Author Topic: சமுதாய அக்கறையும் தேவை.....  (Read 699 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சமுதாய அக்கறையும் தேவை.....



சினிமாவை விரும்பி பார்ப்போரின் சினிமா மோகம் நடிக நடிகையருக்கு மன்றம் வைப்பது ஏன் கோவில் கட்டுவது என்று கூட அதி தீவிரவாதிகளை கொண்ட நாடு நம் நாடு. இந்த சினிமா மயக்கத்தில் விழுந்தவர்களால், நடிக நடிகையருக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கூட பெற்று தந்துள்ளது மக்களின் சினிமா மோகம் என்பது யாவரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட அதி தீவிர ரசிகர்களை கொண்ட நம் நாட்டில் நடிக நடிகையரின் பங்கு என்ன என்பது யாருக்கும் தெரியாது. சினிமா என்ற வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் அதனை திருப்பி லாபத்துடன் எடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதை பார்க்க செல்லும் அதிதீவிர ரசிகர்களிடம் அந்த சினிமாவில் சொல்லப்படும் கருத்து எந்தவிதமான சமுதாய மாற்றங்களை, மற்றும் அவர்களின் சொந்த வாழ்வில் எவ்வாறான மன எழுச்சியை ஏற்ப்படுத்தும் என்பதை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்பது வேதனையான உண்மை.

வன்முறை காட்சிகள், காதல் கதைகளில் சொல்லப்படும் முடிவுகள், என்று ஒவ்வொன்றிலும் தன்னை இணைத்துக் கொண்டு சினிமாவை பார்க்கும் ரசிகர்களின் மனநிலையில் ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன என்பதை இதுவரை யாரேனும் சிந்தித்திருக்கிறார்களா என்றால் பதில் இல்லை என்பது தான். சில காதல் கதைகளில் சொல்லப்படும் [சினிமாவின்] முடிவுகளையே தங்களின் காதலிலும் முடிவாக ஏற்ப்படுத்திக் கொள்கின்றனர் சில பேதைகள்.

சினிமாவை பொழுது போக்காக மட்டுமே பார்க்கவேண்டும் அதில் சொல்லப்படும் எந்த கருத்தையும் தங்களது சொந்த வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தி விட கூடாது என்பதை அறியாதவர்களின் தொகை நம் நாட்டில் மிக அதிகமாகவே உள்ளதால் தான் பல ரசிகர் மன்றங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. சினிமாபைத்தியம் என்ற ஒரு பழைய சினிமா, இதில் நடிகை ஜெயச்சித்திரா சினிமா பைத்தியமாக நடித்திருப்பார், இந்தப் படம் சினிமா மோகத்தால் ஊரைவிட்டு வந்து பலரின் பேச்சை நம்பி மோசம் போகும் பெண்ணின் கதை, இந்த படம் வீட்டைவிட்டு சினிமா மோகத்தால் வெளியேறும் இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல அறிவுரையாகவே அமைந்தது என்றே சொல்ல முடியும்.

படிப்பறிவு இருந்துவிட்டால் மட்டும் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் சரியான கண்ணோட்டத்தில் பார்த்து முடிவுகளை எடுக்க முடிந்து விடும் என்பது கிடையாது. பல படித்த இளைஞர்கள் கூட இப்படிப்பட்ட தவறான அணுகுமுறைகளை உபயோகித்து வருகின்றனர் என்பது வருத்தம் தருவதாக உள்ளது.

இதற்க்கு காரணம் அவர்கள் ஏற்ப்படுத்திக் கொள்ளும் நண்பர்கள் வட்டாரம், பல வாலிபர்கள் தங்களது பிரச்சினைகளைப் பற்றி தங்களது நண்பர்களிடம் கூட சொல்வது கிடையாது, அப்படியே அவர்கள் சொன்னாலும் அவர்கள் வயதையொத்த நண்பன் எந்த விதமான தீர்வை எடுத்து சொல்லிவிட முடியும் என்பது கேள்வியே. இந்நிலையில் தான், தங்கள் பார்க்கும் சினிமாவை ஒரு முன் உதாரணமாக எடுத்து கொள்ளுகின்றனர், இப்போதெல்லாம் கிரிக்கெட்டர் சச்சினைக் கூட கதாநாயகனாக பார்க்க ஆரம்பித்து விட்டனர், சச்சின் ஐந்து வயது அதிகமான அஞ்சலியை திருமணம் செய்து கொண்டதையும் கும்ப்ளேயின் திருமணத்தையும் முன் உதாரணமாக காண்பிக்கின்றனர்.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சிந்துபைரவி படத்தில் பிரபல இசை வித்வான் சிவக்குமார் தன் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது ஒரு பெண்ணுடன் உறவு ஏற்ப்படும், அந்த இரண்டாவது பெண் சுஹாசினியை திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் போது, அந்த இடத்தில் காட்ச்சியை மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது போலவும் கதையின் முடிவை இரண்டாவது மனைவியாக நடித்த சுஹாசினி மறுப்பதற்கு கூறும் காரணமாக பேச கொடுக்கப்பட்டிருந்த வசனங்களும் இதற்க்கு ஒரு சான்று என்றே சொல்ல வேண்டும். பிரபல இசைமேதையே , அதாவது JKB [ சிவக்குமார்] என்கிற கதா பாத்திரமே, இரண்டாவதாக தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றால் நான் ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தவறு செய்கிறவர்கள் தங்கள் தவறை நியாயப்படுத்தக்கூடாது என்பதை சொல்லி கதையை முடித்திருப்பார்.

இயக்குனர் சிகரத்தை குரு என்று சொல்லுபவர்கள் கூட அவர் காட்டி சென்ற வழியை, அல்லது மாதிரியை தொடர முயற்சியேனும் செய்கிறார்களா என்பது கேள்வியே, ஒரு சிலர் இதற்க்கு விதி விலக்காகவும் சினிமா எடுத்துள்ளனர் என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். மற்றவர்களின் நிலை என்ன? இப்படி இருக்கும் போது புதியவர்கள் எடுக்கும் சினிமா ஜனரஞ்சகம் என்ற பெயரிலோ யதார்த்தம் என்ற பெயரிலோ சமுதாய சீர் கேட்டை புகுத்தி விடும் என்பது நிச்சயம்.

சிந்துபைரவி 100 நாட்ககளைத் தாண்டி ஓடவில்லையா? அவருக்கு சமுதாயத்தின் மீதும் அக்கறை இருந்தது சினிமா தயாரிக்க போட்டிருந்த முதலின் மீதும் அக்கறை இருந்தது. சினிமாவிற்காக சொல்லப்படும் பல விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் அர்த்தமற்றவை என்பதை புரிந்து கொள்ளத் தெரியாத ரசிகர்கள் இருக்கும் வரை சினிமா தயாரிப்பவர்கள் கொஞ்சம் சமுதாய அக்கறையும் வைத்து சினிமா தயாரித்தால் பலரும் பயன் பெறுவார்கள் என்று நம்புகின்றேன்.

அதிக ரசிக கூட்டத்தை நடிப்பால் தன் பக்கம் சுண்டி இழுத்து வைத்திருக்கும் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் கூட அவர்கள் தேர்வு செய்யும் கதா பாத்திரத்தை மட்டும் சிரத்தை எடுத்துக் கொண்டு தேர்ந்து எடுக்காமல், அந்த கதையில் வரும் அத்தனை காட்ச்சியிலும் மக்களுக்கு தங்கள் மூலம் தெரிவிக்கும் செய்தி அல்லது உதாரணம் என்ன என்பதிலும் கவனம் செலுத்த தவறக் கூடாது, அடுத்த தலைமுறைக்கு வன்முறையினால் தான் வாழ்க்கையை ஜெயிக்க முடியும் என்பது போன்ற தவறான கருத்துக்களை எடுத்து சொல்லும் கதையம்சம் கொண்டதாக இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டியது அவர்களின் கடமை. இது போன்று பலவற்றையும் யோசித்து செய்வார்களேயானால் மக்களுக்கு நடிக நடிகையரால் நல்ல முன் மாதிரிகள் கிடைக்கும் என்பதில் வேற்று கருத்து இருக்க முடியாது.

யதார்த்தத்தை சொல்லுகிறேன் என்று சொல்லி, எங்கோ ஒரு ஊரில் நடந்த கொலை கொள்ளை கற்பழிப்பு தற்கொலை என்று சமுதாய விரோத போக்கை படம் பிடிக்காமல், பார்க்கும் அல்லது பார்க்க போகும் ரசிகர்களையும் மனதில் கொண்டு யதார்த்தத்தை கொஞ்சம் மாற்றி சினிமா எடுப்பதால் நிச்சயம் மக்களும் நலம் பெறுவர் சமுதாயமும் நலம் பெரும்.