Author Topic: மறக்க முடியுமா  (Read 654 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மறக்க முடியுமா
« on: December 15, 2011, 10:47:49 PM »
மறக்க முடியுமா



மனித மூளைக்கு நல்லது கெட்டது என்பதை பிரித்து அறியும் சக்தி இருந்தாலும் தனது நினைவில் பதித்துக்கொள்வதற்க்கு அவற்றில் எதையும் பாரபட்சம் காட்டுவதே கிடையாது, 'மனமே நல்லவைகளையும் மகிழ்ச்சி தரும் நினைவுகளை மட்டுமே வைத்துக் கொள்' என்று அறிவு சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவற்றை மனம் கேட்பதே கிடையாது. இதனால் பலராலும் மன்னிப்பு என்பதை மனதிலிருந்து கூற இயலாத நிலை ஏற்படுகின்றது. மறந்தால் தானே மன்னித்ததாக அர்த்தம். வாய் ஒன்றை கூற மனம் வேறு ஒன்று கூறும் நிலையால் மனிதன் படுகின்ற வேதனைகளுக்கு அளவே கிடையாது. மனமும் அறிவும் ஒன்று சேருகின்ற பல நிகழ்வுகளும் உண்டு. அவை எல்லாமே மனிதர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்க இயலாத சில சம்பவங்களாகி நினைவுகளை சுமந்து காலம் காலமாக இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி நினைவுபடுத்துவதாக அமைந்து விடுகின்றன.

ஆசிரியர் தினம் என்பது மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தித்த ஆசிரியர்களின் நினைவுகளை பற்றிய மறக்க இயலாத அனுபவங்களை சிந்திக்க வைப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றபோது 'தன்னை பெற்றெடுக்க தன் தாய் அந்த சமயத்தில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்க கூடும்' என்று சிந்திப்பதில்லை என்றாலும் கடுமையான துன்பத்திற்கு பிறகு தான் பெற்ற குழந்தையை காணுகின்றபோது தான் பட்ட துன்பங்கள் அத்தனையையும் மறந்து ஏற்படுகின்ற இன்பமே அவளுக்கு போதுமானதாக இருப்பது போல நம்மை துன்புருத்திய ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் மிகவும் கொடூரமானதாக இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்து தன்னை பற்றிய கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் தனது பெற்றோருக்கும் தனது லட்சிய பாதைக்கும் தொய்வு வராமல் மனம் தளராமல் இலக்கை நோக்கி பயணித்த அனுபவங்கள் என்றும் மறக்க இயலாத அனுபவங்களாகி மனதை விட்டு மறையாமல் இருக்கும்.

அவ்வை கூறியது போன்று 'இளமையில் வறுமை கொடியது', கொடிய வறுமை ஒருபுறம் மறுபுறம் வறுமையை விட கொடுமையான உறவினர்களின் சதித்திட்டங்களும் அவற்றை அவர்கள் செயல்படுத்துகின்ற விதமும், இவற்றையெல்லாம் வென்றுவிடுவதற்க்கு 'பிச்சை புகினும் கற்கை' என்று அரசாங்க பள்ளியாக இருந்தால் என்ன, எங்கிருந்து படித்தாலும் 'எமது லட்ச்சியம் வறுமையை வெல்வது' என்கின்ற நோக்கில் 'பட்டினி கிடந்தாலும் படிப்பது ஒன்றே' என்று படித்துக் கொண்டிருந்த போது, அப்போதெல்லாம் எஸ் எஸ் எல் சி தான் பள்ளி கல்விக்கு இறுதி, பதினோராம் வகுப்பு. எனது விருப்ப பாடமான உயிரியல் வகுப்பாசிரியர் பெயர் சாந்தி சாந்தினி, திருமணமாகாத கிறிஸ்துவ ஆசிரியர். ரெகார்ட் நோட் ஒன்றை வாங்கி அதில் படங்களும் அதனைப்பற்றிய விரிவுரைகளையும் எழுதி வரச் சொன்னார், வகுப்புகள் துவங்கிய ஒரு மாதத்திற்குள் என்பதால் அதிக விலை கொடுத்து அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிவருகின்ற அளவிற்கு எங்கள் வீட்டில் பொருளாதாரம் இல்லை.

இரண்டாவது மாதம் எப்படியோ அந்த நோட்டு புத்தகத்தை வாங்கி கொடுத்தார் என் தந்தை, அந்த நோட்டு புத்தகம் வாங்குவதற்கு எந்த விதமான சிரமம் இருந்தது என்பதை விவரிக்க இயலாது, அத்தனை கொடுமையான நிலைமை. வாங்கியவுடன் இரண்டு மாதங்களாக விடுபட்டு போனவற்றைஎல்லாம் வரைந்து விரிவுரைகளை எழுதி (பள்ளியிலேயே வரைவதில் முதலிடம் எனக்கு) அடுத்தநாள் நோட்டு புத்தகத்தை அந்த ஆசிரியர் வருவதற்கு முன்பு மேசையில் வைத்துவிட்டேன், ஏற்கனவே மேசையின் மீது இரண்டு நோட்டு புத்தகங்கள் இருந்தன அவற்றின் மீது என்னுடைய நோட்டு புத்தகம் வைக்கபட்டிருந்தது, ஆசிரியர் வழக்கம் போல வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் பாடம் நடத்தி முடித்து பின்னர் மேசையின் மீது வைக்கப்படிருந்த நோட்டு புத்தகங்களை பார்வையிட்டார், மற்ற இரண்டு நோட்டு புத்தகங்களை அங்கேயே வைத்துவிட்டு என்னுடைய நோட்டு புத்தகத்தை கையில் எடுத்து கோபத்துடன் அதை அறைக்கு வெளியே வேகமாக வீசி எறிந்தார், அந்த புத்தகம் அங்கிருந்த சகதியில் விழுந்தது, என்னை எழுந்து அறைக்கு வெளியே நிற்கும்படி கூறினார், அன்றைக்கு மட்டுமல்ல அந்த ஆண்டு முடியும் வரையில், இன்றுவரையில் அந்த ஆசிரியரின் செய்கைக்கும் கோபத்திற்க்குமான காரணம் எனக்கு விளங்கவேயில்லை, ஏனென்றால் எனது வகுப்பில் பலர் நோட்டு புத்தகம் வாங்கியிருந்தும் அவர் கூறுவதற்கிணங்க வரைந்து விரிவுரை எழுதிக்கொண்டு வருவதே கிடையாது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்னர் எனது உறவினர் ஒருவர் என் குடும்பத்தை பழி வாங்குவதற்காக மற்றொரு ஆசிரியையின் உதவியுடன் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது, எந்த அளவிற்கு இந்த யுகம் உண்மை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஆசிரியை வகுப்பிலிருந்த 60 மாணவிகளின் எதிரில் என்னை அவமானப்படுத்தியதை இன்றுவரை மறக்க இயலாது.

எனது பள்ளியில் மொத்தம் 5000 மாணவ மாணவிகள் அப்போது படித்து வந்தனர் மாநிலத்திலேயே இரண்டாவது அதிக மாணவ மாணவிகளை கொண்ட அரசு பள்ளியாக எங்கள் பள்ளி அப்போது இருந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது தினமும் தொடர்வண்டியில் பயணம் செய்வது வழக்கம், அப்போது ஒருநாள் எங்கள் பள்ளியில் பணியாற்றி வந்த வேறு ஒரு ஆசிரியை சந்திக்க நேர்ந்தது, அவர் என்னிடம் பேசிக்கொண்டு வந்த போது எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அவரிடம் தெரிவித்தேன், எனது கைப்பையிலிருந்த எனது கணவரின் முழு புகைப்படத்தை அவரிடம் காண்பித்தேன், அப்போது அந்த ஆசிரியை என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க இயலாது, 'நீ பட்ட கஷ்டத்திற்கு நிச்சயம் நீ நல்லா இருப்ப' என்றார்.

நாங்கள் பட்ட கஷ்டம் அந்த ஆசிரியைக்கு எப்படி தெரிந்தது என்பதற்கு வேறு சில சம்பவங்களும் உண்டு, ஆனாலும் அப்படியும் ஆசியர்களும் உண்டு. மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதற்கு உரிமை உண்டு என்கின்ற காலமாக அக்காலம் இருந்தாலும் இளம் நெஞ்சில் மாறாத வடுக்களை உண்டாக்குகிறோம் என்கின்ற நினைப்பே இல்லாமல் செயல்படுகின்ற ஆசிரியர்களை நான் எப்போதுமே மன்னிக்கத்தயாராக இல்லை. நல்லாசிரியர் விருது வாங்குகின்ற அத்துணை ஆசிரியர்களும் அவர்களிடம் படித்த எல்லா மாணவ மாணவியருக்கும் முழு மனசாட்சியுடன் நேர்மையாக தங்கள் பணியை செய்திருப்பார்களா, மனித நேயம் என்பது காணக்கிடைக்காத அரும்பொருளாக மாறி வந்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஆசிரியர்தினம் கொண்டாடப்படுவது என்பது டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறுவதாகவும் இல்லை நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதும் இல்லை. டாக்டர் ராதா கிருஷ்ணனையும் மறந்துவிட்டோம், மன சாட்சி, நேர்மை, நாணயம், மனிதநேயம் போன்றவற்றையும் மறந்துவிட்டோம், ஆனால் குழந்தைகள் தினம், ஆசிரியர்தினம் என்று தலைவர்களது பிறந்தநாளை மட்டும் 'பெயர்சூட்டி' சொல்லிக்கொள்கிறோம்