‘பட்டாங்கு பேணி' எனவும், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' ஆகலின் ‘பணிந்தொழுகல்' எனவும்,

"உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்"

(நாலடி - 38)

ஆதலின் ‘தக்குழி யீதல் ' எனவுங் கூறினார்.

புறங்கூறான் : முற்றெச்சம் . மற்று : அசை. ‘தக்குழி என்புழி, அகரந் தொக்கது
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:22:10 PM
20  
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.



(ப-ரை.) சலவரை - வஞ்சகரை , சாரா விடுதல் - அடையாது நீக்குதல், இனிது-; புலவர்தம் - அறிவுடையாருடைய வாய்மொழி - வாய்ச் சொற்களை, போற்றல் - பாதுகாத்துக் கோடல், இனிது-; மலர்தலை - அகன்ற இடத்தையுடைய ஞாலத்து - பூமியில் வாழ்கின்ற , மன் உயிர்க்கு எல்லாம் - நிலை பெற்ற எல்லாவுயிர்க்கும், தகுதியால் - உரிமைப்பட, வாழ்தல் வாழ்வது, இனிது.


சலம் - மாறுபாடு. ‘தீயினத்தி, னல்லற் படுப்பதூஉமில்' என்றார் பிறரும்.

புலம் - அறிவு , ‘வாய்மொழி' என்றது தீயசொற் பயிலாவென்ற சிறப்புத் தெரித்தற் கென்க.

‘நல்லார்சொற் கேட்பதுவு நன்றே ' என்றார் பிறரும்.

மன்னுயிர்க்கெல்லாம் உரிமைப்பட வாழ்தலாவது மன்னுயிரெல்லாந் தன்னுயிரெனக் கொண்டு ஒழுகுதல்.

"உலகு பசிப்பப் பசிக்கு முலகு
துயர்தீரத் தீரு நிலவு
நிறுத்திவாழ் வஞ்சி யுடையாள்வி யென்னு
மொருத்தியா லுண்டிவ் வுலகு"

என்றிருத்தல் காண்க.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:31:09 PM
21  
பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.



(ப-ரை.) பிறன் - பிறனுடைய, கை பொருள் - கைப்பொருளை, வௌவான் - அபகரியாதவனாய், வாழ்தல் - வாழ்வது, இனிது-; அறம் புரிந்து - அறத்தைச் செய்து, அல்லவை நீக்கல் பாவங்களைச் செய்யாமை, இனிது-; மறந்தேயும் - மறந்தாயினும், மாணா - மாட்சிமைப்படாத, மயரிகள் - அறிவிலிகளை, சேரா திறம் - சேராத வழிகளை, தெரிந்து வாழ்தல் - ஆராய்ந்து அறிந்து வாழ்வது, இனிது-.

‘கைப்பொருள் கொடுத்துங் கற்றல்' என்புழிக் கைப்பொருளாவது சேமநிதியென்பர் நச்சினார்க்கினியர். பிறர் பொருளெட்டியே யெனவும் என்றார் பிறரும்.

‘அல்லவை நீக்கல்' என்றார், ‘அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்' ஆகலின்.

மேல் ‘சலவரைச் சாரா விடுத லினிது என்றார். இதனுள் 'மறந்தேயு மாணா மயரிகட் சேராத், திறந்தெரிந்து வாழ்தலினிது' என்றதென்னை யெனின், சலவரென்பார் பிறரை மயக்குவாரும், மயரிகளென்பார் தாம் மயங்குவாரு மாகலானும், மயக்குவாரைச் சேர்தலினும் மயங்குவாரைச் சேர்தல் பேரிடர் விளைத்தலானுமென்க.

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:35:20 PM
22

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது.
 

(ப-ரை.) வருவாய் - (தமக்குப்) பொருள் வருகின்ற நெறியினள வினை, அறிந்து-, வழங்கல் - கொடுத்தல், இனிது-; ஒருவர் பங்கு ஆகாத - ஒருவர்க்குச் சார்பாகாத ஊக்கம் - மனவெழுச்சி , இனிது-; பெருவகைத்து ஆயினும்- பெரிய பயனையுடைத்தாயினும், பெட்டவை - தாம் விரும்பியவற்றை , செய்யார் - ஆராயாது செய்யாதவராய், திரிபின்றி - தம்மியல்பின் வேறுபடுதலில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது-.

வருவாய் : ஆகுபெயர். பிறரும், ‘ஆற்றி னளவறிந் தீக' எனவும், ‘வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்' எனவும், ‘வந்த பொருளின் காற்கூறு வருமே லிடர்நீக் குதற்கமைந்து, மைந்த விருகானினக் காக்கி மற்றைக் காலே வழங்கிடுக' எனவுங் கூறினர். தொடர்புடையார்க்குச் சார்பாக மனஞ் செல்லுதல் இயல்பாகலின், ‘ஒருவர் பங்காகாதவூக்க மினிதே' என்றார். ‘தொழிற் பயன் பெரியதாயினும் அதனை நோக்காது' தன்மனத்தின்கட்டோன்றும் விருப்பினை யடக்கித் தம்மியல்பின் நிற்றல்வேண்டுமென்பார், ‘பெட்டவை செய்யார், திரிபின்றி வாழ்தலினிது என்றார். தம் இயல்பாவது தமக்கும் பிறர்க்கும் நல்லன செய்தல்.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:40:10 PM
23  

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.



(ப-ரை.) காவோடு - சோலை வளர்த்தலோடு, அறக்குளம் தருமத்திற்குக் குளத்தை, தொட்டல் - வெட்டுதல் மிக இனிது-; அந்தணர்க்கு - மறையவர்க்கு, ஆவோடு - பசுவோடு, பொன் ஈதல் - பொன்னைக் கொடுத்தல், முன் இனிது - மிகவினிது ; பாவமும் அஞ்சாராய் - (இம்மையிற் பழிக்கேயன்றி மறுமையிற்) பாவத்திற்கும் அஞ்சாதவராய், பற்றும் - (அப் பாவத்தைப்) பற்றுகின்ற, தொழில் - தொழிலையும், மொழி - சொல்லையுமுடைய, சூதரை - சூதாடிகளை, சோர்தல் - நீக்கல்,இனிது.

"காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதங் கரைகண்ட பார்ப்பானுந் - தீதிகந்து
ஒல்வது பாத்துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வர் எனப்படு வார்"

(திரிகடுகம் - 70)

"காவலர்த்துங் குளந்தொட்டுங் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கும் வளம்பெருக நல்கியும்நா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராது ஈகைவினைத் துறைநின்றார்"

(பெரியபுராணம் ; திருநாவுக்கரசு - 36)

எனவும் ஆன்றோர் பிறருங் கூறினார்.

ஆவோடு பொன்னீதல் - கோதாந ஸுவர்ந தானங்கள் பற்றுந் தொழின் மொழியாவன பொய்த்தொழிலும் பொய்ம் மொழியுமாம். ‘பழிபாவங்கட்கஞ்சாத சூதரொடு சேரற்க' வென்பது கருத்தென்றுணர்க.

"ஐயநீ ஆடுதற்கு அமைந்த சூதுமற்று
எய்துநல் குரவினுக்கு இயைந்த தூதுவெம்
பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்றதாய்
மெய்யினுக்கு உறுபகை யென்பர் மேலையோர்"

(நைட. சூதாடு.21)

என்றிருத்தல் காண்க.

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:42:50 PM
24  

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது
.


(ப-ரை.) வெல்வது - மேம்படுதலை, வேண்டி - விரும்பி, வெகுளாதான் - கோபியாதவனது, நோன்பு - தவம், இனிது-; ஒல்லும் துணையும் - கூடியவளவும் ஒன்று உய்ப்பான் - எடுத்துக்கொண்டதொரு கருமத்தை நடத்துவோனது, பொறை - ஆற்றல் , இனிது-; இல்லது - (தம்மிடத்து) இல்லாததொரு பொருளை, காமுற்று - விரும்பி , இரங்கி - (அது பெறாமையின்) மனம் ஏங்கி, இடர்ப்படார் - துன்பப்படாதவராய், செய்வது - (உள்ளது கொண்டு) செய்யத் தக்கதொரு கருமத்தை, செய்தல் செய்வது, இனிது-.

மேம்படுதாவது மேற்கொண்ட தவத்தை இடையூறு புகாது காத்து இனிது முடித்தல். ‘வெல்வது வேண்டி வெகுளிவிடல் என்றார்.

ஆற்றலாவது இடுக்கண் முதலியவற்றாற் றளராமை.

"பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளுஞ்
சிற்றுயிர்க் காக்க மரிதம்மா"

(நீதிநெறி விளக்கம் - 94)

என்றபடி பெறாதவற்றைக் காமுறுதல் உயிர்க்கியல்பாகலின் ‘இல்லது காமுற்றிரங்கி யிடர்ப்படார்' என்றார்.

இல்லது : வினையாலணைந்த பெயர்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:48:09 PM
25

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
 



(ப-ரை.) ஐவாய வேட்கை - ஐந்து வழியான் வருகின்ற ஆசையையும், அவா - (அதனை ஒருகால் விடினும் பழைய பயிற்சி வயத்தான் அதன்கட் செல்லும்) நினைவையும், அடக்கல் ஒழித்தல், இனிது-; கைவாய்ப் பொருள்- கையினிடத்து நிற்கக் கூடிய பொருளை, பெறினும் - பெறுவதாயிருப்பினும், கல்லார் கண் - கல்லாதவரை, தீர்வு - விடுதல் , இனிது-; நில்லாத காட்சி நிலையில்லாத அறிவினையுடைய, நிறையில் - (நெஞ்சை) நிறுத்துலில்லாத, மனிதரை-, புல்லா விடுதல் - சேராது நீங்குதல், இனிது-.

ஐந்து வழியாவன : மெய், வாய், கண் , மூக்கு, செவி என்பன.

"மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும் "

(நாலடி - 59)

என்பது காண்க.

கைவாய்ப் பொருளென்றது சேம நிதியை; 22ஆவது பாட்டின்குறிப்புரை காண்க.

"விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்"

(குறள் - 410)

என்றிருத்தலின், ‘கல்லார்கட் டீர்வினிதே ' என்றார்.

கற்றுவைத்தும் அறிவு மயங்குதலும் மனஞ்சென்றவழி யெல்லாஞ் செல்லுதலுமாகிய தீயொழுக்க முடையார், சேர்க்கை கேடு பயத்தலின், ‘நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லாவிடுதலினிது என்றார். நிறையாவது (நெஞ்சினை) நிறுத்தல். ‘நிறையெனப் படுவது மறைபிறரறியாமை' எனக் கலித்தொகை கூறுதலுமறிக.

புல்லா : வினையெச்ச வீறு புணர்ந்து கெட்ட தென்க.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:54:24 PM
26  

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.
 



(ப-ரை.) நச்சி - (ஒரு பொருளைப் பெற) விரும்பி, தன் சென்றார் - தன்னை அடைந்தவரது, நசை - விருப்பம், கொல்லா - அழுங்குவியாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உட்கு - மதிப்பு, இல்வழி - இல்லாத விடத்து, வாழா - வாழாமைக் கேதுவாகிய, ஊக்கம் - மனவெழுச்சி, மிக இனிது-; எத்திறத்தானும் - எப்படியாயினும், இயைவ - (பிறர்க்குக்) கொடுக்கக் கூடியவற்றை , கரவாத - ஒளிக்காத, பற்றினின் - அன்பினும், பாங்கு இனியது இல் - நன்றாகவினியது வேறொன் றில்லை.

‘தன் நச்சி ' எனக் கூட்டுவாரு முளர். ‘ செல்லுதல்' ஈண்டு அடைதல். நசை கொல்லலாவது ஒன்றைப் பெறலாமென்ற ஆசை நாளடைவிற் றேய்ந்து அழியுமாறு செய்தல் ; அஃதாவது கொடுத்தற்கிசைவில்லையாயின் உடனே மறாது பன்முறையும் தருவதாகப் பொய்கூறி நாளடைவில் அவ்வாசை தானே அழியுமாறு செய்தல். அஃது அப்பொருட்டாதலை,

"இசையா ஒரு பொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத்து இயற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து"

(நாலடி- 111)

என்னும் பாவா னறிக.

உட்கு - உள்குதல் , நினைத்தல் ; ஈண்டு மதித்தல்.

"இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின்"

(நாலடி- 94)

என்றிருத்தலின் ‘எத்திறத்தானு மியைவ கரவாத' என்றார். பற்று - இல்வாழ்க்கையுமாம்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:57:36 PM
27  
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.
 



(ப-ரை.) தானம் கொடுப்பான் - (அபயமென்பார்க்கு) இடங்கொடுப்பானது, தகை ஆண்மை - பெருமை பொருந்திய வீரம் , முன் இனிது - மிக வினிது ; பட மானம் வரின் - தான் இறப்ப மானம் எய்து மெல்லை வரின், வாழாமை - உயிர் வாழாமை, முன் இனிது-; ஊனம் கொண்டாடார் - குற்றம் பாராட்டாதவராய், உறுதி உடையவை - நன்மை யுடையனவற்றை , கோள் முறையால் - கொள்ளுமுறைமைப்படி , கோடல் - கொள்ளுதல், இனிது-.

தானம் கொடுப்பான் அபயப்ரதானஞ்செய்து தன் பக்கல் இடந் தந்து பாதுகாப்பவன். ‘மாவீரனல்லனாயின் அது செய்யத் துணியான் ' என்பது குறிப்பு. ‘தானங்கொடுப்பான் தகையாண்மை' என்பதற்கு அன்ன முதலிய தானங்களைச் செய்வானது தகுதியின் றலைமை என்பர் பழையவுரைகாரர். மானம் இன்னதென 14 ஆவது பாட்டுரைக்கண் உரைத்தாம். ‘மானம் வரின்' என்பதற்குப் பரிமேலழகருரை கண்டு தெளிக. ‘நீரை நீக்கிப் பாலை யுண்ணும் அன்னப்பறவை போலக் குற்றமுடையன நீக்கிக் குணமுடையன கொள்க' என்பார். ‘ஊனங்கொண்டாடாருறுதி யுடையவை எனவும், காரணகாரியம், ஐநக ஐந்யம் முதலிய சம்பந்தங்களுள் யாதானு மொன்றுபற்றி இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென ஆன்றோர் கொள்ளுமுறைப்படி கொள்க என்பர், ‘ கோண் முறையால்' எனவுங் கூறினார்.

இனி, கோள்முறையாவது கோடன் மரபென்பாருமுளர். அஃதின்னதென,

"கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச்
சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர்"

(நன்னூல்)

என்னுஞ் சூத்திரத்தா னறிந்துகொள்க.

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 10:59:54 PM
28  

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.
 


(ப-ரை.) ஆற்றானை - (ஒரு தொழிலைச்) செய்யமாட்டாதானை, ஆற்று - (அதனைச்) செய்யென, அலையாமை - வருத்தாமை, முன் இனிது - மிகவினிது ; கூற்றம் - யமனது, வரவு உண்மை - வருகையின் நிச்சயத்தை சிந்தித்து வாழ்வு - நினைத்து வாழ்வது , இனிது-; ஆக்கம் அழியினும் - செல்வமழிந்தாலும், அல்லவை கூறாத - பாவச் சொற்களைச் சொல்லாமைக் கேதுவாகிய , தேர்ச்சியின் - தெளிவினும், தேர்வு-தெளிவு, இனியது இல் - பிறிதொன்றில்லை.

வன்மை கண்டு ஏவினல்லது தன்மாட்டு அன்புடைமை கண்டு ஏவி வருத்தினும் வினை முடியாதாகலின் ‘ஆற்றானை யாற்றென்றலையாமை' என்றார். இதனை,

"அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று"

(குறள் - 515)

என்பதனானுந் தெளிக.

மரணம் வருதலை நினைப்பிற் பாவ வழியில் மனஞ்செல்லாமையின் ‘கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு' என்றார் ‘பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ' என்றார் பிறரும்.

அல்லவை யென்றது பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும் வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவைகூறின் ஒருவன்மாட்டு ஒழுக்கமின்மை வெளிப்படுதலின் கூறாத தேர்ச்சியின்' என்றார்.

"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்"

(குறள் - 139)

என்றிருத்தல் காண்க.

‘கூறாத' : காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாம்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 11:01:54 PM
29  
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.
 

(ப-ரை.) கயவரை - கீழ்மக்களை , கைகழிந்து - நீங்கி, வாழ்தல் - வாழ்வது, இனிது-; உயர்வு உள்ளி (தான் மேன் மேல்) உயர்தலை நினைத்து, ஊக்கம் பிறத்தல் - (ஒருவற்கு) மனவெழுச்சியுண்டாதல், இனிது-; எளியர் இவர் என்று- இவர்வறிய ரென்று, இகழ்ந்து உரையாராகி - அவமதித்து இழிவு சொல்லாராகி, ஒளிபட வாழ்தல் - புகழுண்டாக வாழ்வது , இனிது-.

‘கையிகந்து' என்பதூஉம் பாடம் ; ‘கயவரைக் கையிகந்து வாழ்தல்' என்றார் பிறரும்

"மனத்தான் மறுவில ரேனுந் தாஞ்சேர்ந்த
இனத்தல் இகழப் படுவார்"

(நாலடி - 180)

ஆகலின், ‘கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே' என்றார்.

தன்னை ‘நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும்' தானேயாமாகலின், அது செய்தற்கு மனங்கிளர்தல் நன்றென்பார், ‘உயர்வுள்ளி யூக்கம் பிறத்த லினிதே ' என்றார். இனி, ‘உயர்வுள்ளி' என்பதற்குத் ‘தான் இருக்கும் உயர்ந்த பதவியை நினைத்து எனவும் பொருள் கூறுப. ஒளிபட வாழ்தல் ஈண்டு அதற்குக் காரணமாய ஈதலையுணர்த்தி நின்றது. என்னை? ‘ஈதலிசைபட வாழ்தல் என்றிருத்தலினென்க. எனவே, ‘இகழ்ந்துரையாராகி, யொளிபட வாழ்தல்' என்பதற்கு ‘நன்கு மதித்து இனியவை கூறி ஈதல் ' என்பது பொருளாயிற்று.

"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து"

(குறள் - 1507)

என்றார் திருக்குறளாசிரியரும்.
 
 

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 12, 2011, 11:04:42 PM
30  

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கினியது இல்.
 


(ப-ரை.) நன்றி பயன் - (ஒருவன் செய்த) நன்றியின் பயனை, தூக்கி - கருதி, வாழ்தல் - வாழ்வது, இனிது - மன்றம் கொடும்பாடு உரையாத - நியாய சபையின்கண் ஓரஞ்சொல்லாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; அன்று - (தன்கண் வைத்த) அந்நாள், அறிவார் யார் என்று -அறிவாரொருவரு மிலரென்று, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, வௌவாத -அபகரியாத, நன்றியின் - நன்மையினும், நன்கு இனியது - மிக வினியது, இல் - பிறிதொன்றில்லை.

"செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ "

(புறம் 34)

என்றிருத்தலின், ‘நன்றிப் பயன் றூக்கி வாழ்த னனியினிதே ' என்றார்.

‘மன்றம்' என்புழி அத்துச் சாரியையும் ஏழனுருபுந் தொக்கன.

"நன்றிப் பயன்தூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன்
மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானு மிம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்"

(திரிகடுகம் - 62)

எனவும்,

"வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை "

(நல்வழி - 23)

எனவும் பிறருங் கூறியவாற்றான், ‘மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே ' என்றார்.

சான்றியதென அடைக்கலப் பொருளை அபகரிப்பின் தெய்வங் கண்டு ஒறுத்தலின், ‘அன்றறிவா ரியாரென் றடைக்கலம் வௌவாத, நன்றியி னன்கினிய தில்' என்றார்.

தெய்வங் காணுமென்பதனை,

"வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோ மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு "

(நீதிநெறி விளக்கம் - 94)

என்பதனாலும்,

அடைக்கலப்பொருளை அபகரிப்பிற் பெருந்துன்பம் விளையுமென்பதனை,

"அடைக்கலம் வௌவுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்கா தார் சொல் "

(இன்னா - 41)

என்பதனானுந் தேர்க.

 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 12:33:18 AM
31  
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.
 

(ப-ரை.) அடைந்தார் - (தம்பால்) அடைக்கலம் புக்கார் , துயர் கூரா - துன்ப மிக்கடையாது, ஆற்றல் - செய்வது , இனிது-; கடன் கொண்டும் - கடன் வாங்கியும், செய்வன - செய்யத்தக்கவற்றை, செய்தல் - செய்வது, இனிது-; சிறந்து அமைந்த - மிக்குநிறைந்த, கேள்வியர் ஆயினும் - நூற்கேள்வியை யுடையவரானாலும் , ஆராய்ந்து அறிந்து - ஆராய்ந்தறிந்தே, உரைத்தல் - (ஒன்றைச்) சொல்லுதல், ஆற்ற இனிது - மிக வினிது.

‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் என்றார் பிறரும்.

சரணாகத ரக்ஷணஞ் செய்தல் பேரறமென்பார் 'அடைந்தார் துயர்கூரா வாற்ற வினிதே ' என்றார். காகாசுர சரணாகதி, சுக்ரீவ சரணாகதி, விபீஷண சரணாகதி முதலிய பல சரணாகதிகளைப் பற்றிக் கூறுதலின் ஒருசார் இராமாயண மென்னும் இதிகாச முற்றுஞ் சரணாகதி சாத்திர மென்பதூஉந் தெரிந்து கொள்க.

கூரா - கூராது என்னும் வினையெச்சங் கடைக்குறைந்து நின்றது. இனி, அதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச மெனவும், எதிர்மறை வினையாலணைந்த பெயரெனவும் கொண்டு பொருளுரைப்பாரு முளர்.

செய்யத்தக்கவாவன வருணத்திற்கும் நிலைக்கும் இன்றியமை யாதவும் கடமையாயவும் பெரும்பயனுடையவும் பின் இன்பம் பயப்பவும் முதலாயின.

‘கடன் கொண்டும்' என்புழி உம்மை இழிவுசிறப்பு.
"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இம்மை அரிதே வெளிறு"

(குறள் - 503)

என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோ வழி அறியாமை யுளதாகலின், ‘சிறந்தமைந்த கேள்விய ராயினுமாராய்ந் தறிந்துரைத்த லாற்ற விவினது' என்றார்.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 12:40:33 AM
32  
கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்.



(ப-ரை.) கற்று அறிந்தார் - (நூல்களைக்) கற்று (அவற்றின் பொருளை) உணர்ந்தவர், கூறும் - சொல்லுகின்ற, கருமப்பொருள் - காரியத்தினது பயன், இனிது-; பற்று அமையா (குடிகண்மாட்டு) அன்பு வையாத, வேந்தன், கீழ் - அரசன் கீழ், வாழாமை - வாழாதிருத்தல், முன் இனிது - மிக வினிது. தெற்றெனவு இன்றி - ஆராய்தலில்லாது, தெளிந்தாரை - (தன்கண்) வினையை வைத்தாற்கு, தீங்கு ஊக்கா - கெடுதி செய்யாத, பத்திமையின் - அன்புடைமையினும், பாங்கு இனியது - நன்றாக வினியது, இல் - இல்லை.

கூறுங்கால் இனிதன் றெனினும் , பயன் இனிதென்பார் ‘கருமப் பொருளினிதே' என்றார்.

அரசற்குக் குடிகண்மாட் டன்பில்லையாயின் குறை நீக்கலும் முறை செய்தலும் இலவாகலின், ‘பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னினிதே' என்றார்.

அரசன் ஒருவன் பிறப்புக் குணம் அறிவு என்பவற்றையும் செயலையும் காட்சி கருத்து, ஆகம் மென்னும் அளவைகளான் ஆராயாது அவன்கண் வினையை வைப்பின், அவன் அன்புடையனல் லாக்கால் கெடுதி செய்த லெளிதாகலின், ‘தெற்றென வின்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப், பத்திமையில் பாங்கினிய தில்' என்றார். ‘ஊக்காப் பத்திமை' என்புழிப் பெயரெச்சங் காரியத்தின்கண் வந்ததென்க.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 12:47:03 AM
33
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.
 


(ப-ரை.) ஊர் முனியா - ஊரார் வெறுக்காதனவற்றை, செய்து ஒழுகும் - செய்து வருகின்ற, ஊக்கம் - பெருமை, மிக இனிது-; தானே - (தலைவனாகிய) தானே, மடிந்திரா - (ஒரோ வழித் தாமத குணத்தான் யாவர்க்கும் வருகின்ற சோம்பலின் கண்) வீழ்ந்திராது, தாள் ஆண்மை - முயற்சியை யாளுந்தன்மை, முன் இனிது - மிக வினிது; வாள் மயங்கும் - வாட்கள் (நெருக்கத்தான் ஒன்றோடொன்று) கலக்கின்ற ,மண்டு அமருள் - மிக்க போரில், மாறாத - மீளாத, மாமன்னர் - பெருமையுடைய அரசர்களது, தானை - சேனைகள் (பொருதலை) , தடுத்தல் -ஓரரசன் விலக்குதல், இனி்து-.

முனிதல் - வெறுத்தல், ஊர் முனிதல் - ஒரு படித்தாய் எல்லோரும் வெறுத்தல்.

"கடலி னஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னாற்கிடந் தூர்முனி பண்டமே”

(தேவாரம்)

என்றவிடத்தும் ‘ஊர் முனி பண்டம் ' என்றிருத்தல் கண்டு கொள்க.

‘தானே' என்புழி ஏகாரம் சிறப்பு.

எத் துணையூக்க முடையார்க்குந் தாமதகுணத்தான் மடிவருதலியல்பெனினும் அஃது அங்ஙனம் வந்துழி அதன்கண் வீழாது, முயற்சியின் தலைநிற்றல் நன்றென்பார், ‘தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே' என்றார்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 12:54:07 AM
34  

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது.
 


(ப-ரை.) எல்லி பொழுது - இரவின்கண் ; வழங்காமை - வழி நடவாமை, முன் இனிது - மிக வினிது ; சொல்லுங்கால் (பலவற்றைச் சொல்லுமிடத்து, சோர்வு இன்றி - (ஒன்றிலும்) மறதியின்றி, சொல்லுதல் -சொல்வதன், மாண்பு - மாட்சிமை, இனிது-: புல்லி கொளினும் - (வலியத் தாமாகவே வந்து) பொருந்தி நட்புக் கொள்ளினும், பொருள் அல்லார் - ஒரு பொருளாக மதிக்கப்படாத கயவருடைய, கேண்மை - நட்பினை கொள்ளா விடுதல் - கொள்ளாது நீக்குதல், இனிது-.

விடப்பூச்சிகள் முதலிய சரித்தலானும், பனி முதலியன நோய் செய்தலானும் ‘எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே' என்றார்.

சோர்வு - குற்றமாயின், சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளிட்டன வென்க.

பொருளல்லார் - அறிவிலாதார் இழிகுலத்தார் என்பர் பரிமேலழகர்
.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 12:57:27 AM
   
 35
 

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
1வெற்வேறில் வேந்தர்க்கு இனிது.
 


(ப-ரை.) வெற்றி வேல் - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய, வேந்தற்கு - அரசனுக்கு, ஒற்றினால் - ஒற்றராலே, ஒற்றி (எல்லார் கண்ணும் நிகழ்வனவற்றை) ஒற்றுவித்து, பொருள் தெரிதல் - (அவற்றின்) பயனை ஆராய்தலின், மாண்பு - பெருமை, இனிது -; முன்தான்தெரிந்து - தான் குற்றத்தை) முன்னர் ஆராய்ந்து, முறை செய்தல் - தண்டஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது பற்று இலனாய் - (ஒருவர்க்குப்) பற்றிலனாய், பல் உயிர்க்கும் - எல்லார்க்கும், பாத்து - (அப் பற்றினைப் பகுத்து, பாங்கு உற்று அறிதல் - எல்லாரிடத்தும் (தானும்) சென்று குற்றமுளவாயின்) அறிதல், இனிது -.

"ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்"

(குறள் - 538)

என்றிருத்தலின், ‘ஒற்றினா னொற்றிப் பொருள் தெரிதன் மாண்பினிதே ‘என்றார். ஒன்றி : பிறவினைப் பொருளில் வந்த தன் வினை, ‘முன்தான் தெரிந்து முறை செய்தன் முன்னினிதே ' என்றது, தன் கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் அக் குற்றத்தைத் தான் முன்னர் ஆராயாத அரசற்கு அக் குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலாரோடும் ஆராய்ந்து அதனளவிற்றாகச் செய்தல் கூடாமையி னென்க.

"ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்துங் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று"

(நீதிநெறி - 32)

என்றிருத்தலின், ‘உற்றுப் பாங்கறிதல்' என்றா ரென்க. ‘வெற்றிவேல்' என்பது கருத்துடையடை: இம்மூன்றையுஞ் செய்யானாயின் இவற்குவேல் போரின்கண் வெற்றியைத்தாராதென்பது கருத்தாகலின்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 01:00:44 AM
   
 36
 
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.



(ப-ரை.) அவ்வித்து - மனக்கோட்டஞ் செய்து, அழுக்காறு உரையாமை - பொறாமைச் சொற்களைச் சொல்லாமை, முன் இனிது - மிக வினிது செவ்வியனாய் - மனக்கோட்ட மிலனாய், சினம் செற்று கடிந்து - கோபத்தைப் பகைத்து நீக்கி, வாழ்வு - வாழ்வது இனிது - ; கவ்விக்கொண்டு - மனம் அழுந்தி நிற்ப, தாம் கண்டது - தாங்கள் கண்ட பொருளை , காமுற்று (பெற) - விரும்பி, வவ்வார் - (சமயங்கண்டு) அபகரியரதவராய், விடுதல் - (அதனை மறந்து) விடுதல், இனிது -.

"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும் "

(குறள் - 168)

ஆகலின், ‘அழுக்கா றுரையாமை முன்னினிதே' எனவும்;


"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும்
ஏமாப் புணையைச் சுடும்"

(குறள் - 39)

ஆகலின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே' எனவும்,

"நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்"

(குறள் - 171)

ஆகலின், ‘கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று, வவ்வார் விடுத லினிது ' எனவுங் கூறினார். கவ்வித்தாங் கொண்டு என்புழி ‘கொண்டு எச்சதிரிபென்க.

தாம் : அசை
 
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 01:03:20 AM
37  

இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.



(ப-ரை.) இளமையை - தனக்குள்ள இளமைப் பருவத்தை, மூப்பு என்று - முதுமைப் பருவமென்று, உணர்தல் - நினைத்தல் இனிது-; கிளைஞர்மாட்டு - சுற்றத்தாரிடத்தே, அச்சு இன்மை - அச்சத்திற்குக் காரணமாகாத இனிய சொற்களை, கேட்டல் கேட்பது, இனிது-; தட - பெரிய, மென்மை - மென்மையாகிய, பணை - மூங்கிலை யொத்த, தோள் -தோள்களையும், தளிரியலாரை - தளிரை யொத்த மென்மையையுமுடைய பிற மகளிரை, விடம் என்று - நஞ்சென்று , உணர்தல் - நினைத்தல் இனிது-.

"மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்கா யுதிர்தலும் உண்டு "

(நாலடி - 19)

ஆகலின், ‘இளமையை மூப்பென் றுணர்த லினிதே ' என்றார்.

"அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று "

(குறள் - 532)

ஆகலின் , சுற்றத்தைக் கண்டுழி அதன் நன்மை உசாவுதல் நன்றென்பார் ‘கிஞைர்மாட் டச்சின்மை கேட்ட வினிதே ' என்றார். இதற்குப் பிற பொருள் கூறுவாருமுளர். ‘ அச்சின்மையை' ‘க்ஷேமசமாச்சார ' மெனவும் ‘அச்சின்மை கேட்டலைக் ‘குகலப் ரச்ந' மெனவுங் கூறுப வடமொழி வாணர்.

‘தளிரியலாரை, விடமென் றுணர்த வினிது ' என்றமைக் கேற்பப் பிறரும்.

"அஞ்சனவை வேற்க ணரிவையர்தம் பேராசை
நெஞ்சு புகினொருவர் நீங்கு நிலைமைத்தோ
எஞ்சல்புரி யாதுயிரை யெய்ந்நாளு மீர்ந்திடுமால்
நஞ்சமினி தம்மவோர் நாளு நலியாதே "

(கந்தபுராணம் , மார்க்கண் - 24)

"உண்ணாதே யுயிருண்ணா தொருநஞ்சு
சனகியெனும் பெருநஞ் சுன்னைக்
கண்ணாலே நோக்கவே பருகியதே
யுயிர்நீயுங் களப்பட் டாயே "

(கம்ப. இராவணன் - 221)

எனக் கூறியிருந்த லுணர்க
 
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 01:05:15 AM
38  
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென் பால்படுங்
கற்றா உடையான் விருந்து.
 



(ப-ரை.) சிற்றாள் உடையான் - சிற்றாளுடையானது, படைக்கலம் - ஆயுதம் , மாண்பு இனிது - மாட்சிமைப்பட இனிது, நட்டார் உடையான் - சுற்றத்தாரை யுடையானது, பகை ஆண்மை - பகையையாளுந் தன்மை, முன் இனிது - மிக வினிது; பால் படும் - பால் மிகக் கறக்கும் , கன்று ஆ உடையான் - கன்றோடு பொருந்திய பசுவுடை யானது, விருந்து-, எ துணையும் - எல்லா வகையானும், ஆற்ற இனிது - மிக வினிது.

இளம் பருவத்தராகிய வீர ரில்வழிப் படைக்கலத்தாற் பயனின்மையின் , ‘சிற்றாளுடையான் படைக்கல மாண் பினிதே' எனவும், ‘ தம்பிய ரின்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல் ' எனத் தம்பி யொருவன் பரிந்தவாறு சுற்றத்தார் யாவரும் பரிந்து துணைசெய்தலின், ‘நாட்டாருடையான் பகை யாண்மை முன்னினிதே' எனவும் ;

"திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமற்
பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி "

(தேரையர்)

என்றபடி விருந்தைச் சிறப்பிப்பன் உருக்குநெய்யும் பெருக்கு மோருமாகலின் ‘எத்துணையு மாற்ற வினிதென்ப பால்படுங், கற்றாவுடையான் விருந்து எனவுங் கூறினார்.

 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 01:07:04 AM
39  
பிச்சைபுக் குணபான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை1 கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.
 



(ப-ரை.) பிச்சை புக்கு - பிச்சைக்குச் சென்ற, உண்பான் (இரந்து) உண்பவன், பிளிறாமை- கோபியாமை, முன் இனிது - மிக வினிது; துச்சில் இருந்து - ஒதுக்குக் குடியிருந்து, துயர் கூரா - துன்ப மிக்கடையாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உற்றபேர் ஆசை கருதி - மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு , அறன் ஒரூஉம் - அற வழியினின்று நீங்குதற்கேதுவாகிய , ஒற்கம் - மனத்தளர்ச்சி , இலாமை - இல்லாதிருத்தல்,இனிது -.

"இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி "

(குறள் - 1060)

என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருளுதவா தொழிதலும் உண்டென்பதற்குத் தன் வறுமையே சான்றாத லறிந்து இரப்பவன் வெகுளாமை வேண்டுமென்பார் ‘பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே' என்றார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவாதலை

"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த வுயிர்க்கு "

(குறள் - 340)

என்பதனாலும்,

"நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற
னிலையுளே னவைதுரந் திடுமுன்
வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி
வந்தனன் நின்குறிப் பறியேன்"

(சோணசைல - 3)

என்பதனானுங் கண்டு கொள்க.

மிக்க பேராசை நிரம்பும் வரையிற் பேரிடரும் ; நிரம்பாதாயிற் பேரிடரும் நிரம்பினும் முடிவிற் பேரிடரும் விளைத்தலின் அதனைக் கருத்துட்கொண்டு.

"சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு "

(குறள் - 31)

என்றபடி இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதுந் தந்து அந்தமிலின்பத் தழிவில் வீட்டையுந் தரும் அறத்தைக் கைவிடுதலடா தென்பர் , ‘உற்ற பேராசை கருதி யறனொரூஉ மொற்கமிலாமை யினிது என்றார். ‘ஒரூஉம் ' என்பது காரியத்தின்கண் வந்த பெயரெச்சம்
.
 
 
Title: Re: இனியவை நாற்பது
Post by: Global Angel on September 13, 2011, 01:12:27 AM
40  

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்.
 

(ப-ரை.) பத்துக் கொடுத்தும் - பத்துப்பொருள் கொடுத்தாயினும், பதி இருந்து - உள்ளூரிலிருந்து, வாழ்வு - வாழ்தல் ,இனிது-; வித்து - விதைக் கெனவைத்த தானியத்தை, குற்று உண்ணா - குற்றியுண்ணாத, விழுப்பம் - சீர்மை, மிகவினிது -, பற்பல நாளும் - பற்பல நாட்களும், பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நன்மையுடைய நூல்களை, கற்றலின் - கற்பதைப் போல, காழ் இனியது- மிக வினியது, இல் (வேறொரு செய்கை) இல்லை.

‘சில' என்னும் பொருளிற் ‘பத்து' என்னும் சொல்லை வழங்குதலுண்மையை, ‘பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி' (தேவாரம்) ‘ எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளுமாங்கே' (சிந்தாமணி, கனகமாலை - 41) என்பவற்றான்றிக.

‘பத்து' என்பதற்குப் ‘பத்துப் பொருள்' என்றுரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.

தன்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்பொருள் தண்டம் விதிப்பின் அது கொடாது ஊரைவிட்டுச் செல்லுதலின் அது கொடுத்து ஊரின்கண் வாழ்தலே நன்மையா மென்பார், ‘பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே' என்றார். சாதி தருமந் தவறினார்க்கு அச் சாதியார்கூடித் தண்டம் விதித்தலும், அத் தண்டஞ் செலுத்தாராயின் நெருப்பு முதலியன வுதவாதும், வண்ணான் நாவிதன் முதலிய ஊர் வேலையாட்களைக் கட்டுப்படுத்தியும் அவர் அவ் வூரின்கண் இராதபடி செய்தன் முற்கால வழக்கென்க.

இனி , ‘அரசர்க்குச் செலுத்தும் உரிய இறைப்பொருளொடு பத்துப் பணங் கூட்டிக் கொடுத்தாயினும் உள்ளூர் வாழ்தலினிது' எனப் பொருளுரைப்பினும் அமையும் ஒன்றிற்குப் பத்தாகத் தாங்கா ,இறை கொள்ளுதல் கொடுங்கோன் மன்னன் செய்கையாகலானும், கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டிலுந் கடும்புலி வாழுங் காடு நன்றாகலாலும் ‘பத்து' என்பதற்குப் ‘பதின்மடங்கு இறை' எனப் பொருளுரைத்தல் பொருந்தா தென்க.

வித்தின்றேன் மேல்விளைவு மின்றாமாகாலின், ‘வித்துக் குற்றுண்ணா விழுப்பா மிகவினிதே' என்றார். உடலொடு அழியாது புண்ணிய பாவங்கள் உயிரொடு சென்று,

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"

(குறள் - 318)

என்றவாறு, எழுமையினும் துணைசெய்தலின், வாழ்நாட்களினொன்றேனும் பழுதுபடாவாறு கற்பவை கற்க வென்பார் ‘பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினிய தில்' என்றார்.

 

                                                ***முற்றும்***