FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 29, 2021, 11:53:20 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: Forum on August 29, 2021, 11:53:20 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 275

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/275.mp4
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: எஸ்கே on August 29, 2021, 12:20:02 PM

காதலனின் நினைவே என்னை விட்டு போக மறுக்கிறது!
காதலின் அத்தியாயம் எழுத நினைத்து!
அதன் வழியில் ஆசைகளோடு பயணித்தேன்
!

ஆனால் இப்படி ஒரு பிரிவு ஏற்படும் என்று.
கனவிலும்  கூட நினைக்க வில்லை என் அன்பு காதலனே!

காதலின் பிரிவின் வலி என்னை கொல்லுதடா!!
உந்தன் நினைவே என் கண் முன்னே வந்து வந்து போனதென்ன!!
உந்தன் அரவணைப்பில் நான் எப்போதும்..
பிரிவின் வலியை உணர்ந்தது இல்லையே என் ஜீவனே!!

இதுநாள் வரை பிரிவு என்னும் சொல்லுக்கு..
நான் அர்த்தம் காணாது என்னை பார்த்துக் கொண்டாயே!!


உன் மூச்சு காற்றின் வெப்பம் கூட என்னுடன்...
இன்னும்  உறவாடி கொண்டு தான் உலாவுகிறேன்!!!
தனிமையின் பிரிவு தன்னை கொல்ல பார்க்கிறேன்!!!

உந்தன் நினைவு என்னும் மாய பிம்பத்தை வைத்து...
அந்த மாய பிம்பம் தன்னில்  நான் வாழ்கிறேன்!!!
எந்தன் காதலன் நினைவோடு💞

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: Mr Perfect on August 29, 2021, 01:20:37 PM
எவ்வளவுதான் உண்மையாக நேசித்தாலும் அது சில நாட்களிலே மறைந்து விடுகிறது 💘

நீ என்னை மறந்தாலும் உன் உருவமும் நம் நினைவுகளும் என்றும் மறைந்து போகாது 💘

அர்த்தமில்லாத ஒரு சில சண்டைகளால் அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோசங்கள்
 வாழ்வில் தொலைந்து போகின்றன 💘

கனவாகி மட்டுமே போனது  சில ஆசைகளும் பல நிமிடங்களும் 💘

இருக்கும்போது புரிந்து கொண்டு அன்பு காட்டாத எந்த உறவும் 💘

இறந்த பின் அழுது நடிப்பதில் எந்த பயனும் இல்லை 💘

அளவுக்கு அதிகமான அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது பிறருக்கு கொடுக்கவும் கூடாது இரண்டுமே நமக்கு வேதனையை மட்டுமே தரும் 💘

உறவுகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் முதலில் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் 💘

புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தமுள்ளதாக தெரியும் 💘

புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தமற்றதாக தெரியும் 💘

ஏனெனில் நீ தந்த தனிமையில் தவிப்புங்களும் அதிகம் தழும்புகளும் அதிகம்  ஏக்கங்களும் அதிகம் ஏமாற்றங்களும் அதிகம் வெறுப்புகளும் அதிகம் வெறுமைகளும் அதிகம் 💘

நீ இல்லா வெற்றிடம் வெறுமையை மட்டுமே எனக்கு பரிசாக தந்தது💘

வருத்தங்களை மட்டுமே வாரி வழங்கி கொண்டிருக்கிறது💘

இன்றும் என்றும் காத்து கொண்டிருக்கிறேன் இளைப்பாற மனமில்லாமல்💘

உணர்வும் உயிரும் ஒன்றாய் கலந்து விட்ட பிறகு நமக்கு ஏன் பிரிவு💘

நம் உறவு மீண்டும் கைகோர்க்கும் என்று உனக்காக காத்திருக்கிறேன் நீ வேணும் நான் வாழ 💘
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: AgNi on August 29, 2021, 03:59:55 PM


தனிமை  என்ற வாழ்க்கையை
பரிசளித்து  சென்றவனே.....
இதயம் வரைந்த ஓவியத்தை
இரக்கமில்லாமல் கொன்று சென்றவனே !

நீ சென்ற பின் ....
மனிதர்கள் அலையும் வெளியில்
மொழியில்லாமல்  அலைகிறேன்....
சலிக்கும்வரை உண்மை நேசத்தை
தேடி அலைந்துவிட்டேன் ...

மரணத்தின் விளிம்பு வரை
அழைத்து   சென்றவர்களையும்
மறக்காமல் மன்னித்து.....
அன்பு செய்து பார்த்துவிட்டேன் ...

திக்கு தெரியாத காட்டில்
திகைத்து வழி தேடி அலுத்து  விட்டேன் ...
சின்னச்சிறு தலைக்குள்  .... 
மலை அளவு புத்தகம் ஏற்றியும் விட்டேன்  ....

எதையோ தேடி ஓடி பயணம் செய்தும்
களைத்து விட்டேன் ............
மலைகளையும் நதிகளையும்
மரங்களையும் பறவைகளையும்
மானுடம் மறந்த மரணங்களையும்
தன் நல பிணங்களையும்
பார்த்து சலித்து விட்டேன் ....

சாவின் பள்ளத்தாக்கையும்
வறுமையின் தாக்குதலையும்
ஒருசேர பார்த்து ...
தூக்கு கயிரையும் தொட்டு  விட்டு
துயரத்தை  தூக்கி போட்டுவிட்டு ...
உயிரை மிச்சமாக்கி விட்டேன் ...

சாத்தியப்பட்ட வழிகளில்
வாழ்கை படி ஏறி வந்தபோதும்
என்னை துச்சமென எண்ணி
வீசி சென்ற உன்னை ....
நீ கொடுத்த வெறுமையை
நஞ்சென அருந்தி கொண்டு இருக்கிறேன்
அனுதினமும் .......

காத்து இருத்தல் சுகம் தான் ..
காதல் தோல்விக்கு பின்னான
சாதலின் வருகைக்கு .....!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: Sun FloweR on August 29, 2021, 04:59:37 PM
உலகெல்லாம் ஆழி சூழ்ந்து கிடக்க
உன் நினைவுகள் சூழ்ந்து கிடக்கின்றேன் நான்...

அவ்வப்போது நீ மூட்டிச்செல்லும் நினைவுகளும்
அவ்வப்போது நான் மூட்டிக்கொள்ளும்
கனவுகளுமே வாழ்க்கையாகிவிட்டது எனக்கு...

விழுகின்ற மழைநீரில்
கரைந்துவிட்ட கண்ணீரைப் போல
உன் நினைவுகளில் மூழ்கி மூழ்கி
கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருக்கிறேன்...

மொத்த சிறகுகளும் பறிக்கப்பட்ட
பறவையின் வேதனைக் குரலாய்
திசையெங்கும் பரவிக் கிடக்கிறது
எனது கதறல் ...

சோர்ந்து போன வேர்களின்
எச்சம் குடித்து உயிர் சுமக்கும்
கிளைகள் போல உன் நினைவுகள்
குடித்து உயிர் வளர்க்கிறேன் தினமும்...

அன்று உன்னோடு உரையாடினேன்,
இன்று உன் நினைவுகளோடு உரையாடுகிறேன்...
அன்று இரவுகள் சீக்கிரம் தீர்ந்தன,
இன்று நீண்டு கொண்டே செல்கின்றன..

நீ இல்லாத வெறுமையை
எதைக் கொண்டு நிரப்புவேன்?
உன் நினைவுகள் கொண்டு மட்டுமே
பசியாற்றிக் கொண்டிருக்கிறேன்...

வண்ணங்களைத் தொலைத்த
வானவில் போல உன்னைத் தொலைத்து
இரக்கமேயில்லாத இந்த வாழ்வின்
பிடியில் சிக்கி மனம் மரித்துக் கிடக்கும்
நான் உயிர் மரிப்பது எப்போது....?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: Dear COMRADE on August 29, 2021, 07:00:28 PM
சுவரோடு தலை சாய்ந்து
கற்பனை தனில் மூழ்கி...
கண்ணீரில்
உனை வரைகின்றேன்...
என் முன்னே
பிம்பமாய் வருகின்றாய்...
காற்றினில் கண்கட்டி
வித்தை காட்டும் - அந்த
கானல் நீரினை போல...
மறுகணமே
மறைந்து போகின்றாய் எனை நீங்கி...
மாயையாக கூட
ஒரு மணித்துளியேனும்....
எனக்காக
நீ இல்லை என்றானவனாய்...

உனை.........
பார்த்த நொடி முதல்
பிரிந்த இந்த நொடி வரை...
பழகிய நாட்கள் எல்லாம்- எனை
பந்தாடிச் செல்கின்றதே
உறங்காத இராப் பொழுதுகளோடு...

நிஜம் இல்லையேல்
ஓர் நிழல் தோன்றுமோ...
நீ இல்லையேல்
என் நெஞ்சம் தூங்குமோ...
நீங்காத உன் நினைவுகள்
நிதம் என்னை கொல்லுதடா...
நடைப்பிணமாய் நான் அல்லோ
நாலு சுவற்றுக்குள்ளே...

உனைப் பார்க்க
உள் நெஞ்சம் ஏங்குதடா...
உன் கை கோர்த்து
தோள் சாய ஓர் நொடி வேண்டுமடா...
வார்த்தை இன்றி
தவிக்கின்றேன் என் வலிகள் சொல்ல...
கேட்டுப்பார்,
வழிந்தோடும் விழிநீர் தாங்கிய - என்
தலையணை கூறும் அதை மெல்ல...

எனை நீங்கிச் சென்றாலும்
உனை தாண்டி என் உள்ளம்
இன்னோர் உறவை தேடாதே...
ஒருவேளை.........
இறுதி வரை நீ வரவில்லை என்றால்........
விலகிச்சென்ற உன்னிடம்
ஓர் விண்ணப்பம்........
வலிகள் சுமந்த என்னுயிர்
மாண்டு விழும் நாள் வரும்- அன்று
உன் மடி தருவாயா
எந்தன் தேகம் தாங்கும்
உறங்கு மேடையாக
இப்பூமி என்னுடல் ஏந்தும் முன்...

பாரடா எனதன்பே
காற்றோடு கலந்த- என்
கண்ணீர் துளியின்
ஈரம் இன்னும் காயவில்லை...
அதற்குள் மறுபடியும்
வந்து, மறைந்து செல்கின்றாய்
மாய பிம்பமாய் என் முன்னே....

                                 அன்புடன் Hunter  :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: Ninja on August 29, 2021, 11:15:11 PM
மின்சாரமற்ற ஓர் முன்னிரவில்
உடல் சிலிர்த்து தலைக்கோதிக் கொண்ட பறவை அமர்ந்திருந்த
கிளையில் கீழ் தான்
நீ இறுதியாய் பேசி சென்றாய்
உன் காலடி பதிந்த தடத்தின் கீழ்
என் ஆயிரம் ஆயிரம் புன்னகைகளும்
ஆயுள் ரேகையின் மீதமும்
தேய்ந்து புதைந்திருந்தது.

தெருவிலே திரியும் நாய்க்குட்டியை
தூக்கிக் கொஞ்சி மீண்டும் தெருவிலேயே
விட்டுச் செல்லும் மனிதர்களுக்கு
மீண்டும் தெருவில் நிற்கதியாய் நிற்கும்
நாய்க்குட்டியின் அவலங்கள் பெரிதில்லை தான்.

வாஞ்சையுடன் தலை தடவும்
மனிதர்களின் கரங்கள் விலகிச் செல்லும் நாட்களை நாய்க்குட்டிகள் அறிந்திருப்பதில்லை என்று நினைக்கிறாயா?
அன்பென்பது விலகிச் செல்லும் நாளுக்காக எந்நாளும் தயாராக இருப்பதா?
இருப்பினும் வாலை குழைத்துக் கொண்டு
அந்த நாய்க்குட்டி நின்றிருக்கும் தானே?

இந்த பெருநாடகத்தின் வெளி நின்று
நான் கற்றுக்கொண்டிருப்பதெல்லாம்
என்னவென நினைக்கிறாய்?
ஆழ்மனக் காயங்களை ஆற்றுப்படுத்துவதாய் நினைத்து
என் இரணங்களை கீறி ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்,
என் புலம்பல்களும், மனவேட்கைகளும்
அவர்கள்
சீண்டிப் பார்ப்பதற்கு ஏதுவாய் இருந்தது,
என் வாழ்வின் விளிம்பு
அவர்களுக்கு ஓர் பொழுதுபோக்கு கதை.
முடிவிலியான இந்த கதையை சொல்லி சொல்லி மரத்துப் போன
இரவுகளின் முடிவில்
நான் ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக மாறியிருந்தேன்.

எதில் எதிலோ உன் நினைவுகளை மீட்டெக்கும் உத்திகளில் தோற்றுப் போகிறேன்.
கரைவதற்கு திராணியற்று போன கண்களை எதைக் கொண்டு ஆற்றுப்படுத்துவது?
யாருக்காக இந்த கதைகளை சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் கனவுகளிலிருந்து நீ வெளியேறிவிட்ட பின்பும்
யாரை தேடி நான் அலைந்து கொண்டிருக்கிறேன்?
இந்த வாழ்வின் மீதான பிடிப்பென்பது
திரும்பி வரமுடியாத தூரத்திற்கு
நீ சென்று விட்ட பிறகும்
உனக்காக நான் காத்திருப்பதா?

எல்லாவற்றிலுமிருந்தும் விடைபெற்றுக்கொள்ள
நினைவுகளின் மீது ஒரு நடனம் தேவையாய் இருக்கிறது,
உன் கடைசி அணைப்பு
தேவையாய் இருக்கிறது,
இறுதியாய் ஒரு துளி கண்ணீர் தேவையாய் இருக்கிறது,
சின்னதாய் ஒரு கவிதை, ஒரு காப்பி கோப்பை,  இறுதியாய் நாம் நின்றிருந்த இந்த மரத்தின் நிழல், பின்
ஒரு பெருமூச்சும் தேவையாய் இருக்கிறது.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: MoGiNi on August 29, 2021, 11:33:33 PM

விலகி போன உன்னிடம்
விலகமுடியாத என்
எண்ணங்களின் கேள்வி ..

நாம் ஸ்ருஷ்டித்த
நகர முடியாத தருணங்கள்
நரகமாகி போனதா ?

விலக முடியாத
விழிகளின் பார்வையில்
விரகம் வழிந்தொளிந்து
வெறுப்பு ஊற்று கண்டதா ..?

தவிர்க்க முடியாத
தருணமென்று
தானாய் தழுவிய கரங்கள்
தளர்வுற்று போனதா ?

வாழா இருடி என
வழவழக்கும்
வாய் தொட்டு
இதழ் அழைந்த
மோகம் தீர்ந்ததா ?

இடை படர்ந்த
இளையகரம்
இதழ் நீவும்
இதம் தொலைத்து
இறுமாந்த செயல் இன்று
இசைவிழந்து போனதேன் ?

இதழ் தீண்ட நீ வேண்டாம்
இதம் கொடுக்க நீ வேண்டாம்
இன்பம் தேட நீ வேண்டாம்
இந்த இம்மைக்கும் நீ வேண்டாம் ..

இதுகாறும் நீ இருந்த நெஞ்சை
என்ன செய்ய சொல்லிச் செல்
இதயம் அமைதி பெற
வழியுண்டா காண்கிறேன் ..

எண்ணிலடங்கும்
என் இதய துடிப்புகள்
எண்ணிலடங்கா
உன் நினைவுகளை
சுமந்து கடக்கிறது
கணங்களை ..

என்னில் வண்ணம் தெளித்த
வர்ணத் தூரிகையே
வரைந்து செல்
வருங்கால வழிகாட்டியை

தொலைவுகள் குறுகாத
நினைவுகளை மட்டும்
நிரந்தரமாய் பிரசவிக்கிறது
கருக்கொண்ட காதல்

கைகள் நீட்டுகிறேன்
இணைகின்ற விரல்களின் இடுக்கில்
பிரிவின் சுவடுகளை
எழுதி செல்கிறாய் நீ..


தொலைந்து போன என்னுயிரை
தொடர்ந்தும் தேடுகிறேன்
அது உன்னில் உண்டா
திருப்பி கொடு
திருந்தாத ஜென்மம் அதை

உன் பிரிவெழுதி வஞ்சிக்க .
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: Spider Man on August 30, 2021, 01:28:52 AM
வெறுமனே நீளும் பயணத்தில்
வாசிக்க வாசிக்க சுவரிசம் குறையாத
கவிதை தொகுப்பை கண்டேன்...!📖

புத்தகம் தன்னுடையது இல்லை என்பதை அறிவேன்....!😇

உரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவனாய் நான்...!😏

முதல் பக்கதில் இருந்து வாசித்தேன்...!😌

அழகை வர்ணிப்பதற்க்கு கவிதை வடிப்பார்கள் கவிதையை வர்ணிக்க நான் என் செய்வேன்?😻

வாசித்த ஒரு நாளிலே வாழ்கையை வசந்தமாய் மாற்றிய கவிதை அது...!🏞️

வெறுமனே இருந்த பயணம் சுவரிசம் ஆனது ஒவ்வொரு நொடியும் சிரிப்பு மட்டுமே நீண்டு போனது...!💘

என்ன ஒரு கவிதை!
என எண்ணி வியப்பதற்க்குள்..!🙆
 நீ
அடைந்த அனந்தம் போதும் இது உன்னுடைய புத்தகம் அல்ல என்று கவிதை சொன்னது 😢

கவிதையை மட்டும் ரசிக்கும் ரசிகனுக்கு புத்தகத்தின் மீது ஆசை இல்லை என்று நான் எப்படி சொல்லுவேன் அந்த கவிதையிடம் 😑

வலிகள் ஆயிரம் இருந்தாலும் வழியில் இருந்து விலகிக்கொள்கிறேன்...!🚶

என் வலிகளை நீ உணர்வாய் என்ற உணர்வுடன்...!😓
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275
Post by: SweeTie on August 31, 2021, 07:44:20 AM
இதயங்கள்  கலந்து    இருவரும் இணைந்து
இன்புற்ற வாழ்க்கை   கசந்ததா
இயம்பிட  எதுவும் இல்லை என்றாகி 
 இருவரும்  இரு  திசை திருப்பமா

காதல் ததும்ப  பேசிய வார்த்தைகள் 
காட்டாற்று   வெள்ளத்தில் போனதா
ஒரு போர்வைக்கும்   சுருங்கிய  உடல்கள்     
போர்வையை  இழந்து  தவிப்பதா

நினைவுகள் மட்டுமே  நிலையானதென்று
பிரிவுகள்   பாடங்கள்  சொன்னதா
 கனவினில்  கைகோர்த்து கடந்த  காலங்கள்
கானல்   நீராய்   கரைந்ததா

கார்முகில்   குழல்தனை    நீவியவிரல்கள்
போதுமென்றெண்ணி    சோர்ந்ததா 
காதலே வேண்டாம்  போய்விடு  என்று
இருவரும்   விடை  பெறுவதா