FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 13, 2023, 08:32:28 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: Forum on March 13, 2023, 08:32:28 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 308

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/308.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: தமிழினி on March 14, 2023, 12:19:18 PM
கடந்து செல்கின்றேன் இன்றும் கனத்த இதயத்துடன்....!

முதல் நாள் அம்மா உன் முந்தி தனை பிடித்து உன்னுடனே அழைத்து செல் என்று அழுத தருணமும்...!

கடைசி நாள் மீண்டும் இனி இந்த பள்ளிபருவ நாட்கள் கிடைக்காதே என்ற
ஏக்கத்தில் அழுத தருணமும்...!!

முதல் நட்பு முதல் காதல் முதல் பிரிவு என அத்தனையும் வகுப்பறை ஒன்றே அரியும்..!

படிப்பதற்கு சென்ற போதும்
படிப்பறிவு மட்டுமல்லாமல் ..
வாழ்க்கை பாடத்தை கற்று தரும் ஆசிரியை அவள் ..

பிரம்மன் வரைந்த பிக்காசோ..ஓவியமே..!

சமூகத்தில் சாதி மத வேறுபாடுடன் வாழ்ந்த போதும்...!
என் நண்பன் அவன் என்று ஒரே சிற்றுண்டி பெட்டியில் அத்தனை பேரும் கையிட்டு
உண்ணும் போது..
 உடைக்க படுகின்ற ஜாதி மதங்களை தாண்டி..
அங்கே வெளிப்படும்
மனிதநேயம் என்ற வானவில் என்றும் ஓர் அழகே...!!

எத்தனை முறை யோசித்தாலும் மெய் சிலிர்க்க வைக்கும் முதல் காதல் தோன்றிய தாஜ்மகாலும் அந்த வகுப்பறை தான்..!!

மீண்டும் அமர முடியா இடமாக தாயின் கருவறை மட்டுமல்ல ..
இந்த வகுப்பறையும் உள்ளதே...!

யாழ் இனிது குழல் இனிது என்பார் மழலை தன் மொழி கேளாதோர் என்பது போல்...
எத்துணை இன்பங்கள் நம்மை சூல்கின்ற போதும்..
பள்ளி நாட்கள் நாம் பெற்ற ஓர் வரமே...!!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: Sun FloweR on March 14, 2023, 02:36:54 PM
கள்ளம் கபடம் ஏதுமற்று
வெள்ளைச் சிரிப்பினில்
உள்ளம் கொள்ளை கொள்ளும்
சின்னஞ்சிறு பூக்கள்..

இன்பம் மட்டுமே சுவைத்தறிந்த
துன்பமறியா தேன் சிட்டுகள்..
சூது வாது தெரியாது
வெளுத்ததெல்லாம் பால் என
நினைக்கும் பாசாங்கற்ற பாலகர்கள்..

உலகின் உயர்விற்கு
உங்களை உரமாக்குங்கள்..
பிள்ளைச் சிரிப்பினில்
கள்ளமில்லாமல் காலமெல்லாம்
வாழுங்கள்...
கற்றல் பருவம் வாழ்வில் ஒருமுறைதான் வாழ்ந்துவிடுங்கள் மகிழ்ச்சியாய்...எழுச்சியாய்..

ஏனெனில் நீங்களே,
நாளைய உலகின் நம்பிக்கை
நாயகர்கள்...
நீங்களே நாளைய உலகின் நங்கூரங்கள்...
நீங்களே வருங்காலத்தை சுமந்து நிற்கும் வாரிசுகள்..
நீங்களே வருங்காலத்தை தாங்கி பிடிக்கும் தூண்கள்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: AnbanavaN on March 15, 2023, 10:01:16 PM
பள்ளி பருவ நினைவலைகள்

பால் குடி மறந்த அந்த
நான்கரை வயதில்
அழுது கொண்டே சென்று
எழுத்து பயிலும் அந்த வேளையில்
குச்சியை ,பென்சிலை கடித்து சாப்பிட்டு
எதுவும் தெரியாத பச்ச பிள்ளை போல
வீட்டுக்கு திரும்பிய அந்த நாட்கள்
இன்றும் நினைவில் வந்து செல்கிறது.
மறக்க முடியுமா அந்த இலட்சுமி மிஸ் பத்மா மிஸ் ரேவதி மிஸ,
எழுத கற்று கொடுத்த எனது தந்தை அரவணைப்பு, பாசம் காட்டிய அன்னையின் கொஞ்சுதல் ,
சாக்ஸ் டை என்று எதுவும் தெரியாத வயதில் அணிந்து சென்ற அந்த மழலை பருவம் !

ஒன்றாம் வகுப்பு
விக்டோரியா டீச்சர் முதல்
மான்டே குமார் தலைமை ஆசிரியர் வரை
என்னை உருவாக்கிய அந்த பள்ளிக் கூடம்
எனது கண்ணை திறந்த ஓரு கோயில்
ஆசிரியர்கள் இறைவனின் மரு உருவங்கள்.

பள்ளியில் வேற்றுமை இன்றி
ஒருவராய் துள்ளி திரிந்த அந்த காலம்,
நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் கடலை மிட்டாய் அன்பளிப்பாக தினமும் வாங்கி
சாப்பிட்டு மகிழ்ந்த அந்த காலம்,
பிறந்த நாள் அன்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி, கன்னத்தில் கிள்ளல்கள் வாங்கி
பெருமிதம் கொண்ட காலங்கள்.

இடை வேளை வந்து விட்டால் வேகமாக சென்று மாங்காயை கடித்து மகிழ்ந்த அந்த காலம்,
கபடி ஆட விரும்பி காலில் அடி வாங்கி ஒதுங்கி விட்டு, ஐய்யா புரம் கிராம மாணவர்களை அதிசயித்து பார்த்து வியந்த பயந்த காலங்கள்,
குறிப்பாக வின்சன்ட் என்னை
மாடு முட்டுவதை போல
என்னை விழ செய்து விட்டான்.

எனது எட்டாம் வகுப்பின் நாட்களில் தான்
எதிர் பாலர் மேல் ஒரு வித ஈர்ப்பும்
அதனை தூண்டும் விதமாக
தில்லா லங்கடி கதை சொல்லும்
சில நண்பர்களும் இன்னும் நினைவில் வந்து போகிறார்கள்.

அன்று ஒரு நாள் மிதி வண்டி ஓட்டி அவள் வந்தாள்,
என்னை கடந்து செல்லும் போதே
எனது நெஞ்சை அள்ளி சென்று விட்டாள்,
மனம் தேடியது ,அவளை விரும்பியது
ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாக படிக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டது,
அதுவே எனது உயர் வகுப்பு வரை
ஒரு தலை காதலாய் இன்றும் மறையாமல்
நீங்கா இடம் பெற்று இருக்கிறாள்
அந்த ஜோதி லட்சுமி. 🪔

எல்லோரும் சமம் என்று கற்று
கொடுத்த பள்ளிக்கூடம்,
ஏன் இன்று மட்டும் ஜாதி, மதம் ,இனம் பார்க்கிறது?பிறப்பால் அனைவரும் சமம் என்பதை
நாம் அனைவரும் கற்று கொண்டுள்ளோம்.
இப்போது இருக்கும் சமூகத்திலும்
அதனை நினைத்து எல்லாரையும் சமமாய் கருதி குறிப்பாக பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வோம்.  🙏🙏🙏



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: MoGiNi on March 16, 2023, 02:29:42 AM
தொலைந்த நாட்களின்
வண்ணம் தடவிப் பார்க்கிறேன்
எண்ணமெல்லாம்
வர்ணமயம்
அவை அந்த நாட்களுக்கானவை   ...

கால் கடுக்க
கதைபேசி அலைந்த
நாட்களோடு
எண்ணங்களை
சங்கமித்துக்கொள்கிறேன்..

வண்ணத்துப் பூச்சியென
வட்டமிட்டு கலந்து பறந்த
பதின்மநாட்கள்
நீ நானென்ற பேதமின்றி
கலந்து கனவு துளைந்திருந்தோம்..

சுட்டரிக்கும் வெயிலோ
தூறலிடும் மழையோ
தொல்லையென
நினைக்காத நாட்களவை

மனதில் உள்ள கோபம்
நண்பன் தரும்
மாங்கா தொக்கில்
கரைந்துவிடும்..
நட்பில் என்றும்
கறைபடியா நாட்களவை..

அப்பா கழட்டிய
அரைக்கை சட்டையில்
சிதறும் சில்லறை
பொறுக்கி
சினிமாப்படம் பார்த்த
நாட்களவை..

பருவமெய்தா பாவைகளை
ஜோடிசேர்த்து
பரிகசித்த நாட்களவை..

மீண்டுவரா பருவம்தனை
கறந்த பால்போல்
களங்கமற்ற நேசம்தனை
நினைக்கும் நேரமெல்லாம்
இதழ்ககடையில் பூக்கும்
புன்னகைக்கு ஏதுதடை..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: VenMaThI on March 19, 2023, 09:05:13 PM



மனதில் ரணங்கள் ஏதுமின்றி
மகிழ்ச்சியாய் விளையாடிய பருவம்
மதமும் மொழியும் பாராமல்
நண்பனாய் மட்டும் பார்த்த பருவம்
ஆணென்றும் பெண்ணென்றும் இனபேதமின்றி
இன்பமாய் சுற்றித்திரிந்த பருவம்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
எதிர்கால அப்துல் கலாம்களுடன் கடந்த பருவம்

வாழ்வின் சுமை பெரிதென்று அறியாமல்
புத்தக சுமையே பெரிதேன நினைத்த பருவம்
பின்னாளில் ஒருமுறையேனும் போடமாட்டோமா என ஏங்கப்போவது தெரியாமல்
சீருடையை வெறுத்த பருவம்
ஒரு நாள் விடுப்புக்காக பலமுறை
நோயாளியாய் மாறிய பருவம்
பிறந்தநாள் ஒன்றுக்காக ஏக்கமாய்
நாட்காட்டியை வருடம் முழுவதும் கிழித்த பருவம்
நேரம் தவறாமையை கற்க மறுத்து
தினமும் நேரம் தாழ்த்திய பருவம்
கா பழம் என்ற இரு வார்த்தைக்குள்
மனதின் கோபத்தை அடக்கிய பருவம்
பகிர்ந்துண்ணும் பண்பை
நமக்குள் வளர்த்த பருவம்
போட்டி மனப்பான்மையின்றி
பதக்கத்திற்காக மோதிய பருவம்
வாழ்க்கையின் பாதையில்
ஒவ்வோர் ஆண்டும் பரிட்சை எழுதி முன்னேறிய பருவம்

அனைவரின் மனதிலும்
திரும்ப கிடைக்காதா என்று
ஒரு முறையாவது எண்ண வைப்பது ..
ஈடாக எதை கொடுப்பினும்
கிடைக்காததொரு பொக்கிஷம்....
அதுவே நம் பள்ளிப்பருவம்


❤️❤️❤️

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: SweeTie on March 21, 2023, 07:33:07 AM

மகிழ்ச்சியின்  எல்லையில்  திளைக்கும் பருவம்
இரவு பகல்  தெரியாது   இன்புறும் பருவம்
மழையில்  நனைந்து  வெயிலில்  உலர்ந்து   
மண்ணோடு  மண்ணாக உருண்டு புரண்டு 
மலரும்   இனிய  மாணவ  பருவம். 

இன்று  சிறுவர்கள்  இவர்கள்   
நாளை  நாட்டின்  தலைவர்களாவர்
வறுமையை  ஒழிக்கவும்  அகிலத்தை காக்கவும்   
அன்றாடம் உழைக்கும்  அன்புக்குழந்தைகள்

புத்தக பையின்  சுமைதான்  எவ்வளவு
கூனி  வளைகிறது   அவர்களின் முதுகு 
போதாத  காலம்  இன்று கணினியும்  வேறு
இத்தனை  சுமைகள்  போதாதென்று 
பள்ளிப் படிப்புடன்   டியூஷன் படிப்புகள் ...அப்பப்பா
தாங்குமா  இளம்  பருவம் ?

போட்டியும் பொறாமையும்  நிறைந்த உலகில்
ஏட்டிக்கு போட்டியாய்  கல்வியின்  நிலை 
பணத்தை வாரி இறைக்கிறார்  ஒரு சாரார்
கண்ணீரால்   கழுவுகிறார்   இல்லாதார் 
கல்வியை   காசாக்கும்    காலத்தோடு   
போட்டியிடும்  மாணவர் சமூகம் இன்று
என்று முடியும்   இந்த போராட்டங்கள் ?????
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 308
Post by: IniYa on March 21, 2023, 03:36:11 PM
பள்ளியில் நாட்கள்

விரும்பாத அந்த பள்ளி பருவத்தில்
விரும்பியதை கேட்டால் கிடைக்காத நாட்கள் !
முகம் பார்த்து பேச தெரியாத அந்த
நாட்கள்!
உணர்ச்சிகளை வலிகளை பற்றி சொல்ல தெரியாத நாட்கள்!
அழுகையோடு பள்ளியை பார்த்து பயந்த அந்த நாட்கள்!

நட்பிற்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாத பருவம் அந்த நாட்கள்!
படிப்பின் கவலையோ வருத்தமோ
புரியாத அந்த நாட்கள்!
பள்ளிக்கு படிக்க செல்லாமல் ஆடுவதற்கு, விளையாடுவதற்கு
அந்த நாட்கள்!
ஆசிரியர்கள் பெற்றோர்கள் கனிவுடன் இல்லாமல் கண்டிப்புடன்
இருந்த அந்த நாட்கள்!

சத்தான உணவு இல்லாத போதும்
நண்பர்களுடன் செட்டியார் கடையில்
குருவி ரொட்டியும், கூச்சி மிட்டாய் , உப்பு மாங்கா வாங்கி உண்ட அந்த
நாட்கள்!
கால்கள் வலிக்க கைகள் வலிக்க அசதிக் கொண்டாலும் அதன் வலி என்றும் உறைத்தது இல்லை அந்த நாட்கள்!
மிதிவண்டியில் பல மைல் தூரம்
போனாலும் அயர்ந்து போகாத காலம் அந்த நாட்கள்!!


பள்ளியில் Penil box, tiffen box பரிசாக
வென்று மகிழ்ந்த அந்த நாட்கள்!
போட்டி பொறாமை இல்லாத உலகம் பள்ளி அந்த நாட்கள்!
கஷ்டப்பட்டு செல்லாமல் இஷ்டப்படி சென்ற அந்த நாட்கள்!!
அப்படிப்பட்ட பள்ளியில் அந்த நாட்கள் என்றும் நீங்காத வரம் , கிடைக்காத செல்வம், மகிழ்ச்சி, என்று கனா காணும் காலங்கள்!!